Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

25. Kala Palaniappan - காஃபி வித் காதல்

காஃபி வித் காதல் 4

அத்தியாயம் 4 

 

சொன்னதை போலவே அன்பரசியின் திருமணத்திற்கு நான்கு தினங்களுக்கு முன்பாக துபாயில் இருந்து தனது  பெட்டி படுக்கையை கட்டி கொண்டு ஊருக்கு திரும்பி இருந்தார் விஜயன்.

 



Advertisement

திருமணத்திற்காக அனைவரும் இப்பொழுது சண்முகம் வீட்டில் தான் இருந்தனர். சண்முகம் சாந்தி குடும்பம் இருப்பது அவர்கள் பெற்றோர்கள் காலத்து வீடு. தொழில் வளர வளர மற்ற இரண்டு தம்பிகளும் தனியே வீடு கட்டிக்கொண்டு சென்றுவிட்டார்கள். இந்த வீடு அதனால் சண்முகத்திற்கு என்றே கொடுத்துவிட்டனர். அந்தக்காலத்து பெரிய வீடு. 

 

காலை ஆறுமணிக்கு விஜயன் தூங்கி எழுந்து அப்பொழுது தான் வெளியே வந்தார்.

Advertisement

 

Advertisement

அவர் ஊருக்கு வந்ததில் இருந்தே, மச்சான் மச்சான் என்று அனுராதாவின் மூன்று அண்ணன்களும் அவரை சுற்றி சுற்றி வந்தார்கள். எப்பொழுதுமே தங்கை கணவர் என்றால் பிரியம் அதிகமே. இப்பொழுது தங்களுக்காகவே இரண்டு வருடங்கள் உழைத்து உதவிய மச்சான் மீது எல்லை இல்லா அன்பு பொங்கிற்று.

 

“மச்சான் இங்க வந்து ஃபேனுக்கு கீழே உட்காருங்க, வேர்க்குது பாருங்க” என்று  பெரியவர் சண்முகம் விஜயனை அழைத்து வந்து ஃபேன் கீழே அமர வைத்தார்.

Advertisement

 

பால் வாங்கிக்கொண்டு உள்ளே வந்த சாந்தி, “ஏங்க, அண்ணே இப்ப தானே எழுந்திருச்சு வர்றாங்க, பாத்ரூம் போய் பல்லு விலக்க வேண்டாமா? கொஞ்சம் அவரை பிரீயா விட்டுட்டு போங்க அங்குட்டு” என்று கணவரை கடுப்படித்து விட்டு பால் தூக்குடன் அடுப்படிக்குள் நுழைந்தார்.

 

ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும்.

 

“இந்தாங்க மச்சான் இளநீர் குடிங்க. வெய்யிலுக்கு உடம்புக்கு நல்லது” என்று இளநீர் ஒன்றை கொண்டு வந்து அவரிடம் கொடுத்திட்டார் இரண்டாவது அண்ணன் சிங்காரம்.

 

“காலையிலேவா?” என்று கேள்வியாக பார்த்தார் விஜயன்.

 

“மச்சானுக்கு ஸ்ட்ராவ்ல தான் குடிக்க வரும்”, என்று கூறிக்கொண்டே ஒரு ஸ்ட்ராவை கொண்டு வந்து கொடுத்தார் கடைசி அண்ணன் சரவணன்.

 

“பேசாம குடிச்சிருங்க மாமா, இல்லைன்னா மடியில படுக்க வச்சு சங்கு வச்சு வாய் குள்ள ஊத்தி விட்டாலும் ஆச்சர்யம் இல்ல” என்று கிசுகிசுப்பாய் கூறினாள் எழிலரசி.

 

இளையவர்கள் அனைவரும் விஜயனுக்கு பின்புறம் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள்.

 

செஞ்சாலும் செய்வாங்க என்று இளநீரை குடித்து வைத்தார் விஜயன்.

 

ஒரு ஐந்து நிமிடங்கள் சென்று,

 

“ஏம்மா அனு, மச்சானுக்கு இந்த எண்ணெய்யை தேய்த்து விடுமா? உடம்பு சூடு குறையும் இல்லையா? நல்லெண்ணெயில் மிளகு, பூண்டு எல்லாம் தட்டி இளஞ்சூட்டோடு இருக்கு” என்று கிண்ணத்தை கொண்டு வந்து அனுராதாவிடம் கொடுத்தார் சரவணன்.

 

அனுராதாவும் உடனே கணவரிடம் வரவும், 

 

அவரோ “யாராவது காப்பாற்றி விடுங்களேன்” என்று பாவமாக சுற்றி சுற்றி பார்த்தார்.

 

அன்பரசியும் தமிழரசியும், “இருந்தாலும் மாமா நீங்க எங்க அப்பாக்களை பாராட்டத்தான் வேணும். நாங்களே தேய்ச்சி விடறோம்னு சொல்லாம அத்தையை அனுப்புறாங்க பாருங்களேன்” என்றனர் சிரித்து கொண்டே.

 

பக்கத்தில் வந்த மனைவியிடம், “இப்ப வேணாம் ராதா, காஃபி குடிச்சிட்டு அப்புறமா நானே தேய்ச்சிக்கிறேன். அங்கே வைச்சிட்டு போ” என்றார் கொஞ்சம் கரார் குரலில்.

 

“அக்கா, கல்யாண வேலைய பாருங்கன்னு சொன்னா மாத்தி மாத்தி கூத்தடிச்சு கிட்ட இருக்காங்க” என்றார் ரேவதி கடுப்பாக தன் பெரிய ஓர்ப்படி சாந்தியிடம்.

 

“பாவம் ரேவதி அண்ணே, இவங்க அடிக்கிற கூத்துல, திரும்ப துபாய்க்கே போய்டலாம்ணு நினைக்க போறாரு” என்றார் இரண்டாம் ஓர்ப்படி மீனா.

 

“சீக்கிரம் இந்த காஃபிய கொண்டு போய் கொடுங்க. அதுக்குள்ள அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்க போறாங்க” என்றார் சாந்தி சிரித்துக்கொண்டே.

 

பொதுவாக காஃபி மட்டும் குடித்து கிளம்பும் அண்ணன் தம்பிகள் கல்யாணத்திற்கென இரண்டு நாள் லீவ். இப்பொழுதைக்கு அவர்கள் ஒரே வேலை மச்சானை கவனிப்பதே.

 

“இங்க பாருங்க மச மசன்னு இங்கனவே இருக்காம எழுந்து வேலைய பாருங்க. காலை சாப்பாட்டுக்கே சொந்தக்காரங்க எல்லாம் வர ஆரம்பிச்சிடுவாங்க. கவி வீட்ல இருந்தும் எல்லாரும் வந்துடுவாங்க. காலையில நலுங்கு வைக்க அக்கம் பக்கம் எல்லாம் வர ஆரம்பிச்சிடுவாங்க. விரசா குளிச்சு கிளம்பி வாங்க எல்லாரும்”  என்று அதட்டலாக கூறினார் சாந்தி.

 

“அவ்வளவு தான் அண்ணி, அடுத்து மச்சானுக்கு எண்ணெய் மட்டும் தான் தேய்க்கணும், அதுக்கப்பறம் எங்களுக்கு வேற வேலை என்ன? கிளம்பிடுவோம்“ என்று சிங்காரம் கூறியதை கேட்டதும் குடித்து கொண்டிருந்த காஃபி புரை ஏறிவிட்டது விஜயனுக்கு.

 

“உங்களை.. ஏங்க அவரை போட்டு இந்த பாடு படுத்துறீங்க” என்றார் மீனா சிரித்துக்கொண்டே.

 

பின் கவியரசி, அவள் கணவன் கவின், மாமனார் மாமியார் என்று அனைவரும் வந்தார்கள். கவியை உள்ளூரில் தான் கட்டிகொடுத்திருந்தார்கள்.

 

கவியரசியின் வரவிற்கு பிறகு அண்ணன் தம்பி மூவரும் கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள்.

 

விஜயனும் இதை கவனித்தார்.

 

கவி அம்மாவுடனும் மாமாக்களுடனும் முகம் கொடுத்து சரியாக பேசவில்லை.

 

காலை உணவிற்கு பிறகு, கவியை தனியே அழைத்து பேசினார்.

 

“ஏன்டா கவி, ஏன் அம்மா கூட மாமா கூடவெல்லாம் சரியா பேச மாட்டேங்குற?”

 

“இல்லையே, நல்லாத்தானே பேசறேன்”

 

“அப்பாக்கு வித்யாசம் கண்டிப்பா தெரியுது. உனக்கு நான் கூட இல்லைன்னு வருத்தம். அது எனக்கே தெரியும். அதுக்காக அவங்க என்ன செய்வாங்க?”

 

“பின்ன அவங்க எல்லாரும் அவங்க பசங்க கூடவே தானே இருக்காங்க.. என்னை மட்டும் எங்க அப்பா கூட இருக்க விடாம பண்ணிட்டாங்க தானே.. இப்ப பாருங்க அன்பு கல்யாணத்துல ஒன்னு ஒன்னையும் எப்படி பார்த்து பார்த்து செய்றாங்க?”

 

“உன் கல்யாணத்துல அவங்க செய்யலையா?”

 

“அது எல்லாம் செய்யலன்னு எப்படி சொல்வேன்? இதைவிட இன்னும் பார்த்து பார்த்து தான் செஞ்சாங்க” என்றாள் உள்ளே சென்றுவிட்ட குரலில்.

 

“அவங்க சொல்லியா அப்பா அங்கே போனேன். நான் பத்தாவது தான் படிச்சிருக்கேன், ஆனா துபாய்ல என் வருமானம் எவ்வளவு சொல்லு.. இங்க வந்தா அவ்வளவு வருமானம் கிடைக்காது. உங்க அம்மாவுக்கோ அங்க ஒத்துக்கலை.. இதுல யார் மேலே தப்பு சொல்ல. சூழ்நிலை அப்படி நமக்கு அமைஞ்சிடுச்சு”

 

“புரியுதுப்பா.. சின்ன வயசுல சரி.. இப்ப என் கல்யாணம் முடிஞ்சு வரேன்னு சொன்னீங்க தானே?”

 

“ஆமா, என்னை வரவேண்டாம்னு யார் சொன்னா?”

 

“மாமாங்களுக்கு தொழில்ல கொஞ்சம் சிரமம்னு தானே நீங்க உதவி செய்ய அங்கேயே இருந்தீங்க?”

 

“அது தப்புன்னு சொல்றீயா?”

 

“இல்லப்பா.. அது…”

 

“உனக்கு  தெரியுமா தெரியல.. உங்க மாமா மூனு பேரும் தினமும் போன்  போட்டு, நீங்க வந்தா போதும்.. காசு பணம் எல்லாம் பார்த்துக்கலாம்னு தான் சொன்னாங்க”

 

“அம்மா ?”

 

“உங்க அம்மா அண்ணன்களுக்கு உதவனும்னு ஆசை பட்டாத்தான், ஆனா என்ன கட்டாய படுத்துல.

 

உன்னையும் அம்மாவாயம் மட்டும் இல்ல, நான் அங்க இருந்ததுனால எங்க அப்பா அம்மாவை பார்த்துக்கிட்டதும் உங்க மாமாங்கதான். உங்க தாத்தா பாட்டி  இறந்தப்ப நான் கடைசி நேரத்துல கொள்ளி வைக்க தான் வந்தேன். எல்லாத்தையும் பொறுப்பா பார்த்துக்கிட்டது அவங்க தான். கடல் தாண்டி நான் நிம்மதியாவும், நம்ம குடும்பம் பாதுகாப்பாகவும் இருந்தது அவங்களால தானே கவிம்மா.. அதனால் தான் அவங்களுக்கு உதவ ஒரு சந்தர்ப்பம் கிடைச்சதும் நான் அதை விடாம பிடிச்சுக்கிட்டேன்.”

 

“அவங்க அவங்க நியாயம் அவங்க அவங்களுக்கு”

 

“உன் நியாயம் என்ன? உன்னை அப்பா எங்கயும் விடலையே.. இனிமேல் அப்பா இங்கனவே வந்திட்டேன்.. பழசை விட்டுடு தங்கம். நீ சந்தோசமா இருந்தா தான் அவங்களும் சந்தோசமா இருப்பாங்க. அம்மாவும் பாவம்தான் கவி. உன்னுடைய புறக்கணிப்பு அவங்க எல்லாருக்கும் குற்ற உணர்ச்சியை தருது. அது தப்பு இல்லையா?”

 

“சரிப்பா.. நீங்க சொல்றது புரியுதுப்பா.”

 

“இனி இங்க தான் இருக்க போறேன். உன் பிள்ளைங்களை நானும் அம்மாவும் சேர்ந்து வளர்க்க போறோம்.. இனி பழசை  நினைச்சு யாரையும் சங்கடப்படுத்த கூடாது..”

 

விஜயன் பேசிய பிறகு கவியரசி தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டாள் அதற்கு பின் அனைவரிடமும் இயல்பாக பேச தொடங்கினாள்.

 

திருமண சடங்குகள்  இனிதே ஆரம்பித்து அனைத்தும் மிகவும் சிறப்பாக சென்றது. கல்யாணம் வெகு விமர்சையாக நடந்தது, என்ன ஒன்று அண்ணன் தம்பிகள் மூவரும் மச்சானை விட்டு நகரவே இல்லை.

 

அன்பரசியின் கணவன் அருண்கூட மனைவியிடம் கேட்டான் “என்ன அன்பு

செந்தில் ரஜினி காமெடில, மாப்பிள்ளை இவருதான் ஆனா அவர் போட்டிருக்க சட்டை என்னதுங்கிற மாதிரி.. இன்னிக்கு மாப்பிள்ளை நான் தான் ஆனால் உங்க அப்பா பெரியப்பா எல்லாம் அவங்க தங்கச்சி வீட்டுக்காரர் பின்னாடியே இல்லை மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு  சுத்துறாங்க” என்று கேட்டான்.

 

கவிகூட ஒரு கட்டத்தில், “அப்பாவை கொஞ்சம் பிரீயா விடுங்க மாமா.. நான் உங்களை குறையா  நினைக்கலை” என்று  முழுமனதாக இறங்கி வந்துவிட்டாள்.

 

அதன் பிறகான நாட்கள் மகிழ்ச்சியாகவே சென்றது அனைவருக்கும். 

 

ஆனால் ஒரு மாதமே இந்த மகிழ்ச்சி நீடித்தது. அனுராதாவிற்கு திடீர் என்று உடம்புக்கு முடியாமல் போனது. கடுமையான தலைவலி. மருத்துவமனை சென்று ஸ்கேன் செய்து  பார்த்தால் பிரைன் டியுமர் என்றனர்.

 

அனைவரும் தவித்து போனார்கள். இவர்கள் குடும்பத்தின் ஆதார சுருதியே அனுராதா தானே.

 

திருமணமாகி இரண்டு ஆண்டுகளாக குழந்தை பேரு இல்லாமல் இருந்த கவியரசி அதே சமயத்தில் சரியாக கருவுற்றாள். புது வரவை எண்ணி மகிழ்வதா? இல்லை அம்மாவை எண்ணி மருகுவதா என்று புரியாமல் தவித்துப்போனாள் கவியரசி.

 

தங்கையை  எண்ணி  கலங்கி நின்ற அண்ணன்களையும் தாங்கி பிடித்து,

அன்னையை எண்ணி கவலையாக இருந்த மகளையும் தேற்றி விஜயன் தான் திடமாக நின்றார்.

 

இது எல்லாம் நம்ம கையில இல்லை. வாழ்க்கைன்னா எல்லாமே தான் வரும்

நல்லது கெட்டது எல்லாம் மாறி மாறி தான் வரும்.

 

விஜயன் தான் அனைவருக்கும் ஆறுதல் கூறி அடுத்து என்ன என்று யோசிக்க வைத்தார். பெரிய மருத்துவமனையில் அனுராதாவிற்கான சிகிச்சையை தொடங்கினார்கள்.

 

மனைவியை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டார் என்றே கூறலாம். 

சத்தான உணவுகள் எல்லாம் அவரே சமைத்து கொடுத்தார். என்னதான் விஜயனே பார்த்து கொண்டாலும் மூன்று அண்ணன்களும் அண்ணிமார்களும் உறுதுணையாக அவர்களுடனே நின்றனர்.

 

பிள்ளைகள் அனைவரும் கலங்கி போயினர் என்றாலும் எழிலரசி தான் மிகவும் தவித்துப் போனாள். அத்தைமடி மெத்தையடி என்று வளர்ந்தவள் அவள்தான்.

 

முடிந்தவரை அத்தையுடனே தனது நேரத்தை செலவழித்தாள். ஆனால் அவளால் அத்தைப்படும் கஷ்டத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை

 

புற்றுநோயின் தன்மையே அப்படித்தானே! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும் கீமோ  ரேடியோ என்று அனைத்தும் செய்தனர். அனுராதாவிற்கு நோயை கண்டுபிடிக்கும் போதே ஸ்டேஜ் போர். அதனால் அதிகமான பாதிப்பும் ஏற்பட்டிருந்தது.

 

அனைவரின் அன்பும் அக்கறையும் இருந்தாலும் இந்த வைத்தியத்தை தாங்கிக் கொள்ளும் தெம்பு அவரின் உடலுக்கு இருக்கவில்லை, துவண்டு போய்விட்டார்.

 

மனதளவில் அனைவரும் அவர் படும் கஷ்டத்தை பார்த்து, இருந்து கஷ்டப்படுவதை விட , நிம்மதியாக இறைவனடி  சேரட்டும் என்றே நினைக்கத் தொடங்கி விட்டனர்.

 

 ஒரு கட்டத்தில் அனுராதாவுமே அனைவரிடமும் எனக்கு எந்த கவலையும் இல்லை. யாரும் எனக்காக வருத்தப்படாதீங்க என்று அவரது இறப்பிற்கு அனைவரையும் தயார் செய்ய தொடங்கினார்.

 

கவியரசியை தாய்க்கு தாயாக பார்த்துக் கொண்டனர் மாலதி, மீனா, ரேவதி மூவரும். அனுராதா அண்ணிகளிடம் எனக்கு “என் பொண்ணை விட்டுட்டு போறேன்னு கூட கவலை இல்லை, நீங்க எல்லாருமே நல்லபடியா பார்த்துப்பீங்கன்னு எனக்கு தெரியும்.

 

எனக்கு என் வீட்டுக்காரரை  விட்டுட்டு போறேன்னு தான் ரொம்ப வருத்தமா இருக்கு அவருக்கு ஒரு முழுமையான கல்யாண வாழ்க்கையை நான் கொடுக்கலையோன்னு ஒரு எண்ணம். எனக்கு அப்புறம் அவர் தனியா இருக்க கூடாது அவருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைங்க” என்று கேட்டுக்கொண்டார்.

 

அதேபோல் அண்ணன்கள் இடத்திலும் பேசினார், மகளிடமும் கூறினார். கடைசியாக விஜயனிடமும் “எனக்காக நீங்க ஏதாவது செய்யணும்னு நினைச்சீங்கன்னா கண்டிப்பா ஒரு கல்யாணம் பண்ணிக்கணும். வயதான காலத்தில் நீங்க தனியா இருந்து கஷ்டப்படக்கூடாது, உங்களுக்குன்னு ஒரு துணை இருக்கணும்” என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டார்.

 

 மனைவியின் மனதை கஷ்டப்படுத்தக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக அவரும் அந்த வாக்குறுதியை கொடுத்தாரே தவிர அதை நிறைவேற்றும் எண்ணம் அவருக்கு ஒரு துளியும் இல்லை.

 

எழிலரசிக்கு அத்தையின் இந்த பேச்சு பிடிக்கவே இல்லை.

 

“நீ போராடு அத்தை.. கண்டிப்பா இந்த நோயை நாம ஜெயிச்சிடலாம். மாமாகூட நீ தான் நிறைய காலம் சேர்ந்து வாழனும், அதை விட்டுட்டு லூசு மாதிரி பேசாதே” என்று எழிலரசி தான் முழுமூச்சாக இந்த பேச்சை எதிர்த்தாள்.

 

கவியரசி “என் பிள்ளையையாவது சேர்ந்து வளர்க்கிறேன்னு சொன்னீங்களே” என்று கேட்டதும் உடைந்து போனார் அனுராதா.

 

கவியுடனும் சண்டைக்கு போனாள் எழில். “கண்டிப்பா அத்தை வளர்ப்பாங்க.. எதுக்கு எல்லாரும் இப்படி  நெகடிவ்வா பேசுறீங்க” என்று. 

 

அடுத்து வந்த ஒரு வெள்ளிக்கிழமை, கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார் அனுராதா.

 

கார் எடுத்துக்கொண்டு வந்த அண்ணன்களை மறுத்துவிட்டு, எழிலுடன் அவள் ஸ்கூட்டியில் தான் சென்றார்.

 

அத்தையும் மருமகளும் அமைதியாக முருகனை தரிசித்துவிட்டு, எப்பொழுதும் போல அங்கே அமர்ந்தனர்.

 

“பாரு அத்தை, முருகன் கிட்ட நான் வேண்டிக்கிட்டு இருக்கேன். நீயும் இப்ப நல்லா தானே இருக்க. சீக்கிரம் சரி ஆயிடும்” என்று கலங்கிய கண்களுடன் அவருக்கு விபூதி வைத்து விட்டாள்.

 

“எனக்கும் ஆசை தான் டா, நிறைய வருஷம் உங்க கூட எல்லாம் இருக்க.. ஆனா தலைவலி என்னால தாங்கவே முடியல. என் தலையில அப்படியே ஒருத்தர் கடப்பாரை வைச்சு குத்துற மாதிரி வலிக்குது.. ஒரு சமயம் தலைக்குள்ள பட்டாசு வெடிக்கிற மாதிரி இருக்கு.. மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிட்டு, வயிறு எல்லாம் எரியுது. தண்ணீ கூட குடிக்க முடியல. நான் கண்டிப்பா உனக்கு தான் பொண்ணா வந்து பிறப்பேன் பாரேன். ஏனா, நான் அதை தான் முருகன் கிட்ட வேண்டிகிட்டேன்” என்றார் சோபையாக.

 

எழிலரசி அதற்கு பிறகு எதுவும் கூறவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே வந்தது.

 

“உன்னை தவிர மத்தவங்க எல்லாம் ஓரளவுக்கு என் முடிவுக்கு தங்களை தயார் படுத்திக்க ஆரம்பிச்சிட்டாங்க.. எனக்கு ஒரு அமைதியான முடிவுக்காக நீயும் முருகனை வேண்டிக்கடா” என்றார் அவள் தலையை ஆதுரமாக தடவிக்கொடுத்து.

 

வாய்வார்த்தைக்கு கூட அவளால் அதை கூற முடியவில்லை.

 

அமைதியாக இருவரும் வீடு திரும்பினார்கள்.

 

அங்கேயே விஜயன் சமைத்ததை அத்தையுடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு, கல்லூரிக்கு கிளம்பினாள்.

 

அவள் சென்று ஒரு அரை மணி நேரத்திலே, “உங்க மடியில படுத்துக்கவா” என்று கேட்டு விஜயன் மடியில் தலை சாய்த்து படுத்தவர், பின் எழுந்திருக்கவில்லை.

 

வெள்ளி கிழமை  தீர்க்க சுமங்கலியாக கணவரின் மடியிலே தன இன்னுயிரை விட்டார் அனுராதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!