Skip to content
Post Views: 763
அத்தியாயம் 10
பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து, விஜயன் அனுராதா வீட்டு மொட்டை மாடியில் வசதியாக அமர்ந்து பேசுவதற்கு ஏதுவாக எல்லாம் தயார் செய்திருந்தார்கள். அங்கே தான் இரவு உணவிற்கு பிறகு விஜயனை இழுத்து சென்று அவர்களது காதல் கதையை கேட்டு கொண்டிருக்கிறார்கள்.
Advertisement
பாய், தலைகாணி, ஸ்னாக்ஸ், ஜூஸ் என்று எல்லாம் வைத்திருந்தார்கள்.
“டேய் இந்த செட் அப் எல்லாம் பார்த்தா சிரிப்பா வருது, படுத்தாதீங்க.. காதல் கதை எல்லாம் பெருசா என்ன சொல்லன்னு எனக்கு தெரியலையே” என்றார் விஜயன் நூறாவது முறையாக பிள்ளைகளிடம்.
Advertisement
Advertisement
“அப்ப, புதுசா பொண்ணு பார்த்து காதல் காவியத்தை க்ரியேட் பண்ண தயார்ன்னு சொல்றீங்களா?” என்றான் குகன் பழைய திரைப்படங்களில் வரும் வில்லன்களை போல இரண்டு கைகளையும் பிசைந்து கொண்டு.
அவர் பாவமாக முழிக்கவும், “உங்களுக்கு வர அளவுக்கு சொல்லுங்க மாமா. மிச்சத்தை நாங்களே எங்க கற்பனை வளத்தோட சேர்த்து அதை பில் பண்ணிக்கிறோம்” என்றாள் தமிழ்.
Advertisement
‘இவர் எல்லாம் என்ன சொல்ல போறாரு’ என்று அசால்ட்டாக தான் முதலில் அமர்ந்து கேட்க தொடங்கினார்கள்.
“எங்க அப்பாவுக்கு சரியான வருமானம் இல்லை, குடி பழக்கம் வேற. அம்மா தான் கூலி வேலைக்கு போய் குடும்பத்தை பார்த்துக்கிட்டாங்க. வறுமை வறுமை வறுமை தான். அப்ப எங்க அக்காவுக்கும் தங்கச்சிக்கும் இருந்த மிக பெரிய ஆசையே நல்ல துணி மணி போட்டுக்க தான். நல்ல துணிமணின்னா புதுசாவோ கலர் கலர்ராவோ எல்லாம் இல்லை. ஒட்டு போடாம, கிழிசல் இல்லமா இருக்கிற ஒரு துணி.
இளமையில் கொடுமை வறுமை தான். நான் பத்தாவது முடிச்சதும், எங்க ஊர்ல ஒருத்தவங்க பேக்டரில வேலைக்கு சேர்ந்தேன். இரண்டு வருஷம் அங்க வேலை பார்த்தேன். வறுமை கொஞ்சம் குறைந்ததே தவிர எங்களால அடுத்த நிலைமைக்கு போகவே முடியலை. அப்ப தான் எனக்கு துபாய் போற வாய்ப்பு வந்தது.
வெளி ஊர்க்கு கூட நான் அதுக்கு முன்ன போனதில்லை. ஆனா வெளிநாட்டுக்கு போக தைரியமா முடிவு செஞ்சேன். எப்பாடு பட்டாவது குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வரணும்னு முடிவு செஞ்சேன்.
அங்க போய் ஒரு ஆறு மாசம் ரொம்பவே தவிச்சு போனேன். நல்லா படிச்சு நல்ல வேலைக்கு வெளி நாடு போறது வேற. நான் உழைக்கிற வர்க்கத்துல அதுவும் வெளியுலகம் தெரியாத பதினெட்டு வயது பையனா போனப்ப நிறையவே கஷ்டப்பட்டேன்.
சரியான தூக்கம் இல்லை. அங்க இருக்க வெயில் தாங்க முடியாம ரொம்பவே அவதிப்பட்டேன்.. ஆனா ஆறுமாசத்துல பழகிகிட்டேன். அங்க கூட வேலை செஞ்ச அண்ணாக்கள் நிறைய உதவி செஞ்சாங்க.
உண்மையான உழைப்பு, வைராக்கியம், நேர்மை இது எல்லாதுக்கும் கூட தைரியம்.. இவை எல்லாம் இருந்தா நிச்சயமா முன்னுக்கு வந்துடலாம்ங்கிறதுக்கு நான் ஒரு உதாரணம்.
படிப்படியா மேலே மேலே வளர்ந்தேன்… குறைந்த செலவுல காலத்தை ஓட்டி, வீட்டுக்கு மிச்ச பணத்தை எல்லாம் அப்படியே அனுப்பிடுவேன்.. எனக்கு தெரிஞ்சது எல்லாமே உழைப்பு ஒன்னு மட்டும் தான். இந்த அதிகப்படியான உழைப்பு எங்க குடும்பத்தை உயர்த்தியது, ஆனா அதே சமயம் எனக்கும் குடும்பத்துக்கும் இடையிலான நெருக்கத்தை குறைச்சிடுச்சு.
ஒரு கட்டத்துல வீட்டை முன்னுக்கு கொண்டு வரணும் என்ற நினைப்பு மட்டுமே மனசுல நின்னுடுச்சு. அவங்க எல்லாரும் நான் இல்லாமலே வாழ பழகிட்டாங்க.. என் மேலே பாசம் இல்லைன்னு இல்லை.. அதை விட நன்றி உணர்ச்சி தான் மிகுந்திருந்துச்சு.
இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை தான் ஊருக்கு போவேன். அப்பவும் யார்கூடவும் அதிகமா ஓட்ட முடியல. அக்கா தங்கச்சியோட சின்ன சின்ன சண்டை, அம்மா கிட்ட கிடைக்கிற உரிமையான திட்டு, இப்படி எதார்த்தமான குடும்ப சூழல் கனவாகி போச்சு.
அப்புறம் அக்கா கல்யாணம், வீடு கட்டுனாங்க.. அடுத்து தங்கை கல்யாணம்ன்னு என்னோட துபாய் வாழ்க்கை, இங்க என் குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்தது..
“டேய் குகன் அண்ணா…
மொட்டை மாடி மொட்டை மாடி..
இது ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி
இலவசமா ஒரு சினிமா
நமக்காக நடக்குது ஷோ… ஷோ.. ஷோ..
இப்படி ஒரு சீனை எதிர் பார்த்து வந்தா, மாமா சொல்ற கதைய கேட்டு கண்ணெல்லாம் வேர்க்குதே” என்றாள் தமிழரசி பக்கத்தில் இருந்த குகனிடம் மெல்ல.
“ஆமா தமிழு.. எனக்கு அப்பவே டவுட் தான். மாமா கிட்ட காதல் கதை எல்லாம் எதிர் பார்த்து வர்றோமேன்னு”
நறுக்கென்று அவனது தொடையை பிடித்து கிள்ளி அமைதியாக இருக்குமாறு கூறினான் பாலமுருகன்.
எழிலரசி மட்டும் விஜயன் கூறுவதை கேட்டு அவரின் பக்கத்தை முழுதாக புரிந்துக்கொள்ள முயற்சி செய்தாள்.
“இப்படியே நான் துபாய் சென்று ஏழு எட்டு வருஷம் முடிஞ்சிடுச்சு.. அப்ப தான் எனக்குன்னு ஒரு துணை வேணும்னு மனசு ஆசை பட துவங்குச்சு.. நானா எனக்கு கல்யாணம் செஞ்சு வைங்கன்னு கேட்க சங்கோஜமா இருந்துச்சு. நாளடைவுல ஆசை ஒரு ஏக்கமாவே மாறிடுச்சு.
அக்கா தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு இரண்டு குழந்தை பிறந்ததுக்கு அப்புறமா தான் எனக்கு ஒரு கல்யாணம் செய்யலாம்னு எங்க வீட்ல யோசிச்சாங்க.
என்கிட்டே என் விருப்பத்தை பத்தி கேட்டதும், உங்க எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி பார்த்துட்டு சொல்லுங்கன்னு சொல்லிட்டேன்.”
“அப்பாடா.. இனி அழுகாட்சி சீன் எல்லாம் முடிஞ்சுது போல ண்ணா” என்றாள் தமிழரசி குகனிடம்.
இனி நாமும் விஜயன் அனுராதா காதலோடு கொஞ்சம் பயணிப்போம்….
(இருபத்தி எழு ஆண்டுகளுக்கு முன்..)
காலையில் வேலைக்கு கிளம்பிக்கொண்டிருக்கையில் ஊரில் இருந்து அழைப்பு வந்ததும் உற்சாகமாக ஏற்றார் விஜயன்.
“ஹலோ அண்ணா, ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்கு. அம்மா ஜோசியர் கிட்ட உங்க ஜாதகத்தை கொடுத்ததிருந்தாங்க இல்ல. அவர் தான் இந்த இடத்தை சொன்னாரு. ஜாதகம் எல்லாம் ரொம்ப நல்லா பொருந்திருக்காம். அந்த பொண்ணுக்கு எத்தனை ஜாதகம் பார்த்தும் ஒண்ணுமே செட் ஆகலையாம். உன்னது மட்டுமே பொருந்தி வந்திருக்குன்னு சொன்னாரு. கொஞ்சம் வசதியான குடும்பம் தான் போல. எங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு அண்ணா” என்றாள் விஜயனின் தங்கை ஸ்வாதி ஒரே மூச்சாக.
“சரி ஸ்வாதி, கொஞ்சம் மெதுவாதான் சொல்லேன்.. எதுக்கு இப்படி மூச்சு விடாம பேசுற” என்றார் விஜயன் சிரித்து கொண்டு.
“இனி மூச்சு விட கூட நேரமில்லை அண்ணா எனக்கு. எங்களுக்காக நீ எத்தனை வருஷமா கஷ்டப்படுற? உனக்குன்னு ஒரு வாழ்க்கை சீக்கிரமா நல்லபடியா அமையணும்.”
“சரி ம்மா.. “
“அண்ணா நான் பொண்ணு போட்டோ மெயில் அனுப்பி இருக்கேன். பார்த்துட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லு. அதுக்கப்பறம் தான் நாங்க இங்க மேற்கொண்டு பேச முடியும்”
“சரிம்மா, நான் வேலை முடிச்சிட்டு போய் மெயில் செக் பண்ணி பார்த்துட்டு கூப்பிடுறேன்”
“சரி ண்ணா, பாய்”
விஜயனுக்கு உடனடியாக சென்று பார்க்க வேண்டும் என்று பரபரப்பாக இருந்தது. என்ன செய்ய, வேலைக்கு பத்து நிமிடம் தாமதமாக சென்றாலும் அரைநாள் லீவ் கணக்கு ஆகிவிடும்.
அன்று மாலை வேலை முடித்ததும் அவர் அலுவலகத்தின் அருகில் இருந்த ஒரு இன்டெர்நெட் கஃபேக்கு சென்றார்.
மனதெல்லாம் படபடக்க.. ‘என் ஜாதகம் மட்டும் தான் பொருந்துச்சாமே.. அப்ப எனக்கானவள் இவள் தானோ! பெரிய இடத்து பொண்ணுன்னு ஸ்வாதி சொன்னாளே, என்னை பிடிக்குமா? நான் சும்மாவே கருப்பு, இந்த ஊருக்கு வந்ததும் இன்னுமே அட்ட கருப்பா இல்ல ஆயிட்டேன்.. அந்த பொண்ணு சிவப்பா இருக்குமோ? அதுக்கு என்னை பிடிக்குமா?’ என்று ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள், மெயிலை ஓபன் செய்வதற்குள்.
லேசாக நடுங்கிய கையை மற்றொரு கைக்கொண்டு பிடித்துக்கொண்டே, மெயிலில் வந்திருந்த அட்டாச்மெண்டை க்ளிக் செய்த உடனே
கண்களை மூடிக்கொண்டார்.
பின் மெல்ல கண்களை திறந்து பார்த்தார்.
நல்ல அழகான பொம்மை ஒன்று புகைப்படத்தில் இருந்து தன்னை பார்த்து சிரிப்பது போல இருந்தது.
பார்த்ததும் மனதில் படக்கென்று ஒட்டிக்கொண்டது அந்த அழகான உருவம்.
‘பொண்ணு பெயர் விவரம் எதுவுமே சொல்லாம வெறும் போட்டோவை அனுப்பி வச்சிருக்கே இந்த ஸ்வாதி..’ என்று புலம்பிக்கொண்டே தங்குமிடத்திற்கு சென்றார்.
‘பொம்மின்னு பெயர் வச்சிருக்கலாம். அவ்வளவு அழகா பொம்மை மாதிரியே இருக்கா..
முதல்ல முடிவாகட்டும் தேவையில்லாமல் கற்பனையை வளர்த்துக்க கூடாது..
போட்டோல பார்க்க ஹைய்ட் எல்லாம் தெரியல.. என் தோள் அளவுக்கு இருப்பாளா?’
இப்படி பல எண்ணங்களுடனே தான் தங்குமிடத்திற்கு சென்றார்.
அப்பொழுது விஜயன் அம்மா வீட்டில் தொலைபேசி கிடையாது. தங்கைக்கு தான் அழைத்து பேசவேண்டும். ஸ்வாதி கூட்டு குடும்பத்தில் இருக்கிறாள். அதனால் இவரே அழைத்து பேச சங்கடமாகவும் இருந்தது.
அன்று இரவு முழுவதும் புகைப்படத்தில் பார்த்த பெண்ணை நினைத்தும், அப்படி நினைக்க கூடாது என்று தனக்கு தானே கூறிக்கொண்டும் என்று கழிந்தது.
மறுநாள் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாக தயாராகி, போனை பார்த்து கொண்டு அமர்ந்திரார்.
இவர் எதிர்பார்த்தது போலவே ஸ்வாதி அழைத்தாள்.
“என்ன அண்ணா, போட்டோ பார்த்தியா? பிடிச்சிருக்கா?” என்று தான் ஆரம்பித்தாள்.
“போட்டோ மட்டும் தானே ஸ்வாதி அனுப்பி இருந்த?”
“ஆமா ண்ணா, மத்த டீடெயில்ஸ் நான் சொன்னேன் இல்ல? அதை விடு, உனக்கு பிடிச்சிருக்கா?”
“பிடிச்சிருக்கு” என்று பதில் கூறினாலும் மனதிற்குள் தங்கையை இவ பொண்ணை பத்தி ஒண்ணுமே சொல்லலையே என்று திட்டிக்கொண்டார்.
“சரிண்ணா, எனக்கு தெரியும் உனக்கு பிடிக்கும்னு.. நான் அம்மாகிட்ட சொல்றேன். மேற்கொண்டு இங்க பேசிட்டு, ரெண்டு மூணு நாள்ல கூப்பிடுறேன்” என்று இப்பொழுதும் விவரம் எதுவுமே கூறாமல் வைத்துவிட்டாள்.
விஜயனுக்கு அடுத்த இரண்டு நாட்களும் , கலர் கலர் கனவுகள் தான்.
முதலில் நிச்சயம் செய்யாமல் நினைப்பது தவறு என்று நினைத்து நினைப்பதை தவிர்க்க பார்த்து முடியாமல் பின், அந்த நினைவுகளில் தன்னையே தொலைத்து என இருந்தார் விஜயன்.
‘கையில் காஃபி ட்ரேயுடன் தன் முன் நிற்கும் பெண்ணை இவர் நிமிர்ந்து பார்க்க, அதே சமயம் அந்த பொம்மை பெண்ணும் இவரை பார்க்க.. கையில் காஃபி கப்பை வாங்கும் பொழுதே இதயங்கள் இடம் மாறுவது போல..
கனவே தித்திப்பாக இருந்தது..
அதன் பின் திருமண கோலத்தில், கையில் ஒரு குழந்தையுடன் இருவரும் நடந்து செல்வது போல.. இப்படி பல பல கனவுகள்..
தங்கையிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்காக காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்து போனது.
மூன்றாம் நாள் காலை ஸ்வாதி அழைத்து,
“உன் போட்டோவை அனுப்பினோம் அண்ணா. பொண்ணுக்கு உன்னை ரொம்பவே பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க..” என்றாள் உற்சாகமாக.
‘எனக்கு பார்த்ததும் பிடிச்சது மாதிரி அவளுக்கும் என்னை பார்த்ததும் பிடிச்சிருச்சே’
ஐஸ் மழையில் நனைந்தது போல ஜில்லென்று இருந்தது.
“உனக்கு எத்தனை நாள் லீவ் கிடைக்கும் அண்ணா.. அம்மா உன்னை அலுவலகத்துல கேட்டு உடனே சொல்ல சொன்னாங்க…. இந்த மாசமும் அடுத்த மாசமும் முகூர்த்த நாள் எதுவும் இல்லயாம். வர வைகாசி மாசம் நாலஞ்சு முகூர்த்த நாள் இருக்காம்.
இப்ப ஒரு தடவை வந்து பொண்ணு பார்த்திட்டு போய்ட்டு திரும்ப வரமுடியுமா, இல்லைனா வைகாசி மாசமே வந்து கல்யாணம் எல்லாம் முடிச்சு போக வசதியா இருக்குமா?
எல்லாம் யோசிச்சு சொல்லு ண்ணா”
‘எல்லாம் முடிவானது போல பேசுறாளே.. பொண்ணு பேரை கேட்கலாமா வேணாமா?’ என்று தீவிர ஆலோசனைக்கு சென்று விட்டார்.
“அண்ணா, ஐ எஸ் டி கால் நிறைய பேசி பில் நிறைய வருதுன்னு எங்க மாமியார் சத்தம் போடறாங்க.. நாளைல இருந்து நீயே இதே நேரம் காலையில கால் பண்ணு.. தப்பா நினைக்காதீங்க” என்றாள் தயங்கிக்கொண்டே.
“இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு ஸ்வாதி. நானே கூப்பிடுறேன். அப்படியே அம்மா வீட்டுக்கும் லேண்ட் லைன் போன் ஏற்பாடு செய்றியா?”
“எனக்கு எங்க அண்ணா நேரம் இருக்கு, பார்க்கிறேன்.”
“உங்க அண்ணாக்கு ஏன் இன்னும் கல்யாணம் செய்யாம இருக்கீங்க? நீங்களே அவன் சம்பாத்தியத்தை அனுபவிக்கலாம்னு பார்க்கறீங்க போல?” என்று சொந்த பந்தங்கள் எல்லாம் பேசுவதை கேட்ட பிறகே திருமண ஏற்பாட்டில் மெனக்கெடுகிறாள். இவ்வளவே அவள் பாசம்.
எப்பொழுதும் மனதில் தோன்றும் ஒரு வெறுமை இப்பொழுது தோன்றவில்லை, என்ன இப்ப நான் கல்யாணத்துக்கு ஊருக்கு போகும் போது ஏற்பாடு செஞ்சுக்கலாம் என்று நேர்மறையாக நினைத்தார்.
அதன் பிறகு அலுவலகத்தில் கேட்டு, இரண்டு மாதம் விடுமுறை கிடைக்கும் என்று தங்கை மூலம் அம்மாவுக்கு தெரியப்படுத்தினார்.
பெண் வீட்டில் கலந்து பேசி, பெண் பார்க்கும் அன்றைக்கே நிச்சயதார்த்தத்தை சேர்த்து வைத்துக்கொள்ளலாம். ஒரு வார இடைவெளியில் திருமணத்தையும் முடித்து கொள்வோம். என்று கூறினார்கள்.
பெண்ணுக்கு திருமண யோகம் முடிய சில மாதங்களே இருந்ததால், அவர்கள் அவசரமாக செய்வதில் முனைப்பாக இருந்தனர்.
மாப்பிள்ளையை பற்றி தெரிந்தவர்கள் மூலம் துபாயில் விசாரித்து பார்த்தனர். அனைவருமே விஜயனா.. சொக்கத்தங்கம் என்று கூறவே தைரியமாக மேலே ஏற்பாடுகளை கவனித்தனர்.
அனைத்து ஏற்பாடுகளும் நடந்தாலும், பெண்ணின் விவரம் மட்டும் விஜயனுக்கு தெரியவில்லை. ஸ்வாதி கூறி இருப்பாள் என்று விஜயனின் அம்மாவும் நினைத்து கொண்டார்.
‘பொம்மி.. நானே நேர்ல வந்து உன்னை பத்தி தெரிஞ்சுக்கிறேன்.. என்ன இப்ப?’ என்று மனதிற்குள் பேசிக்கொண்டார்.
இப்பொழுது மனதிற்குள் பொம்மியுடன் பேசிக்கொள்வதையே முழுநேர வேலையாக போனது அவருக்கு. நண்பர்கள் எல்லாரும் “என்ன விஜயா.. முகத்துல ஒளி வட்டம் தெரியுது?” என்று கிண்டல் செய்தனர்.
நிச்சயதார்த்தற்கு ஒரு நாள் முன்பு தாயகம் வந்து இறங்கினார் விஜயன் தன் பொம்மியை காணும் ஆசையோடு.. ஏக்கத்தோடு.. கனவுகளோடு..
error: Content is protected !!