Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

25. Kala Palaniappan - காஃபி வித் காதல்

காஃபி வித் காதல் 17

அத்தியாயம் 17 

அன்று காலை வழக்கம் போல அனைவருக்கும் காஃபி கலக்கும் வேலையில் இருந்தார் ரத்னா.



Advertisement

“அம்மா நீ இவளை பெத்ததுல கிடைச்ச ஒரே  நல்ல விஷயம் இந்த காஃபி தான்” என்று கூறிக்கொண்டே காஃபியை ரசித்து குடித்தார் சின்ன அக்கா.

“அது என்னமோ ரொம்ப உண்மை. நாகு காஃபி போட ஆரம்பிச்சதுல இருந்து தான் நம்ம வீட்ல நல்ல காஃபியே” என்றார் அண்ணன்.

Advertisement

Advertisement

“நான்கூட கல்யாணம் ஆகி போனதுக்கு அப்புறமா இந்த காஃபியை மிஸ் பண்ணுவேன்” என்றார் பெரிய அக்கா.

பத்தாம் வகுப்பு படிக்கும் தம்பி கதிர் மட்டும் அமைதியாக காஃபியை குடித்தான் அவனுக்கு மூன்று அக்காக்களில் நாகரத்னாவை தான் மிகவும் பிடிக்கும். ஆனால் அவன் யாருடனும் கலகலப்பாக பேசும் ரகம் இல்லை. நாகரத்னாவை மேலே படிக்குமாறு கூறினான். “எல்லாத்துக்கும் தலையை ஆட்டாதே அக்கா, உனக்கு என்ன வேணும்னு கேளு” என்று சில சமயங்களில் கூறுவான். “அழுகிற குழந்தை தான் பால் குடிக்கும். உனக்கு வேணுங்கிறதை நீ தான் கேட்டு வாங்கிக்கணும்” என்று பலமுறை கூறுவான்.

Advertisement

“விடுடா கதிர்.. ஆசைப்பட்டா ஏமாற்றம் தான் மிச்சம். எனக்கு  கிடைக்கிறதே போதும்” என்பது தான் ரத்னாவின் பதிலாக இருக்கும்.

அக்காவிடம் காணும் மாற்றத்தை கண்டுகொண்டவன் அவன் மட்டுமே. இருந்தும், அக்காவின் மகிழ்ச்சி அவனை யாரிடமும் இதை பகிர்ந்து கொள்ள விடவில்லை.

“சரி சரி, அரட்டை கச்சேரியை ஆரம்பிக்காம போய் வேலையை பாருங்க. குளிச்சிட்டு  கல்யாணத்துக்கு கொடுத்த ஜாக்கெட் எல்லாம் தைச்சுட்டாங்களான்னு நீங்க ரெண்டு பேரும் போய் பார்த்துட்டு வாங்க” என்று பெரிய மகள்கள் இருவரையும் ஏவிவிட்டு, காலை டிபனுக்கு என்னவென்று பார்க்க எழுந்தார் தெய்வானை.

“என்ன நாகு, இன்னுமா உன் காஃபி கடை முடியல, சீக்கிரம் நகரு, எனக்கு வேலை இருக்கு”

“இதோ அம்மா, அப்பா குளிச்சிட்டு குடிக்கிறேன்னு சொல்லிட்டாங்க. அதான் அப்பாவுக்கும் அந்த கார்பென்டருக்கும் கலந்துட்டு இருக்கேன், முடிஞ்சது”, என்று கூறி, முதலில் அப்பாவிற்கு ஒன்றை கொடுத்துவிட்டு,  இன்று ஸ்பெஷலாக போட்டிருந்த காஃபியை எடுத்து கொண்டு கண்ணனின் ஷெட்டிற்கு சென்றாள்.

“உன் காஃபிக்காக தான் காத்துட்டு இருந்தேன், இன்னிக்கு என்ன லேட்? உன் காஃபி குடிக்காம வரவர என்னால வேலையே செய்ய முடியல போ, என்னை அடிமை ஆக்கி வச்சிருக்க” என்றார் கண்ணன் ரத்னாவை பார்த்து சிரித்துக்கொண்டே.

பெரிய பெண்கள் இருவரும் தினமும் ஒரு முறை வந்து இவன் செய்யும் வேலைகளை பார்வையிட்டுவிட்டு, அதில் திருப்தியா இல்லை மாற்றம் ஏதும்  வேண்டுமா என்று கூறி செல்வார்கள். சுப்பிரமணியனும் மாலை ஒரு முறை வந்து பார்த்து செல்வார். 

நாகரத்னா ஒருவர் மட்டுமே, கண்ணனிடம் பேச்சுக்கொடுப்பார். மெஷினில் வேலை இல்லாத சமயங்களில் அங்கே வாசலில் நின்று இவருடன் பேச்சு கொடுப்பார். அங்கே இருந்து ஷெட்டின் உள்புறம் தெரியும். அதனால் ரத்னாவுடன் வா போ என்று பேசுமளவிற்கு நெருக்கமாகி இருந்தார் கண்ணன்.

“இன்னிக்கு ஸ்பெஷல் காஃபி, இருங்க வரேன்” என்று டபரா செட்டோடு கொண்டு வந்து இருந்த காஃபியை ஒரு முறை வேகமாக ஆற்றினார். நுரை பொங்க டம்பளரில் ஜம்மென்று நின்றது காஃபி. பின் கையில் வைத்திருந்த காஃபி  பொடியை மெல்ல அதில் லாவகமாக தூவினார்.

“என்ன செய்கிறாள்?” என்று கண்ணனும் ஆவலாக பார்த்து நின்றார்.

“இந்தாங்க” என்று காஃபி டம்பளரை நீட்டினார்.

வழக்கம் போல, பழக்க தோஷத்துல கண்களை மூடி ஆழமாக சுவாசித்தார்.

“அய்யயோ, இன்னிக்கு ஒரு நாள் வாசனை பிடிக்காம காஃபியை பாருங்க” என்றார் ரத்னா படபடவென்று.

பின்னே, இவர் கண்ணை திறந்து பார்க்கிறதுக்குள்ள, அவருக்காக  வரைந்திருந்த இதயம் கரைந்துவிடுமோ என்று ரத்னாவின் இதயம் படபடத்தது. ஒருவாரமாக ப்ராக்டிஸ் செய்து இன்று தன் காதலை சொல்வதற்காக காஃபி பொடியை வைத்து நுரையின் மீது அழகாக இதயம் ஒன்றை வரைந்திருந்தார்.

ஒருமுறை வெளியூர் சென்று வந்தபொழுது சுப்பிரமணியன், அங்கே ஒரு பெரிய கடைக்கு நண்பரோடு காஃபி அருந்த போனதாகவும், அங்கே காஃபியிலேயே  அழகாக படம் எல்லாம் வரைந்திருந்தாக கூறி இருந்தார். பார்க்க என்னமோ அசத்தலா தான் இருந்தது, ஆனா நம்ம வீட்டு காஃபி மாதிரி ருசிக்கலை, என்று அப்பா கூறியதை நினைவுக்கு வந்தது. அதை வைத்து தான் இந்த ஐடியா வந்தது ரத்னாவிற்கு.

கண்ணன் கண்ணை திறந்து காஃபியில் தெரிந்த இதயத்தை பார்த்து விழித்து நின்றார்.

‘என்ன இது?’ என்று ரத்னாவை கேள்வியாக பார்த்தார்.

கண்களில் அன்பு நிறைய, காதல் கசிய, அவரை பாத்தார் ரத்னா..

அந்த பார்வை ஒன்றே வார்த்தைகளுக்கு விடைகொடுத்து, கண்ணனின் கேள்விக்கு பதிலானது.

ரத்னா வரைந்திருந்த காஃபி  இதயம் அந்த காஃபிக்குள் முழுவதுமாக கரைந்து, கண்ணன் அதை பருக பருக, ரத்னாவின் இதயமும் கண்ணனின் இதயத்தோடு கலந்தது.

“எனக்கு உங்களை பிடிச்சிருக்கு..ஐ லவ் யூ..” என்றார் ரத்னா வெட்கத்தோடு. அதை சொல்லும்பொழுது, ரத்னாவின் கண்கள் மட்டும் கண்ணனின் கண்களை கவ்வியே நின்றது.

கண்ணனுக்கு பேச்சற்று போனது. முதன் முதலாக அவருக்கு கிடைக்கும் அன்பு.. அவருக்கே அவருக்காக ஒரு காதல்.. மறுக்க மனம் வரவில்லை. அவருக்கும் ரத்னாவை பார்த்த முதல் நாளில் இருந்து பிடித்திருந்தது.

“உங்க வீட்ல ஒத்துப்பாங்களா?” என்றார் கரகரப்பான குரலில்.

“கண்டிப்பா மாட்டாங்க.. ஆனா எனக்கு நீங்க மட்டும் தான் வேணும்.. நீங்க மட்டுமே போதும்..” நொடி கூட தாமதிக்காமல் கூறினார் ரத்னா.

“என்ன மாதிரியான நேசம் இது?” என்று ப்ரமிப்பாக இருந்தது கண்ணனுக்கு.

“என்ன ஒன்னுமே சொல்ல மாட்டேங்குறீங்க? உங்களுக்கும் என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியும். நீங்க உங்க வாயால சொன்னா சந்தோசமா இருக்கும்ல”

“எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு.. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு  ராணிம்மா..” என்றார் மிருதுவாக.

ரத்னாவிற்கு நெஞ்சமெல்லாம் சிலிர்த்தது. இருவரும் அந்த நொடியை அமைதியாக அனுபவித்து நின்றார்கள்.

 

“நாகு.. நாகு..”  என்று அம்மாவின் குரல் கேட்கவே, நான் வரேன் என்று ரத்னா  உள்ளே ஓடிவிட்டார்.

அதன் பிறகு ஆசையாக.. ஆர்வமாக.. அழகாக.. ஆழமாக.. யாருக்கும் தெரியாமல்  ரகசியமாக.. ரம்மியமாக..  வளர்ந்தது இவர்களது நேசம்.

திருமணத்திற்கு பத்து நாட்கள் இருக்கும் நிலையில் கண்ணனின் வேலை எல்லாம் முடிந்து விட்டது. அன்று சுந்தரேசனும் வந்திருந்தார். அவருடன் கண்ணனும் புறப்படுவதாக இருந்தது.

இந்த பிரிவை எப்படி தாங்கி கொள்வது, மீண்டும் எப்படி சந்திப்பது என்று இருவருமே தவித்து போனார்கள்.

கண்ணனின் வேலையில் அனைவருக்கும் மிகவும் திருப்தி. “ரொம்ப நல்ல ஆளா  அனுப்பி வச்சீங்க சுந்தரேசன். நாங்க நினைச்ச மாதிரியே சிறப்பா  சீக்கிரமா எல்லாமே செஞ்சு கொடுத்துட்டாப்புல தம்பி..” என்று மனதார பாராட்டி அவர்களுக்கான கூலியை கேட்டதை விட அதிகமாகவே போட்டு கொடுத்தார் சுப்பிரமணியன்.

“கண்டிப்பா கல்யாணத்துக்கு நீங்க உங்க வீட்டம்மாவோட வரணும்”, என்று தாம்பூலத்தில் பத்திரிக்கை வைத்து சுந்தரேசனை கல்யாணத்திற்கு அழைத்தனர் சுப்பிரமணியனும் தெய்வானையும்.

தனியே ஒரு பத்திரிகை கண்ணனுக்கும் கொடுத்தனர். “எங்க வீட்ல ஒரு ஆள்  மாதிரி பழகிட்ட தம்பி, கண்டிப்பா நீயும் வரணும்” என்று கூறினார் தெய்வானை.

திருமணத்திற்கு வரும்பொழுது பார்க்கலாம் என்று கண்ணன் ரத்னா  இருவருக்கும் ஆசுவாசம் ஆனது.

மகிழ்ச்சியாகவே விடை பெற்று சென்றார் கண்ணன்.

ஆனால் இந்த சிறு பிரிவையே ரத்னாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இளம்வயது, வீட்டில் யாரிடமும் கிட்டாத எதிர்பார்ப்பு இல்லாத அன்பு, எல்லாம் சேர்ந்து ரத்னாவை பித்தாக்கியது.

நீங்க திரும்ப போகும் போது என்னையும் கூட்டிட்டு தான் போகணும் என்று கண்ணனுக்கு கடிதம் எழுதினார்.

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன், ரத்னாவின் அண்ணிக்கு பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு அவரால் வர முடியாது என்று அவசரமாக குடும்பம் முழுவதும் சென்று குழந்தையை பார்த்து வந்தார்கள்.

அண்ணியிடம் யோசனை கேட்கலாம் என்று ரத்னா யோசித்திருக்க, அதற்கான சந்தர்ப்பமே அமையவில்லை.

திருமணத்திற்கு சுந்தரேசன் காமாட்சி அம்மாவுடன் கண்ணனும் வந்திருந்தார்.

எப்பொழுதுமே தன்னை அலங்காரம் செய்ய சிரத்தை எடுத்து கொள்ள மாட்டார் ரத்னா. இம்முறை கண்ணனை காணும் ஆவலில் மெனக்கெட்டு அலங்காரம் செய்திருந்தார்.

திருமணத்தில் பலர் தெய்வானை அம்மாவிடம் வந்து உங்க சின்ன பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்குறீங்களா? பார்க்க மகாலட்சுமி மாதிரி இருக்கா, என்று நாகரத்னாவை கேட்க, அதன் பிறகே மகளை கவனித்தார் அவர்.

இரண்டாவது பெண் அடுத்து காத்து கொண்டிருக்க, அவர் நாகரத்னாவை பற்றி யோசித்திருக்கவே இல்லை. அவர் அவளை சிறு குழந்தையாகவே இன்னும் நினைத்திருக்க, பாவடை தாவணியில் திருமணதிற்கு நானும் தயார் என்பது போல காட்சி அளித்தாள்.

திக்கென்றானது பெற்றவருக்கு. ஒரு மகளின் திருமணத்தை முடிப்பதற்குள்ளாகவே தளர்ந்து போய்விட்டார்கள். அடுத்து இன்னும் இரண்டு பெண்களை கரை சேர்க்க வேண்டுமே என்று மலைப்பாக இருந்தது.

திருமணம் முடிந்ததும், யாருக்கும் தெரியாமல் ரத்னாவும் கண்ணனும் சந்தித்து பேசினார்கள்.

“உங்க அப்பா கிட்ட பேசி பார்க்கவா ராணிம்மா?”

“அப்பாக்கிட்டவா? என்னன்னு கேட்பீங்க.. இன்னும் சின்ன அக்கா வேற இருக்காங்க இல்ல?”

“கொஞ்ச நாள் வெயிட் பண்ணுவோம் ராணிம்மா. அது வரைக்கும் லெட்டர் மூலம் பேசிக்கலாம். நான் இந்த பக்கம் வேலையா எப்படியும் வருவேன். அப்ப கண்டிப்பா வந்து உன்னை பார்க்குறேன் ராணிம்மா.சரியா?”

“சரி, கஷ்டமா தான் இருக்கு, இருந்தாலும் அக்கா கல்யாணத்துக்கு முன்ன நான் உங்க கூட வந்துட்டு அப்புறம் அவ கல்யாணத்துல பிரச்சனை வரும்ல..”

“என் ராணிம்மா இப்படி தான் யோசிப்பேன்னு எனக்கு தெரியும்.. நம்ம காதல்னால யாரும் கஷ்டப்பட வேண்டாம். கொஞ்ச நாள் நாம் காத்திருக்கலாம்.”

ரத்னா சரியென்று தலையை ஆட்டிக்கொண்டார்.

“யாரும் வர்றதுக்குள்ள கிளம்பு ராணிம்மா..”

“கண்ணத்தான்..” என்று கண்ணனின் கைகளை பற்றிக்கொண்டு, 

“சீக்கிரமா என்னை பார்க்க வர பாருங்க.. உங்களை பார்க்காம என்னால இருக்க முடியாது” என்றார் விசம்பலுடன்.

“சரி ராணிம்மா.. “

“கண்ணத்தான்..” 

ரத்னாவின் அழைப்பே கண்ணனை உருக்கியது. 

யாரோ வரும் அரவம் கேட்கவே இருவரும் விலகி சென்றுவிட்டனர்.

திருமணம் முடிந்து மூன்றாம் மாதம் ரத்னாவின் அண்ணி குழந்தையை தூக்கிக்கொண்டு இவர்கள் வீட்டிற்கு வந்து விட்டார்.

அண்ணியிடம் கூட ரத்னா தன் காதலை பற்றி கூறமால் ரகசியமாகவே வைத்து கொண்டார். ரகசியம் வெளியே வந்தால் முதலுக்கே மோசம் ஆகிவிடும் என்று அவருக்கு தெரியும்.

சின்ன அக்காவின் திருமணத்திற்காக ரத்னாவும் வேண்டிக்கொண்டிருந்தார். அம்மாவின் சொந்தக்காரர் மூலம் ஒரு நல்ல வரன் வந்தது.

ஜாதகமும் பொருந்தி இருந்தது. மாப்பிள்ளையின் போட்டோவை பார்த்துமே அக்காவிற்கு மிகவும் பிடித்துவிட்டது.

மாப்பிள்ளையின் விவரம் கேட்ட அனைவருக்குமே இஷ்டம் தான்.

அந்த வாரமே பெண் பார்க்க வருவதாக தகவல் கொடுத்து விட்டனர் மாப்பிள்ளை வீட்டினர்.

எல்லாரையும் விட ரத்னாவிற்கு தான் அளவு கடந்த மகிழ்ச்சி. மிகவும் உற்சாகமாக காணப்பட்டார்.

“ஏன்டா கதிரு, எப்பவுலே இருந்து டா நாகுக்கு சின்ன அக்கா மேலே இம்புட்டு பாசம் வந்துச்சு? அவளுக்கு கல்யாணம்னு இவ முகத்துல பல்ப் எரியுது?” என்றார் அண்ணி பக்கத்தில் இருந்த கொழுந்தனிடம்.

“நீங்க வேற அண்ணி, அக்கா முகத்துல எரியுற பல்ப்பை நமக்கு கொடுக்காம இருந்தா சரி”

“அவளை  நான்  ஒரு புள்ளபூச்சின்னு இல்ல நினைச்சிட்டு இருக்கேன்? அப்படி இல்லைங்கிறீயா?”

“அண்ணி, என் வாய கிளறாதீங்க.. நான் ஒன்னும் சொல்லமாட்டேன்” என்று எழுந்து ஓடிவிட்டான்.

இவர்கள் பேசுவதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் ரத்னா இல்லை. அக்காக்கு சீக்கிரமா கல்யாணம் முடியனும், அப்ப தான் நான் கண்ணத்தான் கூட சீக்கிரம் சேர முடியும் என்று யோசித்து கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!