Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

37. துளசி - காட்டுப்பாதையில் ஒற்றை பூ

காட்டுப்பாதையில் ஒற்றை பூ – 22

வீடே மயான அமைதியில் இருந்தது கேட்டதையும் பார்த்ததையும் நம்ப முடியாமல் ஆளுக்கொரு திசையில் சுருண்டிருந்தனர் வீட்டினர்,  மேலே  தங்கள் அறையில் மனைவியின் மடியில் தலை சாய்த்திருந்தான் சிவபாலன்.

 

அவன் தலைமுடியை ஆதுரமாகக் கோதிக்கொண்டிருந்த சக்திப்ரியா “நம்ம கைல என்ன இருக்கு இதுதான் நடக்கணும்னு இருந்தா என்ன செய்ய அவங்க பேசினதை நீங்க மனசுக்கு எடுத்துக்காதீங்க அத்தான்” என்றவளை விழியுயர்த்தி பார்த்தவன் அவளுடைய மற்றய கையை எடுத்து முத்தம் வைத்துக் கன்னத்தில் பதித்துக்கொண்டான்.



Advertisement

 

“ஒரு விதத்துல அவங்க இங்க வந்தது எனக்குக் கொஞ்சம் நிம்மதியா கூட இருக்கு” என்றவன் அவளைப் பார்க்க அவள் புன்னகைத்தாள்.

Advertisement

 

Advertisement

“ஏன் சிரிக்கிற” என்றான்.

 

Advertisement

“இன்னொரு சிவபாலன் வேண்டாம்… அந்தப் பையனுக்கும் பொண்ணுக்கும்  கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்கனும் அவங்களுக்கான உறவுகளை உரிமைகளை விட்டு ஏன் எங்கேயோ கஷ்டப்படணும் அதான” என்க.

 

அவளை அப்படியே கீழே தள்ளி மேலே படர்ந்தான் “அத்தான் என்ன செய்றீங்க” என்றவள் தடுமாற “ஒன்னும் செய்யல அப்படியே இரு” என்றவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

 

“என் மனசுக்குள்ள என்னமோ ஒளிச்சு வெச்சிருக்க நான் நினைக்கிறது எல்லாம் உனக்குத் தெரியுது” என்றவனை இன்னும் தன்னோடு இறுக்கியவள்.

 

“ஆமாம் ஒளிச்சு வெச்சிருக்கேன் எதையோ ஒளிச்சு வைக்கல இந்தச் சிவபாலனையே ஒளிச்சு வெச்சிருக்கேன்” என்றாள்.

 

காலை முதல் அத்தனை கோபம் டென்ஷன் இன்னும் பிரச்சனை முற்றாகத் தீரவும் இல்லை ஆனால் இந்த நொடி அவன் மனது லேசானது ஆழ மூச்செடுத்தவன் “சக்தி” என்றான் தவிப்பாக.

 

“எனக்கும் உங்களைத் தேடுது அத்தான் தவிக்குது தப்பில்லைதானே” என்றவள் இதழ்களைக் கவர்ந்துகொண்டவன் தவிப்புகள் அனைத்தும் அவளை அடைந்தது.

 

சுந்தரேசனின் இன்னொரு குடும்பம் வாசலில் வந்து நின்றிருந்தது சரியாகச் சொல்வதென்றால் அவரின் முதல் குடும்பம்,  தன்னுடைய தொழில் விஷயமாகச் சித்தூர் சென்று வருகையில் அங்குப் பார்த்துப் பிடித்து நேசம்கொண்டவர் ஸ்டெபி.

 

வீட்டில் சொல்லி எப்படியாவது கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று சுந்தரேசன் நினைத்திருக்க இங்கே தொழிலில் பிரச்சனை எப்படியெல்லாமோ போராடி அன்புக்கரசியை ரங்கசாமிக்கு மனம் முடித்து வைத்துப் பிரச்சனைகளை முடித்து நிமிர அங்கு ஸ்டெபியிடமிருந்து அழைப்பு.

 

வீட்டில் தெரிந்து தன்னை அடித்து மிரட்டி வேறு மாப்பிளை பார்த்திருப்பதால் வீட்டை விட்டு வந்துவிட்டதாக, அங்குப் பார்த்துப் பிடித்து  இவர் சென்ற பொது தெரிந்த தோழி ஒருத்தியுடன் அவளின் ஹாஸ்டலில் இருந்தார் ஸ்டெபி.

 

வேறு என்ன செய்ய அங்கேயே திருமணம் செய்து வீடும் எடுத்துத் துணைக்கு ஆளையும் வைத்துத் தங்கவைத்துவிட்டார்,  நிச்சயம் இப்பொழுது பவுனுத்தாயை சமாளிக்க முடியாது என்று தெரியும்.

 

அன்புக்கரசியுடன்  நடந்த திருமணத்திற்க்கே அத்தனை போராடியிருந்தார் இதில் வேறு மதப்பெண்ணை விரும்புவதாகச் சொன்னால் அவ்வளவுதான் ஆகையால் ஆறப்போட நினைத்தார் ஆனால் காதலும் இளமையும் காத்திருக்கவில்லை அடுத்த வருடமே ஒரு குழந்தையைப் பெற்றுடுத்துவிட்டார் ஸ்டெபி.

 

ஆண் பிள்ளை பார்த்திபன்,  அவனுக்கு இரண்டு வயதானபோது இங்கே கவிதாவை மணக்கச் சொல்லிப் பவுனுத்தாயி அழுத்தம் கொடுத்தார் உண்மையைச் சொல்லிவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்க கவிதா மருந்தைக் குடித்துவிட்டாள் அக்கா மகளையும் விடமுடியவில்லை கல்யாணம் முடிந்தது.

 

இங்கே சௌமியாவுக்கு மொட்டைப் போட்டுக் காதுகுத்த அங்கே ஸ்டெபி கர்ப்பமாக இருப்பதாகத் தகவல்,  உண்மைகளைச் சொல்லவும் முடியாமல் இரண்டு பேரையும் விடவும் முடியாமல் ஏற்கனவே மனஉளைச்சலில்தான் இருந்தார் சுந்தரேசன் அப்படி இருக்க ஸ்டெபியின் பிரசவநேரம் அங்குச் செல்ல முடியாமல் போனது.

 

இதில் அந்த எஞ்சினியரும் அவ்வளவு பேசி அவமானப்படுத்தியிருக்க அந்தச் சிந்தையிலே நடந்தவர் வண்டியில் அடிபட்டுவிட்டார் ஸ்டெபியை பற்றி இங்கேயும் சொல்லவில்லை கவிதாவை பற்றி அங்கேயும் சொலல்வில்லை.

 

ஸ்டெபியும் சுந்தரேசனும் அதிகம் பேசிக்கொண்டதுகூட இல்லை திருமணம் முன்பு வரை,  வெறும் பார்வை பரிமாற்றங்களே அத்தி பூத்தார் போலத் தான் அவர்கள் பேச்சுக்கள் பெரிதாகத் தன் குடும்பம் பற்றியோ ஊரைப் பற்றியோ கூடச் சுந்தரேசன் சொல்லியிருக்கவில்லை.

 

திடீரென்று அவர் இல்லாமல் போனதும் ஸ்டெபி திக்கு தெரியாமல் நின்றுவிட்டார் அவருடன் இருந்த ஒரே தொடர்ப்பு அலைபேசிதான் அதுவும் விபத்தில் எங்கோ தொலைந்து போயிருக்க நான்கு வயது மகனையும் கைக்குழந்தையையும் வைத்துக்கொண்டு எங்கு விசாரிப்பது யாரிடம் கேட்பது  என்று தெரியாமல் போராடினார்.

 

சுந்தரேசனுக்கு விபத்து நடந்ததே ஸ்டெபிக்கு மறுநாள் தான் தெரிந்தது அதுவும் அந்த எஞ்சினியர் சொல்லி அதிலும்  சுந்தரேசன் இறந்துவிட்டதாகவும் யாரோ  உறவினர்கள் வந்து அவரைக் கொண்டுபோய் விட்டதாகவும் அவர் சொல்லியிருக்க யார் வந்தார்கள் எங்கே போனார்கள் என்று கூடத் தெரியாமல் பித்து பிடித்துக் கிடந்தார் ஸ்டெபி.

 

அதிலிருந்து மீளவே அவருக்குப் பல மாதங்கள் வேண்டிவந்தது   மீண்டும் வீட்டிற்கு செல்ல மனம் வரவில்லை ஒரு வேலையைத் தேடிக்கொண்டார் அங்கிருந்து வேறு இடத்திற்கு மாறிச் சென்றும் விட்டனர்.

 

கேட்டதை நம்ப முடியாமல் அதிர்ந்து நின்றிருந்தனர் அனைவரும் உண்மை தெரிந்தவர்கள் மகேந்திரனும் சிவபாலனும் சக்தியும் மட்டுமே.

 

மகேந்திரன் தான் சுந்தரேசனின் மரணத்திற்கு காரணம் என்று கவிதா சொன்னபோது அதை ஏனோ சிவபாலனால் நம்ப முடியவில்லை சக்திப்ரியாவை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தவன் இதை ஒரு வாய்ப்பாகப் பயன் படுத்திக்கொண்டான் அவ்வளவே.

 

திருமணத்திற்கு சம்மதம் சொல்வதற்கு முன்பு மகேந்திரனை அழைத்துப் பேசியதும் இதைப் பற்றி அறிந்துகொள்ளவே அவரிடமிருந்து தெரிந்துகொண்ட விஷயங்களை வைத்து  மிகவும் கஷ்டப்பட்டே இவர்களைக் கண்டுபிடித்திருந்தான்.

 

கஷ்ட ஜீவனம்தான் ஸ்டெபியின் வருமானத்தில் வாடகை இரண்டு பிள்ளைகளின் படிப்பு என்று மிகவும் கஷ்டப்பட்டனர் இவன் சென்று அவர்களைப் பார்த்துப் பேசி உதவ விரும்புவதாகச் சொன்னபோது ஸ்டெபி நம்ப மறுத்தார், அவனை ஏற்கவில்லை.

 

அவர்களிடம் சுந்தரேசனின் உறவு அவருக்கு மகன்போல என்று சொல்லி அவர்களை நம்ப வைத்து என்று கொஞ்சம் சிரமம் தான்,  பிள்ளைகளுக்குப் பள்ளி கட்டணம் வீட்டிற்கு தேவையான பொருட்கள் துணிகள் என்று பார்த்துச் செய்தான்.

 

முதலில் ஓட்ட மறுத்த பார்த்திபன் கூட மெல்ல மெல்ல சிவபாலனோடு ஒட்டிக்கொண்டன அண்ணான்னே கூப்பிடு என்றான் பாலன் பார்த்திபனிடம்,  சுந்தரேசன் சிவபாலனை எப்படி பார்த்துக்கொண்டாரோ அப்படி இன்று அவரின் மகனைச் சிவபாலன் பார்த்துக்கொண்டான்.

 

இவர்களை அழைத்துவந்து இந்தக் குடும்பத்தோடு சேர்ப்பதா வேண்டாமா என்ற பெரும் குழப்பம் அவனிடம் இருந்தது, பார்த்திபன் பிரார்த்தனாவை பற்றி யோசித்த அதே வேலை இங்கே கவிதாவையும் யோசித்தான்.

 

வெறும் இருபது வயதில் கணவனைப் பறிகொடுத்து வேறு வாழ்க்கையை தேடிக்கொள்ளாமல் கணவனை நினைத்தே வாழ்ந்துவரும் கவிதாவை அது காயப்படுத்துமே என்று தயங்கினான்.

 

ஸ்டெபி கூடப் பலமுறை கேட்டுவிட்டார் “அவரோட சொந்தம்னு சொல்றீங்களே அவங்க எல்லாம் எங்க இருக்காங்க எனக்கு அப்புறம் என் பசங்களுக்கு யாரும் இல்ல, அவர் வீட்டில எங்களை ஏத்துக்க மாட்டாங்களா ஒரு தடவை பிள்ளைகளைப் பார்த்தா ஒருவேளை அவங்க மனசு மாறலாம்ல”  என்று.

 

சிவபாலன் ஏற்கவில்லை “அங்க நீங்கப் போனா பிரச்சனை ஆகும் இப்போ வேண்டாம் நீங்கப் பயப்பட வேண்டாம் இவங்க என் பொறுப்பு” என்று நம்பிக்கை கொடுத்திருந்தான்.

 

பார்த்திபன் முகநூலில் கணக்கு வைத்திருந்தான் தன் தந்தையின் புகைப்படத்தை அதில் பதிவேற்றமும் செய்திருந்தான் கடந்த மூன்று வருடங்களாக அவரின் திதி வரும் நாளில்  “மிஸ் யு அப்பா” என்று பதிவும் போட்டுவந்தான்.

 

இந்தமுறை அதே புகட்டடத்துடன் அதே செய்தியைத் தாங்கி அவன் கண்களில் பட்டது சௌமியாவின் முகநூல் பதிவு,  அவள் இந்த வருடம்தான் புதிதாக அதில் சேர்ந்திருந்தாள் இவனுடைய நண்பனின் வழி இவனுக்குச் செய்தி வந்து சேர்ந்தது.

 

“பார்தி உங்க அப்பா போட்டோ போட்டு ஒரு பொண்ணு போஸ்ட் போட்டிருக்கா” என்று அவன் அனுப்பிவிட அப்படித்தான் தஞ்சாவூர் அத்திவெட்டி என்று தெரிந்துகொண்டான் தாயிடம் இதைப் பகிர்ந்துகொள்ள அன்று இரவே கிளம்பிவிட்டனர் தஞ்சைக்கு.

 

அனைத்தையும் கேட்ட பவுனுத்தாயும் கவிதாவும் ஸ்தம்பித்துதான் நின்றனர் சௌமியா விழி அகலாமல் அவர்களைப் பார்த்து நின்றாள்,  பார்த்திபன் அப்படியே சுந்தரேசனை உரித்து வைத்திருந்தான்.

 

இனி வாழ்வில் மறுபடியும் பார்க்கவே முடியாது என்று ஏங்கி தவித்த மகனின் மறு உருவாக வந்து நின்ற அந்தப் பையனைப் பொய்யாய் கூட முறைக்க முடியவில்லை பவுனுத்தாயால், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் விளக்கி வைக்கவும் முடியாமல் அவர் தவித்தார்.

 

அதைவிடவும் பேத்தியைக் கண்கொண்டு காணமுடியவில்லை மகன் இத்தனை பெரிய துரோகத்தைச் செய்திருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

 

கவிதாவின் நிலை தான் மிகவும் கொடுமையாக இருந்தது மாமன்தான் தன் உலகம் என்று வாழ்ந்தவள் அவனோடு தன் அத்தனை சந்தோஷங்களும் முற்று பெற்று விட்டதாக எண்ணி வாழ்ந்தவள்.

 

அவன் நினைவாக மகளை மட்டுமே பிடிமானமாகக் கொண்டு அவள் நிற்க அவனுக்கு ஒரு காதலி அவளே மனைவியாகவும் அவனின் இரு பிள்ளைகளுக்குத் தாயாகவும் இருந்திருக்கிறாள்.

 

அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை ஒருவித உணர்வுகள் மரத்து போன நிலை.

 

அப்பொழுதும் பவுனுத்தாயி கோபமாக “இவந்தான் காரணம் இவன்கிட்ட ஆரு சொன்னது தேடிப்போக சொல்லிப் போனவன் அப்படியே விடவேண்டியதுதானே  நம்மள பழிவாங்கவே இவங்களை இங்க கூட்டிட்டு வந்திருக்கான்” என்று வெறுப்பை உமிழ்ந்தார்.

 

சக்திப்ரியாவுக்கு அத்தனை ஆத்திரம் அவள் எதோ பேசவர மனைவியைத் தன்னோடு சேர்த்து நிறுத்தினான் சிவபாலன் “அவங்க அதிர்ச்சில பேசுறாங்க விடு இது அவங்களுக்கு பெரிய வலி நீ கண்டுக்காதா” என்றுவிட்டான்.

 

அன்றோடு முடிந்துவிடும் சம்பவமா அது அதிலும் ஊரில் கொஞ்சம் அறியப்படும் குடும்பம், மறுநாள் காலையே வந்துவிட்டார்கள் ஊர் பெரிய தலைகள் யாருக்கும் விளக்கங்கள் தேவைப்படவில்லை சுந்தரேசனின் மகன் நான் என்று முழுதாக நின்றானே பார்த்திபன்.

 

ஸ்டெபிக்கும் அவரின் பிள்ளைகளுக்குமே இது பெரும் அதிர்ச்சியே முகநூலில் “மிஸ் யு அப்பா” என்ற சௌமியாவின் வரிகள் பார்த்திபனை கோபாடுத்தியது உண்மை, தங்கள் தந்தைக்கு இன்னொரு குடும்பமா என்று மிகவும் கோபம்கொண்டான்.

 

சிவபாலன் இதனால் தான் தங்களை அழைத்துச்செல்லவோ தந்தையின் குடும்பத்தைப் பற்றிப் பேசவோ இல்லையோ என்ற எண்ணமும் வர அவன்மீதும் கொஞ்சம் வருத்தம் வந்தது இங்கு வந்து அனைத்தையும் அறிந்தபிறகு இதில் யாரை குற்றம் சொல்ல என்று இருபக்கமும் அமைதி காத்தனர்.

 

பெரியவர்கள் அப்படி நிற்கத் தயாரில்லை “இப்படியே இருந்தா எப்படிப்பா அடுத்து என்னன்னு பாக்கவேண்டாமா” என்றார் ஒருவர்.

 

சிவபாலன் ஒன்றிலும் தலையிடவில்லை இந்தக் குடும்பத்தை அழைத்து வருவதா வேண்டாமா என்ற குழப்பம் இப்பொழுது நீங்கிவிட்டது அவர்களாகவே வந்துவிட்டனர் இனி இது அவர்கள் குடும்ப விஷயம் பேசித் தீர்த்துக்கொள்ளட்டும்.

 

ஒருவேளை ஸ்டெபியையும் பிள்ளைகளையும் இவர்கள் ஏற்கவில்லையென்றால் தானே அவர்கள் பொறுப்பை ஏற்கவும் தயாராகவே இருந்தான் ஆகையால் அமைதியாகக் கைக்கட்டி நின்றுகொண்டான்.

 

“என்ன பண்ணனும் பெரியப்பா” என்றார் ரங்கசாமி.

 

“நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத தாயி” என்று பவுனுத்தாயை பார்த்தவர் “இந்தப் புள்ள தான் சுந்தரேசனுக்கு மொத சம்சாரம் பேத்தியை  அவர் ரெண்டாம் தாரமாத்தான் கட்டியிருக்கார்” என்க கவிதா விழிகளை இறுக மூடிக்கொண்டாள்.

 

அந்த வார்த்தை ஈட்டியாய் இதயத்தைப் பதம் பார்த்தது அன்புக்கரசியை திரும்பிப் பார்த்தாள் சிவபாலனை அவளால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை ஒட்டிக்கொண்டு வந்தவன் உரிமை இல்லாதவன் என்று எத்தனை பேச்சுக்கள் அவமானங்களை இன்று அதே நிலையில் தானும் தன் மகளும்… சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் முகத்தை மடியில் புதைத்துக்கொண்டாள்.

 

கலங்கி போய் நின்றிருந்த சௌமியாவை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள் சக்திப்ரியா,  பார்த்திபன் சிவபாலனை பார்க்க “வா” என்றான் அவன் மெல்லிய தலையசைப்பில்,  அவன் அருகில் சென்று நின்றுகொண்டான் சின்னவன்.

 

“நடந்தது நடந்து போச்சு நமக்குள்ள சுமுகமா முடிச்சுக்கலாம்” என்றவர் “நீங்க என்னம்மா சொல்றீங்க காசு பணம் வாங்கிகிட்டு தள்ளிப் போயிடுறீங்களா” என்க.

 

ஸ்டெபி விழிகள் கலங்க சிவபாலனை பார்த்தார் “பேசுங்க” என்றான் அவன்.

 

“நான் அவரை நம்பித்தான் என் குடும்பத்தை உறவை எல்லாம் விட்டு வந்தேன் முறையா கல்யாணம் செஞ்சுதான் வாழ்ந்தேன் என் பிள்ளைகளுக்கு அவங்க உரிமை வேணும் இந்த வீட்டு பசங்கதான் அவங்க நாங்க இங்கதான் இருக்க விரும்புறோம்” என்றார்.

 

அனைவரும் பவுனுத்தாயை பார்க்க அவர் விழிகள் பார்த்திபன் மேலே நிலைத்திருந்தது,  எப்படி முடியாது என்று சொல்லுவார் மகன் அல்லவா முன்னில் நிற்கிறான்.

 

கலங்கும் மனதோடு பேத்தியைப் பார்த்தார் அவள் பார்வை அவரைக் கொன்று போட்டது, கவிதாவுக்கு புரிந்துவிட்டது தன்னுடைய எதிர்ப்பை யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவள் அமைதியாகிவிட்டாள்.

 

கதிரேசன் கவிதாவின் அருகில் சென்று அமர்ந்து அவளின் கையைப் பிடித்துக்கொண்டான், சக்தியின் வீட்டினர் ஷர்மியின் வீட்டினர் என்று அனைவரும் இருந்தனர்.

 

“என்னடி இது கிணறு வெட்டப் பூதம் கிளம்புன கதையா உன் நாத்தனாரை எப்படி ஒதுக்கலாம்னு யோசிச்சா அந்தப் பாழாப்போனவன் இன்னொரு பொண்டாட்டியும் அதுல ரெண்டு பிள்ளையும் வெச்சிருக்கான்” என்று வசைபாடினார் ஷர்மியின் தாய்.

 

“சரி அப்போ இவங்க இனிமே இங்கதான் தங்குறாங்க அப்போ என்ன எப்படின்னு இப்போவே பேசிடலாம்” என்றார் பெரியவர்.

 

“பேசுறதுக்கு என்னங்க இருக்கு அவங்க இங்க இருக்குறது இருக்கட்டும் பிள்ளைங்க படிப்பைப் பார்த்து நாளைக்கு பொட்ட பிள்ளையைக் கட்டிக்குடுக்கலாம் வேற என்ன செய்ய” என்றார் ஷர்மியின் தாய்.

 

அனைவரும் அவரைக் கண்டனமாகப் பார்க்க “ஷர்மி” என்று அழுத்தமாக அழைத்தான் கதிர்.

 

அவள் பதறிப்போய் அவனைப் பார்க்க “பேசவேண்டியது எங்க அம்மாச்சியும்  எங்க அக்காவும்தான் உங்க அம்மா இங்க ஏதாவது குடுத்து வெச்சுருக்கங்களா இல்ல உங்க வீட்டு சொத்தைப் பிரிக்கிறாங்களா”  என்றான் பல்லைக் கடித்து.

 

ஷர்மி தாயை முறைக்க அவர் கடுகடுவென்று முணுமுணுத்து முகத்தைத் திருப்பினார், பவுனுத்தாயி அமைதியாகவே இருந்தார் யோசிக்கட்டும் என்று அனைவரும் காத்திருந்தனர் வெகுநேரம் கழித்து நிமிர்ந்தவர்.

 

“என் மகளுக்கும் மகனுக்கும் தான் இந்தச் சொத்து எல்லாத்தயும் காப்பாத்தி வெச்சேன் ரெண்டு பேரும் இல்ல, அவங்க பிள்ளைங்களுக்குத்தான் இப்போ இது போகணும்”.

 

“இந்த வீடு என் மவனுக்குத்தான் அவனுக்குன்னா அவன் பிள்ளைகளுக்கு என் பேத்தி கவிதாவும் அவ மவ சௌமியாவுக்கும் தான் இந்த வீடு, என் நகை என் மவ நகை எல்லாம் என் சௌமியாவுக்கு மத்தபடி மிச்ச சொத்தைக் கதிருக்கும் அந்த ரெண்டு பிள்ளைகளுக்கும் பிரிச்சு குடுங்க”.

 

“பக்கத்தில நம்ம இடம் கிடக்கு அவளுக்கும் அவ பிள்ளைகளுக்கும் அங்க ஒரு வீட்டைக் கட்டிகுடுத்திடலாம்,  அந்தப் பையன்” என்று பார்த்திபனை  கைக்காட்டியவர் “படிக்க எல்லா செலவையும் கதிர் பாத்துப்பான் படிச்சு முடிச்சதும் அவனுக்கு ஒரு தொழிலைக் குடுத்துடு கதிரு”.

 

“அப்பறம் பொம்பள பிள்ளைக்கு நாளைக்கு கல்யாணம் செஞ்சு வெக்குறோம்” என்றவர்  “கதிரு உன் பங்குல உனக்கு ஒரு வீட்டைக் கட்டிக்கோ” என்றார்.

 

ஷர்மியும் அவள் வீட்டினரும் அதிர்ந்து பார்த்தனர் பாதி சொத்து போய்விடுமே என்று நெஞ்சில் அடித்துக்கொண்டனர்.

 

“அது எப்படிங்க” என்று ஷர்மியின் வீட்டினர் தொடங்க “வேற என்ன செய்யச் சொல்ரீங்க,  சட்டப்படி அந்த அம்மாதான் அவர் மூத்த சம்சாரம் இது கோர்ட் கேஸுன்னு போகணுமா யார் அலையறது” என்றார் ஒருவர்.

 

ரங்கசாமி பெரிதாக மனதில் அடிவாங்கினார் தன்னையோ தன் மனைவி மகளைப் பற்றியோ எதுவுமே பேசவில்லையே, சக்திப்ரியா பவுனுதாயை அழுத்தமாகப் பார்த்தே நின்றாள்.

 

இந்த நிலையில் கூடத் தன் ரத்தத்தில் பிறந்தவர்களை மட்டும் எப்படி தனியாகத் தரம் பிரித்தார் என்று வெறுப்போடு பார்த்தவள் விழிகள் கணவனின்  மீது  படிய அவன் அவளைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தான்.

 

சக்திப்ரியாவின் விழிகள் கலங்க பார்வையாலே அதட்டினான் மனைவியை, அவளுக்கு இந்த் சொத்தெல்லாம் தேவையில்லை அவள் கணவன் இதுபோலப் பல மடங்கு சம்பாதிப்பான் ஆனால் ஒரு சின்ன அங்கீகாரம் அவனை இந்த வீட்டின் ஒரு அங்கமாகக்கூட காண்பிக்கவில்லையே.

 

அவனை மட்டுமா மாமனார் மாமியார் அதோடு சித்ரா… அவள் சட்டென்று திரும்பி நாத்தனாரை பார்த்தாள் அனுப்புக்கரசியோடு ஒட்டி நின்றிருந்தாள் சித்ரா, விழிகள் நிறைந்து வழிந்தது அன்புக்கரசி அத்தனை வலியோடு கணவனைப் பார்த்திருந்தார்.

 

ஏதோ தோன்ற சித்ரா திரும்பித் தமையனை பார்க்க அவள் புறமாகக் கை நீட்டினான் வேகமாக வந்தவள் அவனை அணைத்துக்கொள்ள முதல் முறையாகத் தங்கையைச் சேர்த்தனைதான் சிவபாலன்.

 

“எதுக்கு அழுகுற அண்ணே இருக்கேன் பாக்க மாட்டேன்னா” என்றான் அவள் சம்மதமாகத் தலை அசைத்தாள்.

 

“எல்லாம் சரி ஆத்தா மருமகனையும் அவர் பெத்த பிள்ளையையும்  விட்டுடீங்களே,  பாலன் இந்த வீட்டு பிள்ளை இல்லையா அவனுக்கு ஒன்னும் சொல்லல” என்றார் ரங்கசாமியின் பெரியப்பா.

 

பவுனுதாயி தடுமாறிவிட்டார் அதை அவர் யோசிக்கவேயில்லை அவருக்கு முன்பே முந்திக்கொண்டான் சிவபாலன்.

 

“எனக்கு இதுல எந்தப் பங்கும் வேண்டாம் என் குடும்பத்தைப் பாத்துக்க எனக்குத் தெரியும் என் குடும்பனு சொன்னது என் அம்மா தங்கச்சி கூடவே அய்யாவையும் அவர் அப்படி நினைக்குறாரா தெரியல எனக்குன்னு ஒரு வீடு இருக்கு நானும் என் பொண்டாட்டியும் இனிமே அங்கதன் இருக்க போறோம் சித்ராவும் எங்ககூடத்தான் இருப்பா”.

 

“எங்ககூட வராதா வேண்டாமான்னு நீங்க முடிவு செய்ங்க,  நீங்க எங்க இருந்தாலும் உங்கள பாக்கவேண்டிய பொறுப்பு என்னது நாளைக்கே நானும் சக்தியும் சித்ராவை கூட்டிட்டு கிளம்புறோம் நீங்க என்னை ஒதுக்கி வெச்சாலும் நான் ஒதுங்க நினைக்குல தள்ளிப் போறேன் அவ்ளோதான் எப்போ என்ன தேவைன்னாலும் கூப்பிடுங்க” என்றவன்.

 

பார்த்திபனிடம் “எப்போவும் நான் இருப்பேன்” என்றான்.

 

பார்த்திபன் சிவபாலனை இன்னும் நெருங்கி நின்றான் அவள் தோளில் கையிட்டு அணைத்துக்கொண்டான் சிவபாலன்,  யாரை ஒதுக்கிவைக்க இவ்வளவு காலமும் போராடினார்களோ அவனே ஒதுங்கி நிற்கிறான் இதெல்லாம் தங்களுடையது அவன் ஓட்டுனுண்ணியாக ஒட்டிக்கொண்டுள்ளான் என்று எண்ணினார்களோ இன்று அதெல்லாம் அவர்களுக்கே அந்நியமாகத் தெரிந்தது.

 

கதிருக்கு இந்த வீடு இல்லை கவிதாவுக்கு மில்லோ பாக்டாரியோ சொந்தமில்லை, ஷர்மிக்கு இந்தக் குடும்ப நகைகள் எதுவும் சொந்தமில்லை தோட்டம் தோப்பு அனைத்தும் பல பாகங்களாகப் பிரிக்கப்பட்டு சிதற போகிறது ஒன்றாக ஒரே கூரையின் கீழ் இருந்தவர்கள் இன்று வேறு வேறு இடங்களில் வசிக்கப் போகிறார்கள்.

 

அதுவரை ஒரு வார்த்தை பேசாமல் அமர்ந்திருந்த ரங்கசாமி “நானும் என் குடும்பமும் எங்க மகன் மருமகளோட இனிமே இருந்துக்குறோம்” என்றவர் “அன்பு நம்ம துணியை மட்டும் எடுத்து வை நாளைக்கு தம்பிகூடவே கிளம்பலாம்” என்க அதுவரை கண்ணீர் சிந்திய அன்புக்கரசி வேகமாக விழிகளைத் துடைத்துக்கொண்டு புன்னகை முகமாக மகளையும் இழுத்துக்கொண்டு சென்றார்.

 

சௌமியாதான் மிகவும் கலங்கி போய் நின்றாள் “நானும் உங்களோடயே வரேன் என்னையும் கூட்டிட்டு போங்க” என்றாள் அன்பு மற்றும் சித்ராவிடம்.

 

அங்குவந்த சக்திப்ரியா “உங்க அம்மா உனக்காகவே இவ்ளோ வர்ஷம் வாழ்ந்துட்டாங்க அவங்களை யோசி சௌமி ,  நாங்க எங்க போறோம் வெறும் அரைமணி நேரம்  எப்போ வேணும்னாலும் நீ வரலாம் உனக்கு என்ன தேவைன்னாலும் கூப்பிடு உன் மாமா வந்திடுவார்” என்று வெகுவாய் அவளைத் தேற்றினாள்.

 

அடுத்த நாளே பெட்டியைக் கட்டிவிட்டனர் சிவபாலன் குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தும் நிலைமையிலோ மனநிலையிலோ யாரும் இல்லை ஆகையால் பெயருக்குச் சும்மா வளவிகள் பூட்டி ஷர்மியை வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.

 

இந்தப் பக்கம் ஸ்டெபி குடுமபம் தங்க ஒரு வீடு கட்டப்பட, கதிர் தனக்கான வீட்டையும் கட்ட தொடங்கினான்,  சிவபாலன் ஒரு வாரம் மட்டும் அவர்கள் வீட்டில் இருந்துவிட்டு அருகிலே ஒரு வாடகை வீட்டிற்கு மாறிக்கொண்டு வீட்டை இடித்துக்கட்டினான்.

 

கீழே மூன்று அறைகள் மேலே இரண்டு பெரிய அறைகள் கிட்சேன் பூஜையறை என்று பெரிதாகவே கட்டினான், முத்துவையும் உருட்டி மிரட்டி அவனுக்கான சிறு வீட்டையும் கட்ட வைத்தனர்.

 

அவர் அவர் வாழ்வு அவர்களுடைய புது வீடுகளில் அமைதியாக நகர்ந்தது பவுனுத்தாயை தனிமை வாட்டியது இவர்கள் மூன்று பேர் மட்டுமே வீட்டில், இப்பொழுது இவரே  அணைத்து வேலைகளையும் பார்க்கவேண்டியிருந்தது.

 

கவிதா எப்பொழுதும் ஏதோ சிந்தனையிலே உழன்றாள் பேச்சுக்கள்  இல்லை சிரிப்பில்லை, சௌமியும் பள்ளி சென்றுவிடுவாள் முன்பானால் அன்பு வீட்டில் அனைத்தையும் பார்த்துக்கொள்ள வீட்டின் தேவைகள் அனைத்தும் சிவபாலன் என்ற ஒற்றை மனிதன் பார்த்துக்கொண்டான்.

 

அங்கு யாரும் எதற்கும் தேங்கி நிற்கவோ கவலைப்படவோ தேவை என்று தயங்கி நிற்கவோ தேவை இல்லாமல் அனைத்தும் அவனே செய்தான்,  இன்று அனைத்திற்கும் கதிரின் வாசல் சென்று நிற்பது ஒரு கழிவிரக்கத்தை உண்டாக்கியது பவுனுத்தாயிக்கு.

 

உள்ளுக்குள் மறுக்கினார் யாரிடமும் பகிரக் கூட முடியவில்லை, பாவம் செய்துவிட்டோமோ என்ற சிந்தனை அடிக்கடி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

 

‘அந்தச் சிறு பாலகனை தாயிடமிருந்து பிரித்துத் தனியாக நிற்கவைத்தேன் இன்று என் குடும்பமே சிதறி திசைக்கு ஒன்றாய் கிடக்கிறது ஆனால் யாரை தனித்து நிறுத்த நினைத்தேனோ அவன் இன்று அனைவரின் அன்பையும் பெற்று உறவுகளோடு சேர்ந்து வாழ்கிறான்’ என்று மனதில் எண்ணிக்கொள்வர், கதிர் ஷர்மிக்கு பெண் குழந்தையும் பிறந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!