Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம் 26 1

கலாட்டா – 26

“MP மருதராஜின் மகன் கதிரவனை தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவன் என்று ஊர்ஜிதம் செய்து கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கடந்த பதவிகாலத்தில் மருதராஜ் MP ஆக இருந்த போது குடிசை மாற்று வாரியம் சார்பில் பட்டா நிலங்களைக் கொண்டுள்ள ஏழை மக்களுக்கு சொந்த வீடு கட்டிக்கொள்ள அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள மானியத்தொகையில் மிகப்பெரிய ஊழலை நடத்தியுள்ளார் என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமல்லாது அவர் பதவி வகித்த இந்த ஐந்தாண்டுகளில் எண்ணிலடங்கா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும் வந்த புகார்களை அடுத்து, வருமான வரித்துறை மருதராஜின் இல்லத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது. சோதனையின் முடிவில் இன்னும் என்னென்ன உண்மைகள் வெளிவரப்போகிறதோ என்று மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கதிரவன் விவகாரத்திலே கட்சியின் அடிப்படைத் தொண்டன் பதவியிலிருந்தே நீக்கப்பட்டுவிட்ட மருதராஜ், இப்போது அவரின் அனைத்து ஊழல்களும் சாட்சியுடன் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்று நம்பப்படுகிறது. இது போன்ற சுவாரசியமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்” என்று அந்த செய்தி வாசிப்பாளர் தனக்கு முன் ஓடிக்கொண்டிருந்த திரையில் வந்த வார்த்தைகளை அழகான உச்சரிப்போடு பேசிக்கொண்டிருக்க, அதை நேரலையில் தங்கள் வீட்டின் தொலைக்காட்சியில் கண்டு கொண்டிருந்த மீனாட்சி, அருகில் இருந்த தன் கணவனை திரும்பி கேள்வியாக பார்க்க,



Advertisement

அவரின் மனதில் இருந்த கேள்விகளை உணர்ந்து கொண்ட சுந்தர பாண்டியனும் ஒரு புன்னகையுடன், “நீ சந்தேகப்படுறது சரிதான் மீனம்மா.. எப்படி இருந்தாலும் அவன் பையனை உள்ள தள்ளுனதுக்கு நம்மளை சும்மா விட மாட்டான் அந்த மருதராஜ்னு தெரியும்.. அவன் ஒரு அடிபட்ட பாம்பு, எப்படி இருந்தாலும் பலிவாங்க நம்ம காலையே சுத்தி வந்துட்டு தான் இருப்பான்.. அதான் அதை முடிச்சுக்கட்ட, பையனுக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்குனப்போவே இவனுக்கும் நாள் குறிச்சுட்டேன்… இப்போ பதவியில இருந்து வேற தூக்கிட்டதுனால நிச்சயம் மக்கள் பணத்தை கொள்ளையடிச்சு இவ்ளோ சொத்து குவிச்சு வச்சதுக்கு கைது பண்ணி உள்ள தள்ளிருவாங்க.. நமக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை.. நீ இனி நிம்மதியா இருக்கலாம்” என்று தன் மனைவியின் மனதறிந்து பதிலளித்தார்.

Advertisement

என்னதான் சுந்தரபாண்டியனின் முன் தைரியமாக இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாலும், இனி அந்த மருதராஜால் எப்போது என்ன பிரச்சனை வரப்போகிறது என்று பயத்துடனே ஒவ்வொரு விநாடியையும் கடத்திக் கொண்டிருந்த மீனாட்சி, இப்போது தான் மனதில் உள்ள பயம் நீங்கி நிம்மதியுற்றார்.

Advertisement

அப்போது அங்கு வந்த கீதா, தன் அன்னையிடம் “ம்மா நான் தேனி வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன்” என்று தகவல் கூறிவிட்டு அங்கிருந்து நகரப்பார்க்க,

Advertisement

சுந்தரபாண்டியனுக்கு முன் அதை மறுத்த மீனாட்சி, “நீ எங்கேயும் போக வேண்டாம் முதல்ல உள்ள போ” என்று அவளைத் தடுத்திருந்தார்.

“ஏன்?? ஏன்?? ஏன்?? நான் போகக்கூடாது” என்று கீதா பட பட பட்டாசாய் பொறிய,

“இப்போ அங்க போய் நீ என்ன பண்ண போற??” என்று மீனாட்சி நன்றாய் அவள் பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டு ஆராய்ச்சியாக அவளை நோக்க,

“அது.. ஹான்.. புதுசா ஒரு டுடோரியல் ஒன்னு ஆரம்பிச்சிருக்காங்கலாம்.. அதான் போய் விசாரிச்சுட்டு வரப் போறேன்” என்று அவள் காரணத்தை யோசித்து விட்டு கூற,

அப்போது சுந்தர பாண்டியனிற்கு பழச்சாறு எடுத்துக் கொண்டு வந்த அஞ்சலி, கீதாவின் கூற்றில் பக்கென சிரித்துவிட்டாள்.

அதைக்கண்டு, “எலிஈஈஈஈ!!!!” என்று கீதா கடைக்கண்ணால் அஞ்சலியைமுறைத்துக் கொண்டு பல்லைக் கடிக்க,

அப்போது கீதாவை நேராய் பார்த்த சுந்தரபாண்டி, “க்கும்… நீ படிச்சு கிழிச்சது வரைக்கும் போதும்.. எத்தனை வருஷம் ஆனாலும் நீ பத்தாவதை பாஸ் பண்ண மாட்ட.. உனக்கு டுடோரியலுக்கு தண்டம் அழுத அந்த காசை சேர்த்து வச்சிருந்தாலும் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க யூஸ் ஆகியிருக்கும்.. சோ இனி மேல் உனக்கு காசை வேஸ்ட் பண்ண நான் ரெடியா இல்லை..கூடிய சீக்கிரமே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணிட்டேன்.. அதுனால பொய் சொல்லிட்டு இப்படி ஊர் சுத்துறதை விட்டுட்டு ஒழுங்கா போய் சமையல் கத்துக்குற வேலையைப் பாரு போ” என்று அவளை விரட்டினார்.

அவரின் முடிவைக் கேட்டு கொதித்தெழுந்த கீதா அவருடன் மல்லுக்கு நிற்க தயாராக, அதை உணர்ந்த மீனாட்சி அஞ்சலியிடம் கண்ணைக் காட்டி கீதாவை அங்கிருந்து அழைத்துச் செல்ல பணித்திருந்தார்.

அதை புரிந்துகொண்ட அஞ்சலியும் கீதா மறுப்பதை பொருட்படுதாமல் அவளை அங்கிருந்து இழுத்துக் கொண்டு வந்துவிட,

அவளின் கைகளை தட்டிவிட்ட கீதா கடுப்புடன், “இப்போ எதுக்கு எலி என்னை அங்க இருந்து இழுத்துட்டு வந்த?? நான் உங்க சித்தப்பாவ இன்னைக்கு ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்.. அப்படி என்ன அவருக்கு செலவு வச்சுட்டேன் நான்.. நான் படிச்சு டாக்டராவோ இன்ஜினியராவோ ஆகியிருந்தா அவருக்கு இந்நேரம் எவ்வளவு செலவு ஆகியிருக்கும்.. நானே பாவம் நம்ம அப்பா வேற பொழைக்க தெரியாம வெறும் சம்பளத்தை மட்டுமே வச்சு வாழ்க்கையை நடத்துறாரே அவரை மேலும் கஷ்டப்படுத்த வேண்டாமேன்னு அவருக்காக என்னோட படிப்பை தியாகம் பண்ணா , என்ன வார்த்தை சொல்லிட்டாரு” என்று நடிகையர் திலகத்தை மிஞ்சி விடும் அளவில் பெர்ஃபாமன்ஸை எடுத்து விட்டாள் அவள்.

அதைக் கண்டு, “அடிப்பாவி!!” என்று அஞ்சலி வாயைப் பிழக்க,

அதையெல்லாம் கண்டுகொள்ளாத கீதா மீண்டும் மீனாட்சியின் அறைக்குள் நுழையப்போக, அவளைப் பிடித்து தடுத்த அஞ்சலி, “அட இருடி.. சித்தப்பாவே இப்போதான் கொஞ்சம் உடம்பு சரியாகி வந்திருக்காரு.. அவரை எதுக்கு டென்ஷன் பண்ற?? ஆமா அப்படி தேனியில உனக்கு என்ன வேலை எதுக்கு இப்படி துள்ளுற??” என்று தன் சந்தேகத்தை வினவினாள் அஞ்சலி.

“அதுவா.. நம்ம சிம்பு இருக்காருல.. அவரோட அடுத்த படம் ஷூட்டிங்க் இங்க தான் தேனியில நடக்குதாம்.. அதான் போய் பார்த்துட்டு வரலாம்னு பார்க்குறேன் விட மாட்டேங்குறாங்க” என்று தாடையை நீவிவிட்டுக்கொண்டே சோகத்துடன் கீதா சொல்ல,

“ரொம்ப முக்கியம்” என்று அலுத்துக் கொண்ட அஞ்சலி பின், “இன்னைக்கு நீ எங்கயும் போகக்கூடாது” என்று கூற,

“ஏனாம்??? ” என்று கேள்வியாக அவளைப் பார்த்தாள் கீதா.

அவள் கேட்டதும் திடீரென எங்கிருந்தோ ஓடி வந்த வெட்கம் அஞ்சலியின் கண்களில் குடியேறிக்கொள்ள, வார்த்தைகள் அவளின் தொண்டைக்குழியை விட்டு வருவேனா என்று சண்டித்தனம் செய்தது.

“அது.. அது வந்து..” என்று அஞ்சலி அதை எப்படி சொல்வது என்று திணற,

“என்ன திடீர்னு உனக்கு திக்கு வாய் வந்துருச்சா?? இவ்ளோ நேரம் நல்லாத்தான இருந்த.. காத்து கருப்பு எதும் அடிச்சிருச்சோ” என்று கீதா அஞ்சலியின் கன்னத்தை பிடித்து அப்படியும் இப்படியும் திருப்பி ஆராய்ச்சி செய்ய,

அவளின் கைகளை தட்டி விட்ட அஞ்சலி, “ஹேய் எருமை.. இன்னைக்கு அவங்க எல்லாரும் நம்ம வீட்டுக்கு வராங்க டி” என்று விஷயத்தை போட்டு உடைக்க,

“எவங்க எல்லாரும்?? ஓ நம்ம பக்கத்து ஊரு பொன்னாத்தா கெழவி கருப்பட்டி பனியாரம் செஞ்சு கொண்டு வரேன்னு சொல்லுச்சே.. அதுவா?? தள்ளு தள்ளு அது கையால பனியாரம் சாப்பிட்டு எம்புட்டு நாளாச்சு” என்று நாக்கில் எச்சில் ஊற ரசித்து கூறிய கீதா,  அஞ்சலியை நகர்த்திக் கொண்டு முன்னேற,

கடுப்பான அஞ்சலி, “அடியே தின்னிப்பண்டாரம்.. பொன்னாத்தாவும் இல்லை மங்காத்தாவும் இல்லை.. அவங்க தான் உங்க மாமா.. அஸ்வத் வராங்க” என்று தெளிவாய் விளக்கினாள்.

“ஓஹ் அவங்களா??” என்று சுருதி குறைந்து போனது கீதாவிற்கு..

“ஆமா எதுக்கு அவங்க வராங்க??” என்று அவள் அசுவாரசியமாய் அஞ்சலியிடம் கேட்க,

“என்னடி தெரியாத மாதிரி கேட்குற.. பொண்ணு கேட்கத்தான்” என்று அஞ்சலி பதிலளித்தாள்.

“நம்ம வீட்டுல பொண்ணெல்லாம் வியாபாரம் செய்ய ஆரம்பிச்சுட்டாங்களா என்ன?? ஓஹ் ஒரு பொண்ணு எவ்ளோ ரூபாய்க்கு விற்பனை செய்றீங்க” என்று சிரியாமல் கீதா கேட்க,

அவளின் நக்கலில் நொந்து போன அஞ்சலி, “எங்கிட்ட சரசம் பண்ணுறதுக்கே உன்னை பெத்து விட்ருக்காங்களா டி ??முடியலை என்னால ” என்று வடிவேலைப் போல் அவள் பாவமாய் பேச,

அதைக்கண்டு வாய்விட்டு சிரித்த கீதா, “ஹாஹா .. சரி அக்காவாச்சேன்னு விடுறேன் பொழைச்சுப்போ” என்று கொஞ்சம் பாவம் பார்த்து அஞ்சலியை விட்டவள்,

“ஆமா எத்தனை தடவை உன்னை பொண்ணு பார்க்க வருவாங்க?? பெரியம்மா சுட்டுக்கொடுத்த பலகாரம் அவ்ளோ நல்லாவா இருக்கு?? அதை சாப்பிட திரும்ப வேற கிளம்பி வறாங்க” என்று மீண்டும் கிண்டலில் இறங்க,

அஞ்சலியோ ஒரு நக்கல் சிரிப்புடன், “ஒரு சின்ன கரெக்ஷன்.. என்னை இல்லை நம்மளை அதாவது உன்னையும் என்னையும் பொண்ணு பார்க்க வராங்க” என்று கீதாவின் தலையில் இடியை இறக்கி விட்டுவிட்டு, அவள் அதிர்ந்து நிற்பதை பொருட்படுத்தாமல் அங்கிருந்து கூலாக கிளம்பி சென்று விட்டாள் அவள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!