Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – 8

கள்வன் – 8

 

இரு தம்ளர் பாலை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டு வீட்டின் முதல் அறைக்குள் நுழைந்தவர், “இன்று மதியம் வெயில் தாங்காமல் மயங்கி சாலையோரம் விழுந்துவிட்டேன் இன்பா…” என்று மகனுக்கு செய்தி சொன்னார்.

 



Advertisement

இன்பன் திகைப்போடு அன்னையை நோக்கி, “விரதம்லா இருக்காதே என்றால் ஏன் தான் கேட்க மாட்டேன் என்கிறாயோ தெரியவில்லை. எப்படி வீட்டிற்கு வந்தாய்? அடி எதுவும் படவில்லையே?” 

 

“அதெல்லாம் ஒன்றுமில்லைடா. ஒரு பொண்ணு எனக்கு உதவி பண்ணி வீடு வரைக்கும் வந்து விட்டுப்போனாள். நல்ல பொண்ணு. அந்த பொண்ணு பெயர்கூட இனியாடா… உன் அலுவலகத்தில் தான் வேலை செய்கிறாளாம்…” என்று ஒரு ஆர்வத்துடன் வெளிவந்தன சிவகாமியின் வார்த்தைகள்.

Advertisement

 

Advertisement

“ஸ்ஸ்… அந்த பெயர் மேல் உனக்கு அப்படி என்ன பைத்தியமா… நீ எதுவும் தயவு செய்து கற்பனை செய்து விடாதே.” என்று அன்னையை எச்சரித்து ஒரு தம்ளர் பாலை வாங்கி பருக்கிவிட்டு, கட்டிலில் அமர்ந்தவன் அங்கு படுக்கையில் இருந்த தன் அண்ணனின் தலையை தன் மடியில் தாங்கிக்கொண்டான். 

 

சிவகாமி இன்னொரு தம்ளரில் இருந்த பாலை கொஞ்சம் கொஞ்சமாக இதயன் வாயில் ஊற்ற, சிறிது சிறிதாக திரவத்தை விழுங்கிய இதயன் பாதி தம்ளர் காலியானதும் வாயை இறுக மூடிக்கொண்டான்.

Advertisement

 

அதைக் கண்ட இன்பன், “இன்னும் கொஞ்சம் குடிடா… மருந்து மாத்திரை செரிமானமாக தெம்பு வேண்டாமா. சும்மா பந்தா பண்ணாமல் ஒழுங்காக அம்மா கொடுப்பதை காலி செய்.” 

 

“அதென்ன அவனை டா போட்டு கூப்பிடுற… அண்ணன்னு சொல்லுடா…” சிவகாமி இன்பனை மிரட்ட அவனோ அன்னைக்கு உதட்டை சுழித்து பழுப்பு காண்பித்தான்.

 

“நான் இப்படி தான் பேசுவேன். யார் என்ன சொல்ல முடியும்? டேய் நான் இப்படி பேசுவதில் உனக்கு எதுவும் பிரச்னையாடா?” என்று அண்ணனை துணைக்கு அழைக்க, தம்பிக்கேத்த அண்ணனாய் அவன் இல்லையென்று தலையாட்டினான்.

 

“எல்லாம் நீ கொடுக்கிற இடம் இதயா… இவன் மரியாதை கொடுத்தால் தானே நாளை இவன் மனைவி உனக்கு மரியாதை கொடுப்பாள். நீ சும்மா அவன் இஷ்டப்பட்டதிற்கு  எல்லாம் தலையாட்டாதே.” 

 

“அம்மா இப்படி தான் ஏதாவது புலம்பிட்டே இருப்பாங்க… நீ கண்டுகாதே. இரண்டு நாட்களா உனக்கு ஷேவ் செய்துவிடலையா தாடி வளர்ந்து விட்டதுடா… நாளை சீக்கிரமே எழுந்து செய்து விடுகிறேன்.” வாக்கு கொடுத்தான் தம்பி. 

[the_ad id=”6605″]

இதயன் ஆமோதிக்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. தம்பியை எல்லாவற்றிற்கும் நாட மனமுமில்லை. ஆனால் விதி… யாருடைய உதவியும் இல்லாமல் அவனால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது எனும்போது மற்றவர்களின் வசதிக்கேற்ப தான் எல்லாமும். கண்கள் மட்டும் தான் அவன் வசதிக்கேற்ப அவன் மூளைப் பேச்சை கேட்டு வேலை செய்கிறது. 

 

“இதயா உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நீ எப்படி எடுத்துக் கொள்வாய் என்று தெரியவில்லை. ஆனால் உன்னிடம் சொல்லாமல் எப்படி… இன்பனுக்கு பொண்ணு பார்க்கலாம்னு இருக்கிறேன்டா. உனக்கு தான் எல்லாம் முதலில் நடக்க வேண்டியது…” என்று சிவகாமி சொல்லும் போதே இதயன் தலை இடவலமாக ஆடியது.

 

“அம்மா நீ அமைதியாக இரு. டேய் நீ ஸ்ட்ரைன் பண்ணிக்காதே. நீ வேண்டுமென்றால் பாரேன் இன்னும் சில மாதங்களில் எழுந்து பழையபடி நடந்து, பேச ஆரம்பித்து விடுவாய். உன் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன்டா… நம்ம வெளிநாடு போவோம். நீ ஒன்றும் கவலைப்படாதே…” இன்பன் ஆறுதல் வார்த்தைப் பேச விரக்தி புன்னகை இதயனின் இதழில். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் தான். ஆனால் விதி வலியது ஆயிற்றே. 

 

“ப்ச்… சும்மா சும்மா கேவலமாக சிரித்து வைக்காதே. பார்க்க சகிக்கவில்லை.” என்று முகத்தை சுழித்துக் காட்டி மீதமிருந்த பாலை அன்னையிடமிருந்து வாங்கி இன்பனே இதயனுக்கு ஊட்டி விட்டான்.

 

காலியான தம்ளரை சிவகாமியிடம் கொடுத்துவிட்டு இதயனை நேராய் படுக்க வைத்தவன் அவன் வாயை மறவாது துடைத்து விட்டான். 

 

“நீ போய் தூங்குமா… நானும் அவனும் கொஞ்ச நேரம் கழித்து தூங்குறோம்.” என்று அன்னையை விரட்ட சிவகாமி இதயனின் கன்னத்தை மிருதுவாய் வருடிவிட்டுச் சென்றார். 

 

அவர் சென்றதும் கதவை அடைத்துவிட்டு வந்த இன்பன் சிறிய விளக்கை போட்டுவிட்டு இதயன் அருகில் படுத்துக்கொண்டு அவன் மேல் கை போட்டுக்கொண்டான். நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொன்னது அவனின் இச்செயல். ஆனால் பிறரின் மொழியைத் தவிர வேறு எதையும் உணர முடியாத இதயனுக்கு அச்செயல் வலியையே தரும். தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை பலி கொடுத்து தன் மேல் பாசத்தை கொட்டும் தம்பியின் செய்கைகளை தன்னால் உணர முடியவில்லையே என்ற வலி. அவன் மட்டுமே உலகம் என்று இருக்கும் அன்னை தன் கை பிடித்து நான் இருக்கிறேன் என்று கொடுக்கும் வாக்கை தன் புலன்களால் கண்டுகொள்ள முடியவில்லையே என்ற கழிவிரக்கம் என்று அவனின் அனைத்து உணர்வுகளும் அன்னையையும், தம்பியையும் சுற்றியே.

[the_ad id=”6605″]

இப்போது தம்பிக்கு திருமணம் எனும் போது, தம்பியுடன் அவன் கழிக்கும் நேரங்களை அவனின் மனைவிக்கு விட்டுக் கொடுக்கும் நிலை. அவன் துணையில்லாமல் இதயனால் இருக்க முடியுமா என்றால் விடை என்னவோ பூஜ்யம் தான். கை கால்களை அசைக்க முடிந்தாலாவது அவனின் தேவைகளை அவனே பார்த்துக் கொள்வான். ஆனால் அவன் இருக்கும் நிலையோ அந்தோ பரிதாபம். 

 

ஐம்புலன்களில் பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல் ஆகியவை மட்டுமே வேலை செய்யும். சுருக்கமாக சொல்லப் போனால் தலை பகுதியில் இருக்கும் தசைகள் மட்டுமே அவனுக்கு இயங்கும். அதிலும் குரல் வலைகள் செயலிழந்து விட்டன. இதையெல்லாம் நினைக்கும் பொழுதே கண்களில் நீர் முட்டி ஓரத்தில் கசிந்தது. கசிந்த நீர் மெல்ல வழிந்து அவன் அருகிலேயே படுத்திருந்த இன்பனின் கன்னத்தை நனைக்க, இன்பனுக்கு தொண்டை அடைத்தது. அவனும் உடைந்துவிட்டால் வீட்டில் அன்னையும், அண்ணனும் நம்பிக்கை இழந்துவிடுவர் என்று கருதியே குளியலறையை அவன் உணர்ச்சிகளை வெளிக்கொட்ட பயன்படுத்திக் கொள்வான். 

 

இப்போதோ எழுந்து செல்ல முடியாத நிலை. உருவமில்லா உருண்டை ஒன்று தொண்டையை அடைக்க, மெல்ல தன்னை சுருக்கிக் கொண்டவன், கொஞ்சமே கொஞ்சமாய் கீழே சரிந்து இதயனின் தோளில் முகம் புதைத்துக் கொண்டான். உவர்ப்பு நீர் கட்டுக்கடங்காமல் வழிந்தோடி இதயனின் தோளை நனைத்தது. 

 

தன்னைப் பார்த்து தம்பி தாளமுடியாமல் தன் மேல் சாய்ந்து அழுகிறான் என்பதைக் கூட உணர முடியாமல் இதயன் கண்களை மூடிக்கொண்டான், விழி நீர் கீழே விழாதபடி.

 

◆◆◆

 

“யுக்தா…” என்ற அழைப்பு அவள் செவிகளை எட்ட படியில்  ஏறிக் கொண்டிருந்தவள் அப்படியே நின்றுவிட்டாள். எத்தனை நாட்கள் இக்குரலில் அவள் பெயரைக் கேட்க ஏங்கி இருப்பாள்.

 

“உன்னிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும். கேஃபிடேரியாவுக்கு வரியா?” அவளை சிந்திக்க விடாமல் வெளிவந்தது அந்தக் குரல்.

 

“இப்போதே பேச வேண்டுமா?” என்று யுக்தா சுற்றும் முற்றும் பார்த்துக் கேட்க,

 

“இப்போதே பேச வேண்டிய முக்கியமான விஷயம் தான். ஆனால் உனக்கு எப்போது நேரம் இருக்கிறதோ அப்போது பேசலாம்.” 

 

அவன் கேட்டு அவள் மறுப்பதா அது என்றுமே நடந்தது இல்லையே, “போகலாம்.” என்று அவனுக்கு முன்னே நடக்க ஆரம்பித்தாள்.

 

ஆங்காகே ஒரு சிலர் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தனர். காலை இளம்வெயில் உடலுக்கு விட்டமின்- டியை தருவிக்க, ஒரு ஓரமாய் சென்று எதிரெதிராய் அமர்ந்தனர் இருவரும்.

[the_ad id=”6605″]

“சாப்பிட்டியா?”

 

யுக்தா அவனை நன்றாக முறைத்து வைத்தாள். இதைக் கேட்கத் தான் கூப்பிட்டாயா என்ற செய்தி இருந்தது அந்த முறைப்பில்.

 

“ம்… புரிகிறது. நாம் பேசி ஒரு வருடம் இருக்குமா?” என்று யோசனையோடு வெளிவந்தது அவனின் வார்த்தைகள்.

 

“பரவாயில்லை… நாம் கடைசியாக பேசியது எப்போது என்றுக் கூட நினைவு வைத்திருக்கிறீர்கள். என்னையே மறந்து இருப்பீர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்.” காட்டமாய் ஒலிக்க முற்பட்டு துவண்டே வந்து விழுந்தது யுக்தாவின் வலி பொதிந்த வார்த்தைகள்.

 

“ ஸீ யுக்தா… என் நிலைமை என்னவென்று அப்போதே உனக்கு விளக்கிவிட்டேன். ஆனால் நீ இன்னமும் நான் ஏமாற்றியது போல் பேசுகிறாய்.” என்று சொல்லும் போதே ஆயாசமாய் வந்தது அவனுக்கு.

 

“ஏமாந்தது நான் தானே. அந்த வலி இருக்கத் தானே செய்யும். மூளைக்கு புரிகிறது உங்கள் நிலைமை ஆனால் ஆசை வைத்த இதயம் முரண்டு பிடிக்கிறது. பழசை விடுங்க… இப்போது என்ன பேச வேண்டும்?” அவன் சொல்லின் உண்மையறிந்து தன் மனதை சமன்செய்து கொண்டு தற்போதைய நிகழ்வில் கவனம் வைத்தாள்.

 

அவளின் கண்களை நேராய்ப் பார்த்தவன் எச்சில் விழுங்கி கையை பரபரவென தேய்த்துக் கொண்டு தான் வந்த விஷயத்தை பட்டென்று போட்டுடைத்தான், “கல்யாணம் பண்ணிக்கலாமா?” இரண்டு தினங்களாக மண்டையை போட்டு குடைத்துக் கொண்டிருந்ததை கேட்டே விட்டான்.

 

“வாட்?” அப்பட்டமான அதிர்ச்சி அவள் விழிகளில்.

 

“உனக்கு இது அதிர்ச்சியாகத் தான் இருக்கும். ஆனால் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.” என்க அவள் சுதாரித்தாள்,

 

“என்ன கட்டாயம் திடீரென்று?”

 

“வீட்டில் அம்மா பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.” என்று தயங்கலோடு கூறினான். தன்னை தவறாக எண்ணிவிடுவாளோ என்றதொரு பதற்றம் மனதில் தீ ஜுவாலையாய் கொதித்துக் கொண்டிருந்தது.

 

“ஓ… நான் கூட காதல் வந்துவிட்டதோ என்று நினைத்து விட்டேன்.” இகழ்ச்சியான சிரிப்பு அவளின் வறண்ட இதழ்களில்.

 

“அன்றும் சரி, இன்றும் சரி காதல் பற்றி எல்லாம் சிந்திக்கக் கூடிய நிலையில் நான் இல்லை யுக்தா. என் எண்ணம் முழுதும் என் அண்ணன் பற்றிய சிந்தையே தான். அவன் முன்பு போல் எழுந்து நடமாட வேண்டும். அதற்கு நிறைய பணம் தேவை. அதன் பின்னால் தான் ஓடிக் கொண்டிருக்கிறேன். ஆனால்… எதிர்மறையாய் சென்று கொண்டிருக்கும் எங்கள் வாழ்வில் ஒரு மாற்றம் தேவை என்று அம்மா விரும்புறாங்க. எனக்குமே அது தான் சரியென்று படுகிறது. 

 

உன் நினைவு தான் உடனே வந்தது. உன் மீது காதல் இருக்கிறதா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் என்னை நேசிக்கும் பெண்ணை மணந்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று மட்டும் தோன்றுகிறது. இதற்கு மேல் உன் முடிவு தான் யுக்தா.”

 

யுக்தா கண்களை மூடி, இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். அவனை பார்த்த நொடி முதல் அகக்கண்ணில் அவனின் நினைவுகள். அவள் அவனின் டீமில் சேர்ந்தது, அவன்பால் ஈர்க்கப்பட்டு அவனிடம் தன் காதலைத் தெரிவித்தது, அண்ணனை காரணம் காட்டி அவன் நிராகரித்தது, அவன் நிராகரிப்பை தாளமுடியாமல் இனியாவின் டீமில் சேர்ந்தது என்று ஒருவருட நினைவுகள் அந்த ஒற்றை நொடியில் படமாய் விரிந்தது.

 

“ஒன்றும் அவசரம் இல்லை யுக்தா. நல்லா யோசித்து சொல்லு.” என்று அவளுக்கு அவகாசம் கொடுக்க எண்ணி அவன் நகர முற்பட, அவன் கையை பிடித்து தடுத்தாள்,

 

“எத்தனை பெண்ணை போய் பார்த்துட்டு வந்தீங்க?”

 

“ஸீரோ…” என்றான் அவளின் எண்ணம் அறிந்து ஒரு முறுவலுடன்.

 

“காதல் வர வாய்ப்பிருக்கிறதா?”

 

“அன்லிமிட்டடா இருக்கு…”

 

“எத்தனை நாளிற்கு இந்த அன்லிமிட்டட் வேலிட்?”

 

“காதல் வரும் வரை… நீ சரி சொன்னால் கூடிய விரைவில்.”

 

“அப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் இன்பன். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அண்ணனுக்காக என்று நீங்கள் இவ்வளவு தியாகம் செய்யும் போது எனக்காக, உங்கள் மனைவிக்காக காதலிக்க மாட்டீர்களா என்ன…” பெண்ணவள் புருவம் உயர்த்த,  

 

இன்பன் மெலிதாய் சிரித்துக் கொண்டே அவள் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

 

எதிர் இருக்கைக்கு செல்லாமல் தன் அருகில் அமருபவனை கேலியோடு நோக்கியவள், “இப்போதிலிருந்தே காதலிக்க ட்ரைனிங் எடுக்கிறீங்களா?” 

 

“அப்படினும் சொல்லலாம்.”

 

“ம்..”

 

“இப்போது சொல்லு சாப்பிட்டியா?”

 

“ம்… நீங்க?”

 

“இல்லை… உன்னிடம் எப்படி பேசப் போகிறோம் என்ற தவிப்பிலேயே ஒன்றும் தொண்டையில் இறங்கவில்லை.”

 

“என்னுடைய லஞ்சை சாப்பிடுங்க. மதியம் இனியா லஞ்சை ஷேர் செய்துக் கொள்கிறேன்.” என்றவள் தன் உணவை திறந்து கொடுத்து தண்ணீரும் எடுத்து வைத்தாள்.

 

“என்ன மீண்டும் இனியாவா? யாருமா அது? எங்கம்மா இந்த பெயரை ரெண்டு நாட்களாக வீட்டில் பேசி பேசியே பீதியாக்கிட்டாங்க…” 

 

“அவள் என் தோழி. நீங்கள் யாரை சொல்கிறீர்கள் ?”

 

“எனக்கு பெயர் மட்டும் தான் தெரியும். அம்மா ஏதோ மேட்ரிமோனியல் சைட்டில் பார்த்தார்களாம்… அதைவிடு நான் இன்றே நம்மைப் பற்றி அம்மாவிடம் பேசிவிடுகிறேன். உனக்கு ஓகே தானே? உங்கள் வீட்டில் ஒத்துக் கொள்வார்களா?” 

 

“எங்கள் வீட்டை பற்றி கவலைப்பட வேண்டாம். ஏற்கனவே நான் ஒருவரை விரும்புகிறேன் என்று வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியும். அதனால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். முதலிலேயே கேட்க வேண்டும் என்று நினைத்தேன், உங்கள் அண்ணன் எப்படி இருக்காங்க? அவருக்கு என்ன பிரச்சனை என்று இதுவரை நீங்கள் சொன்னதில்லை.”

 

“அவனுக்கு முடக்குவாதம் {Paralysis}. ஆறு வருடத்திற்கு முன் ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு இப்படி ஆகிவிட்டது. ஆறு வருடங்களுக்கு முன் எப்படி இருந்தானோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறான். வெளிநாட்டில் சிகிச்சை செய்ய முயன்று கொண்டிருக்கிறேன். இனி உன் துணையும், ஆறுதலும் எனக்கு வேண்டும் யுக்தா. அவனை எப்படியாவது சரி செய்தே ஆகவேண்டும்.”

 

“நீங்கள் என்ன முடிவு செய்தாலும் அதற்கு துணையாய் நான் இருக்கேங்க உங்ககூட… நீங்க சாப்பிடுங்க…”

 

வேறென்ன வேண்டும் அவனுக்கு! தன்னை காதலிக்கும் ஒருவள்! தன் மனம் அறிந்து துணை நிற்கும் ஒருவள்! இனி அவளுக்காகவேனும் அண்ணனை சீக்கிரம் சரிசெய்து வாழ்க்கையை துவங்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

 

*^*^*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!