Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம் 4 2

மதுரம் பாட்டியோ அஞ்சலியை மேலும் கீழும் பார்த்து கண்களால் அளவெடுத்துவிட்டு, ” என் அளவுக்கு இல்லைனாலும் ஓகே தான்” என்று ஒப்புதல் அளிக்க, அனைவரும் அவரை கொலைவெறியுடன் முறைத்தனர்.

அதை கண்டுகொள்ளாத பாட்டி, “இப்படியே பார்த்திட்டு இருந்தா எப்படி.. பொண்ணையும் மாப்பிள்ளையும் தனியா பேச விட்டா தான அவங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முடியும்” என்று முதன் முறையாய் அவர் சரியாய் ஒன்றைக் கூற,



Advertisement

அஸ்வத் மானசீகமாக தன் பாட்டிக்கு ஆயிரம் நன்றிகளை தெரிவித்தான்.

இப்போதுள்ள காலங்களில் இவை சகஜம் தான் என்றாலும் சந்தன பாண்டியனால் இதை ஏனோ சட்டென்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Advertisement

Advertisement

இருந்தும் மாப்பிள்ளை வீட்டாரின் பேச்சை தட்டவும் முடியாது என்பதால் சங்கடத்துடன், “தப்பா எடுத்துக்காதீங்க.. இங்க அதெல்லாம் பழக்கம் இல்லைங்க.. வேணும்னா  இங்கனவே ரெண்டு பேரும் பேசிக்கட்டும்.. நாம நம்ம வேலையை பார்ப்போம்.. ” என்று ஒரு முடிவைச் சொல்ல,

அஸ்வத்திற்கும் அஞ்சலிக்கும் எங்காவது போய் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

Advertisement

சுற்றி ஒரு ஊரே அமர்ந்திருக்க எப்படி பேச முடியும் என்று அவன் தயங்க, சரியாய் அவனைக் காக்கவென்று அப்போது ஒருவர் வந்து ஏதோ சந்தனபாண்டியனின் காதுக்குள் முணுமுணுத்தார்.

அடுத்து என்ன மாயம் நடந்ததோ, வேகமாய் எழுந்த சந்தன பாண்டியன் ,”பாப்பா தம்பியை வெளிய தோட்டத்துக்கு கூட்டிட்டு போ.. அங்க போய் ரெண்டுபேரும் பேசிட்டு வந்து ஒரு நல்ல முடிவா சொல்லுங்க” என்று அவர் கூற,

‘ அதற்குள் இவருக்கு என்னானது ‘ என்று மற்றவர்கள் குழம்ப, அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அஞ்சலியும் அஸ்வத்தும் அங்கிருந்து நழுவியிருந்தனர்.

அவர்களுக்கு வேண்டுமானால் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வது அவசியமற்றதாக இருக்கலாம்.. ஆனால் நாம் தெரிந்து கொள்வது நம்முடைய கடமை அல்லவா??

சற்று நேரத்திற்கு முன்..

வெளியே இருந்து ஓடி வந்தது சந்தன பாண்டியனின் வயலில் வேலை செய்யும் கிச்சு மணி தான்.

வேகமாய் ஓடி வந்தவன், அவரின் காதில் சென்று, ” அய்யா அந்த சுந்தர பாண்டியன் அவரோட மகளையும் வருங்கால மருமகனையும் தனியா பேசிட்டு வரச்சொல்லி அவுக வயக்காட்டு பக்கம் அனுப்பி விட்டிருக்காரு அய்யா.. இப்போ நம்ம புள்ளையை நாம அனுப்பலனா நம்ம கவுரவம் என்னத்துக்கு ஆகுறது” என்று கொழுத்திப் போட அதுவும் நன்றாய் வேலை செய்ததன் பயனாய் நம் நாயகனும் நாயகியும் தனியே சந்திக்கும் சந்தர்ப்பமும் இனிதே அமையப்பெற்றது

“ஹாய்!!!” என்று அஸ்வத் பேச்சைத் தொடங்க,

அஞ்சலியும் பதிலுக்கு புன்னகையுடன், “ஹலோ” என்றாள்.

இதற்கடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் இருவரும் குழம்ப,

அஸ்வத்தே மீண்டும் ஆரம்பித்தான், ” சாப்டீங்களா??” என்று கேட்க,

அவள் அவனின் கேள்வியில் கொஞ்சம் சப்தமாகவே சிரித்து விட்டாள்.

தான் சொதப்பிக் கொண்டு உள்ளோம் என்று உணர்ந்த அஸ்வத்தும் தன் தலையில் தட்டிக் கொண்டு, “சாரிங்க.. ஃபர்ஸ்ட் டைம்ல.. அதான் கொஞ்சம் நெர்வசா இருக்கு.. ” என்று உளற,

அதைப் புரிந்து கொண்ட அஞ்சலியும், “என்னைப் பிடிச்சிருக்கா அப்படின்னு ரெகுலரா கேட்குற அந்த கேள்வியை கேட்காம விட்டீங்களே.. அந்த அளவுக்கு சந்தோஷம்..” என்று அவள் கூற,

அவனும் அதை ஆமோதித்து, “ஹாஹா.. பார்த்து ஒரு நிமிஷத்துல என்னைப் பிடிச்சிருக்கா இல்லையான்னு உங்களுக்கு எப்படி தெரியும்.. சோ இந்த மாதிரி கேள்வியெல்லாம் நான் கேட்க மாட்டேன் பயப்படாதீங்க.. ” என்று கூறியவன் தொடர்ந்து,

” உங்க ஊர் ரொம்ப அழகா இருக்குங்க.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” என்று தன் மனதில் தோன்றியதைக் கூற,

“ஓஹோ அப்போ நான் நல்லா இல்லையா??” என்று அவள் கேட்டு விட்ட பின்பே அதை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

‘ ச்சே இப்படியா கேட்டு வைப்ப.. அவர் என்ன நினைச்சிருப்பாரு ‘ என்று அவள் தன்னைத் தானே திட்டிக்கொள்ள,

அவளின் முக பாவனையை ரசித்தவன், பின் கண்களில் குறும்புடன் , “நீங்க இந்த ஊர்ல பிறந்ததுனால தானோ என்னவோ இந்த ஊரே இவளோ அழகா இருக்கு” என்று அவன் ரசனையுடன் கூற,

அஞ்சலிக்கு அவன் கூற்று தேன் போல் தித்தித்தாலும்,  நாணம் வந்து அவளை அடுத்து பேச விடாமல் தடுத்தது.

அதற்குள் அங்கு வந்துவிட்ட அந்த ஊர் பெண்மணிகள், “என்ன டாக்டரு தம்பி விட்டா ராக்கோழி கூவுற வரைக்கும் பேசுவீய போலயே..” என்று கிண்டல் செய்ய,

தங்களுக்கான நேரம் முடிந்து விட்டது என்று உணர்ந்த அஸ்வத்தும் கண்களாலேயே அஞ்சலியிடம் விடைபெற்று விட்டு, ” நீங்க வரலைன்னா இராக்கோழி என்ன காலையில சேவல் கூவுற வரைக்கும் கூட பேசுவேன்” என்று அந்த பெண்மணிகளுக்கு பதிலடி கொடுத்து விட்டு உல்லாசமாக அவன் அங்கிருந்து கிளம்ப, அந்த பெண்களோ அஞ்சலியை ஒரு வழி செய்து விட்டனர்.

அதன் பின் சில பல பேச்சு வார்த்தைகளுக்கு பின் மாப்பிள்ளை பெண்ணிடம் சம்மதம் கேட்டுவிட்டு நிச்சயதார்த்த தேதியை குறிக்க போன சமயம்,  அவர்கள் வீட்டு வேலைக்காரன் வேகமாய் ஓடிவந்து சந்தன பாண்டியனிடம், “அய்யா நம்ம லட்சுமிக்கு காய்ச்சல் ரொம்ப அதிகமா இருக்குங்க அய்யா.. எழுப்புனா எழுந்திருக்க மாட்டேங்குது.. டாக்டருக்கு போன் பண்ணாலும் எடுக்கலை.. எனக்கு பயம்மா இருக்குங்க அய்யா.. உங்க மாப்பிள்ளை டாக்டர் தானங்க அய்யா அவரை வந்து ஒரு எட்டு பார்க்க சொல்றீங்களா??” என்று அவன் தயக்கத்துடன் கேட்க,

உடனே வினோத்தோ, ” அட என்னங்க.. இங்க ரெண்டு டாக்டரை வச்சுக்கிட்டு இப்படி நீங்க இதை கேட்க கவலைப் படலாமா?? நானும் இவனும் ஒண்ணா தான் படிச்சோம்.. நானும் டாக்டர் தான்..  லட்சுமி எங்க?? வாங்க நான் பார்க்குறேன்.. அவங்களுக்கு ஒன்னும் ஆகாது” என்று தன் ஹீரோயிசத்தை காட்ட,

அவனை நன்றியுணர்வுடன் பார்த்த அந்த வேலைக்காரன் கையெடுத்துக் கும்பிட்டு, ” நீங்க நல்லாயிருக்கனும் சாமி.. வாங்க லட்சுமி அங்க தான் இருக்கா” என்று கூறிவிட்டு முன்னே நடக்க,

வினோத் அவரைத் தொடர்ந்து சென்றான். அவனை பின்பற்றி மற்றவர்களும் செல்ல,

அவன் வீட்டிற்கு பின்புறம் இருந்த மாட்டுக் கொட்டகைக்கு  அழைத்து வந்திருந்தான்.

அதைக் கண்டு குழம்பிய வினோத், ” என்னங்க சார் லட்சுமிகிட்ட கூட்டிட்டு போகாம இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க?? லட்சுமி இங்கயா இருக்காங்க??” என்று கேட்க,

அங்கு ஓரமாய் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுமாட்டைக் கைகாட்டிய அந்த வேலைக்காரன், “அய்யா இதுதானுங்க நம்ம லட்சுமி.. வெரசா வந்து என்னன்னு பாருங்க.. பாவம் ரொம்ப முடியாம கெடக்குறா” என்று அவன் வருத்தத்துடன் கூறினான்.

“ஏதே!!! லட்சுமினா மாடா” என்று அதிர்ந்து போன வினோத்,

அங்கே சிரித்துக் கொண்டிருந்த அஸ்வத்தைக் கண்டு, “இந்த காட்டுப் பயலுக கிட்ட நான் மாட்டு டாக்டர் இல்லை ஹார்ட்டு டாக்டர்னு எப்படி சொல்லி புரியவைக்க” என்று புலம்பி தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.

நம் நாயகன் மாட்டு டாக்டர் அல்ல ஹார்ட்டு டாக்டர் என்று இப்போதாவது உண்மையை நம் மீசைக்கார மாமனார் கண்டுபிடிப்பாரா?? பொறுத்திருந்து பார்ப்போம்..

– தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!