Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

25. Kala Palaniappan - காஃபி வித் காதல்

காஃபி வித் காதல் 21

அத்தியாயம் 21

அந்த வாரம் கவிநிலாவின் முதல் பிறந்த நாள் விழாவிற்கு அனைவரையும் அழைத்திருந்தனர் கவியரசி கவின் ஜோடி.



Advertisement

“பாப்பாக்கு என்ன கிப்ட் வாங்கலாம்?” என்று விஜயன் எழிலரசியிடம் கேட்டு கொண்டிருந்தார்.

முதல் பிறந்தநாள் என்பதால் தங்கத்தில் சின்ன செயின் மோதிரம் வளையல் என்று எல்லாம் ரேவதி வேலை செய்யும் கடையில் ஏற்கனவே வாங்கி வைத்துவிட்டார்.

Advertisement

Advertisement

“அது தான் மாமா நேத்தே சித்தி கடைக்கு போய் எல்லாம் வாங்கிட்டு வந்தீங்களே?” என்றான் குகன்.

“நகை எல்லாம் இப்ப பாப்பாக்கு புரியாது இல்ல குகன்.. அதான்.

Advertisement

நீ சொல்லு எழிலு பாப்பாக்கு இப்ப பிடிக்கிற மாதிரி என்ன வாங்கலாம்?”

“நம்ம சின்ன பசங்களுக்காக இருக்கிற கடைக்கு போய் பார்க்கலாம் மாமா. அங்க போய் பார்த்தே செலக்ட் பண்ணிப்போம்” என்றாள் எழில்.

“நாங்களும் கூட வர்றோம்” என்றனர் குகன், பாலு, தமிழ் மூவரும்.

“அது எல்லாம் வேண்டாம்.. எதுக்கு இப்ப வெய்யில மச்சானை கூட்டிட்டு அலையறீங்க எல்லாரும்” என்றார் சண்முகம்.

“அதானே, மச்சானுக்கே ஞாற்றுக்கிழமை அரை நாள் தானே லீவ். அவர் வீட்ல ரெஸ்ட் எடுக்கட்டும். நாங்க போய் வாங்கிட்டு வர்றோம், நீங்க என்ன வேணும்னு சொல்லுங்க மச்சான்?” என்றார் சிங்காரம்.

ஞாயிற்று கிழமை என்பதால் அனைவரும் ஒன்றாக தான் அன்று மதிய உணவை முடித்துவிட்டு, பேசிக்கொண்டிருந்தனர்.

இரண்டு வாரம் முன்பாக ஒரு நாள் விஜயன் வயிற்று வலி என்று கூறி ஒரு நாள் வேலைக்கு செல்லவில்லை.

அதில் இருந்து மச்சானை நாங்க நல்லா கவனிக்கலைபோல என்று பாசமலர் அண்ணன்கள் மூவரும் குற்றவுணர்ச்சியில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சூட்டு வலிதான் என்று டாக்டர் கூறி இருக்க, அன்றே சாந்தி வைத்து கொடுத்த வெந்தயக்கஞ்சியில் அவருக்கு சரி ஆகிவிட்டது.

ஆனால் அன்றில் இருந்து தினம்தினம் ஒவ்வொரு டிசைனாக விஜயனை படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வாரத்துக்கு ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்காததால தான் சூடு பிடிச்சிக்குது, என்று கூறி, காட்டாயப்படுத்தி அவருக்கு சனிக்கிழமைகளில் காலையிலே எண்ணெய் தேய்த்து விட்டுடுவார் சரவணன்.

இளநீர், நொங்கு,மாதுளை ஜூஸ், முளைகட்டிய பயர் வகைகள் என்று அவருக்கு கொடுத்து கொண்டே இருந்தனர். வீட்டில் கொடுப்பது மட்டுமில்லாமல் யாராவது ஒருவர் அடிக்கடி பெட்ரோல் பங்க் சென்று அங்கு வேறு கொடுத்துவிட்டு வருவார்கள்.

இவர்கள் அளவில்லா அன்பில் குளிர்ச்சி அதிகமாகி, அவருக்கு சளி பிடித்து, பின் அதற்கு அவருக்கு கஷாயம் கொடுப்பது அவரை ஆவி பிடிக்க வைப்பது என்று இரண்டு நாட்கள் சென்றது.

விஜயனை அவர் வீட்டில் சமையலே செய்ய விடுவதில்லை. முன்பே அதிகம் எல்லாம் சமைக்க மாட்டார். பெரும்பாலான சமயங்கள் சாந்தியும் மீனாவும் உணவை கொடுத்துவிடுவார்கள்.

சில நேரம் மட்டுமே அவராக எளிமையாக ஏதாவது சமைத்து கொள்வார்.

‘ஒரே ஒரு நாள் வயிறு வலின்னு சொன்னது தப்பா போச்சே’ என்று மனிதர் நொந்து போய் அமர்ந்திருந்தார்.

“மாமா, எனக்கு பொண்ணு பார்க்கும் போது உங்களை மாதிரி பாசக்கார மச்சான்ஸ் இருக்கிற வீடா பார்க்கணும்” என்றான் பாலமுருகன்.

இப்பொழுது தான் பாலமுருகனுக்கு கல்யாணம் பேச ஆரம்பிக்கலாம் என்று குடும்பமாக முடிவு செய்திருந்தார்கள்.

“பட்டா தான்டா உங்களுக்கு புரியும்” என்றார் விஜயன் சிரித்துக்கொண்டே.

“இப்ப என்ன நீங்க எல்லாரும் ரொம்ப யங்.. மாமா தான் கிழவன்னு சொல்றீங்களா?” என்றாள் எழில் அப்பாக்களிடம்.

“நாங்க எப்ப அப்படி சொன்னோம். அவருக்கு உடம்பு சரியில்லாம போச்சா இல்லையா?”

“ஏன் பெரியம்மா, முந்தாநேத்து, பெரியப்பாவுக்கு ராத்திரி கேஸ்ட்ரிக் வந்து பெருங்காயம் போட்டு தண்ணீ கொடுத்ததா சொன்னீங்க தானே?” என்றாள் பெரியப்பா கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல், தன் பெரியம்மாவிடம்.

“ஆமா எழிலு, வாழைக்காய் பஜ்ஜியை ஹோட்டல்ல புது மாஸ்டர் சூப்பரா போடறார்னு நல்லா அஞ்சு ஆறு பஜ்ஜியை சாப்பிட்டுட்டு, ராத்திரி வந்து இங்க குத்துது அங்கே குத்துதுன்னு ஓரே குடைச்சல்..” என்றார் சாந்தி நொடிப்பாக.

“மனுசனுக்கு கேஸ்ட்ரிக் வர்றது எல்லாம் ஒரு விஷயமா?” என்றார் அவர் உள்ளே போன குரலில்.

“அப்புறம் மீனா பெரியம்மா.. பெரியப்பாக்கு இப்ப எல்லாம் அடிக்கடி நெஞ்செரிச்சல் வருதுன்னு சொல்லிட்டு இருந்தீங்களே?” என்று அடுத்ததாக மீனாவிடம் கேட்டாள்.

“ஆமா எழிலு, வீட்ல எல்லாம் சட்டமா ஸ்ட்ரிக்ட் ஆபிசர் கணக்கா, சக்கரை போடாத.. உப்ப குறை.. அளவு சாப்பாடுன்னு அதிகாரம் செஞ்சுட்டு அங்கே ஹோட்டல்ல போய் டான்னு மணிக்கு ஒரு காப்பின்னு குடிச்சா? நெஞ்செரிச்சல் வராம” என்று முகத்தை திருப்பிக்கொண்டார்.

சண்முகமும் சிங்காரமும் பாவமாக அமர்ந்திருந்தனர்.

“எப்படி சித்தி, அப்படியே உங்களை மாதிரி பொண்ணை பெத்து வச்சிருக்கீங்க.. பாயிண்ட் பாயிண்டா பேசறாளே?” என்றான் குகன் ரேவதியிடம் ரகசியமாக.

“அடுத்த விக்கெட் யாரு சித்தப்பாவா?” என்றான் பாலு.

“அப்புறம் அம்மா..” என்று தான் எழில் ஆரம்பித்தாள்.

“மச்சான், நீங்க பிள்ளைகளோடு போய்ட்டு வாங்க.. நீங்களும் வீட்லயே எவ்வளவு நேரம் இருப்பீங்க” என்று வேகமாக கூறினார் சரவணன்.

“இப்ப புரியுது மாமா, நீங்க ஏன் அக்காவை ஐடியா கேட்டீங்கன்னு..” என்று சிரித்தாள் தமிழ்.

இவர்கள் எல்லாரும் சேர்ந்து பீச்சிற்கு சென்று பின் அங்கே இருந்து கடைக்கு செல்லலாம் என்று திட்டமிட்டு புறப்பட்டனர். செல்லும்போது அப்படியே விக்கியையும் சேர்த்துகொண்டார்கள்.

விஜயனுக்கு அனுராதாவின் இழப்பு பெரியது தான் என்றாலும், நல்லதோர் குடும்பம் பல்கலை கழகம் என்பதாய் அனுராதாவின் குடும்பம் அவரை தாங்க, அவரது வாழ்க்கை மனைவியின் நினைவுகளோடும் அவள் கொடுத்த உறவுகளோடும் சுகமாகவே செல்கிறது.

————-

கடை திறப்பு விழாவிற்கு பிறகு, கார்த்தி ஒரு வாரம் வீட்டில் தான் இருந்தான்.

அந்த ஒரு வாரமும் எழில் தினமும் காலையில் கோவிலுக்கு சென்றாள். எழில் கோவிலுக்கு செல்லும்பொழுது அங்கே கார்த்தியும் வந்தான்.

கார்த்தியை பார்ப்பதற்காக எழில் வந்தாளா? எழில் வருவாள் என்று தெரிந்து சரியாக அதே நேரம் கார்த்தியும் வந்தானா இல்லை இருவருமே முருகனிடம் ஏற்பட்ட பக்தியால் வந்தார்களா என்பது அந்த முருகனுக்கே வெளிச்சம்.

இருவரும் அடிக்கடி கோவிலுக்கு வரும் ஆசாமிகள் என்பதால் வேறு யாருக்கும் இதில் தவறாக எதுவும் படவில்லை.

ஆனால் இரண்டு ஆசாமிகளும் சரியான ஆசை சாமிகளாக மாறி இருந்தது முருகனுக்கு மட்டுமே தெரியும்!!!

கார்த்தியின் மௌன பார்வை எழிலை வட்டமிட்டு கொண்டே இருந்தது.

“என்ன இந்த படிப்ஸ் இப்படி வச்ச கண் எடுக்காம பார்க்குறானே? எனக்கே வெட்கம் வர வச்சிடுவான் போலவே” என்று எழில் மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு நேசம் துளிர் விட ஆரம்பித்தது. இருவருக்குமே அது புரிந்தும் இருந்தது.

இன்னும் ஒரு வாரத்தில் கார்த்தி மறுபடியும் ஊருக்கு புறப்பட வேண்டும். செல்வதற்கு முன் எழிலிடம் தன் விருப்பத்தை கூற முடியுமா என்று கார்த்தி யோசித்து கொண்டே சுற்றி சுற்றி வந்தான்.

‘இந்த படிப்ஸ் பிடிச்சிருக்குன்னு சொல்லுவானா? சொன்னா உடனே சரின்னு ஒத்துக்கலாமா? இல்லை கொஞ்ச நேரம் சுத்தல்ல விடுவோமா?

அய்யயோ மண்டை காயுதே.. நான் என்ன அவனை சுத்தல்ல விடறது.. அவன் இல்ல என்னை சுத்தல்ல விடறான்.

இந்த ரத்னா ஆன்ட்டி லவ் ஸ்டோரிலே அவங்க கண்ணத்தான் மாதிரி தான் இந்த படிப்ஸும் போலயே.. அவனா வந்து சொல்ல மாட்டான்னு நினைக்கிறேன். நான் தான் சொல்லனுமோ?

அந்த காலத்துலயே ரத்னா ஆன்ட்டி அவ்வளவு ரோமாண்டிக்கா சொல்லி அசத்தி இருக்காங்க.. நான் வேற லெவல்ல சொல்ல வேணாமா?.

ஒரு ஐடியாவும் வர மாட்டேங்குதே.. யார் கிட்ட ஐடியா கேட்கலாம்?’

அந்த ஒருவாரமும், இரவு மல்லாக்க படுத்து தனக்கு தானே புலம்பி கொண்டிருந்தாள் எழில்.

கார்த்தி ஊருக்கு செல்லும் நாளும் வந்துவிட்டது.

ரேவதி அன்று, “எழிலு, இன்னிக்கு கார்த்தி ஊருக்கு போறதா ரத்னா சொன்னாங்க.. என்னை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறியா? நீ பிரீயா?”

என்று கேட்டார்.

“அவன் ஊருக்கு போறதுக்கு நீ எதுக்கு மா அங்க போகணும்” என்று கேட்டுக்கொண்டே அசையாமல் மிக்ஸ்ரை சாப்பிட்டு கொண்டு டிவி பார்த்து கொண்டிருந்தாள்.

“அது, சாந்தி அக்கா கஞ்சி மாவு அரைச்சாங்க இல்ல, கார்த்திக்கும் கொஞ்சம் எடுத்து வச்சிருந்தாங்க. பாலு தான் போறேன்னு சொன்னான். நான் தான் அப்படியே அவங்க வீட்டுக்கு போயிட்டு ரத்னாவையும் பார்த்து கொஞ்ச நேரம் பேசியிருந்துட்டு கொடுத்திட்டு வரலாம்னு நினனைச்சேன்.”

“நான் ப்ரீயா தான் இருக்கேன் ம்மா.நான் வரேன்” என்று ஆஜர் ஆனால் தமிழ்.

“அய்யயோ.. நமக்கு கிடைச்ச சான்ஸ் போயிடும் போலவே..” என்று அலர்ட்டாகி

“அது எல்லாம் ஒன்னும் வேணாம், நீ படிக்கணும் இல்ல, அடுத்த வாரம் உனக்கு எக்ஸாம், நானே போறேன்” என்று அவசரமாக எழுந்தாள் எழில்.

அவளின் அவசரத்தை பார்த்து,’சரியில்லையே’ என்று பார்வை பார்த்து வைத்தாள் தங்கை.

அதுவுமில்லாமல் அப்பொழுது எழிலுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. யார் கூப்பிட்டாலும் அதை விட்டு எழுந்திருக்கவே மாட்டாள்.

தங்கையை எல்லாம் கவனிக்காமல், ரேவதியை அழைத்துக்கொண்டு ரத்னா வீட்டிற்கு மகிழ்ச்சியாகவே கிளம்பினாள்.

அன்று இரவு ட்ரெயினுக்கு தான் கார்த்தி புறப்படுவதாக இருத்தது.

ரேவதி உடன் சென்றதால் ரேவதியே கலகலவென பேசிக்கொண்டிருந்தார்.

கார்த்தியும் எழிலுழும் மௌனமாகே பார்வைகளை பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.

விழி பேசும் பாஷைகள் புரிகிறதே..

வரமாய் வாழ்க்கை மாறியதே!

வார்த்தைகளால் காதலை பரிமாறிக்கொள்ளாமலே கார்த்தி கிளம்பி சென்றாலும், அவன் விழிகள் சொன்ன செய்தியால், சொக்கி போய் தான் சுற்றிக்கொண்டிருக்கிறாள் எழில்.

தினமும் கைபேசியில் செய்திகள் பரிமாறிக்கொண்டாலும் இருவருக்குள்ளும் யார் முதலில் சொல்வது என்ற கண்ணாமூச்சி ஆட்டம் ஓடி கொண்டிருந்தது.

தமிழரசிக்கு மட்டுமே சந்தேகம் வந்து, அக்காவை நச்சு நச்சென நச்சி விஷயத்தை வாங்கி இருந்தாள்.

விஷயத்தை கேட்ட பிறகோ,

“என்ன எழில் வீட்ல தெரிஞ்சா என்னாகும்? எப்ப சொல்ல போற? எப்படி சொல்லுவ?” என்று படபடத்தாள்.

“இன்னும் நாங்களே காதலை சொல்லிக்கலை, அதுக்குள்ள எப்படி வீட்ல சொல்றது? நீ கேட்டு புடுங்கிட்டே இருந்த, அதனால உன்கிட்ட மட்டும் சொன்னேன்”

“அக்காடீ.. நீ என்கிட்டே சொல்லாமலே இருந்திருக்கலாம். எப்படி இதை ரகசியமா வச்சுப்பேன்” என்றாள் பாவமாக.

“நீ மட்டும் வீட்ல யார்கிட்டயாவது சொல்லி பாரு, எல்.கே.ஜி படிக்கும்போது நீ பக்கத்துக்கு வீட்டு சுரேஷ் நோட் புக்கை கிழிச்சது, போர்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறப்ப நீ தமிழ் மிஸ் ஹாண்ட் பேக்கை ஓட்டை போட்டு வச்சத்து, அப்புறம் சிக்த்ல நீ சோசியல்ல ஃபெயில் வாங்கிட்டு, அப்பாகிட்ட காட்டாம, அப்பா சைன்னை நீயே போட்டது.. அப்புறம்..”

“தெய்வமே!” என்று தமிழரசி கை எடுத்து ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டாள்.

“உனக்காக நான் இது மாதிரி எத்தனை ரகசியத்தை இன்னிக்கு வரைக்கும் கட்டி காப்பாத்திட்டு வர்றேன்.. அதை எல்லாம் நினைச்சுப்பாரு, அப்ப உன்னால இதை ரகசியமா வச்சுக்க முடியும்..” என்றாள் எழில் தோரணையாக.

காதலிக்கும் எழில்கூட டென்ஷன் இல்லாமல் கனவுகளும் கவிதைகளும் என சுகமாக சுற்றிக்கொண்டிருக்கிறாள், பாவம் தமிழ் தான் பதட்டமாகவே சுற்றிக்கொண்டிருக்கிறாள்.

 ————–

“நீ என்ன ருத் சொல்ற? எழில் அவளா ப்ரொபோஸ் பண்ணுவாளா? மாட்டாளா? எங்க அம்மா மாதிரி எழிலும் எனக்கு ப்ரொபோஸ் பண்ணனும்னு ஆசையா இருக்கு ருத்.. ஆனா எங்க? கழுவுற மீன்ல நழுவுற மீன் மாதிரி இருக்கா” என்று ருத்ரான்ஷிடம் நூறாவது முறையாக கேட்டுகொண்டிருந்தான் கார்த்தி.

“இங்க பாரு கார்த்தி.. நீயும் ஊர்ல இருந்து வந்த நாளா இதே கேள்வியை தான் வேற வேற வார்த்தைகள் போட்டு கேட்டுகிட்டு இருக்க..

இந்த வருஷம் உனக்கு தான் கோல்ட் மெடல் கிடைக்கபோகுதுன்னு எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. இப்படியே போனா, கோல்ட் மெடல்க்கு பதிலா கோல்டு மங்கல் சூத்ரா (தாலி) தான் வாங்கிட்டு ஊருக்கு போக போற”

“என்ன ருத் இப்படி சொல்ற?” என்றான் பாவமாக.

“இங்க பாரு லாஸ்ட்டா ஒன்னு சொல்றேன்.. இந்த காலத்துல படிப்புக்கு மட்டும் இல்ல, காதலிக்கிறதுக்கும் காம்படிஷன் அதிகம் தான். பொண்ணு கிடைக்கிறதே ரொம்ப கஷ்டம். அதுவும் உங்க ஊர்லயே உங்க வீட்டுக்கு தெரிஞ்ச பொண்ணாவே கிடைக்கிறது எல்லாம் அதிர்ஷ்டம்.. அதிர்ஷ்டம் ஒரு தடவை தான் கதவை தட்டும்.. தட்டும் பொழுதே திறந்து அதை வாங்கிடனும்..”

“இப்ப என்ன சொல்லவற?”

“எழில் ப்ரோ உன்னை லவ் பண்றாங்கனு கன்பார்ம்மா தெரியுது.. அவங்களை மாதிரி எல்லாம் கண்டிப்பா ஒரு நல்ல பொண்ணு கிடைக்காது கார்த்தி.. இதுல அவங்களே வந்து சொல்லணும்னு எதிர் பார்க்கிறத விட்டுட்டு, நீயே லவ் சொல்லிடு.. சொல்லிட்டு இந்த எக்ஸாம்க்கு படிக்கிற வழியை பாரு” என்று கூறிவிட்டு, அவன் புத்தகத்தை எடுத்து படிக்க அமர்ந்து விட்டான் ருத்.

படிக்க அமர்ந்த பின் அவனிடம் இருந்து பதில் எதுவும் வர போவதில்லை என்று கார்த்தியும், தற்காலிகமா இந்த யோசனைகளை விட்டுவிட்டு மீண்டும் கவனத்தை படிப்பிற்கு திருப்பினான்.

ரத்னாவும் எழிலும் வந்து சென்றதில் இருந்து ருத்ரான்ஷ் கார்த்திக்கு உற்ற தோழனாகிவிட்டான்.

படிப்பு ஒருபக்கம் சென்றாலும், எழிலிடம் எப்பொழுது எப்படி காதலை சொல்வது என்ற எண்ணம் ஒரு பக்கம் சென்றுகொண்டிருந்தது.

எழிலும் கார்த்தியும் காதல் தந்த ஒரு வித சுகமான போதையில் கட்டுண்டு இருந்தனர்.

பார்த்ததும் காதல்.. பார்க்காமல் காதல்.. என்று இல்லாமல், பார்த்து.. பழகி..புரிந்து.. பகிர்ந்து என கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்கே தெரியாமல் மனதிற்குள் தென்றலாய் மொட்டவிழ்ந்தது இவர்களது காதல்…

இருவருக்கும் இந்த காதல்..

எப்படி வந்தது என்று தெரியவில்லை..

எதனால் பிடித்தது என்று அறியவில்லை..

எப்பொழுது ஆரம்பித்தது என்று கணக்கில்லை..

ஏன் இந்த விருப்பம் என்று யோசிக்கவில்லை..

ஆனால் இந்த காதல் இருவர் மனதுக்கும்,

இனித்தது… சுகித்தது…கவர்ந்தது…ரசித்தது…

தித்தித்தது…திளைத்தது…நெகிழ்ந்தது…நிறைந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!