Skip to content
Post Views: 278
அத்தியாயம் 30
அந்த சிறப்பு அரங்கமே மக்களால் நிரம்பி வழிந்தது. முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்கள் ரத்னா, கார்த்திகேயன், எழிலரசி மூவரும். கார்த்தியின் மடியில் நான்கு வயது சிறுவன் அமர்ந்திருக்க, ரத்னாவின் மடியில் ஒரு வயது பெண் குழந்தை சமர்த்தாக அமர்ந்திருந்தது.
Advertisement
எழிலரசி முகமெல்லாம் பூரிப்பாக கையில் கைபேசியுடன் புகைப்படம் எடுக்க தயாராக அமர்ந்திருந்தாள்.
முதல் ஐந்து வரிசைகளில் பரிசு வாங்குபவர்களின் நெருங்கிய குடும்பத்தார்கள் மட்டுமே அமர அனுமதி வழங்கப்பட்டிருந்ததது.
Advertisement
Advertisement
பின்னே, எழிலரசியின் குடும்பம், ரத்னாவின் குடும்பம், காமாட்சி அம்மா, சுந்தரேசன், ரிச்சர்ட், நந்திதா என்று அனைவருமே அமர்ந்திருந்தார்கள்.
அதிலும் சுந்தரேசனும் ரிச்சர்டும் மிகவும் உணர்ச்சி வசமாக இருந்தார்கள். இருவரது செல்ல பிள்ளை அல்லவா விருது வாங்க போவது. இவர்களை முறைத்து முறைத்து பார்த்து அமர்ந்திருந்தார் கதிர்.
Advertisement
“சும்மா ஏன் ப்பா அவங்களை முறைக்கிறீங்க?” என்றாள் அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த மகள் நாகதாரா கடுப்பாக.
“நான் தானே விக்கிக்கு தாய்மாமா.. இவங்க தான் அவனுக்கு ரொம்ப க்ளோஸ் மாதிரி நடந்துக்கிறாங்க..” என்றார் உர்ரென்று.
“எத்தனை தடவை அப்பா உங்களுக்கு எடுத்து சொல்றது.. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்ங்கிற மாதிரி அத்தை வாழ்க்கையில் நடுவுல பல பக்கத்துல நாம யாருமே இல்லை.. அப்ப அவங்களுக்கு துணையா இவங்க தானே இருந்திருக்காங்க. இன்னிக்கு விக்கி அத்தான் இவ்வளவு சாதிச்சிருக்கிறதுக்கு அவங்க இரண்டு பேரும் தானே முக்கிய காரணம்னு அத்தான் சொன்னாங்க.. அப்புறம் ஏன்பா? பேசாம உட்காருங்க” என்று அதட்டினாள் பெண்.
நாகதாராவால் மட்டுமே கதிரை சமாளிக்க முடியும் என்று அவளை அவருடன் கோர்த்து விட்டு மற்றவர்கள் ஜாலியாக நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“இந்த ஆண்டுக்கான வளர்ந்து வரும் முதல் தொழிலதிபர் விருதை பெறப்போவது தமிழகத்தை சேர்ந்த மிஸ்டர் விக்னேஷ்” என்று அறிவிக்கவும், விக்னேஷ் மேடைக்கு வந்து ஆளுநர் கைகளால் விருதை வாங்கினான். கரகோஷம் காதை பிளந்தது.
அவனுடைய வெற்றியை பற்றி சில வார்த்களை பேசுமாறு கூறினார்கள்.
“என்னுடைய இந்த வெற்றிக்கு நிறைய பேர் காரணம். எல்லாருக்கும் நன்றி சொல்லனும்னா நேரம் பத்தாது. முதல்ல தெய்வமா எங்க அப்பா… அர்ஜுனனுக்கு வில்லு மாதிரி எனக்கு எங்க அப்பா கொடுத்த இந்த பென்சில் பாக்ஸ்.. என்னோட தைரியமா எங்க அம்மா, அப்பாவா எங்க அண்ணா.. ஆசானா எங்க சுந்தரேசன் மாமா.. தோழனா வழிகாட்டியா என் ரிச்சர்ட் சார்.. நேர்மறையா யோசிக்க கத்து கொடுத்த என் அண்ணி.. வாழ்க்கைக்குள்ள லேட்டா வந்தாலும், எங்களுக்கு உறுதுணையா இருந்த எங்க தாய்மாமா.. எங்க தாத்தா பாட்டி.. அப்புறம் எங்க மொத்த குடும்பமும்..
இவ்வளவு பேர் துணை இருக்க, என்னோட கனவு, ஆசை, நம்பிக்கை, உழைப்பு.. எல்லாம் தான் என்னை இந்த இடத்துல நிக்க வச்சிருக்கு.
இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது.. நம்பிக்கையோடு இலக்கை நோக்கி பயணம் செய்யுங்க.. விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்.. வாய்ப்புக்கு நன்றி..” என்று சுருக்கமாக பேசிமுடித்தான்.
கார்த்திக்கு தம்பியை நினைத்து அத்தனை பெருமையாக இருந்தது. மடியில் இருந்த மகனிடம் “பார்த்தியா கண்ணா சித்தப்பா மாதிரி நீயும் நாளைக்கு பெரிய ஆளா வரணும் என்றான்”
எழில் கணவனை பார்த்து ஆதுரமாக புன்னகை புரிந்தாள். அவன் மனநிலை அவளுக்கு நன்றாக புரிந்து. மாமியாரின் மடியில் தூக்கத்திற்கு சினுங்கிய செல்ல மகள் ஆராத்யாவை வாங்கி தோளில் போட்டு தட்டி கொடுத்தாள்.
முதலில் ரத்னாவின் விருப்பப்படி ஆண் குழந்தை பிறந்து அதற்கு கண்ணன் என்றே பெயர் வைத்தனர். அடுத்து எழிலின் ஆசை படி பெண் குழந்தை பிறக்கவே அத்தையின் பெயரை கொஞ்சம் மாற்றி ஆராத்யா என்று வைத்தாள்.
அன்று அனைவருக்கும் அவர்கள் ஹோட்டலில் விருந்து ஏற்பாடு செய்திருந்தான் பாலமுருகன்.
பாலமுருகன் லாவண்யாவிற்கு அமுதரசி என்று ஆறுவயதில் ஒரு பெண் குழந்தை, எழிலின் விருப்பப்படி குழந்தை பிறந்ததும் முதலில் குழந்தையை எழில் கையில் தான் கொடுத்தனர் லாவண்யா பாலமுருகன் ஜோடி. அமுதாவும் பேச ஆரம்பித்ததும் முதலில் கூறிய வார்த்தை அத்தை தான்.
அமுதாவும் எழிலும் மிகவும் நெருக்கம்.. அமுதா அத்தை என்று ஒன்றை கேட்டுவிட்டால் எழிலால் அதை செய்யாமல் இருக்க முடியாது.
தமிழரசிக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. அவளும் கணவருடன் விழாவில் கலந்து கொண்டாள்.
விஜயன் அவரது பெட்ரோல் பங்கை விரிவு படுத்தி இப்பொழுது இன்னும் இரண்டு கிளைகளை ஆரம்பித்திருந்தார். எழில் ஆரம்பித்து வைத்த நற்பணியை மனைவியின் நினைவுகளோடு செய்துகொண்டிருக்கிறார். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளின் வையித்திய செலவுக்கு தன்னால் முடிந்த அளவு பணம் கொடுத்து வருகிறார்.
கவியரசி கவின் ஜோடிக்கு நிலா பாப்பாவிற்கு பிறகு இரட்டை ஆண் குழந்தைகள். சாந்தி மீனா ரேவதி மூவரும் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள கவிக்கு உதவுகிறார்கள்.
எது எப்படி இருந்தாலும் கிடைத்த சந்தர்ப்பத்தில் கவியும் எழிலும் சண்டை போடுவதை மட்டும் மாற்றிக்கொள்ளவே இல்லை.
குகனுக்கு பெண் பார்த்து கொண்டிருந்தார்கள்.. நாகரத்னாவின் சின்ன அக்காவின் மகள் கீர்த்தனாவிற்கு குகனை திருமணம் செய்ய கேட்க, அந்த பெண்ணை குகனுக்கும் பிடித்து போகவே அவர்களுக்கு கல்யாணம் நிச்சயம் செய்ய பட்டது. அதே சமயம் விக்னேஷுக்கும் கதிர் மாமா மகள் நாகதாராவிற்கும் திருமணம் பேசி முடித்திருக்கிறார்கள். அடுத்து இரண்டு திருமணங்களும் விரைவில் நடக்கவிருக்கிறது.
பெண்ணின் நிறைவான வாழ்க்கையை பார்த்து ரேவதி சரவணன் இருவர்க்குள்ளும் இருந்த நெருடல் மறைந்து போனது என்பது உண்மை.
நல்லதோர் குடும்பம்.. பல்கலை கழகம்.
சுபம்.
error: Content is protected !!