Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 26

 

 

காதலும் கடத்தப்படும் – 26



Advertisement

 

மாலை உடை மாற்றி சுடிதாரில் வந்தவளைக் கண்டு முகம் வாடிப்போனான், அர்ஜுன். 

‘அந்த புடவை என்ன பாவம் பண்ணிச்சு? ஒரு நாளைக்கு முழுசா அந்த புடவைல இருந்தாத்தான் என்னவாம்? மனுஷன கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்க விடறாளா?! சோளக்காட்டு பொம்மை மாதிரி ஒரு சுடிதாரை மாட்டிக்கிட்டு’ என்று மனதிற்குள் யோசித்தபடி கடுகடுப்பாய் நின்றிருந்தான், அர்ஜுன்.

Advertisement

“என்ன அஜூ அப்படி பார்க்கற? இந்த சுடிதார் ரொம்ப நல்லா இருக்குல்ல?” 

Advertisement

“இருக்கு இருக்கு” என்றவன், வண்டியில் ஏறி அமர்ந்து அதனை கிளப்ப, மதன் வந்து முன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

 

“ஆனா ஒன்னு அஞ்சலி, இந்த பொம்பள புள்ளைங்களுக்கு பொறுமை எங்கிருந்து வருதுன்னு இப்பத்தான் புரியுது” என்றான், மதன்.

Advertisement

“புரியல மதனா” 

“மூணு வேலையும் மூணு விதமா மேக்-அப் பண்றதுக்கே பொறுமை வேணும். என்ன வெயிலடிச்சாலும், மழையடிச்சாலும், சூறாவளியே வந்தாலும் எப்படித்தான் இப்படி ட்ரெஸ் பண்ணிக்கறீங்களோ. பசங்கள பாரு, ஒரு ஜீன்ஸ் , டீ-ஷர்ட் போதும். மூணு நாளைக்கு கூட குளிக்காம அதே துணில சுத்துவோம்…”

“நல்லா ட்ரெஸ் பண்ணா, பார்க்க அழகா இருக்கோம்னு ஒரு தன்னம்பிக்கை வரும்… அதுவுமில்லாம நான் இந்த மாதிரி ட்ரெஸ் பண்ற ஆளெல்லாம் கிடையாது… இப்பப்ப நல்லா ட்ரெஸ் பண்ணிக்கனும்னு தோணுது…”

மதன் அர்ஜுனைக் கண்டு குறும்பாய் சிரிக்க, அர்ஜுன் இதழோரம் சிரித்துக்கொண்டான். அவள் தினமும் அர்ஜுனுக்காக அழகழகாய் தன்னை அலங்காரம் செய்துகொள்வதை கூறாமல் கூறியதை உணர்ந்தவள், சற்று அமைதியாகிப்போனாள்.

 

தனது கைபேசியில் ஏதோ சத்தம் வர எடுத்துப்பார்த்த மதன்,

“ஐயோ இவனா?” என்று பதறினான்.

“யாரு மதனா?” – அர்ஜுன் வினவ, 

“அந்த கஜா தான்” என்றான்.

“இன்ஸ்பெக்டரா?”

“ஆமா… என்னோட பேஸ்புக்ல மெசேஜ் போட்டிருக்கான்… ‘ஹாய் பேபி!!’… ஐயோ! இவன் இம்சை தாங்க முடியல…”

“இன்னுமா இவனோட பேசிக்கிட்டு இருக்க?” – அதிர்ந்தாள் அஞ்சலி.

“ஆமா, எப்படி கழட்டி விடறதுன்னு தெரியல…”  என்ற மதன், ‘ஹாய் டார்லிங்!!’ என்று பதில் அனுப்பினான்.

 

மதன், கரீனா சோப்ராவாக கஜாவோடு காதலை பரிமாறிக்கொண்டிருக்க, பின் இருக்கையில் இருந்த அஞ்சலி அர்ஜுனை விடாது பார்த்துக்கொண்டிருந்தாள். முன் இருக்கையில் அமர்ந்துகொண்டு, அவனது தோள் மீது சாய்ந்துகொள்ள வேண்டும் போல் இருந்தது, அவளுக்கு. அவ்வப்போது அர்ஜுனும் கண்ணாடி வழியே அவளைக் கண்டான். ஓரிரு முறை கண்கள் மோதி அவர்கள் சிரித்துக்கொள்ள, இருவர் மனத்திலும் ஒரே நேசம் இருந்தாலும், மற்றவர் ஏதோ எதேச்சையாக தன்னைக் கண்டு சிரித்ததாக எண்ணிக்கொண்டனர். 

 

கோவில் வந்தடைந்ததும், நுழைவாயில் அருகே ஒரு கடையில் அர்ச்சனை தட்டினை வாங்கிக்கொண்டாள், அஞ்சலி. மாலை வாங்க வேண்டும் என்று எண்ணியவள். ஒரு கையில் கைப்பையும், மற்றொரு கையில் அர்ச்சனைத் தட்டும் வைத்துக்கொண்டு மாலையை வாங்கிட அவள் தடுமாற, 

“எல்லாத்தையும் என்கிட்டே கொடுத்துட்டு நீ மாலையை பாரு” என்ற அர்ஜுன், அவளிடமிருந்து தட்டையும், கைப்பையையும் வாங்கிக்கொண்டான். அவள் இரண்டு மூன்று கடைகளை பார்த்துவிட்டு, வேறு ஒரு கடையிலிருந்து மாலையை வாங்கிக்கொண்டு வர, அவளது கைப்பையை தோளில் மாட்டிக்கொண்டு, அர்ச்சனை தட்டினை கையில் ஏந்தியபடி எவ்வித தயக்கமுமின்றி நின்றிருந்த அர்ஜுனைக் கண்டு அவள் மகிழ்ந்து போனாள். மனதிற்கு இனியவன், ஆணென்ற ஆணவமின்றி இயல்பாய் இருப்பதெல்லாம் ஒரு அழகிய வரம்! அவளுக்கு அது கிடைத்துவிட்ட கர்வம் அவளுள் தளும்பியது. 

 

“மாலை வாங்கிட்டியா அஞ்சலி?” என்ற அர்ஜுன், அவள் கையிலிருந்து மாலையை பெற்றுக்கொண்டான். கோவிலினுள் பூஜை முடித்து, திருப்பி வழங்கப்பட்ட அர்ச்சனை தட்டைக்கூட அவனே வைத்திருந்தான். ஸ்வாமி திருவுருவத்தின் மீது சாத்தப்பட்டிருந்த மாலையையும் கையிலெடுத்துக்கொண்டவன், “அஞ்சலி வீட்டுக்கு போகும்போது ஸ்டூடியோல இந்த மாலையை நிலை படில மாட்டிடுவோம்” என்க, “உன் இஷ்டம் அஜூ” என்றாள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு வர, அவர்களை முன்னே விட்டு, தான் கைபேசியில் எதையோ பார்த்துக்கொண்டிருப்பது போல பின்னே நடந்தான், மதன். 

 

சிறிய மண்டபத்தில் மூவரும் சென்றமர, எதிரே இருந்த பலகாரக் கடையை பார்த்துக்கொண்டிருந்தாள், அஞ்சலி.

“அஜூ, எப்பவுமே அம்மா கூட இந்த கோவிலுக்கு வரும்போது எனக்கு ஏதாவது பலகாரம் வாங்கித் தருவாங்க. எனக்கு அதிரசம் வாங்கிட்டு வரியா?” என்று அவள் கேட்க, 

“வாங்கிட்டு வரேன்” என்ற அர்ஜுன், தனது கைகளில் இருந்த பொருட்களை தரையில் வைத்துவிட்டு எழ,

“இந்தா அஜூ” என்று பணத்தினை நீட்டினாள் அஞ்சலி.

முகம் மலர்ந்து இருந்தவன், நெற்றி சுருங்கி அவளை முறைத்துவிட்டு, அவள் கையிலிருந்த பணத்தை வாங்காமல் விருட்டென சென்றான்.

 

“என்னாச்சு மதன், அஜூ கோவமா போறான்?”

“கோவப்படாம? அம்பது ரூபா காசு கூட இல்லாமத்தான் இருக்கானா அவன்?”

“ஐயோ நான் எதார்த்தமா தான் கொடுத்தேன்…” என்றவள், தான் அறியாமல் செய்துவிட்ட பிழையை எண்ணி மனம் வருந்தினாள். அர்ஜுன் அதிரசம் வாங்கி வந்து கொடுக்க, அவனைக் கண்டு இவள் சிரிக்க, அவன் அமைதியாக சென்று அமர்ந்துகொண்டான்.

 

“அஜூ… இந்தா எடுத்துக்கோ?” என்று அதிரசத்தை நீட்டினாள்.

“வேண்டாம் நீ சாப்பிடு…”

“தெரியாம பண்ணிட்டேன்” என்றவள், உண்ணாமல் அதிரச பொட்டலத்தை மூடி வைக்க,

“சாப்பிடு அஞ்சலி, நீ காலைல சாப்பிட்டது அப்புறம் எதுவுமே சாப்பிடல, இதையாவது சாப்பிடு” என்று அவன் கூறியதும், முகம் மலர்ந்தவள், 

“அப்போ நீயும் எடுத்துக்கோ” என்றாள். ஒன்றினை எடுத்துக்கொண்டவன், மதனோடு பகிர்ந்துகொண்டான்.

 

மூவரும் காரின் அருகே செல்ல,

“என்னமா அஞ்சலி எப்படி இருக்க?” என்றபடி கஜேந்திரன் அவர்களின் எதிரே வந்து நின்றான்.

“ஸ்டூடியோ ஓபன் பண்ணியிருக்கன்னு கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள்!!” என்றான்.

“ஆமா சார், அப்பா தான் வச்சு கொடுத்தாங்க…”

“தலைவரு தலைவருதான்… சாமி கும்பிட்டுட்டு வரீங்களா?”

“ஆமா, நீங்க?”

“அது… என் ஆளு இந்த கோவில ரொம்ப பிடிக்கும்னு மெசேஜ் போட்டிருந்தா… அதான் சும்மா வந்துட்டு போகலாம்னு…” 

அவர் சிரித்துக்கொண்டு நெகிழ, மதனை அஞ்சலியும், அர்ஜுனும் ஒரு சேர முறைத்தனர்.

கான்ஸ்டபிள் வாங்கி வந்த அர்ச்சனை தட்டினை வாங்கிக்கொண்ட கஜா,

“எனக்கு ஒரு டவுட் அஞ்சலி” என்றான்.   

“என்னது?”

“ராஜஸ்தான்’ல கூட மாரியம்மனுக்கு கூழ் ஊத்துவாங்களா என்ன?”

மீண்டும் அஞ்சலியும், அர்ஜுனும் அவனைக் கண்டு முறைத்தனர்,

“ஆமா… ஆமா சார்… நாம அம்மனை கும்பிடற மாதிரி அவங்களும் கும்பிடுவாங்க… கோதுமை கஞ்சி ஊத்துவாங்க” என்று சமாளித்தாள்.

“ஓ!”

“ஏன் கேட்கறீங்க?”

“என் பேபி ராஜஸ்தானில இருக்கா. திருவிழா முடிச்சிட்டு தான் இங்க வருவாளாம்… அதான் கேட்டேன்…”

“சரிங்க சார், நான் கிளம்பறேன்” என்றுவிட்டு வண்டியில் ஏறிக்கொள்ள,

“அண்ணியை கேட்டதாக சொல்லுங்க” என்றுவிட்டு மதனும் ஏறிக்கொண்டான். 

 

வரும் வழி தோறும் அர்ஜுன் அமைதியாக வர, அவன் காயப்பட்டுவிட்டான் என்பதனை உணர்ந்து அஞ்சலி வருத்தம் கொண்டாள். வீட்டிற்கு சென்றதும், 

“அஞ்சலி, எனக்கு ரொம்ப அசதியா இருக்கு நான் வீட்டுக்கு கிளம்பறேன்” என்றான் அர்ஜுன்.

“சாப்டுட்டு…”

“இல்லை, எதுவும் வேண்டாம்… நீ உள்ள போ, நாங்க கிளம்பறோம்” என்றான் திடமாக.

அவள் தனது அறைக்குள் செல்லும் வரை காத்திருந்தவன், பிறகு கிளம்பிச் சென்றான். அவன் செல்வதை சாளரம் வழியே பார்த்திருந்தவளுக்கு, அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தனது கைகளை இதயம் போல் ஒன்று சேர்த்து, அதன் வழியே அவள் நோக்க, அவனோ ஒரு முறை கூட திரும்பாமல் மதனோடு பேசிக்கொண்டு சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!