Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 23

 

காதலும் கடத்தப்படும் – 23

 



Advertisement

 

மறுவாரம், இரண்டு பாடல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. அடுத்தடுத்து பாடல்கள் பதிவேற்றப்பட, பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையும் ஏறிக்கொண்டே போனது. தினமும் இரவு வெகுநேரம் வரை அர்ஜுன் பாடிய காணொளிகளைக் கண்டு ரசித்திருந்தாள். காணொளி படப்பிடிப்பின் போது அவள் அவ்வப்போது தனது கைபேசியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் மற்ற காணொளிகளையும் பார்த்து ரசித்தாள். அர்ஜுனின் குரல் அவளை கிறங்கடித்தது. சாளரத்தை திறந்து, நிலவினைக் கண்டாள். இரவின் குளிரும், பொலியும் நிலவும், அவனின் மந்தகாச குரலும், அவளை ஏதோ செய்தது. மடிக்கணினியில் பாடிக்கொண்டிருந்தவனைக் கண்டாள். தனது கைகளை சேர்த்து, விரல்களை இதய வடிவாக்கி, அதன் வழியே அவனைக் கண்டாள். சிரித்துக்கொண்டாள். வெட்கம் கொண்டாள். உள்ளங்காலின் குறுகுறுப்பை ரசித்தாள். ஒரு நொடி திகைத்துப்போனாள். ‘அஜூவை பிடிக்கும்… ஆனா… இவ்வளவு பிடிக்குமா?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். கண்ணாடியின் முன் நின்றாள். தனது முகத்தினைக் கண்டாள். ‘தரிசான என் நெஞ்சில், விழுந்தாயே விதையாக…’ என்று மெலிதான குரலில் பாடினாள். அவளது பிம்பத்தின் அருகே, மடிக்கணினியின் பிம்பமும், அதில் அர்ஜுன் பாடுவதும் தெரிந்தது. மீண்டும் விரல்களைக் கோர்த்து இதய வடிவாக்கி, அதன் வழியே அவனைக் கண்டாள். ‘அஜூ… எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்… காலம் முழுக்க நீ பாடறத கேட்டுட்டு, உன் தோள் மேல சாஞ்சு நிலாவை ரசிச்சுக்கிட்டு, வெறும் காதலாவே வாழ்ந்து முடிச்சுடணும்… நான் வேற எதுவும் தேடலை… கமா போடல… காதல் மட்டும் தான் தேடறேன் அஜூ, உன்கிட்ட… நீயும் இதே மாதிரி நினைக்கறியான்னு தெரியல. ஆனா நினைச்சா நல்லா இருக்கும்… இல்லைனாலும், ஒரு நாள் என் மனசை உன்கிட்ட சொல்லுவேன்… அப்போ உன் மனசுல இதே நினைப்பு தான்னு சொல்லு. அது போதும் அஜூ’ என்று தனக்குள்ளே பேசிக்கொண்டவள், விழி தப்பிய நீரினை துடைத்துக்கொண்டு, நிலவென்னும் தோழியிடம் ஆறுதல் தேடினாள்.

 

Advertisement

அவளது தந்தை, கட்சி அலுவலுக்காக வெளியூர் சென்றிருக்க, அர்ஜுனும் உடன் சென்றிருந்தான். அவனை தினமும் ஒரு முறையாவது பார்த்துவிடுபவளுக்கு, ஓரிரு வார்த்தையாவது பேசிக்கொள்பவளுக்கு, மூன்று நாட்களாக அவன் ஊரில் இல்லாமல் போனது ஏனோ வாட்டி வதைத்தது. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. யாருடனும் பேசாமல், உணவு கூட சரியாக உண்ணாமல், தன்னைத்தானே வாட்டிக்கொண்டாள்.

Advertisement

 

கட்டிலில் படுத்தபடி மேலே சுற்றிக்கொண்டிருந்த மின் விசிறியை கண்டாள். கைபேசியில் அர்ஜுனின் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன.

‘அஜூ, நீ எப்போ வருவ? மூணு நாள் உன்னை பார்க்காம இருக்க முடியல. பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு. நீ என்னை மிஸ் பண்றியா இல்லையா? நாளுக்கு நாள் இந்த நேசம் அதிகரிச்சுட்டே போகுது அஜூ. இதை உனக்கு எப்படி புரிய வைப்பேன்?! என் மேல ரொம்ப பிரியமா இருந்தியே… அந்த நேசம் எல்லாருக்குமான பொதுவான நேசமா? இல்லை என்மேல பிரத்யேகமா உனக்கு பாசம் இருக்கா? உன்னைத் தவிர வேற சிந்தனையே இல்லை. நான் என்ன பண்றேன், என் வாழ்க்கை என்ன ஆகப்போகுதுன்னு எந்த அக்கறையும் இல்லாம இப்படி ஆகிட்டேன். உன்கூட இருந்தா போதும்னு தோணுது… வாழ்க்கை முழுக்க…’

Advertisement

அவள் தனக்குத்தானே பேசிக்கொண்டாள். 

 

“மதனா, சாப்பிட்டியா?” என்று அர்ஜுனின் குரல் கேட்டது. தனது கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து சென்று சாளரம் வழியே நோக்கினாள். அர்ஜுன் ஊரிலிருந்து வந்துவிட்டான் போலும். தோட்டத்தில் மதன் மற்றும் மற்ற பணியாளர்களோடு பேசிக்கொண்டிருந்தான். அவனது முகம் பார்த்ததே அவளுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது. எதிர்பாரா அவனது வருகையில் மீண்டும் கண்கள் கலங்கினாள். 

 

முகம் கழுவி, தலை கோதி, தனது உடையை சரி பார்த்துக்கொண்டு வெளியே சென்றாள். தோட்டத்தில் அனைவரும் கதை பேசிக்கொண்டிருக்க, அவர்களின் எதிரே சென்று நின்றாள். அர்ஜுனை அருகில் பார்த்ததில் அவளது கண்கள் மீண்டும் ஈரம்  கொண்டன. பிரயத்தனப்பட்டு தன்னை சமன் செய்துகொண்டாள்.

“எப்போ வந்த அஜூ?”

“இப்பத்தான் அஞ்சலி…”

“நேத்தே வந்துடுவீங்கன்னு நினைச்சேன்?!”

“சாருக்கு திடீர்னு வேலை வந்துடுச்சு, அதான் ஒரு ராத்திரி தங்கற மாதிரி ஆயிடுச்சு… சார், படுத்துட்டாங்களா?”

“ஆமா…”

“சரி அப்போ நானும் மதனும் கிளம்பறோம்…”

“சாப்பிட்டு போலாமே?” 

“இல்லை அஞ்சலி… நாங்க கிளம்பறோம், நாளைக்கு பார்க்கலாம்” என்றவன், மதனை கூட்டிக்கொண்டு கிளம்பினான்.

 

“அஜூ, என்னாச்சு? ஏன் டக்குனு கிளம்பிட்ட? அஞ்சலி சாப்பிட சொல்லுச்சு. நீ உன்பாட்டுக்கு கிளம்பிட்ட. அந்த புள்ள வருத்தப்படாதா?” 

கலங்கிய கண்களோடு மதனைக் கண்டான், அர்ஜுன்.

“அஜூ…”

“அஞ்சலியை பார்த்ததும் தொண்டையடைச்சுடுச்சு… எங்க அவ முன்னாடி அழுதுடுவேனோன்னு பயந்து தான் உடனே கிளம்பிட்டேன்”

“ஏன் அஜூ?” – கவலையானான், மதன்.

“மூணு நாள் அவளை பார்க்காம, அவளோட பேசாம… முடியல மதனா. எப்படா ஊருக்கு வந்து அவளை பார்ப்போம்னு இருந்தது… ஆனா…”

“ஆனா?”

“அவ என்னை மிஸ் பண்ணாலான்னு தெரியல மதனா. எனக்கு பைத்தியம் பிடிக்குது…”

“அஜூ, உனக்காக தான அந்த புள்ள சேனல் ஆரம்பிச்சிருக்கு. அந்த சாம் என்ன சொன்னான்? இந்த சேனலுக்கு மொத்த செலவும் அஞ்சலியோடதுன்னு சொன்னானா இல்லையா? அந்த புள்ள எதுக்குடா வேலை வெட்டிய விட்டுட்டு உனக்காக சேனல் ஆரம்பிக்கணும்…”

“ஏற்கனவே அவளை நினைச்சு நினைச்சு பைத்தியமாயிட்டேன். இன்னும் நீ வேற ஏதாவது சொல்லி என்னைக் குழப்பாத மதனா. நாமளே இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோனு யூகிக்க வேண்டாம்…”

“அப்போ மனசை விட்டு பேசு அஜூ…”

“அவ முன்னாடி நிக்கக்கூட எனக்கு தகுதி இல்லை… நான் அவ வீட்டு ட்ரைவர்…”

“அப்பா இப்படி யோசிச்சிருந்தா இன்னைக்கு நீ இங்க இருந்திருக்க மாட்ட…”

“அப்பா நாடகக் கம்பெனில இருந்தாங்க. கதை எழுதற திறமை இருந்தது. எத்தனையோ நாடகம் எழுதியிருக்காங்க. அவங்களுக்கு அவங்க மேல நம்பிக்கை இருந்தது. அதான் அம்மாவை கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. ஆனா நான்? அவ அப்பாகிட்ட சம்பளத்துக்கு வேலை செய்யறேன். தன்னம்பிக்கையோடு இருந்த அப்பாவே உடைஞ்சுபோயிட்டாங்க. வாழ்க்கையை அவங்க ஆசைப்பட்ட மாதிரி வாழமுடியாம போச்சு. நானெல்லாம் எந்த மூலைக்கு?” என்று கலங்கியவன், இரவு உணவு உண்ணாமல், தூக்கமின்றி கண்கள் கலங்கியபடி படுக்கையில் கிடந்தான்.

 

 

****************************************************************

 

கோர்த்துக்கொள்ளும் தொலைவில் 

விரல்கள் இருக்கட்டும் 

பார்த்துக்கொள்ளும் தொலைவில் 

கண்கள் இருக்கட்டும் 

பேசிக்கொள்ளவும் சிரித்துக்கொள்ளவும் 

காலம் தயை செய்யட்டும் 

காதல் மட்டும், சற்று 

எட்டி நின்றே வேடிக்கை பார்க்கட்டும்!!

 

****************************************************************

 

ஓர் நாள் இரவு, வாயிலில் நின்றபடி அர்ஜுன், மதன் மற்றும் அஞ்சலி, தங்களது காணொளிகளில் வந்துள்ள கருத்துக்களை வாசித்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக வந்திருந்த கருத்துக்களை வாசித்தபடி அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க,

“மாடி, ஏலே மாடி…” என்று குரல் கொடுத்துக்கொண்டே வந்தார், தாத்தா.

மூவரும் என்ன சொல்கிறார் என்று புரியாமல் சற்று விலகி வந்து மொட்டைமாடியைக் கண்டனர்.

“மாடில என்ன தாத்தா?” என்றாள் அஞ்சலி.

“அந்த மாடி பயல கூப்பிடுமா…” என்றார்.

“மாடியில யாராவது நிக்கறாங்களா? எனக்கு ஒன்னும் தெரியலையே அஜூ?!” 

“யாரும் இல்லை அஞ்சலி” 

“தாத்தா எந்த பயல கூப்பிடணும்?” என்றான் மதன், அருகே வந்துவிட்டவரிடம்.

“உன்னைத்தான்டா கூப்பிடறேன்”

“என்னையா?”

“ஆமா நீ தான உன் பேரு ‘மாடி’னு சொன்ன?”

“அது மாடி இல்லை, மேடி, மே மாசத்துல வர்ற மே… மேடி…”

“மே மாசமா?”

“ஆமா என் பொறந்த நாள் மே மாசம், அதனால…”

“அப்பா ஜூன் மாசம் பொறந்திருந்தா உன் பேரை ‘ஜோடி’னு வச்சிருப்பியா?” என்றுவிட்டு தாத்தா சிரிக்க, உடன் சேர்ந்து அஞ்சலியும், அர்ஜுனும் சிரித்து ஓய்ந்தனர்.

“என்ன சிரிப்பு? ஜோடி கேக்குற வயசா உங்களுக்கு?” என்றான் மதன், தாத்தாவிடம். 

“கேட்டா என்ன? எனக்கு என்ன வயசாயிடுச்சு?”

“ஆல்ரெடி ஒரு ரவுண்டு உள்ள போயிடுச்சு போல? இந்த ஆட்டம் போடறீங்க?” என்றான் தூரத்தில் இரவு நேர கச்சேரிக்கு அனைவரும் தயாராவதைக் கண்டு.

“அய்யா கூப்பிடறாங்க வந்து சேறு மாடி. வரும்போது உன் அண்ணன் தாடியையும் கூட்டிட்டு வா…” என்றுவிட்டு அவர் செல்ல, “நாலு நாள் ஷேவ் பண்ணல. அதுக்குகூட கலாய்ப்பாராடா?” என்றான் அர்ஜுன். 

“கலாய்ச்சு, நம்ம வைப்’ல இருக்க முயற்சி பண்றாரு. கண்டுக்காத”

 

அஞ்சலி உள்ளே சென்றுவிட, அவ்விருவரும் வேதநாயகத்தின் எதிரே சென்று நின்றனர்.

“என்னப்பா தீவிர ஆலோசனை?” என்றார் வேதநாயகத்தின் செயலாளர்.

“எங்க யூடியூப் சேனலுக்கு  நிறைய கமெண்ட்ஸ் வர ஆரம்பிச்சுடுச்சு. அதான் படிச்சுட்டு இருந்தோம்” என்றான் அர்ஜுன்.

“கேள்விப்பட்டேன், என்ன சேனல் அது?” என்றார், வேதநாயகம். 

தனது கைபேசியில் காணொளியை ஒலிக்கவிட்டு நீட்டினான். வேதநாயகம் சற்று மது அருந்தியிருந்த நிலையில், கைபேசியில் படம் அவருக்கு தெளிவாக பிடிபடவில்லை.

“இருங்க, இதோ வந்துடறேன்” என்று விருட்டென சென்றவன், வாயிலில் அழைப்பு மணியை அடித்து, அஞ்சலியை அழைத்தான்.

“என்ன அஜூ?”

“உன் லேப்டாப் கொடேன். போன்ல சாருக்கு நம்ம வீடியோ சரியா தெரியல”

“இதோ வரேன்” என்றவள், உள்ளே சென்று தனது மடிக்கணினியை எடுத்து வந்து கொடுத்தாள். அவளும் அர்ஜுனோடு வர எத்தனிக்க,

“நீ வரவேண்டாம் அஞ்சலி. அங்க எல்லா பயல்களும் ஒரு மாதிரி நிலையில இருக்காங்க. நீ ரூமுக்கு போ. நானே லேப்டாப்பை கொண்டுவந்து கொடுத்துடறேன்”

அவள் சரி என்றுவிட்டு உள்ளே செல்ல,

“அஞ்சலி, எதுக்கு ஜன்னலெல்லாம் திறந்து வச்சிருக்க? தோட்டத்திலிருந்து உன் ரூம் தெரியுது”

“காத்துக்கு தான் அஜூ. ஏ.சி.ல எவ்வளவு நேரம் இருக்கறது…”

“அப்போ லைட் போடாத” என்றவன் அவளது பதிலுக்கு காத்திராமல் தோட்டத்திற்கு சென்றான்.

அவனது அக்கரையில் நெகிழ்ந்து போனவள், தனது அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு, திரைசீலையின் மறைவில், அவனை பார்த்துக் கொண்டு நின்றாள். 

“அஜூ, உன்னோட இந்த அக்கறை தான் என்னை கிறங்கடிக்குது” என்று தனக்குள்ளே முனகிக்கொண்டாள்.

 

அவளிடமிருந்து அவன் பெற்றுச் சென்ற மடிக்கணினியில் சில காணொளிகளைக் காட்டினான். அனைவரும் ஆரவாரத்தோடு பார்த்திருந்தனர். 

“நல்லா பண்ணியிருக்கீங்க பயலுகளா” என்றார் வேதநாயகம்.

“என்னத்த நல்லா பண்ணியிருக்காங்க? நல்லா இருந்த பாட்டை கெடுத்துவிட்டிருக்கானுங்க” என்று தலையில் முண்டாசை கட்டிக்கொண்டு விறைப்பாய் எழுந்து நின்றார், தாத்தா.

“என்ன தாத்தா சண்டைக்கு தயாரா?” என்றான் மதன்.

“ஆமாடா. என் வாத்தியார் பாட்டை என்னடா கெடுத்துவிட்டுருக்கீங்க? டம் டம்முனு சத்தம் தான் கேட்குது?”

“அப்படி பாடினாத்தான் இந்த காலத்து பிள்ளைங்களுக்கு பிடிக்கும்”

“எவனுக்கும் புடிக்க தேவையில்லைடா. முதல்ல பாட்டை மாத்து.”

“மாத்தலாம் முடியாது. இனிமேல் இதைத்தான் கேட்டாகணும்”

“டேய் ஒழுங்கா மாத்தல, மண்டைமேல இருக்கறத, புல்லை கொத்துறமாதிரி கொத்திவிட்டு, வெறும் மாடியா இருக்கற உன்னை மொட்டை மாடியா ஆக்கிடுவேன் டா லூசு பயலே”

“ரெண்டு ரவுண்டு உள்ள போனதுக்கே இந்த ஆட்டம் ஆடுது. இதுல கொத்தி தள்ளிடுவீங்களோ?” 

“ஆமாடா, என் வாத்தியார் பாட்டு டா அது…” என்று பொங்கியவர், தளர்ந்து கீழே அமர்ந்து புல்லின் மீது படுத்துக்கொண்டார்.

தாத்தாவின் ரகலைகளைக் கண்டு அனைவரும் சிரித்துக்கொண்டனர்.

 

தடுமாறி எழுந்த வேதநாயகம், அர்ஜுனின் கையை பற்றிக்கொண்டு நடக்கத் தொடங்கினார். அவரை சற்று கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றான், அர்ஜுன். தனது கட்டிலின் மேல் அவர் படுத்துக்கொள்ள, 

“சார், இது அஞ்சலியோட லேப்டாப், இங்க வச்சுடுவா?” என்று மேசையை காண்பித்தான்.

“வச்சுடு”

செல்ல எத்தனித்தவன், தயக்கத்தோடு அவர் எதிரே வந்து நின்றான். 

“என்ன வேணும்?”

“உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்னு நினைச்சேன்…” 

சற்று சாய்ந்து அமர்ந்தவர்,

“சொல்லு” என்றார்.

“அது…”

“தண்ணி சாப்பிட்டிருக்கேன்னு பார்க்கறியா? நிதானத்தை இழக்கற அளவுக்கு என்னைக்குமே நான் சாப்பிட்டதில்லை… சொல்லு…”

“சார், அது அஞ்சலியை பத்தி என் மனசுல நான் சொல்லணும்னு நினைச்சது … இவ்வளவு நாள் தைரியம் வரல, ஆனா இப்போ தைரியம் வந்துடுச்சான்னு தெரியல, ஆனா பயம் இல்லை. அஞ்சலிய கடத்தினது நான் தான். ஆனா அஞ்சலி தான், தானே தன்னை கடத்திக்க ப்ளான் போட்டிருக்கா. நான் கேட்டதுக்கு, கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொன்னா. அப்புறம் வெளிநாட்டுக்கு யாரோ பேஸ்புக் ப்ரெண்ட் கூட போயிடப்போறதா சொன்னா. அதுக்குள்ள இன்ஸ்பெக்டர் எங்களை கூட்டிட்டு வந்துட்டாரு… ‘நான் எப்பவுமே தனியாவே தான் இருக்கேன், சாப்பிட்டியா இல்லையானு கூட கேட்க ஆளில்லை’னு சொன்னா… நான் யாரோ எவனோ. மூணு நாள் வீட்ல தங்கினதுக்கே என் மேல இவ்வளவு அக்கறையா இருக்கற பொண்ணு, உங்க மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கணும்?!! ஆனா உங்ககிட்ட மனசு விட்ட அவ எதுவும் பேசலனு புரிஞ்சுது… சின்ன பொண்ணு பாவம், நீங்க பேசுங்க சார்… உங்களை ரொம்ப மிஸ் பண்றான்னு நினைக்கறேன்… எல்லார்கிட்டயும் உங்களோட அன்பைத்தான் தேடறா… இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, இன்னொரு தடவ ஏதாவது முடிவெடுத்து… யாரையாவது நம்பி… நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு… உங்ககிட்ட வேலை செய்யற ட்ரைவர் நான் இதெல்லாம் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நான் சொன்ன மாதிரி அன்னைக்கே இதெல்லாம் சொல்ல தைரியம் இல்லை. அதான் இப்ப சொல்றேன்…” என்றவன் அமைதியாய் நிற்க, அவன் கூறியதை உள்வாங்கியவராய், 

“சரி நீ கிளம்பு” என்றார். 

யோசனையாகிப் போனவர், தன்னையும் மறந்து உறங்கிப் போனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!