Skip to content
Post Views: 1,690
உன்னாலே உனதாகிறேன் 3
மாலை மங்கி இருள் கவிழ்ந்தாலும் நிலவின் ஒளி எங்கும் நிறைந்து இனிய ஏகாந்தம் நிலவியது. முற்றம் வைத்த அந்தப் பழைய வீடு குமரனின் பாட்டானார் காலத்துக் கட்டிடம்.
Advertisement
அன்றைய செட்டிநாட்டு கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் சுத்துக் கட்டு வீடு. ஆறு அறைகள் கொண்ட சிறிய வீடுதான். ஆனாலும் அதுதான் குமரனின் உலகம்.
பெற்றோர்கள் மதுரையில் இருந்தார்கள் என்பது கூட இவனுக்கு இவனது ஐயா அப்பத்தா சொன்னதால் மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது. மத்தபடி அவனுக்கு அவர்களோடு பெரிதாக எந்த நினைவுகளும் இல்லை.
Advertisement
Advertisement
குமரனுக்கு அம்மா அப்பா இல்லை என்பது பெரும்பாலும் குறையாக இருந்ததில்லை. வள்ளி அப்பத்தாவின் அன்பும் முருகய்யாவின் அரவணைப்பும் அவனுக்குப் போதும் என்கிற அளவுக்குக் கிடைக்கிறதே. முருகய்யா வள்ளியம்மாள் தம்பத்திகளுக்கு ஒரு பெண்ணும் இரண்டு ஆண் பிள்ளைகளும். மகள் கனகா திருமணமாகி குடும்பத்தோடு நத்தத்தில் வசிக்கிறார்.
மகன்களில் பெரியவர் கதிர்வேலன். அவர் மனைவி வசந்தி. இவர் அரிசி மண்டி வைத்து வியாபாரம் செய்கிறார்.
Advertisement
இவரது பெரிய மகன் சரவணன். அவனது அத்தை கனகாவின் மகள் சுதாவைத் திருமணம் செய்து, பிள்ளைகள் அனுஷா மற்றும் அரவிந்தனுடன் இதே வீட்டில் அம்மா அப்பாவோடு ஒன்றாக வசிக்கிறார்கள். சரவணன் கோட்டையூரிலேயே பணிபுரியும் அரசு வங்கி ஊழியன். இளையவன் கருணாகரன். இறைவனின் மாபெரும் கருணையால் இன்று தெய்வம் ஆகிவிட்டான்.
அடுத்தது குமரனின் அப்பா செந்தில்நாதன், அம்மா அஸ்வதி. இருவருமே காலம் சென்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள். அந்தத் தகவல் மட்டுமே குமரனையும் ஆசிரியர் பணிக்கு உந்தித் தள்ளியது. முனைவர் பட்டம் பெறும் முன்னரே அரசுத் தேர்வில் தகுதி பெற்று அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இயற்பியல் துறையில் விரிவுறையாளராக இருக்கிறான்.
பணிக்கு சேர்ந்ததுமே குமரனது கல்யாணப் பேச்சும் வந்தது. முனைவர்.குமரவேல் எனும் அடையாளமே அவனது இலக்காக இருக்க திருமணப் பேச்சை மேலும் சில காலத்துக்கு ஒத்தி வைத்திருந்தார்கள் அவனது ஐயாவும் அப்பத்தாவும்.
பெரியப்பா கதிர்வேலின் குடும்பம் இவர்களது பூர்வீக வீட்டிற்கு முன்பிருந்த பரந்த இடத்தில் தனி வீடு கட்டிக் கொண்டு வசிக்கிறார்கள். பழைய வீட்டின் திண்ணையில் இருந்து பார்க்க பெரியப்பா வீட்டின் பின்கட்டு தெரியும்.
இரு வீட்டுக்கும் பொதுவாக இருக்கும் அந்தக் காலத்து பெரிய இரும்புக் கதவைத் திறந்து கொண்டு அப்போது தான் வேலை முடித்து உள்ளே வந்தான் சரவணன்.
அவன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்ததும், “சுதா, தம்பி வந்துட்டான் பாரு.” உள்ளே இருந்த மருமகளைக் கத்தி அழைத்தார் வசந்தி.
“ம்மா, குளிச்சுட்டு வர்றேன்ம்மா.” என்றபடி அறையில் நுழைந்தவனைப் பார்த்த சுதா,
“என்னங்க, வெளிய அம்புட்டு மழையா? இப்புடி நனைஞ்சு போயி வர்றீங்க?” கேட்டபடி அவனுக்கு துண்டை எடுத்து நீட்ட “ஹ்ம்ம், மழ தூறல் தான். ஆனா ஒரு வேலையா காரக்குடி வர போனேன். இம்புட்டு தொல திரும்பி வரணுமுள்ள.” சொன்னவன் நேரே குளிக்கப் போனான்.
அவன் குளித்து வெளியே வரும் போது பில்டர் காபியின் மனம் அறையை நிறைக்க அந்த வாசம் அவனுக்கு அவன் தம்பியின் மணத்தை மனதெங்கும் நிறைத்தது. கருணாவின் மரணம் அந்த வீட்டில் ஒரு விரும்பத்தகாத அமைதியைத் தந்திருந்தது.
தம்பியின் நினைவில் அவனது ஐயா முருகய்யா சற்று நேரத்துக்கு முன்பு பேசியதும் நினைவு வர நீண்ட பெருமூச்சோடு காபியை கையில் எடுத்தான்.
“என்னங்க, என்ன யோசனை?” என்ற கேட்டு நின்ற மனைவியின் முகம் பார்த்தவன், “ஒண்ணுமில்ல,..” என்று முடித்துக் கொண்டான்.
ஆனாலும் அவன் முகம் யோசனையைக் காட்ட, சுதா விசாரிக்கத் தொடங்கினாள்.
“ஆமா காரக்குடிக்கு என்னத்துக்கு போனீங்க?”
“அய்யா கடைவேலை இருக்குன்னு போனவுக என்னையும் வரச்சொன்னாக. அதேன் அங்குன ஒரு எட்டு போயிட்டு வந்தேன்.”
“ஏன்? எப்பவும் குமரனத்தானே கூப்புடுவாக?”
“வேற என்னத்துக்கு, எல்லாம் சொத்து விஷயம் பேசத்தான். மில்லு இருக்க இடம் சித்தப்பா அப்ப பள்ளிக்கூடம் கட்ட வாங்குனது. அவரு தவறவும் அந்த நேரம் அய்யா எங்க அப்பா பேருல பதிய சொல்லிட்டாரு.”
“தெரிஞ்ச கத தானே. இப்ப என்னத்துக்கு அதே சொல்லுறிய?”
“அடியே, இம்புட்டு பெரிய ரைஸ் மில்லு கட்டி இத்தனை வருசமா அப்பா தான் நல்லது கேட்டது பூறாம் பாக்குறாரு. நின்னாப்புல அந்த இடத்த குடுன்னு சொல்றாரு அய்யா. அதுக்கு அப்பா ஒத்துக்கல.”
“ஆமா, அதுக்காக மாமா கைக்காசு போட்டு கட்டுன மில்ல இடிக்கவா முடியும்? இப்ப என்னத்துக்காம் அந்த இடம் அவுகளுக்கு?”
“அதெல்லாம் நாங் கேக்க முடியுமா? ஆனா இப்ப பூவினிய குமரனுக்கு பேசவுந்தே அய்யா இன்னும் நெருக்குறாக.”
“நீங்க என்ன சொன்னிய?”
“நா என்னத்த சொல்ல? கேட்டதும் தூக்கி குடுக்க இதென்ன சொப்பு சாமானா?”
“ஏன், இம்புட்டு நாளும் இல்லாம இப்ப கேக்குறாரு ஐயா? இந்த ஆயாவும் சரியான அமுக்குணி. ஒன்னும் வாய தொறக்கலயே.”
“ஹ்ம்ம், அப்பா வரவும் பேசணும்.”
“சரி, வாங்க.” பேசியபடியே இருவரும் கூடத்திற்கு வந்தனர்.
அன்றைய நாளின் இரவு நேரத்திற்கான இருள் எங்கும் சூழ்ந்திருந்தது.
குமரனுக்கு பெரும்பாலும் வாசலில் இருக்கும் மகிழ மரத்தின் அடியில் படுத்து வானத்தை பார்ப்பது தினசரி செயலில் ஒன்று. அன்றும் வெளிவாசல் மரபெஞ்சில் மல்லாந்து படுத்து வானத்தில் நிலவையும் நட்சத்திரங்களையும் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.
குமரனுக்குத் திருமணம் என்று பேசிய அன்று போல் வானம் இன்று இல்லை. ஒளி நிறைந்திருந்தது. நிலவு முழுமையடைய இன்னும் ஓரிரு நாட்கள்தான்.
பிறை நிலவை அவன் பார்த்த அன்று இருந்த மனநிலையில் இப்போது அவனும் இல்லை. எப்படியும் இந்தத் திருமணம் நடக்கும் என்பதில் ஒரு தெளிவு வந்திருந்தது. கூடவே கண்டிப்பாக நடக்கும் என்ற தலைவலியும்.
செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்ட புத்தகம் போல தாத்தா பேசிய பிறகு, அவனது நீண்ட வாழ்விற்கான வழி தெரிந்தது. தெளிவும் வந்துவிட்டது. ஆனால் அந்த வழியில் தடையின்றி நடக்க அவன் தனியே நடக்கப் போவதில்லையே. மனைவியாக வரப் போகிறவளுக்கும் அதே எண்ண ஓட்டம் இருக்க வேண்டுமே.
பூவினி அப்பாவிடம் நாளை காலையில் சென்று பேச வேண்டும். என்ன பேசலாம் எப்படிப் பேசலாம் என மனதில் பலமுறை ஓட்டிப் பார்த்தாலும், நிஜத்தில் சென்று பேசும் வரை இந்த கற்பனையால் என்ன பயன்? அவளிடமும் இத்திருமணம் குறித்து பேச வேண்டும். இன்னும் ஏதேதோ யோசித்தப்படி படுத்திருந்தவனை அப்பத்தாவின் குரல் கலைத்தது.
“எய்யா குமரா, என்னத்துக்கு இப்படி கூதல்ல படுத்து கெடக்க? மழ மேகமா இருக்கு. உள்ளே வாய்யா” வள்ளியம்மாளின் குரலில் இருந்து பாய்ந்த அன்பு மழையில் நனைந்தபடியே உள்ளே கூடத்திற்கு வந்தான் குமரன். “ஏ, அப்பத்தா இருவது வருசத்துக்கு முன்னாடி நா இங்க வந்தப்ப இப்படி என்ன உள்ள வர சொல்ல ஆரம்பிச்ச. இன்னமுமா?” என்றான்.
“இன்னம் பத்து வருஷம் போனாலும் இதையேதான்டா சொல்லுவேன். ஏன், உம்மவனுக்கும் கூட சொல்லுவேன்.” என சிரித்தவரின் அருகில் வந்தவன் “நல்லா சொல்லு அப்பத்தா. உனக்குத்தே இப்ப சந்தோஷமா இருக்குல்ல? அப்பறமென்ன?” என கேள்வியாய் நிறுத்தினான்.
ஏனோ அவனது பேச்சு அவருக்கு சரியாய் புரியவில்லை. என்ன பதிலிது என நினைக்கவுமே “இங்க வந்து செத்த உக்காரு குமரா.” என அழைத்து தன்னருகே நின்றவனை கைபிடித்து அமர்த்திக்கொண்டார்.
“குமரா, என்னய்யா என்ன யோசன உன்னப் போட்டு வாட்டுது?”, என வள்ளியமாள் கேட்கவுமே, “வேற என்ன அப்பத்தா, எல்லாம் உம் பெரியமகன் இழுத்து விட்டதுதான். நாளைக்கு அவங்க வீட்டுக்கு போகணும். அவங்க அப்பாட்ட பேச.” என சொன்னவன் குரலிலிருந்த சலிப்பு வள்ளியம்மாளுக்கு அத்தனை உவப்பானதாக இல்லை.
“எய்யா, என்னத்துக்கு இம்புட்டு அலுத்துக்குற? எம் பேத்தி வீட்டுக்கு போறதுக்கா? ஏங்குமரா, ஒனக்கு இதுல இஷ்டமில்லையா?” அப்பத்தா கேள்விகளை அடுக்கவுமே அவரின் வாயைத் தன் கை கொண்டு மூடியவன்
“அப்பத்தாவ், யாருங் கேக்குமின்ன செத்த வாய மூடேன். ஓந்தொண்ட இருக்கே, அது ஊருக்கே கேக்கும். பெரியப்பா சட்டுன்னு கல்யாணம்ன்னு கேட்டப்ப எனக்கு பெருசா கோவம் வந்துச்சுதே. ஆனா தாத்தா பேசுனதும் எனக்கு வெளங்கிடுச்சு அப்பத்தா. எனக்கு அவங்கள கல்யாணம் பண்ண எந்தக் கொறையும் இல்ல. ஆனா அவங்களுக்கும் அதே எண்ணந் தோணணுமுல்ல.” என்றான் பெருமூச்சுடன்.
“அடேய் கூறுகிட்டவனே, அதெல்லாம் அவ சரின்னுடுவா. ஒன்னயும் எம் பேத்திய சந்தோசமா கட்டிக்கிடத்தே கேக்குது. போனாப் போகுதுன்னு நீ ஒன்னும் ஒங்க ஐயனுக்காக அவள கட்டி வாழ்க்க குடுக்க வேணா. அடுத்தவுகளுக்காக நீ அவள கட்டாத. அவள் என்னக்கிருந்தாலும் எம் பேரம் பொண்டாட்டிதே. நாங்க பாத்துக்குடுவோம், போடா.” இன்னமும் அவன் மனமொப்பி சரி என்று சொல்லாததில் வள்ளியம்மாளுக்கு வருத்தமே.
வாழ்க்கையை கல்வியாய் அல்ல, வாழ்ந்து அனுபவத்தால் கற்றவருக்கு ‘நீ சொன்னாய், நான் செய்தேன்’ என பேரன் திருமணம் செய்வதில் ஏனோ சற்றும் விருப்பமில்லை. அதே சமயம் பூவினியின் வாழ்வும் கொள்ளுப் பேரனும் அவருக்கு மிக முக்கியம். எங்கோ இன்னொருவரின் மகனாக தன் வீட்டு வாரிசை அவரால் அனுப்பவே முடியாது. அதன் தாக்கத்தில் மட்டுமே அவரும் இத்தனை கேள்விகள் கேட்பது.
“ஐய்யோ அப்பத்தா, என்னய என்னத்துக்குப் போட்டு இந்த வறு வறுக்குற? கேள்வியா கேக்காதத்தா. நா கட்டி வாழ்க்க குடுத்துத்தே வாழணும்ன்னு உம் பேத்தி ஒன்னும் மழிஞ்சு போயிடல. அது எனக்கும் தெரியும். அதேபோல ஒங்கொள்ளுப் பேரானுக்காகன்னும் நா இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கல. கல்யாணம்ன்னு நா யோசிக்கமின்னயே நீங்க முடிவு பண்ணவுந்தே தவிக்கிறே. நீ சொன்னது போல உம்பேத்திகாவே அவளுங்கள கட்டிக்கிறேன். போதுமா?“ என்றடியே அவன் எழுந்து கொள்ள,
“இதுதே நாங் கேட்டது. போதும் போதும் போயி உள்ளறையில தூங்கு.” என அத்தோடு பேச்சை நிறுத்தி பேரனை மகிழ்வாய் தூங்க அனுப்பினார்.
error: Content is protected !!