காதலும் கடத்தப்படும் – 15

காதலும் கடத்தப்படும் – 15
Advertisement
பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற அர்ஜுன், பதினொன்றாம் வகுப்பு சேர்ந்தான். படிப்பிலும் கவனம் சிதறாமல், முடிந்தளவு அப்பாவோடு பல நிகழ்ச்சிகளுக்கும் சென்றான். இளமாறனுக்கு சொந்தமாக ஒரு குழு உருவாக்க வேண்டும் என்று ஆவல் முளைத்தது. பிள்ளைக்கு அது பயனளிக்கும் என்றே தோன்றியது. முன்பெல்லாம் எங்கோ யாரோ ஒருவர் வீட்டில், விசேஷங்களுக்கு பாடல் குழுவை ஏற்பாடு செய்தனர். இப்பொழுது ஏறத்தாழ அனைத்து மாப்பிள்ளை அழைப்பு நிகழ்வுகளில் மற்றும் சில விசேஷங்களில் இத்தகைய நிகழ்ச்சிகள் வரவேற்பை பெற்றன. இந்து கூறியது போல, ஒரு குழு அமைத்துக் கொடுத்துவிட்டால், அர்ஜுனும் மதனும் பிழைத்துக்கொள்வர் என்று தோன்றியது அவனுக்கு. அவன் முனைப்பாக பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தான். அவனுக்கு நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு கிடைத்தாலும் தட்டாமல் ஏற்றுக்கொண்டு, தனது நண்பர்களின் உதவியோடு நல்லபடியாக நடத்திக் கொடுத்தான்.
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை முடித்துவிட்டு, மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தான், அர்ஜுன். கல்லூரி செல்ல வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்தது. பக்கத்து ஊரில் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அதிகாலை வீடு திரும்பிய தந்தை தூங்கிக்கொண்டிருக்க, அவர் எழுந்து வர காத்திருந்தான்.
Advertisement
Advertisement
மதியம் மூன்று ஆகியிருக்க, தந்தைக்கு உணவு வழங்க அவரை எழுப்பினான். உடல் முழுதும் வியர்வையில் நனைந்து மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டிருந்தான், இளமாறன்.
“அப்பா.. அப்பா…” என்றபடி இளமாறனை எழுப்ப முயன்றான், அர்ஜுன். பலனில்லாமல் போனது. வெளியே ஓடிவந்தவன், தெருவில் மற்ற பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டிருந்த மதனை அழைத்தான். அப்பாவை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு, அத்தெருவில் ஷேர் ஆட்டோ ஓட்டும் ஒருவரை தனது வண்டியை எடுத்துக்கொண்டு வரச்சொல்லி, உடனே தந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றான்.
Advertisement
இளமாறனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். அவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டான். வெகு நேரம் கழித்து அழுது கொண்டிருக்கும் குழந்தைகளை கண் விழித்துப் பார்த்தான்.
“அஜூ, மதனா…”
“அப்பா… அப்பா…” என்று பிள்ளைகள் அழுதனர். அவர்களோடு துணைக்கு வந்த சிலரும் வேதனையோடு பார்த்திருந்தனர்.
“அழாதீங்க பசங்களா… எனக்கு ஒண்ணுமில்ல”
இளமாறனால் ஓரிரு வார்த்தை கூட பேசமுடியவில்லை. அமைதியாக கண்மூடிக்கிடந்தான்.
மருத்துவர்கள் இளமாறனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அவனது பெயர் காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் கூறினர். மேலும், தற்பொழுது இளமாறனின் உடல் அறுவை சிகிச்சையை தாங்கிக்கொள்ளும் அளவு தயாராக இல்லாததால், அவன் ஓய்வெடுத்து சற்று உடலை பேணி, தேற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
இளமாறன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான்.
“அம்மா படுத்திருந்த கட்டில் அஜூ. நான் எப்படி படுப்பேன்?” என்று தயங்கியபடி அமர்ந்தான் இளமாறன்.
“பரவால்ல பா…”
“இல்லை பா, நான் கீழ படுத்துக்கறேன்…”
“ஒரு நிமிஷம் இருங்க” என்றவன் எங்கோ கிளம்பிச் சென்று, அவருக்காக ஒரு கட்டிலை வாங்கி வந்து வரவேற்பறையில் போட்டு வைத்தான். இந்துவின் மஞ்சள் புடவையை அணைத்துக்கொண்டு, அதில் எஞ்சியிருக்கும் அவளது வாசத்தை சுவாசித்தபடி படுத்துக்கிடந்தான், இளமாறன்.
மதன் பள்ளிக்குச் செல்ல, அர்ஜுன் தந்தையின் அருகிலேயே இருந்தான்.
“காலேஜு போய் படி அஜூ…”
“இல்லப்பா… உன்னை விட்டுட்டு என்னால போக முடியாது…”
“படிக்க வேண்டாமா?”
“படிச்சுக்கலாம்… அதான் பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சுட்டேன்ல. மதன் ஸ்கூலுக்கு போகட்டும். நான் மேற்கொண்டு படிக்கறத பத்தி அப்புறம் யோசிக்கலாம்…”
“அஜூ, படிப்பு இருந்தா ஒரு தைரியம் கிடைக்கும்…”
“தைரியத்துக்கும் படிப்புக்கும் சம்மந்தமில்லை. நீ குணமாகி வந்தா போதும். அதுவே பெரிய தைரியம்”
இளமாறன் எத்தனையோ முறை அறிவுரை கூறியும், அவன் கேட்பதாக இல்லை. மாத்திரைகளுக்கும், வேதனைகளுக்கும் மத்தியில் இளமாறனுக்கு இருந்த ஒரே ஆறுதல், ஜன்னலின் வழியே உலவும் நிலவினை கண்டு ரசிக்கும் இரவுகள்.
இளமாறனின் உடல் தேற, அவனுக்கு தேவையான உணவுகளையும், மாத்திரைகளையும் வழங்கி இமைபோல பார்த்துக்கொண்டான், அர்ஜுன். தாயில்லாத வேதனையே பல முறை தாளமுடியாமல் போக, தந்தையாவது தன்னோடு இருக்க வேண்டும் என்று தன்னால் ஆன மட்டும் இளமாறனுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்தான்.
ஓர் இரவு, ஏதோ சிணுங்கல் கேட்டு விழித்த அர்ஜுன், மின்விளக்கினை எரிய விட்டு இளமாறனின் அருகே வந்து அமர்ந்தான்.
“என்னப்பா தூங்காம அழுதுகிட்டு இருக்க? உடம்புக்கு என்ன பண்ணுது? வா டாக்டரை போய் பார்ப்போம்” என்றான்.
“அதெல்லாம் வேண்டாம் அஜூ”
“அப்பா, சொன்னா கேளு. உனக்கு என்ன பண்ணுதுன்னு நீ வரவர சொல்லவே மாட்டேங்கற. உடம்பு சரியாப்போச்சுனு அம்மா எங்களை ஏமாத்துன மாதிரி நீயும் ஏமாத்த பார்க்குறியா? வா பா ஆஸ்பத்திரிக்கு போவோம்” என்றான், மதன் அழுதபடி.
“அழாதடா மதனா. உடம்புக்கு ஒண்ணுமில்ல… மனசு தான்…”
“தேவையில்லாம யோசிக்காத.. உடம்பு தேறி ஆப்பரேஷன் பண்ணனும்… கொஞ்சம் தூங்குபா” என்றான் அர்ஜுன்.
“எனக்கு ஆப்பரேஷன் எதுவும் வேண்டாம் அஜூ… அம்மாவே ஆப்பரேஷன் பண்ணிக்கல… எனக்கு எதுக்கு அஜூ?”
“என்னப்பா பேசற நீ?”
“பாவம்டா அவ. என்னை நம்பி வந்து எந்த சுகத்தையும் அனுபவிக்கல. கஷ்டம் மாறி கஷ்டம். ஆனா அவ சிரிக்காம இருந்ததில்லை… நான் ஆப்பரேஷன் பண்ணி உயிர் வாழ்ந்து என்ன பண்ண போறேன்? ஆம்பளையா என்ன நம்பி வந்தவளை காப்பாத்த முடியாத நான் எதுக்கு வாழணும்? அவளுக்காக வாங்கின கடனையும் அடைக்கல… நான் நல்ல புருஷனாவும் இல்லை… நல்ல அப்பனாவும் இல்லை…”
“அனாதையா கிடந்த என்னை தூக்கிட்டு வந்து வளர்த்தல்ல?!! உன்னைவிட நல்ல அப்பா இந்த உலகத்துல யாரு இருக்கா?” என்று மதன் கலங்கினான்.
“நான் என்ன செஞ்சேன்?! உன் அம்மா தானடா உன்னை வளர்த்தா. அவளுக்கு நீங்க ரெண்டு பேரும் தான் உயிரு. உங்களை நல்லபடியா வளர்க்கணும்னு சொன்னா… அதான் அவளோட கடைசி ஆசை…”
“அப்பா…” – அர்ஜுன் கண் கலங்கினான்.
“நீங்க ஆளாகணும்னு தான் காத்துக்கிட்டு இருந்தேன் அஜூ… இனி எனக்கு கவலையில்லை… மதனா ரொம்ப வெகுளி… அவனை பத்திரமா பார்த்துக்க… எப்பவும் கைவிட்டுடாத… நான் கைவிட்டுடேன் உன் அம்மாவை… என் நிலைமை தெரிஞ்சிருந்தும் அவளை கல்யாணம் பண்ணி, குடும்பத்தை விட்டு பிரிச்சு, தூக்கிகொடுத்துட்டு நிக்கறேன்… ‘எனக்கு விருப்பமில்லை, உன் வீட்ல சொல்றத கேளு’னு சொல்லி அனுப்பிவிட்டிருக்கணும்… எங்கயாவது நல்லா வாழ்ந்திருப்பா… இப்ப நான் என்ன சாதிச்சுட்டேன்னு தெரியல? பொண்டாட்டிய காப்பாத்த முடியாத நானெல்லாம் என்ன ஆம்பள? உன் மாமன் சரியான கேள்வி கேட்டான்… ‘என் அம்மா இந்துவை பிரிஞ்சு துடிச்சு துடிச்சு செத்த மாதிரி உனக்கு நடக்கும்’னு சொன்னான்… இத்தனை வருசமா உன் அம்மா இல்லாம ஒவ்வொரு நாளும் சாவாடு செத்தேன்… இனியாவது அவளோட போய் சந்தோசமா இருக்க போறேன் அஜூ… அந்த நிலாவுல தனியா காத்துக்கிட்டு இருக்கா… நான் துணைக்கு போக வேண்டாமா?”
இளமாறன் ஏதேதோ புலம்பியபடி உறங்கிப்போக, அஜூவும் மதனும் அழுதபடி அவனது அருகே கிடந்தனர்.
மறுநாள் காலை, நேரம் கழித்து எழுந்த அர்ஜுனுக்கு, முந்தின ராத்திரி தூக்கமில்லாமல் போனதால், கண்கள் சிவந்து எரிந்தது. முகத்தினை கழுவிவிட்டு, மூவருக்குமாக தேநீர் வாங்கி வந்தான்.
“அப்பா.. அப்பா… டீ ஆறுது… குடிப்பா, இட்டிலி வாங்கிட்டு வரேன்”
மதன் இளமாறனின் தோளைத் தொட்டு மெல்லமாக உலுக்கினான். அப்பா அம்மாவிடம் சென்றுவிட்டார் என்பதனை பிள்ளைகள் உணர்ந்தனர்.
இன்று…
அர்ஜுன் கூறி முடிக்க, இமைக்க மறந்து கண்களில் நீர் கோர்த்து அமர்ந்திருந்தாள், அஞ்சலி.
“அப்புறம் மதனும் படிக்கல. எனக்கும் காலேஜுக்கு போகணும்னு தோணல. கடன் வேற… எதோ சின்ன சின்னதா வேலை செஞ்சு வாழ்க்கையை ஒட்டிக்கிட்டு இருக்கோம்… அம்மாவும் அப்பாவும் இருந்திருந்தா இந்த மாதிரி தப்புதண்டாவுக்கெல்லாம் போயிருக்க மாட்டோம்” என்றவன், கலங்கிய விழிகளோடு அவளைக் கண்டான்.
அவள் என்ன கூறுவது என்று புரியாமல் உறைந்து போயிருந்தாள். அவளது பார்வை அவனைத் தாண்டி சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அவனது பெற்றோரின் புகைப்படத்தில் நிலைத்தது. ‘அஜூவை இப்படி ரெண்டு பெரும் ஏமாத்தியிருக்கக்கூடாது’ என்று மருகினாள். ஏதோ நினைவு வந்தவளாய், கட்டிலிலிருந்து இறங்கி நின்றாள்.
“என்னாச்சு அஞ்சலி?”
“ஒண்ணுமில்ல” என்றவள் தரையில் அமரச் செல்ல,
“வேண்டாம் வேண்டாம் கட்டில்ல படுத்துக்க” என்று தடுத்தான்.
“இல்ல அஜூ”
“அஞ்சலி, நீ கட்டில்ல படுத்துக்க. எனக்கு எந்த தயக்கமும் இல்லை. என் அம்மா வீட்டை எப்படி வச்சிருப்பாங்களோ அது போல மாத்திட்ட. அவங்களே திரும்பி வந்த மாதிரி இருக்கு. மேல படுத்துக்க…” என்றவன், தீர்க்கமாய் நிற்க, அவளும் சரியென்று படுத்துக்கொண்டாள். இதுதான் என்று கூற முடியாத வேதனை ஒன்று அவளை வாட்டியது.
