காதலும் கடத்தப்படும் – 24

காதலும் கடத்தப்படும் – 24
Advertisement
பரபரப்புடன் அஞ்சலி வாயிலில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருக்க, மதன் தயாராகி வந்தான்.
“மதனா, எங்க அஜூவை இன்னும் காணோம்?”
Advertisement
“ஃபோன் பண்ணேன் எடுக்கல அஞ்சலி. ட்ரைவிங்க்ல இருப்பான் போல…”
Advertisement
“இன்னைக்கு ரெக்கார்டிங் இருக்குனு சொல்லியும் எதுக்கு அப்பா கூட போனான்?”
“அப்புறம் போகாம? அவரு உனக்கு மட்டும் தான் அப்பா, எங்களுக்கு இல்லை…”
“ப்ச்…” அவள் பதட்டமாக, ஒருவழியாக அர்ஜுன் வந்து சேர்ந்தான்.
Advertisement
“அஜூ நேரமாச்சு…” என்றாள், அவனிடம் பரபரத்தபடி.
“போலாம் அஞ்சலி” என்றவன், காரினை திருப்பிக்கொண்டு நின்றான்.
“எங்க மா இவ்வளவு அவசரமா கிளம்பற?” என்றார், வேதநாயகம்.
“இன்னைக்கு ரெக்கார்டிங் இருக்குபா…”
“எது, அந்த யூடியூபுக்கா?”
“ஆமா, ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வந்துட்டாங்க…”
“எங்க நடக்குது?”
“சீனியர் சாம் வீட்ல…”
அவர் நெற்றி சுருங்கி யோசிக்க,
“சார் அந்த வீடியோல கிட்டாரிஸ்ட்டு ஒரு பையன் இருந்தானே, அந்த பையன் தான். பயங்கர திறமைசாலி” என்றான் அர்ஜுன்.
“அவன் வீடு எங்க இருக்கு?”
அர்ஜுன் விளக்கினான். வேதநாயகம் யோசனையானார்.
“அஞ்சலி, நம்மளோட பழைய வீடு பூட்டி தான இருக்கு, அதை பயன்படுத்திக்கோங்க. நான் ரெடி பண்ணி தரேன். இங்க அஞ்சு நிமிஷத்துல போயிட்டு வர வசதியா இருக்கும்…”
அவள் கண்கள் விரித்து ஆச்சர்யமானாள்.
“நிஜமாவா?” என்றாள்.
வேதநாயகம் செயலாளரை பார்க்க,
“அய்யா, ரெக்கார்டிங் ஸ்டூடியோவா மாத்திடலாம். சின்னம்மா ரெக்கார்டிங் பண்ற நேரம் போக, மீதி நேரம் வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம்… நம்ம கட்சில ரெண்டு மூணு பேரு வச்சிருக்காங்க… நல்ல வரும்படி…”
“யோசனை நல்லா இருக்கே…” என்றார் வேதநாயகம்.
“ஆனா, ரொம்ப செலவாகுமா?”
“அது செலவு இல்லமா, இன்வெஸ்ட்மென்ட்… நீங்க கிளம்புங்க… சீக்கிரமே நான் ஏற்பாடு பண்ணி தரேன்” என்றவர் உள்ளே செல்ல, மனமகிழ்ச்சியோடு அர்ஜுன், மதனோடு அஞ்சலி கிளம்பிச் சென்றாள்.
“அஜூ, இந்த சந்து வழியா போயேன்…”
அவனும் சென்றான்…
“இதோ இந்த பச்சை கலர் வீடு தான், எங்களோட முதல் வீடு… எனக்கு விவரம் தெரிஞ்சு நான் இங்க வாழ்ந்த ஞாபகம் இருக்கு… அப்புறம் இப்ப இருக்கற வீட்டுக்கு போயிட்டோம்… அம்மாவுக்கு ரொம்ப பிடிச்ச வீடு… இத்தனை வருஷம் பூட்டியே இருந்தது, இனிமேல் நமக்கு பயன்படப்போகுது…” என்று கூறயவள் முகம் முழுதும் புன்னகையாய் இருக்க, அர்ஜுனின் மனம் அவளது புன்னகையில் தொலைந்தது.
அடுத்து வந்த சில வாரங்களில், பல பாடல்களை அவர்கள் காணொளி பதிப்பித்து, யூடியூபில் பதிவேற்றம் செய்ய, வீடும் இவர்களுக்காக விரைவாக தயாரானது. அவ்வப்போது கோவிலுக்கு செல்லும் பொழுது, அர்ஜுனோடு, வீட்டில் நடக்கும் வேலைகளை வந்து பார்த்துவிட்டு சென்றாள். வீடு தயாராகி பயன்பாட்டிற்கு வரும் நாளிற்காக ஆவலோடு காத்திருந்தாள்.
அன்று விடியற்காலையிலேயே எழுந்தவளுக்கு, மனதோடு ஒரு அழகிய பரபரப்பு உண்டானது. சாளரங்களை திறந்து சூர்யோதயத்தைக் கண்டாள். கைபேசியை எடுத்து அர்ஜுன் பாடிய பாடலைகள் சிலவற்றை ஒலிக்கவிட்டு கேட்டாள். காலையில் சுப்பிரபாதமும், இரவில் தாலாட்டும் அவனது பாடல்களாகிப்போயின. வெகு நாட்களுக்கு முன், அர்ஜுனின் இல்லத்தில் ஒரு விடியலை ரசித்த ஞாபகம் வந்தது. அவளுக்கு பிடித்தமான பாடல்களை கேட்டு முடிக்கும் வரை அவனது வீட்டில் தங்கியிருந்த நினைவுகளில் தொலைந்துபோனாள்.
குளித்து முடித்து வந்தவள், தனது அலமாரியை துழாவி கத்திரிப்பூ நிறத்தில் இருந்த பட்டுப்புடவையை கட்டிக்கொண்டாள். நகைகள் பூட்டி, பூச்சூடி தயாராகினாள். வெகு நாட்கள் கழித்து தன்னை சிருங்காரம் செய்துகொண்டதில் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சில சுயபடம் எடுத்துக்கொண்டவள், அர்ஜுனுக்கு அனுப்பி வைக்க ஆசை கொண்டாலும், அதற்கான காலம் இன்னும் வரவில்லை என்று உணர்ந்தவளாய், அறையை விட்டு வெளியே சென்றாள்.
வரவேற்பறையில் செயலாளரோடு பேசிக்கொண்டிருந்த வேதநாயகம், தனது மகளைக் கண்டு அமைதியாகி, இமைக்காமல் பார்த்திருந்தார்.
“நான் கிளம்பிட்டேன்பா…” என்றாள்.
“போகலாம்மா…” என்றவருக்கு, புடவையில் நிற்கும் மகளைக் கண்டு ஒருவித பெருமிதம் பொங்கியது.
ரெக்கார்டிங் ஸ்டூடியோ வேலைகள் நிறைவு பெற்று, அன்று திறப்பு விழா ஏற்பாடாகியிருந்தது. இரண்டு அடுக்கு வீட்டில், மாடியில் லைவ் ரூம், பூத், மற்றும் கன்ட்ரோல் ரூம் எனப்படும் அறைகள் இருக்க, கீழே வரவேற்பறை, நடத்துனருக்கான தனியறை, மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான், அர்ஜுன்.
“என்ன அஜூ அப்படி பார்க்கற?” என்றபடி அலங்கார காகிதங்களை பிரித்துக்கொண்டு அவன் அருகே வந்து நின்றான், மதன்.
“அஞ்சலி ஸ்டுடியோஸ்… இந்த போர்ட்’அ பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு மதனா”
“போர்ட்’அ பார்த்து சந்தோஷமா? இல்லை பேரை பார்த்து சந்தோஷமா? இதுவே வேது ஸ்டுடியோஸ், மதன் ஸ்டுடியோஸ்னு பேரு வச்சிருந்தா இப்படி சந்தோஷப்பட்டிருப்பியா?”
“மாட்டேன்… எனக்கு வேற வேலை இல்லை…”
“தெரியும்டா, இந்த லவ் பண்ற பசங்களே இப்படித்தான்… ம்ஹும்…” என்று நொடித்துக்கொண்டவன், பதாகையை அலங்காரம் செய்யத் தொடங்கினான்.
“டேய் மதனா, நான் பண்றேன், நீ வேற வேலையை பாரு” என்றான்.
“அஜூ”
“போடா…”
“சட்டி சுட்டதடா… கை விட்டதடா… புத்தி கெட்டதடா…”
“நல்ல காரியம் நடக்கும் போது எதுக்கு இந்த பாட்ட பாடற? சாமி பாட்டா பாடு…”
“ரொம்ப பண்ற அஜூ…” என்றவன், “குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்” என்று அவன் உரக்க பாடிக்கொண்டு உள்ளே செல்ல, அதைக்கண்டு சிரித்தவனாய், அந்த பதாகையை அலங்காரம் செய்து முடித்தான்.
தனது கைபேசியில் அவன் பதாகையை புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்க, அஞ்சலி, வேதநாயகம் மற்றும் அவரது செயலாளர் வந்து சேர்ந்தனர். கீழே இறங்கியவள், முதலில் அர்ஜுனைக் கண்டாள். புடவையில் நிற்பவளைக் கண்டு அவன் இமைக்கவும் மறந்தான்.
“என்ன தம்பி எல்லா வேலையும் முடிஞ்சுதா?” என்று வேதநாயகத்தின் குரலைக் கேட்டு, இருவரும் நிலைக்குத் திரும்பினர்.
“எல்லாமே ரெடி சார்” என்றான். அப்பொழுதே அஞ்சலி பதாகையை கவனித்தாள்.
“அப்பா என் பேரு??”
“இது உன்னோட ஸ்டூடியோ தான? அதான் உன் பேரு வச்சாச்சு…” என்றார் வேதநாயகம். அவள் இன்ப அதிர்ச்சியில் நின்றிருந்தாள்.
“சின்னமா இதுக்கே ஷாக் ஆயிட்டா எப்படி? இன்னும் சர்ப்ரைஸ் இருக்கு வாங்க…” என்றார் செயலாளர். வேதநாயகம் சிரிக்க, அவள் ஆர்வமானாள்.
கீழும் மேலும் சுற்றிப்பார்த்தவளுக்கு, மனதிற்கு நெருக்கமான அவளது வீடு முற்றிலும் வேறாக காட்சியளித்தது. சாம் மற்றும் மற்ற நண்பர்கள் வருகை தர, அவள் குதூகலமானாள். அர்ஜுனுக்கு தான் நிற்கும் இடம், கூடியிருக்கும் மக்கள், நடக்கவிருக்கும் விழா – இது எதுவும் கவனத்தில் இல்லை. அஞ்சலி மட்டுமே அவனது கண்களை ஆட்சி செய்தாள். மற்ற காட்சிகள் மங்கிவிட்டது போல இருந்தது, அவனுக்கு. அன்று சிகப்பு நிற புடவையில் பார்த்தவனுக்கு, வெகு நாட்கள் கழித்து மீண்டும் புடவையில் காட்சி கொடுக்க, அவன் மயங்கித்தான் போயிருந்தான்.
“அஜூ… அஜூ…” – அவனை மெல்லமாக அழைத்தான் மதன்.
“என்னடா?”
“இன்னைக்கு முகூர்த்த நாள், அஞ்சலியும் கல்யாண பொண்ணு மாதிரி அலங்காரம் பண்ணிக்கிட்டு நிக்கறா…”
“அதுக்கு?”
“ஒரு தாலி வாங்கிட்டு வரேன், கையோட கட்டிடு…”
“அவ அப்பா காதுல விழுந்தது…”
“வீட்டுல இருக்கற தென்னை மரத்துக்கு கீழ குழி தோண்டி புதைச்சுடுவாரு…”
“புரியுதில்ல?!! அமைதியா இரு…”
மேல் தளத்திலும், கீழ் தளத்திலும் பூஜைகள் இனிதே நடந்தது. வீட்டினை மறுசீரமைப்பு செய்த கட்டிட வடிவமைப்பாளர், ஒவ்வொரு அறையிலும் உபயோகப்படுத்தப்பட்ட உயர்தர பொருட்களைப் பற்றி விளக்கினார். இத்துறையில் அனுபவமிக்க ஒருவர், ஸ்டூடியோவிற்கு தேவதையான கருவிகளை வாங்கிக்கொடுத்து, இன்று பூஜையிலும் கலந்துகொண்டார். அவரும் அவர் பங்கிற்கு ஒவ்வொன்றையும் விளக்கினார். தனக்கு தெரிந்த சில ரெக்கார்டிங் என்ஜினியர்களையும், சவுண்ட் என்ஜினீயர்களின் காண்டக்ட்டுகளையும் அஞ்சலியோடு பகிர்ந்துகொண்டார். ஒலிவாங்கியில் அவளை முதலில் ஏதேனும் பாட சொல்லி அவர் கூற, தனக்கு பாடத் தெரியாது என்று தயங்கியபடி நின்றாள். வேதநாயகம் வற்புறுத்த, “பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்” என்ற விநாயகர் துதியை வசனம் போல் பேசிமுடித்தாள். அதனை பதிவு செய்து, மீண்டும் ஒலிக்கவிட, அர்ஜுன் அதனை ரகசியமாய் தனது கைபேசியில் பதிவு செய்துகொண்டான்.
கீழே அனைவரும் செல்ல, அங்கிருந்த ஒரு அறையின் கதவைத் திறந்து வேதநாயகம் உள்ளே சென்றார். ஸ்டூடியோ நடத்துனருக்கான அறை அது. அஞ்சலியை அழைத்தவர்,
“இந்த சீட்ல உட்காரு அஞ்சலி” என்றார்.
“நானா?”
“ஆமா, நீ தான் இந்த ஸ்டூடியோவோட ஓனர், நீ தான் இந்த தொழில நடத்தப்போற, நீ தான் இங்க உட்காரனும்” என்றார்.
“அப்பா ஸ்டூடியோவை நடத்தர அளவுக்கு நான்…”
“ இந்த பசங்கள ஒன்னு சேர்த்து, ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சு, எவ்வளவு செய்யற?! இதை செய்ய மாட்டியா என்ன?”
“அதுக்கில்ல…”
“பயப்படாத அஞ்சலி, நான் இருக்கேன்… தைரியமா பண்ணு” என்றவர் அவளிடம் ஒரு காகித கட்டினை நீட்டினார். அதனை பெற்றுக்கொண்டு யோசனையானவள்,
“இந்த வீடும், தொழிலும் உன் பேர்ல பதிவு ஆயிருக்கு, அதுக்கான பத்திரம் இது…” என்றார் வேதநாயகம். அவர் காலில் அவள் விழ, சற்றும் அதனை எதிர்பார்த்திராதவர், மகளை வாஞ்சையோடு எழுப்பி, இருக்கையில் அமரச் செய்தார். வெகு நாட்கள் கழித்து அவரது மனம் நிறைவு பெற்று அமைதி கொண்டது.
காலை விருந்து முடிந்து, வேதநாயகமும் மற்றவர்களும் கிளம்பிச் செல்ல, நண்பர்கள் கதை பேசியபடி அவ்விடத்தை மீண்டும் சுற்றி வந்தனர்.
“அஜூ, நீ ஒரு பாட்டு பாடேன்” என்றாள், அஞ்சலி.
மற்றவர்களும் கோரஸாக அதையே கேட்க, ரெக்கார்டிங் அறையில் இருக்கும் ஒலிவாங்கியில் அவன் பாடத் தொடங்கினான். முதலில் ஒரு பக்தி பாடலைப் பாடினான். அடுத்த என்ன பாடுவது என்று யோசித்தபடி அஞ்சலியை பார்த்தவன், மறு யோசனையின்றி,
“மழை மேகமாய் உருமாறவா..
உன் வாசல் வந்து உயிர் தூவவா
மனம் வீசிடும் மலராகவா..
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா..” என்று பாடத் தொடங்கினான். அதை எதிர்பார்த்திராத அஞ்சலிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவன் பாடி முடிக்கும் வரை இமைக்காமல் அவனை பார்த்துக்கொண்டு, அவனது பாடலை ரசித்திருந்தாள்.
தங்களது இருபத்தைந்தாவது பாடலை இன்னும் சில நாட்களில் பதிவு செய்திட முடிவு செய்த நண்பர்கள், அதற்காக ரெக்கார்டிங் என்ஜினீயரிடமும் பேசி அவரது வருகையை தீர்மானம் செய்துகொண்டனர்.
நண்பர்களும், ஒவ்வொருவராக களைந்து செல்ல, ஸ்டூடியோவில், அஞ்சலி, மதன் மற்றும் அர்ஜுன் மட்டுமே இருந்தனர்.
“வாழ்த்துக்கள் வியாபார காந்தம் அஞ்சலி அவர்களே!” என்றபடி அவள் எதிரே வந்து நின்றான், மதன்.
“கிண்டல் பண்ணாத மதன்” என்றவள் முகம் சோர்ந்து, ஒரு இருக்கையில் சென்றமர, என்னவென்று புரியாமல் அர்ஜுனும் மதனும் கவலையாய் அவள் எதிரே சென்றமர்ந்தனர்.
