Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

25. Kala Palaniappan - காஃபி வித் காதல்

காஃபி வித் காதல் 6.2

அத்தியாயம் 6.2

பன்னிரெண்டாம் வகுப்பில் விக்னேஷ் எழுபது சதவீதம் எடுத்து தேர்ச்சி ஆகி இருந்தான்.



Advertisement

பால் பாயசம் செய்து அதனை கொண்டாடினார் நாகரத்னா. அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. விக்னேஷ் கூட மகிழ்ச்சியாகவே இருந்தான்.

கார்த்திகேயன் தான் உர்ரென்று சுத்திக்கொண்டிருந்தான்.

Advertisement

Advertisement

“இந்தா கார்த்தி பாயசம்” என்று ஒரு கிண்ணத்தில் பாயசம் வைத்து பெரிய மகனிடம் நீட்டினார்.

“இந்த மார்க்குக்கு பாயசம் ஒன்னு தான் குறை” என்றான் கடுப்பாக.

Advertisement

விக்னேஷின் முகமே விழுந்துவிட்டது.

“ஏன் கார்த்தி இப்படி பேசுற.. அவன் கஷ்டப்பட்டு இவ்வளவு மார்க் வாங்கி இருக்கான்.”

“என்னம்மா நீ? இந்த மார்க் வச்சு நல்ல காலேஜ்ல இன்ஜினியரிங் சீட் கிடைக்குமா? நானே எவ்வளவு டொனேஷன் கேட்பாங்களோன்னு இருக்கேன்?”

“அண்ணா, நான் இன்ஜினியரிங் எல்லாம் படிக்கலை” என்றான் விக்கி.

“அப்புறம் என்ன படிக்கலாம்னு இருக்க?”

“அவன் ஏதாவது டிகிரி படிக்கிறேன்னு சொல்றான் கார்த்தி. எனக்கும் அதுதான் சரின்னு தோணுது.”

“உனக்கு என்னம்மா தெரியும்? டிகிரி எல்லாம் படிச்சா இந்த காலத்துல வேலை கிடைக்குமா?”

“இல்லடா, அவனால இன்ஜினியரிங் படிக்க முடியாது. டிகிரி படிச்சிட்டே, பேங்க் எக்ஸாம்லாம் எழுதலாம்ல.”

“ஓ.. பேங்க் ஆஃபீஸ்ர் ஆக்க போறீங்களா?” என்றான் நக்கலாக.

“இங்க பாரு கார்த்தி, இப்படி பேசுறது இது தான் கடைசி சொல்லிட்டேன்.. அவனுக்கு எது விருப்பமோ அதுதான் அவன் படிப்பான். நீயும் மேலே படி, அவன் டிகிரி படிக்கட்டும்.”

“இல்ல, நான் மேலே படிக்கப்போறது இல்ல.. நான் வேலைக்கு போனா தான் மேனேஜ்மென்ட் சீட்ல இன்ஜினியரிங் பீஸ் கட்ட வசதியா இருக்கும். நான் வேலைக்கு போறேன். இன்ஜினியரிங் காலேஜ் அட்மிஷன் பத்தி விசாரிச்சு  சொல்றேன்..” என்றான் முடிவாக.

ரத்னாவிற்கு ஒன்றும் புரியவில்லை. இது என்ன பேச்சு என்று மகனை பார்த்திருந்தார்.

“அப்பா இருந்தாலும் இதை தான் செஞ்சிருப்பாங்க.. இப்ப அப்பா இல்லல, அப்ப நான் தானே முடிவு எடுக்கணும்.. நான் சொல்றதை ரெண்டு பேரும் கேளுங்க” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

விக்கி பாவமாக ரத்னாவை பார்த்தான்.

அவருக்கு புரிந்தது, குடும்ப தலைவனாக மாற நினைக்கிறான் மகன் என்று. 

“விடு விக்கி, நீ போய் உன் பிரண்ட்ஸ்க்கு எல்லாம் சாக்லேட் கொடுத்திட்டு வா.. அம்மா பேசுறேன்”, என்று சின்ன மகனை வெளிய அனுப்பி வைத்தார்.

கார்த்திக்கு தான் பேசியது அதிகம் என்று தோன்றியது. இருந்தாலும் சரியான முடிவை எடுக்கும் பொறுப்பு தனக்கு இருப்பதாகவே நினைத்தான்.

“கார்த்தி” என்று குரல் கொடுத்தார் ரத்னா.

“சொல்லு அம்மா..”

“என்ன விஷயம் கார்த்தி.. நீ தலையெடுத்துட்டேன்னு நிரூபிக்க பார்க்குறீயா?”

“இல்லம்மா.. தம்பிக்கு எது நல்லதுன்னு தான் சொல்றேன்.”

“உனக்கு என்ன தெரியும்னு கேக்குற?”

“——–”

“கண்டிப்பா அவனை இன்ஜினியரிங் சேர்த்தா அவன் பாஸ் கூட ஆக மாட்டான்..”

“நான் சொல்லி கொடுக்கிறேன் ம்மா “

“இல்ல கார்த்தி.. நீ பிடிவாதம் பிடிக்கிற? நீ வேணா உங்க மேம் அந்த நந்திதா கிட்ட கேட்டு பாரு.. அவங்க எது நல்லதுன்னு முடிவு செய்ய உதவுவாங்க.”

“நான் அவங்க கிட்ட பேசறது இல்ல” 

“ஏன்?”

“நான் நல்ல யோசிச்சு தான் ம்மா சொல்றேன்..”

“நான் யோசிக்கவே இல்லன்னு சொல்றியா? மெதுவா யோசிச்சு பாரு, நான் சொல்றது சரின்னு உனக்கே புரியும். மேம் கூட என்ன கோபம்?”

“அந்த நந்திதா மேம் பேச்சே சரி இல்ல.. அவங்க கிட்ட கேட்டா கூட நீங்க சொல்றது  தான் சரின்னு சொல்லுவாங்க”

 

“அது தான் அவங்க கூட இருக்கிற பிரச்சனையா? உங்க அம்மா சரின்னு சொல்றதை உன்னால் ஏத்துக்க முடியலயா?”

“அப்படி இல்லம்மா.. அவங்க வேற ஒன்னு சொன்னாங்க.. உனக்கு இன்னொரு வாழ்க்கை அமைச்சு கொடுக்க சொல்றாங்க” என்று மனதை அரித்து கொண்டிருந்த விஷயத்தை போட்டு உடைத்தான். 

“அவங்க சொன்னா, நானும் உடனே சரின்னு இன்னொரு வாழ்க்கையை ஏத்துப்பேன்னு நீ நினைக்கிறியா?”

“—————–”

“அவ்வளவு தான் உனக்கு உங்க அம்மா மேல நம்பிக்கையா?”

“———————”

“அவங்க அவங்க அபிப்ராயத்தை சொன்னாங்க.. இதுல அவங்க மேலே கோப பட என்ன இருக்கு. அவங்க உனக்கு எவ்வளவு உதவி செய்றாங்க.. இந்த விஷயம் எங்களுக்கு ஒத்து வராது மேம், எங்க அம்மா நிச்சயம் இதுக்கு சம்மதிக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டு அடுத்ததை பார்க்கிறதை விட்டுட்டு, இப்படி கோபிச்சிட்டு இருப்பியா?

அதான் அம்மாவை அடக்கி நாம குடும்பத்தை பார்த்துக்கலாம்னு கிளம்பிட்டியோ?”

“அய்யோ அம்மா அப்படி எல்லாம் இல்ல”

“அப்ப, உங்க நந்திதா மேம் கிட்ட நான் சொன்ன மாதிரி சொல்லிட்டு , அவங்க கிட்ட விக்கிக்கு எது சரியா வரும்ன்னு பேசி பாரு. பாவம் விக்கி.. உனக்கு படிப்பு நல்லா வரதுனால நீ பெரிய ஆளும் இல்லை, அவன் படிப்புல சுமார்னால அவன்  குறைந்தவனும் இல்ல..

அவனுக்கு டிகிரி நல்லதுன்னு எனக்கு தோணுது. நீ விசாரிச்சு, யோசிச்சு  அப்புறம் சொல்லு”

“சரிம்மா.. “

“———–”

“சாரி ம்மா”

“———-”

அதன் பிறகு நாகரத்னா அங்கே நிற்கவில்லை. கடையில் வேலை செய்யும் பெண்மணி வந்துவிடவே, அவருடன் வேலையை பார்க்க நகர்ந்துவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!