Skip to content
Post Views: 5,389
அதிகாலையே எழுந்துவிட்டார் அன்புக்கரசி வாசல் தெளித்து கோலமும் போட்டுமுடித்து பாலையும் காய்ச்சி வைத்துவிட்டார், இரவு வெகுநேரம் விழித்துத் தான் இருந்தார் மகனும் மருமகளும் வரக்கூடும் என்று அவர்கள் வரவில்லை.
நேற்று மாலை ரங்கசாமி அழைத்தபோதும் சிவபாலன் அழைப்பை ஏற்கவில்லை பலமுறை முயன்றுவிட்டு விட்டுவிட்டார் அவர், பொழுதும் விடிந்துவிட்டது இன்னும் அவர்கள் வரவில்லை வாசலை எட்டி எட்டி பார்த்துநிற்கும் அன்புக்கரசியை பார்த்த பவுனுத்தாயி “அன்பு அங்க என்ன வாசல்ல காவல் காக்குற” என்க.
Advertisement
“ஒண்ணுமில்ல பெரியம்மா பாலனும் ப்ரியாவும் இன்னும் காணும் அதான்” என்றார் மெல்ல.
Advertisement
Advertisement
“ஓஹ் ராத்திரி இங்க வரலையா” என்றார் அசட்டையாக.
Advertisement
“இல்ல” என்றார் அன்பு.
சரிதான் உன் மவன் எவனையும் மதிக்கமாட்டான் அவனுக்கு வாய்ச்சவளும் அப்படித்தான் போல ஒரு பொம்பள சொல்லவேண்டாமா இல்ல அவ வீட்டு ஆளுங்கதான் சொல்லவேண்டாமா என்ன பழக்கமோ”.
“விடிஞ்சும் இவ்ளோ நேரம் போய்டுச்சு இன்னும் வராம இருந்தா என்ன அர்த்தம் அங்கேயேதான் இருக்கபோறான்னா எதுக்கு என் வீட்டை இடிச்சு புதுசா வாசல் வெச்சிகிட்டான்” என்று சுப்ரபாதத்தை தொடங்கினார்.
நேரம் காலைப் பத்துமணியை தொட்டிருந்தது வீட்டில் அனைவரும் சாப்பிட்டு முடிந்து அவர் அவர் வேலைய பார்த்திருக்க சிவபாலனின் வண்டி வந்து நின்றது வாசலில் அமர்ந்திருந்த பவுனுத்தாயி கூர்மையாகப் பார்த்திருந்தார்.
ஓட்டுநர் இருக்கையிலிருந்து வெளியில் இறங்கினாள் சக்திப்ரியா இவர் விழிவிரித்து பார்க்கச் சத்தம் கேட்டு வெளியில் வந்த கவிதாவும் அன்புக்கரசியும் ஷர்மியும் கூட ஆச்சர்யமாகப் பார்த்தனர் மறுபக்கமிருந்து இறங்கிய சிவபாலன் யாரையும் பார்க்காமல் வீட்டின் பக்கவாட்டில் நடந்தான்.
அவனைப் புரியாமல் பார்த்துநின்றாள் சக்திரியா வேகமாக அவள் அருகில் வந்த அன்புக்கரசி “என்னாச்சு பிரியாமா கைல என்ன ஏதோ பிளாஸ்டர் ஒட்டியிருக்கு எங்க போனீங்க நீ ஏன் வண்டி ஓட்டிட்டு வர” என்று கேள்விகளை அடுக்கினார்.
“அவருக்கு ரொம்ப ஜுரம் அத்த நைட் வாமிட் பண்ணி ரொம்ப முடியாம இருந்துச்சு உடம்பு வேற அனலா கொதிச்சுது அதான் நைட்டே ஹாஸ்ப்பிட்டல் போய்ட்டோம் அங்கதான் இருந்தோம் இப்போதான் டிஸ்சார்ஜ் செஞ்சாங்க” என்றாள் சோர்வாக.
அவளுக்கும் சரியாக உறக்கமில்லையே முத்து மருத்துமனையிலிருந்து அப்படியே கிளம்பியிருந்தான் வேலை இருக்கிறதே.
“என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே” என்றார் அன்புக்கரசி மகன் சென்ற திசையை வேதனையாகப் பார்த்துக்கொண்டே.
“அவருக்கு எவ்ளோ முடியலைனாலும் யாரும் பாக்க மாட்டாங்களாம் தனியாத்தான் இருப்பாராம் முத்து அண்ணா தான் சொன்னாங்க இனிமே ஏன் தனியா இருக்கணும் அதான் நான் வந்துட்டேனே நானே பாத்துட்டு போறேன்னுதான் யாருக்குமே சொல்லல அத்த” என்றவள்.
“ஏன் அந்தப் பக்கம் போனார்” என்றாள் அன்புக்கரசியிடம் அவள் சொன்ன வார்த்தைகள் அனைவரையுமே ஏதோ வகையில் குத்திற்று அதை விடுத்து “உங்க ரூமுக்கு அந்தப் பக்கம் தான் வாசல்” என்றார் மாமியார்.
“ஓஹ் அவர்தான் நேரான வாசல் வழியா உள்ள வரக் கூடாது அவர் சம்பாத்தியம் மட்டும் உள்ள வரலாம் போல” என்று முணுமுணுப்பதை போல என்றாலும் கேட்கவே சொல்லிச் சென்றாள்.
“என்ன பேச்செல்லாம் பேசுறா பாரு” என்று பவுனுதாயி உக்கிரமாக முறைத்தார், அதையெல்லாம் சட்டை செய்ய அவளுக்கு நேரமில்லை.
அந்தப் பக்கம் நடந்தவளை ஓடி வந்து தடுத்த அன்புக்கரசி “உன்னோட பெட்டியெல்லாம் உங்க அப்பா கொண்டு வந்து கொடுத்தாங்க, ராத்திரி பெரிய வீட்டுக்குப் போய்டுவோம்னு பாலா சொன்னதாவும் சொன்னாங்க எப்படியும் வருவீங்கன்னு காத்திருந்தேன் ஆனா இப்படின்னு எனக்குத் தெரியல” என்றார்.
“பெட்டி எங்க இருக்கு குளிக்கணும் முதல்ல” என்றாள் அவள்.
அவர் உள்ளே அழைத்துச்செல்ல ஒரு பெட்டியை மட்டும் எடுத்துக்கொண்டவள் “மத்ததை அப்புறம் எடுத்துக்குறேன்” என்றுவிட்டு அவர்கள் அறைக்குச் சென்றாள் கதவு வெறுமனே சாற்றி வைக்கப்பட்டிருந்தது.
நல்ல பெரிய அறை தேவையான அனைத்தும் இருந்தது குளியலறையில் சத்தம் கேட்க ‘ஆரம்பிச்சுட்டார்… தலைக்குத் தண்ணி ஊத்திட்டு வருவாரோ’ என்று யோசனையாக நிற்க அதேபோல நீர் சொட்ட சொட்ட வந்து நின்றான்.
“இவரை…” என்று பல்லைக் கடித்தவள் “நேத்து படுக்கிடந்ததெல்லாம் மறந்துடுச்சா ஏன் இப்படி செய்றீங்க” என்றாள்.
அவளை ஒரு பார்வை பார்த்தவன் ஒன்றும் செல்லாமல் தலையைத் துவட்டிக்கொண்டே நகர்ந்தான் “இதுல அறையடிக்கு கூந்தல் வேற காயவே நேரம் ஆகும்” என்று பார்த்தவள் மீண்டும் வேகமாகக் கீழே இறங்கி சென்று பைகளை ஆராய்ந்து அவளுடைய தனிப்பட்ட மேக்கப் பொருட்கள் வைத்திருக்கும் பையை எடுத்துவந்தாள்.
அதிலிருந்து ட்ரையரை எடுத்து வைத்தவள் “இங்க வாங்க” என்றாள் அவனிடம்.
அவன் அசையாமல் நிற்க “எனக்காக ஒன்னும் செய்ய வேண்டாம் ஏற்கனவே தலைல நீர் கோர்த்திருக்கு இதுல இவ்ளோ முடி வேற வெச்சிருக்கீங்க அந்தத் தலைவலியோடே இதுவும் சேர்ந்தா ரொம்ப எரிச்சலா இருக்கும்”.
“மண்டைல யாரோ சுத்தியால அடிக்கிற மாதிரியே இருக்கும் கடுப்பு அதிகமாயி பாக்குற எல்லாரையும் கடிக்க தோணும் முன்னாடி வர எல்லார்கிட்டயும் வள்…” என்றவள் சொல்லிக்கொண்டிருக்க அமைதியாக வந்து நாற்காலியில் அமர்ந்து பின்னில் சாய்ந்து விழிகளை மூடிக்கொண்டான்.
வந்த சிரிப்பை இதழ்களைக் கடித்து அடக்கியவள் வேகமாக ட்ரையரை போட்டு அவன் முடியைக் காயவைத்தாள் அவனுக்கே நல்ல சுகமாக இருந்தது அவள் பேசப் பேசத்தான் அவனுக்குத் தலை வலித்தது இவளுக்கு வாயே வலிக்குதா என்று எண்ணித்தான் வந்து அமர்ந்தான் இப்பொழுது நன்றாகக் காற்றுப்பட்டு தலை காய்ந்திருக்க கொஞ்சம் இலகுவாக உணர்ந்தான்.
“நீங்க ரெஸ்ட் எடுங்க நான் குளிச்சிட்டு வரேன்” என்றவள் வேகமாகக் குளித்துவந்தாள் அவனோ அலைபேசியில் கட்டளைகளை அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தான் அதை முடித்து அவன் வர, கொஞ்சமாகக் காய்ந்திருந்த தலைமுடியை இருபக்கமும் கொஞ்சமாக முடியெடுத்து சின்னக் கிளிப்பில் அடக்கிக்கொண்டிருந்தாள் சக்திரப்ரியா.
இலகுவான ஒரு பட்டியாலா சுடிதார், புதிதாக நெற்றி வகுட்டில் குங்குமம் இடம் பிடித்திருந்தது பளிச்சென்றிருந்தாள்.
“சாப்பாடு எப்படி” என்றாள் அவனிடம்.
அவனால் நம்பவே முடியவில்லை இவள் நேற்றைக்குத்தான் என் மனைவி ஆனாளா எப்படி இவ்வளவு இலகுவாக நடக்கிறாள் என்று பார்த்தான்.
“எனக்கு ரொம்ப பசிக்குது காலைல ஏதோ முழுங்கணுமேன்னு அந்த ரெண்டு இட்லியை முழுங்கி வெச்சேன்” என்றாள் மீண்டும்.
“முத்துக்கிட்ட சொல்றேன் வாங்கிட்டுவருவான்” என்றான் சிவபாலன் கட்டிலில் கால் நீட்டி அமர்ந்துகொண்டு அவனால் இன்னும் முழுதாகப் பொருந்திப்போக முடியவில்லை, நினைவு தெரிந்து அவன் தனியாகத்தான் உறங்குகிறான் எப்பொழுதும் தனிமைதான் இப்பொழுது அவள் உரிமையாக அங்கே நிற்க அவன் அறையே அவனுக்கு அந்நியமாகத் தெரிந்தது.
“மறுபடியும் ஹோட்டல் சாப்பாடா” என்றாள் வேகமாக.
அவன் கேள்வியாகப் பார்க்கவும் “இங்க பாருங்க நாலாம் சோகமா இருந்தாலே குண்டா நிறைய சோறு திங்குறவ எனக்கு இந்த ஹோட்டல் சாப்பாடு சரிவராது நீங்க இந்த வீட்டில சாப்பிட மாட்டீங்க இங்க யார் சமைச்சாலும் சாப்பிட மாடீங்க தெரியும்”.
“ஆனா எனக்குப் புரியல இந்த வீட்டுக்கு மாசம் மாசம் செலவுக்குக் காசு குடுக்குறீங்கல்ல அது இந்த ரூமை யூஸ் செய்ய மட்டுமா” என்றாள்.
“என்ன வந்தனைக்கே கணக்கு கேக்குறியா” என்றான் சீற்றமாக.
“எங்க என்னைப் பார்த்துச் சொல்லுங்க நான் அந்த அர்த்தத்துலதான் பேசினேன்னு நீங்க நம்புறீங்களா” என்றாள்.
“இதை என் கடமையா செய்றேன்” என்றான் இறுகிய குரலில்.
“தாராளமா செய்ங்க நீங்க எவ்ளோ குடுக்குறீங்க ஏன் குடுக்குறீங்கன்னு நான் கேக்கல அதுக்கு அவசியமும் இல்ல பேச்சு வீட்ல சாப்பிடாததை பத்தி மட்டும் தான், இதுவரைக்கும் சாப்பிடல இனிமே நான் சமைக்கிறேன் வீட்டிலேயே சாப்பிடலாமே”.
“மாட்டேன்னு சொன்னீங்கன்னா நான் சாப்பாடு இல்லாம ஹோட்டல் சாப்பாடு பிடிக்காம கொஞ்ச கொஞ்சமா இளச்சு எலும்பும் தோலுமா ஆயிடுவேன் சமையல் பொருள் கூட இங்க இருக்கிறதை எடுக்கக் கூடாதுன்னா நீங்க வாங்கிக்குடுங்க ஆனா இங்கயே நான் சமைக்கிறேன்”.
“ஆனா ரெண்டு அடுப்பு சரி வராது வீணா அது ஒரு பேச்சா வரும் முத்து அண்ணாவும் பாவம் உங்ககூட சேர்ந்து அவரும் ஹோட்டல் சாப்பாடுதான் நமக்கு மட்டும் செய்றேன் ப்ளீஸ் உங்களை நம்பித்தானே வந்திருக்கேன் என் வயறு வாடாம பாக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்குல்ல” என்றவளை பார்த்தவன் அழுத்தமாகப் புருவங்களை நீவினான்.
‘யோசிக்குறாரு யோசிக்குறாரு கோவப்படுவாரோ கொஞ்சம் ஓவரா போறோமோ’ என்று தோன்றினாலும் அசையாமல் நின்றாள்.
‘ஒரே நாள்ல எவ்ளோ பேச்சு நேத்து மாதிரி இன்னைக்கும் ஹாஸ்ப்பிட்டலையே படுத்திருக்கலாம் போல என்னனு இவளை வெச்சு சமாளிச்சாங்க வீட்ல’ என்று எண்ணிக்கொண்டான்.
அவனுக்கும் புரிந்தது உணவு விஷயம் பெரும் பிரச்ச்னைதான் இதுவரை தான் தனி ஆள் எப்படியோ ஓட்டிவிட்டான் இனி அவளையும் பார்க்கவேண்டுமே.
நான்தான் வேணும்னு ஒத்த கால்ல நின்னல்ல இப்படி தான் சாப்பிட்டாகணும் அனுபவின்னு சொல்லிடலாமா என்று வில்லத்தனமான கூட யோசனை ஓடியது.
அதற்குமேல் அவனை யோசிக்கவிடாமல் “இப்போ அம்மாகிட்டயும் சாப்பாடு கேக்க முடியாது நேத்து அங்க பேக் குடுக்க வந்தாங்கல்ல அப்போ என்ன சொன்னாங்க தெரியுமா”.
“இங்க பாருடி கிட்டத்தட்ட இருபத்திரண்டு வருஷமா என் புருஷனை என்கிட்ட இருந்து பிரிச்சு வெச்சுட்ட இனிமேலாவது அவரைக் கூட்டிகிட்டு உன் தொல்லை இல்லாம ஊர் சுத்தலாம்னு இருக்கேன்”.
“அப்பா கிப்பான்னு ஏதாவது கேட்டுகிட்டு வந்த ஊரைக் காலிபண்ணிட்டு போய்டுவேன் அப்படினு சொல்லிட்டாங்க சக்திப்ரியா ரோஷக்காரி சோத்துக்கு செத்தவளா இருந்தாலும் அவங்ககிட்ட இனிமே சோறு கேக்க மாட்டேன்” என்றாள்.
தலையைக் கோதிக்கொண்டே மறுபக்கம் திரும்பியவன் இதழ்களில் இளநகை என்னென்ன நாடகம் போடுறா என்று எண்ணியவனுக்கு புன்னகை இன்னும் விரிந்தது, என்ன ரியாக்ஷனே இல்ல என்று நகம் கடித்தாள் இவள்.
“என்ன வேணும்னு சொல்லு கடைக்குப் போனை போட்டா கொண்டு வருவாங்க போய்ச் சமச்சிக்கோ ஆனா அங்க சமைக்கிற எதுவும் எனக்கு வரக் கூடாது நீயும் எடுக்கக் கூடாது” என்றான் தீர்க்கமாக எல்லா பக்கமும் தலையை உருட்டினாள்.
“லிஸ்ட் போட்டு வை ஆள் அனுப்புறேன்” என்றவன் லாரி ஆபிஸ் கிளம்பிவிட்டான்.
அடுத்த நொடியே முத்துவுக்கு அழைத்தவள் “இனிமே மூணுவேளை என் கையாலதான் சாப்பாடு அவர் வரும்போது அவர் கூடவே வந்து சாப்பிட்டு போகணும் எதிர்த்து ஏதாவது பேசினா இனிமே உங்களுக்கும் எனக்கும் உறவே இல்லை” என்று கூறி அவனுக்குப் பேசவே வாய்ப்பளிக்காமல் அழைப்பைத் துண்டித்தாள்.
ஆபிஸ் வந்த சிவபாலனிடம் முத்து இதைக் கூற “அவ என்ன சொல்றாளோ செய் உன் தங்கச்சி திரும்பப் பேச ஆரம்பிச்சுடுவா கேக்க என் காதுக்குத் தெம்பு இல்ல” என்றுவிட்டு சென்றவனை இவன்தான் அதிர்வோடு பார்த்துநின்றான்.
முதல் நாள் சமைக்கிறாள் அதுவும் கணவனுக்காக வகை தொகையாகச் சமைக்க ஆசைதான் என்ன செய்யக் காய்ச்சலில் இருப்பவனுக்கு கறிகுழம்பா வைக்க முடியும் முதலில் அழைத்தது தந்தைக்குத்தான்.
விஷயத்தைக் கூறிவிட “ஒரு மணிநேரம் பொறுத்துக்கோ பாப்பா அப்பா வந்திர்றேன்” என்றார் சொன்னபடியே அன்றைக்கு சமைக்க தேவையான பாத்திரம் சமையல் பொருட்கள் மட்டும் புதிதாக வாங்கிக்கொண்டு கணவன் மனைவி இருவரும் வந்து சேர்ந்தனர்.
புகுந்த வீட்டில் முதலில் இனிப்பு செய் என்றார் பூரணி என்ன வேண்டும் என்று அவள் கூறிவிட அதையும் வாங்கி வந்திருந்தனர் காரட் பாயசம் செய்தாள் சாமி அறையில் அதை வைத்துவிட்டு முதலில் பவுனுத்தாயிக்கு எடுத்துச் சென்று கொடுத்தாள்.
அனைவர் முன்பும் மறுக்க முடியவில்லை எடுத்துக்கொண்டார், மாமியாருக்கும் மாமனாருக்கும் கொடுக்க மிகுந்த சந்தோஷத்தோடு எடுத்துக்கொண்டார் ரங்கசாமி, அன்பரசிக்கு விழிகள் கலங்கிக்கொண்டே இருந்தது.
“நான் நல்லா சமைப்பேன் அத்த தைரியமா சாப்பிடுங்க” என்றவள் தாய் தந்தைக்கு கொடுத்து மற்றவர்களுக்கும் கொடுத்தாள் ஷர்மியும் கவிதாவும் எடுத்துக்கொண்டார்கள் தவிர சாப்பிடவில்லை அவளும் கண்டுகொள்ளவில்லை.
சித்ராவும் சௌமியாவும் மீண்டும் வந்து வாங்கி சென்றனர் “நல்லா இருக்கு அண்ணி” என்றாள் சித்ரா சப்புக்கொட்டி சௌமியாவும் “சூப்பர் அத்த” என்றாள்.
ரங்கசாமிகூட “இன்னும் கொஞ்சம் குடு ஆயி” என்று வாங்கிக்குடித்தார் கவிதாவின் முறைப்பையெல்லாம் சௌமியா கண்டுகொள்ளவில்லை மகேந்திரனும் பூரணியும் மனநிறைவோடே கிளம்பி சென்றனர் போகும் வழியில் லாரி ஆபிஸ் சென்று மருமகனை பார்த்துப் பேசினர்.
“பொண்ணுக்கு பண்டம் பாத்திரம் எல்லாம் குடுக்கணும் அது எங்க உரிமை நீங்க மறுக்கக் கூடாது இப்போ பாப்பா அங்க சமைக்க போறதா சொன்னுச்சு தாய் வீட்டு சீர் குடுக்க எங்களுக்குக் கிடைச்ச வாய்ப்பு நீங்கச் சம்மதம் சொன்னா நாளைக்கு காலைலே எல்லாத்தயும் இறக்கிடுவோம்” என்று அவர் எதிர்பார்ப்போடு கேட்டு நிற்க.
அவர்களின் உரிமை நான் என்ன மறுக்க என்று தோன்றவும் “சரிங்க” என்றுவிட்டான் அப்படியே தஞ்சை கிளம்பிவிட்டனர் தம்பதியர், இன்றே அனைத்தையும் வாங்கி விட வேண்டும் என்ற முனைப்போடு.
நல்ல மிளகு சீராக ரசம், இன்ஸ்டன்ட் மாங்காய் ஊறுகாய் நல்ல குழைவான தயிர் சாதம் வாழைக்காய் வறுவல் என்று சமையலை முடித்துக்கொண்டாள் மறுநாள் காலைக்கு வேண்டுமே என்று இட்லிக்கும் ஊறவைத்துவிட்டு காத்திருக்க சிவபாலனோடு முத்துவும் வந்து சேர்ந்தான்.
“எனக்கு ஒரு டப்பில போட்டுக் குடுத்துடு பிரியாமா அங்க போய்ச் சாப்பிட்டுக்குறேன்” என்றான் முத்து அவள் அமைதியாக அவனையே பார்த்திருக்க சிவபாலன் அவன் கையைப் பிடித்து இழுத்து சென்றான்.
அவனே இந்த வீட்டில் முதல் முறையாகச் சாப்பிட போகிறான் என்னவோ ஒரு தயக்கம் உள்ளுக்குள் தனக்கே இப்படி என்றால் முத்துவுக்கு எப்படி இருக்கும் என்று புரிந்தது ஆகையால் தன் தயக்கம் உதறி அவனை அழைத்துச் சென்றான்.
பவுனுத்தாயிக்கு பற்றி எரிந்தது உடலும் மனமும் “இவனையே தள்ளி வெச்சமாதிரி வெச்சிருந்தா இப்போ வேலைக்கார நாயெல்லாம் உள்ள வந்து உக்காருது” என்று கவிதாவிடம் புலம்பிக்கொண்டிருந்தார்.
சிவபாலனாலே அங்குச் சாதாரணமாக அமர முடியவில்லை அவன் உடல் விறைப்பாகவே இருந்தது இது தேவையா இங்குச் சாப்பிட வேண்டுமா என்று அவன் சிந்தனை செல்ல அவன் கையை அழுத்தமாகப் பற்றினாள் சக்திப்ரியா.
“உங்க மனைவியா உங்க கூட இந்த வீட்டுக்கு வந்திருக்கேன் இங்க நீங்களே அந்நியமா நின்னா என்னை இந்த வீட்டில ஒரு மனுஷியாகூட யாரும் மதிக்கமாட்டாங்க, நீங்க எங்க கூப்பிட்டாலும் உங்ககூட வருவேன் அது அது எப்போவா இருந்தாலும் ஆனா உடனே இங்கேயிருந்து நீங்கப் போகப்போறதில்லை அதுவரைக்கும் இந்த வீட்டுலதான் நானும் இருக்கணும் என் புகுந்த வீட்டில எனக்கான இடத்தை நீங்கதானே முதல்ல தரணும்” என்றாள் அவன் விழிகளைப் பார்த்து.
“உக்காரு சாப்பிடலாம்” என்றான் உறுதியான குரலில் அவர்களோடு அமர்ந்தவள் முதலில் பாயசம் கொடுத்துவிட்டு உணவைப் பரிமாறினாள் மிக மிக எளிமையான உணவு ஆனால் அப்படியொரு சுவையில் இருந்தது.
வயிறு நிறைய அல்ல மனம் நிறைய உண்டனர், முத்து இடையிடையே விழிகளைத் துடைத்துக்கொண்டான் பார்த்தவளுக்கு உள்ளம் நெகிழ்ந்தது ஆனால் அவனிடம் கேட்டு அவனைச் சங்கடப்படுத்தவில்லை அன்புக்கரசி சேலை தலைப்பால் கண்ணீரை துடைத்துக்கொண்டே அடுப்படி வாசலில் அமர்ந்துகொண்டார்.
அருகில் அமர்ந்திருந்தவளின் கரங்களைத் தேடி பிடித்து இறுக்கமாகக் கோர்த்துக்கொண்ட சிவபாலன் “தேங்க்ஸ்” என்றான் கரகரத்த குரலில் சக்திப்ரியா அவன் தோளில் முகத்தை அழுந்தப் புதைத்தாள், அவளின் விழிநீர் அவன் சட்டையை நனைக்க சிவபாலன் வேறுபுறம் பார்த்துத் திரும்பிக்கொண்டான்.
error: Content is protected !!