Skip to content
Post Views: 2,160
-

-
அத்தியாயம்-21
அடுத்தநாள் சனிக்கிழமை விடுமுறை நாள் அதிதி வழக்கம்போல் காலை பதினோரு மணி வரை தூங்கி மெதுவாக விழித்தாள். விழித்ததுதான் போதும் என்று உடனே மனதில் பாரமும் ஏறிக்கொண்டது.. சோகமே உருவாக எழுந்து கீழே வந்தவள்..
எதோ வேலையாக இருந்த அம்மாவை பின்னாலிருந்து கட்டிக்கொண்டு அவர் கழுத்தில் முகம் புதைத்து..சற்று ஆறுதல் தேடினாள்.
“எந்திரிச்சி வர்ற நேரத்த பாரு.. என்னடி இன்னும் தூக்கம் தெளியலையா..” என்று அவர் வழக்கம் போல கடுப்படிக்க..
“ச்சு..கொஞ்சமாவது பெத்தபொண்ணுமேல பாசம் இருக்கா..?” என்று உச்சுகொட்டிவிட்டு
Advertisement
ஒரு பெருமூச்சுடன் விலகி…தன்னியல்பாக ஃப்ரிட்ஜைத் திறந்தாள்..
“பாசம் இல்லாமதான் உனக்கு புடிச்ச மட்டன் பிரியாணிக்கு ரெடி பண்ணிட்டு இருக்கேனா..?” என்று கேட்டவர்,அவள் ஃப்ரிட்ஜை நோண்டுவதைப்பார்த்து..
“அது என்னதான் இருக்கோ அந்த ஃப்ரிட்ஜ்ல..? எப்பப்பாரு சும்மானாவது வந்து தொறந்து மூட வேண்டியது..” என்று அவர் தனது வழக்கமான அர்ச்சனையை ஆரம்பிக்கவும்..
Advertisement
”ட்ர்ர்ர்..” என்று ட்ரில் மெஷின் போன்ற சத்தத்துடன் காலிங் பெல் அடிக்கவும்.. சரியாக இருந்தது.
Advertisement
“ஹே அதி யாரு பாருடி..” என்றார் சுதாஷினி..
“போம்மா.. நீ ஆர்டர் போட்ட எதுனா டெலிவரி வந்திருக்கும் நீயே போய் பாரு..” என்று கூறிவிட்டு தலையை ஃப்ரீசருக்குள் விட்டு குளிர்ந்த பனிக்காற்றை முகத்தில் மோதவிட்டாள்..
“ஒரு வேலை செய்யாத..” என்று அலுத்துக்கொண்டே சென்று கதவைத் திறந்தவர் ஒரு கணம் அசந்து நின்றுவிட்டார். அங்கே வாசலில் வசீகரன் முகத்தில் புன்னகையும், கையில் பழக்கூடையுமாக நின்றிருந்தான்..
Advertisement
சுதாஷினி ‘யார் இது..? எதுவும் செலிபிரிட்டியா? இந்த முகத்தை எங்கேயாவது சினிமா டிவியில் பார்த்திருக்கோமா..?’ என்று மூளையின் நினைவு அடுக்குகளுக்கிடையில் தேடிக்கொண்டிருக்க..
“ஹாய் ஆண்ட்டி..” என்றான் தன் மந்திர புன்னகையை உதிர்த்து..
“யாரு..?” என்று அவர் கேள்வியாக பார்க்க..
“அதிதியோட வீடுதானே?”
“ஆமா.. நீங்க..?”
“நான் அதிதி கூட வேலை பாக்குறேன் ஆண்ட்டி.. என் பேரு வசீகரன்..” என்றான்.
அப்போதும் பிரமிப்பு நீங்காமலே நின்றிருந்தவர்..சட்டென்று சுதாரித்து..
“உள்ள வாங்க..” என்றார்.
“ஹே அதி..” என்று உள்ளே மகளை பார்த்து சற்று உரக்க அழைத்தார்.
“உக்காருங்க தம்பி..” என்று உபசரித்தவரிடம்
“இந்தாங்க ஆண்ட்டி..” என்று தான் கொண்டுவந்த பழங்களை நீட்டினான்.
நன்றி கூறி அதைப்பெற்றுக்கொண்டே
“ஹேய் அதி..” என்று இன்னும் சற்று சத்தமாக அழைக்க..
“அம்மா அந்த கொரங்கு என் கிட்கேட்டை(kit-kat) எடுத்து சாப்ட்டுட்டான்ம்மா.. அவனுக்கு இதே வேலையாப்போச்சி..” என்று கத்திக்கொண்டே வந்த மகளைப்பார்த்து முறைத்தார்.
வசீகரனை அங்கே கனவிலும் எதிர்பார்க்காத அதிதி திறந்த வாய் மூடாமல் அப்படியே திகைத்து சிலையாக நின்றுவிட்டாள்.
அவள் வந்து நின்ற கோலத்தைப்பார்த்து அவன் தன் வழக்கமான குறும்பு சிரிப்பு இன்னும் விரிய அவளை மேலும் கீழும் பார்த்து நகைத்தபடி நின்றிருந்தான்.
நேற்றிலிருந்து அவனது பாராமுகம் தாங்காமல் ஏங்கியிருந்தவளுக்கு அவனைப்பார்த்ததும் ஓடிப்போய் இறுக்கமாக கட்டிக்கொள்ளவேண்டும் போல இருந்தது.
ஆனால் குளிக்காமல் கசங்கிய இரவு உடையில் தான் இருந்த நிலையும் தன் அன்னை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற குறைந்தபட்ச சுற்றுப்புற அறிவும் தடுக்க முயன்று அந்த உந்துதலை அடக்கிக்கொண்டாள்.
“என்ன அத்து வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னுகூட கூப்பிடாம மரம் மாறி நிக்குற..”
என்று தன் மகளைக்கடிந்து கொள்ள..
‘இந்த அம்மாவேற இவன் முன்னாடி என்னை இன்சல்ட் பண்ணுதே..’
என்று நொந்துகொண்டு..
“வாங்க..” என்றவள்
“நீங்க எப்டி இங்க?” என்று சேர்த்து கேட்டாள்.
“ஏய் விருந்தாளிகளை அப்படிலாம் கேட்க கூடாது..” என்று மகளுக்கு பாடம் எடுத்தவர் ..
“இவளுக்கு இதெல்லாம் ஒன்னும் தெரியாது தம்பி.. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க..” என்றார் வசீகரனிடம் மன்னிப்பு கோரும் தொனியில்
‘இதுக்கு இந்த அம்மா என்னை தத்திபண்டாரம்ன்னே சொல்லி இருக்கலாம்.’
“அய்யோ பரவால்ல ஆண்ட்டி.. அதிதிய பத்தி எனக்கு தெரியாதா..?” என்று அவன் தேனொழுக கூறினான்.
அப்போது உள்ளிருந்து வந்த தனசேகர்,
“யாரு சுதா..?” என்று கேட்க
“நம்ம அதி கூட வேலை பார்க்கறவராம்ங்க..”
“ஐய்யோ அம்மா.. அவரு என்னோட வேலை பார்க்கறவரு இல்லை, அவருக்குதான் நான் வேலை பார்க்குறேன்.. எங்க கம்பெனி க்ளையண்ட்மா..” என்று அவசரமாக திருத்திக்கூறவும்..
“ஓ இவரு தான் க்ளையண்ட்டா..” என்ற சுதாஷினி தன் கணவரை குறிப்பாக பார்த்தார்.
“வாங்க…உக்காருங்க..” என்று வரவேற்றவர்..
“நான் அதிதியோட அப்பா..” என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார்.
“தெரியும் அங்கிள் அதிதி சொல்லியிருக்கா விபி யா இருக்கீங்கன்னு…”
“நீங்க..?”
“ஐயம் வசீகரன் ஆஃப் லிங்கா மெஷினரீஸ்” என்று முறைப்படி அறிமுகப்படுத்திக்கொண்டு கை குலுக்கினான்.
“அப்பா இவரு லிங்கா மெஷினரீஸோட எம்டி.. இவங்க கம்பெனி ப்ராஜெக்ட்காகதான் நான் கோயம்புத்தூர் போறேன்..” என்று விளக்கம் தந்தாள் அதிதி.
“ஓ லிங்கா மெஷினரீஸா..? கோயம்புத்துர்ல ரொம்ப ஃபேமஸ் ஆச்சே.. என் ஃப்ரண்ட் கூட அங்க வொர்க் பண்ணியிருக்கான்.. அந்த காலத்துலயே வேலை பார்க்கறவங்களுக்கு மதிய சாப்பாடு போட்ட முதல் கம்பெனின்னு சொல்லுவான்..”
“எங்க தாத்தாதான் அதை ஆரம்பிச்சி வச்சாரு அங்கிள்..” என்றான் வசீகரன்.
“வாவ்.. வாட் ய கிரேட் லெகசி.. உங்கள மீட் பண்ணதுல ரொம்ப சந்தோஷம் சார்..” என்றார் அப்பா.
“அய்யோ அங்கிள் சார் எல்லாம் வேணாம். வசின்னு கூப்பிடுங்க போதும்..”
“என்ன இருந்தாலும் நீங்க என் பொண்ணுக்கு ஒரு வகையில பாஸ் இல்லையா..”
“அதெல்லாம் இப்பதான் ஆங்கிள், எனக்கு அதிதிய காலேஜ்ல இருந்தே தெரியும் அவ என்னோட ஜூனியர்தான்..” எனவும், என்ன இவன் ரொம்ப உரிமை எடுத்து பேசுறானே அப்பா என்ன நினைப்பாரோ என்று அதிதி யோசனையாக அவரைப்பார்க்க
“ஓ அப்படியா..”என்று அந்த புதிய செய்தியை ஜீரணித்தவர்..
“எங்கள பத்தி எல்லாம் சொன்னவ, உங்களப்பத்தி எங்ககிட்ட ஒன்னுமே சொல்லல,பாருங்களேன்..” என்று தன் மகளை குறிப்பாக பார்த்துவிட்டு,மீண்டும் அவனிடம் திரும்பி
“என்ன விஷயமா வந்திருக்கீங்க வசி..?” என்று நிதானமாக கேட்டார்.
‘அப்படி கேளுங்கப்பா.. நீங்களாவது கேட்டீங்களே..’
என்று அப்பாவை மனதில் மெச்சிக்கொண்டிருக்க..
“என்ன அதி.. நீ சொல்லலையா..?” என்று அவன் அவளிடமே திருப்பி கேட்க
அவள் புரியாமல் விழித்தாள்.
“ஆண்ட்டி உங்க பொண்ணுக்கு நியாபக மறதி அதிகமாகிடுச்சின்னு நெனைக்கறேன். நீங்க தான் நல்லா குக் பண்ணுவீங்களே, அவளுக்கு வல்லாரைக்கீரை சட்னி செஞ்சி குடுங்க ஆண்ட்டி..” என்றான்.
“வல்லாரைகீரை சட்னியா..?அது எப்படி செய்யறது..?” என்று அம்மா ஆர்வம் ஆகவும்..
“இப்ப அந்த ரெசிபி ரொம்ப முக்கியமா..?சும்மா இரும்மா..” என்று அடிக்குரலில் அவரை அடக்கிவிட்டு..
“நான் எத மறந்தேன்..?” என்று அவனை நேரடியாகக் கேட்டாள்.
“நீ ஏன் இன்னும் ரெடி ஆகாம இருக்க..? நாம இப்ப கோயம்புத்தூர் கெளம்பனும் இல்லயா..?” என்றான்.
“இப்பவா? நான் நைட் ட்ரெயின் தானே புக் பண்ணியிருக்கேன்..”
“பார்த்திங்களா ஆண்ட்டி.. நான் சொன்னேன்ல , இவளுக்கு மறதி அதிகமாகிடுச்சின்னு.. லாஸ்ட் மினிட்ல ட்ரெயின் டிக்கெட் கெடைக்கல என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தாங்க ..
அப்போ நானும் கோயம்புத்தூருக்கு தானே போறேன் என்னோட வரட்டும்ன்னு சொன்னேன். விக்ரம் அண்ணாவும் சரின்னு சொல்லிட்டாரு..
அதுவும் இல்லாம எங்க கம்பெனி ப்ராஜெக்ட்டுக்காகதானே அதிதி வர்றா அப்போ நான்தானே கூட்டிட்டு போகனும் ஆங்கிள்? ” என்று இருவரிடமும் மாறி மாறி பேசியவன், இவளைப்பார்த்து “என்ன அதி நேத்து லன்ச்ல பேசினதெல்லாம் மறந்துடுச்சா.?” என்று அவன் எதோ இதெல்லாம் நடந்தது போலவே கேட்கவும்..
நேற்று லன்சில் நடந்ததை அவள் எப்படி மறப்பாள்..?
வேண்டுமென்றே அவளை குத்திக்காட்டதான் இப்படி செய்கிறான், மேலும் அவன் வேறு எதோ திட்டமிடுகிறான் என்றும் அவளுக்கு புரிந்தது,
“அங்கிள் இவளோட பாஸ் விக்ரமாதித்யா வேற யாருமில்லை, என்னோட கசின் தான்.. நீங்க வேணா அண்ணாவுக்கு ஃபோன் பண்ணி பேசுறீங்களா?” என்று விக்ரம் பேரையும் இழுத்து இவன் கோர்வையாக அளந்து விடவும் அவளது பெற்றோரும் தங்கள் மகள் ஒரு மறதி கேஸ்தான் என்று நம்பியேவிட்டனர்.
“என்ன பாப்பா எவ்ளோ முக்கியமான விஷயத்தை இப்படி மறந்து போவியா..? போ போய் சீக்கிரம் குளிச்சி ரெடி ஆகு..” என்று அப்பா லேசாக குறைபடவும்.
என்ன நடக்கிறது என்று இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை..
இருந்த இடத்தை விட்டு ஒரு இன்ச் கூட நகராமல்
“உங்க கூட வர்றதுன்னா? எதுல..?” என்று கேட்டவளுக்கு பதில் போல..
“அம்மா நம்ம வீட்டு வாசல்ல ஒரு பிஎம்டபில்யூ கார் நிக்குது.. யாருதுமா? என்று கேட்டபடி உள்ளே நுழைந்தான் அனிருத்.
உள்ளே ஒரு புதியவன் இருப்பதை பார்த்ததும் கேள்வியாக அம்மாவை பார்க்க,
“அது என்னோட கார்தான்” என்ற வசீகரன்
அவனைப்பார்த்து சினேகமாக சிரித்து..
“நீங்க அனிருத் தானே.. டாக்டர் கரெக்ட்டா..?என்று கேட்க..
பக்கென்று சிரித்துவிட்டாள் அதிதி..
“டாக்டரா இவனா..? இன்னும் படிச்சே முடிக்கல அதுக்குள்ள டாக்டரா? போலி டாக்டர்ன்னு வேணா சொல்லிக்கலாம்..” என்று தம்பியை நக்கலடிக்க..
“நீ வேணா பாரு இன்னும் மூணு வருஷத்துல டாக்டர் அனிருத்ன்னு நம்ம வீட்டு வாசல்ல போர்டு மாட்டிக்காட்டுறேன். உன்னால முடியுமா..?” என்று சவால் விட்டான்.
“நாங்கல்லாம் உங்களை மாதிரி செய்யற வேலைய வெளிய சொல்லி பெருமையடிச்சிக்கறவங்க இல்லைடா?”
“நீ செய்யறது வேலை, நான் செய்யறது சர்வீஸ்.. ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு..”
“ஆமா இவன் அப்படியே பெரிய சர்வீஸ் பண்ணி கிழிப்பான்.. உன்கிட்டலாம் எவண்டா வருவான்..? நான்லாம் சாகக்கிடந்தா கூட உன்கிட்ட வைத்தியம் பாக்க மாட்டேன்..” என்றாள் ஏளனமாக..
“நான் பேஷண்ட்டே இல்லாம ஈ ஓட்டினாக்கூட உனக்கு வைத்தியம் பாக்க மாட்டேண்டி..” என்று அவன் பதிலடி கொடுத்தான்.
இருவரும் சண்டைக்கோழிகள் போல நிற்பதைப்பார்த்து வசீகரன் கொஞ்சம் பயந்துவிட்டான் என்றே கூறலாம். ஒற்றை பிள்ளையாக வளர்ந்தவனால் இந்த சிப்லிங் சண்டையை புரிந்து கொள்ளமுடியவில்லை.
“எப்படி ஆண்ட்டி சமாளிக்கிறீங்க…?” என்று சுதாஷினியிடம் மெதுவாக கேட்டான்.
“எங்களுக்கு பழகிடுச்சி தம்பி..” என்றவர்
“வீட்டுக்கு வந்தவங்க முன்னாடி இப்படித்தான் சண்டை போடுவீங்களா..?” என்று அதட்டவும்.. இருவரும் அமைதியானார்கள்.
“அத்து நீ போய் சீக்கிரம் ரெடி ஆகுமா..” என்று அப்பா கொஞ்சம் அழுத்தி சொல்லவும் அதிதி வேறு வழியில்லாமல் மேலே சென்றாள்.
அவளது பெட்டியெல்லாம் ஏற்கனவே தயாராகத்தான் இருந்தது.. வசீகரனின் பதிலுக்காக இரவு காத்திருந்த போது நேரத்தை கடத்தவென்று பேக் செய்திருந்தாள்.
குளித்துவிட்டு அவள் கீழே போன போது..
வசீகரன் அவர்கள் வீட்டில் ஒருவனாகவே மாறியிருந்தான்.
அப்பாவிடம் உள்ளூர் முதல் உலகப்பொருளாதாரம் வரை பேசியவன், அவள் அம்மாவின் கையால் மணக்க மணக்க ஃபில்டர் காபியைக் சுவைத்தபடி அவரது யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்திருந்தான்
அனிருத்துடன் ஃபுட்பால், புதுவகையான கார்கள் , ஜப்பானீஸ் அனிமே என்று கலந்துகட்டி பேசிக்கொண்டிருந்தான்.
இவள் தயாராகி கீழே வந்ததைப்பார்த்ததும் “போலாமா..” என்று கேட்டான்.
“என்னது போலாமா..? இருங்க தம்பி முதல்முறையா வீட்டுக்கு வந்திருக்கீங்க சாப்ட்டுட்டுதான் போகனும்” என்று வற்புறுத்தினார் சுதாஷினி.
“அய்யோ இல்ல ஆண்ட்டி லேட் ஆகிடும்..நாங்க போற வழில சாப்டுக்குறோம்.” என்றான்
“நீங்கவேற அவ காஃபிய பாராட்டிடீங்க..உங்கள சாப்பிடாம விடமாட்டா..இருந்து சாப்ட்டுட்டே போங்க..” என்று அப்பாவும் வலியுறுத்தினார்..
“இல்ல அங்கிள் சாப்டா வண்டி ஓட்ட முடியாது..” என்று அவன் மறுக்க,
“அப்போ நான் கட்டித்தறேன் போற வழியில சாப்ட்டுடுங்க..” என்றார் சுதாஷினி.
“நான்தான் சொன்னேன்ல அவ விடமாட்டான்னு.. பேசாம சரின்னு சொல்லிடுங்க..” என்றார் தனசேகர்.
“ஓகே ஆண்ட்டி ரொம்பல்லாம் வேண்டாம்.. எதாவது லைட்டா போதும்..”
“அரை மணி நேரத்துல பிரியாணியே ரெடி ஆகிடும்..” என்றவர் வேலையை பார்க்க உள்ளே போக..
தனசேகர்.. “அதுவரைக்கும் தம்பிக்கு நம்ம கம்யூனிட்டிய சுத்திக்காட்டு பாப்பா..” என்று ஆலோசனை வழங்கினார்.
அவர்களை வெளியே அனுப்பினால் தானே அவர் தன் மனைவியிடம் பேசமுடியும்..இருவருக்கும் பேச நிறைய இருந்தது.
அதிதி வசீகரனை வெளியே அழைத்து போனாள்.
அவர்களது ஒரு கேட்டட் கம்யூனிட்டிவில்லா, அங்கே உள்ளேயே பார்க், இண்டோர் விளையாட்டுகள் நீச்சல் குளம் பார்ட்டி ஹால் என்று நிறைய வசதிகளுடன் கூடியது.
இருவரும் பூங்காவின் நடைபாதையில் நடந்தனர் வெயில் விழாதபடி இருபக்கமும் அடர்ந்த மரங்கள் நிழற்குடை விரித்திருந்தது.. அது வெயில் நேரம் என்பதால் வெளியே யாரும் இல்லை.
நேற்றைய மனஸ்தாபத்திற்குப் பிறகு இருவருக்கும் கிடைத்த முதல் தனிமை.. ஆனால் அவனிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று அவள் தயங்கிகொண்டே இருக்க..
அவனோ அவளுடன் பேச எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை..
வீட்டில் இருந்தவரை சகஜமாக பேசியவன் தனியே வந்ததும் சீரியஸ் ஆகிவிட்டான்…
நேரம் போகப்போக அவள் மனம் தவிக்கத்தொடங்கியது. எதாவது செய்து அவனிடம் மீண்டும் சகஜமாக பேசிவிடவேண்டும் என்று துடித்தாள்.
‘அதிதி ஜஸ்ட் ஃபாலோ யுவர் ஹார்ட்..’ என்று மனதிற்குள் சொல்லிகொண்டவள்.. எதையும் யோசிக்காமல் அவன் அருகில் நெருங்கி அவன் கரத்தைப் பற்றிக்கொண்டு நடந்தாள்.
இதை சற்றும் எதிர்பார்க்காத வசீகரன், திரும்பி இருவரது இணைந்த கைகளையும் பின் நிமிர்ந்து அவள் முகத்தையும் ஆச்சரியமாக பார்த்தான்.
அவள் அவன் கண்களை நேராகப்பார்த்து..
“சாரி வசி..” என்றாள் கெஞ்சுவது போல..
ஒரு கணம் அவளை ஆழ்ந்து பார்த்தவன், அவளை இன்னும் சற்று நெருங்கி
“இந்த “வசி” காக போனாபோகுதுனு விடுறேன்..ஆனா இனிமே அப்படி பண்ணாத..” என்று மட்டும் சொன்னான்.
“பண்ணமாட்டேன்..” என்றாள் கிசுகிசுப்பாக..
அதன் பிறகு இருவரும் கை கோர்த்தபடியே நடக்கத் தொடங்கினர்.
ஏதேதோ நினைத்து களைப்புற்றிருந்த அவள் மனம் வீடுவந்த நிம்மதியடைந்திருந்தது.
அவளுக்கு மிகவும் பிடித்த இடத்தில் அவனுடன் சேர்ந்து நடப்பது வார்த்தையால் விவரிக்க முடியாத உணர்வாக இருந்தது.
“ஆமா இது என்ன புதுக்கதை.. நான் உங்க கூட ஊருக்கு வர்றது?” என்று நடந்துகொண்டே கேட்டாள்.
“புதுக்கதையெல்லாம் இல்ல, உன்னை சர்ப்ரைஸ் பண்றதுக்காக நான் ஏற்கனவே ப்ளான் பண்ணதுதான்..”
“அப்போ என்னோட ட்ரெயின் டிக்கெட்..?”
“அதை லிடி கிட்ட நேத்தே கேன்சல் பண்ண சொல்லிட்டேன்…”
“அவ என்கிட்ட சொல்லவே இல்லயே..”
“நான்தான் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லியிருந்தேன்.”
“அவ எனக்கு ஃப்ரண்டா உங்களுக்கு ஃப்ரண்டா..?” என்று கேட்டவளுக்கு அவளையும் மீறி பொறாமை எட்டிப்பார்த்தது.
“அவகிட்ட இந்த ஹெல்ப்ப கேக்க போய்தான் அந்த கும்பல்கிட்ட மாட்டிகிட்டேன்.. அதெல்லாம் சொன்னா உனக்கு புரியவா போகுது..” என்றான் குத்தலாக, இன்னும் அவன் கோபம் தணியவில்லை என்று தெரிந்தது.
“நான் தான் சாரி கேட்டுட்டேன்ல இன்னும் குத்திகாட்டிட்டே இருந்தா என்ன அர்த்தம்..?”
என்று அவள் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு கேட்க..
“சரியான கேடிடீ நீ… இப்படி பாவமா மூஞ்சிய வச்சே என்ன ஏமாத்து.. இந்த முகத்தைப் பார்த்து அப்புறம் எங்க கோபப்படுறது..?” என்று அவன் அலுத்துக்கொள்ள..
அவள் குறுகுறுவென்று பார்த்து விஷமப்புன்னகைப் பூத்தாள்..
“ஃப்ராடு” என்று அவள் நுனி மூக்கைப்பிடித்து செல்லமாக ஆட்டியவன்.
“சரி போலாமா.. டைம் ஆச்சு” என்றான்.
“ஆமா நீங்க ஃப்ளைட்ல தானே வந்தீங்க..? இப்ப கார் எப்படிவந்தது..?”
“நான்தான் டிரைவர வச்சி எடுத்துட்டு வர சொன்னேன்.. இந்த ட்ரிப்ப நான் எப்ப இருந்து ப்ளான் பண்றேன் தெரியுமா? உன்னோட தனியா டைம் ஸ்பெண்ட் பண்ணவே முடியல, அதுக்காக யோசிச்சி நான் கண்டுபுடிச்ச ஐடியா இது..” என்று அவன் பெருமையடித்துக்கொள்ள அவள் மனம் முழுவதும் பூரிப்புடன் புன்முறுவல் பூத்தாள்.
திடுமென நியாபகம் வந்து..
“இங்க பேஸ்கெட் பால் கோர்ட் கூட இருக்கு.. நீங்க ஆடுறீங்களா?” என்று அவள் கேட்க
அவனோ “இல்ல கிட்டி இன்னிக்கு டைம் இல்லை, இன்னொரு நாள் பார்த்துக்கலாம்..” என்றான்.
‘இன்னொரு நாள் என்றால்? திரும்ப இங்கே வருவேன் என்கிறானா..? இல்ல இது வெறும் உபசார வார்த்தையா..?’ அவள் அவனிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது
அவளது அம்மா ஃபோனில் அழைத்தார்.
“அத்து வீட்ல தயிர் இல்ல, நீங்க வர்றப்ப சூப்பர் மார்க்கெட்ல வாங்கிட்டு வந்துடுங்க..” என்று கூறினார்.
“சரிம்மா ..” என்று ஃபோனை வைத்தவள்,
“இங்க பக்கத்துலதான் சூப்பர் மார்க்கெட் இருக்கு அம்மா தயிர் பாக்கெட் வாங்கிட்டு வர சொன்னாங்க..” என்றாள்
இருவரும் சென்று தயிர் வாங்கும் போது, அவனோ கையில் கிடைக்கும் ஐஸ்கிரீம் டப்பாக்களையெல்லாம் அள்ளவும்..
“எதுக்கு இவ்ளோ?” என்றாள் அதிர்ச்சியாகி
“உங்க வீட்டுக்கு வாங்கிட்டு போலாம்..” என்றான்.
“இவ்ளோ வேண்டாம்..” என்று மறுத்து அவள் அவனிடம் போராடிக்கொண்டிருந்த போது..
“அத்து..?” என்று மிகவும் பழக்கப்பட்ட குரல் கேட்டது
“ஆண்ட்டி..” என்றாள் அதிதி புன்னகையுடன்..
அது வர்ஷினியின் அம்மா நிர்மலாதேவி..
“யாரு அத்து இது..?” என்றார் வசீகரனை ஆராய்ச்சிப்பார்வை பார்த்து..
“இது என்னோட கூட வேலை பார்க்குறவர் ஆண்ட்டி..” என்றாள் முயன்று சிரித்தபடி..
“வீட்டுக்கு வந்திருக்காரா..?” என்று கேட்க..
“ஆமா ஆண்ட்டி..”
“ஓ சரி சரி..வர்ஷினி அடுத்த வாரம் வரா சொன்னாலாம்மா.?”
“ஆ சொன்னா ஆண்ட்டி..” “சரிமா நான் வரேன். இனிமே போய் தான் சமைக்கனும்” என்றவாறு விடைபெற்று சென்றார்
“உன்னோட ஃப்ரண்ட் வர்ஷினியோட அம்மாவா?” என்று கேட்டான் அவன்.
அவள் பேசாமல் ஆமோதிப்பாக தலையைமட்டும் அசைக்க..
“சரி அதுக்கு ஏன் மூஞ்சி பேயறஞ்ச மாதிரி இருக்கு..? உங்க அப்பாம்மா என்னை பார்த்தப்பக்கூட நீ இவ்ளோ பயப்பட்ட மாதிரி தெரியலையே..” என்று விசாரித்தான்
“அது.. வர்ஷினிக்கு நான் உங்கள மீட் பண்ணத பத்தி இன்னும் சொல்லல.. அவகிட்ட நான் எதையுமே மறைச்சதில்லை.. இப்ப அவங்க அம்மா நம்மல ஒன்னா பார்த்திருக்காங்க கண்டிப்பா அவகிட்ட பேச்சுவாக்குலயாவது சொல்லிடுவாங்க.. நான் ஏன் முன்னாடியே சொல்லலைன்னு அவ தப்பா எடுத்துகிட்டா??அதான் ஒரு மாதிரி இருக்கு..” என்று அவள் கவலையடைய
“ஹே கிட்டி.. அவ உன் ஃப்ரண்டு தானே எனிமி இல்லைல? புரிஞ்சிப்பா விடு..” என்று அவளை அமைதிபடுத்தினான்.
அந்தப்பக்கம் இவர்கள் வெளியே கிளம்பியதும் அதிதியின் வீட்டில் மாநாடு கூடியிருந்தது,
“ஏங்க.. இவ சிரிச்சி சிரிச்சி பேசிட்டு இருக்க க்ளையண்ட் வேற யாரும் இல்ல.. இந்த பையன்தான். ரெண்டு பேருக்கும் நடுவுல கண்டிப்பா எதுவோ இருக்குங்க..” என்றார் தீர்மானமாக..
“அம்மா பூமர் ஆண்ட்டி மாதிரி பேசாத மா.. பையனும் பொண்ணும் பேசினா உடனே லவ்வா?” என்று அனிருத் வாதாட..
“டேய் சும்மா இருடா.. உனக்கு ஒன்னும் தெரியாது. இந்த விஷயம் எல்லாம் எத்தனை காலம் ஆனாலும் மாறாது. எனக்கு சந்தேகமே இல்லைங்க..இது அதுதான்.
பையன் பார்க்க நிஜமாவே ராஜா மாதிரிதான் இருக்கான். எனக்கு ரொம்ப புடிச்சிருக்குங்க..” என்று அதற்குள் மனதில் கல்யாண மெனுவரை யோசிக்க தொடங்கிவிட்டார் சுதாஷினி.
“எனக்கும் ஓகேதான்.. அந்த காருக்காகவே டபுள் ஓகேகூட சொல்லலாம்..” என்றான் அனி..
“சும்மா இருங்க ரெண்டு பேரும்..அந்த பையன் ராஜா மாதிரி இல்லைடி, நிஜமாவே ராஜாதான். இப்பதான் அவங்க கம்பெனியோட சொத்து மதிப்பு பார்த்தேன்,
ஐயாயிரம் கோடிக்குமேல டர்ன் ஓவர் பண்ற கம்பெனி, நம்ம வசதிக்கு அவங்க செட் ஆவங்களா?
அதெல்லாம் ரொம்ப பெரிய இடம் சுதா.. நீபாட்டுக்கு எதாவது கற்பனை பண்ணிட்டு இருக்காத, அதிதி மனசுலயும் ஆசைய வளக்காத.. எதுவா இருந்தாலும் அவங்களா சொல்லட்டும்.. அதுவரைக்கும் யாரும் வாய தொறக்காதீங்க..” என்று திட்டவட்டமாக கூறி இருவரது வாயையும் அடைத்துவிட்டார்.
வசீகரனும் அதிதியும் சுதாஷினி கட்டிக்கொடுத்த பிரியாணி மணக்க, வசீகரன் திரும்ப ஒருநாள் வீட்டுக்கு விருந்து சாப்பிட வர வேண்டும் என்ற வேண்டுகோளுடனும், அதிதி ‘அந்த டப்பாவ மறக்காம கொண்டு வந்துடு’ என்ற நினைவுறுத்தலோடும்.. விடை பெற்றுக்கொண்டு அவனது காரில் கிளம்பினர்.
கார் கொஞ்சதூரம் போனதும்..
“கிட்டி அந்த டேஷ் போர்ட்ட ஓப்பன் பண்ணே..”
“எதுக்கு..” என்றவாறே திறந்தாள்.
“அங்க உள்ள சாக்லேட் இருக்கும் எடுத்துக்கோ..”
“எதுக்கு இப்ப சாக்லேட்..?”
“பின்ன அல்பம் மாதிரி உன் தம்பிகிட்ட சாக்லேட்டுக்கு சண்டை போட்டுட்டு இருக்க..”
“உங்களுக்கு ஒன்னும் தெரியாது.. சண்டை போடலன்னா அப்புறம் என்ன அக்கா தம்பி..?”
என்று கேட்டவாறே அந்த சாக்கொலேட்டை பிரித்து உண்ணத்தொடங்கினாள்.
“பாக்க வச்சி சாப்பிடாத வயிறு வலிக்கும், எனக்கும் கொஞ்சம் குடு..” என்றவன் அவள் ஊட்ட வேண்டும் என்பதற்கு குறியீடாக
“ஆ..” என்று வாயைத் திறந்தான்.
அவள் கொஞ்சம் சாக்லேட்டைப் பிய்த்து அவன் வாயில் வைக்க, வேண்டுமென்றே அவள் விரலையும் சேர்த்து தன் வாயால் மூடினான்.
அவன் உதட்டின் மென்மையை உணரும் போதே அவன் நாவின் உஷ்ணமும் தாக்க.. இவள் சட்டென்று தன் கையை இழுத்துக்கொண்டு மறுகையால் அந்த விரலில் பட்ட ஈரத்தைத் துடைத்தாள்.
வேண்டுமென்றே செய்தானா.. இல்லை கார் ஓட்டும் கவனத்தில் தெரியாமல் விரலையும் சேர்த்து தின்று விட்டானா..? என்று உறுதியாக கூறமுடியாமல் ஓரக்கண்ணால் அவனை ஆராய அங்கே தெரிந்த விஷமப்புன்னகை நிச்சயமாக கோகுலகண்ணனுடையதுதான்.
மனம் இனம்புரியா பரவசத்தில் திளைக்க வெகுநேரம் அவன் இதழ்பட்ட விரல் குறுகுறுத்துக்கொண்டே இருந்தது அவளுக்கு.
தொடரும்…
error: Content is protected !!