அஞ்சலி தன் அன்னை வீட்டிற்கு சென்று ஒரு வாரம் கடந்திருந்தது.
முதல் நாள் அவளை விட்டு வந்ததும் சாப்பிட்டு உறங்க சென்ற சூர்யாவின் மனதில் எதுவோ உறுத்த, அதை என்னவென்று கூட ஆறாயாமல் உறங்கிப் போனான்.
அடுத்த நாள் எழுந்து அறையை சுற்றிப் பார்த்தவனுக்கு எதுவோ மீண்டும் மனதின் அலைபுறுதல். கிளம்பி வெளியே வந்தவன் கிளம்பி சென்றுவிட, மாலை வீட்டிற்கு வந்ததுமே அஞ்சலி நியாபகம் தான்.
“இதென்னடா வம்பா போச்சு!” நினைத்தவன் அவளின் எண்ணத்தையும் சேர்த்தே விரட்ட, அடுத்த நாட்களில் எல்லாம் சூர்யாவை விரட்டியது அவளின் நியாபகங்கள்.
“இவளை எதுக்கு இவ்வளவு தேடுது?” என்று ஆச்சர்யமாய் முதலில் நினைத்தவன் பின் தன் தேடலை புரிந்தும் கொள்ள, அலைபேசியில் அழைக்கலாமா என நினைத்தான்.
“வேணாம் டா! நீ சூர்யா! கெத்து! ஏற்கனவே ஆடுவா! சலங்கை கட்டாத.. வரும் போது வரட்டும்” என ஒரு முறை நினைத்தான் என்றால் மறுமுறை,
“அவளே! உன் தொல்லை இல்லாமல் நிம்மதியா இருக்குறதா சந்தோசமா இருப்பா.. நீ போய் அவளை தேடுறியே! என்ன ஜென்மம் டா நீ!” என்று நினைத்துக் கொள்வான்.
“அடியேய் எலி! என்னைப் போய்! இந்த சூர்யாவைப் போய் புலம்ப விட்டுட்டியே!” என அறைக்குள் புலம்பி தள்ளுபவன் அதை வெளியில் தன் குடும்பத்திலும் காட்டிக் கொள்ள மாட்டான்.
“ஜனனி! சூர்யா வெளில போகணும்னு சொன்னான்.. ஜெய் கூட அவனுக்கும் சேர்த்து தோசை ஊத்திடு.. நான் இந்த பூவை தொடுத்துடுறேன்” என்று பிரேமா கூற,
“சரி அத்தை!” என்றவள்,
“மாமா எங்கே?” என்றாள்.
“மாமா காலையிலேயே யாரையோ பார்க்க போறதா சொல்லிட்டு போனாங்க.. இன்னும் வர்ல” என்றார் பிரேமா.
“தெரியலயே! ஒரு வாரம் ஆச்சு.. நேத்து கூட போன் பண்ணினா ஆனா ஒன்னும் சொல்லல.. ஒருவேளை அவங்க அம்மா எழுந்து நடந்ததும் வரலாம்னு இருக்களோ என்னவோ?” என்று கூற,
“அப்போ சூர்யா?” என்றாள் கேள்வியாய்.
“ஏன் சூர்யாக்கு என்ன?” பிரேமா கேட்க,
“எனக்கென்னவோ சூர்யா அஞ்சலியை தேடுறா மாதிரி தெரியுது” ஜனனி இழுத்துக் கூற,
“நீ வேற! அப்படி ஒருத்தி வீட்டுல இருந்த மாதிரியே அவன் நடந்துக்க மாட்டுறான்.. இதுங்க என்னனு வாழ போகுதோன்னு நான் பிரேமாகிட்ட சொல்லி கவலைப்பட்டுட்டு இருக்கேன்.. நீ இப்படி சொல்ற?” என்று மல்லிகாவும் கேட்க,
“எல்லாம் காரணமா தான்.. ஒரு வாரமா சூர்யா இருக்கும் போதும் வீடு அமைதியா இருக்குறது உங்களுக்கு தெரியல?” என்று ஜனனி சிரிப்புடன் கேட்க,
“காலையிலே இங்க என்ன வம்பு பண்ணிட்டு இருக்க?” என்று வந்தான் ஜெய்.
“சூர்யாவை வச்சு தான் பேசிட்டு இருக்கோம்.. அவன் அஞ்சலி இல்லாததையே கண்டுக்க மாட்டுறானேன்னு நான் சொல்றேன்.. இல்ல அவன் அஞ்சலியை மிஸ் பன்றான்னு உன் வீட்டுக்காரி சொல்றா.. அப்படி தானே ஜனனி?” என்றார் பிரேமா.
“அவன் சொன்னானா உன்கிட்ட?” என்று ஜெய்யும் கேட்க,
“நீங்க யாரும் நம்பல இல்லை என்னை?” என்றவளுக்கு ஆமாம் என்பதாய் அனைவரும் பார்க்க,
“சரி இப்ப பாருங்க சூர்யா வந்து சோக கீதம் வசிக்குறானா இல்லையானு.. எப்பவும் போல நிவியையோ என்னையோ சீண்டுறானா பார்க்கலாம்” என்று கூறி அவன் வரவுக்காக காத்திருந்தாள்.
“உனக்கு எதுக்கு இந்த வேலை எல்லாம்?” என்றான் ஜெய் சிரித்து.
“சும்மா ஒரு சோசியல் சர்வீஸ்! சூர்யா அமைதியா இருந்தா நீங்க எல்லாம் ஒத்துக்கணும்” என்று கூறிக் கொண்டிருக்க, சூர்யா இறங்கி வர, நிவியும் வந்துவிட்டாள்.
“குட் மார்னிங் டா அண்ணா!” என ஆரம்பித்து அனைவருக்கும் காலை வணக்கம் கூறி அவன் அமர,
“அதெல்லாம் ஒன்னும் இல்ல மல்லிம்மா.. லேப்டாப்ல கொஞ்சம் ஒர்க் பார்த்துட்டு தூங்கினேன்.. அதான் அப்படி இருக்கும்” என்றவன் அடுத்து சாப்பாட்டில் மட்டும் கவனமாய் இருக்க, ஜெய் திரும்பி மனைவியை பார்த்தான்.
“எப்பூடி?” என்று அவள் கண்ணசைத்து கேட்க,
“ப்ச்! போ டி!” என்றவன் நம்பவில்லை என்பதை போல தலையாட்ட, அவனை முறைத்தவள், நியாபகம் வந்தவளாய், டிவியில் மொபைலை கணக்ட் செய்து பாடலை ஓட விட,
“அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சாலி..” என பாடல் வரவும் சாப்பிடுவதை நிறுத்தி அப்படியே அமர்ந்திருந்தான் சூர்யா.
விளையாட்டைப் பார்த்த பெரியவர்கள் கண்டும் காணாததாய் இருக்க, ஜனனிக்கு தான் அப்படி ஒரு குஷி சூர்யாவின் முக பாவனையில்.
“நேரம் காலம் தெரியாம அண்ணியார் பாட்டை போட்டு சோதிக்குறாங்களே!” என நினைத்தவன் பாடலைக் கேட்டபடி சாப்பிட, இப்பொழுதும் ஜனனியை தான் முறைத்தான் ஜெய்.
“வெயிட்! வெயிட்!” என சைகை செய்தவள்,
“அத்தை இப்ப தான் நியாபகம் வருது.. அஞ்சலி நேத்து எனக்கு போன் பண்ணினா” என்றதும், சூர்யா திரும்பிப் பார்க்க,
“அப்படியா என்ன சொன்னா? எப்ப வர்றாளாம்?” என்று பிரேமா கேட்க,
“அச்சோ! தீஞ்ச ஸ்மெல் வருதே!” என்று கிட்சனுள் ஜனனி ஓடினாள்.
‘அட அண்ணி மல குரங்கே! என்னனு சொல்லிட்டு போயிருக்கலாம் இல்ல?’ என்று நினைத்த சூர்யா ஜனனி வருகிறாளா என பார்க்கவும் குனிவதுமாய் இருக்க, அது ஓரளவு போதுமாய் இருந்தது மற்றவர்களை நம்ப வைக்க.
“அண்ணி! எனக்கு சட்னி!” என்று நிவி குரல் கொடுக்க, மீண்டும் ஜனனி வரும் பொழுது பேச்சு மாறி இருந்தது.
‘இப்படியா டா உனக்கு நாள் அமையனும்? இப்ப நான் கேட்கலாமா வேண்டாமா!’ என சூர்யா மனதுக்குள் பட்டிமன்றம் நடத்த, தான் மற்றவர்கள் பார்வையில் காட்டிக் கொள்ளவில்லை என்ற நினைப்பு வேறு அவனுக்கு.
“என்ன சூர்யா வெறும் பிளேட்ல கோலம் போட்டுட்டு இருக்க.. தோசை வைக்கவா?” என ஜனனி கேட்க,
“ஹான்! இல்லை இல்லை போதும்” என்றான்.
“என்ன சூர்யா டல்லா தெரியுற? உடம்பு ஏதாவது சரி இல்லையா?” என்றார் மல்லிகா.
“அதெல்லம் ஒன்னும் இல்லை மல்லி ம்மா..” என்றவன்,
“நீ காலேஜ் கிளம்பலையா நிவி?” என்றான் தங்கையிடம்.
“இன்னைக்கு சண்டே டா.. என்னாச்சு உனக்கு?” என்று ஜெய்யும் கேட்க,
“ஓஹ்! ஆமால்ல!” என்றவன்,
“ஏதோ நியாபகத்துல கேட்டுட்டேன்” என்று விட்டு அவசரமாய் கிளம்புவதாய் சொல்லிவிட்டு வாசல் வரை செல்ல, அனைவர் பார்வையும் வாசல் வரை சென்றது.
“அண்ணின்னு இப்ப வர்றானா இல்லையா பாருங்க!” என்ற ஜனனி சமையலறை உள்ளே செல்ல,
“ப்ச்! மறந்தே போய்ட்டேன்! அண்ணி!” என்றபடி ஜனனி உள்ளே செல்வதை பார்த்த சூர்யாவும் தற்செயலாய் செல்வதை போல உள்ளே செல்ல,
“நல்ல பசங்க தான்.. வேணும்னா போய் கூட்டிட்டு வர்றதை விட்டு ஏன் இவ்வளவு தடுமாறுறான்” என்று சிரித்தார் மல்லிகா.