காதலும் கடத்தப்படும் – 35

காதலும் கடத்தப்படும் – 35
அடுத்த சில நாட்களில், நிகழ்ச்சியின் காணொளி வலைத்தளங்களில் பிரபலமாக, அர்ஜுனுக்கு பாடும் வாய்ப்புகள் சில தேடி வந்தன. திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கூட ஒன்று வந்தது. முடிந்தவரை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு தீவிரமாக உழைக்க தொடங்கினான். மதனும் உடன் துணை இருந்தான். வேதநாயகத்தை ஒரு முறை கட்சி அலுவலகத்தில் சந்தித்து, தன்னால் இனி ஓட்டுநர் பணியை தொடர முடியாமல் போனதைக் குறித்து வருத்தம் தெரிவித்தான். அவர் மனதார வாழ்த்தினார்.
Advertisement
எத்தனை அலுவல்கள் இருப்பினும், மனதினுள் அஞ்சலியின் நினைவு நீங்காமல் இருந்தது. அவளை ஒருமுறையேனும் காண வேண்டும் என்று ஏக்கம்கொண்டான். சில முறை ஸ்டூடியோவின் அருகே, யாரும் தன்னை அடையாளம் காணா விதம், அவளுக்காக காத்திருந்தான். ஒருமுறை அவளைக் காணும் பாக்கியமும் பெற்றான். கைகளை இதய வடிவாக்கி, அதன் வழியே கண்டவனுக்கு, கண்ணீர் பெருகியது. துயரம் தாளாமல் அவ்விடம் விட்டுச் சென்றான். அவள் வேண்டுமென்ற எண்ணம் ஆழமாக வேரூன்றிய போதும், ஏதோ ஓர் தயக்கம், தெளிவு பெற முடியாத குழப்பம் அவனை தடுத்தது. உள்ளூர யோசித்தான். குழப்பமே எஞ்சியது.
ஏறக்குறைய ஒன்றரை மாதங்களாக அர்ஜுனைக் காணாமல் அஞ்சலியும் மனம் உடைந்திருந்தாள். அவன் தன்னை சிறுமைப்படுத்திக் கொள்வதற்கான காரணம் புரியாமல் தவித்தாள். தான் எவ்வகையிலும் அவனை அவ்வாறு நினைத்ததில்லையே என்று மனம் வாதாடியது. செய்வதறியாது தவித்தாள். அவன் முன் சென்று நிற்க தயங்கினாள். அவ்வப்போது மதனோடு பேசினாள். அர்ஜுனின் நலனை விசாரித்துக்கொண்டாள். சில வாய்ப்புகள் அவனுக்கு சென்று சேர வழி செய்தாள். காதல், கட்டாயத்தின் பேரில் பிறப்பதில்லை என்று உணர்ந்தவளாய், அவன் போக்கிலேயே விட்டுவிட்டாள்.
Advertisement
Advertisement
ஓர் நாள் மாலை அவள் தனது அறையில் சிந்தனையில் தன்னை தொலைத்தபடி அமர்ந்திருக்க,
“அஞ்சலி” என்றபடி அறைக்குள் நுழைந்தார், வேதநாயகம்.
“அப்பா…”
Advertisement
“என்னமா ரொம்ப சோர்வா இருக்க? கொஞ்ச நாளாவே அப்படித்தான் இருக்க? உடம்புக்கு எதுவும்?”
தந்தை தன்னை கவனித்துக்கொண்டிருக்கிறார் என்று உணர்ந்தவளுக்கு உள்ளுக்குள் ஏதோ நெருடியது.
“ஒண்ணுமில்ல பா, கொஞ்சம் வேலை ஜாஸ்தி…”
“நான்தான் சொன்னேனேமா, ஒரு ஆள் போட்டுக்கலாம்னு…”
“இல்லைபா, முடிஞ்சளவு நானே பார்த்துக்கறேன்…”
“அப்புறம்..” என்றவர், சற்று யோசனையாகிப் போக,
“சொல்லுங்கப்பா” என்றாள், அஞ்சலி.
“ஒண்ணுமில்ல மா, உன் கல்யாணத்தை பத்தி என்ன முடிவு செய்திருக்க?”
அஞ்சலி திடுக்கிட்டுப்போனாள். காதல் எனும் அத்தியாயம் கருப்பு பக்கங்களாகி போன நிலையில், கல்யாணம் எனும் நினைப்பு என்றுமே அவள் மனதில் எழவில்லை.
“இப்போ எதுக்கு பா?”
“இல்ல மா, உனக்கும் வயசு ஏறிட்டே போகுது. எனக்கும் உடம்பு முடியாம போகுது. உன் கல்யாணத்தை நல்லபடியா முடிச்சு வைக்கணும்னு ஆசைப்படறேன்….”
“அப்பா…”
“கவலைப்படாத. போன தடவை மாதிரி இல்லாம, உன் விருப்பத்தோடு தான் நடக்கும். கல்யாணத்தை நிறுத்த, கடத்தல் நாடகமெல்லாம் வேண்டாம்மா…”
“அப்பா…” – அதிர்ந்துபோனாள், அஞ்சலி.
“என்கிட்ட சண்டை போட்டிருக்கலாம்?! கல்யாணத்துல விருப்பமில்லைனு உன் சித்தப்பன் வீட்ல போய் உட்கார்ந்திருக்கலாம்?! வேற ஏதாவது நீ செஞ்சிருக்க கூடாதா? எனக்கு உயிரே போயிடுச்சு… நான் ஏதோ தப்பு பண்ணியிருக்கேன்னு அப்பத்தான் தோணுச்சு. என் பொண்ணு என்கிட்டே இருந்து தப்பிக்க முயற்சி செஞ்சிருக்காங்கற எண்ணமே என்னை அறுத்துடுச்சு. இந்த விஷயமெல்லாம் எனக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடியே தெரிய வந்தது. ஆனா உன்னை கேள்வி கேட்க முடியல. ஏன்னா அதுக்கான தகுதி எனக்கில்லைன்னு தோணுச்சு… நீயா உண்மைய சொல்லுவன்னு எதிர்பார்த்தேன், அதுவும் நடக்கல… அதான் நானே கேட்கறேன்…”
“என்னை மன்னிச்சுடுங்க பா…” என்று அவரது கைகளை பற்றிக்கொண்டு அழுதாள்.
“யாரையாவது விரும்பினியா அஞ்சலி? அந்த கவுன்சிலர் பையன் மாட்டிக்கிட்டான்…”
“அப்பா… நான் உண்மையெல்லாத்தையும் சொல்லிடறேன். ஆனா…”
“ஆனா??”
“நீங்க கோவிச்சுக்க மாட்டீங்கல்ல?”
தந்தையின் அரவணைப்பு அவளுக்கு மிகவும் தேவைப்பட்டது.
“இல்ல மா, சொல்லு” என்று அவர் அவளது தலை கோதினார்.
“கவுன்சிலர் பையன் என்னை விரும்பறதா ரொம்ப நாள் மெசேஜ் பண்ணி தொந்தரவு பண்ணான். கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி ‘உன்னை கடத்திட்டு போய் கல்யாணம் செய்துக்கபோறேன்’னு மெசேஜ் பண்ணியிருந்தான். எனக்கு அப்போ நீங்க ஏற்பாடு செய்திருந்த கல்யாணத்துல இருந்து தப்பிக்க வேற வழி தெரியாம, ‘என்னை கடத்திட்டு போற மாதிரி ஏற்பாடு பண்ணிட்டு நாம் எங்கயாவது போயிடலாம்’னு அவன் கிட்ட சொன்னேன். கடத்தல் செய்யறவங்க வேண்டாம், வேற யாரவது அப்பாவிகளா ஏற்பாடு பண்ணுனு சொன்னேன். நானே பேசி டீல் பண்ணிக்கறேன்னு சொல்லி, செயின்ட் தாமஸ் மலைக்கு வந்து என்னை கூட்டிட்டு போய்டுனு சொன்னேன். அப்போ தான் அவன் அஜு, மதனை ஏற்பாடு செய்திருந்தான். ஒரு வண்டி ஏற்பாடு செய்துகொடுத்தான். அவங்களும் என்னை கடத்திட்டு போனாங்க. அந்த மலைக்கு போய் கால் கடுக்க காத்திருந்தேன். அந்த கவுன்சிலர் பையன் வரல. திரும்பி வரவும் விருப்பமில்லை. அர்ஜுன் வேற, ‘நான் இந்த மாதிரி தப்பு செய்யற ஆள் இல்லை. காசுக்கு தெரியாம இப்படி செஞ்சுட்டேன். உன் வீட்டுக்கு கொண்டுபோய் விட்டுடறேன்’னு ரொம்ப இம்சை பண்ணான். அப்போ அவனுக்கு நீங்கதான் என் அப்பான்னு தெரியாது. நான் என்னை அவனோட வீட்டுக்கு கூட்டிட்டு போக சொன்னேன். வேற என்ன செய்யறதுன்னு தெரியாமத்தான் அப்படி சொன்னேன். அவனும் என்னை தனியா விட பயந்து கூட்டிட்டு போனான். திரும்பத்திரும்ப என் விவரத்தை கேட்டுட்டே இருந்தான். நான் சொல்லல. அவங்க ரெண்டு பேரும் என்னை கவனிச்சுக்கிட்ட விதத்துல எனக்கு அவங்க மேல நம்பிக்கை வந்தது. நானும் தைரியமா தங்கினேன். அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கும்போது தான் கோவா போய்டலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள கஜா எங்களை பிடிச்சுட்டான்…”
“என்னமா சொல்ற? அஞ்சலி நீயா?”
“என்ன மன்னிச்சுடுங்க பா” என்று கண்ணீர் வடித்தாள்.
“அஞ்சலி அந்த கவுன்சிலர் பையன் மேல சில கேஸ் இருக்குமா…”
வேதநாயகம் பதறினார்.
“அப்பா எனக்கு அவன் மேல விருப்பமெல்லாம் இல்லை. அவனை வச்சு இந்த கல்யாணத்திலேர்ந்து தப்பிச்சு போய்டலாம்னு நினைச்சேன். அந்த மலைக்கு போனதும், அவன் என்னை கூட்டிட்டு போறதாத்தான் பிளான். மும்பாய்க்கு டிக்கெட் போட சொல்லியிருந்தேன். அங்க போனதும் அவன்கிட்டேர்ந்து தப்பிச்சு நான் கோவா போய்டலாம்னு நினைச்சேன்…”
அவரின் பதட்டம் அவளுக்கு அர்ஜுனின் பதட்டத்தை நினைவூட்டியது… ‘நீ அவசியம் போகத்தான் வேணுமா?’ என்று அவன் கவலையாக கேட்டது, மீண்டும் அவளது காதில் ஒலித்தது.
“எவ்வளவு பெரிய காரியம் செய்ய துணிஞ்சுட்ட? அப்படி என்ன அஞ்சலி அந்த கல்யாணத்துல பிரச்சனை?” என்றவர் கண்கள் கலங்கினார்.
“மன்னிச்சுடுங்க பா… எனக்கு அந்த மாப்பிள்ளையை சுத்தமா பிடிக்கல. கல்யாணம் முடிவாகி அவன் என்கிட்ட பேச ஆரம்பிச்சதும், உடனே அருவருப்பான விஷயத்தை தான் பேசினான். யாரு என்னனு பேசி பழகல. புரிஞ்சுக்கல. அதுக்குள்ள என்கிட்ட அவன் எல்லை மீறி பேசினது ரொம்ப அருவருப்பா இருந்தது. நான் பேசறதை குறைச்சு, மெசேஜ் பண்ணேன். அதுலயும் அசிங்கமா… இப்படி பேசறது எனக்கு பிடிக்கலைனு சொன்னேன். ‘என்கூட தான் உனக்கு கல்யாணம் ஆகப்போகுதுன்னு மறந்துடாத, என் இஷ்டப்படி தான் இருப்பேன், கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு இருக்கு’னு மிரட்டினான்… ரொம்ப கொச்சையா பேசினான்… என்னால இதுக்குமேல சொல்ல முடியல பா” என்றவள், குலுங்கிக்குலுங்கி அழத்தொடங்கினாள்.
அவளது கைகளை பற்றி, கண்களைத் துடைத்தவர்,
“ஏன்மா என்கிட்ட சொல்லல?” என்றார்.
“அவங்க பெரிய இடம். இந்த கல்யாணம் நின்னு போனா, உங்களை ஏதாவது செஞ்சுடுவாங்களோன்னு பயமா இருந்தது. நானே வீட்டை விட்டு போனா, உங்களுக்கு தலைகுனிவு. அதான் இந்த கடத்தல் நாடகம்…”
“என்ன பண்ணிடுவானுங்க என்னை? அரசியலை விட்டு போக வச்சிருப்பாங்க. போனா போகட்டும்… உனக்கு ஏதாவது ஆகியிருந்தா, நான் என்ன ஆகியிருப்பேன்?!”
அவள் அவர் முகத்தினை காண,
“என்ன பார்க்கற அஞ்சலி?! ‘அப்போ இந்த மாதிரி நீங்க பேசியிருந்தா எல்லாத்தையும் தைரியமா சொல்லியிருப்பேன்’னு தோணுதா?” என்றார், பரிதாபமாக.
“அப்பா…”
“உண்மைதான்மா, நான் ஒரு அகம்பாவத்துல தான் இருந்தேன். உன் கல்யாணத்தை வச்சு என்னோட அரசியல் எதிரிகளை அழிக்கணும்னு நினைச்சேன்…”
“அப்பா…” – பதறினாள் அஞ்சலி. அவரது முகம் இறுகிப்போனது.
“உன் அம்மா செத்தது, இந்த உலகத்தை பொறுத்தவரை ஆக்சிடென்ட். ஆனா அது எனக்கு வச்ச குறி. பாவம் அவ பலியாகிட்டா…”
“என்னப்பா சொல்றீங்க?” – அழத்தொடங்கினாள், அஞ்சலி.
“ஆமா, அது ஒரு பழைய பகை. மினிஸ்டரா இருந்தபோது, எதிர்கட்சியில இருந்த ஒரு எம்.எல்.ஏ.வோட கம்பெனிக்கு சீல் வைக்க வேண்டியதாயிடுச்சு. அதுல அந்த ஆளுக்கு பெரிய நஷ்டம். என்கிட்ட பேசிப்பார்த்தான், நான் பணியல. பயமுறுத்தினான், நான் அசரல. ஆட்சி மாறினதும் என்னை பழிதீர்க்க நினைச்சான். பாவம் உன் அம்மா… பலியாயிட்டா. இந்த பிரச்சனை நடக்கும்போது தான் உன் சித்தப்பா அந்த கட்சிக்கு போனான். அதான் நான் ரொம்ப கோவப்பட்டு அவனோட சண்டை போட்டேன். பழைய பகையும், கோவமும் கோவமும் இன்னும் மனசுல இருக்கு. உனக்கு முடிவான மாப்பிள்ளையோட உனக்கு கல்யாணம் நடந்தா அவனை நான் வேட்டையாடியிருக்க முடியும். அதான்…” என்றவர் ஆழ்ந்தபெருமூச்சு எடுத்தார்.
சில நொடிகள் அமைதிக்குப் பிறகு, அவரே தொடர்ந்தார்.
“போனது போகட்டும். அவனை பழிதீர்த்தா மட்டும் உன் அம்மா திரும்பி வந்துடவா போறா?” என்று அவர் கூற, அஞ்சலி மெலிதாய் சிரித்துக்கொண்டாள். தந்தையின் இந்த மாற்றம் அவளுக்கு வாழ்நாள் ஆசையாக இருந்தது.
“அஞ்சலி, நீ குடும்பம் குழந்தைனு சந்தோஷமா வாழறத பார்க்க ஆசைப்படறேன். எல்லா தகப்பனுக்கும் இருக்கற ஆசை தான். உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கையை அமைச்சு தரேன். உன் மனசுல உள்ளதை சொல்லு. இந்த உலகத்துல நீ எதை ஆசைப்பட்டாலும் அதை நான் நிறைவேத்தறேன்”
அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. பாவம், என்னவென்று சொல்வாள். அவளது மன வானில் மிளிர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் என்றோ தரையில் விழுந்து பொசுங்கிவிட்டது. உயிர்ப்பின்றி வெறும் உயிரோடு வாழ்பவள் கருகிக் போன கனவுகளை என்னவென்று சொல்வாள்?!
“நீ யாரையாவது விரும்பறியா அஞ்சலி?”
‘இல்லை’ என்று தலையாட்டினாள். கன்னத்தில் கண்ணீர் வழிந்தது. அதனை துடைத்தவர்,
“ஏன் அழற அஞ்சலி?” என்றார், கவலையாக.
‘ஒன்றுமில்லை’ என்று மீண்டும் தலையாட்டினாள்.
அவளது தலையைக் கோதியவர், மகளின் வாட்டத்தை படிக்க முயன்றார்.
“என்னாச்சு மா?”
“உங்களுக்கு என் மேல கோவமா?”
“இல்லை அஞ்சலி. உன் மேல எனக்கு எந்த கோவமும் இல்லை. எனக்கு உன் சந்தோஷம் மட்டும் தான் முக்கியம்… நான் மாப்பிள்ளை பார்க்கவா?”
அப்பாவின் பிரியத்திற்காக, அப்பாவின் வார்த்தைக்காக, அப்பாவிற்காக, “சரி” என்றாள்.
தனது அறைக்கு திரும்பியவர், செயலாளரை அழைத்தார்.
“நம்ம ஜோஸியரையும், கல்யாண தரகரையும் வரச்சொல்லு”
“அய்யா! ரொம்ப சந்தோஷம், சீக்கிரமே அவங்கள வர வைக்கிறேன்…” என்ற செயலாளர், வேதநாயகம் முகத்தில் மகிழ்ச்சியற்று இருப்பதைக் கண்டு கவலைகொண்டார்.
“அய்யா, ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?”
“பொண்ணு மனசுல என்ன ஓடுதுனு புரியல. அவ முகமே சரியில்லை. ‘நீ விரும்பறவன கட்டி வைக்கறேன்’னு கூட சொன்னேன். அப்படி எதுவும் இல்ல’னு சொல்லிட்டா”
“அது எவ்வளவு பெரிய விஷயம்! அதுவும் இந்த காலத்துல…”
“அதுக்கில்ல… அர்ஜுனை கைகாட்டுவான்னு நினைச்சேன்…”
“அந்த பயலா?”
“ஏன் அவனுக்கு என்ன? நல்லா பொறுப்பான பையனா இருக்கான். நல்லா வளர்த்திருக்காங்க அவனோட அப்பா அம்மா. உழைக்கிறான். நிச்சயம் ரொம்ப பெரியாளா வந்துடுவான்…”
“இருந்தாலும் வசதி இல்லையே…”
“என்ன பெரிய வசதி? எனக்கு கல்யாணம் ஆகும்போது நான் கட்சில போஸ்டர் ஒட்டிக்கிட்டு இருந்தேன். கைல காலணா கிடையாது. என்னையும் ஒரு மனுஷனா நினைச்சு கல்யாணம் செஞ்சு, பொண்ணை பெத்துக் கொடுத்து, அடிச்சாலும் புடிச்சாலும் பொறுத்துப்போய், கஷ்டமோ நஷ்டமோ கூடவே நின்னு, என்னையும் என் பொண்டாட்டி உயர்த்தலையா? இன்னைக்கு அந்த பையன் கிட்ட ஒண்ணுமில்லாம இருக்கலாம். ஆனா அவனுக்கு எல்லாமே தேடி வரும். நல்ல பையன், உண்மையா இருக்கான்… ஒரு தடவ சிகரெட் கொடுத்தபோது, ‘வேண்டாம் சார், அஞ்சலிய கடத்தும்போது அந்த வண்டில சிகரெட் ஸ்மெல் வந்ததை தாங்கிக்க முடியாம, முகத்தை சுழிச்சா, அன்னைக்கே சிகரெட் புடிக்கறதை விட்டுட்டேன்’னு சொன்னான்… இந்த மாதிரி அக்கறையும் பாசமும் தான் என் பொண்ணுக்கு வேணும்” என்றவர், சாய்வு நாற்காலியில், கண்களை மூடி ஏதோ யோசனையில் மூழ்கிப்போனார்.
