Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம் 27 1

கலாட்டா – 27

மீசைக்கார சகோதரர்களின் பதிலை எதிர்பார்த்து ஆவலுடன் அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர்.



Advertisement

தன் தொண்டையை செருமிக் கொண்ட சந்தனபாண்டியன் அங்கிருந்தவர்களைப் பார்த்து, ” மன்னிக்கணும்” என்று கூற,

அதைக் கேட்டவுடன் எங்கே அவர் மறுக்கப்போகிறாரோ என அஸ்வத்திற்கு இதயம் வெளியே வந்து துடித்தது.

Advertisement

Advertisement

அவன் மனதில் பால் வார்ப்பதைப் போல் , “வீட்டுல பேசிட்டு சொல்றேன்.. ஒரு நிமிஷம் இருங்க இதோ வந்துடுறேன்” என்று சந்தனபாண்டி எழுந்துகொள்ள அவரைத் தொடர்ந்து சுந்தரமும் அங்கிருந்து எழுந்து தன் அண்ணனின் அறைக்குள் நுழைந்தார்.

அவர் உள்ளே வந்ததும் , “இப்போ என்னடா சுந்தரம் பண்ணுறது.. நீ என்ன நினைக்கிற இந்த வரனைப் பத்தி??” என்று தன் தம்பியின் கருத்தை சந்தனபாண்டி கேட்க,

Advertisement

“எனக்கு இதுல எந்தவித தயக்கமும் இல்லைண்ணே.. முதல்ல அவங்க கீதாவை பொண்ணு பார்க்க வந்தப்போவே ரெண்டு குடும்பத்தை பற்றியும் நல்லா விசாரிச்சுட்டேன். பசங்க மேலயும் எந்த ஒரு குறையும் சொல்ல முடியாதபடி ரொம்ப நல்ல பசங்க தான்.. அதுனால நீங்க யோசிச்சு சொல்லுங்க அண்ணே.. உங்களுக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம் தான்” என்று சுந்தரம், அஜயைப் பற்றி ஓரளவு தெரிந்திருந்ததால் கீதாவை அவனால் தான் சமாளிக்க முடியும் என்று நம்பி இந்த முடிவெடுத்தார்.

தம்பிக்கு இதில் விருப்பம் தான் என அவரின் பேச்சை வைத்தே புரிந்து கொண்ட சந்தனபாண்டியனுக்கும் அஸ்வத்தை மறுக்க பெரிதாய் ஏதும் காரணங்கள் இல்லை என்பதால் அவரும் தெளிவாய் ஒரு முடிவெடுத்து அங்கு ஓரமாய் இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவரின் மனைவியை நோக்கி,

“ஏட்டி காமாட்சி நீ என்ன சொல்லுறவ?? உனக்கு அந்த டாக்டர் தம்பி மாப்பிள்ளையா வரதுல விருப்பமா??” என்று அவர்களின் மகளின் வாழ்க்கையை தீர்மானிக்க அன்னைக்கும் சரிவிகித பங்கு உண்டு என்பதை உணர்ந்து அவரின் விருப்பத்தை வினவினார்.

“என்னைக்கு உங்க உசுரை காப்பாத்தினாரோ அன்னைக்கே அவர் தான் எம்மூட்டு மருமவனா வரணும்னு உள்ளுக்குள்ள தோணிகிட்டே இருக்கு… அவரைக் கட்டிக்கிட்டா தான் நம்ம மவ நிம்மதியா இருப்பா.. அதுனால ரொம்ப யோசிக்காம சீக்கிரம் கல்யாணத்தேதியைக் குறிங்க” என தன் மகளின் மனதறிந்து அதற்கேற்றது போல் காமாட்சி பேச,

அதைக் கேட்டு பலமாய் நகைத்த சந்தனபாண்டி,” நான் இன்னும் சம்மதமே சொல்லலை அதுக்குள்ள கல்யாணத் தேதி வரைக்கும் போய்ட்டியாட்டீ.. சரிதான்” என சொன்னவர் தொடர்ந்து அங்கு காமாட்சியின் அருகில் நின்றிருந்த தன் தம்பியின் மனைவியை பார்த்து, “ஏத்தா மீனாட்சி நீ என்னத்தா எதுவும் பேச மாட்டேங்குற?? நீ என்ன நினைக்கிற உனக்கு இந்த சம்பந்தம் பிடிச்சிருக்கா இல்லையா?” என்று அவரின் மனதை அறிய விரும்பி கேட்டார்.

மீனாட்சியோ அங்கு நின்றிருந்த தன் கணவனை ஒரு முறை பார்த்துவிட்டு, “எனக்கு சம்மதம்தானுங்க மாமா.. ஆனா கட்டிக்கிட்டு வாழ போறது நம்ம பிள்ளைங்க தான.. அவங்க விருப்பத்தை கேட்டுட்டு முடிவெடுக்குறது தான் நல்லதுன்னு எனக்கு தோணுது” எங்கே கீதாவிடம் கேட்காமல் முடிவெடுத்து கடைசியில் தன் மகள் ஏதேனும் சபையில் வைத்து கலாட்டா செய்து விடுவாளோ என்று அஞ்சி மீனாட்சி இப்படிக் கூற,

அதை ஆமோதித்த சந்தனபாண்டியனும், “ஆமாத்தா புள்ளைங்க கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கிடுவோம்.. அதான் நல்லது” என்று நினைத்து நம் நாயகிகளை அழைக்கப் போக,

தன் அண்ணனைத் தடுத்த சுந்தரபாண்டியன், நிச்சயம் கீதா இதற்கு சம்மதிக்க மாட்டாள் என்பது அவருக்கு திண்ணம் என்பதால் இதை காரணம் காட்டி இந்த சம்பந்தத்தை இழக்க விரும்பாமல் சந்தனபாண்டியனிடம், “அண்ணன் நம்ம பிள்ளைங்களை பற்றி நமக்கு தெரியாதா.. அஞ்சலிக்கு அந்தப் பையனை தான் பிடிச்சிருக்குன்னு அன்னைக்கே அண்ணி சொன்னாங்க தான.. இப்போ நீங்க போய் கேட்டா அதுங்க பாவம் நம்மகிட்ட சொல்ல சங்கடப்படுங்க.. நீங்க வாங்க அவங்க வெளிய காத்துகிட்டு இருக்காங்க” என்று அவரை  சமாளித்து வெளியே இழுத்துக் கொண்டு போகப் பார்க்க,

“இருந்தாலும் ஒரு வார்த்தை கேட்டுப்போமே சுந்தரம்” என்று சந்தனபாண்டியன் தயங்க,

“அய்யோ அண்ணன் அவங்க ரொம்ப நேரமா காத்துகிட்டு இருக்காங்க.. நாம இப்படி தனியா பேசிட்டே இருந்தா தப்பா நினைக்க போறாங்க வாங்க.. ” என்று அவரை ஒருவழியாய் இழுத்துக் கொண்டே போய்விட்டார் சுந்தர பாண்டியன்.

அறையை விட்டு வெளியே வந்தவர்களை ஆவலும் எதிர்பார்ப்புமாய் மதுரம் குடும்பத்தினர் எதிர்நோக்க,

அவர்களை அதிக நேரம் காக்கவைத்து சோதிக்காமல் வெளியில் வந்தவுடன் சந்தனபாண்டியன் விரிந்த புன்னகையுடன் மதுரத்தை நோக்கி, “உங்க குடும்பத்திற்கு எங்க பொண்ணுங்களை மருமகளா அனுப்ப எங்களுக்கு பூரண சம்மதம் அம்மா” என்று தங்களின் சம்மதத்தை அறிவித்தார்.

அதைக்கேட்டு அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

தன் திட்டம் வெற்றி பெற்றதில் மதுரம் யாரும் அறியாவண்ணம் தன் பேரன்களைக் கண்டு கண்ணடித்து பெருமையுடன் இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொள்ள,

அதைக் கண்டு, “பாட்டி யூ ஆர் கிரேட்” என்று அவரின் இரு பேரன்களும் வாயசைத்து அவரை மானசீகமாக வணங்கிக் கொண்டனர்.

“ரொம்ப சந்தோஷம் தம்பி.. எங்க எங்களை வேணாம்னு சொல்லி என் தெய்வத்தோட பிஞ்சு மனசை பஞ்சர் ஆக்கிருவீங்களோன்னு பயந்துட்டேன்.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. என் தாலியை காப்பாத்தி குடுத்த நீங்க ரெண்டு பேரும் நூறு வருஷம் சீரும் சிறப்புமா வாழணும்” என்று மீசைக்காரர்களின் தலையில் ஐஸ்கட்டியை தூக்கி வைத்த மதுரம் வராத கண்ணீரை தன் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டார்.

அவரின் நடிப்பைக் கண்டு வினோத், “அடப்பாவி!!” என்று வாயைப் பிளக்க, மதுரமோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்த கட்ட பேச்சிற்கு  தாவிவிட்டார்.

அதன் பின் இரு குடும்பத்தாரும் தத்தம் குடும்பத்தைப் பற்றி முறையாய் அறிமுகப்படுத்திக் கொண்டு அடுத்த கட்டமாக எப்போது பெண்ணிற்கு பூ வைத்து நிச்சயம் செய்வது என்று ஆலோசிக்கத் தொடங்கினர்.

அதுவரை அனைத்தும் சுமூகமாய் சென்று கொண்டிருக்க, அதைக் கலைப்பதைப் போல் அங்கு கோபக் கணலுடன் வந்து சேர்ந்தாள் கீதா.

மாடிப்படிகளில் இருந்து ‘தொம் தொம்’ எனும் பெரும் சப்தத்தோடு அவள் இறங்கி வருகையிலே தன் மகள் அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்று உணர்ந்து கொண்ட சுந்தரபாண்டியன், அவள் ஏதாவது தில்லு முல்லு செய்து அஞ்சலி வாழ்க்கையும் கெடுத்துவிடப் போகிறாள் என்றெண்ணி அஞ்சிக்கொண்டே அவள் வருவதைப் பார்த்திருந்தார்.

அவரைப் போலவே கீதாவைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த இன்னொரு ஜீவனான அஜய், சுந்தரத்தைப் போல் அவளிற்கு அஞ்சிக் கொண்டு அமர்ந்திராமல் சமயோசிதமாக சிந்தித்து அவள் படியில் இருந்து இறங்கி அவர்களை நோக்கி கோபத்துடன் வரும் போதே சட்டென்று எழுந்து நின்றவன் அனைவரையும் நோக்கி, “எனக்கு கீதா கூட கொஞ்சம் தனியா பேசணும்” என்று அறிவிப்பதைப் போல் கூற,

அதைக்கேட்டு அனைவரும் சற்று அதிர்ந்திருக்க, சுந்தரபாண்டியனோ அஜய்க்கு மனதில் நன்றி கூறிக்கொண்டு, “அதுனால என்ன தாராளமா போய் பேசிட்டு வாங்க மாப்பிள்ளை” என்று எப்படியாவது அவளை இங்கிருந்து இழுத்துக் கொண்டு போய்விடு என்பதைப் போல் கூற,

அவனும் கீதாவின் மறுப்பை பொருட்படுத்தாமல் அவளை அங்கிருந்து கிளப்பிக் கொண்டு சென்றிருந்தான்.

சுந்தரபாண்டியனைத் தவிற மற்ற எவருக்கும் இதில் சுத்தமாய் உடன்பாடில்லை. அதுவும் பரமசிவன் எல்லாம் தன் மகனின் மேல் கொலைவெறியில் இருந்தார்.

“கொஞ்ச நேரம் அடங்கி இருந்து தொலைய மாட்டானா உன் புள்ளை.. அதான் பூ வைக்க நாள் குறிச்சுகிட்டு இருக்கோம்ல அதுக்குள்ள என்ன அவசரம். என் மானத்தை வாங்குறதுக்கே வந்து பிறந்து தொலைச்சிருக்கான்” என்று தன் அருகில் அமர்ந்திருந்த மனைவியிடம் அடிக்குரலில் சீறிக் கொண்டிருந்தார் பரமசிவன்.

தனமோ தன் கணவனிடம் நாள் தவறாமல் திட்டு வாங்கிக் கொடுத்துவிடும் தன் மகனை மனதில் கரித்துக் கொட்டிக் கொண்டு வெளியில் அவஸ்தையுடன் அமர்ந்திருக்க,

ஆனால் அஜயோ இவர்களின் மனநிலைக்கு சற்றும் பொருத்தமில்லாமல், தன்னை முறைத்துக் கொண்டு இருந்த கீதாவை ரசித்துக் கொண்டிருந்தான்.

“இப்போ எதுக்கு என்னை வெளிய இழுத்துட்டு வந்த?? நான் தான் அன்னைக்கே சொல்லிட்டேன்ல உன்னை எனக்கு பிடிக்கலை.. பின்ன எதுக்கு இப்படி பொண்ணு கேட்டு வரேன் மண்ணு கேட்டு வரேன்னு கிளம்பி வந்து டார்ச்சர் பண்ணுறீங்க” என்று கீதா ஊசிப் பட்டாசாய் வெடிக்கத் துவங்க,

அதைக் கண்டு காதை தேய்த்துவிட்டுக் கொண்ட அஜய், “அய்யய்யயோ தேஞ்சு போன ரெக்கார்ட் மாதிரி சொன்னதையே எத்தனை டைம் சொல்லுவ நீ?? அட்லீஸ்ட் டையலாக்கை ஆச்சும் மாத்தலாம்ல.. கேட்டு கேட்டு காது வலிக்குது” என்று அலுத்துக் கொண்டு அவளை வெறுப்பேற்றினான்.

“என் வாயைக் கிளராத.. கோபத்துல ஏதாவது அசிங்கமா பேசிறதுக்கு முன்னாடி இங்க இருந்து கிளம்பு.. கிளம்ப மாட்டேன்னு வம்பு பண்ண அப்பறம் அவ்ளோதான்” என்று அவள் விரல் நீட்டி எச்சரிக்கை விடுத்தாள்.

நீட்டிய அவளின் விரலை பற்றிக்கொண்ட அஜய் அதை அழுத்தமாய் மடக்கிப் பிடிக்க, கீதாவோ வலியில் துள்ளினாள்.

“டேய் எருமை விரலை விடுடா” என்று அவனிடமிருந்து தன் விரலை விடுவித்துக் கொள்ள போராட,

சிரிப்புடன் அவளின் விரலை விட்டுவிட்ட அஜய், “இந்த அஜய் கிட்ட வச்சுக்காத அவ்தார் குட்டி அப்பறம் தாங்கமாட்ட” என்று விஷமத்துடன் அவன் கூற,

அதைக்கேட்டு அமைதியாய் தலையாட்டினாள் அவள் கீதா அல்லவே.

அடுத்த நொடியே அவன் கைகளை அழுத்திப் பிடித்தவள் அவனின் இடது கையின் மோதிர விரலிற்கு வீக்கம் ஏற்படும் வகையில் சிறப்பான சம்பவத்தை செய்துவிட்டே அவனை விடுவித்தாள்.

வலியில் அவன் கையை உதறிக் கொண்டே, “ராட்சஸி இப்படியா விரலை ஒடிச்சு விடுவ” என்று கீதாவை முறைக்க, அவளோ ‘ எப்படி ‘ எனும் வகையில் மிதப்பாக அவனை பார்த்திருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!