காஃபி வித் காதல் 3
அத்தியாயம் 3
காலை ஆறுமணிக்கு முருகன் கோவில் வாசலில் வந்து நின்றது ஒரு இருசக்கர வாகனம்.
“சீக்கிரம் இறங்கு அத்தை, உன் வெயிட்ட வச்சு பாலன்ஸ் பண்றதுக்குள்ள நாக்கு தள்ளுது”
“உன் கூட வண்டியில வர்றதுக்கு, நான் நடந்தே வந்திருக்கலாம், அஞ்சு நிமிஷம் முன்னவே வந்திருப்பேன், வாயடிக்காம வா, காலையில் முதல் அபிஷேகம் நம்மளுடையது தான்”
Advertisement
இவர்களை பார்த்ததும் கோவில் புரோகிதர், “வாங்கோ, சீக்கிரம் நாழி ஆறது” என்று குரல் கொடுக்கவும், இருவரும் மேற்கொண்டு பேசாமல் முருகன் சன்னதிக்கு விரைந்தார்கள்.
அந்த ஆறுமுக வேலன் வள்ளி தெய்வானையுடன் திருமண கோலத்தில் காட்சி அளித்துக்கொண்டிருந்தார்.
இவர்கள் இருவரும் சென்று சன்னதிக்கு முன்னால் அமர்ந்து கொண்டார்கள். பின் அபிஷேகத்தை கண் குளிர பார்த்து நெகிழ்ந்தனர்.
Advertisement
அபிஷேகம் முடியவும், அலங்காரம் செய்வதற்காக திரை போடப்பட்டது.
Advertisement
“கண்ணிரண்டும் போதாது அத்தை இந்த முருகனின் அழகை பார்க்க” என்றாள் எழிலரசி.
“ஆமா எழிலு, எத்தனை வருஷமா நாமும் இங்கே வர்றோம். ஒவ்வொரு தடவை இங்கே வரும்போதும் முதல் முறை பார்க்கிற மாதிரி உடம்பெல்லாம் சிலிர்க்குது.”
“ஆமா அத்தை, சரி மாமாக்கு வாழ்த்து சொல்லிட்டியா?”
Advertisement
“இல்ல எழிலு, இன்னும் எழுந்திரிச்சிருக்க மாட்டாங்க.. நாம தீபாராதனை பார்த்திட்டு கால் பண்ணுவோம்.”
“பிறந்தநாளுக்கு நம்மகூட எல்லாம் சேர்ந்து இருந்தா மாமாவுக்கும் சந்தோசமா இருக்கும். பாவம் தானே அத்தை மாமா, எல்லா வருஷமும் அங்கே துபாய்ல தனியாவே கொண்டாடுறாங்க.”
“உம், அடுத்த வருஷம் வந்துடுவாங்க டா..”
“இப்படி தான் நீயும் ஒவ்வொரு வருஷமும் சொல்ற.. ஆனா நாம ரெண்டு பேரும் தான் வந்து அபிஷேகம் பார்த்து சாமி கும்பிட்டு போறோம்”
“சரி, கவிக்கு போன் போடுவோம். அவளும் தீபாராதனை பார்ப்பா இல்ல”, என்று கூறிக்கொண்டே மகள் கவியரசிக்கு அழைத்தார் அத்தை அனுராதா.
தூக்க கலக்கத்தில் ஒலித்தது அந்த பக்கத்து குரல்.
சொல்லும்மா..
“என்ன கவி இன்னும் தூங்கிட்டு இருக்க. நேத்தே சொன்னேன் இல்ல, அப்பா பிறந்தநாளுக்கு, கோவில்ல அபிஷேகத்துக்கு கொடுத்திருக்கேன். காலையில கூப்பிடறேன்னு.”
“எங்க அப்பாவை அண்ணன்களும் தங்கச்சியும் சேர்ந்து வரவிடாம செஞ்சுட்டு, அவர் மேலே பெருசா அக்கரை சக்கரை இருக்கிற மாதிரி கோவிலுக்கு வந்திருக்க.. எங்க அப்பாவுக்கு நான் வாழ்த்து சொல்லிக்கிறேன்” என்று கோவமாக போனை வைத்துவிட்டாள் கவியரசி.
கேட்டு கொண்டிருந்த எழிலரசிக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“அத்தாச்சி சொல்றதுல தப்பு ஒன்னும் இல்ல அத்தை. சின்ன வயசுல இருந்தே அத்தாச்சிக்கு மாமாகூட இருக்கணும்னு ஆசை.”
“என்ன செய்றது எழிலு, அவர் வேலை அங்கேன்னு ஆயிடுச்சு. அங்க போய் இருக்க என் உடல்நிலையும் ஒத்துக்கலை. சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி அமைஞ்சதுக்கு என்ன செய்ய?அத புரிஞ்சுக்காம பேசாதீங்க”
அனுராதாவின் கணவர் விஜயன், அவர் குடும்பத்தை முன்னேற்றுவதற்காக பதினெட்டு வயதில் துபாய்க்கு சென்றவர். அவர் அப்பா அம்மா அக்கா தங்கை என்று கடமைகளை முடிப்பதற்கே எட்டு வருடம் ஆகிவிட்டது. பின் அனுராதாவுடன் திருமணம். திருமணம் முடிந்து சில மாதங்களில் மனைவியை அழைத்து செல்வதாக இருந்தது. ஆனால் அனுராதா உடனே கருத்தரிக்கவும், பயணம் தடைப்பட்டது. அனுராதாவிற்கு பூஞ்சை உடம்பு. பிள்ளை பேறு, குழந்தையை பார்ப்பது என்று சில வருடங்கள் ஓடிவிட்டது.
பின், கொஞ்ச வருஷம் நீங்க சம்பாரிச்சிட்டு ஊருக்கே வந்துடுங்களேன், அங்கே வந்து குழந்தையோடு தனியா எப்படி சமாளிக்க என்று அவர் தயங்கவும், அவரும் சரி என்று ஒத்துக்கொண்டார்.
வருடத்திற்கு ஒரு முறை ஒருமாதம் விடுமுறையில் வந்து மனைவி மகளை பார்த்து அவர்களுடன் இருந்து செல்வார்.
அண்ணன்கள் மூவரும் அருகருகே இருந்ததால் அனுராதாவிற்கு தனிமை தெரியவில்லை. அனுராதா விஜயன் திருமணத்திற்கு பிறகு தான் அண்ணன்களின் திருமணங்கள் நடந்தது.
கவியரசி வளர வளர அப்பாவுடன் இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்க தொடங்கினாள். அதனால் அவளுக்கு பத்து வயது இருக்கும்பொழுது கணவருடன் துபாய் சென்றார் அனுராதா. ஆனால் அவரால் இரண்டு மாதங்கள் கூட அங்கே தாக்கு பிடிக்கமுடியவில்லை. அங்கே இருந்த வெப்பநிலை இவருக்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. வாந்தி, வயிற்று போக்கு, அலர்ஜி என்று அலண்டுவிட்டார். அவரது நிலைமையை பார்த்து பயந்து போன விஜயன் மகளை சமாதானம் செய்து திரும்ப ஊருக்கே அனுப்பி வைத்தார்.
நமக்காக ஒரு வீடு கட்டிடலாம் என்றார் அனுராதா. அதற்காக சில வருடம், அடுத்து மகளை பெரிய கல்லூரியில் சேர்க்க விரும்பி சில வருடம், மகள் திருமணத்திற்கு சேமிப்பு என்று சில வருடம் இப்படியே சென்றது.
கவியரசிக்கு இந்த விஷயத்தில் தாய் மீது ஒரு கோபம் இருந்து கொண்டே இருந்தது. இங்கே வந்து குறைந்த வருமானம் கிடைத்தாலும் குடும்பமாக ஒன்றாக இருக்கலாமே என்று கல்லூரி படிக்கும்பொழுது எடுத்து கூறியும் அனுராதா கேட்டுக்கொள்ளவே இல்லை.
‘அதான் அப்பா வருஷத்துக்கு ஒரு தடவ வராங்க தானே. அப்பா இல்லாதப்ப நமக்கு வேண்டியது மாமா மூனு பேரும் செய்யறாங்க இல்ல?’ என்றே கூறுவார்.
அதில் எல்லாம் அனுராதாவின் அண்ணன்களை குறை கூறவே முடியாது. பெரிய அண்ணன் சண்முகம், அவரது மனைவி சாந்தி. அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள், பாலமுருகன், அன்பரசி.
இரண்டாவது அண்ணன் சிங்காரம் அவரது மனைவி மீனாட்சி, அவர்களுக்கு ஒரே பிள்ளை குகன்.
கடைசி அண்ணன் சரவணன் அவரது மனைவி ரேவதி. சரவணன் ரேவதிக்கு இரண்டு பெண் பிள்ளைகள், எழிலரசி, தமிழரசி.
மூன்று அண்ணாக்களும் சேர்ந்து ஹோட்டல் ஒன்று நடத்தி வந்தார்கள்.
அவர்கள் பிள்ளைகளுக்கு செய்வது போலத்தான் கவியரசிக்கும் அனைத்தும் செய்வார்கள்.
கவிக்கு மாமன்கள் மீது பிரியம் உண்டு தான். இருந்தாலும் அப்பா வேண்டும் என்றால் மாமாக்கள் இருக்கிறார்களே என்ற பதில் எரிச்சலை தான் கொடுக்கும்.
தீடிரென்று எதிர்பார்க்காத விதமாக ஹோட்டலில் ஒரு சறுக்கல் ஏற்பட்டது. இவர்கள் ஹோட்டல் இருந்த இடத்தில் ஹை வே வருவதால், இவர்கள் ஹோட்டலை இடம் மாற்ற கூறினார்கள். அதில் கொஞ்சம் தொழில் பின்னடைந்தது.
அந்த சமயத்தில் தான் கவியின் திருமணமும் நிச்சயம் ஆகி இருந்தது. மகளின் திருமணத்தை ஒட்டி ஊருக்கே திரும்பிடலாம் என்று திட்டமிட்டிருந்தார் விஜயன்.
அண்ணன்களுக்கு ஒரு கஷ்டம் என்கிறப்ப நாம உதவி செய்யணும் இல்லைங்க.. நமக்காக அண்ணன்கள் எவ்வளவோ செஞ்சிருக்காங்க என்று அனுராதா கூறியதை மறுக்க முடியாமல் மச்சான்களுக்காக மேலும் இரண்டு வருடம் அங்கே இருப்பதாக ஒத்துக்கொண்டார் விஜயன்.
அதில் தான் கோவம் கவிக்கு. அப்பா அங்கே இருந்து தான் உதவணும்னு கட்டாயம் இல்லையே.. மாமாங்களும் வேண்டாம் என்று கூறவில்லையே என்று.
மகளின் திருமணத்திற்கு வந்தவர் மீண்டும் துபாய் சென்று இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.
அண்ணன் பிள்ளைகளில் எழிலரசி தான் அனுராதாவிற்கு மிகவும் நெருக்கம்.
அவர் தான் அவளை வளர்த்தார் என்று கூறலாம். ரேவதி ஒரு நகை கடையில் பில்லிங் செக்ஷனில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அதனால பிள்ளைகளை அனுராதாவிடம் விட்டுவிட்டு தான் வேலைக்கு செல்வார்.
எழிலரசி பிகாம் முதல் வருடம் படித்துக்கொண்டிருக்கிறாள்.
அலங்காரம் முடிந்ததும், இருவரும் விஜயன் பெயருக்கு அர்ச்சனை செய்துவிட்டு தீபாராதனை முடிந்ததும் வீடு திரும்பினார்கள்.
“இங்க பாரு அத்தை, வீட்டுக்கு போனதும் முதல்ல மாமாக்கு போனை போடற. கவி அத்தாச்சியை தான் சேர்ந்து வளர்க்கல. அவங்களுக்கு பொறக்க போற குழந்தையை நீங்க ரெண்டும் பேரும் சேர்ந்து வளர்த்தா அத்தாச்சி மனசுக்கு சந்தோசமா இருக்கும்னு சொல்லு”
“சரிங்க பெரிய மனுஷி” என்றார் சிரித்து கொண்டே.
அத்தையை அவர் வீட்டில் விட்டுவிட்டு இவள் வீட்டிற்கு வண்டியை விட்டாள்.
ஒரே தெருவில் தான் அண்ணன் தங்கை நால்வரின் வீடுகளும்.
“அம்மா சீக்கிரம் டிபன் கொடு.. லேட்ட்டாச்சு காலேஜ்க்கு” என்று குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள் எழிலரசி.
“ஏன் க்கா கோவில்ல பொங்கல் தரலையா?” என்றாள் தமிழரசி நக்கலாக.
“பொங்கல் வெயிட் பண்ணி வாங்கி சாப்பிட்டு வந்தா எங்க அக்கௌன்ட்டென்னசி சார் இன்டெர்னல் மார்க்கை பொங்கல் வச்சிடுவாரு என்ன செய்ய?”
“அக்காவுக்கும் தங்கச்சிக்கும் வாய் மட்டும் எட்டு ஊர்க்கு நீளும். காலையில யாராவது ஒரு ஸ்பூனை நகர்த்துறீங்களா.. எழிலு இட்லி அவிஞ்சிருக்கும். அதை தள்ளி ஹாட் பாக்ஸ்ல போட்டுட்டு நீயும் சாப்பிடு” என்று அறையில் இருந்தே குரல்கொடுத்தார் ரேவதி.
காலையில் சரவணன் காஃபி மட்டும் குடித்துவிட்டு ஹோட்டல்க்கு கிளம்பிவிடுவார். ரேவதி மகள்கள் கிளம்பும் சமயமே அவரும் கிளம்பவேண்டும்.
எழிலுக்கு எட்டு மணிக்கு பேருந்து, தமிழுக்கும் ரேவதிக்கும் எட்டே காலிற்கு பேருந்து.
மதிய சாப்பாடு மூவருக்கும் கட்டி வைத்துவிட்டு புடவை மாற்ற உள்ளே சென்றிருந்தார்.
முனங்கிகொண்டே இட்லியை எடுத்து ஹாட் பாக்ஸில் போடாமல், மூன்று கிண்ணங்களில் ஆளுக்கு நாலு என்று வைத்து, அதன் மேலே சாம்பாரை தாராளமாக ஊற்றினாள்.
அம்மாவுக்கும் தங்கைக்கும் டேபிள் மீது ஸ்பூன் போட்டு வைத்துவிட்டு, தன்னுடையதை பேன் கீழே வைத்துவிட்டு, கல்லூரி பேக் எல்லாம் எடுத்து வந்து தயராக வைத்தாள்.
அதற்குள் சாம்பாரில் நன்றாக ஊறியும், கொஞ்சம் ஆறியும் இருந்த இட்லியை இரண்டே நிமிடங்களில் உள்ளே தள்ளிவிட்டு, கல்லூரி பேருந்திற்கு விரைந்து விட்டாள்.
அடுத்த மாதம் பெரிய அண்ணன் மகள் அன்பரசிக்கு நிச்சயதார்த்தம். அந்த திருமணத்தை ஒட்டி இந்த முறை ஊருக்கே வந்துவிடும்படி அனுராதா கணவரிடம் கூறிக்கொண்டிருந்தார்.
“கவி என்கூட இப்ப எல்லாம் சரியா பேசுறதே இல்லைங்க.. நான் தான் உங்களை கஷ்டப்படுத்தற மாதிரி பேசுறா” என்றார் கலங்கிய குரலில்.
“விடு ராதா, நம்ம பொண்ணு தானே.. எடுத்து சொன்னா புரிஞ்சுக்குவா.. எனக்கே இப்ப உங்க கூட சேர்ந்து இருக்கணும் போல தான் இருக்கு. ஓரளவுக்கு காசும் இருக்குதானே.. அங்க வந்து ஏதாவது தொழில் பார்த்துக்கலாம். நான் இங்க எல்லாத்தையும் செட்டில் பண்ண ஏற்பாடு செய்யுறேன்.” என்று மனைவியை சமாதான படுத்தினார். அடுத்து பேசி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மகளிடமும், “உன்னோட ஆதங்கம் நியாமானது தான் கவி. ஆனா எங்க சூழ்நிலை அப்படி. அம்மா தனியா இருக்கா, அவளை கோச்சிக்காத டா. அப்பா உங்க மாமா பொண்ணு அன்பு கல்யாணத்துக்கு வரும்போது ஊரை காலி பண்ணிட்டு தான் வருவேன் சரியா. போனதை மாத்த முடியாதுடா. இனி அப்பா அங்கனவே இருக்கேன் சரியா” என்றார் வாஞ்சையாக.
“சரி ப்பா.. “ என்று முடித்துக்கொண்டாள் மகள்.
