Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 2

 

மதியம் நெருங்கியது. அஞ்சலியின் முகம் இறுகிக்கொண்டே போனது. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது போன்றொரு நிலையில் அவள் எங்கோ நோக்கியபடி, நின்றுகொண்டிருந்தாள். எதுவும் கூறாமல், அர்ஜுனும், மதனும் வண்டியில் அமர்ந்திருந்தனர். அர்ஜுன் புகைத்து முடித்த சிகரெட்டை வெளியே எறிந்தான். அவ்விடத்தில் அவன் ஏற்கனவே புகைத்து போட்டிருந்த ஐந்தாறு துண்டுகள் கிடந்தன. 

 



Advertisement

அவன் கண்மூடி தலைசாய்த்து அமர்ந்திருந்தான்.

“இந்தாங்க உங்க பணம், நீங்க கிளம்புங்க” என்றபடி அர்ஜுனின் அருகே வந்து நின்றாள், அஞ்சலி.

அர்ஜுன் மதனை பார்க்க, அவன் சிரித்தபடி ‘சரி’ என்று தலையாட்ட, பணத்தை வாங்கி மதனின் கையில் கொடுத்தான், அர்ஜுன்.

Advertisement

“கிளம்புங்க” என்றாள், மீண்டும்.

Advertisement

“நீ?” 

அவள் கூராய் நோக்க,

“இந்த இடம் கொஞ்சம் சரியில்ல. தனியா நீ?” என்றான், அர்ஜுன் கேள்விக்குறியாய்.

Advertisement

“நான் பார்த்துக்கறேன், உங்க வேலை முடிஞ்சுது. கிளம்புங்க” என்றாள், ஆணித்தரமாக.

 

வேண்டாவெறுப்பாக வண்டியை திருப்பிக்கொண்டு கிளம்பிய அர்ஜுன், பின்புறம் நோக்கும் கண்ணாடி வழியே அவளை பார்த்துக்கொண்டு மெதுவாக வண்டியை செலுத்தினான். அவள் எங்கோ பார்த்தபடி நின்றிருந்தாள். வண்டியை நிறுத்தியவன்,

“மதனா, அந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியல. இந்த மாதிரி இடத்துல தனியா விட்டுட்டு போக மனசு வரல. ஏதாவது ஆயிடுச்சுனா? அந்த பொண்ணே ஏதாவது பண்ணிக்கிட்டா?” என்றான் குழப்பமாக.

“அஜூ… வண்டியை திருப்பு. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்” என்றான், மதன்.

 

அவள் அருகே மீண்டும் வண்டி சென்று நின்றது.

“என்ன வேணும்? அதான் பேசுன பணம் கிடைச்சிடுச்சே?”

எரிச்சலோடு கூறினாள், அஞ்சலி.

“அப்படியெல்லாம் விட்டுட்டு போக முடியாது…” என்றான் அர்ஜுன் திட்டவட்டமாக.

“உங்களுக்கு என்ன பிரச்சனை?”
“கிளம்பலாம்னு எங்களுக்கு வாட்சப் வரல” என்றான் மதன்.

எரிச்சலோடு தனது கைபேசியை எடுத்தவள், ஏதோ செய்தி அனுப்பிவிட்டு, 

“மெசேஜ் வந்தாச்சு கிளம்புங்க” என்றாள்.

மதன் தனது கையிலிருந்த கைபேசியை எடுத்து பார்க்க, ‘முடிந்தது’ என்று வந்திருந்தது.

அர்ஜுனும், மதனும் அதிர்ந்துபோயினர்.

“இந்தாம்மா, நீதான் வாட்சப்ல எங்களுக்கு தண்ணி காட்டுனதா?” என்று பொங்கினான், மதன்.

“இப்போ அதுக்கு என்ன?”

“சரியான தில்லாலங்கடியா இருப்ப போல?”

“இப்போ அதுக்கு என்ன?”

“ஒண்ணுமில்ல தாயி… இவன் தான் பாவம் அந்த பொண்ண தனியா எப்படி விட்டுட்டு போறதுன்னு வருத்தப்பட்டான்…” என்றவன்,

“டேய் அஜூ, தனக்குத்தானே ஸ்கெட்ச் போட்டிருக்கு அந்த பொண்ணு. நாம அவளை தூக்கல. நம்மள தான் அவ தூக்கியிருக்கா…” என்றான் அழாத குறையாக.

“இப்பத்தான் தொழில் ஆரம்பிச்சோம், முத கிராக்கியே சரியான சாவுகிராக்கி” என்று மதன் முனக, அஞ்சலி பற்களைக் கடித்துக்கொண்டு, புருவத்தை வளைத்து அவனை முறைக்க, “இல்லயில்ல சரியான ‘டாவு’ கிராக்கி… வெரி பியூடிஃபுல் மேடம்” என்றான் பயத்தில்.

அவன் உளறுவதை கண்டு அர்ஜுன் மெலிதாக சிரித்துக்கொள்ள, 

“தயவு செஞ்சு கிளம்புங்க, டென்ஷன்ல துப்பாக்கி எடுத்து சுட்டுட போறேன்” என்றாள் அவனிடம்.

 

அவளின் எதிரே சென்று நின்ற அர்ஜுன், “போக முடியாது” என்றான். மேலும்,

“உனக்கு எங்க போகணும்னு சொல்லு, நான் கொண்டுபோய் விட்டுடறேன்” என்றான்.  

“உனக்கென்ன?”

“அறைஞ்சுடுவேன்” என்றான், கோபத்தின் உச்சியில்.

“டேய் அஜூ அவ சுட்டுட போறாடா” என்று அவனை இழுத்தான், மதன்.

பெருமூச்செடுத்தவன், “பார்த்தா பெரிய வீட்டு பொண்ணு மாதிரி இருக்க. கல்யாண கோலத்துல இருக்க. ஏற்கனவே இப்படி ஒரு தப்பான விஷயத்துல இறங்கிட்டோமேன்னு மனசு நெருடுது. இதுல உன்னை எப்படி தனியா விட்டுட்டு போறது? ரொம்ப நேரமா கால் கடுக்க நிக்கற. யாருக்காக நிக்கறன்னு தெரியல. ஏதாவது லவ்வர்ஸ் பிரச்சனையா? பார்த்துக்கலாம். நீ எங்க போகணும்னு சொல்லு” என்றான், சற்று பரிவாக.

அவனது கண்களை ஆழ்ந்து நோக்கியவள், “உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ” என்றாள்.

அவன் மதனைப் பார்க்க, “எனக்கு வாந்தி பேதி மயக்கம் எல்லாம் வர்ற மாதிரி இருக்குடா” என்று வயிற்றைப் பற்றிக்கொண்டு தரையில் அமர்ந்தான், மதன்.

“முடியாதுன்னா, விட்டுட்டு கிளம்பு” என்றாள்.

சிறிதும் யோசிக்காமல், “கிளம்பு” என்றான், அர்ஜுன்.

 

நெஞ்சை பிடித்துக்கொண்டு மதன் தரையில் சரிய, வண்டியில் ஏறி அமர்ந்தான் அர்ஜுன். 

“வா போலாம்” என்றான், அவளை நோக்கி.

அவள் சந்தேகமாய் நோக்க, “சத்தியமா என் வீட்டுக்கு தான் போறோம்” என்றான். அவள் வேறுவழியின்றி வண்டியில் வந்தமர, “டேய் மதனா வந்து தொலைடா” என்க, அவன் ஓடி வந்து முன் இருக்கையில் அமர்ந்துகொண்டான்.

 

மீண்டும் வண்டி கிளம்பியது. போகும் வழியில் ஒரு ரோட்டுக்கடையில் நிறுத்தி அவ்விருவரும் சாப்பிட, அவள் எதுவும் வேண்டாமென்று மறுத்துவிட்டாள். நகரத்தை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்தவள், அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

உண்டு முடித்து வந்த இருவரும், காரில் ஏறி அமர,

“இப்பக்கூட ஒன்னும் கெட்டு போயிடல, நீங்க கிளம்புங்க. நான் என் வழிய பார்த்து போயிக்கறேன்” என்றாள்.

“ஷப்பா… தெரிஞ்சோ தெரியாமலோ நீ என் வாழ்க்கைக்குள்ள வந்துட்ட. எப்படியோ போ’னு என்னால விடமுடியாது. புரியுதா?” என்று கோவமாய் திரும்பிய அர்ஜுன் வாயடைத்து அவளை பார்த்திருக்க, அவனைக் கண்டு திரும்பிப்பார்த்த மதனும் அதிர்ச்சியானான்.

“நீ பொம்பள புள்ள தான?” என்றான் மதன்.

அவள் முறைக்க, “இல்ல திடீர்னு பேன்ட்டு சட்டை போட்டிருக்க?” என்று பம்மினான்.

“எங்க போய் வாங்கின?”

“லூசா நீ, ஷாப்பிங் பண்ணவா வந்திருக்கோம்? எந்த கடைல வாங்கின’னு கேட்கற?”

“அதுக்கில்ல, உன்னோட இத்துனூண்டு ஹாண்ட்பாக்லயா இந்தத் துணிய வச்சிருந்த?”

“டேய், இப்போ இந்த கேள்வி ரொம்ப அவசியமா?” என்றான் அர்ஜுன் இடைமறித்து.

“ஆமா அஜூ. இந்த புள்ள டேஞ்சரஸ் பெல்லோனு தெரியும். ஆனா எவ்வளவு பெரிய டேஞ்சர்ன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?” 

இருவரும் அவளை நோக்க, 

“ப்ச், இந்த பேன்ட் ஷர்ட் மேல தான் புடவையை கட்டியிருந்தேன். போதுமா?” என்றாள்.

‘சரியான ஆளுதான்’ என்று மதன் கண்ணால் அர்ஜுனிடம் செய்கை காட்ட, அர்ஜுன் சிரித்துக்கொண்டான்.

   

முன் மாலையில்  மூவரும் அர்ஜுனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். குறுகிய அத்தெரு, குடிசைகளும், சில கட்டிடங்களும் நிறைந்திருந்தது. சற்று ஏழ்மையின் பிடியில் அவ்விடம் இருந்தாலும், அஞ்சலிக்கு சற்று புதிதாக இருந்தது. இவர்களின் வண்டியைக் கண்டதும் சில பார்வைகளும், சில குழந்தைகளும் சூழ்ந்துகொள்ள, தயங்கியபடி கீழே இறங்கினான், அர்ஜுன்.

“என்ன புது வண்டி வாங்கியிருக்க போல?” என்றாள் இடுப்பில் குடத்தோடு ஒருவள்.

‘ஆம்’ என்று தலையாட்டினான். 

ஒருவள் வண்டியின் அருகே வந்து, அதனைத் தொட்டுப்பார்க்க, உள்ளே இருந்த அஞ்சலி அவளது கண்ணில் பட்டாள். 

“யாரு இது?” என்றாள், குறும்பாக.

வண்டியிலிருந்து அஞ்சலி கீழே இறங்க, “அது…” என்று அர்ஜுன் தயங்க, 

“மலை உச்சியிலிருந்து குதிச்சு சாகப் போச்சு. நாங்க தான் காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்துட்டோம்” என்றான் மதன், திருதிருவென முழித்தபடி. அஞ்சலி அவனைக் கண்டு முறைக்க, அவன் அர்ஜுனின் பின்னே சென்று நின்றுகொண்டான்.

“நல்ல பணக்கார வீட்டு பொண்ணாட்டம் இருக்க, எதுக்கு உனக்கு இந்த வேலை?” என்றவள், “யாரு என்னான்னு பார்த்து கொண்டுபோய் விட்டுடு புரியுதா, தேவையில்லாத ஏழரைய இழுத்து விட்டுக்காத…” என்று அர்ஜுனிடம் கூறிவிட்டுச் சென்றாள்.

“பாட்டுக்கார அண்ணா, ஒரு ரவுண்ட் போலாமா?” என்று குழந்தைகள் சூழ,

“அடச்சீ போங்க அந்தாண்ட” என்று அக்குழந்தைகளை விரட்டிவிட்டு அர்ஜுனை கையைப்பிடித்து சற்று தனியே அழைத்துச் சென்றான், நடுத்தர வயது மிக்க ஒருவன்.

“டேய் யாரு டா இது? வேலைய முடிச்சிட்டியா?”

“அந்த வேலையே இதுதான்”

“ஏன்டா இத கூட்டிக்கிட்டு வந்த?”

“தனியா நின்னுச்சு எப்படி விட்டுட்டு வரது?”

“கேஸ் ஆகிட போகுதுடா”

“பாத்துக்கலாம்ணா” என்றவன், தனது பாக்கெட்டிலிருந்து ஒரு தொகையை எடுத்து, “உங்க கமிஷன்” என்று நீட்டினான்.

அதை வாங்கிக்கொண்டவன், கண்ணால் அஞ்சலியை ஜாடை காட்டியபடி,

“இத சீக்கிரம் க்ளியர் பண்ணிட்டு வா, வேற வேலை ஒன்னு இருக்கு” என்றான்.

“வேண்டாம்ணா, இந்த வேலைய ஏன் எடுத்தோம்னு ஆயிடுச்சு. நானே கையை ஊனி காலை ஊனி பொழைச்சுக்கறேன்” என்றான் அர்ஜுன் திட்டவட்டமாக.

“என்னவோ போ, தேவைப்பட்டா வா” என்றுவிட்டு அவன் செல்ல, இவன் தனது வீட்டினுள் நுழைந்தான். 

வாயிலில் கச்சிதமாய் திண்ணை, அதன் மேல் கூரை, உள்ளே நுழைந்ததும் சிறிய வரவேற்பறை, அதன் பிறகு சிறிய அடுக்களை, அடுக்களை ஒட்டிய மிகச் சிறிய அறை என்று மிகவும் கனக்கச்சிதமாய் இருந்தது, அவனது வீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!