காதலும் கடத்தப்படும் – 16

காதலும் கடத்தப்படும் – 16
மறுநாள் காலை அஞ்சலி குளித்து முடித்து, அர்ஜுனின் பெற்றோர் புகைப்படத்திற்கு முன் நின்றுகொண்டிருந்தாள்.
Advertisement
“அஞ்சலி அஞ்சலி அஞ்சலி… மின்னும் கண்மணி கண்மணி கண்மணி… அம்மம்மா பிலாக்கனி… பாடினா சுராங்கனி…”
அறையின் வெளியே மதன் பாடும் குரல் கேட்டு சிரித்துக்கொண்டவள், கதவை திறந்து வெளியே வந்தாள்.
“பாட்டு லிரிக்ஸ் தெரிஞ்சா பாடு. இல்லனா பாடாத” என்றாள்.
Advertisement
“அதுக்கெல்லாம் ஒரு டேலண்ட் வேணும்…” என்றவன், அவளுக்கு ஒரு கோப்பை டீயை வழங்கினான். வாங்கிக்கொண்டவள், கண்களால் வீட்டினை துழாவ, அர்ஜுன் அங்கு இல்லை. காலங்கார்த்தால எங்க போனான் என்று அவள் யோசனையாய் நிற்க, அவன் வீட்டினுள் நுழைந்தான்.
Advertisement
“எங்கடா போன, இந்தா டீ” என்றபடி அவனெதிரே சென்று நின்றான், மதன்.
“ராபர்ட் அண்ணே வண்டியை எங்கயாவது மறைவா போய் விட்டுட்டு வர சொன்னாரு…”
Advertisement
“ஏன்?”
“முன் ஜாக்கிரதையா இருக்க. கொஞ்ச நாளைக்கு வண்டிய எடுக்க வேணாம்னு சொன்னாரு…”
“அர்ஜுனே, யப்பா அர்ஜூனே” யாரோ அழைக்க, அவன் வெளியே சென்றான். அழைத்தவரோடு இரு நிமிடம் பேசிவிட்டு வீட்டினுள் நுழைந்தவன்,
“மதனா இந்த டீயை புடி” என்றவன், தனது சட்டயை மாற்றிக்கொண்டு கிளம்பினான்.
“டீயை குடிக்காம எங்க போற அஜூ?” என்றான் மதன்.
“நீ குடிச்சுடு. தெரு முக்குல இருக்கற அந்த பச்சை கலர் வீட்ல ரொம்ப நாளா இழுத்துக்கிட்டு இருந்த பெருசு போயிடுச்சாம். பாட கூப்புடறாங்க… போயிட்டு வந்துடறேன்…” என்றுவிட்டு பதிலுக்கு நிற்காமல் ஓடிச்சென்றான்.
அஞ்சலி தனது கையிலிருந்த தேநீரை அப்படியே வைத்துவிட்டு அறைக்குள் சென்றாள்.
மைக் செட்டு போடப்பட்டு, சாமியானா கட்டப்பட்டு, வருவோர் போவோர் என்று அவ்விடம் பரபரப்பானது. அர்ஜுன் மைக்கில் பாடுவது அஞ்சலிக்கு கேட்டது. அவனை எண்ணி அவளது கண்கள் கலங்கியது. அவனது பெற்றோரின் புகைப்படத்தைக் கண்டாள். அவர்கள் அமைதியாய் சிரித்தபடி இருந்தனர். நெற்றியில் கைவைத்தபடி அவள் மனம் நொந்து அமர்ந்திருக்க,
“அஞ்சலி அஞ்சலி சின்ன பத்ரகாளி…” என்று, பாடுவதாக எண்ணிக்கொண்டு கத்திக்கொண்டே வந்தான், மதன்.
“என்ன வேணும்? எதுக்கு கத்தற?”
“இட்டிலி கடை அக்கா கடையை திறக்கல… பெரிய சாவு விழுந்திருக்க ல… நான் ரோட்டுக்கு போய் உனக்கு ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரேன். என்ன வேணும்? தோசையா? பூரி செட்டு வேணுமா?” என்றான்.
“இப்ப நான் உன்னை சாப்பாடு கேட்டேனா?”
“அஜூ தான் உனக்கு வாங்கியாந்து ககொடுத்துட்டு அங்க வர சொன்னான். சொல்லு அஞ்சலி, நான் போகணும்”
“எங்க போகணும்?”
“அஜூ கூட பாட…”
“எனக்கு பசிக்கல, நீ போ…”
“கூச்சப்படாம சொல்லு…”
“எனக்கு பசிக்கும்போது சொல்றேன்… இப்போதைக்கு எதுவும் வேண்டாம்” என்றாள், திட்டவட்டமாக. ‘சரி’ என்றுவிட்டு அவன் சென்றான்.
வெகு நேரம் அங்கு ஆடல் பாடல் நடக்க, இறுதி ஊர்வலம் தயாரானது.
வாயிலில் நின்றிருந்த அஞ்சலியின் அருகே மதன் வந்து நின்றான்.
“அஜூ உன் கூட துணைக்கு இருக்க சொன்னான். அங்க சரக்கு ஓட்ட ஆரம்பிச்சுட்டானுங்க. எவனாவது வந்து லந்து பண்ணுவான். அதான்…” என்றபடி வியர்வையை துடைத்துக்கொண்டு சற்று தொலைவில் நடப்பதை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.
அர்ஜுன் பாடியபடி ஆடிக்கொண்டிருந்தான். ‘இவ்வளவுக்கும் நடுவுல அவன் என்னை பத்தி யோசிக்கறானே…’ என்றொரு எண்ணம் அவளுள் மின்னி மறைந்தது.
ஊர்வலம் தொடங்க, அர்ஜுன் ஆடிக்கொண்டே வந்தான். அஞ்சலிக்கு கோபமும், வேதனையுமாக இருந்தது.
“மதனா, எதுக்கு இவன் சாவு வீட்ல இப்படி பாடி டான்ஸ் ஆடறான்?” என்றாள், எரிச்சலோடு.
“காசு கிடைக்கும்ல?”
“அதுக்கு?”
“அதுக்குத்தான் இதெல்லாம்… வேற எதுக்கு?”
“நான் கொடுத்த பணத்தை என்னடா பண்ணான்?”
“இட்டிலி கடை அக்காவுக்கு கொடுத்துட்டான்…”
“ஏன்?”
“அம்மா தான் அந்த அக்காவுக்கு இட்டிலி கடை வெச்சு கொடுத்துது. அக்கவோட புள்ள ஒரு வயசாகும்போது, அவங்க புருஷன் குடிச்சுட்டு ரோட்ல விழுந்து ஆக்சிடெண்ட்ல செத்து போயிட்டான். அதிலிருந்து அந்த அக்காவுக்கு அந்த கடை தான் ஒரே கதி. அம்மா போன பிறகு அந்த அக்கா கடையில தான் நாங்க அடிக்கடி சாப்பிடுவோம். ஆனா இப்ப வரைக்கும் அந்த அக்கா காசே கேட்டதில்லை தெரியுமா? எல்லார்கிட்டயும் கணக்கு வச்சு காசு கேட்கும், எங்ககிட்ட மட்டும் ‘உங்க அம்மாவால தான் நான் பொழைக்கறேன்’னு சொல்லி காசே கேட்காது. அப்பப்ப அஜூ காசு கொடுப்பான். இப்போ அக்காவோட பொண்ணு காலேஜு போகப்போகுது. ஏரியாவுல எல்லாரும் காசு போட்டு அந்த புள்ளைக்கு படிக்க கொடுத்திருக்காங்க. எங்ககிட்ட கொடுக்க ஒண்ணுமில்லன்னு தான் உன்னை கடத்த ஒத்துக்கிட்டான் அஜூ. நீ கொடுத்த காசை அந்த அக்காவுக்கு கொடுத்தாச்சு…”
மதன் கூறிமுடிக்க, அவள் என்ன சொல்வதென்று புரியாமல் நின்றாள். இருப்பினும், அர்ஜுனை எண்ணி அவளது மனம் வருத்தத்தான் செய்தது.
ஊர்வலம் அர்ஜுனின் வீட்டின் எதிரே சென்றுகொண்டிருக்க, அர்ஜுனும் ஆடிக்கொண்டு வர, எதிரே ஒரு போலீஸ் வண்டி வந்து வழிமறித்து நின்றது. ஒட்டுமொத்த கூட்டமும் அமைதியாய் நின்றது. வண்டியிலிருந்து இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் கீழே இறங்கினான். ஊர்வலம் செல்ல தடையாக வண்டி நிற்கிறது என்று சிலர் அவனிடம் கேட்க, அவன் முக்கிய விசாரணைக்காக வந்துள்ளதாக கூறினான். அவர்கள் உரையாடிக்கொண்டிருக்க, யோசனையான அர்ஜுன், மதனைக் கண்டு கண்களால் அஞ்சலியை உள்ளே அழைத்துச் செல்லும்படி கூறினான். மதனும் அஞ்சலியும் உள்ளே செல்வதைக் கண்ட கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டரின் காதில் ஏதோ சொல்ல,
“வண்டிய எடுத்து ஓரமா விடு” இவனுங்க போகட்டும் என்றான். மாலை மரியாதையுடன் இறுதி யாத்திரை கொண்டுள்ள முதியவரைக் கண்ட கஜேந்திரன், “பை பை ஓல்ட் மேன், குட் நைட்!” என்றுவிட்டு, அர்ஜுனின் வீட்டருகே சென்றான்.
வாயிற் கதவருகே அர்ஜுன் வந்து நிற்க, அவன் அருகே மதன் வந்து நின்றான்.
“உங்க வீடா?” என்றபடி அர்ஜுனை மேலும் கீழும் பார்த்தான்.
“ஆமா சார்” என்றான் அர்ஜுன்.
கான்ஸ்டபிள் பின் தொடர, உள்ளே சென்ற கஜேந்திரன், வீட்டினை நோட்டம் விட்டான்.
“என்னடா பேச்சுலர் வீடா?”
“ஆமா சார்”
“மாச வாடகையா? லீசா?”
“சொந்த வீடு சார்”
“சொந்த வீடா?” என்று அர்ஜுனை ஏறயிறங்க பார்த்தான்.
“அப்பா அம்மா வீடு சார்”
“ம்ம்… இவன எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே?!” என்றான் கஜேந்திரன், மதனை நோக்கியபடி.
“என் தம்பி சார்”
“சம்மந்தமே இல்லாம இருக்கீங்க, நீங்க அண்ணன் தம்பியா?”
“சார்…”
சுற்றும் முற்றும் பார்த்தவன்,
“அந்த ரூம்ல என்ன இருக்கு?” என்றான், மூடியிருந்த கதவினை நோக்கி. உள்ளே அஞ்சலி இருப்பதை எண்ணி அர்ஜுன் தவிக்க, கான்ஸ்டபிள் அவனது காதில் ஏதோ கூறினான்.
“அப்படியா?” என்று கஜேந்திரன் அவனை ஆச்சரியமாக பார்க்க, அந்த கான்ஸ்டபிள் தனது கைபேசியில் எதையோ காண்பித்தான். சில நாட்களுக்கு முன் அவன் மதனை மார்கெட்டில் பிடித்து நடக்கவிருந்த திருட்டினை தடுத்ததைப் பற்றிய காணொளி அது.
“டேய் இவனா நீ?” என்றான் கஜேந்திரன், மதனிடம்.
“சார் அன்னைக்கு நீங்க என்னை மாத்தி பிடிச்சுட்டீங்க… கைவரிசையை காட்டியது ராபர்ட்டு அண்ணன்…”
“யாருடா அந்த நொண்ணன்…”
அர்ஜுன் மதனிடம் கண்ணால், ‘ஏன்டா உண்மைய உளர்ற?’ என்க,
“ஆல்பர்ட்டு” என்றான்.
“டேய், இப்பத்தான ராபர்ட்டு அண்ணேன்னு சொன்ன?”
“ஆமா, ராபர்ட்டு அண்ணன் ஆல்பர்ட்டு…”
“ஷபா” என்றபடி மண்டை சூடாகி நின்ற கஜேந்திரன்,
“உன் பேரு என்னடா?” என்றான்.
“என் பேரு எடிசன், இவன் பேரு எய்ன்ஸ்டின்” என்றான் அர்ஜுனை சுட்டியபடி.
“எடிசனா? என்னடா பெரிய சயின்டிஸ்ட்டா நீங்க?”
“இல்ல சார் சாங்கிஸ்ட்டு”
“அப்படினா?”
“பாட்டு பாடறவங்க சார்”
“சாங்கு – சாங்கிஸ்ட்டு – என் கிட்டயே?? சரி கதவை திற…”
“பரவால்ல சார் அதுக்குள்ள ஒண்ணுமில்ல…”
“அதை நான் சொல்லணும், திறடா…”
அர்ஜுன் பதட்டமாக, மதன் தயங்கியபடி கதவை திறந்தான். உள்ளே சாளரத்தின் அருகே நின்றிருந்த அஞ்சலியைக் கண்டதும் அதிர்ச்சியானான், கஜேந்திரன்.
“டேய், இது அஞ்சலி தான?” என்றான் கஜேந்திரன்.
“இல்ல பாஞ்சாலி” என்றான் மதன்.
“நக்கலு?”
“இல்லை சார் விக்கலு”
“டேய்…” என்று கஜேந்திரன் முறைக்க,
“இல்லை சார் விக்கல் வந்ததுல நாக்கு புரண்டு அஞ்சலியை பாஞ்சாலினு சொல்லிட்டேன்…” என்றுவிட்டு இருமுறை விக்கினான் மதன்.
அர்ஜுன் அவனை முறைத்துக்கொண்டிருக்க, ‘சாரி அஜூ’ என்றுவிட்டு அவன் அருகே நின்று கொண்டான்.
அறையினுள் நுழையந்த கஜேந்திரன்,
“என்னமா இப்படி பண்றீங்களே மா? உன்னை காப்பாத்த நாயா பேயா நாங்க அலைஞ்சா, நீ அமைதியா நின்னுக்கிட்டுருந்தா எப்படி?” என்றான்.
“வேற என்ன பண்ணனும்?”
“காப்பாத்துங்க போலீஸ்’னு கத்தி கூப்பாடு போட்டிருக்கணும்ல. அமைதியா நிக்கற? அங்க உங்கப்பாவுக்கு நெஞ்சு வலி தெரியுமா…”
அவள் பதறினாலும், கஜேந்திரன் மீது நல்லெண்ண இல்லாததால் அவன் பொய் சொல்லக்கூடும் என்று அமைதி காத்தாள்.
“டேய் சாங்கிஸ்ட்டு, இப்ப நான் ஒரு பாட்டு பாடவா?” என்றான், கஜேந்திரன்.
“பாடுங்க சார், முடிஞ்சா ரெண்டு ஸ்டெப்பு போடுங்க சார்” என்றான் மதன். அர்ஜுன் முறைக்க அமைதியானான்.
கஜேந்திரன் பாடிக்கொண்டே கும்மியடிப்பது போல ஆடத் தொடங்கினான்.
“கும்பிட போன தெய்வம், குறுக்கே வந்ததம்மா…” என்று பாடியும் ஆடியும் முடித்தவன், மதன் தோள் மீது கையை போட்டு,
“இன்னைக்கு காலைல என் காதலி முகத்துல முழிச்ச நேரம், கடத்தப்பட்ட பொண்ணு, அந்த பொண்ண கடத்துன பயலுகன்னு ஒரே நேரத்துல சிக்கிட்டீங்க… எல்லாம் என் கரீனா சோப்ரா வந்த நேரம்…”
அந்த பெயரைக் கேட்டதும் ஒரு நொடி மூச்சு நின்று போனது மதனுக்கு. அர்ஜுன் இதழோரம் சிரித்துக்கொள்ள, அஞ்சலியும் பெரும்பாடு பட்டு சிரிப்பினை அடக்கிக்கொண்டாள்.
“பேரே ரொம்ப அழகா இருக்கு சார். ஹிந்திகாரங்களா?” என்றான் மதன், தனது குட்டு வெளிப்பட்டுவிடாமல்.
“ஆமாடா, ராஜஸ்தான் ரங்கோலி, எனக்காக பிறந்த சிங்காரி…” என்றுவிட்டு பெருமூச்செடுத்தான்.
“சார், என்னமா கவிதை எழுதறீங்க, சூப்பர் சார்” என்றான் மதன்.
“அப்படிங்கற, கரீனாவுக்கு அப்புறம் மெசேஜ் பண்ணிக்கறேன், நீ இப்ப கிளம்பு”
“எங்க சார்?” என்றபடி அர்ஜுன் எதிரே வந்தான்.
“உன் மாமியார் வீட்டுக்கு” என்றுவிட்டு, கஜேந்திரன் வெளியே செல்ல, வண்டி தயாராக வாயிலில் நின்றிருந்தது.
