Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 36

 

காதலும் கடத்தப்படும் – 36

தங்களது யூடியூப் சேனலில் காணொளி பதிவிட்டு சில காலம் ஆகியிருந்த நிலையில், குழுவினரின் உந்துதலால் ஒரு பாடல் பதிவு செய்ய, ஸ்டூடியோவில் ஏற்பாடாகியிருந்தது. அர்ஜுனிடம் பேசுவதை அவள் அறவே தவிர்த்திருந்த காரணத்தால், மதனை அழைத்து அர்ஜுன் என்று வர இயலும் என்று அறிந்துகொண்டு, அதே நாளில் அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தாள்.



Advertisement

 

குழுவினர் அனைவரும் வந்திருக்க, மதன் அர்ஜுன் வருகைக்காக காத்திருந்தனர். வெகு நாள் கழித்து ஒன்று கூடியதால் அனைவரும் பேசிக்கொண்டிருக்க, அஞ்சலி மட்டும் பரிதவிப்போடு காணப்பட்டாள். சாளரத்தின் வழியே வெளியே அடிக்கடி பார்த்தபடி இருந்தாள். அர்ஜுனின் முகம் காணும் ஆசை அவளை வாட்டியது. அர்த்தமற்ற ஆசை என்று அவள் அறிந்திருந்த போதிலும், அவளது மனம் அமைதி இழந்து தவித்தது. 

 

Advertisement

கதவினை திறந்துகொண்டு அர்ஜுனும், மதனும் உள்ளே நுழைய, அர்ஜுனின் முகத்தினைக் கண்ட நொடியில் அவளது கண்கள் குளமாகிப் போயின. கால்கள் தளர்ந்து போவதாக உணர்ந்தாள். எதையேனும் பற்றிக்கொள்ள தவித்தாள். அருகிலிருந்த மேசையை பற்றிக்கொண்டு சுதாரித்துக்கொண்டாள். 

Advertisement

 

அர்ஜுனை அனைவரும் சூழ்ந்துகொள்ள, அவனும் முகம் மலர்ந்து அனைவரோடும் உரையாடினான்.

“பிசியா இருக்க சரி, அதுக்குன்னு சாப்பிட கூடவா நேரமில்லை உனக்கு?” என்றாள், குழுவில் ஒருவள்.

Advertisement

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே…”

“கன்னம் ஒட்டிப்போய் இருக்கு. அதை மறைக்கத்தான் தாடி வளர்க்கறியா? இதென்ன கண்ணெல்லாம் கருவளையம்? முடி கூட சரியா சீவாம… என்ன அர்ஜுன்?”

அவள் கூற, அவன் மெலிதாய் சிரித்துக்கொண்டான். அப்பெண் கூறியதைக் கேட்டு கண்களை துடைத்துவிட்டு பார்த்தாள், அஞ்சலி. அவன் உடல் இளைத்துப் போயிருந்தான். அவள் மனம் வருந்தியது. அஞ்சலி தன்னை காண்பதைக் கண்டவன், அவள் தனக்காக வருந்துகிறாளோ என்று கவலை கொண்டான். 

“அது… நேத்து நைட்டு ஒரு ரெக்கார்டிங் இருந்தது… தூங்க நேரமில்லை…” என்றான் அர்ஜுன், அப்பெண்ணிடம்.

“செலிபிரிட்டி ஆயிட்ட அர்ஜுன், பெர்சனாலிட்டி ரொம்ப முக்கியம்…”  

“ம்ம்…” என்று மீண்டும் மெலிதாய் சிரித்துக்கொண்டான்.

 

பாடல் ஒத்திகை செய்யப்பட்டது. அஞ்சலி எதுவும் பேசாமல் அமைதியாக நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தாள். அஞ்சலியின் முகம் காண முடியாமல் தவித்தான். அவளது மனவாட்டம் அவனுக்கு விளங்காமல் இல்லை. இருப்பினும் யாரும் அறியா வண்ணம், தனது உணர்வுகளை மறைத்துக் கொண்டான்.

 

ஒளிப்பதிவு முடிந்து, குழுவினர் கிளம்ப, ரெக்கார்டிங் எஞ்சினியரோடு அர்ஜுன் மும்முரமாக பேசிக்கொண்டிருக்க, வெளியே படிக்கட்டு இறங்குமிடத்தில் நின்றபடி இரும்புக் கம்பிகளின் வழியே சாலையை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள், அஞ்சலி.

 

“அஞ்சலி…”, என்றபடி அவள் அருகே வந்து நின்றான், மதன்.

“மதனா, எப்படி இருக்க?” என்றாள் அஞ்சலி, புன்முறுவலோடு. அவளது முகத்தினைக் கண்டவன், சற்று முன் அவள் அழுதிருக்கக்கூடும் என்று புரிந்துகொண்டான்.

“இருக்கேன் அஞ்சலி… நீ?”

“ம்ம்…”

“அஜூ ஏன் இவ்வளவு இளைச்சு போயிருக்கான் மதனா?”

உண்மையை கூறமுடியாமல் தவித்த மதன்,

“வேலை ஜாஸ்தி, அலைச்சல் ஜாஸ்தி… அதான்…” என்றான்.

“நல்லா பார்த்துக்கோ அஜூவை. பார்க்கவே மனசுக்கு என்னவோ போல இருக்கு. உழைக்கறதுக்கு தகுந்த ஓய்வு வேண்டாமா? சாப்பிட வேண்டாமா?”

“நான் பார்த்துக்கறேன் அஞ்சலி, நீ கவலைப்படாத…”

“அப்புறம் அந்த சிங்கப்பூர் கான்சர்ட், ஓகே ஆயிடுச்சா?”

“ம்ம், இன்னைக்கு அந்த ஆபிஸுக்கு போய் கையெழுத்து போட்டுட்டு தான் வந்தோம். அதான் லேட் ஆயிடுச்சு…”

“ரொம்ப சந்தோஷமா இருக்கு மதனா. உலகமே அஜூவை கொண்டாடப்போகுது…” என்றவள், எங்கோ வெறிக்கத் தொடங்கினாள்.

 

ஏதோ யோசனை வந்தவளாய்,

“நேத்து நீ போன் பண்ணியிருந்தியா? மூணு மிஸ்ட் கால் பார்த்தேன்… சாரி எடுக்க முடியல…”

“பரவால்ல அஞ்சலி, இன்னைக்கு வரதுக்கு கொஞ்சம் லேட் ஆனா ஆகும்னு சொல்லத்தான் போன் பண்ணியிருக்கேன்…”

“ம்ம்… ஏன் எடுக்கலைனு கேட்கமாட்டியா…”

“??”

“நேத்து பொண்ணு பார்க்க வந்திருந்தாங்க மதனா…”

அவள் கூறியதைக் கேட்டதும் அவனது நெஞ்சம் படபடத்தது. 

“அஞ்சலி, என்ன சொல்ற?”

“ஆமா மதனா… அஜூ தான சொன்னான், ‘உன் அப்பாகிட்ட போ, குடும்பத்தோட சந்தோஷமா இரு’னு. அதான்… என் குடும்பத்துக்கு இப்போதைக்கு சந்தோஷமா இருக்க என் கல்யாணம் தான் தேவைப்படுது. சரி’னு சொல்லிட்டேன்…”

“அஞ்சலி…” – என்ன கூறுவது என்று புரியாமல் தவித்தவன், இதை அறிந்தால் அர்ஜுன் மனமுடைந்து போவான் என்று வருந்தினான். எத்தனை வலிகளுடன் அஞ்சலி இதற்கு சம்மதித்திருக்க வேண்டுமென்ற எண்ணம் அவனை மேலும் துக்கப்படுத்தியது.

 

“அஞ்சலி, கல்யாணம் முடிஞ்சும் நீ ஸ்டூடியோக்கு வருவியா? உன்னை வந்து பார்க்கலாமா?”

“இல்லை மதனா… அமெரிக்கா போயிடுவேன்…”

“அஞ்சலி…”

“ஸ்டூடியோ இருக்கும், சேனலும் இருக்கும். உங்க எல்லாருக்கும் நேரம் கிடைக்கும்போது பாட்டு ரெக்கார்டிங் பண்ணுங்க. அங்கிருந்து என்னால என்ன உதவி செய்ய முடியுமோ செய்யறேன்…”

மதன் தாங்கமுடியாமல் அழத் தொடங்கினான்.

“மதனா என்னது இது, சின்ன குழந்தை மாதிரி?”

“மனசை கல்லாக்கிட்டு எப்படி இதுக்கு சம்மதிச்ச?”

“வேற நான் என்ன பண்ணட்டும்? அந்த மாப்பிள்ளை பையனை ஏமாத்தறேனே’னு குற்ற உணர்ச்சி ஒரு பக்கம். அஜூவை மறக்க முடியாம… முடியல மதனா… எதுக்குடா அன்னைக்கு என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போனீங்க? அப்படியே என்னை ரோட்ல விட்டுட்டு போயிருக்க வேண்டியது தான? இன்னைக்கு என்ன பண்றதுனு தெரியாம தவிக்கிறேன் மதனா. என்னமோ என்னால பேரு வந்தது, புகழ் வந்ததுன்னு என்னென்னமோ சொல்றான். எனக்கு வாழ்க்கையே கிடைச்சது அவனலாதான்னு ஏன் அவனுக்கு புரியல. எதுவும் புரியாம முட்டாள் தனமா இருந்த எனக்கு, அப்பாவோட அருமையை புரியவச்சு, குடும்பத்தை ஒன்னு சேர்த்து… இதெல்லாம் கடவுளால கூட முடியாத காரியம். அதை எவ்வளவு சுலபமா பண்ணிட்டான். என் வலிய நான் சொல்லாமலே புரிஞ்சுக்கிட்டான். என்னை ரொம்ப சுலபமா மீட்டெடுத்தான். எதுக்கு இதெல்லாம் செஞ்சான்? இன்னும் பெரிய வலிய கொடுக்கத்தானா? அப்படியே அன்னைக்கு விட்டுட்டு போயிருந்தா, நானும் எங்கயாவது போய் தொலைஞ்சிருப்பேன்…”

“அஞ்சலி ப்ளீஸ் இப்படி பேசாத…”

“முடியல மதனா” என்றவள் கலங்க, மதனும் அழ, சில நிமிடங்களில் அமைதியானவள், அவனது கண்களை துடைத்துவிட்டு,

“சாரி மதனா, யாருகிட்ட சொல்லி அழறதுன்னு தெரியாம உன்கிட்ட கொட்டிட்டேன்… அழாத மதனா” என்றவள், அவனது கண்ணீரை துடைத்துவிட்டாள். 

 

இருவரும் அமைதியாக நின்றிருக்க, வெளியே வந்த அர்ஜுன்,

“மதனா கிளம்பலாமா?” என்றான்.

‘சரி’ என்று தலையாட்டிய மதன்,

“வரேன் அஞ்சலி” என்றுவிட்டு படியிறங்க, மெல்ல இறங்கி அவளை கடந்து சென்ற அர்ஜுன், நின்று,  ஒரு முறை அவளை பார்த்தான். அவளும் அவனை நோக்கினாள்.

“போயிட்டு வரேன், அஞ்சலி” என்றான் குரல் தழுதழுக்க.

மெலிதான புன்னகையோடு அவள் ‘சரி’ என்று தலையாட்டினாள். இவனும் பதிலுக்கு சிறிய புன்னகையை சிந்திவிட்டு, விறுவிறுவென கீழே இறங்கிச் சென்றான். 

 

அர்ஜுனும், மதனும் சற்று தூரம் அமைதியாக நடந்து சென்றனர். அர்ஜுன் அடிக்கடி மதனின் முகத்தைக் கண்டான். அவனது முகத்தில் சோகம் அப்பியிருந்தது.

“மதனா…”

“அந்த புள்ளைக்கு கல்யாணமாம்…”

“நீங்க பேசினது எல்லாத்தையும் கேட்டேன்”

அதிர்ந்து நின்ற மதன், 

“கேட்டும் அந்த புள்ள எப்படியோ போகட்டும்னு வந்துட்டியா?” என்றான், கோவமாக.

“மதனா… அவ அமெரிக்கா போகப்போறா… எனக்கு மேப்’ல கூட அது எங்க இருக்குனு தெரியாது…”

“அந்த சாம் உன்னை நல்லா குழப்பிட்டான்…”

“மதனா…”

“வேண்டாம் அஜூ. இனிமேல் இதைப்பத்தி பேச வேண்டாம். ஒரு பொக்கிஷத்தை கை நழுவ விடற. இது உனக்கு புரியாம இல்லை. இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல…” என்றவன், அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாகிப் போனான். 

 

*******************************************************************

 

காற்றோடு பறந்து செல்லும் 

திசை மறந்த இறகைப்  போல

மெல்ல மெல்ல எனை இழந்து 

எங்கோ நிதம் தொலைகின்றேன்… 

 

கை நிறைய சேர்த்த காதல்

விரல் இடுக்கில் கசிகிறது…

என் உயிரினில் சரி பாதி 

கண்ணீரில் கரைகிறது…  

 

விழியின் பார்வை மறக்குமோ?! 

மொழிகளும் தான் மறையுமோ?! 

சிரித்து சேர்த்த கோடி நினைவு,  

தடையுமின்றி தொலையுமோ?! 

 

என் வானில் ஒரே நிலா 

அது இனி எனக்கில்லை 

தோளின் மீது பட்டாம்பூச்சி 

பறந்துவிட தடையில்லை 

சிரிக்கும் பூக்களுக்கு 

என் மனம் புரியவில்லை 

வழித்துணை வெற்றிடமாக 

இருந்தும் என்னுள் உயிரில்லை…

 

****************************************************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!