Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 29

 

காதலும் கடத்தப்படும் – 29

 



Advertisement

வீட்டிற்கு திரும்பிய அர்ஜுன், வாயிலில் இருந்த மதனிடம் எதுவும் பேசாமல், நேராக அறைக்குள் சென்றான். எப்பொழுதும் கட்டிலின் மேல் இருக்கும் அவளது புடவை காணாமல் போக, அது எங்கே என்று கவலையானவன், மதனை அழைத்தான். 

“அஞ்சலியோட புடவை எங்க?” என்றான்.

அலமாரிக்குள் வைத்திருந்த புடவையை மதன் எடுத்துக் கொடுத்தான். அதை வெடுக்கென பிடுங்கிய அர்ஜுன், சாளரத்தை பார்த்தபடி, புடவையை நெஞ்சின் மேல் போர்த்தியபடி படுத்துக்கொண்டான். 

Advertisement

 

Advertisement

“அஜூ, இதை சாப்பிட்டு தூங்கு” என்றொரு உணவு பொட்டலத்தை நீட்டினான், மதன்.

அவன் அமைதியாகக் கிடந்தான்.

“அஜூ, உன்னைத்தான்…”

Advertisement

“எனக்கு வேண்டாம்”

“வீணாக்காம சாப்பிடு…”

“நீ சாப்பிடு, வேண்டாம்னா குப்பைல போடு”

“இது நீ சாப்பிட அஞ்சலி வாங்கிக்கொடுத்தது”

அஞ்சலி என்றதும் பதறி எழுந்து அமர்ந்தான்.

 

“அஞ்சலியா என்ன சொல்ற மதனா?”

“அஞ்சலி வந்திருந்தா…”

எழுந்து மதனின் எதிரே சென்று நின்ற அர்ஜுன்,

“எப்போ வந்தா? அஞ்சலியா வீட்டுக்கு வந்தா?” என்று பதறினான்.

“இன்னைக்கு மதியத்துக்கு மேல வந்தா. கொஞ்ச நேரம் இருந்தா…”

“எனக்கு போன்…” என்றவன், தான் கைபேசியை அணைத்து வைத்திருந்தது நினைவிற்கு வந்தது.

“நீ தான் ரெண்டு நாளா போன சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கியே. எத்தனை முறை உனக்கு கால் பண்ணேன் தெரியுமா? பாவம் அந்த புள்ளை. உன்னை பார்க்கணும்னு கேட்டா… எங்கதான்டா போய் தொலைஞ்ச?”

கண்கள் கலங்கியவன்,

“அவ என்ன சொன்னா?” என்றான்.

மதன், அன்று நடந்ததைப்பற்றி அஞ்சலி கூறியதை பகிர்ந்தான்.

“பாவம் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு நினைச்ச புள்ளைய பிறந்த நாள் அதுவுமா அழ வச்சிட்டியே”

கண்ணீர் கன்னங்களில் வழிய, தடுமாறி கட்டிலின் மேல் அமர்ந்தான், அர்ஜுன்.

“‘ஏன் சொல்லலைனு அர்ஜுன் என்னை கேள்வி கேட்டிருக்க வேண்டியது தான’னு வருத்தப்பட்டா. என்கிட்ட பேசாம என்னை ஒதுக்க வேண்டாம்னு அழுதா… எவனோ ஒருத்தன் ஏதோ சொல்லிட்டான்னு அவகிட்ட கோவிச்சுக்கிட்ட. இவ்வளவுக்கும் மத்தியில நாளைக்கு காலைல ஏதோ கான்சர்ட் நடத்துற கம்பெனில நம்மள வர சொல்லியிருக்காங்கன்னு விசிட்டிங் கார்ட் கொடுத்துட்டு போயிருக்கா, தெரியுமா? இந்த மனசு யாருக்கு வரும். அவ உன்னை தாழ்வா நினைக்கறானு சொன்ன, ஆனா அந்த புள்ள, நம்ம இட்டிலி கடை அக்கா கிட்ட சாப்டுட்டு, எனக்கும் சாப்பாடு வாங்கி கொடுத்து, உனக்கும் வாங்கி கொடுத்துட்டு தான் போச்சு. போதாத குறைக்கு ‘பாப்பாவோட படிப்பு செலவு மொத்தமும் என்னோடது’னு சொல்லி, கைல காசு வேற கொடுத்துட்டு போச்சு… நீ பண்றது எதுவும் சரி இல்லை அஜூ… ரெண்டு மணி நேரம் பஸ்ஸை பிடிச்சு வந்த புள்ளை உன்னை பார்க்கணும்னு கேட்டதும் என்ன பண்றதுனே தெரியல… எங்கடா போயிருந்த?”

“பிறந்தநாள் அதுவுமா அவளை அழ வச்சுட்டேனேன்னு மனசு தாங்கல. அவ முகத்த முதன் முதலா ரசிச்ச, அவளோட முதன்முதலா பேசின அந்த மலையில தான் இருந்தேன்…”

“பாசம் வைக்கறவங்க தான் காயப்படுத்துவாங்கன்னு சொல்லுவாங்க, அது சரியாத்தான் இருக்கு”

“மதனா, நான் பண்ணது தப்பு தான். எனக்கு புரியாம இல்லை. ஆனா என்ன பண்றதுனு தெரியல… அஞ்சலி தங்கம்! அவ மனசை காயப்படுத்துயிருக்க கூடாது…”

“இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்?”

கண்களை துடைத்தவன், கைபேசியை எடுத்து அவளுக்கு அழைக்க முயல, 

போன் பண்ணி என்ன சொல்ல போற? நேர்ல திட்டிட்டு, இப்ப போன்ல சமரசமா?” என்றபடி அவனது கைபேசியை பிடுங்கினான், மதன்.

“என்னடா பண்ண சொல்ற?”

“நாளைக்கு நேர்ல பார்த்து மன்னிப்பு கேளு… என்ன புரியுதா?”

“கேட்கறேன்டா, ஒருதடவை இல்லை ஆயிரம் தடவை லட்சம் தடவை அஞ்சலிகிட்ட மன்னிப்பு கேட்கறேன்…”

“சந்தோஷம், இப்பவாவது புத்தி வந்ததே… இதை சாப்பிட்டு படு” என்று மதன் உணவு பொட்டலத்தை நீட்ட, அள்ளியள்ளி நிமிடத்தில் உண்டுமுடித்தான்.

 

மறுநாள் காலை அஞ்சலி கூறியது போல், குறித்த நேரத்திற்கு அவள் கூறியிருந்த அலுவலகத்திற்கு இருவரும் சென்றிருந்தனர். 

“வாங்க அர்ஜுன்! எங்க கம்பெனி பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்றார் மேலாளர்.

“இல்ல சார்” என்றான் அவன் தயங்கியபடி.

“பரவால்ல! நாங்க ஈவென்ட் நடத்தறவங்க, குறிப்பா கான்சர்ட் எல்லாம் நடத்தறோம். உள்ளூர் வெளியூர்ன்னு நிறைய பண்ணியிருக்கோம். உங்க சேனல் ஓனர் அஞ்சலி பேசினாங்க. உங்க வீடியோஸ் அனுப்பி வச்சாங்க. பழைய பாட்டை புது ட்ரெண்டுக்கு மாத்தி, எல்லாரும் என்ஜாய் பண்ற மாதிரி வித்தியாசமா நல்லா இருந்தது. இன்னும் சொல்ல போனா உங்க சேனல் பேரே ரொம்ப நல்லா இருந்தது. அவங்க ஏற்கனவே ரெண்டு மூணு தடவை பேசிட்டாங்க. நாம் கான்சர்ட்ட உறுதி பண்ணிக்கலாம். சில கண்டிஷன்ஸ் இருக்கு. அதுக்கெல்லாம் அஞ்சலி ஒத்துக்கிட்டாங்க. இந்த கான்சர்ட் மட்டும் பெரிய சக்ஸஸ் ஆச்சுன்னா அப்புறம் வெளிநாட்டுல நிறைய டூர் பண்ண வேண்டியிருக்கும். உங்க டீம்ல நீங்க தான் முக்கியப்பட்டவர்னு சொன்னாங்க. அதான் உங்கள நேர்ல கூப்பிட்டு கேட்டுடலாம்னு நினைச்சேன்…”

அர்ஜுனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. என்னவென்று தெரியாமல் வந்தவனுக்கு, மேலாளர் கூறியது மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதே நேரத்தில் தான் அஞ்சலியை காயப்படுத்தியதை எண்ணி, மனம் குற்ற உணர்வில் தவித்தது. 

“சிறப்பா பண்ணிடலாம் சார். அஞ்சலி முடிவு செஞ்சா சரியாத்தான் இருக்கும்…”

“குட், பொதுவா சினிமாவுல பாடறவங்க, இல்லை சொந்தமா ஆல்பம் பண்றவங்க தான் கான்சர்ட் எல்லாம் செய்வாங்க. ஆனா ஒரு யூடியூப் சேனல் இந்தளவுக்கு வர்றது ரொம்ப பெரிய விஷயம். நீங்க ரொம்ப லக்கி…”

“தேங்க்ஸ் சார்”

“உங்க நன்றியை அஞ்சலி கிட்ட சொல்லுங்க…” என்றவர், ஒப்பந்த தாளினை நீட்டி, அதில் உள்ளதை விவரிக்க, மனம் முழுதும் மகிழ்வோடு அதில் அர்ஜுன் கையெழுத்திட்டான்.

 

மேலும் சில விவரங்களை கேட்டறிந்துகொண்டு, அர்ஜுனும் மதனும், அஞ்சலியின் வீட்டிற்கு விரைந்தனர்.

“எங்கப்பா போனீங்க மூணு நாளா? ஆளே காணோம்!” என்றார், வாயிலில் நின்றிருந்த காவலாளி.

“இல்லண்ணே எனக்கு உடம்பு முடியல, இன்னைக்கு தேவலை, வேலைக்கு வந்தோம்” என்றான் மதன். 

அர்ஜுனின் கண்கள் அஞ்சலியை தேடியது. 

“மூணு நாளா சின்னம்மா எல்லா இடமும் நடந்தே போச்சு. பாவம் காரை விட்டு கால் தரையில வச்சதில்ல. இனிமேல் லீவு போடாம ஒழுங்கா வாங்க” என்று அவர் கூறியதைக் கேட்டு, அர்ஜுனுக்கு வேதனையானது. தன் மேல் மேலும் கோபம் பொங்கியது. 

“இப்பக்கூட கோவிலுக்கு போயிருக்காங்க. நான் ஆட்டோ பிடிச்சு தரேன்னு சொன்னேன். வேண்டாம் எப்பவும் போற கோயில் தான, பக்கம் தான்’னு சொல்லிட்டு நடந்தே போயிட்டாங்க…”

“அவன் கூறியதைக் கேட்டதும், ஒரு நொடி கூட நிற்காமல் ஓடோடிச் சென்றான் அர்ஜுன். மதனும் ஒருவாறு அவனை தொடர்ந்து ஓட, இருவரும் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். 

 

இருவரும் உள்ளே செல்ல, மண்டபத்தில், தூணில் சாய்ந்தபடி அஞ்சலி அமர்ந்திருந்தாள். அவளை மூன்று நாட்கள் கழித்து பார்க்க, அவனது மனமும் கண்களும் கலங்கின. இருவரும் அவளை நோக்கி செல்ல, திடீரென மதனை தடுத்த நிறுத்திய அர்ஜுன், 

“இதோ வந்துடறேன்” என்றுவிட்டு கோயில் பலகாரக் கடைக்கு ஓடிச்சென்று அதிரசம் வாங்கிவந்தான்.

 

யோசனையில் மூழ்கியிருந்தவளின் எதிரே சென்று இருவரும் அமர்ந்தனர். அர்ஜுனைக் கண்டதும் அவளது விழிகள் ஈரம் கொண்டன.

“அஜூ, எப்போ வந்த? எப்படி இருக்க? அந்த ஆபீசுக்கு போனீங்களா? மேனேஜரை பார்த்தீங்களா?” என்று கேள்விகளை அடுக்கினாள்.

“நீ எப்படி இருக்க அஞ்சலி? ஏன் முகம் இவ்வளவு வாடியிருக்கு?”

“ஒண்ணுமில்ல அஜூ, நல்லாத்தான் இருக்கேன்… ஆபிஸ் போனீங்களா?”

“போனேன், பேசினேன், காண்ட்ராக்டுல கையெழுத்து போட்டேன்…”

முகம் மலர்ந்து சிரித்தவள்,

“நிஜமாவா அஜூ, நம்பவே முடியல நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு… வாழ்த்துக்கள்” என்றவள் அர்ஜுனோடு கைகுலுக்கினாள்.

“இந்தா அதிரசம் உனக்காக” என்றான்.

ஆசை ஆசையாய் வாங்கி உண்டாள். 

“அவர் ஏதோ கண்டிஷன்ஸ்லாம் உன்கிட்ட சொன்னதா சொன்னாரு…”

“ஆமா அஜூ”

“என்னது?”

“ஒண்ணுமில்ல, வழக்கமா இருக்கற விஷயங்கள்தான்”

அவன் அமைதியாக அவளை பார்த்திருந்தான். ‘குழந்தை மாதிரி இருக்கா… இவளை போய் காயப்படுத்திட்டோமே…’ என்று ரகசியமாய் வருந்தினான். 

 

“நேத்து வீட்டுக்கு வந்திருக்க. நான் இல்லாம போயிட்டேன்… என்னை மன்னிச்சுடு அஞ்சலி தெரியாம கோவிச்சுக்கிட்டேன்”

புன்னகைத்தவள், “பரவால்ல அஜூ, என்கிட்ட கோவப்பட உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நானும் அன்னைக்கு யோசிக்காம ஏதோ பண்ணிட்டேன்… உனக்கு எவ்வளவு தர்மசங்கடமா இருந்திருக்கும்னு எனக்கு இப்போ புரியுது…”

“இருந்தாலும் நான் கோவப்பட்டிருக்க கூடாது…”

“பரவால்ல விடு அஜூ…”

 பெருமூச்செடுத்தவன், அவள் உண்ணும் அழகையே பார்த்திருந்தான். அவள் ஒரு பகுதியை கிள்ளி, அவனுக்கும் மதனுக்கும் கொடுத்தாள். 

 

“எதுக்கு நடந்து வந்த? நேத்து எதுக்கு அவ்வளவு தூரம் பஸ்ல வந்த?”

“வேற என்ன பண்றது. நடுராத்திரி கால் பண்ணா கூட நான் வந்து கார்ல கூட்டிட்டு போவேன்னு நீ தான் சொன்ன. போன் போட்டா நீ எடுக்கவே இல்லை…”

“நான் எடுக்கலேனா என்ன, மதனுக்கு போன்ல விவரத்தை சொல்லியிருக்கலாம்ல?”

“என்னை எப்பவும் கார்ல கூட்டிட்டு போறேன்னு நீ தான் ப்ராமிஸ் பண்ண, மதனா பண்ணான்?”

“தப்பு தான்… இனிமேல் போன் சுவிட்ச் ஆப் பண்ணி வைக்கமாட்டேன்”

“சரி” என்றவள், “அஜூ உங்க மீட்டிங் நல்ல படியா முடியணும்னு காலைலேர்ந்து சாப்பிடாம கோவில்ல தான் இருந்தேன். ரொம்ப பசிக்குது. எனக்கு புளியோதரை வாங்கித் தரியா?”

“சரி” என்று எழுந்தவன், ஏதோ யோசனை வந்தவனாய்,

“அஞ்சலி நாம ரெஸ்டாரண்ட் போலாமா?” என்றான்.

அவளும் சரி என்க, ஒரு முறை சுவாமி தரிசனம் செய்துவிட்டு, உணவகத்திற்கு கிளம்பினர்.

 

அவள் விரும்பியதை வாங்கிக்கொடுத்தவன், அவள் உண்ணும் அழகினை பார்த்தபடி அமர்ந்திருந்தான். மதன் கிண்டலடிக்க, இவளும் அவனோடு உரையாடிப்படி சிரித்திருக்க, அவளது சிரிப்பொலியினை மனதினுள் நிறைத்துக்கொண்டான். ஐஸ்க்ரீம் வேண்டுமா, ஜுஸ் வேண்டுமா, இது வேண்டுமா, அது வேண்டுமா என்று அர்ஜுன் அவளை ஏறத்தாழ இம்சிக்க, அவளோ குளிர் மழையில் நனைந்திருந்தாள்.

 

உண்டு முடித்து வெளியே வர, அருகில் ஒரு துணிக்கடையில், சில புடவைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. அதனை பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுன்,

“அஞ்சலி, உனக்கு பிடிச்சது ஏதாவது வாங்கிக்கோ” என்றபடி கடையினை சுட்டிக்காட்டினான்.

“சரி போலாம்” என்றாள் உடனே, மறுப்பு கூறாமல்.

கடையினுள் சென்றதும், அவள் சுடிதாரினை பார்த்துக் கொண்டிருக்க, உடன் வந்த மதன், ‘நம்ம ஆளுக்கு புடவை தான பிடிக்கும், இவ சுடிதாரை பார்க்கறாளே’ என்று யோசித்தவனாய்,

“அஞ்சலி” என்றவன், 

“சிங்கு சான், சிங்கு சான், பச்சை கலரு சிங்கு சான் மஞ்சள் கலரு சிங்கு சான், இந்த ப்ளூ கலர் கூட சிங்கு சான்…” என்றபடியே புடவை விற்கும் மேசையின் அருகே நின்றுகொண்டு, ஒவ்வொரு புடவையாக தோள் மீது போட்டு காண்பித்தான். 

சிரித்துக்கொண்டே அஞ்சலி அவனிடம் சென்று நின்றாள்.

“என்ன மதன் புடவை சேல்ஸ்’ஆ?”

“புடவை தான் பொண்ணுங்களுக்கு அழகு…”

“டேய்” என்று குறுக்கிடப்படி வந்து நின்ற அர்ஜுன்,

“அஞ்சலி உனக்கு என்ன பிடிச்சிருக்கோ வாங்கிக்கோ” என்றான்.

“அதுக்கில்ல அஜூ, பசங்களுக்கு பொதுவா புடவை தான புடிக்கும்”

“கட்டிக்கப்போறது அஞ்சலி தான…”

“சரி சரி சண்டை போடாதீங்க” என்ற அஞ்சலி புடவைகளை பார்த்தாள். ஒன்றினை எடுத்து தோளில் போட்டு அவள் காட்ட, வியந்து நின்றான் அர்ஜுன். அவனது பார்வையில் சற்றே நாணம் கொண்டவள், புடவையை மேசை மீது வைத்துவிட்டு, மற்றவைகளை பார்க்கத் தொடங்கினாள். அஞ்சலி புடவையை தேர்வு செய்துகொண்டிருந்தாலும், அர்ஜுன் அடிக்கடி வாயிலில் தொங்கவிடப் பட்டிருந்த மஞ்சள் புடவையை பார்த்தான்.

 

கடை ஊழியரிடம், “அந்த மஞ்சள் புடவையை காட்டறீங்களா?” என்றாள். 

அர்ஜுனின் முகத்தில் பெரிதாய் ஒரு புன்னகை மலர்ந்தது. ஊழியர் அப்புடவையை அவள் அணிந்திருக்கும் உடையின் மீது புடவை உடுத்துவது போல் கட்டிவிட, அவளை மேலும் கீழும் இமைக்காமல் பார்த்திருந்தான். அவனது பார்வை அவளை ஏதோ செய்தது.

“எப்படி இருக்கு அஜூ?” என்றாள்.

“ஆங்…” என்றவன், மெய்மறந்து நின்றிருந்தான்.

“செமையா இருக்கு அஞ்சலி, இதை வாங்கிக்கோ” என்ற மதன், “சொல்லு அஜூ” என்று அவனது தோளினைப் பிடித்த உலுக்க, நிலைக்குத் திரும்பிய அர்ஜுன்,

“ரொம்ப அழகா இருக்கு அஞ்சலி” என்றான்.

“இதையே வாங்கிக்கறேன் அஜூ” என்று அவள் கூற, முகத்தில் மகிழ்ச்சி பொங்க, “சரி” என்றான்.

 

பணம் செலுத்திவிட்டு அவர்கள் வெளியே வர,

“அஞ்சலி, பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்றபடி, புடவையினை அவளது கையில் கொடுத்தான், அர்ஜுன்.

“அஜூ, இதை நான் வாங்கிக்கறேன். ஆனா, எனக்கு வேற ஒரு பரிசு வேணும்”

“என்னனு சொல்லு அஞ்சலி” என்றான் ஆர்வமாக.

“இப்போ இல்லை. நான் கேட்கும்போது நீ மறுக்காம இருந்தா போதும்…”

“நான் எதுக்க மறுத்து சொல்ல போறேன். என்னனு சொல்லு”

“நேரம் வரும்போது சொல்றேன்” என்றவள், பையினை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அவர்களோடு நடந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!