Skip to content
Post Views: 50
ரிதம் 8
“தயக்கம் சார், அவங்க அப்பாவும் இறந்துட்டாரு. அந்த குடும்பத்தை இப்ப அவள் தான் பாத்துக்குறாள். தங்கச்சி இன்னும் படிச்சு முடிக்கல, அவளோட வருமானத்தில் தான் அந்த ஃபேமிலி ரன்னாகுது” என்றாள் ப்ரீத்தி.
Advertisement
“ஹோ” என்றவன், எதையோ சிந்தித்தான்.
“ஓகே, நீங்க சென்னைக்கு இதுக்காக வந்தீங்களா? இல்ல நேட்டிவ் சென்னை தானா?” என்று ரமேஷைப் பார்த்துக் கேட்டான்.
Advertisement
“இங்க தான் சார் வேலை செய்யுறேன்” என்று ஒரு பெரிய ஐ.டி கம்பெனியின் பெயரை கூறினான்.
Advertisement
“அப்ப சார் பெரிய பார்ட்டி தான்னு சொல்லுங்க? வீடு?” என்று இழுத்தான்.
Advertisement
“வளசரவாக்கத்துல சொந்தமா வீடு இருக்கு சார். மேல வாடகைக்கு விட்டு இருக்கோம். அப்பா ரிட்டராயிட்டாரு. அம்மா கிடையாது. இப்ப இவள் தான் எங்க குடும்பத்தைப் பார்த்துக்குறாள்” என்று கூறினான்.
“ஓகே, ப்ரீத்தி நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன். இப்பயும் உங்க தோழிக்கான இடம் என் பக்கத்துல காலியா தான் இருக்கு. அவங்க வந்தா அந்த வாய்ப்பைக் கொடுக்க நான் காத்துட்டிருக்கேன். அவங்க அப்பா இறந்துட்டாருன்னு சொன்னீங்கல்ல? ஐ அம் ஃபீலிங் பேட். ஒன்னு பண்ணுங்க, உங்க வீட்ல கூட்டிட்டு வந்து வச்சுக்கோங்க. பாதுகாப்புக்கு உங்க வீட்டு மொட்டை மாடியில் தங்க வச்சுக்கோங்க. என்கிட்ட கொஞ்ச நாள் பிராக்டீஸ் பண்ணட்டும். அப்புறம், படத்துல பாடுறதுக்கு சான்ஸ் கொடுக்கிறேன்” என்றான் கௌதம்.
“ஏன் சார்?” அவளுக்குப் புரியவில்லை.
“வந்தவுடனே கொடுக்க முடியாது ப்ரீத்தி. ஏன்னா அதுக்குன்னு சில ஃபார்மாலிட்டீஸ் இருக்கு. அவங்க பிராக்டீஸ்ல இல்லாம இருக்காங்க. மேடையில பாடுறதும், வீட்டு ஸ்டூடியோல பாடுறது, மியூசிக் ஸ்டூடியோல பாடுறது எல்லாம் ஒன்னு கிடையாது. மைக்கைப் பொறுத்து கூட குரல் மாறும். உங்க பிரண்டுக்கு நல்ல குரல் வளம் இருக்கு. நல்ல எதிர்காலமும் இருக்கு. அவங்க எதிர்காலத்தை மாத்த வேண்டியது என்னோட பொறுப்பு. ஆனா சினிமாவில் பாடுறது, மேடையில பாடுற மாதிரி கிடையாது. சுருதியும், தாளமும் துல்லியமா இருக்கிறது அவசியம். சிறிய பிழை கூட பதிவில் தெளிவாகக் கேட்கும். பாடலின் உணர்ச்சியை குரலில் வெளிப்படுத்தும் திறன் இருக்கணும். காதல், சோகம், மகிழ்ச்சி, கோபம் இப்படி எல்லா உணர்வுகளையும் குரல்ல கொண்டு வரணும்”.
அவன் என்னவோ தெளிவாகத் தான் பேசினான். ஆனால் அவளுக்குத்தான் எதுவுமே புரியவில்லை. அவளது முகபாவனையே அவளுக்கு எதுவும் புரியவில்லை என்பதை அவனுக்குத் தெரிய வைத்திருந்தது.
“நான் சொல்றது உங்களுக்குத் தெளிவா புரியலைன்னு நினைக்கிறேன். பட் நத்தாஷாவுக்குப் புரியும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் சொல்லும்போது அவங்க ஜாயின் பண்ணியிருந்தாலும் இதைத் தான் நான் பண்ணியிருப்பேன். என்னோட ட்ரூப் கிட்ட சொல்லி நான் சொல்லிக் கொடுக்கச் சொல்றேன். ஆனா அவங்களை இங்க கொண்டு வந்து உங்க பாதுகாப்புல வச்சுக்க வேண்டியது உங்களோட பொறுப்பு. உங்களால பண்ண முடியுமா”? என்று பேச்சை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.
தன் கணவனைப் பார்க்க, அவன் பார்வையால் எதையோ கூறினான்.
இருவரையும் மாறி மாறிப் பார்த்தவன்,
“அப்படி முடியாதுன்னு சொன்னா, என் பாதுகாப்புல என்னால வச்சுக்க முடியும். ஆனா உங்க பிரெண்ட் அதுக்கு சம்மதிப்பாங்களா?” என்று கேட்டான்.
“முடியும் சார், ஆனா…” என்று அவள் தயங்கினாள்.
“அதான் சார் சொல்றாருல்ல? நம்ம வீட்டுல மேல வாடகைக்கு இருக்கிறவங்களைக் காலி பண்ணிட்டு அவங்க குடும்பத்தையே இங்க கூட்டிட்டு வந்து வச்சுக்கலாம்” என்று முடித்தான் ரமேஷ்.
“ஆனா அவள் தங்கச்சிக்கு இன்னும் படிப்பு முடியலையே?” என்று அவள் கேட்டு வைக்க,
“மூணு வருஷத்துக்கு முன்னாடி உங்க பிரண்டுக்கே காலேஜ்ல சீட்டு வாங்கித் கொடுக்க முடியும்னு சொன்னேன், மறந்துட்டீங்களா? அப்பயே என்னால பண்ணமுடியும் போது, இப்ப என்னால் அவங்க தங்கச்சிக்கு வாங்கித் கொடுக்க முடியாதா? கூட்டிட்டு வாங்க பாத்துக்கலாம்” என்றான்.
“அவங்க அம்மா கொஞ்சம் பழமைவாதி தான். என்ன பண்ணுவாங்கன்னு தெரியல. ஆனா நானும் இவரும் சேர்ந்து போய் பேசிட்டு வரோம் சார். அந்த நேரத்துல ஒரு நம்பிக்கைக்காக அங்கிருந்து உங்களுக்கு போன் பண்ணா நீங்க எடுப்பீங்க தானே? நம்பர் என்கிட்ட இல்லை” என்றாள்.
“உங்ககிட்ட தான் ப்ரீத்தி என் நம்பர் இல்ல. ஆனா உங்க பிரெண்ட் கிட்ட இருக்கு. நீங்க அதை கேட்டுப் பாருங்க. அப்படி இல்லன்னு சொன்னாங்கன்னா, அப்புறம் என்னோட நம்பருக்குக் கால் பண்ணுங்க. இப்ப நோட் பண்ணிக்கோங்க” என்று கூறினான் கௌதம்.
“சரிங்க சார்” என்று தலையாட்டிவிட்டு அவனுடைய பத்து இலக்க எண்ணைக் குறித்துக் கொண்டாள்.
அவர்கள் விருந்தினர்கள் ஆயிற்றே, அதற்குள் அவர்களுக்குக் குடிப்பதற்குப் பானங்கள் கொண்டு வரப்பட்டது. அதை வாங்கிப் பருகியவர்கள், “சார் நீங்க குடிக்கலையா?” என்று கேட்டான் ரமேஷ்.
“ஒரு கான்செப்ட் இருக்கு ரமேஷ். நான் உங்களை அப்படி கூப்பிடலாமில்ல?” என்று கேட்க.
“தாராளமா சார்” என்றான் அவன்.
“கான்செப்ட் இருக்கும்போது கூல்டிரிங்க்ஸ் குடிச்சா த்ரோட் இன்ஃபெக்ஷன் ஆயிடும். அதெல்லாம் முடிச்சிட்டு, அதுக்கப்புறம் மொத்தமா ஐஸ்கிரீமே சாப்பிட்டுப்பேன்” என்று கண் சிமிட்டிக் கூறினான்.
“சில பேர் எவ்வளவு மேல போனாலும் அவங்க இயல்பு மாறாம இருப்பாங்கன்னு சொல்லுவாங்க சார். இன்னைக்கு நேர்ல பாக்குறேன்” என்றான் ரமேஷ்.
“என்ன ரமேஷ் இவ்வளவு புகழ்றீங்க? உங்க வைஃப் என்னைப் பத்தி அவ்வளவு சொல்லி வச்சிருக்காங்களா என்ன? நீங்க என்ன இப்ப தான பாக்குறீங்க? இதுக்கு முன்னாடி உங்க வைஃப் மட்டும் தானே பார்த்தாங்க?” என்று கேட்டான்.
“ஆமா சார், கல்யாணமான மூணு மாசம் மட்டும் தான் ரமேஷ் ரமேஷ்னு சொன்னாள். அதுக்கப்புறம் வாயிலிருந்து வந்த பெயர் எல்லாம் நத்தாஷா, கௌதம் இது ரெண்டும் தான். உங்களைப் பாக்கணும் பேசணும், நத்தாஷாவுக்கு வாய்ப்பு வாங்கித் கொடுக்கணும்னு கேட்டு கேட்டு, என் காதே பூத்துப்போச்சு சார்” என்றான்.
கௌதம் சிரித்தான். என்னதான் அவன் இலகுவாக அந்த இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தாலும், மனம் முழுவதும் நத்தாஷாவின் நினைவுகள் தான் அவனை ஆக்கிரமித்திருந்தது.
அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள்.
அவர்கள் அப்படிச் சென்றதும், கௌதமின் முகம் இருகிப்போனது. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள அவன் பெரும் பாடுபட்டான்.
அவர்கள் வெளியே சென்றதால், பாடிகார்ட்ஸ் உள்ளே வந்து “செல்லலாமா?” என்று கேட்டனர்.
“பைவ் மினிட்ஸ்ல வெளியே வரேன்” என்று கூறினான். பிறகு நன்றாக முகத்தை அழுந்தத் துடைத்துக் கழுவி விட்டுத் தான் வெளியில் வந்தான். மீண்டும் அவனுக்காகக் காத்திருந்த கும்பல் அவனை முற்றுகையிட்டது.
………..
“என்னடி உளறிட்டிருக்க?” என்று
கேட்டாள் நத்தாஷா.
“நான் பேசுறது உனக்கு உளர்ற மாதிரி இருக்கா? உன்கிட்ட உளர்றதுக்காக சென்னையிலிருந்து மதுரைக்கு ட்ரெயின் பிடிச்சு வந்து இருக்கேனா? நான் ஒன்னும் உளறல, உண்மையைத் தான் சொல்றேன். நான் சொல்றதைத்தான் நீ நம்ப மாட்டேங்குற. என் வீட்டுக்காரர் சொன்னா கூட நம்ப மாட்டியா?” என்று கேட்டாள்.
அவள் பார்வை ரமேஷைப் பார்க்க,
“ஆமாம்மா, ரொம்ப நல்ல மனுஷன். எவ்வளவு தங்கமா பழகுறாரு தெரியுமா? எனக்கே அவரை ரொம்ப பிடிச்சிருச்சு” என்றான் ரமேஷ்.
“யாராக இருந்தாலும் அவரைப் பிடிக்கும். அவர் அழகு மட்டுமல்ல, குணமும் அதுபோல” என்று ப்ரீத்தி கூற, நத்தாஷா முறைத்து வைத்தாள்.
“சரி சரி. நான் கேட்டதுக்கு முதல்ல நீ பதில் சொல்லு?” என்று கேட்டாள் ப்ரீத்தி.
“என்ன பதில் சொல்லச் சொல்ற? அம்மா, அப்பா வாழ்ந்த வீட்டை விட்டுட்டு எனக்காக அவ்வளவு தூரம் வரணும்னு சொல்றியா? இந்த குடும்பமே என்னை நம்பித்தான் இருக்கு. நான் பாட்டுக்கு பிராக்டீஸுக்கு போயிட்டேன்னா, சோத்துக்கு என்ன பண்றது?” என்று கேட்டாள்.
“அந்த பிராக்டீஸ் முடியிற வரைக்கும் சோத்தை நாங்க பாத்துக்குறோம்” என்று கூறினான் ரமேஷ்.
“அண்ணா, இந்த பேச்சு உங்க பெருந்தன்மையைக் காட்டுது. அப்படியெல்லாம் பொசுக்குன்னு எல்லாத்தையும் விட்டுட்டு வர முடியாது அண்ணா. அவள் படிப்பிருக்கு, வேலை இருக்கு, எல்லாத்தையும் விட்டுட்டு என்னால…” என்று உதட்டை மடித்துக் கடித்தாள்.
“எல்லாத்துக்கும் ஐடியாவை அவரே சொல்லிட்டாரு. நீ மட்டும் ஏதாவது சொல்லிட்டே இருந்தா என்னடி அர்த்தம்?” இருவரும் மாறி மாறி இப்படியே பேசிக்கொண்டு இருந்தார்கள்.
தேநீர் தயாரித்துக் கொண்டு வந்த அவளுடைய தாயார், அதை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு அமர்ந்து அவர்கள் பேச்சைக் கவனித்தார். சமையலறையில் இருக்கும் போதே அவர்களின் பேச்சு அவருக்குக் கேட்கத்தான் செய்தது.
“காலேஜ் சீட்டை உனக்கே வாங்கித் தரேன்னு சொன்னவரு, உன் தங்கச்சிக்கு வாங்கித் கொடுக்க மாட்டாரா? நான் கேட்கும் போது அவர் என்னை இப்படித்தான் கேள்வி கேட்டாரு” என்றாள் ப்ரீத்தி.
“அதெல்லாம் சரிப்பட்டு வராது ப்ரீத்தி. முதல்ல அப்பா இருந்தாரு, நான் எதைப்பத்தியும் யோசிக்கல. ஆனா இப்ப எல்லாரைப் பத்தியும் யோசிக்க வேண்டிய நிலைமையில இருக்கேன். இது எனக்காக மெனக்கெட்டுச் செலவு பண்ணி இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க. ஆனா என்னால இதை பண்ண முடியும்னு தோணல” வருத்தமாகக் கூறினாள் நத்தாஷா.
“ஏம்மா அப்படி எல்லாம் சொல்ற?” என்று ரமேஷ் கேட்க,
“அதெல்லாம் முடியும்” என்று ப்ரீத்தி அடம் பிடிக்க,
“வேண்டாம்” என்ற ரீதியில் நத்தாஷா நிற்க.
இப்படியே மாறி மாறிப் பேசிக் கொண்டிருக்க, அந்த இடத்தின் சலசலப்பைத் தன் பேச்சால் கட்டுப்படுத்தினார் நத்தாஷாவின் தாயார்.
“நீ கேட்டப்பயே நாங்க சம்மதிச்சிருந்தா இந்நேரம் உன் வாழ்க்கையே மாறியிருக்கும். ஆனா உன் வாழ்க்கையை நாங்க தான் மாத்திப் போட்டுத் தவறு பண்ணிட்டோம். இப்ப திரும்பவும் அதைச் சரி பண்றதுக்கு வாய்ப்பு வந்திருக்கு. இதைத் தவறவிட வேண்டாம் நத்தாஷா” என்றார்.
“அம்மா நீங்க என்ன சொல்றீங்க? ஓகேன்னா சொல்றீங்க? அப்பா வாழ்ந்த வீடு, அதை விட்டுட்டுப் போகச் சொல்றீங்களா?” என்று கேட்டாள் நத்தாஷா.
“ஆமா நான் தான் சொல்றேன். உன்னோட குரல் வளத்துமேல எனக்கும் உங்கப்பாவுக்கும் பிரமிப்பு இருந்தாலும், எல்லாரைப் போலவும் பத்தாம்பசலித்தனமா நினைச்சுட்டோம். உங்க அப்பாவுக்காக அன்னைக்கு உன்னை போக வேணாம்னு சொன்னது நான்தான். இன்னைக்கு உனக்காகப் போன்னு சொல்றதும் நான் தான். செத்தவங்க ஞாபகம் நம்ம மனசுல எப்பயும் இருக்கும். அது இந்த வீட்ல வாழ்ந்தால்தான் இருக்கும்னு அர்த்தம் கிடையாது. இறந்து போன உங்க அப்பாவுக்காக, உயிரோட இருக்குற உங்களுடைய எதிர்கால வாழ்க்கையைக் கெடுக்க முடியாது. இப்பயும் உன் வாழ்க்கையை விட்டுடாத”. அதைக் கூறும் போதே அவரது கண்கள் கலங்கிவிட்டன.
இதுவரை கணவன் கணவன் என்று இருந்துவிட்டார். இப்பொழுது மகள்களைப் பார்க்க வேண்டும் அல்லவா? முடிவெடுக்கும் பொறுப்பில் இப்பொழுது இருப்பது அவர்தான். முதலில் என்றால் கணவனிடம் கேட்க வேண்டும், குடும்ப கௌரவம் என்று பார்க்க வேண்டும். ஆனால் இப்பொழுது அந்த ஸ்தானம் அவருக்குத்தான் இருக்கிறது. அதனால் முயன்று பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டார். தன் மகளின் வாழ்க்கையில் ஏதோ ஒரு ஒளி பிறந்தால் அது நல்லது தானே?
“உங்களையும் தங்கச்சியையும் தனியா விட்டுட்டு நான் போக மாட்டேன்மா” என்றாள்.
‘அவங்களே ஒத்துக்கிட்டாலும் இவள் எதுக்கு இப்படிச் சொதப்புறாள்?’ என்று தன் தோழியை எண்ணி நொந்து கொண்டிருந்தாள் ப்ரீத்தி.
error: Content is protected !!