“அம்மா உனக்கும் உன் புருஷனுக்கும் ஒரு தடவை சொன்னா புரியாதா?? நான் தான் எனக்கு இந்த கல்யாணம்லாம் வேண்டாம்னு சொன்னேன்ல.. இப்போ எதுக்கு ஏதோ வித்தை காட்ட போற மாதிரி ஊரையே கூட்டி வச்சிருக்கீங்க.. என்னாலலாம் அங்க வந்து பொம்மை மாதிரி நிக்க முடியாது” என்று கீதா கத்த,
Advertisement
அவளின் சப்தம் வெளியே வரை கேட்டது. அவள் பேசுவது புரியாவிட்டாலும் கோபமாய் ஏதோ பேசுகிறாள் என்பது வரை புரிய, அஜய்யின் புருவங்கள் மத்தியில் யோசனை முடிச்சுகள் விழுந்தது.
Advertisement
Advertisement
“ஷ்ஷ்!! கீது கத்தாத.. வெளிய இருக்கவங்களுக்கு கேட்க போகுது.. எனக்காக கொஞ்ச நேரம் வெளிய வந்து நின்னுட்டு போ டா.. அவங்க போனதுக்கு அப்பறம் அப்பா கிட்ட நான் பேசுறேன் .. உனக்கு எப்போ கல்யாணம் பண்ணிக்க பிடிக்கிதோ அப்போ பண்ணிக்கோ.. ஆனா இப்போ மட்டும் வெளிய வந்து நின்னுட்டு போடா தங்கம்” என்று அவளிடம் மீனாட்சி கெஞ்ச,
அதே சமயம் வெளியே இருந்து சுந்தர பாண்டியன் வேறு, ” மீனா சீக்கிரம் கூட்டிட்டு வா.. இன்னுமா கீதா ரெடி ஆகலை” என்று குரல் கொடுக்க,
Advertisement
பயத்தில், “இதோ வந்துட்டோம்ங்க” என்று பதிலளித்தவர், கீதாவை கெஞ்சி கொஞ்சி ஒரு வழியாய் அவளை வெளியே அழைத்து வந்திருந்தார்.
பச்சை வண்ண பட்டுடுத்தி மிதமான அணிகலன்கள் அணிந்து அளவான அழகோடு வந்து நின்றிருந்த கீதாவை பரமசிவன் குடும்பத்திற்கு மிகவும் பிடித்திருந்தது.
ஆனால் அஜய் தான் அவளை மேலிருந்து கீழ் வரை தன் லேசர் கண்களால் ஆராய்ந்து கொண்டிருந்தான்.
அவளோ அவர்கள் யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் கடுப்புடன் நின்று கொண்டிருக்க,
அவளை மேலும் சோதிக்குமாறு சுந்தர பாண்டியன் வேறு, “கீதா போய் எல்லாருக்கும் காபி கொடுத்துட்டு வா” என்று பணித்தார்.
அதைக் கேட்டு தன் தந்தையை வெளிப்படையாகவே முறைத்தாள் கீதாஞ்சலி.
அதை மனதில் குறித்துக் கொண்ட அஜய் தன் குரலைச் செருமிக்கொண்டு, “நான் காபி குடிக்க மாட்டேன் அங்கிள்.. ஹார்லிக்ஸ் மட்டும் தான்” என்று சுந்தர பாண்டியனிடம் கூறினாலும் பார்வை என்னமோ கீதாவின் மேல் தான் இருந்தது.
அவனின் பேச்சில் இருந்த குறிப்பை புரிந்து கொண்ட சுந்தர பாண்டியனும் கீதாவின் பக்கம் திரும்பி, “என்ன கீதா நின்னுட்டே இருக்க, தம்பி சொன்னது காதுல விழுந்ததுல போய் ஹார்லிக்ஸ் போட்டு எடுத்துட்டு வா” என்று கூற,
அவள் மறுத்துக் கூறும் முன் , “இதோ போட்டுட்டு வரோம்” என்று அவளைப் பிடித்து அடுப்படிக்குள் இழுத்துச் சென்றார் மீனாட்சி.
அவர்கள் உள்ளே சென்றதும் பரமசிவனிடம் திரும்பிய ஜீவா, ” அப்பாங் பொண்ணோட பேரு அஞ்சலின்னு சொன்னீங்க.. இவரு கீதா கீதான்னு கூப்பிடுறாரு.. நாம வீடு மாறி வந்துட்டோம்னு நினைக்கிறேன்” என்று அவன் அதிசயமாய் தன் போலீஸ் மூளையை பயன்படுத்தி உண்மையை கண்டுபிடிக்க,
அவன் தலையில் கொட்டிய அஜய், “இப்போ பேர் ரொம்ப முக்கியம் பாரு.. எந்த பேரா இருந்தா என்ன?? கொஞ்ச நேரம் மூடிட்டு உட்காரு” என்று அவனை அடக்கி விட்டு கீதாவின் வரவிற்காக காத்திருந்தான்.
இங்கே, அறைக்கு உள்ளே வந்ததும் அவரிடமிருந்து கைகளை உறுவிக் கொண்ட கீதா, “என்னை எதுக்கு மா இழுத்துட்டு வந்த … அவன் என்னமோ அவனோட வீடு மாதிரி உரிமையா உக்கார்ந்து கிட்டு ஹார்லிக்ஸ் வேணும்னு சொல்றான்.. உன் வீட்டுக்காரரும் அவனோட சேர்ந்துட்டு என்னையவே போட்டுட்டு வான்னு விரட்டுறாரு.. என்ன நினைச்சுட்டு இருக்கிங்க எல்லாரும்.. நல்லா காட்டெருமை மாதிரி இருக்கான் இவன் ஹார்லிக்ஸ் தான் குடிப்பானாமா?? காபி டீ லாம் குடிக்க மாட்டானா?? என் வாய்ல நல்லா வருது” என்று அவள் கோபத்தில் கத்த,
” அச்சோ.. பிளீஸ் கீது கத்தாத.. அவங்க போன பின்னாடி எல்லாத்தையும் பேசிக்கலாம்.. இப்போ நான் போட்டுக் குடுக்குற ஹார்லிக்சை மட்டும் அவங்க கிட்ட கொடுத்துட்டு வந்துரு டா பிளீஸ் என் தங்கம்ல” என்று அவளிடம் கெஞ்சினார் மீனாட்சி.
தன் அன்னைக்காக கொஞ்சம் மலை இறங்கிய கீதாவின் மூளைக்குள் ஒரு யோசனை தோன்ற உடனே, “அம்மா நீ தள்ளி அங்க போய் நில்லு நான் போட்டுட்டு வரேன்” என்று சொல்ல,
மீனாட்சியின் மண்டைக்குள் அபாய மணி அடித்தது.
தன் மகளின் குணத்தைப் பற்றி தெரிந்த மீனாட்சி, “இல்லை டா உனக்கு எதுக்கு சிரமம் நானே போடுறேன்” என்று மறுக்க,
“இப்போ நீ போகலைனா நான் வரவே மாட்டேன்” என்று மிரட்டி தன் அன்னையை அங்கிருந்து கிளப்பியவள் தன் வேலையைத் தொடங்கினாள்.
“ஹார்லிக்ஸா டா கேக்குற ஹாலோவன் பொம்மை.. எங்கம்மா அரைச்ச இட்லிப்பொடி பாலை குடிச்சு சாவு” என்று கறுவிக் கொண்ட கீதா, பாலில் இட்லிப் பொடியை கலந்து கொண்டு ஒரு நமுட்டுச் சிரிப்புடன் எடுத்து வந்தவள் நேராக அஜய்யிடம் சென்று நீட்ட, அவளை விட ஒரு நக்கல் சிரிப்புடன் அவளை நோக்கியவன், ” நான் ஹார்லிக்ஸ் குடிப்பேண்ணு தான் சொன்னேன்.. ஆனா வேண்டும்னு சொல்லலையே .. இப்போ தான் நான் வயிறு ஃபுல்லா சாப்பிட்டு வந்தேன்..இட்ஸ் ஓகே நீங்க வேற கஷ்டப்பட்டு யோசிச்சு போட்டுட்டு வந்திருப்பீங்க.. அதை எதுக்கு வேஸ்ட் பண்ண.. என் நண்பன் ஜீவா ஹார்லிக்ஸ்னா கால் லிட்டர் குடிப்பான்..சோ அவன் கிட்ட குடுங்க” என்று ஜீவாவை கோர்த்து விட்டான் அஜய்.
இதை எதிர்பார்க்காத கீதா அதிர்ந்து போய் நிற்க, அவளின் முக பாவத்தைக் கண்டு யாருக்கும் தெரியாமல் அவளைக் கண்டு குறும்புடன் கண்ணடித்தான் அந்த மாயக்கண்ணன்.
அதைக் கண்டு கீதாவின் இரத்த அழுத்தம் மேலும் எகிற, கடுப்புடன் நின்றிருந்தாள்.
அஜய்யின் செய்கைகளைக் கண்டு பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்த பரமசிவன், ” உன் மகன் திருந்தவே மாட்டானா” என்று தனத்திடம் காய்ந்தார்.
இன்னும் டிரேயை வைத்துக் கொண்டு நின்றிருந்த கீதாவைப் பார்க்க ஜீவாவிற்கு பாவமாக இருக்க, “அவன் குடிக்கலைனா போறான்.. நான் குடிக்கிறேன்.. நீ ஃபீல் பண்ணாத தங்கச்சி” என்று அவன் கீதா தடுப்பதையும் பொருட்படுத்தாமல் அதை ஒரு மிடறு அருந்திவிட,
அடுத்த நிமிடமே முழி பிதுங்கிப் போய் பாவமாய் கீதாவை ஏறிட்டு, “ஏன்மா உனக்கு என்மேல இந்த கொலைவெறி” என்பதைப் போல் பார்த்தான்.
அவன் நிலைமையைப் பார்க்க கீதாவிற்கே பாவமாகிப் போய்விட்டது.. “ஐ ஆம் சாரி” என்று அவனைப் பார்த்து வாயசைக்க, இருவரையும் கண்டு ஆர்ப்பாட்டமாக நகைத்தான் அஜய்.
அவனின் சிரிப்பிற்கான காரணம் புரியாமல், மற்றவர்கள் அவனை கேள்வியாக பார்க்க,
அஜயோ அலட்டிக்கொள்ளாமல் சுந்தர பாண்டியனை பார்த்து, ” அங்கிள் எனக்கு உங்க பொண்ணு கூட கொஞ்சம் தனியா பேசணும்” என்று அதிரடியாக கேட்க,
அங்கிருந்த அனைவரும் அவனின் பேச்சில் ‘ அடியாத்தி என்னாடி இது ‘ என்று ஆச்சரியப்பட,
பரமசிவன் கோபத்தில், ” டேய் சும்மா இருடா.. கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாம” என்று கத்த,
அவரைத் தடுத்த சுந்தர பாண்டியன், “விடுங்க சார்.. ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சு பிடிச்சு கல்யாணம் பண்ணா தான் லைஃப் நல்லா இருக்கும்.. அவர் கரெக்டா தான் கேட்டிருக்காரு.. கீதா நீ அவரை நம்ம வீட்டுக்கு பின்னாடி இருக்க வயல்வெளிக்கு கூட்டிட்டு போ” என்று அவர் அஜய்க்கு ஆதரவளிக்க, ஒரு வெற்றிப் புன்னகையுடன் தன் இருக்கையில் இருந்து எழுந்த அஜய் அங்கு தன்னை முறைத்துக் கொண்டிருந்த கீதாவை நோக்கி, ” என்ன கீதா என்னோட துணையா வர சம்மதமா??” என்று கேட்க,
அதற்கு, “என்ன சொன்னீங்க???” என்று அவள் பத்ரகாளியைப் போல் முறைப்புடன் கேட்க,
“இல்லை என்னோட வழித்துணையா வர விருப்பமான்னு கேட்டேன்.. போகலாமா??” என்று கேட்டுவிட்டு அவன் முன்னால் நடக்கத் துவங்க,
அவளுக்கும் அவனோடு பேச வேண்டி இருந்ததால் வேறு வழியில்லாமல் அவனை பின் தொடர்ந்தாள்.
தத்தம் பிள்ளைகளைப் பற்றி நன்றாய் அறிந்து வைத்திருந்த மீனாட்சியும், பரமசிவனும் ‘ அவர்கள் இருவரும் எந்தவொரு வில்லங்கத்தையும் இழுத்து விடாமல் வீடு வந்து சேர வேண்டும் ‘ என்ற வேண்டுதலுடன் அமர்ந்திருந்தனர்.
“இதோ பாருங்க.. எனக்கு சுத்தி வலைச்சுலாம் பேச தெரியாது.. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை .. நீங்க வந்த வழியே கிளம்பி போய்டுங்க.. அதான் உங்களுக்கு நல்லது” என்று கீதா பட்டென்று தன் மனதில் இருப்பதை போட்டு உடைத்து விட,
அவனோ அதைக் கேட்டு கொஞ்சமும் அசராமல், ” ஏன் உங்க ஊருல இருந்து வெளிய போக ஒரு வழி தான் இருக்கா??” என்று சம்பந்தமே இல்லாமல் பதில் கேள்வி கேட்டான்.
கீதாவோ அவன் கேள்வியில் குழம்பி, ” என்ன??” என்று கேட்க,
” இல்ல நீ தான சொன்ன.. வந்த வழியே போய்டுங்க அதான் உங்களுக்கு நல்லதுன்னு.. அதான் வேற வழி இல்லையா ஒரே வழி தான் இருக்கான்னு கேட்டேன்” என்று அவன் பொறுமையாய் விளக்கமளித்தான்.
ஆனால் அதைக் கேட்ட கீதாவிற்கு தான் பொறுமை பொள்ளாச்சியை தாண்டி சென்று கொண்டிருந்தது.
” ரொம்ப அறிவாளின்னு நினைப்பா.. எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை.. என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் லைஃப் நாசமா போகும்.. மரியாதையா கல்யாணத்தை நீயே நிப்பாட்டிரு.. இல்லை அவ்ளோதான்” என்று அவளும் மரியாதையை கைவிட்டு விட்டு ஒருமைக்குத் தாவ,
அதைக் கண்டு மேலும் புன்னகைத்தவன், ” ஆனா எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கே .. சோ எனக்கு இந்த கல்யாணம் வேண்டும் … உனக்கு வேண்டாம்னு தோணுச்சுனா நீ கல்யாணத்தை முடிஞ்சா நிறுத்திக்கோ” என்று அவன் கூலாகக் கூற,
கீதாவிற்கோ அவனின் இந்த திமிர் பேச்சு சுத்தமாய் பிடிக்கவில்லை..
“வேணாம் .. ஆழம் தெரியாமல் காலை விட பார்க்குற.. என்னைப் பத்தி தெரிஞ்சா நீயே இந்த கல்யாணம் வேண்டாம்னு ஓடிருவ..” என்று அவள் மிரட்ட,
அவளின் பேச்சு அவனிற்கு மிகவும் சுவரசியமாக இருந்ததோ என்னவோ அவளையே ரசித்து பார்த்தவன், ” கோபத்துல உன் மூக்கு சிவக்குது.. அதைப் பார்த்தா எனக்கு மூட் சேஞ்ச் ஆகுது.. சோ இனி என் முன்னாடி கோபப்படாத .. அப்பறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை” என்று அவன் சில்மிஷமாய் கூற,
அதில் வெகுண்டெழுந்த கீதா, “ச்சீ, முதல் முதலாக பார்க்குற ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேசணும்னு கூட தெரியலை.. நீயெல்லாம் என்ன மனுஷன்.. உன்னை போய் ஒரு மாப்பிள்ளைன்னு என் அப்பா கூட்டிட்டு வந்திருக்காருல அவரை சொல்லணும்.. இன்னொரு டைம் என் கிட்ட இப்படி பேசின பல்லைத் தட்டி கையில கொடுத்திடுவேன் ஜாக்கிரதை” என்று அவள் கோபத்தில் கத்த,
அதை மேலும் ரசித்த அஜய், ” ஐ திங்க் ஐ ஹெவ் ஃபாலன் ஃபார் யூ” என்று தன் காதலை அவன் கூறிவிட்டான்.
பழனிக்கு பால் காவடி எடுத்துக்கூட பத்தாவதை பாஸ் பண்ண முடியாத கீதாவிற்கோ அவன் சொன்னது சுத்தமாய் விளங்கவில்லை.
இருந்தும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “நான் வீட்டுக்கு போய் உன்னை பிடிக்கலைன்னு சொல்ல போறேன்.. நீ இங்கேயே கிடந்து உளறிகிட்டு கெட” என்று கூறியவள் அவன் பதில் கூறுவதற்கு முன்பே அங்கிருந்து விடு விடுவென நடந்து சென்றிருந்தாள்.
” OMg.. யூ ஆர் கில்லிங் மீ பேப்ஸ்” என்று வெட்கத்துடன் கூறிக்கொண்ட அஜய்,
” உன் வாயலையே என்னை பிடிச்சிருக்குன்னு சொல்ல வைக்கிறேண்டி என் பச்சைக் கிளி” என்று கூறிக்கொண்டே அவளைப் பின் தொடர்ந்தான் அஜய்.
அங்கு அவர்கள் வரவுக்காக ஆவலாய் காத்துக் கொண்டிருந்த இரு வீட்டாருக்கும் கீதாவின் வேகம் உள்ளுக்குள் பயத்தைத் தர,
பரமசிவன் முடிவே பண்ணிவிட்டார், “ஏதோ அந்த பிள்ளையை கடுப்பேத்தி விட்டுட்டான்.. இந்த சம்பந்தம் போச்சா” என்று அவர் தலையில் கைவைத்து விட,
கீதாவிற்கு பின் வந்து கொண்டிருந்த அஜய், அவளுக்கு முன் வீட்டிற்குள் நுழைந்து , ” அங்கிள் எனக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு” என்று தன் சம்மதத்தை கூறிவிட,
அப்போது தான் மீனாட்சிக்கு போன உயிர் திரும்ப வந்தது..
சுந்தர பாண்டியனிற்கு தன் மகளைப் பற்றி தெரியுமாதலால் அவள் மறுத்து ஏதும் பேசி குட்டையை குழப்பி விட வாய்ப்பு அதிகம் என்பதால் , ” மீனாட்சி கீதாவை கூட்டிட்டு உள்ள போ” என்று பணிக்க, அவரும் கீதா மறுப்பதை பொருட்படுத்தாமல் தன் மகளை இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்று விட்டார்.
அதன் பின் இரு வீட்டார்களும் நிச்சயதார்த்த தேதியை பற்றி கலந்தாலோசிக்க , எதிர்வீட்டில் இருந்து ஏதோ கலவரம் நடப்பது போல் பயங்கரமான சப்தம் கேட்டது.
‘ பொண்ணு பார்க்க தான வரதா சொல்லி அவ்ளோ பில்டப் பண்ணி பட்டாசு எல்லாம் போட்டாரு.. ஆனா இப்போ என்ன சண்டை நடக்குற மாதிரி இவளோ கூச்சலா இருக்கு ‘ என்று நினைத்து குழம்பிய சுந்தர பாண்டியன் வெளியே சென்று பார்க்க, அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் வெளியே வந்தனர் .
நினைத்ததை போல் அங்கு சந்தன பாண்டியனும் , ராமனும் ஏதோ விவாதித்து கொண்டு இருக்க மற்றவர்கள் கூச்சல் போட்டுக் கொண்டு இருந்தனர்.
‘ என்னாச்சு ???!! ‘ என்று அனைவரும் குழம்பிப் போய் நிற்க,
அப்போது அங்கே கூட்டத்தில் இருந்த ஒருவர், ” வீடு மாறிப் போச்சு ப்பா.. இவுக தான் SP சார் வீட்டுக்கு பொண்ணு பார்க்க வந்தவுக, அங்க இருக்கவுக தான் சந்தன பாண்டியன் அய்யா வீட்டுக்கு பொண்ணு பார்க்க வந்தவுகளாம்” என்று உண்மையை போட்டு உடைக்க, அங்கே ஒரு சலசலப்பு தோன்றியது.
‘ இது எப்படி நடந்துச்சு?? என்னாச்சு?? ‘ என்கின்ற கேள்விகள் அந்த தெருவைச் சுற்றி எதிரொலிக்க, வீடு மாறியது தெரியாமல் தங்கள் மனங்களை மாற்றிக் கொண்ட அந்த இதயங்களோ உண்மையை அறிந்து மௌனமாக கண்ணீர் சிந்த அந்த கூச்சலில் அது யார் செவியையும் எட்டாமல் காற்றோடு கரைந்து போனது.