Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

37. துளசி - காட்டுப்பாதையில் ஒற்றை பூ

காட்டுப்பாதையில் ஒற்றை பூ – 7

அன்று வெகுநேரம் கழித்தே வீட்டிற்குச் சென்றாள் சக்திப்பிரியா. முடிந்தவரை விரல் தடத்தை மறைக்க முயன்றும் முடியவில்லை அதற்குமேல் பார்லரில் இருக்கமுடியாமல் கிளம்பிவிட்டாள்.

 

வாயிலிலே காத்திருந்தார் பூரணி.  “வண்டி எங்க பிரியா ஏன் ஆட்டோல வர அதும் இவ்ளோ நேரம் ஆக்காத பாப்பா சீக்கிரம் வரப்பாரு”  என்றார்.



Advertisement

 

அவர் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல்  “ஹ்ம்ம்”  என்றவள் உள்ளே செல்ல.  “நில்லு”  என்றவர் அவள் கன்னத்தில் கை வைக்க  “ஸ்ஸ்”  என்றாள்.

 

Advertisement

“என்னடி இது என்னாச்சு?”  என்றார் பதறி.  அந்தச் சத்தத்தில் உள்ளே மகளுக்குப் பூரி சுட்டுக்கொண்டிருந்த மகேந்திரன் விரைந்துவந்து  “என்னாச்சு”  என்றார் மகளைப் பார்த்து.

Advertisement

 

“ஒண்ணுமில்லப்பா”  என்றாள் சக்திப்பிரியா மெல்ல, சோர்வாகவும் இருந்தது அப்படியே சோபாவில் அமர்ந்தாள்.

 

Advertisement

“என்ன ஒண்ணுமில்ல அவ கன்னத்தைப் பாருங்க எப்படி வீங்கியிருக்கு யாருடி அடிச்சா”  என்ற பூரணிக்கு மனதைப் பிசைந்தது.

 

“பிரியாமா என்னடா”  என்றார் மகேந்திரன் மகளின் அருகில் அமர்ந்து கைப்பிடித்துக்கொண்டு. பின் மனைவியைப் பார்த்து  “பூரணி நீ போய் டீ எடுத்துட்டுவா அப்படியே ஸ்டோவ் ஆப் பண்ணிடு”  என்றவர்.

 

மகளின் அருகில் அமர்ந்து அவள் கன்னத்தை மெதுவாகத் தொட்டுப் பார்த்து  “என்னடா”  என்றார் கனிவாக.

 

ஏனோ அப்பொழுது அவனிடம் திடமாகப் பேசிவிட்டு வந்தாலும் இத்தனை நேரமும் மனதில் அத்தனை சஞ்சலம். அவன்மீது தான் கொண்ட நேசம் தன்னுடையது மட்டுமே என்று ஆகிவிடுமோ ஏற்றுக்கொள்ளவே மாட்டானோ.

 

கடைசியில் தன் காத்திருப்பு மட்டுமே தன் துணை என்று நின்றுவிடுமோ என்பதையும் கடந்து அவனை இழந்து விடுவேனோ வேறு ஒருத்திக்கு அவனை… அதற்குமேல் யோசிக்கமுடியவில்லை மனம் அத்தனை வலியைச் சுமந்தது அணைத்து அழக்கூட அவனைத்தான் தேடியது.

 

இப்பொழுது தந்தை கனிவாகக் கேட்கவும் அவர் தோள் சாய்ந்து அப்படியொரு அழுகை மனம் பதறிப் போனார் மகேந்திரன். பூர்ணிமாவின் கையிலிருந்து பாத்திரம் நழுவியது வேகமாக அவர்கள் அருகில் வந்தார்.

 

மகள் அழுது ஓயும் வரை அமைதி காத்தனர் இருவரும் அவள் தன்னை நிதானப்படுத்தி நிமிர்ந்து அமர்ந்தாள் அவளே சொல்லட்டும் என்று தந்தை காத்திருக்க.

 

“ஒரு கார்ல வண்டியைக் கொண்டு இடிச்சிட்டுப்பா அந்தப் பையன் நல்ல போதை எறங்கி வந்து அடிச்சுட்டான்”  என்றாள் கோர்வையாக.

 

“ஐயோ”  என்ற பூரணி  “வேற எங்கேயும் அடியா”  என்று மகளைப் பரிசோதிக்க  “அதெல்லாம் இல்லம்மா வண்டிதான் கொஞ்சம் அடிவாங்கிடுச்சு”  என்றாள்.

 

“யாரு அந்த நாயி”  என்றார் பூரணி.

 

உள்ளே வலித்தது  “தெரியலமா”  என்றாள்.

 

தந்தை ஒன்றுமே பேசவில்லை  “என்னங்க என்ன ஒண்ணுமே சொல்லமாட்டறீங்க”  என்றார் பூரணி.

 

மகளின் தலைகோதிய மகேந்திரன்  “அந்தத் தம்பியைப் பாத்தியா பிரியாமா”  என்க மகள் விழிகள் மீண்டும் கலங்கியது.

 

“என்ன சொன்னார்”  என்றதும்  “பா…”  என்றாள் கலக்கமாக.

 

“இதைத்தான் சொல்றேன் என் மகளை என்னால இப்படிப் பாக்க முடியாது இப்படி அழறத பாக்கவா அப்பான்னு இருக்கேன்”  என்றவர்  “அவர்தானா?”  என்றார் மகளின் கன்னத்தை வருடி.

 

“நோப்பா”  என்றாள் மகள் அத்தனை ஸ்திரமாக.

 

“அவங்ககிட்ட பேசிட்டு போனேன் அந்த டென்ஷன்ல நாந்தான் போய் இடிச்சிட்டேன் முத்து அண்ணா தான் ஹெல்ப் செஞ்சாங்க வண்டியைச் சரி பண்ணி நாளைக்கு அனுப்புறேன் சொன்னாங்க”  என்றாள்.
தந்தைக்கு மனது ஆறவில்லை மகள் மறைக்கிறாள் தன் மகளை அடித்திருப்பாரோ? பிடிக்கவில்லை என்றால் அதைச் சொல்லலாமே அதை விட்டு அது என்ன கை நீட்டும் பழக்கம்.

 

“இப்போ டாக்டர் இருப்பாங்களா ஒருதடவை பாத்துட்டு வரலாம்”  என்றார் தந்தை.

 

“இல்லப்பா பாத்துட்டேன் அண்ணாவே அழைச்சிட்டு போனாங்க மருந்து கூட இருக்கு”  என்க, தந்தை மகள் பேச்சைப் புரியாமல் பார்த்திருந்தார் பூரணி அவருக்கு இன்னுமே சிவபாலன் விஷயம் தெரியாது.

 

“மா சாப்பிட முடியாது குடிக்கப் பால் மட்டும் குடுங்க குளிச்சிட்டு வரேன்”  என்றவள் அறைக்குள் சென்றுவிடக் கணவனைக் கேள்வியாய் பார்த்தார் பூர்ணிமா.

 

“அந்தப் பையன் சிவபாலனை நம்ம பாப்பாக்கு பிடிச்சிருக்கு”  என்றார் மனைவியிடம்.

 

“என்னங்க சொல்றீங்க பிடிச்சிருக்குன்னா? லவ் பண்றாளா!!  உங்ககிட்ட சொன்னாளா நீங்களும் சரி சொல்லிட்டீங்களா?? இது என்ன சினிமாவா இல்ல நீங்கப் பெரிய புரட்சி செய்ற அப்பாவா அதும் அந்தப் பையன்… எப்படியும் பன்னெண்டு வயசு வித்யாசம் இருக்குங்க”  என்று பொரிந்தார்.

 

“நம்ம பொண்ணுதான் விரும்புறா பூரணி அதுவும் என் கண்ணை நேராப்பார்த்துச் சொன்னா எனக்கு அவரைப் பிடிச்சிருக்குபா அவர்கூட ஒரு வாழ்க்கை அதுமட்டும்தான் என் மனசுக்கு நிம்மதியை குடுக்கும்னு என்ன சொல்லச் சொல்ற”.

 

“அவ நிம்மதியே அந்தப் பையன் கிட்டத்தான் இருக்காம், இந்த ஊர்ல சிவபாலனோட பிறப்பு அவங்க அம்மா கல்யாணம் அப்படின்னு பேசலாம் இதுல எதுலயும் சிவபாலன் தப்பு இல்லை இதைத் தாண்டி அந்தப் பையனைப் பத்தி ஒரு குறை சொல்லமுடியுமா”.

 

“அவன் பின்னாடி பேசுற எல்லா யோக்கியனும் ஒரு பிரச்சனைன்னா அவன் முன்னாடிதான் போய் நிக்குறாங்க. அவனை எதிர்க்கத் தைரியம் இல்ல பகச்சிக்க பயம் அதுக்கு அப்பன் பேர் தெரியாதவன்னு பேசி இவங்களோட சாக்கடை மனசை சமாதானப்படுத்திக்குறாங்க”.

 

“என் மக சந்தோஷமா நிம்மதியா இருக்கணும் சிவபாலன் என் பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை அதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்ல. ஆனா இங்க விருப்பம் ஒருபக்கம் மட்டும்தான் இருக்கு கடைசிவரைக்கும் இது இப்படியே இருந்துட்டா நம்ம பொண்ணு தங்கமாட்டா பூரணி”.

 

“ஆனா, கட்டாயமா ஒருத்தவங்க மேல விருப்பத்தை வரவைக்க முடியுமா அதுவும் முடியாதே அப்போ நம்ம பொண்ணு நிலை அதுதான் பயமா இருக்கு”  என்றார் கலங்கிய குரலில்.

 

“நாமப் பேசிப் புரியவைக்கலாம்ங்க நீங்கச் சொன்னா கேட்பா”  என்றார் பூரணி.
மகேந்திரன் சோபாவில் இருந்த மகளின் கைப்பையிலிருந்து அலைபேசியை எடுத்து எண்களை அழுத்தித் திறந்தார்.  “சிவா”  என்ற போல்டெர் முழுதும் அவன் புகைப்படங்கள், அவன் மட்டுமே பல இடங்களில் பல நேரங்களில்.

 

“பேசியிருக்கமாட்டேன்னு நினைக்குறியா அதையெல்லாம் அவ தாண்டிட்டா அந்தப் பையன்கூடத்தான் வாழ்க்கைன்னு அவளே உறுதியா முடிவு செஞ்ச அப்புறம்தான் என்கிட்டயே சொல்லியிருக்கா”.

 

“என்ன செய்யலாம் அடிக்கலாமா? வீட்ல பூட்டி போடலாமா, ராத்திரியோட ராத்திரியா கையக் காலைக் கட்டி எவனுக்காவது கட்டி வைக்கலாமா, இல்ல வேற ஊரு நாடுன்னு தொரத்தி விடலாமா, இதுல எதை நம்மால செய்ய முடியும் பூரணி நாம அப்படி அவளை வளக்கவும் இல்ல”  என்றார்.

 

“ஏன் நம்ம பொண்ணுக்கு என்ன குறை அவளை வேண்டாம்னு அவர் சொல்ல”  என்றார் பூரணி ரோஷமாக.

 

“நம்ம பொண்ணு நமக்கு எப்போவும் இளவரசிதான்மா ஆனா அவ தனக்கு ராணியா வரணுமா வேண்டாமான்னு சிவபாலன்தானே முடிவு செய்யணும். அவ ஆசை நிறைவேறட்டும் கண்ணனுக்கு நிறைவா பிடிச்ச வாழ்க்கையை என் மக வாழட்டும் அவ்ளோதான்”  என்றார் தந்தை.

 

குளித்து வந்தவள் பாலை குடிக்க  “நாளைக்கு எங்கேயும் போக வேண்டாம் ரெஸ்ட் எடு”  என்றார் பூரணி.

 

“ஹ்ம்ம்”  என்றவள் அறைக்குள் செல்ல முயல  “அடிச்ச அந்தப் பையனை யாராவது பாத்திருப்பாங்கள்ல போலீஸ்ல கம்பிளைன்ட் குடுக்கலாம்”  என்றார் மகேந்திரன் மகளின் முகத்தைப் பார்த்துக்கொண்டே.

 

அவளிடம் தடுமாற்றம் தந்தைக்குச் சந்தேகம் வந்திருக்கிறது. தெரிகிறது… அவரிடம் கூட அவனை விட்டுக்கொடுக்க முடியவில்லை  “தப்பு என்பேர்லதான்ப்பா அதுக்குதான் இந்த அடி விட்ருங்க ப்ளீஸ்…”  என்றவளைப் பார்த்தவர்.

 

“இனிமே அப்பாகிட்ட இந்த ப்ளீஸ் சொல்லாம பாத்துக்கோடா”  என்றார். ஒன்றும் சொல்லவில்லை அவள் அறைக்குள் சென்றுவிட்டாள், பூரணிக்கு என்னசொல்ல என்றே தெரியவில்லை கணவரின் அருகில் அமைதியாக அமர்ந்துவிட்டார்.

 

மறுநாள் அவள் பார்லர்க்கூட செல்லவில்லை முத்துப்பாண்டி அழைத்து நலம் விசாரித்தான். விஷயம் தெரிந்தபின் ஏனோ பூரணிக்கு மகளைச் சிவபாலன் வீட்டுத் திருமணத்திற்கு அனுப்ப விருப்பமில்லை அதுவும் இந்த நிலையில்… சாப்பிடவே முடியவில்லை அவளால்.

 

பல் மருத்துவரையும் சென்று பார்த்து வந்திருந்தனர் வெறும் ஜூஸ் ,பால், கஞ்சி என்று குடித்துக்கொண்டிருந்தாள் பூரணி மகளிடம் சொல்லிப்பார்த்தார் வேறு யாரையேனும் அனுப்பலாம் என்று. அவள் மறுத்துவிட்டாள் “வரேன்னு சொல்லிட்டேம்மா கண்டிப்பா போகணும் வேற யாரையும் அனுப்ப முடியாது” என்றுவிட்டாள்.

 

முதல்நாள் பெண்ணழைப்புக்கு வீட்டிற்குச் சென்று செய்துகொடுத்தாள்.  “என்னம்மா உடம்பு சரியில்லையா”  என்றார் ஷர்மிளாவின் அம்மா அவளைப் பார்த்தவுடன், மாஸ்க் போட்டிருந்தாள் கூடவே கொஞ்சம் சோர்வும்.

 

“ஆமா ஆண்ட்டி சளி பிடிச்சிருக்கு”  என்றுவிட்டாள் அதே கதையைத்தான் மறுநாள் கல்யாணத்தில் கூடக் கேட்டவர்களிடம் எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

 

அதிகாலை முகூர்த்தம் சக்திப்பிரியா அவளின் உதவிக்கு ஒரு பெண் என்று அவர்கள் இருவரும் மட்டும் மூன்று மணிக்கே மண்டபம் வந்துவிட்டனர். மண்டபத்திற்குள் நுழைந்த மறுநொடி அவள் விழிகள் அவனின் வண்டியைத் தேடியது உள்ளே ஓரமாக நிறுத்தியிருந்தான்.

 

இப்பொழுது விழிகள் அவனைத் தேடியது .  “பிரியாமா வா வா”  என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றான் முத்துப்பாண்டி அவள் புன்னகைத்தது அவனுக்குத் தான் தெரியவில்லை மாஸ்க் போட்டிருந்தாளே.

 

“என்னாச்சு”  என்றவனிடம்  “ஹ்ம்ம் உங்க அண்ணன் கிட்ட அடிவாங்கினதை ஊருக்கே காமிக்கணுமா”  என்றாள் உர்ரென்று.

 

“சரி சரி நோ டென்சன் வா காபீ குடி”  என்றவன் அவளையும் உடன் வந்த பெண்ணினையும் உள்ளே அழைத்துச்சென்றான். கோல்ட் கோல்ட் என்று சொல்லியே அனைவரையும் தள்ளிநிறுத்தினாள்.

 

தாலி கட்டும் நேரம்கூட சிவபாலனை அங்கே காணவில்லை. அன்புக்கரசிக்கும் நேரமே இல்லை தாலி கட்டி முடித்துச் சடங்குகள் முடிந்து பரிசுகள் கொடுக்கத் தொடங்கவும் அன்புக்கரசி கீழிறங்கினார்.

 

“என்னடா உடம்பு சரியில்லையா ரொம்ப டயர்டா இருக்கியே”  என்றவரிடம்  “அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆண்ட்டி இன்னும் கொஞ்சம் நேரம் தானே கிளம்பிடுவேன்”  என்றாள். அதற்குமேல் அவள் ஒன்றும் பேசவில்லை.

 

அவருக்கும் என்ன கேட்க என்று தெரியவில்லை என்னவோ அவளிடம் ஒரு ஒதுக்கம் தெரிவதாய். ஏன் என்று புரியாமல் யோசித்திருந்தார். அவளுக்கு அனைவர் மீதும் கோபம் அவன் உழைப்பை மட்டும் அட்டையாய் உறிஞ்சிக்கொண்டவர்கள் அவனுக்கான மரியாதையைச் சபையில் செய்யவில்லையே.

 

அண்ணன் இருக்கையில் தம்பிக்குத் திருமணமே சரியில்லை இதில் அவன் இங்கில்லை என்பதைக் கூட யாரும் பெரிதாகக் கருதியதாகத் தெரியவில்லை அவள் அமைதியாக அமர்ந்திருக்கவும் அன்புக்கரசி அறையை விட்டு வெளியில் சென்றார்.

 

அவர் சென்றபிறகு சிறிது நேரத்திலே முத்துபாண்டியிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது  “பிரியாமா இப்போ வேலை இருக்கா”  என்றான்.

 

“இல்லண்ணா ஒரு அரைமணி நேரம் ஆகும் இன்னொரு புடவை மாத்தணும் அது முடிஞ்சா அவ்ளோதான்”  என்றாள்.

 

“சரி எதுவம் வேணும்னா போனை போடு கொண்டுவரேன்”  என்றவனிடம்  “உங்க அண்ணா எங்க”  என்றாள்.

 

“அவரைக் கொண்டு வரமுடியாதே”  என்றவன் சிரித்துக்கொண்டே “ரூம்ல இருந்து வெளில வந்து மேல பாரு” என்றான்.

 

அவள் அறை வாயிலில் வந்து நின்று மேலே பார்வையைப் பதித்தாள். அது முதல் தளத்திலும் ஆட்கள் அமரும் வகையில் இருந்த பெரிய மண்டபம், இப்பொழுது மேல் தளம் காலியாக இருக்க அதன் கடைசியில் ஓர் இருக்கையில் அமர்ந்து அலைபேசியில் பார்வை பதித்திருந்தான் சிவபாலன்.

 

“இங்கதான் இருந்தாரா”  என்றாள் அவனிடம்.

 

“ஹ்ம்ம் ஆமா, ஒருத்தனையும் பக்கத்திலேயே வரக் கூடாது சொல்லிட்டாரு வெறும் மேற்பார்வைதான் இருந்த இடத்துல இருந்தே இவனுங்களுக்கு இதுவே போதும்”  என்றான் அவன்.

 

“ஒரு சந்தேகம் கேக்கவா”  என்றாள் சக்திப்பிரியா.

 

“கேளு”  என்றான் இவன்.

 

“தோள்வரைக்கும் முடி, தாடி, கருப்பு டிரஸ்… உங்க அண்ணாக்கு எதுவும் காதல் தோல்வியா”  என்றதும் அங்கிருந்தே அவளை முறைத்தவன்  “இவருக்கு… காதல் தோல்வி நல்ல சந்தேகம் பேசாம அவர்கிட்டயே கேளேன்”  என்றான் முத்துப்பாண்டி கடுப்பாக.

 

“கரெக்ட்”  என்றவள் அவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு சிவபாலனுக்கு அழைத்தாள். அவன் எண் இவளிடம் உள்ளது இதுவரை அழைத்ததில்லை, முத்துப்பாண்டி சிவபாலனின் பின்னால் பால்கனியில் தான் நின்றிருந்தான் அவள் அழைப்பு விடுப்பதைப் பார்த்ததுமே ஜன்னலின் பக்கம் ஒளிந்துகொண்டான்.

 

தெரியாத எண்… அழைப்பை ஏற்றவன்  “ஹலோ”  என்றான் கம்பீரக் குரலில்.

 

“சிவாக்கு லவ் பெய்லியரா”  என்ற கிசுகிசு குரல் அவன் செவியைத் தீண்டி உடலைச் சிலிர்க்கவைத்து உள்ளே இறங்கியது விழிகளை மூடித் திறந்தான் சிவபாலன்.

 

அலைபேசியைச் சட்டென்று செவியிலிருந்து எடுத்தவன் தள்ளி வைத்துவிட்டு சுற்றிலும் பார்வையைச் சுழலவிட்டான் அவளைக் காணவில்லை. இன்றுதான் முதல்முறை அவள் குரலை அலைபேசியில் கேட்கிறான் என்றாலும் கேட்ட நொடியே அவன் மனது உணர்ந்துவிட்டது அவள்தான் என்று.

 

அவன் அமைதியாகவே இருக்க  “சொல்லுங்க அவங்களை மறக்க முடியலையா இல்ல அவங்க வருவாங்கன்னு காத்துட்டு…”  என்றவளுக்கு அதற்குமேல் பேச்சு வரவில்லை.

 

“இன்னொரு கன்னம் பழுக்குறதுக்குள்ள வெச்சிட்டு ஓடிப் போயிடு”  என்றான் உறுமலாக.

 

“ப்ளீஸ் சொல்லுங்களேன்”  என்றாள் உடைந்த குரலில்.அவள் விழிநீர் அலைபேசி வழியே அவன் செவிகளை நனைத்த உணர்வுப் புருவத்தை அழுத்தமாக நீவினான்.

 

“எனக்கு எவ மேலயும் ஒரு மண்ணும் கிடையாது வெச்சிட்டு போடி”  என்று அழைப்பைத் துண்டித்தவன் பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்துவிட மறைந்து நின்றிருந்த முத்துப்பாண்டி குத்தாட்டம் போட்டான்.

 

பிறகு… இவன் குணத்திற்குப் பெண் குரலைக் கேட்டதும் அதுவும் தெரியாத ஆள் என்றவுடன் துண்டித்திருப்பான் இத்தனை பொறுமையாக அவனுடைய அகராதியில் முதல் முறையாகப் பதில் சொல்லியிருக்கிறான், அதுவும் அவள் குரலை உடனே தெரிந்துகொண்டு.

 

சந்தோசம் பிடிபடவில்லை முத்துவுக்கு ‘ வந்திருச்சு வந்திருச்சு தங்கச்சி உள்ள வந்திருச்சு’  என்று துள்ளியவன் சத்தம் செய்யாமல் அப்படியே நழுவி கீழே சென்று வாயெல்லாம் பல்லாகச் சக்திப்பிரியாவின் முன் நின்றான்.

 

அவனை முறைத்துப் பார்த்தவள்  “உங்க அண்ணா என்னைத் திட்டுறாரு நீங்கப் பல்லைக் காமிக்குறீங்க”  என்றாள்.

 

“அதெல்லாம் உனக்குச் சொன்னா புரியாது”  என்றவனுக்கு அப்படியொரு சிரிப்பு.

 

அன்புக்கரசி வந்தவர்  “நீ இங்கதான் இருக்கியா”  என்றார் முத்துவிடம். பிறகு அவளைப் பார்த்து  “வாடாச் சாப்பிடு உன் கூடவந்த பொண்ணுகூட சாப்பிட்டா நீ இன்னும் சாப்பிடல”  என்க.

 

“தொண்டை வலி இருக்கு ஆண்ட்டி சாப்பிட முடியாது வேண்டாம் நீங்கப் பாருங்க”  என்றவள் பொருட்களை எடுத்துவைத்தாள்.

 

“கொஞ்சமா ரசம் சாதம் கொண்டுவரவா”  என்றார் அவர் விடாமல்.

 

திரும்பி அவரைப் பார்த்தவள்  “உங்க மகனை இப்படிச் சாப்பிடச் சொல்லிக் கேட்டிருக்கீங்களா அத்த”  என்றாள். அவள் கேள்வியிலும் அந்த அழைப்பிலும் அவர் ஸ்தம்பித்து நின்றார்.

 

“அவர் சாப்பிடாம இருக்கும்போது அவர் கையைப் பிடிச்சு இழுத்துட்டு போய் ஒரே ஒரு வாய் அம்மாக்காகன்னு ஊட்டி விட்டிருக்கீங்களா, உங்க மகன் எந்த விசேஷத்திலாவது பந்தில உக்காந்து சாப்பிடுறதை நீங்கப் பாத்திருக்கீங்களா, இதெல்லலம் உங்ககிட்ட கேக்க கூடாதுன்னுதான் நினச்சேன் ஆனா இப்போ… சாரி”  என்றவள் முடிக்க.

 

“போட்டோஷூட் இருக்கு அடுத்த புடவை மாத்தலாமா”  என்று வந்தாள் ஷர்மி.

 

“அத்த இங்கதான் இருக்கீங்களா”  என்றாள் ஷர்மி அன்புவிடம்.அப்பொழுதுதான் அவர் சுயம் பெற்றார்  “ஹ்ம்ம் ஆமா நீ பாருமா”  என்றவர் அறையை விட்டு வெளியேறினார்.

 

மெல்ல அவர் விழிகள் உயர்ந்து மகனைப் பார்த்தது இன்னும் இன்னும் அவன் தள்ளிச் சென்ற உணர்வு. நேற்று பெண்ணழைப்பு முடிந்து பந்தி நடக்கும்போது சமையல் கூடத்தில் சிறிய விபத்து, பூரி போட்டுக்கொண்டிருந்த நேரம் சட்டென்று சட்டி கவிழ்ந்து மூன்று பேருக்குக் கால் வெந்துவிட்டது.

 

எங்குச் செல்ல என்ன செய்ய என்று பெண் வீட்டினர் தடுமாறப் பத்தே நிமிடத்தில் புதிய ஆட்களை வரவைத்து வேலையைச் செய்யவைத்து காயம் பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து பிரச்சனை வெளியில் தெரியாமல் பார்த்து என்று முடித்துவிட்டான்.

 

பவுனுத்தாயிதான் புலம்பித் தள்ளினார் அபசகுனமா இருக்கே பேரன் வாழ்க்கையிலும் ஏதாவது தப்பா நடந்திடுமா என்று இபோழுதே பயம் கவ்வத்தொடங்கியது.

 

ஏன் சிவபாலனுக்கு பெண் தரமாட்டேன் என்ற ஷர்மிளாவின் தந்தை பத்து நாட்களுக்கு முன் அவன் முன்னில் தலை நிமிர முடியாமல் அமர்ந்திருந்தார்.

 

நீ யாராக இருந்தால் எனக்கென்ன என்று திமிராகவே கால்மேல் கால் போட்டு எப்பொழுதும் போலவே அமர்ந்தவன்  “சொல்லுங்க”  என்றான்.

 

“இடம் வித்தோம் அட்வான்ஸ் குடுத்து புக் பண்ணான் இப்போ காசு குடுக்காம இழுத்தடிக்குறான் கேட்டா கொஞ்ச நாள் பொறுமையா இருக்க சொல்றான்”  என்றார் தயங்கி.

 

“போலீசுக்கு போங்க”  என்றான் அசட்டையாக.

 

பவுனுத்தாயி பல்லைக் கடித்தார் ஆனால் எதுவும் பேசமுடியவில்லை கவிதா கண்டிப்பாகச் சொல்லியிருந்தாள் “அதிகமா அவனைச் சீண்டாத அம்மாச்சி எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டான்”  என்று கூறியிருக்கப் பொறுமை காத்தார்.

 

“போலீஸ் அவன் பக்கம்”  என்று அவர் தயங்கிக் கூற.

 

“நான் என்ன அடியாளா உங்க காசை வாங்கி குடுக்க”  என்றவன் பவுனுத்தாயை அழுத்தமாகப் பார்த்தான். அவர் பேரனுக்கு வரவேண்டிய சீதனப் பணம் ஆயிற்றே அது அதனால் அமைதியாகவே நின்றிருந்தார் அவர்.

 

“பாக்குறேன்”  என்றவன் மேலே சென்றுவிட்டான் அன்று மாலையே பணம் கைக்கு வந்து சேர்ந்துவிட்டது.

 

ரங்கசாமியின் பெரியப்பா ஷர்மியின் அப்பாவிடம் நேரடியாகவே கூறிவிட்டார்  “அன்னைக்கு ரொம்ப வீராப்பா பொண்ணை குடுக்க முடியாதுன்னு சொன்னீங்க இன்னைக்கு பொண்ணுக்கு குடுக்க வேண்டிய சீதனப்பணமே அவன் மூலமாத்தான் வந்திருக்கு, யாரையும் பேசும்முன்ன யோசிக்கணும் சம்மந்தி எப்போ யார் கிட்ட போய் நிக்க வேண்டிவரும்னு தெரியாது”  என்றுவிட்டார்.

 

பெரும் அவமானமாக உணர்ந்தார் ஷர்மியின் தந்தை. முதலில் மகன் சந்தோஷுடன் சென்று பேசிப்பார்த்தார்  “பணம் எனக்கு வரவேண்டியது வரலண்ணே தராம எங்க போகப் போறேன்”  என்றான் அவன்.

 

அடுத்து மருமகனாக வரப்போகும் கதிரிடம்தான் சொன்னார்  “எனக்கு இதெல்லாம் தெரியாது மாமா அண்ணாக்குதான் தெரியும் நீங்க அவரைக் கேளுங்க”  என்றுவிட்டான், பெரும் யோசனை தயக்கத்திற்குப் பிறகு தான் சிவபாலனிடம் வந்தது இரண்டுமாதமாக இழுத்துக்கொண்டிருந்த பிரச்சனை.

 

அன்பரசி வெளியேறியதும் ஷர்மிளாவை பார்த்த சக்திப்பிரியா  “ஸூர்”  என்று கூறி அவள் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். அதை முடித்து டச்சுப் செய்தவள்  “முடிஞ்சிடுச்சுல நான் கிளம்பவா”  என்றாள் ஷர்மிளாவிடம்.

 

“தேங்க்யூ சோ மச் ரொம்ப நல்லா இருந்துச்சு”  என்றாள் ஷர்மி.

 

“தேங்க்யூ… நீங்கப் பிரீ ஆயிட்டு எனக்குப் பீட்பேக் சொல்லுங்க”  என்றவள் பேகை எடுத்துக்கொண்டாள், உதவிக்கு வந்த பெண் அவளின் வண்டியிலே வந்திருந்தாள் அவளிடம் கிளம்பச்சொல்லிவிட்டாள் சக்திப்பிரியா.

 

வீட்டில் போய்ச் சுருண்டுகொள்ள வேண்டும் அப்படியொரு களைப்பு உடலிலும் மனதிலும். அதை உணர்ந்த முத்துப்பாண்டி  “நீ இரு நான் போய் ஆட்டோ கூட்டிட்டு வரேன் நிக்கவே முடியல உன்னால வண்டியைக் கொண்டு போய் எங்கயாவது விட்டுருவ”  என்று சொல்லிச் சென்றான்.

 

முத்துப்பாண்டி வெளியில் செல்வதும் ஆட்டோவில் திரும்பி வருவதையும் பார்த்துத்தான் நின்றிருந்தான் சிவபாலன். ஆட்டோவில் ஏறும்முன் சக்திப்பிரியா சட்டென்று மேலே பார்த்தாள் அவனும் அவளைத்தான் பார்த்தான் கன்னத்தில் கை வைத்து அவனை முறைத்துக்கொண்டு ஏறிச்சென்றாள்.

 

முத்துப்பாண்டி மேலே ஏறிவந்து அவன் அருகில் நின்றான். அவனாகக் கேட்கமாட்டான் என்று தெரியுமே  “பாவம் சாப்பிடவே முடியலையாம் ரொம்ப சோர்வா வேற இருக்கு இப்படியே வண்டியை இந்த வெயில்ல ஓட்டிட்டு போனா எங்கயாவது விழுந்துடும் அதான்”  என்றான் இவனிடம் அசைவில்லை.

 

“உங்களைக் கையைப் பிடிச்சு இழுத்துட்டு போய் ஒரு வாயாவது அம்மாக்காகச் சாப்பிடுன்னு ஊட்டி விட்டிருக்கணுமாம் ஏன் செய்யலன்னு அம்மாகிட்டயே சண்டைக்கு நிக்குது”  என்று முத்து கூற பால்கனி கம்பியை அழுத்தமாகப் பற்றினான்.

 

“நாளைக்குக் காலையிலே ஆளுங்கள வரச்சொல்லு என் ரூமோட வாசலை வெளிப்பக்கமா மாத்தணும் படி வெக்கணும்”  என்றவன் கிளம்பிவிட்டான் ஒரத்தநாட்டுக்கு.

 

அவன் பாட்டி அவனுக்கென்று வைத்துவிட்டுப் போன வீடு அங்குதான் இருக்கிறது. தினமும் கூட்டிப் பெருக்கி விளக்கு வைக்க ஆள் உண்டு அங்கே அவனுக்குப் போக வேண்டும் என்று தோன்றினால் சென்றுவிடுவான்.

 

வீட்டிற்கு சென்ற சக்திப்பிரியா குளித்து உடைமாற்றி வரப் பூரணி மிக்ஸியில் சாதத்தை அடித்துத் தாராளமாக ரசம் விட்டு ஒரு பெரிய கிளாசில் ஊற்றிக் கொடுக்க அதைக் குடித்தாள், பிறகு பெற்றவர்களோடு நேரம் செலவிட்டு இரவு கொஞ்சம் நேரத்தோடே படுக்கச் சென்றாள்.

 

தாய் கைக்கு மசாஜ் செய்யத் தந்தை கால் பிடித்துவிட நிம்மதியான உறக்கம் அவளுக்கு.

 

“சிவாக்கு லவ் பெய்லியரா”  என்ற குரல் குறுகுறுத்துக்கொண்டே இருந்தது அவன் செவிகளில்  “எதையாவது பேசிட்டு போய்டுறா அது கிடந்து கொடஞ்சுக்கிட்டே இருக்கு இம்சை இம்சை”  என்று புலம்பிக்கொண்டே நெஞ்சை நீவினான்.

 

ஒரத்தநாட்டின் தெருநாய்களுக்குத் துணையாக இரவுலா சென்றுகொண்டிருந்தான் சிவபாலன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!