Skip to content
Post Views: 505
நேற்றிரவு அடிப்பட்ட காலின் ரத்தம் கூட காயவில்லை, விடியற்காலையிலேயே மாறனும், ரதியும் ராணிப்பேட்டைக்கு காரில் புறப்பட்டனர்.
“ரதி.. மணி நாலரை தான் ஆகுது. இன்னும் ஒரு மணிநேரத்தில உன்னை கூட்டிட்டு போய்ருவேன். கவலைப்படாத.”
Advertisement
“என்ன இருந்தாலும் நேத்திக்கே போயிருக்கனும்.. விஜியும், நித்யாவும் போயிட்டாங்க. நான்தான் இன்னும் போகல. கூரைப்புடவை வேற என்கிட்ட இருக்கு.”
“பதட்டமாகாத. ஆறு ஏழரை தானே முகூர்த்தம்.”
Advertisement
Advertisement
“அது கோவில்ல. இந்நேரம் வீட்டில இருந்து எல்லாம் கிளம்பியிருப்பாங்க.”
“உன் ப்ரெண்ட்ஸ்க்கு கால் பண்ணு. வந்துட்டே இருக்கோம்னு சொல்லு.”
Advertisement
வேகமாக காரை செலுத்த ஆரம்பித்தான் மாறன்.
அத்தனை முறை முயன்றும் விஜியோ, நித்யாவோ அலைபேசியை எடுக்கவில்லை. தாராவின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டால் அதிலும் யாரும் அழைப்பை ஏற்கவில்லை.
“போச்சு. எல்லாரும் என் மேல கோவமா இருக்காங்க போல.. யாரும் எடுக்க மாட்டேங்கறாங்க”
“நீ கிளம்பறப்ப மெசேஜ் பண்ண இல்ல. அதான் அவங்கவங்க வேலையை பாத்துட்டு இருந்துருப்பாங்க.”
ரதியின் முகம் சிறு குழந்தையின் தவிப்போடு இருந்தது.
விரைவாக விரட்டி ஒரு மணிநேரத்தில் சொன்னது போல் மாறன் அங்கு இருந்தான்.
தூரத்தே கூட்டம் நிரம்பி வழிந்தது. தெருவில் ஆட்கள் போய்க்கொண்டே இருந்தார்கள். குலை தள்ளிய வாழை மரம் வீட்டை அடையாளம் காட்ட, “அதோ அந்த வீடு தான்..வாங்க போகலாம்.”
“ரதி இந்த கூட்டத்தில் வண்டிய பார்க் பண்ண முடியாது.. நீ இறங்கி உள்ள போ. நான் அடுத்த தெருவுல நிறுத்திட்டு வந்திடறேன்.. திங்க்ஸலாம் நான் எடுத்துட்டு வரேன். நீ பாத்துப்போ.”
என்று அவளை கைக்கொடுத்து இறக்கி விட்டான்.
வாய் கொள்ளாத சிரிப்புடன், மலர்ந்த கண்களுடன் உள்ளே நுழைபவளை வித்தியாசமாகவும், பாவமாகவும் பார்த்தது ஊர்.
வாசலின் உள்ளே நுழைந்தவள், அங்கே கண்ட காட்சியை பார்த்து, “தாராக்கா….” என்று அலறினாள்.
அவளின் அந்த சத்தம் காரை திருப்பியவன் காதில் கேட்க, அப்படியே வண்டியை நிறுத்தி விட்டு ஓடிவந்தான் மாறன்.
அவனின் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.
மணக்கோலத்தில் இருக்க வேண்டியவள் பிணக்கோலத்தில் இருந்தாள்.
மாலை போட்டு, இரு கைகள் கோர்த்து, மஞ்சள் பூசி படுக்கையில் கிடத்தப்பட்டு இருந்தாள் தாரா.
நிர்மலமான, உணர்ச்சியற்ற அவளை பார்த்தவாறே மண்டியிட்டு அப்படியே அமர்ந்தாள் ரதி. விஜியும், நித்யாவும் ஓடி வந்து அவளை கட்டிக் கொண்டு அழுதனர்.
“தாராக்கா நம்மளை விட்டு போய்ட்டாங்கடி..” என்று அழுத அவர்களுடன் பேச கூட முடியாமல் தொண்டை வறள ஓவென்று கத்தி அழுதாள் ரதி..
மாறன் மெதுவாக அவள் பக்கத்தில் வந்து நின்றான்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ரதியை தவிர அங்கு இருந்த அத்தனை பேரும் புதுமுகங்கள்.
“ரதி.. பாரு.. உன் அக்கா எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு அவ பாட்டுக்கு போய்ட்டா.. இன்னிக்கு தாலி ஏறும்னு பார்த்தா பாடையில ஏத்த சொல்லிட்டு போய்ட்டா..” தாராவின் அப்பா வாய் விட்டு கதறினார்..
“ஏன்க்கா.. என்னை வர சொல்லிட்டு இப்படி தனியா போய்ட்ட” ரதி கத்தி அழுதாள்…
“பாவம்.. ஒன்னா படிச்ச பொண்ணுங்க போல.. சின்ன வயசு அதான் அவுங்களுக்கு தாங்கல..” மூவரும் அழுவதை பார்த்து ஊரும் அழத்தொடங்கியது.
“என்ன ஆச்சுப்பா.. ஏன் அக்கா இப்படி இருக்காங்க.. நேத்து நைட் கூட நல்லா தானே பேசினாங்க..”
“இந்த ஊர்ல நாங்க வந்து பொறக்கனும்னு விதி இருக்கப்ப அல்பாயுசுல போகனும்னு தானம்மா விதியும் இருக்கும். இதே பாலாத்து விஷத்தண்ணி குடிச்சு தான் இவ அம்மா போய் சேந்தா.. இப்ப தாரா.. என் தங்க மக, அதே சாயக்கழிவால தற்கொலை பண்ணிக்கிட்டா.. அவ கழுத்துல மாலை ஏறும்னு கனவு கண்டேன்.விடிஞ்சு பார்த்தா கழுத்தொடிஞ்சு நாக்கு தள்ளி தூக்குல தொங்கிட்டு இருக்கா மா..”
மாறனுக்கு திக்கென்றது.. ஆனாலும் ஒன்றும் புரியவில்லை.
“என்ன சொல்றீங்கப்பா.. தூக்குல தொங்கினாங்களா.. நைட் தானேப்பா என்னோட பேசினாங்க, அதுக்குள்ள என்ன ஆச்சு.”
“எத்தனையோ மாப்பிள்ளை பார்த்து வசதியில்லாம, கல்யாணம் தள்ளிட்டே போச்சு.. என் தங்கச்சிக்கு மூத்தார் பையன் வெளிநாட்டுல வேலை பார்க்கிறான், கல்யாணம் முடிஞ்சு உடனே கூப்பிட்டுட்டு போறேன்னான்னு தான் உடனே கல்யாணம் ஏற்பாடு பண்ணேன்… ஆனா அவன் இவளை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் இருக்கான் மா. இவ கர்ப்பப்பைய சோதனை பண்ணனும்னு.. இந்த தண்ணிய குடிச்சு கர்ப்பப்பை புத்து வந்து தானே இவ அம்மா போய் சேந்தா.. அதனால் இவளுக்கு புள்ளை பொறக்குமா.. அந்த கொடு நோய் இருக்குமான்னு செக் பண்ணிட்டு வந்திருக்காங்க.இதை என்கிட்ட சொல்லல இந்த பாவி. நேத்து நைட் தான் மாப்பிள்ளை இவளுக்கு ஃபோன் பண்ணி இவ கர்ப்பப்பை ஃபுல்லா கட்டி இருக்கு. அது அந்த நோயா மாற வாய்ப்பு இருக்கு.. அதனால் புள்ளை பொறக்குறது கஷ்டம்னு சொல்லியிருக்கான். உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னும் சொல்லியிருக்கான். அப்பவாச்சும் என்கிட்ட சொல்லிருக்க கூடாது.. அவன் வேணாம்டா.. எனக்கு பொண்ணாவே இருந்திடுன்னு சொல்லியிருப்பேனே.. நான் இனி இருந்தாலும் யாருக்கும் பிரயோஜனமில்லப்பான்னு லெட்டர் எழுதி வச்சுட்டு தூக்குல தொங்கிட்டு இருக்கா மா.. நான் என்ன பண்ணுவேன்.? இனி எனக்குன்னு யாரு இருக்கா..” அவர் கதறி அழுக, ஊரே உடன் அழ ஆரம்பித்தது.
நல்லவன் என்பது சாவில் தான் தெரியும் என்பது போல் வந்த அத்தனை பேரும் அவளை பார்த்து பார்த்து தாங்க முடியாது கதற ஆரம்பித்தனர்.
மாறனுக்கு விஷயம் புரிந்தது. ஆனாலும் இந்த சாயம், குடிநீர் விஷம் என்பதெல்லாம் அவன் படங்களில் தான் பார்த்திருக்கிறான். இன்று நேரில் பார்த்த அந்த கொடுமை அவனுக்கு இடியாக விழுந்தது. தாராவின் அப்பா நகர்ந்து நகர்ந்து வந்து அவர் மகளின் உடலருகே உட்கார்ந்தார். அவரின் கால் முழுதும் தோல் நோய் தாக்கப்பட்டு கருப்பாக மாறியிருந்தது.
வந்திருந்த பலருக்கும் தோல் நோய், தலைப்பகுதி அங்கங்கே முடி உதிர்ந்து, சிலருக்கு வாயை சுற்றி புண் என்று அப்போது தான் அந்த சூழலை கவனித்தான்.
அவனால் தாங்க முடியவில்லை. ரதி ஒரு பக்கம் கதறி அழுவதை கண்டு தேற்ற முடியவில்லை. அழுதால் தான் அவளின் மனப்பாரம் குறையும் என்பதால் அவளை அங்கேயே விட்டு விட்டு காரை அடுத்த தெருவில் விட போனான்.
அப்போது தான் ராணிப்பேட்டை சாயக்கழிவு பாதிப்பு என்று இணையத்தில் தேடினால் கோடிக்கணக்கான தகவல்கள் வந்து கொட்டின.
ஏதோ ஒரு நாயகன் ஏதோ ஒரு படத்தில் ஒரு காட்சியில் இது போன்று சொல்வதை தான் அவன் பார்த்திருக்கிறான். அடுத்த காட்சியில் அவன் கதாநாயகியுடன் காதல் பாட்டிற்கு நடனம் ஆட போய் விடுவான். ஆனால் இங்கு, இந்த ஒரு நிமிட அழுத்தமே யுகாந்திரமாக சேர்த்து வைத்த பாரத்தை சுமப்பது போல் இருந்தது.
குரோமிய கழிவு என்று மலைப்போல் குவிக்கப்பட்ட படங்களை பார்த்தான். சிப்காட் வேதியியல் கழிவு, சாயப்பட்டறைகள் கழிவு என மொத்தமும் பாலாற்றில் கொட்டப்பட்டு, நிலத்தடி நீரை அத்தனை மோசமாக மாற்றி வைத்திருந்தது.
தொழிற்சாலை கழிவுக்காவது சுத்திக்கரிக்கப்பட்டு நீரை கொட்ட வேண்டும் என்ற தீர்ப்பாவது வந்தது. ஆனால் இந்த குரோமிய கழிவு அப்படியே மலை போல் குவிக்கப்பட்டு அது மெதுவாக நிலத்தை ஊடுருவி மெல்ல மெல்ல மக்களின் வாழ்வையும் பறிக்கும் எமனாக மாறிவிட்டது.
இதையெல்லாம் படிக்கும் போது மாறனுக்கு, நமக்கு அருகிலேயே இவ்வளவு நடந்துக் கொண்டிருந்தாலும் ஏன் தெரியவில்லை என்று தன்மேலேயே கோபமாக இருந்தது.
ஒரு பக்கம் சந்தோஷத்துக்காக கூத்தாடும் ஒரு கூட்டம்.. மறுபக்கம் உயிரை காப்பாற்ற இந்த பணமுதலைகளிடம் தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து போராடி சாகும் கூட்டம்.. நாம் உண்டு நம் வாழ்வுண்டு என்றுதானே நாமெல்லாம் தினமும் எழுந்திருக்கிறோம். ஆனால் நாளை என்ன ஆகும் என்று தெரியாமல் யாரோ சிலரின் சுயநலத்திற்காக அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத மனிதரின் வாழ்க்கை அஸ்தமித்து போவது எந்த விதத்தில் நியாயம். மாறன் கேள்விகளால் தன்னையே காயப்படுத்திக் கொண்டான்.
மெதுவாக ரதி கொண்டு வந்த புடவை, மற்ற பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்தான்.
“பாருங்க.. தாராக்கா எப்படி கிடக்கறாங்க பாருங்க..மாறன்..”
“ரதி..” என்று அவளின் தோளை அழுத்தினான் மாறன்.
“ உனக்கு பிடிச்ச ரத்த சிவப்பு கலர்ல கூரைப்புடவை நெய்ய சொல்லி எடுத்துட்டு வந்தேன்க்கா..இப்போ உனக்கு கோடிப்புடவையா போட வச்சிட்டியே..” அவள் கதறியதை பார்த்து அங்கு இருந்த அத்தனை பெண்களும் ரதியை ஓடிவந்து கட்டிக்கொண்டு அழ ஆராம்பித்தனர். மாறனின் கண்கள் நீர்வீழ்ச்சியை போல் கண்ணீரை கொட்டிக் கொண்டு இருந்தன.
தாராவுக்குப் பிடித்த அதே சிவப்பு… ஆனால் ரதி ஆசையாக நெய்த அந்தப் பட்டு நூல் வாசனைக்கு நடுவே, தாராவின் உயிரைக் குடித்த அதே ரசாயனச் சாயத்தின் நெடி அந்த அறையெங்கும் வியாபித்திருந்தது.
“போலீஸ்க்கு சொல்லியிருக்காங்க. அவங்க வந்து தூக்கிட்டு போனா அறுத்து தான் தருவாங்க..” மக்கள் வேதனையுடன் பேசிக் கொண்டார்கள்.
அதே நேரத்தில் காவல் வாகனம் வந்தது.
“ஏங்க சூசைட்னு சொல்லி தகவல் வந்துச்சு. நீங்களா இறக்கி மஞ்சள் பூசி படுக்க வச்சிருக்கீங்க. போலீஸ்க்கு சொன்னா தொடக்கூடாதுன்னு தெரியாதா..? தற்கொலையா கொலையாய்யா.. என்னா கௌரவ கொலை எதாவது பண்ணிட்டீங்களா?” ஆய்வாளர் கேட்க, மக்கள் அத்தனை பேரும் சண்டைக்கு சென்றார்கள்.
“நாங்க அத்தனை பேரும் அந்த பொண்ணு தூக்குல தொங்கினதை பாத்தோம். பிள்ளைய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகலாம்னு தான் இறக்கினோம். ஆனா உயிர் இல்ல.. சில்லுனு போய்டுச்சு. அதான்யா உங்களுக்கு தகவல் கொடுத்தோம்.”
“உயிர் போறப்ப நீங்க பாக்கல இல்ல.. அப்ப எப்படி இது தற்கொலைன்னு நம்பறது..நாங்க இன்ஸ்பெக்ட் பண்ணாம நீங்க பண்ணது தப்பு. “
“சார். அந்த பொண்ணோட அப்பா மட்டும் தான் சார். அவரால் நடக்க கூட முடியாது. அவர் சொந்தக்காரங்க கூட தான் கல்யாணம் ஏற்பாடு ஆகியிருக்கு. அப்படி இருக்கப்ப நீங்க சொல்ற மாதிரிலாம் நடக்க வாய்ப்பே இல்ல. அவங்க லெட்டரும் அப்படி தான் எழுதி வச்சிருக்காங்க.”
மாறன் சொல்லியும் ஆய்வாளர் கேட்கவில்லை.
ரதி அவனை, ‘எதாவது செய்’ என்பது போல் பார்த்தாள்.
உடனே ரேணுவின் அப்பா அன்புச்செல்வனுக்கு பேசினான். அவர் அவரால் ஆனதை கட்சி மேலிடத்தின் மூலம் செய்தார்.
“ஏங்க அதான் கவர்ன்மென்ட் இந்த கரைல இருக்காதீங்கன்னு அத்தனை முறை சொல்லுதே. இன்னும் இங்க இருந்துட்டு எதுக்கு செத்துன்னு இருக்கீங்க” ஆய்வாளர் கேட்க,
“காலம்காலமா நாங்க வாழ்ற இடத்தை விட்டுட்டு எங்க சார் போறது..”
“ஆமா இதே டயலாக்கை சொல்லுங்க..”
மருத்துவமனையிலும் அன்புச் செல்வனின் தலையீட்டால் இரவுக்குள் போஸ்ட் மார்ட்டம் செய்து அனுப்பப்பட்டது.
ரதி கொண்டு வந்த மஞ்சள், குங்குமம், வளையல், புடவை என அத்தனையும் அவளின் இறுதி ஊர்வலத்திற்கு தான் உபயோகப்பட்டது.
மாறன் ரதியுடனேயே இருந்தான். அவளுக்கு வழக்கம் போல் மயக்கம் வந்து விடுமோ என்று பயம் வேறு. ஆனால் அந்த வீட்டின் இன்னொரு பெண் போல, தாராவை மகாராணியை போல் அனுப்பி வைத்தாள் ரதி.
தாராவின் அப்பாவை தேற்ற முடியவில்லை என்றாலும் அவரின் உடன்பிறந்தோர் தாங்கள் பார்த்துக் கொள்வதாக சொல்ல, அவரிடம் மாறனிடம் வாங்கிய பணத்தை கைகளில் திணித்து விட்டு கிளம்பினாள் ரதி. விஜியும், நித்யாவும் அவளுடன் காரில் ஏறினர்.
பாலாற்றங்கரை வழியே அவர்களின் பயணம் இருந்தது.
காரின் மௌனம் கனத்து போய் கிடந்தது. யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. முன் இருக்கையில் அமர்ந்திருந்த ரதியை திரும்பி பார்த்தான் மாறன். அவளின் கண்கள் கண்ணீரை தாரை தாரையாக வழியவிட்டுக் கொண்டே இருந்தன.. மெல்ல அவளின் கைகளை பிடித்துக் கொண்டான். அந்த அழுத்தம் அவளுக்கு சிறு ஆறுதலாக இருந்தது.
“இப்போதான் நெட்ல பாத்தேன்.. இந்த சாயக்கழிவு, குரோமிய கழிவுன்னு. நூறு கிலோமீட்டர் தள்ளி இருக்க எனக்கு இதை பத்திலாம் தெரியலன்னு நினைக்கறப்ப கஷ்டமா இருக்கு. ரதி நாலு நாளா தாரா தாரான்னு சொல்லிட்டு இருந்ததை பாத்துட்டு இங்க வந்தப்ப அவங்க கிடந்த கோலம் என்னையவே ரொம்ப பாதிச்சது.. கூடவே பழகின உங்களுக்கெல்லாம் தாங்க முடியாம தான் இருந்திருக்கும்.”
“தாராக்கா எங்க மூணு பேருக்கும் அக்கா மாதிரி. அவங்க அவ்ளோ நல்லவங்க. அவங்களுக்கு வந்த சோதனை எல்லாம் யாருக்கும் வரக்கூடாது. ஆனாலும் அதையெல்லாம் அவங்க போராடி ஜெயிச்சு வந்தாங்க. அவங்க கம்ப்ளைண்ட் பண்ணிதான் கேஸ் கோர்ட்டுக்கு போச்சு. நிறைய பேர் அவங்களோட போராடி சாயக்கழிவு டைரக்டா ஆத்துல போக கூடாதுன்னு தீர்ப்பு வந்துச்சு.. ஆனா தனக்கே அந்த பாதிப்பு இருக்கும்னு அவங்க நினைசசு பாத்திருக்க மாட்டாங்க. எங்களை அந்த அண்ணனோட பேசப்போறேன்னு வெளிய அனுப்பினாங்க. நாங்களும் கிண்டல் பண்ணிட்டு வந்துட்டோம்.. பக்கத்து வீட்ல தங்க ஏற்பாடு பண்ணாங்கன்னு அங்க போய்ட்டோம்.. ரதி நேத்தே வந்திருந்தா நாங்க அவங்களோடவே இருந்திருப்போமோ என்னமோ..”
விஜி சொல்லியதும் ரதி அவர்களை திரும்பி பார்த்தாள்.
“நான் வரக் கூடாதுன்னு தான் என் விரல்ல அடிப்பட்டு இருக்கு போல.. அவங்க உயிரை எப்படியும் இன்னிக்கு எடுத்தாகனும்னு தான் அந்த கடவுள் நினைச்சிருக்கார் போல..”
“இதே பாலாறு தான் அவங்க உயிரை குடிச்சிருக்கு..” நித்யா சொல்ல,
“பாலாறு என்னடி பண்ணுச்சு..மனுஷங்க பண்ண தப்பை இயற்கை மேல் ஏன் போடற.” ரதி கேட்டாள்.
“ இந்த சாயக்கழிவுன்னு சொல்றது நீங்க போடற சாயமும் தானா..” மாறன் கேட்டதும் அடிப்பட்டது போல் பார்த்தாள் ரதி.
“நாங்க போடறது மட்டுமில்ல.. லெதர்க்கு, மத்த துணிங்களுக்கு போடற எல்லா கழிவும் ஆத்துல தான் போது..” விஜி சொன்னாள்.
“அப்ப நம்ம ஊர்ல நீங்க சாயத்தை எங்க கொட்டறீங்க?”
“நாங்க போடறதுலாம் தனியார் தொழிற்சாலை ஒருத்தவங்க வந்து கண்டெய்னர் லாரில வாங்கிட்டு போவாங்க. ஆனா இன்னும் நம்ம ஊர்ல யாருக்கும் தெரியாம கலசப்பாக்க ஆத்துல கொண்டு போய் கொட்டிட்டு தான் வராங்க. அதெல்லாம் சங்கத்துல கடுமையா சட்டம் போட்டு எல்லாருக்கும் தெரியப்படுத்தனும்.. நம்ம சங்கத்தலைவர் வட்டி வசூல் பண்றதுலேயே பிசியா இருக்கார்..”
நித்யா சொல்ல, விஜி அவள் கையை அழுத்தினாள். அதை கண்ணாடி மூலம் பார்த்தான் மாறன்.
“ரதி.. நான் ஒரு முடிவு பண்ணியிருக்கேன். இது தாராவுக்காக. அவங்களை இழந்த உனக்காக.”
மூவரும் அவனையே பார்த்தார்கள்.
“நான் ஆயில் ரெஃபைனரி ஓபன் பண்ண போறதில்ல. இந்த மாதிரி கழிவுகளை பாதுகாப்பா ‘ஜீரோ லிக்விட் டிஸ்போஸ்’ செய்யவும், முடிஞ்சா சாயத்தையே கெமிக்கல் இல்லாம உருவாக்க முடியுமான்னு தான் யோசிக்க போறேன். அடுத்த ஜென்ரேஷனுக்காவது சுத்தமான நிலத்தையும், காத்தையும், தண்ணியையும் கொடுக்கனும். நீங்க மூணு பேரும் இதுக்கு எனக்கு உதவியா இருக்கனும்..”
ரதி அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்.
“சாயம் கெமிக்கல் இல்லாம எப்படி. ஏற்கனவே உங்கப்பா கொண்டு வந்த அக்ரிமெண்ட் பிரச்சினையால துணி நெய்யவே முடியாதுன்னு நிலைமைல இருக்காங்க. சொசைட்டிக்கு உங்க தறி புடவை மட்டும் தான் போகுது. ரதி அப்பாவும், எங்க கடையும் மட்டும் தான் ஏதோ கைத்தறிய ஓட்டிட்டு இருக்கோம். இப்ப சாயம் இல்லாம பட்டுப்புடவைன்னா எல்லாருக்கும் பயம் வரும் இல்ல.. எப்பிடி பொழைப்பு ஓட்டறதுன்னு..” விஜி கேட்டாள்.
“பிரச்சினை வந்தா தீர்வுன்னு ஒன்னு அது கூடவே இருக்கும். நீங்க என்னோட இருங்க.. சீக்கிரமா இதுக்கு ஒரு வழியை கண்டுப்பிடிக்கலாம்.”
மூவரும் தலையை ஆட்டினர். அவர்கள் வீடு வரும்போது இரவு ஆகிவிட்டிருந்தது.
“ரதி.”
“ம்ம்.. “
“உனக்கு ஆறுதல் சொல்ல எனக்குத் தெரியல. ஆனா இந்த மனக்காய்த்துக்கு மருந்து போட என்னால முடிஞ்சதை செய்வேன். இன்னிக்கு நீ தனியா ரூம்ல படுக்க வேணாம். இங்க கூடத்திலேயே படுக்கலாம்”
என்னவோ அவனிடம் எதிர்த்து பேச அவளுக்கு தோன்றவேயில்லை. சொல்லப்போனால் அவனுடன் இருப்பது ஒரு ஆறுதலை தந்தது.
அவன் விரித்த படுக்கையில் அமர்ந்தாள். அவளின் முகம் வீங்கியிருந்ததது.
மெல்ல அவளின் அருகில் அமர்த்தான். அவனின் நெருக்கம் அவளுக்கு அன்னியமாக தெரியவில்லை.
அவளின் தோள் மீது கைகளை சேர்த்து தன் தோள் மேல் சாய்த்துக் கொண்டான்.
ஏனோ இந்த நிமிடத்திற்கு இந்த தோள் சாயல் நிம்மதியை தரும் என்று தோன்றியது.
அங்கு வார்த்தைகளுக்கு அவசியம் ஏற்படவில்லை.
அவளை தாங்கும் இதயம் ஒன்று அவளுடன் இருக்கிறது என்ற நினைப்பே அவளுக்கு ஆறுதல். அவளின் விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டான். தாமாகவே அவளின் விரல்கள் அவனுடைய விரல்களை இறுக்கமாக கோர்த்துக் கொண்டது. இரு ஆன்மாக்களின் தழுவல் அது. காதலுக்கு அப்பாற்பட்ட உணர்வு அது.
வானம் பார்த்து அவர்கள் அப்படியே நிலத்தில் சாய்ந்தார்கள். வானத்தில் திருவாதிரை நட்சத்திர கூட்டம் மங்கலாக தெரிந்தது. ரத்த சிவப்பின் நிறம் இன்று இளம்மஞ்சளாக மாறியது போல் இருந்தது.
பூத்துக்குலுங்கும் பூமிக்கு துரோகம் செய்ய மனிதனுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அவனுக்கு ஆறறிவு. அதே ஆறறிவை கொண்டு அதே பூமியை பாதுகாக்க மாறன் போன்ற மனிதர்களும் உண்டு.. அவர்களை அந்த நிலம் தாயாக தாங்கிக் கொள்ளும். ஏனென்றால் அதற்கு அறிவு என்ற ஒன்று தனியாக இல்லை. உணர்வு தான் அதன் அறிவு.
.
error: Content is protected !!