அம்மாபட்டியின் மொத்த கிராமமும் இரண்டாய் பிரிந்து சந்தன பாண்டியன், சுந்தர பாண்டியன் வீட்டில் தான் குழுமியிருந்தது.
Advertisement
பட்டணத்தில் எதிர் வீட்டில் இருப்பது கூட யார் என்று தெரியாமல் வளர்ந்து வந்த வாசுதேவ கிருஷ்ணனின் குடும்பத்திற்கு இந்த கூட்டத்தைக் கண்டு மிரட்சியாக இருந்தது மட்டுமல்லாமல், அங்குள்ள மக்கள் அனைவரும் இவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது வேறு சங்கடத்தை ஏற்படுத்தியது.
அப்போதும் இவை எதையும் கண்டுகொள்ளாமல் மதுரம் பாட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலை சென்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்க,
Advertisement
Advertisement
அங்கிருந்த கிராமத்து பெண்களோ தாடையில் கைகளைப் பதித்து, “இதென்ன டி கூத்தா இருக்கு” என்று தங்களுக்குள் புரணி பேசத் தொடங்கிவிட்டனர்.
அதைக் கண்டு ராமனின் இரத்த அழுத்தம் எந்த அளவிற்கு எகிறியிருக்கும் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
Advertisement
“சீதா மரியாதையா உன் மாமியாரை போனை ஆஃப் பண்ணி வச்சுட்டு உட்கார சொல்லு இல்லை நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று அருகில் அமர்ந்திருந்த அவர் மனைவியிடம் அடிக்குரலில் அவர் சீற,
“இப்போ மட்டும் மனுஷனாவா இருக்கிங்க.. மலைக்குரங்கு மாதிரி தான் மூஞ்சியை வச்சிருக்கீங்க” என்று வாய்க்குள் முனகிய சீதா, தன் அத்தையின் கைபேசியை வாங்கி தன் பைக்குள் போட்டுக்கொண்டார் மதுரத்தின் முறைப்பை பொருட்படுத்தாமல்.
” என்னப்பா ரெண்டு குடும்பமும் இப்படி மச மசன்னு அமைதியா இருந்தா எப்படி.. வந்த வேலையை ஆரம்பிங்க” என்று கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுக்க,
“இதை சொல்றதுக்குன்னே காசு கொடுத்து இவரை கூட்டிட்டு வந்திருப்பாங்களோ” என்று வினோத் அஸ்வத்தின் காதைக் கடிக்க,
அவனை முறைத்த அஸ்வத், ” வாயை மூடிட்டு பேசாம இருடா கொஞ்ச நேரம்” என்று அவனை அடக்கினான்.
“மாப்பிள்ளைக்கு அதுக்குள்ள பொண்ணை பார்க்கணும்னு அவசரம் போல, கொஞ்சம் பொறுங்க பட்டணத்து மாப்பிள்ளை.. பொண்ணலாம் நாங்க பொறுமையா தான் காட்டுவோம்.. அதுக்காக கோவத்துல கூட்டாளி காதை கடிச்சுப்புடாதீக” என்று ஏதோ அவர் பெரிய ஹாஸ்யம் சொல்லி விட்டதைப் போல் சப்தமாக நகைக்க, அவரைத் தொடர்ந்து அங்கிருந்த மற்றவர்களும் அஸ்வத்தைப் பார்த்து கொள்ளென நகைத்தனர்.
“என்னம்மா இது” என்பது போல் அஸ்வத் பாவமாய் தன் பெற்றோரை பார்க்க,
” கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ அஷு” என்று இறைஞ்சினார் சீதா.
“க்கும் க்கும்” என்று சந்தன பாண்டியன் செறுமி அவர்களின் கவனத்தை தன்னை நோக்கி ஈர்த்தார்.
” என்ன அங்கிள் தொண்டையில கிச் கிச்சா, விக்ஸ் மாத்திரை சாப்பிடுங்க கிச் கீச்சை போக்குங்க” என்று வினோத் அவரை வம்பிழுக்க,
ராமன் அவனை கண்களாலேயே சுட்டெரித்தார்.
” மன்னிக்கணும் சார்.. இவன் என் பையனோட ஃப்ரெண்ட்.. நல்ல பையன் தான் ஆனா கொஞ்சம் குறும்பு ஜாஸ்தி அதான் இப்படி பேசிட்டான்.. தப்பா நினைக்காதீங்க” என்று ராமன் சந்தன பாண்டியனிடம் மன்னிப்பு வேண்ட,
“அய்யோ அதுனால என்ன இருக்குங்க.. இளவட்டப் பயலுக எல்லாம் இப்படி துடிப்பா இருந்தா தான வீடு கலகலன்னு இருக்கும்” என்று சந்தனபாண்டியன் இலகுவாக கூற,
புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டார் ராமன்.
“உங்களுக்கு முன்னாடியே புரோக்கர் எல்லாம் சொல்லிருப்பாரு இருந்தாலும் எங்களை பற்றி நானே சொல்லிடுறேன்.. பின்னால எந்த குழப்பமும் வந்துற கூடாது இல்லைங்களா” என்று ஆரம்பித்த ராமனைத் தடுத்த சந்தன பாண்டியன்,
“அட என்னங்க மனுசனுக்கு மனுஷன் நம்பலைன்னா எப்படிங்க.. நீங்க வக்கீலு உங்க மகன் ஒரு டாக்டரு உங்க வீட்டம்மாவும் வேலைக்கு போறவக அப்படின்னு எல்லாத்தையும் அந்த புரோக்கர் புட்டு புட்டு வச்சுப்புட்டான்.. இனிமேலும் நீங்க என்னத்தை சொல்ல போறிக.. ” என்று சந்தன பாண்டியன் அடாவடியாக பேசி ராமனை அடக்கி விட்டார்.
மாப்பிள்ளை வெர்ட்டினரி டாக்டர் என்று தரகர் கூறியிருந்தாலும் அவருக்கு திடீரென்று வாயில் அது நுழையவில்லை என்பதால் வெறும் டாக்டர் என்று மட்டும் சொல்லிவிட, மாப்பிள்ளை மாறிய விஷயம் அப்போதும் யாருக்கும் தெரியாமல் போனது. அஸ்வத், அஜய் இருவரின் தோற்றமும் ஓரளவிற்கு ஒற்றுமையுடன் இருந்ததால் பெரிதாய் யாருக்கும் அதைப்பற்றி சந்தேகம் வரவில்லை. மேலும் அது கிராமம் என்பதால் பெண்ணுடைய புகைப்படத்தையும் மாப்பிள்ளை வீட்டாருக்கு காண்பிக்கவில்லை என்பதால் இரு குடும்பத்திற்கும் எந்தவொரு குழப்பமும் தோன்றவில்லை.
” நான் தான் சொல்லணும் இனி.. நான் இந்த ஊரோட..” என்று சந்தன பாண்டியன் ஆரம்பிக்க,
” அய்யோ என்ன சார் இது.. நீங்க இந்த ஊரையே காக்குற பதவியில இருக்கீங்கன்னு எங்களுக்கு எல்லாம் தெரிஞ்சு தான் வந்திருக்கோம்.. ” என்று ராமனும் அவரைப் போல சந்தனபாண்டியனை SP என்று நினைத்து அப்படிக் கூறி தடுத்து விட்டார்.
‘ என்ன இவரு ஊர்த்தலைவர்னா ஊருக்கு காவல்காரன்னு நினைச்சுக்கிட்டாரோ.. அதுசரி பட்டணத்துல வளர்ந்தவகளுக்கு இதெல்லாம் எப்படி புரியும் ‘ என்று நினைத்துக் கொண்ட சந்தன பாண்டியன் வெளியே சிரித்து வைத்தார்.
அப்போது அங்கு அனைவருக்கும் பலகாரத்தை எடுத்து வந்தார் காமாட்சி.
” ஏங்க நாங்க என்ன இந்த பலகாரத்தை சாப்பிடவோ சென்னையில இருந்து கிளம்பி வந்தோம்.. சீக்கிரம் பொண்ணைக் காமிங்க என் பேரன் எவ்ளோ நேரம் தான் உங்க மூஞ்சியவே பார்த்துட்து இருப்பான்” என்று மதுரம் குரல் கொடுக்க,
ராமன் தன் அன்னையை அதட்டினார்.
அதற்குள் சந்தன பாண்டியனும் தன் மனைவியிடம், ” ஏட்டி இன்னும் என்ன இங்கனவே நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கவ.. போ போய் புள்ளையை கூட்டிட்டு வா” என்று விரட்டினார்.
” சரிங்க இதோ போறேன் ” என்று பவ்யமாக கூறிவிட்டு காமாட்சியும் தன் மகளை அழைத்துக் கொண்டு வர, இங்கு அஸ்வத்தோ தன் ஆர்வத்தை வெளியே காட்டாமல் மறைக்க பாடு பட்டுக் கொண்டிருந்தான்.
பெண்களோடு ஒன்றாய் படித்து வேலை செய்யும் இடத்தில் பெண்களோடு பழகியிருந்தாலும் நட்பெண்ணும் எல்லைக்கோட்டை அஸ்வத் என்றுமே தாண்டியதில்லை. தனக்கு வரப்போகும் பெண்ணின் மீது மட்டுமே தன் ஒட்டுமொத்த காதலையும் காட்ட வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருந்தவன், ராமன் பெண் பார்த்திருக்கிறேன் என்று சொல்லும் போது கூட பெரிதாய் அதில் ஆர்வம் காட்டவில்லை.. ஆனால் இன்று இந்த கிராமத்தை அவனிற்கு ஏனோ மிகவும் பிடித்துவிட, இந்த சம்பந்தம் கைகூடி வர வேண்டும் என்ற வேண்டுதலை அவனை அறியாமலே அவன் மனம் கடவுளிடம் வைத்திருந்தது. அதனால் தானோ என்னவோ அவன் பெண்ணைப் பார்க்க மிகவும் ஆவலுடன் காத்திருக்க, அங்கு அஞ்சலியின் நிலையும் அதுதான்.
இதுநாள் வரை குடும்பம் அதை விட்டால் படிப்பு என்று குறுகிய வட்டத்திற்குள்ளே வாழ்ந்து வந்த பெண்ணவளுக்கு திடீரென்று திருமணம் என்று சொல்லவும் அந்த வயதிற்கே உரிய நாணமும் எதிர்பார்ப்பும் அவளை அறியாமலே அவளைத் தொற்றிக் கொண்டது. மாப்பிள்ளையின் புகைப்படத்தை வேறு அவளிடம் யாரும் காண்பிக்கவில்லை என்பதால் அவளின் கண்கள் தனது கண்ணாலனைக் காண ஆவலாய் காத்திருந்தது.
சபைக்கு அழைத்து வரப்பட்ட அஞ்சலி அனைவரையும் வணங்கிவிட்டு தன் அன்னையின் அருகில் சென்று நின்று கொள்ள, தன் மகளை பெருமையுடன் பார்த்த சந்தன பாண்டியன்,
” இதான் என் பொண்ணு அஞ்சலி.. எங்க வீட்டோட மகாலக்ஷ்மி.. என் பொண்ணைப் பத்தி நானே பெருமையா சொல்லக்கூடாது … இருந்தாலும் சொல்றேன்.. இந்த மாதிரி அடக்க ஒடுக்கமான பொண்ணை நீங்க சல்லடை போட்டு தேடுனாலும் எங்கேயும் கண்டுபிடிக்க முடியாது.. பெரியவங்க மேல அப்படி ஒரு மருவாதை.. படிப்புல சுட்டி.. தரகர் சொல்லியிருப்பாரே, பாப்பா இப்போ தான் பரீட்சை எழுதியிருக்கு கண்டிப்பா பாஸ் பண்ணிபுடும்.. ” என்று அவர் IAS பரீட்சையை மனதில் வைத்து பெருமையுடன் கூற,
வினோத்தோ, ” டேய் பத்தாவது பரீட்சையை எத்தனை டைம் தான்டா அந்த பொண்ணு எழுதும்.. இதை ஏதோ கின்னஸ் ரெகார்ட் பண்ண மாதிரி அவங்கப்பா இம்புட்டு பெருமையா நெஞ்சை நிமிர்த்திகிட்டு சொல்றாரு..உன் அப்பா உனக்கு நல்லா கோர்த்து விட்ருக்காரு டா” என்று அஸ்வத்திடம் கூற, அது அவனுக்கு அருகில் இருந்த ராமனுக்கும் கேட்டது.
“டேய் சும்மா இரேன் டா” என்று அவனை அடக்கிய அஷ்வத்தோ யாருக்கும் தெரியாமல் அஞ்சலியை பார்த்துக் கொண்டிருந்தான்.
உயரம் சற்றே கம்மி தான், இருந்தும் பால் வண்ண நிறத்தில் பளிங்கு சிலை போல் அடக்கமான அழகுடன் இருந்த அஞ்சலியை ஏனோ அஸ்வத்திற்கு பார்த்ததும் பிடித்து விட்டது.