வெளிச்சமே புக வழியில்லாமல் அனைத்து பக்கமும் அடைத்திருந்த அந்த காரிருள் சூழ்ந்த அந்த இருட்டறையில் தன் இரு கைகளையும் தலைக்கு முட்டுக் கொடுத்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தான் ஜித்தேஷ்.
Advertisement
கீதாவை எப்படி தீர்த்துக் கட்டுவது என்கிற சிந்தனை மட்டுமே அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
Advertisement
அப்போது அவனின் யோசனையை தடை செய்வதைப் போல் அந்த மேசை மீதிருந்த அவனின் கைபேசி ஒலியெழுப்ப,
Advertisement
அதில் எரிச்சலுற்றவன் கடுப்புடனே அந்த போனை எடுத்து யார் அழைப்பது என்று பார்த்தான்.
Advertisement
அவர்களின் குடும்ப மருத்துவர் தான் அழைத்திருந்தார்.
‘இந்த ஆள் எதுக்கு இப்போ கூப்பிடுறான்???’ என்று ஜித்தேஷின் புருவ மத்தியில் முடிச்சு விழ,
அதனோடே அழைப்பை ஏற்று காதிற்கு கொடுத்தவன், ” ஹலோ” என்று இரும்புக் குரலில் கூற,
மறுபுறம் இருந்த மருத்துவர், “ஜித்து எங்க இருக்க??? ” என்று பதற்றத்துடன் வினவினார்.
அவரின் குரலில் இருந்த பதற்றத்தை கண்டுகொண்ட ஜித்தேஷ், “எனிதிங்க் சீரியஸ்??” என்று அவசரமாகக் கேட்க,
“யெஸ்.. ஷ்ராவனி இஸ் மிஸ்ஸிங்க்” என்று அவரும் விஷயத்தை சுருக்கமாக கூறி முடித்தார்.
அதைக்கேட்டவுடன் ஜித்தேஷின் கண்கள் இரத்தமென சிவந்து போக, “ஷிட்!!! அவளை பார்த்துக்காம அங்க எல்லாரும் புடுங்கிட்டா இருந்தாங்க.. ஷிட்!! ஷிட்!! ஷிட்!!! நான் இப்போ உடனே கிளம்பி வரேன் அதுக்குள்ள என்னோட வனி பேபி அங்க இருக்கணும்.. DSPக்கு கால் பண்ணி அவளைத் தேட சொல்லுங்க.. நம்ம ஆளுங்க கிட்டயும் சொல்லி எல்லா இடத்திலயும் தேட சொல்லுங்க.. மேக் இட் ஃபாஸ்ட்” என்று அவன் பதறித் துடிக்க,
அவனின் நிலையை உணர்ந்து கொண்ட அந்த மருத்துவரும், அவர்களின் குடும்ப நண்பருமான அந்த நபர் அவனுக்கு ஆறுதல் அளிக்கும் படி நம்பிக்கையாக பேசி விட்டு ஷ்ராவனியைத் தேடும் பணிகளில் இறங்கினார்.
ஷ்ராவனி – ஜித்தேஷின் ஆரூயிர் காதலி.
அவனைத் தவிர சொல்லிக்கொள்ள உறவென்பதே அறியாத அநாதைப் பேதையவள். அதிர்ந்து கூட பேசத் தெரியாத மெல்லிய மனமுடையவளைக் கண்டதும் காதலில் விழுந்தான் ஜித்தேஷ்.
பிறந்ததிலிருந்தே உற்றவர்களின் அன்பும் உறவின் பாதுகாப்பும் இன்றி வளர்ந்த ஷ்ராவனிக்கும் ஜித்தேஷின் அன்பு அவளை வேறு ஒரு உலகிற்கு இட்டுச் செல்ல, அவனை முழுதாய் நம்பி அவனுடன் கைகோர்த்து வாழ்க்கை பயணத்தை தொடங்கினாள்.
பதின்ம வயதில் பெற்றோரை இழந்த ஜித்தேஷை அவர்களின் தொழில் மொத்தமாய் அவனை மூழ்கடித்துக் கொள்ள, அவனை அதிலிருந்து மீட்டு வாழ்க்கையை ரசிக்கக் கற்றுத் தந்தவள் தான் இந்த ஷ்ராவனி.
அனைத்தையும் நம்பி விடும் குழந்தை மனம் கொண்ட அந்த குமரியின் காலடியில் விரும்பியே வீழ்ந்து கிடந்தான் அந்த ஆறடி ஆண்மகனான ஜித்தேஷ்.
அவன் தன் தம்பிக்கு நிகராக அவன் இன்னொருவர் மீது பாசம் வைத்துள்ளான் என்றால் அது ஷ்ராவனியின் மீது தான்.
அவனுக்கு இப்போது இருக்கும் ஒரே ஒரு உறவும் அவள் தான் என்பதால், அவளைக் காணவில்லை என்றதும் அவனின் ஒவ்வொரு செல்களும் தன்னவளைக் காண வேண்டும் என்று துடியாய் துடிக்க, அவளிற்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என அந்த கல்மணம் கொண்டவன் கூட கலங்கித் தான் போனான்.
அந்த நொடி கீதாவைப் பற்றிய சிந்தனையெல்லாம் அவன் மனதில் எங்கோ ஒரு மூலையில் சென்று ஒளிந்து கொள்ள, அவனின் மனம் முழுக்க ஷ்ராவனியைக் எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்ற யோசனை மட்டுமே நிறைந்திருந்தது.
அதற்கு மேல் தாமதிக்காமல் அடுத்த விமானத்திலேயே மதுரைக்கு வந்த வேலையை மறந்து விட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தான் ஜித்தேஷ்.
வெயிலும் அல்லாத மழையும் இல்லாத அந்த இதமான வேளையில், தென்னை மரத்தின் தென்றல் காற்று சில்லென்று தீண்டிச் செல்வதைக் கூட உணராமல் சோகமாக அமர்ந்திருந்தாள் அஞ்சலி.
அவள் அருகில் இருந்த கீதாவோ அவளுக்கு நேர்மாறாக கோபத்துடன் அமர்ந்திருக்க, இருவருக்கும் நடுவில் குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள் அபி.
“இப்போ எதுக்கு ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் மூஞ்சியை திருப்பிகிட்டு உட்கார்ந்து இருக்கிங்க?? ஏய் அஞ்சலி நீ ஏன் டி ஏதோ தேர்தல்ல ஒரு கோடி செலவு பண்ணி ஒரு ஓட்டு வித்தியாசத்துல தோத்துப் போன வேட்பாளர் மாதிரி சோகமா இருக்க??? அதான் உன் ஆளையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்குறோம்னு அப்பா சொல்லி டேட் கூட ஃபிக்ஸ் பண்ணியாச்சுல.. அப்பறம் என்ன??” என்று அபி பொறுமையிழந்து தன் தமக்கையிடம் வினவ,
அஞ்சலியோ இன்னும் அதிகமாக சோக கீதம் வாசித்துக் கொண்டே, “நீ வேற அதை நியாபகப் படுத்தாத டி.. மனசெல்லாம் புண்ணா இருக்கு…அவர் இன்னைக்கு சென்னைக்கு போறாராம் ” என்று நடிகர் சிங்கமுத்துவின் பாணியில் அஞ்சலி பதிலளிக்க,
அவளை வேற்று கிரக வாசி போல் பார்த்து வைத்த அபியோ, “பின்ன வேலையை விட்டுட்டு இங்கயே தங்கிட்டா சோத்துக்கு என்ன பண்ணுவாங்க?? இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லை.. இன்னைக்கு புதன் கிழமை.. இன்னைக்கு போய்ட்டு வெள்ளிக்கிழமை பூ வைக்க வரத்தானே போறாங்க.. அதுக்கு இந்த டிராமா தேவைதானா?? இந்த லவ் பண்றவங்க தொல்லை தாங்க முடியலை” என்று அலுத்துக் கொண்டாள் அவள்.
அதைக் கேட்டு நொடித்துக் கொண்ட அஞ்சலியோ, “யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்.. நீயும் ஒரு நாள் இப்படி பேசுவ.. அன்னைக்கு உன்னை வச்சுக்குறேன்” என்று கூறிக்கொண்டவள் மீண்டும் தன் சோகத்தில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.
‘இது தேறாத கேஸ்’ என்று அஞ்சலியை தண்ணீர் தெழித்து விட்ட அபி அடுத்த கட்டமாய் கீதாவிடம் தன் விசாரணையை தொடங்கினாள்.
“இப்போ நீ எதுக்கு கீத்ஸ் இப்படி மிளகாய் எடுத்து மூஞ்சில தடவிவிட்ட மாதிரி இவ்ளோ காரமா இருக்க?? வாட்ஸ் தி மேட்டர்??” என்று கேட்க,
“நேத்து ஏதோ கருமத்தை என் மூக்குல விட்டு எனக்கு சிரிப்பு மூட்டி எல்லார்கிட்டயும் என்னை பைத்தியம்னு பேர் வாங்க வச்சுட்டான் அந்த டைனோசர் வாயன்… அவனை நான் சும்மா விட மாட்டேன்” என்று கீதா அஜயை நினைத்து கோபத்தில் பற்களை நர நரவெனக் கடிக்க,
அவளின் பாவனையில் அபியோடு சேர்ந்து அங்கு சோகமாய் இருந்த அஞ்சலி கூட பக்கென சிரித்து விட்டாள்.
இருவரின் சிரிப்பும் கீதாவிற்கு மேலும் எரிச்சலூட்ட, “அடச்சீ வாயை மூடுங்க.. என்ன பெக்க பெக்கன்னு சிரிப்பு நான் என்ன காமெடியா பண்ணிட்டு இருக்கேன்” என்று எரிந்து விழ,
“நேத்து நீ சிரிச்சதை விட இது கம்மிதான் கீத்ஸ்” என்று அபி அவளை வாரினாள்.
அவளின் கிண்டல் வேறு அஜயின் மீது இன்னும் கோபத்தை அதிகரிக்கச் செய்ய, “இந்த சில்வண்டெல்லாம் என்னை சீண்டிப் பார்க்குற மாதிரி பண்ணிட்டல்ல.. உன்னை சும்மா விட மாட்டேன் டா” என்று மானசீகமாக அவனை திட்டிக் கொண்டிருந்தாள் கீதா.
சிரிப்பை நிறுத்திய அஞ்சலி, கீதாவை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே, “ஆமா உனக்கு ஏன் அந்த அஜயைக் கண்டா இவ்ளோ கோபம் வருது??? உனக்கு நிஜமாவே அவரை பிடிக்கலையா?” என்று கேட்க,
“அதுவே ஒரு வாலில்லாத குரங்கு.. அதைப்பார்த்தா யாருக்குத் தான் கோபம் வராது” என்று கீதா முதல் கேள்விக்கு மட்டும் பதிலளித்து இரண்டாம் கேள்வியை டீலில் விட்டுவிட, அதை குறித்துக் கொண்டாள் அஞ்சலி.
“ஒரு குரங்கே ஒருவரைப் பார்த்து குரங்குன்னு சொல்லுதே.. அதிசயம் தான்” என்று மீண்டும் கீதாவை வாரினாள் அபி.
அங்கிருந்த தென்னை மட்டையை கையில் எடுத்த கீதாவோ, “அடியே சில்வண்டு வீணா பேசி எங்கிட்ட வாங்கிக் கட்டிக்காம ஒழுங்கா ஓடி போயிடு.. இல்லை அவன் மேல இருக்க கடுப்புல உன் மண்டையை பொலந்துருவேன்” என்று மிரட்டல் விட,
கீதாவைப் பற்றி அறிந்திருந்ததால் உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடியிருந்தாள் அபி.