இது தான் பார்த்திபனின் குடும்பம் இருக்கும் வீடு. வீடு என்பதை விட அரண்மனை என்று சொன்னால் சரியாக இருக்கும். இல்லை காலனி என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் மூன்று வீடுகளை ஒன்றிணைத்துக் கட்டப்பட்டது போல் இருந்தது. படுக்கை அறை பூஜை அறை என அனைத்தும் தனித்தனியே இருந்தாலும் வாசல் ஒன்று தான். சமையலறையும் ஒன்று தான்.
வீட்டைப் பற்றி பார்க்கும் முன் வீட்டில் உள்ள சிலரின் குணங்களை அதாவது முக்கியமாக மாணிக்கத்தின் குணங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
Advertisement
Advertisement
அனந்தராமனும் அவரின் அண்ணனும் சேர்ந்து நகை ஆசாரியராகத் தன் வாழ்க்கைப் பயணத்தை சென்னையில் தொடங்கினர். மனைவி மகன்கள் வந்தாலும் மகள் என்று ஒருத்தி பிறந்த பின் தான் அவரின் வாழ்க்கை பூரணத்துவத்தை அடைந்தது என்பார் அனந்தராமன்.
நன்முறையில் சென்றுகொண்டிருந்த அவர்களின் வாழ்வில் புயல் வீசத் தொடங்கியது. நேரம் சரியில்லாததாலும் உடன் பிறந்தவனின் நம்பிக்கை துரோகத்தினாலும் தொழிலில் சறுக்கலை சந்தித்தார் அனந்தராமன். நஷ்டத்தை எதிர்கொள்ள முடியாது நொடித்து போகும் சூழ்நிலை வந்தது. மூழ்கிவிடுவோமோ என்ற கவலையில், கரம் நீட்டி உதவியது மாணிக்கம். கல்லூரி கூட முடிக்காத நிலையில் தந்தைக்கு தோள் கொடுத்து வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினார். அதன் பின் வீழ்ச்சி என்பது இல்லை. இப்போது வரை.
Advertisement
மாணிக்கம் கடின உழைப்பாளி. வியாபார நுணுக்கங்கள் தெரிந்தவர். கடுமை காட்ட வேண்டிய இடத்தில் கடுமையையும் சிரித்துச் சிரித்துப் பேசி ஏமாற்றுபவர்களை அவர்களின் வழியிலும் சென்று தன் தொழிலைத் தூக்கி நிறுத்தியவர்.
VMS jewellery private limited. இதுதான் அவர்களின் நிறுவனம். VMS jewellery என்ற பெயரில் சென்னையில் மட்டும் இரண்டு நகைக் கடைகளை நடத்தி வருகிறார். பிற மாவட்டங்களில் கிளைகளைத் தொடங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
பெயர் சொன்னாலேயே தெரியும் அளவுக்கு பிரபலமடைந்திருந்த ஒரு நகை நிறுவனம் இரண்டாக உடைந்ததன் விளைவாக அனந்தராமனின் பங்காக மாணிக்கத்தின் கைக்கு கிடைந்தது ஒரு சிறிய பகுதி மட்டுமே. அதை பூஜ்ஜியம் என்றும் சொல்லலாம். அதைத் தன் தொடக்கமாக கருதி ஓட ஆரம்பித்தவர் இந்த முப்பது ஆண்டுகளில் அவர் கண்ட வளர்ச்சி தான் VMS jewellery.
குடும்பமாக வாழ்வதே அரிதாக நிகழும் சம்பவமாக பார்க்கப்படும் இன்றைய காலத்தில் அனந்தராமனின் குடும்பம் கூட்டுக்குடும்பமாகவே இப்போது வரை வாழ்கிறது. காரணம் அந்த வீட்டு மருமகள்களான பத்மாவும் மாலினியும் தான்.
எவ்வித மனக்குறைகள் வந்தாலும் அதைச் சமாளித்து குடும்பம் பிரியாதிருக்க, சின்ன சின்ன அட்ஜஸ்ட்மெண்டுகளுடன் ஓரகத்திகள் இருவரும் முணுமுணுத்து கொண்டே ஒரு வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல் தொழிலை விரிவுபடுத்தியதில் பட்டப்படிப்பு முடித்த சுகுமாரனின் உறுதுணை எப்பொழுதும் இருக்கும். வரலட்சுமியின் உதவியும் தான். உடன் பிறப்புகள் மூவரும் கூட்டாக கட்டிய கோயில் அது என்பர்.
ஒவ்வொரு நகைக் கடையும் அதன் நகை வடிவமைப்பில் அதீத கவனம் செலுத்தப்படும். தனித்துவமான டிசைன்களே மக்களிடம் அவர்களை கொண்டு சேர்க்கும். VMS jewellery யின் நகையின் தரம், டிசைன் நன்றாக இருப்பதால் கடையின் பெயர் மக்களிடையே நிலைத்து நின்றது. பிஸ்னஸ் டெவலப் ஆனது.
வரலட்சுமி தான் நகையின் வடிவமைப்பாளர். கல்லூரி முடித்த போது சண்முகத்துடன் காதல் என்று வந்து நின்றார். மகளை விட்டு பிரிய மனமில்லாத அனந்தராமன் அகல்யா தம்பதியினர் சண்முகத்தை வீட்டோட மாப்பிள்ளையாக வைத்து கொண்டார். அவர்களின் மகள் தான் விஷாலினி. இப்போது தான் கல்லூரி முடித்தாள். தாயை போல நகை வடிவமைப்பில் இறங்க உள்ளாள்.
சுகுமாரன் – மாலினி, இவர்களின் முதல் புதல்வி தான் நேகா.. மாணிக்கத்தின் செல்லம் என்று கூட சொல்லலாம். ஏனெனில் மாணிக்கத்தை போல அவளும் அந்த நிறுவனத்தை அதிகம் நேசிப்பதால்.
பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் முடித்துவிட்டு புது புது ஐடியாக்களுடன் மாணிக்கத்தின் தொழிலில் இறங்கி விட்டாள். அவளுக்கும் வரலட்சுமியை போல அனந்த பவனத்தைப் பிரிந்து செல்வதில் விருப்பம் இல்லை. எனவே சண்முகத்தை போல் வீட்டோடு மாப்பிள்ளையை வேண்டினாள்.
அவள் கேட்டது என்னவோ ஒன்று. ஆனால் அமைந்தது நம் சந்ரு தான்.
மாணிக்கம் – பத்மா, அந்த வீட்டின் வாயில்லா பூச்சி என்றால் அது பத்மா தான். யாரையும் எதிர்த்து பேசியது இல்லை. சண்ட சச்சரவுகள் வந்தாலும் அலட்டிக் கொள்ள மாட்டார். மாமனார் மாமியாரின் பேச்சை இப்போது வரை கேட்கும் உன்னத மருமகள் அவர். சுருங்க சொல்ல வேண்டும் என்றால் இந்த அனந்த பவனத்தை தூக்கி நிறுத்தும் தூண் என்றும் சொல்லலாம். அத்தனை பொறுமைசாலி.
திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் குழந்தை செல்வத்தைக் கடவுள் கண்ணில் காட்டவில்லை பத்மா மாணிக்கம் தம்பதியினருக்கு. சில பல வேண்டுதலுக்கு பின் மாலினியும் பத்மாவும் ஒரு சமயத்தில் கருத்தரிக்க. முதலில் பிறந்தவள் நேகா தான். பதினைந்து நாட்கள் இடைவெளி விட்டு கிடைத்த செல்வம் தான் மயூரியும் பார்த்திபனும். இரட்டையர்கள்…
ஸ்ரீராம், நகை கடையில் மேனேஜராக பணியில் வந்து சேர்ந்தவன். அவனின் திறமையை கண்ட மாணிக்கம் அவனைத் தன் வீட்டு மருமகனாக்க நினைத்தார்.
முதலில் நேகாவிற்காகத்தான் பேசப்பட்டான் ராம். ஆனால் அவன் House husband-ஆக இருக்க சம்மதிக்கவில்லை. எனவே மயூரியைப் பிடித்து திருமணம் செய்து வைத்து விட்டனர். இப்போது அவர்கள் தன்வீர் என்ற மூன்று வயது ஆண் குழந்தையுடன் மகிழ்வுடன் வாழ்ந்து வருகின்றனர்.
மூத்தவள் இருக்க இளையவளுக்கு திருமணமா என்ற கேள்வி எழ, வேற யாரும் கிடைக்காததால் பத்மாவின் அண்ணன் மகன் சந்திரபிரகாஷை தேர்வு செய்தனர். இருவருக்கும் ஒரு மேடையில் திருமணம் நடந்தது.
சந்ரு என்ன வேலை செய்கிறான் என்றால்,, ” House husband-ஆ இருக்கேனே அது போதாது. ஆக்சலி வியர்வை சிந்தி உடம்ப வளச்சி வேல பாக்குறதுன்னா நமக்கு கொஞ்சம் அலர்ஜி. அதா வந்து உக்காந்திட்டேன். அதுலயும் பத்மா அத்தை சமையலுக்கு இருபத்தி நாலு மணி நேரத்த மூணு வேளையா பிரிக்காம முப்பது வேளையாக பிரிச்சிருக்கலாம். எனி டயம் தட்டுல சோறு கிடைச்சிட்டே இருக்கும். வெரி டேஸ்டி.”
இதிலிருந்தே தெரிந்திருக்கும் அவன் என்ன வேலை பார்க்கிறான் என்று. சரி விடுங்க.. நம்ம பார்த்திபனும் இவனும் ஒரே கட்சி. அதான் வேலைக்கு போகாமல் உட்கார்ந்தே இருக்கும் கட்சி. யாரு தலைவன் யாரு தொண்டன் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நெருக்கம்.
மாணிக்கத்திற்கு ஒரே ஒரு ஆசை தான். அது தந்தைக்கு பின் தான் வாரிசாக அரணாக நின்று தொழிலைக் காத்தது போல் தனக்கு பின் ஒரு தொழில் வாரிசு வேண்டும். அவர்களிடம் வேலை செய்யும் சில நூறு ஊழியர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்குவித்து தொழிலை முன் நடத்த வேண்டும். எப்போது இவன் வீழ்வான் எப்போது இந்த நிறுவனத்தைத் தூக்கி சாப்பிடலாம் என்று சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் எதிரிகளுடன் போராட ஒரு தலைவன் போல் தன் வாரிசு இருக்க வேண்டும்.
நொடிந்து போகும் நிலையில் தன் தந்தைக்கு நான் இருந்தேன். என்னைப் போல் என் மகனும் எனக்கு தோள் கொடுக்க வருவான் என்று எதிர்பார்த்தவருக்கு பார்த்திபனின் எல்லா செயலும் அதிருப்தியைத் தந்தது.
படிப்பில் ஆரம்பித்து அனைத்திலும் அவன் மாணிக்கம் நினைத்ததை செய்யவில்லை. குறிப்பாக கடை பக்கம் கூட வராது, வந்தாலும் எனக்கென்ன என்பது போல் இருப்பது தான் அவரின் பெரும் கவலை.
அந்தக் கவலை மேலும் அதிகரிப்பது போல் வாரம் ஐந்தாறு பில்கள் இருக்கும். மருத்துவம் பார்க்க சிரமப்பட்ட குழந்தையை பெட்டில் சேர்த்தது, வயதான பாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்த்தது, டொனேஷன் கொடுத்தது, எனப் பணம் கட்டச் சொல்லி பல பில்கள். பார்த்திபன் செய்யும் சமூக சேவைக்கு அவர் பணம் கட்ட வேண்டி வந்தது. இதை கண்டு தான் அவருக்கு பீபி ஏறும். உடல் பாதிக்கப்படும். அவனால் தான் அவர் பீபி பேஷன்ட் ஆனார்.
ஆனால் இன்று படுத்திருப்பது மாணிக்கம் அல்ல. அனந்தராமன்… ஏன் என்று பார்க்கலாம்…
தலை நரைத்திருந்தாலும் உடலின் தோல்கள் சுருங்கி இருந்தாலும் கம்பீரம் குறையாது சுற்றி வருபவர் அனந்தராமன். இன்று அறையின் கட்டிலில் உடல் சரியில்லாது படுத்திருந்த கவலையுடன் சுற்றி குடும்பத்தார் நின்று கொண்டிருக்க, அகல்யா பாட்டி மட்டும் அழுது கொண்டே இருந்தார்.
“இது வர காய்ச்சல் தலைவலின்னு கூட படுக்காத மனுசெ… இன்னைக்கி எந்திரிச்சா தல சுத்துதுன்னு படுத்திருக்காறே… கடவுளே என் புருஷனை காப்பாத்துப்பா. ” எனக் கண்ணீர் விட்டார்.
வின்சென்ட், அனந்தராமனின் கையில் இதயத்துடிப்பை அளக்கும் கிளிப்பை மாட்டி, புஜத்தில் துணி கொண்டு கட்ட, அனந்தராமனின் இதயத்துடிப்பின் வேகத்தை ஒரு சிறிய மானிட்டர் காட்டியது.
அவன் மருத்துவன் நியூரோ ஸ்பெஷலிஸ்ட். தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் அவன் ஒருவன் மட்டுமே பார்த்திபனின் உயிர் நண்பன்… முக்கியமாக ஆண் நண்பன்.
“எப்படி அமைதியா இருக்க முடியும். வீட்டுக்குள்ள ஒரு விஷப்பாம்பு ஒன்னு நடமாடுறப்போ எப்படி டென்ஷன் ஆகாம இருக்குறது. ஒரே பேரன் அவெங் கல்யாணத்த எப்படியெல்லாம் நடத்தணும்னு ஆசப்பட்டாரு. கடைசில ஒன்னுமில்லாத பிச்சக்காரில்ல இந்த வீட்டுக்கு மருமகளா வந்திட்டா.” எனச் சண்முகம் புலம்ப, வின்சி அவரை திரும்பி பார்த்தான்.
அந்த பார்வையின் பொருள் புரிந்து, “சித்தப்பா, வாங்க… வின்சென்ட் மருந்து எழுதி தந்திருக்கான்.. வாங்கிட்டு வரலாம்.. ” என ராம் அழைத்தான்.
‘இருப்பா இன்னும் நாப்பது வார்த்தையாது அந்த ஏமாத்து சிறுக்கிய திட்டிட்டு வர்றேன். அப்பதா அந்த மூதேவிய கல்யாணம் பண்ணி வச்சி தன்னோட பேரன் வாழ்க்கைய கெடுத்திட்டோம்னு இந்த கிழட்டு ஜென்மத்துக்கு புரியும். ‘ என உள்ளுக்குள் நினைத்தவர் ராமுடன் செல்லாது பாரதியை திட்டித் தீர்த்தார்.
யாரின் காதுகளை அது சென்றதோ தெரியாது, அப்போது தான் வீடு வந்து சேர்ந்த பார்த்திபனின் காதுகளில் நன்கு விழுந்தது. ஒரு வேளை சேர வேண்டும் என்பதற்காக திட்டியிருப்பாரோ. இருக்கும் இருக்கும். அவர் போட்ட கூச்சலில் பாரதி தான் அனந்தராமனின் நெஞ்சு வலிக்கு காரணம் என்றுணர்ந்தான் பார்த்திபன்.
அது அவள் மேல் உள்ள கோபத்தை அதிகப்படுத்த, தன் செல்ல தாத்தாவின் கரம் பற்றிக் கொண்டு கவலையுடன் அவரின் அருகில் அமர்ந்தான் அவன்.
“தாத்தா… ” எனக் கண்ணில் துளிர்த்து சிறு நீருடன் விளிக்க,
அவரோ, ” எனக்கு ஒன்னுமில்ல ராஜா… லேசா தலை சுத்தல் அவ்வளவு தான். நீ எங்க ராஜா போயிருந்த, தாலி கட்டுனதும் செய்ய வேண்டிய எந்த சம்பிரதாயங்களையும் செய்யாம. ” எனக் கேட்டார்.
“அது ஒன்னு தான் கொற. மொறையா பொண்ணு பாத்து, தட்டு மாத்தி, சம்மந்தம் பேசி, சீர் செனத்தி செஞ்சா, இந்தக் கல்யாணம் நடந்தது. சம்பிரதாயத்த நடத்த!! ” என முகவாயைத் திருப்பிக் கொண்டார் மாலூ.
“ஏய் வாய மூடிட்டு இருடி. எந்த நேரத்துல என்ன பேசுற! ” எனச் சுகுமாரன் மனைவியை அதட்ட,
“க்கும்… மூடிட்டாலும். இவரு தான் இந்த கல்யாணத்துக்கு காரணம். அப்ப வருத்தப்பட்டு தான் ஆகணும்.. இவராள நம்ம வீட்டு பிள்ளைங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் போச்சி. பாவம் விஷா குட்டி… எப்ப பாரு பார்த்தி மாமா… பார்த்தி மாமான்னு வீட்ட சுத்திட்டே கிடக்கும். அது இருக்குற இடம் எப்பயுமே கலகலன்னு சந்தோஷமா இருக்கும். இன்னைக்கு அந்தக் குட்டி வீட்டுல இருந்தும் ஒரு சத்தமும் கேக்கல. காரணம் யாரு இவரு தான?
தன்னோட ஒரே பேத்தி, அவளுக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கைய தூக்கி தெருவுல திரியிற எவளோ ஒருத்தி குடுத்தா. அத ஏத்துக்கணுமா நாங்க…” என அனந்தராமனை திட்ட, சுகுமாரன் அவரை முறைத்தார்.
“க்கும்… ஆனா ஊனா சொல்லுவிங்க. குடும்ப ஒத்தும தான் முக்கியம். எப்ப வாயத் திறந்தாலும் வாய மூடுன்னு சொல்லவேண்டியது. இப்படியே எல்லாருமே வாய மூடிட்டு இருந்தா… அடுத்து வேற எவளாது வந்து எனக்கும் பார்த்திபனுக்கும் கல்யாணம் ஆச்சி, அது தான் உங்க வீட்டு வாரிசுன்னு கைல ஒரு குழந்தையோட வந்து நிப்பா. அப்பயும் நீங்க என்ன ஏதுன்னு கேட்காம கட்டி வைங்க. வீடு வெலங்கிடும்.” என்க, சுகுமாரன் அவரை அதட்டினார். ஆனால் நான் யாருக்கும் அடங்கேன் எனப் பேசி கொண்டே இருந்தார் அவர்.
“என்னைய மட்டும் அடக்குங்க. யாருக்குமே அவள இந்த வீட்டோட மருமகளா ஏத்துக்க மனசு இல்ல. அத வெளிப்படையா சொல்ல இந்த வீட்டுல எனக்கு மட்டும் தான் தைரியம் இருக்கு. மத்த எல்லாரும் எதையும் பேசாம நல்லவங்களாவே இருங்க. நான் மட்டும் பொல்லாதவளாவே இருக்கேன். ” என நொடித்துக்கு கொண்டே சென்றார் மாலூ.
அவர் சொல்வது ஒரு வகையில் உண்மை தானே. பாரதியை பார்த்திபனின் மனைவியாக யாரும் ஏற்காததால் தான் மண்டபத்தில் அவளை மட்டும் விட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.
தன் கௌரவம் எனக் கூறிய மாணிக்கத்தின் கட்டாயத்தின் பேரில் இந்தத் திருமணம் நடந்திருந்தாலும் அனந்தராமனின் விருப்பம் அதில் அடங்கி இருக்கிறது. இந்த குடும்பத்தில் அவர் ஒருவர் மட்டும் தான் பார்த்திபன்-பாரதி திருமணத்தில் மகிழ்ச்சி அடைந்த ஒரே ஜீவன். ஏன்? என்ன காரணம் பின்னர் தெரியவரும்.
இப்போது அனந்தராமனின் கவலை பார்த்திபன் பாரதியை மனைவியாக ஏற்று குழந்தை குட்டி எனக் குடும்பமாக மகிழ்வுடன் வாழ வேண்டும். அதை அவனிடம் சொல்ல, அதற்கும் கோபம் வந்தது அவனுக்கு. அதுவும் பாரதியின் மீது தான். எதேதோ பேசி தன் தாத்தாவை அவளுக்காக பேச வைத்துவிட்டாள் என்பது ஆத்திரத்தை தர, தாத்தாவிடம் சமாதானமாக நாலு வார்த்தை கூறி தன் அறைக்குள் சென்றான்.
செல்லும் பார்த்திபனை பார்க்கையில் வேதனையாக இருந்தது அவருக்கு. பேரனின் இலகிய மனதாதையும் அவர் அறிவார். அவனின் பிடிவாதத்தின் உறுதியையும் அவர் அறிவார்.
ஒன்றை பிடிக்கவில்லை என்றால் பார்த்திபனுக்கு அது பிடிக்கவில்லை தான். அப்பா கூறுகிறார்… தாத்தா கூறுகிறார்… அத்தை சொன்னார்கள் என்று ஏற்காமல் இருக்க மாட்டான் தான். அதே நேரம் அதைச் சீண்ட மாட்டான்.
அவனின் படிப்பு அப்படி தான். ‘நான் அப்ராடுல படிக்க போறேன். ‘ என்ற பார்த்திபனிடம், வேண்டாம் என்றும் தன் தொழிலை வளர்க்க உதவும் என்றும் ஒரு துறையை மாணிக்கம் படிக்க சொல்ல, பார்த்திபன் மறுக்கலாம் இல்லை. அவர் சொன்னபடி கல்லூரிக்கு சென்றான். ஆனால் வகுப்பிற்கு செல்லவில்லை.
‘நான் படிக்க ஆசப்பட்டது லண்டன்ல. அங்க சீட் வாங்கி தாங்க. இல்லனா நான் படிக்கவே மாட்டேன்.’ என்பது போல் ஊர் சுற்றி இரண்டு ஆண்டுகளை விரையமாக்கி எந்த ஒரு வகுப்பையும் அட்டன் செய்யாது பரீட்சையும் எழுதாது இருக்க, வேற வழியில்லாமல் அவனைப் படிக்க வெளிநாடு அனுப்பி வைத்தனர்.
அதே போல் தான் நிறுவனத்தின் பொறுப்பைக் கையில் கொடுத்தது. பார்த்திபனிடம் ஒப்படைத்தால் அவன் பார்த்துக் கொள்வான் என்று சுகுமாரன் ஐடியா கொடுத்தார். புதிதாக ஒரு சிறு கிளையைத் தொடங்கி, அதன் பொறுப்பை அவனுக்குத் தந்தார் மாணிக்கம். ஏற்றுக் கொண்டான். ஆனால்… சுவரில் சுண்ணாம்பு செங்கலை தவிர வேஙற ஒன்றும் மிஞ்சவில்லை என்பது போல் அனைத்தையும் தானமாக வழங்கி விட்டு, சீக்கிரம் அந்த கிளைக்கு மூடு விழா நடத்தி விட்டான்.
பாவம்… மாணிக்கம், ஒரு பக்கம் மகன். மற்றொரு பக்கம் அவர்களின் எதிரி. பத்தாதற்கு சண்முகம் வேறு, வேறு மாறியாக நடந்து கொள்கிறார். இவர்களுக்கு மத்தியில் எப்படி தன் நிறுவனத்தை நடத்தி, குடும்பத்தைக் காப்பாற்றப் போகின்றாரோ. அவர் விரும்பும் வாரிசாக யார் இருக்கப் போகின்றனரோ.