Skip to content
Post Views: 11,764
கள்ளி காட்டு காதலியே!…
அத்தியாயம் 3
விக்ரமின் நேரடி தாக்குதலில் மிரண்டு போனவள், நொடி கூட நிக்காது அங்கிருந்து ஓடி விட்டாள். அவளை பின் தொடர்ந்து எல்லாம் விக்ரம் செல்ல வில்லை. அவளுக்கு கொஞ்சம் ஆசுவாசம் கொடுக்க நினைத்து தள்ளியே நின்று கொண்டான்.
பிரபா வேகமாக சென்று விருதுநகர் பஸ்ஸில் ஏறி கொண்டவள், சும்மா கூட அவன் புறம் திரும்ப வில்லை. படபடக்கும் நெஞ்சை கை வைத்து அழுத்தி தன்னை நிதானப்படுத்தினாள்.
Advertisement
விக்ரமின் வார்த்தையை கேட்ட மதன், “மாப்பிள்ளை, என்னடா நீ பாட்டுக்கு பொசுக்குன்னு இப்படி பேசிபுட்ட. அதுவும் ஒரு பொம்பளை பிள்ளை கிட்ட…”
“விளையாட்டுக்கும் ஒரு அளவு இருக்கு விக்ரம். என்னவோ நமக்குள்ள கேலி, கிண்டல் வேற… அதை விட்டு ஒரு பொட்ட பிள்ளை கிட்ட பேசுற வார்த்தையா இது. உன் நினைப்பு என்னடா?…” காட்டமாக மதன் கேட்க.
“அந்த பிள்ளை தான் மச்சான்… நெசம் தான். உறுதியா தான் இருக்கேன்…” விக்ரம் பின் வாங்க வில்லை.
Advertisement
“ டேய்! ஊர் கலவரம் வரும்டா. சும்மா இல்லை வெட்டு, குத்து தான். போலீஸ், பஞ்சாயத்து எதுக்கும் கட்டு படாது, தெரியும் தான…” என்று பதறி போய் சொன்னவன்,
Advertisement
“ஏண்டா டேய், நம்மவூர்ல பிள்ளைகளே இல்லையா? அயித்த மக்க, மாமன் மக்கன்னு அம்புட்டு பேர் இருக்க, உன் கண்ணு ஏண்டா அசலூர் பிள்ளை மேல போகுது…” முதுகில் ஒன்று போட்டான் மதன்.
“ மச்சான் அது தாண்ட காதல்…”
“செருப்பால அடிப்பேன்டா நாயே! நாளைக்கு வெட்டு, குத்து, கலவரம் வரும் போது இப்படி சொல்லுவியாடா பரதேசி…”
Advertisement
“அப்ப பார்த்துக்கலாம் விடுடா…” விக்ரம் அசால்ட்டாய் சொல்ல,
“உண்மை நிலவரம் புரியாம பேசாத விக்ரம். உன் நினைப்பு சரியில்லை. ஒத்து வராது, நிறைய பார்க்க வேண்டி வரும். அத்தோடு, உன் லவ் சேராதுடா…” புரிய வைக்க முயன்றான் மதன்.
“வாய மூடுடா எருமை. என்னத்தையாவது பேசி என் கிட்ட அடி வாங்காத. வா, போவோம்…” என்று இழுத்து சென்றான் விக்ரம்.
அவனும் காதல் சொல்லவெல்லாம் நினைக்க வில்லை. பொறுத்து பேசுவோம் என்ற எண்ணம் தான். என்னவோ அவளை பார்த்ததும், வார்த்தையை கொட்டி விட்டான். அதில் அவனுக்கு மகிழ்ச்சி தான்.
மாலை ஆறு மணி இருக்கும். களத்து மேட்டில் கயிற்று கட்டிலில், காதல் பாட்டை கேட்டு உருண்டு கொண்டு இருந்தான் விக்ரம். மதன், அருகில் அமர்ந்து படித்து கொண்டு இருந்தான்.
“ஹாய் மச்சான்ஸ் நாள் எப்படி போச்சு…” என்றபடி வந்தான் அருண் பாண்டியன். இவர்கள் கூட்டாளி தான்.
“அக்கா வீடு எப்படி இருந்துச்சு…” மதன் கேட்க.
“ ம்ம், பரவாயில்லை…” என்ற அருண்.
“என்ன மச்சான் தன்னால சிரிக்கிற…” என்று விக்ரமை பார்த்து கேட்க.
“அந்த கருமத்தை நான் என்னன்னு சொல்ல…” சலித்து கொண்டான் மதன்.
“என்னாச்சு மச்சான்?…” கேள்வி அருண் இடம் இருந்து வந்தது.
“துரைக்கு காதல் வந்துருச்சுடா…”
“டேய் மச்சான்! வாழ்த்துகள்…” விக்ரமை கட்டி பிடித்து அருண் வாழ்த்து சொல்ல,
“டேய்! அவன் ரூட் விடுறது கள்ளி காடுடா…” கத்தினான் மதன்.
“எதே…” என்ற அருண். “ஏன் மச்சான், உனக்கு வேற யாருமே கிடைக்கல…”
விக்ரமுக்கு கோபம் வந்து விட்டது. “என்னங்கடா ஆளாளுக்கு இதைவே சொல்றீங்க. எனக்கு என்னவோ புடிச்சு போச்சு. மனசு ஆசை படுது. யோசிச்சு பார்த்தேன், அந்த பிள்ளை முகம் மறக்க மாட்டாது. காதல்.. ஊர், உறவு, குலம், கோத்திரம்…” என்று விக்ரம் ஆரம்பிக்கும் போதே,
“ஆமா, உண்மையான காதல் மனசுக்கு புடிச்சு தான் வரும். அந்த ஈர வெங்காயமெல்லாம் எங்களுக்கும் தெரியும். நடைமுறைக்கு ஒத்து வருமா?… மாப்பிள்ளை, என்ன தான் படிச்சாலும், பெரிய பதவில இருந்தாலும் எல்லார் மனசுலயும் நாம யாருன்னு இருக்கும்டா… அதை விட்டு யாரும் மாற மாட்டாங்க. அப்படி மாறி வர ஊருல நாம பிறக்கல…” மதன் சொல்ல,
“ டேய் என்னடா, விடு மச்சான் தான் ஆசை படுறான்ல. படிச்ச நாமளே அப்படி யோசிக்க கூடாது…” அருண் சொல்ல,
“ நிதர்சனத்தை சொன்னேன் மச்சான். இப்பாலாம் யார் தான் படிக்காம இருக்கா, என்ன மாறிடுச்சு சொல்லு. நாமளும் அந்த வட்டதுக்குள்ள தான் வாரோம். பக்கத்து பக்கத்து ஊர் தான். ஆனா, ரெண்டு ஊர் மக்களும் வாசல் தாண்டி வீட்டுக்குள்ள போய் புழங்க மாட்டாங்க. ரெண்டு ஊரும் அடுத்த வீட்டுல கை நனைக்க மாட்டாங்க. அவங்கவங்க எல்லையில் தான் நிப்பாங்க. இதோ நம்மளை மாதிரி படிச்ச நாலு பேரு தான் நட்பா பழகுறோம், வீட்டு உள்ள வரை போக்கு வரத்து இருக்கு. அது உடைய கூடாது…” என்றவன்,
“முப்பது வருசத்துக்கு முன்னாடி ஒரு காதல் பிரச்சனை தான் ரெண்டு ஊரு நடுவுல வந்து கலவரம் ஆச்சு. நம்ம ஊர் நெல்லு வயலுக்கு எல்லாம் அவங்க ஆளுங்க தீ வச்சாங்க. நாம சும்மாவா விட்டோம். அவங்க ஆடு, மாடு எல்லாம் வெட்டி போட்டோம். போலீஸ் வந்துச்சு, கோர்ட் வரை போயும் ஒன்னும் ஆகலை. இதோ இவங்க அப்பா மாதிரி நாலு பேரும், அந்த ஊர் படிச்சவங்க நாலு பேரும் சேர்ந்து சமரசம் ஆகி இவ்வளவு வருசம் ஒரு கலவரம் கூட இல்லாமல் போகுது. இத்தனை வருசத்துல காதல் பஞ்சாயத்து வராம இல்லை. அது ஊர் பிரச்சனையாகாம உள்ளுக்குள்ளேயே முடிச்சு விட்டுவாங்க. அது எப்படின்னா, ஒரு காதல் கூட சேர்ந்தது இல்லை…” என்று மதன் சொல்ல,
விக்ரம் முகம் இறுகி போனது. “உன்னை கஷ்டபடுத்த சொல்லலை மாப்பிள்ளை. இப்ப தான் அந்த ஊர் பிள்ளைக வெளில வந்து படிக்கிறாங்க. பொம்பளை பிள்ளை பேர் வெளிய வந்தா, வாழ்க்கை கெட்டு போகும். நாம ஆம்பளை பசங்க, எப்படியோ ஓடிருவோம். திரும்ப ஒரு கலவரம் வந்தா என்னென்ன ஆகும் நினைச்சு பாரு… ரெண்டு ஊருக்கும் ஒரே ரோடு, தண்ணி பைப், விவசாய நிலம், பால், காய்கறி விக்கிறது, ஊர் கோவில்ன்னு எல்லாம் பொது… இள இரத்தம் புதுமையை யோசிக்கும். ஆனா, நிஜம் வேற…” தெளிவாக சொல்லி விட்டான் மதன்.
நண்பர்களுக்கு பதில் சொல்லாமல் விக்ரம் கண் மூடி படித்து கொள்ள, அவன் யோசிக்கட்டும் என்று விட்டு விட்டார்கள்.
அடுத்த ஒரு அரை மணி நேரத்தில் எழுந்தவன், “மச்சான் நான் தெளிவா யோசிச்சுட்டேன். என்ன நடந்தாலும் இனி அந்த பிள்ளை கூட தாண்ட வாழ்க்கை…”
“அட பாவி, விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்டா…” மதன் புலம்ப, அருண் சிரித்து விட்டான்.
“விடு மச்சான். நம்மாளு ஆசை பட்டான், இனி யோசிக்க கூடாது…” என்றவன், விக்ரமை பார்த்து,
“மச்சான், அந்த பிள்ளைக்கு சம்மதமான்னு ஒரு வார்த்தை கேட்டுக்க. மத்தத விடு. தட்டுரோம், தூக்குரோம். உடல் மண்ணுக்கு, உயிர் நட்புக்கு…” வசனம் பேசினான் அருண்.
“ஆன்… உன் உயிர கொடு பரதேசி. என் உயிர் எல்லாம் எம் பொண்டாட்டி, பிள்ளைக்கு தான்…” மதன் சொல்ல,
சிரித்த அருண், “பொண்ணு யாரு மச்சான்”
“மாப்பிள்ளை பார்த்தது எல்லாம் பெரிய இடம் தான். மிலிட்டரிக்காரன் பொண்ணு…” என்று மதன் சொல்ல,
“எதே, பிரபாவதியா? ஐயோ…” அலறினான் அருண்.
“ என்னாச்சுடா?…” பதறி போய் இருவரும் கேட்க.
“டேய்! அவங்கப்பன் மிலிட்டரி துப்பாக்கிக்கு லைசன்ஸ் வச்சு இருக்காராம்டா. என் தங்கச்சி இளமதி கூட தான் அந்த புள்ளை படிச்சுச்சு…” அருண் சொல்ல,
“ஆத்தே, இந்த ஆட்டைக்கு நான் வரல மச்சான்… போற உசுரு நல்லா வாழ்ந்தே போகட்டும்…” ஒதுங்கி கொண்டான் மதன்.
“டேய், அடங்குங்கடா… அன்னைக்கு அவர் கிட்ட பேசினேன். நல்லா தான் பேசினார். தப்பா ஒன்னும் தெரியலை…” விக்ரம் சொல்ல,
“மாப்பிள்ளை, நீ ஆடு தான கேட்டு போன. அவர் பொண்ண கேட்டு போனா தெரியும் சங்கதி…” மதன் நக்கல் பண்ண,
“ஒரு நாள் பொண்ணு கேட்டு போவேன் பாரு…”
“அதுக்கப்புறம் நீ உசுரோட இருந்தா சந்திப்போம்…” மேலும், மதன் வெறுப்பேத்த, அருண் ஆரம்பித்தான்,
“ஏன் மச்சான் எனக்குலாம் வாழ்க்கையே வெறுக்குது. பகல்ல தூக்கம் வருது, ராத்திரி தூக்கம் வர மாட்டாது, படிப்பு ஒழுங்கா இல்லை, நல்ல வேலை கிடைக்கல, எத்தனை பரிச்சை எழுதியும் பாஸ் பண்ணல, பழைய வீட்டை சரி பண்ண முடியல, புது வண்டி வாங்கணும், தங்கச்சிய கட்டி கொடுக்கணும், அக்காக்கு சீர் செய்யணும், நானும் கல்யாணம் பண்ணனும், கிராமத்தான்னு ஒருத்தன் பொண்ணு தரல, எனக்கு சின்ன பையன் கூட பிள்ளை வச்சு இருக்கான். இப்படி ஆயிரம் ஓடுது மண்டைக்குள்ள, உனக்கு எப்படிடா காதல் வந்துச்சு…”
“வேலையேத்தவன், வேற வேலை இல்லாம, இந்த வேலையை பாக்குறான்…” மதன் கிண்டலடிக்க,
“அதெல்லாம் ஒரு ஃபீல் மச்சான் தன்னால வரும். வேலை எல்லாம் பின்னால பார்த்துக்கலாம். ஆனா, காதல், அந்த வயசுல வந்துரணும்…” வியாக்கானம் பேசி கொண்டு இருந்தான் விக்ரம்.
அடுத்த பத்து நாள் பிரபா ஊர் பக்கமே எட்டி பார்க்க வில்லை. கண்ணில் படாமல் இருந்தால் மறந்து விடுவான் என்று நினைத்தாள் போல… தமிழ் செல்வன் மகளை காண வேண்டும் என்று சொன்ன பிறகு தான் ஊருக்கு வந்தாள். அதுவும் இரண்டு நாள் விடுமுறைக்கு மட்டுமே. அதிக நாள் விடுமுறையில் வீட்டுக்கு வந்து, விக்ரம் கண்ணில் மாட்ட விருப்பம் இல்லை.
ஆனால், அவன் தான் கண்ணில் விளக்கெண்ணை விட்டு அவளை தேடுபவன் ஆச்சே. காதல் சொன்ன பின்பும் அவளை காணாமல் அல்லாடியவன். அவள் ஊருக்கு வந்தும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கவும் நொந்து போனான். அடுத்து அவள் கல்லூரி செல்ல பஸ் ஏறும் பொழுது தான் பிடித்தான்.
இளமதியை விட்டு அவளை பிடித்தவன். அவள் அமரும் இருக்கைக்கு பின் புறம் தன் நண்பர் படையுடன் அமர்ந்து கொண்டான். ஜன்னல் ஒட்டி பிரபா அமர்ந்து கொள்ள, அவளுக்கு பின் புறம் அதே போல விக்ரம் அமர, அவனை ஒட்டி அருண், மதன் அமர்ந்து கொண்டார்கள். விக்ரம் தனியாக வந்தால் சந்தேகத்துக்கு உள்ளாக்க படுவான் அல்லவா!…
முதலில் பிரபா அவனை கவனிக்க வில்லை. ஜன்னல் புறம் வேடிக்கை பார்த்து கொண்டு வந்தவள், பின் பக்கம் சத்தம் கேட்டு தான் எதார்த்தமாக திரும்பி பார்க்க, சிரித்த முகத்துடன் இருந்த விக்ரமை கண்டு அரண்டு போனாள்.
இவ்வளவு நாளாக தன்னை தொந்தரவு செய்யாதவன், திருந்தி விட்டான், நிதர்சனம் புரிந்து கொண்டான் என்று தான் நினைத்தாள். ஆனால், அவனின் சிரிப்பு அவளுக்கு பயத்தை கொடுத்தது.
“அந்த புள்ளை என்ன பார்த்து பயப்புடுது மச்சான்…” என்றவன், அந்த ஜன்னலில் சாய்ந்து கொண்டான்.
பஸ் கிளம்பியது, மெல்ல பாட்டு சத்தமும் கேட்க, மதிய நேரம் என்பதால் பாதி பேர் தூக்கத்தில் இருந்தார்கள். பிரபா பின் புறம் திரும்பவே இல்லை.
“அது படிக்கிற புள்ளை. அதுவும் கணக்கு டீச்சர். பத்தாவது பெயில் உன்னை எப்படிடா பிடிக்கும்…” மதன் கேட்க.
“டேய், நான் என்ஜினீயர்டா…” அலறினான் விக்ரம்.
“இருக்கட்டும், ஆனாலும் நீ பத்தாவது பெயில் தான…”
“நீ கொஞ்சம் வாயை மூடுடா. என் காதல நான் பார்த்துக்கிறேன்…” என்றவன்,
“ கண்ணே உன் காலடி மண்ணை திருநீறை போலே நான் அள்ளி பூசிடுவேனே என் நெஞ்சின் மேல்…
அன்பே என் ஆலயம் என்று உன் வாசல் தேடி அன்றாடம் நான் வருவேனே தேவாரம் பாடி…” என்று விக்ரம் மெல்ல பிரபாக்கு மட்டும் கேட்கும் குரலில் பாட,
“டேய் என்னடா பண்ற, அதுவும் பஸ்ல. வேணாம்டா, ஊரே சேர்ந்து கும்மிடும்…” என்று மதன் பயந்து சொல்ல,
“நீ சும்மா இருடா, நீ பாடு மச்சான். முகத்தை கூட பார்க்காத பிள்ளை கிட்ட வேற எப்படி பேசுறதாம்…” அருண் எடுத்து கொடுத்தான்.
“காதலின் கல்வி சாலையில் கண்களே நல்ல தத்துவம்; பூவையின் மேனி அற்புதம் பூக்களால் செய்த புத்தகம்…” என்று மீண்டும் விக்ரம் தொடங்க,
“என்ன பட்டுடா இது?…” மதன் கேட்க.
“டீச்சர்ல. அதான் மாப்பிள்ளை அப்படி பாட்ட செலக்ட் பண்ணி இருக்கான். மச்சான் பிண்ற போ…” புகழ்ந்து அருண்.
“டேய் உங்களை நான் பஞ்சாயத்து பண்ண கூப்பிடவே இல்லை. நான் என்னவோ பண்ணி என் காதலை வளர்க்கிறேன். விடுங்க…”
“பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்;
ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் ஊட்டினாள்; ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்…”
“டேய் விக்ரம். பாட்டு பாடினா ஓகே ஆகும்ன்னு யார்டா சொன்னா? நீ எந்த காலத்துலடா பொறந்த…” மதன் சொல்ல,
“சிரிப்பாங்கடா. ஆனா, ரசிக்க மாட்டாங்க. எங்களுக்கே சிரிப்பு தான் வருது…” என்று அருணும் சொல்ல,
“போங்கடா பரதேசிகளா… மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது…” வெடுக்கென்று விக்ரம் சொல்ல,
கலகலவென இருவரும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
“ டேய், என்னடா பண்றீங்க. எதுக்குடா சிரிக்கிரீங்க. வாய மூடுங்கடா. மாட்டி விடாதீங்க. பொம்பளை பிள்ளை கிட்ட வம்பு பண்ண, நம்ம ஊர்காரணுகளும் சேர்ந்து தான் அடிப்பாங்கடா…” விக்ரம் அலற,
“டேய் அருண். நான் கூட மாப்பிள்ளையை என்னமோன்னு நினைச்சேன். இவன் டம்மிடா…” என்று மதன் சிரிக்க.
“அதை விடுடா, அடுத்து மாப்பிள்ளை பிடிப்பான் பாரு. இந்த அரை மணி நேரத்துக்கே நமக்கு கண்ணை கட்டுதே. அடுத்து விருதுநகர் பஸ், ரெண்டரை மணி நேரம். அந்த பிள்ளை நிலைமையை யோசி…” என்று அருணும் சிரிக்க,
பயந்து போன விக்ரம் மெல்ல பிரபாவை எட்டி பார்த்தான்.
ஏற்கனவே பயந்து போய் இருந்தவள். விக்ரம் பாடியதும், அதற்கு அவன் நண்பர்கள் கேலி பண்ணி சிரித்ததும் அவளுக்கு அழுகை வந்தது. தன் கூடவே இருந்த இள மதி சிரிப்பு இன்னும் பயத்தை கொடுத்தது. இவன், தன் பின்னாடி தான் சுத்துறான் என்று தெரிந்து விட்டதோ? ஊரில் தெரிந்தால் என்ன ஆகும்? இவனை விட்டு வீட்டில் தன்னை தான் பிடித்து கொள்வார்கள், அதுவும் அம்மா என்ன சொல்லுவார்? தன் பேர் சேர்ந்து அடிபடுமோ?
பிரபாக்கு நினைக்க, நினைக்க பயம் அதிகமாகியது. விக்ரம் காதல் எல்லாம் அவளுக்கு புரிய வில்லை. ஊரை நினைத்து, தன் வீட்டை நினைத்து அவ்வளவு பயம். கண்ணீர் கொட்ட தொடங்கியது.
“டேய், அந்த புள்ளை அழுகுதுடா…” பதறி போய் விக்ரம் சொல்ல, மற்ற இருவரும் கப்சிப் என்றானார்கள். பிரபாக்கு சத்தமெல்லாம் வர வில்லை. மெளன கண்ணீர் மட்டும் தான். இவ்வளவு நாள் ஒழுங்காக இருந்து விட்டு, இன்னும் ஒரு வருசம் தான். தன் பேர் கெட்டு விடுமோ? பயமாக இருந்தது.
அடுத்து யாரும் பேச வில்லை. விக்ரம் தன்னையே நொந்து கொண்டான். அவனுக்கு, அவளை பிடித்து இருக்கிறது. நேரடியாக சொல்லி விட்டான். வேற எப்படி கொண்டு போகவென்று தெரியவில்லை, சொதப்பி கொண்டு இருக்கிறான்.
பஸ் நின்றதும் வேகமாக இறங்கியவள், யாரையும் கண்டு கொள்ளாமல் கிடைக்கும் பஸ்ஸில் ஏறி கொண்டாள். விக்ரம் சோகமாக பார்த்து தான் நின்றான். கொஞ்சம் தொந்தரவு செய்ய வேண்டாம், தெளியட்டும் என்று விக்ரம் நினைக்க. பிரபா அடுத்து ஊர் பக்கமே வர வில்லை.
அடுத்தடுத்து வரும் விடுமுறையில் கூட, ராஜபாளையம், சிவகாசி என்று தன் பெரியம்மா, மாமா வீட்டு பக்கம் சென்று விட்டாள். தவிர்க்க முடியாமல் எப்போதாவது ஊர் வரும் போது தான் விக்ரமை பார்க்க நேரும்.
என்னவோ அவனும் அமைதியாக இருந்தான். ஆனால், பார்வை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. இது ஒரு ஈர்ப்பு என்று விலகாமல், மேலும் தொங்குகிறான் என்று புரிந்து கொண்ட பிரபா. வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைக்கு சரியென்று சொல்லி விட்டாள்.
முன்பே லேசாக பார்த்து கொண்டு தான் இருந்தார்கள். கடைசி வருடம் என்பதால், இப்போது பார்க்க தொடங்கினாள் சரியாக இருக்கும் என்று… இவள் தான் பிடி கொடுக்காமல் இருந்தாள். தற்போது இவளும் சம்மதம் சொல்லி இருக்க, தீவிரமாக மாப்பிள்ளை பார்த்தார்கள்.
ஒரு சம்மந்தம் அமையும் போல இருந்தது. பையன் அரசு வேலை, நல்ல படிப்பு, நல்ல குடும்பம். பெண் நன்றாக இருந்தாள் போதும் என்றார்கள். அந்த வகையில் பிரபாவதி மிக திருப்தி. ஒரே பெண், அழகாக இருக்கிறாள், ஓரளவு வசதியும் கூட, படித்தவள். மிக திருப்தியாக இருக்க, பேசி முடிக்கும் எண்ணத்தில் தான் இருந்தார்கள்.
பிரபா மெல்ல விசயத்தை இள மதி காதுக்கு போட்டு விட்டாள். வேற ஒருவனுக்கு நிச்சயம் செய்து விட்டால் ஒதுங்கி கொள்வான் அல்லவா…
வியசம் கேள்வி பட்ட மதன், அருண் கூட விக்ரமுக்காக வருந்தினார்கள். அவர்களால் வேறு என்னை செய்ய இயலும். பிரபா தான் சம்மதம் சொல்ல வில்லையே…
இன்று பிரபாவை பார்க்க வருகிறார்கள். ஓரளவு பேசி முடிப்பது போல தான். பிரபா சந்தன நிற கிரேப் சில்க் சேரி அணிந்து, கல் வைத்த குடை சிமிக்கியும், கல் வைத்த அட்டியல் மட்டும் அணிந்து கொண்டாள். கைகளில் கண்ணாடி வளையல், பூ மட்டும் வைக்க வில்லை. அவர்கள் பக்கம் நாத்துனார் வந்து தான் வைத்து விடுவார்கள்.
தமிழ் செல்வன் சென்று இனிப்பும், காரமும் வாங்கி வந்தார். கலைச்செல்வி பாலை சுண்ட காய்ச்சி வைத்தார். முதன் முதலில் டீ, காபி கொடுக்க கூடாது பால் தான் கொடுக்க வேண்டும். அப்போது தான் உறவு வளருமாம். மெகந்தி போட இள மதி காலையிலே வந்து விட்டாள். அவளுக்கு இந்த மாதிரி சடங்கில் எல்லாம் மிக ஆர்வம்.
தமிழ் செல்வன் வெளியில் யாரையும் ஆள் சேர்க்க வில்லை. அவர் பெரியப்பா முறையில் ஒருவர் மட்டுமே இருந்தார்கள். பேசி முடித்தால் ஆள் சேர்த்து நிச்சயம் செய்யலாம் என்று எண்ணம்.
விக்ரம் ஒரு பந்து மல்லிகை பூ வாங்கி கொண்டான். அவர்கள் ஊர் கோவில் முத்துமாரி அம்மனிடம் வைத்து வணங்கி எடுத்து கொண்டான்.
இங்க மாப்பிள்ளை வீட்டாருக்காக காத்திருக்க, ஆள் வர வில்லை போன் தான் வந்தது. பெண் பார்க்க வரும் போது மாப்பிள்ளை பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து விட்டாராம். அடி எதுவுமில்லை தான். ஆனால், ஒரு அபசகுணமாக கருதி ஒதுங்கி கொண்டார்கள்.
பெரிய அளவில் ஆள் சேர்க்காதது நல்லதாக போனது. கலை செல்விக்கு தான் மனசு கேட்க வில்லை. மகளுக்கு என்று பேசிய முதல் சம்மந்தம் இது தான் . அதுவே அமைந்து விடும் போல இருக்க, நல்ல ராசி என்று தான் நினைத்தார். கடைசியில் அது முறிந்தது வருத்தம் தான்.
தமிழ் செல்வனுக்கு வருத்தமில்லை. தொட்டத்துக்கு எல்லாம் சகுனம் பார்ப்பது அவருக்கு நல்லதாக பட வில்லை. பஸ்ஸில் ஒழுங்காக கம்பியை பிடிக்காமல், விழுந்து விட்டு தன் பெண்ணை காரணம் சொல்வது ஏற்க முடியாதது. சம்மந்தம் முறிந்தது நல்லது தான்.
பிரபாக்கும் பெரியதாக பாதிப்பு இல்லை. அவள் மாப்பிள்ளை போட்டோ கூட பார்க்க வில்லை. நேரில் பார்த்தால் போதும் என்று விட்டார் தாய்.
வெளி தாழ்வாரத்தில் கூட்டி சுத்தம் செய்து, புது சேர் எல்லாம் போட்டு வைத்து இருந்தார்கள். அப்போது தான் விக்ரமன், தன் நண்பர்களுடன் வண்டியில் வந்து இறங்கினான்.
என்னவோ என்று எல்லோரும் பார்க்க, கையில் பூவோடு வந்தவன். “ஆடி பதினெட்டு நல்ல நாள் ஆட்டை கூட்டி போக வந்தேன் சார்…” என்றான்.
தங்கள் நிலையை மறைத்து, “வாங்க தம்பி வாங்க உட்காருங்க. கலை, பஞ்சாயத்தார் மகன் வந்துருக்காப்ள தண்ணி கொண்டு வா…”
கலை செல்வி கொண்டு வந்து வைக்க, மறுக்காமல் எடுத்து குடித்தான். தன் நண்பர்களை ஒரு பார்வை பார்க்க, அவர்களும் எடுத்து கொண்டார்கள்.
அப்போது தான் பின் பக்கம் இருந்து வந்த தமிழ் செல்வனின் பெரியப்பா, “என்ன செல்வம் மாப்பிள்ளை வீட்டுகாரங்க மனசு மாறி வந்துட்டாங்களா… தம்பி நல்லா தான் இருக்காங்க. நம்ம பாப்பாக்கு நல்ல பொருத்தம்…” என்று விக்ரமை காட்டி சொல்ல,
“ஐயோ! பெரியப்பா. அது மாப்பிள்ளை இல்லை. இந்த ஊர் பஞ்சாயத்தார் மகன்…” செல்வம் சொல்லியவர்,
விக்ரமை பார்த்து, “தப்பா எடுக்காத தம்பி. இன்னைக்கு பாப்பாவ பொண்ணு பார்க்க வாரதா இருந்துச்சு. அதான் அப்படி கேட்டுட்டார்…”
மாப்பிள்ளையோ என்று கண்டு கொள்ளும் அளவில் தான் விக்ரம் வந்தான். வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட், கையில் தங்க காப்பு, கழுத்தில் கனமான சங்கிலி.
திகைத்த மதன், “என்னாச்சு சார்” என்றான். தமிழ் செல்வன் விசயத்தை சொல்ல,
அருண் சொல்லி விட்டான், “இந்த சம்மந்தம் முடிஞ்சது தான் நல்லது சார். இந்த காலத்திலும் இப்படி யோசிக்கிறவங்க கூட காலத்துக்கும் சரி வராது…”
“ஆமா தம்பி, எனக்கும் கவலை ஒன்னும் இல்லை… வீட்டம்மாவுக்கு தான் வருத்தம்…”
“பொண்ணை பெத்தவங்க அப்படி தான் யோசிப்பாங்க. தங்கச்சிக்கு என்ன குறை. எங்க அம்மா கூட சொல்லும், பிரபா நல்ல லட்சணமான முகம்ன்னு… நெசமாவே சொல்றேன் பிரபா ரொம்ப நல்ல பொண்ணு, நல்ல சம்மந்தம் வரும்…” என்று அருண் சொல்ல, பெத்தவர்கள் மனம் குளிர்ந்தது.
“எதுவும் சாப்பிடுறீங்களா தம்பி…” வலிய கேட்டார் கலை செல்வி.
“வேணாம்மா… மதிய நேரம் டீ, காபி எல்லாம் குடிக்க மாட்டோம்…” என்றான் மதன்.
“ஐயங்கார் இனிப்பா நல்லா இருக்கும்…” என்று வெளி திண்ணையில் இருந்த பையை பார்த்து இழுத்தான் அருண்.
கலை செல்வி உடனே பேப்பர் தட்டில் இனிப்பு, காரம் வைத்து மூவருக்கும் கொடுத்தார். யாருக்காக வாங்கியதோ அவர்கள் தான் வர போவதில்லை. வந்தவர்களுக்காவது கொடுப்போம்…
“உங்க பொண்ணுக்கு தான் சங்கடம் இல்லையா?. மனசு கஷ்ட படும். இதெல்லாம் பெருசா எடுக்க கூடாது…” விக்ரம் சொல்லியவன்,
“வெயில்ல வந்தது என்னவோ போல இருக்க கொஞ்சம் ஐஸ் வாட்டர் கிடைக்குமா…” தயவாக கேட்டான்.
“பிரபா, ஃப்ரிட்ஜ்ல இருந்து தண்ணி எடுத்து வா…” குரல் கொடுத்தார் கலை செல்வி.
அதை தான் விக்ரம் எதிர்பார்த்தான். அவனுக்கு, சேலையில் அவளை பார்க்க வேண்டும். அதற்கு தான் கேட்டது. தயங்கி கொண்டே பிரபா தண்ணி கொண்டு வர,
அப்போது தான் சம்மந்தம் பார்த்த தரகர் வந்தார்.
“செல்வம், நல்ல குடும்பம்ன்னு தான் பேசினேன். நல்லவங்க தான். வசதியும் கூட, நம்ம பிள்ளையை ரொம்ப பிடிச்சு போச்சு. சிவகாசில இருந்து இங்க வர வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நம்ம ஊர் டவுன் பஸ்ல தான் வந்து இருக்காங்க. கூட்டம் கொஞ்சம் அதிகம் போல, குளத்து கரை நெருங்கும் போது மாப்பிளை லேசா கீழ விழுந்துட்டார். அடி ஒன்னுமே இல்லை. அந்த அம்மாக்கு தான் சங்கடம் போல… திரும்ப பேசி பார்ப்போம்…” என்று அவர் சொல்ல,
அவர் சொன்ன விசயத்தில் மூன்று பேர் அதிர்ந்து போய் விக்ரமை திரும்பி பார்த்தார்கள்.
“எந்த நேரம்?…” யோசனையாக மதன் கேட்க.
“காலைல பதினொரு மணிக்கு …” என்றார் தரகர்.
அந்த நேரத்தில் இவர்களும் அங்கு தான் இருந்தார்கள்.
ஆக, ஒன்னும், இரண்டும் மூணு என்று கணக்கு போட்டான் அருண்.
“முடிஞ்சது முடிஞ்சாதாவே இருக்கட்டும். இது ஒத்து வராது தரகரே…” முடிவாக சொல்லி விட்டார் தமிழ் செல்வன்.
கையில் செம்போடு நின்று இருந்த மகளை பார்த்த கலை செல்வி. “என்ன பிரபா. அந்த தம்பி தான் தண்ணி கேட்டது. கொடு…”
பிரபாக்கு உடல் எல்லாம் உதறியது. குளத்து கரை என்ற பெயரே போதும் அவளுக்கு விசயம் விளங்க. படபடப்போடு விக்ரமிடம் நீரை கொடுக்க,
அவளின் அலங்காரத்தை ஆற அமர ரசித்தவன்,
“பறந்தாலும் விட மாட்டேன்; பிறர் கையில் தர மாட்டேன்…” என்று பாட,
அருண், மதன், பிரபா மூன்று பேரும் அலறி போனார்கள்.
“டேய்! மாப்பிள்ளை… என்னடா விக்ரம் இதெல்லாம்?…” பயந்து போய் தான் மதன் கேட்டான்.
“ஒரிஜினலாவே விக்ரமன் வில்லன் தாண்டா…” என்றவன், தான் கொண்டு வந்திருந்த மல்லிகை பூவை பிரபாவை நோக்கி நீட்டினான்.
அரண்டு போய் பிரபா பார்க்க, மெல்ல சிரித்து கொண்டே எழுந்தவன், “கோவிலுக்கு நேந்து விட்ட கெடா, மாலை போட்டு தான் புடிச்சு வரணும். ஆனா, ஆடு, மாடு எல்லாம் நமக்கு ஐஸ்வர்யம் தாரது. மகாலட்சுமி மாதிரி. வீட்டுல ஒரு சங்கடம் நடந்த போது, மகாலட்சுமிய நான் கூட்டி போக கூடாது. அதான் இந்த பூவை உங்க பொண்ணு கிட்ட கொடுத்தேன்…” என்று செல்வத்தை பார்த்து சொன்னவன்,
“ உன் தலையில வச்சுகோம்மா… இது எங்க ஊர் அம்மன் பாதத்துல இருந்து பூஜை பண்ணி எடுத்து வந்தேன். அடுத்து உனக்கு நல்லது தான் நடக்கும்…” என்று மிக பவ்வியமாக விக்ரம் சொன்னான்.
ஏற்கனவே முதல் சம்மந்தம் தட்டி போனதில் சங்கடத்தில் இருந்த கலை செல்விக்கு, அம்மன் பாதத்தில் இருந்த பூ மகள் கை வருவதில் கொஞ்சம் நிம்மதி. அதுவும் தானாக மல்லிகை பூ கை வருவது நல்ல சகுனம்.
” என்ன பிரபா பாக்குற. பூவ வாங்கிக்கோ, அந்த ஊர் சாமி துடியானது. தத்ரூபமாக நிக்குமாம். உனக்கு நல்லது நடக்கட்டும். யார் கொடுத்தாலும் பூவ வேண்டாம்னு சொல்லாத. நல்ல நாள் அதுவும், வாங்கி தலையில வை. உனக்கு ஒரு நல்லது நடக்கட்டும்…” என்று தாய் சொன்ன பின்,
பிரபா கை நடுங்க வாங்கி கொண்டாள்.
“ நல்ல வாழை பழம் மாதிரி பேசுறான்டா…” என்றான் அருண்.
உண்மையில் விக்ரமுக்கு மிக நிம்மதி. அவனும் அவங்க ஊர், அம்மன் பாதத்தில் வைத்து தான் எடுத்து வந்தான்.
அப்போதும் பிரபா தயங்கி கொண்டு, பூவை கையில் தான் வைத்து இருந்தாள். அவன் நோக்கம் அவள் அறியாததா…
“இளமதி , நீ வாங்கி அந்த பிள்ளை தலையில வச்சு விடு. நடந்ததை நினைச்சு கொஞ்சம் வருத்தம் போல. எங்க அக்கா ரெண்டு பேருக்கும் எங்க கோவில்ல வச்சு பூஜை பண்ணவும் தான் சம்மந்தம் முடிஞ்சு…” என்று விக்ரம் எடுத்து கொடுக்க,
தமிழ் செல்வனுக்கு தேவையில்லாம மகளை சங்கடபடுத்தி விட்டோமோ என்று கவலை வந்தது. அந்த யோசனையில் இருந்தார். இல்லையென்றால், விக்ரமை கண்டு கொள்வார்.
இள மதி முகம் முழுக்க புன்னகையோடு பிரபா தலையில் பூ வைத்தவள்,
“அடி கள்ளி, அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசில எங்க வீட்டுக்கு தான் வாரயாக்கும்…” என்று கேலி பேச. இன்னும் அரண்டு போனாள் பிரபாவதி.
“நினைச்சத, ஸ்கிரிப்ட்டே இல்லாம, நம்மளை வச்சு முடிச்சுட்டான்…” என்று அருண் நண்பன் காதை கடிக்க,
மதன், தமிழ் செல்வனை பார்த்து, “ நடக்குற அநியாயத்தை உத்து பாருங்க மிலிட்டரி சார். துப்பாக்கி வச்சு, துப்பாக்கில குண்டு வச்சு, குண்டுக்கு லைசன்ஸ் வச்சு என்ன புரோஜனம். உங்க மகளுக்கு, உங்களுக்கே தெரியாம, இங்க ஒருத்தன் பரிசம் போட்டுகிருக்கான்…” என்று புலம்பியவன்,
“வாங்கடா போகலாம்…” என்று எழுந்து விட்டான், யாரும் கண்டு கொள்ளும் முன்…
error: Content is protected !!