காதலும் கடத்தப்படும் – 38

காதலும் கடத்தப்படும் – 38
Advertisement
மருதநாயகம் காரில் ஏறி கிளம்ப, வாயில் வரை நடந்து செல்கையில், ஒரு நொடி நின்ற சாம்,
“அர்ஜுன் என்னை மன்னிச்சுடு” என்றான்.
அர்ஜுனும், மதனும் அவன் எதிரே நிற்க,
Advertisement
“எதுக்கு சார் மன்னிப்பெல்லாம் கேட்கறீங்க?” என்று எரிச்சலாக வினவினான், மதன்.
Advertisement
“அன்னைக்கு ஏதேதோ பேசிட்டேன். அர்ஜுனை பத்தி சரியா புரிஞ்சுக்காம காயப்படுத்திட்டேன்…”
“இப்போ மட்டும் புரிஞ்சுடுச்சா?”
“அஞ்சலி புரிய வச்சுட்டா…”
Advertisement
இருவரும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.
“அர்ஜுன், உனக்கு நிறைய பாடற வாய்ப்பு கிடைச்சதும் நீ பிசி ஆயிட்ட. ‘அர்ஜுன் தான் ரொம்ப பிசி ஆயிட்டானே, அவன் இனிமேல் நம்ம சேனல்ல எங்க பாடப்போறான்? அவனோட இடத்துல வேற ஒரு சிங்கர வச்சு நாம நம்ம சேனலை நடத்தலாம்’னு அஞ்சலிகிட்ட சொன்னேன். அதுக்கு அஞ்சலி, ‘அவன் அந்த மாதிரி ஆள் இல்லை, நிச்சயம் நம்ம சேனல்ல பாடுவான். பாவம் சாப்பிட தூங்க கூட நேரமில்லாம உழைக்கிறான். அவனுக்கு எப்போ நேரம் கிடைக்குதோ அப்போ வந்து பாடட்டும்’னு சொன்னா. எனக்கு அந்த பதில் கொஞ்சம் மனசுக்கு நெருடலாயிடுச்சு. கோவம் கூட வந்துடுச்சு. ‘அவனுக்காக நாங்க காத்துட்டு இருக்கணுமா? எங்களுக்கும் வாழ்க்கையில முன்னேறணும்னு எண்ணம் இருக்காதா?’னு கேட்டேன். அப்போதான் சொன்னா – ‘நீ அஜூவை தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்க சாம். அவன் சுயநலமா, தான் மட்டும் மேல வந்தா போதும்னு நினைக்கற ஆளில்லை. சிங்கப்பூர்ல ஒரு கான்சர்ட்ல அவனை பாட சொல்லி கூப்பிட்டிருக்காங்க. ஆனா வேற ட்ரூப். இவன் முடியாது, எங்க ட்ரூப் தான் ப்ரோக்ராம் பண்ணனும்னு பேசி, அவங்க மறுத்து, கடைசியா, நீயும், நம்ம வயலினிஸ்ட்’ம் மட்டுமாவது அந்த ப்ரோக்ராம்ல இருக்கணும்னு அவன் ரொம்ப கேட்டதால, அவங்களும் சம்மதிச்சுட்டாங்க. கூடிய சீக்கிரம் உனக்கு அந்த கான்சர்ட் சம்மந்தமா ஃபோன் வரும். நீயும் அவன்கூட சிங்கப்பூர் போகப்போற. அவனை தப்பா நினைக்காத சாம். ப்ளீஸ்’னு சொன்னா. அவ சொன்ன மாதிரி ஃபோன் வந்தது. அப்பத்தான் என்னோட தப்பே புரிஞ்சுது. உண்மைய சொல்லனும்னா உனக்கு நிறையவே திறமை இருக்கு அர்ஜுன். வாய்ப்பு தேடி வருது. அன்னைக்கு ஸ்டேஜ்ல உன்னோட பெர்ஃபாமன்ஸ் ரொம்ப நல்லா இருந்தது அர்ஜுன். உன்னோட டான்ஸ், பாட்டு, ஸ்டைல், கடைசியா நீ சொன்ன கவிதை… எல்லாமே ரொம்ப நல்லா இருந்தது. உனக்கு அந்த பெர்சனாலிட்டி இருக்கு. அதெல்லாம் நிச்சயம் என்னால பண்ண முடியாது. சிட்டில வளர்ந்தும் என்னால இதெல்லாம் செய்ய முடியலைன்னு ஒரு தாழ்வு மனப்பான்மையோட வெளிப்பாடு தான் அன்னைக்கு உன்னைக் காயப்படுத்தின மாதிரி நான் பேசினது. உன்னை நேர்ல பார்த்து மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சேன் அர்ஜுன். இன்னைக்கு உன்னை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சுது… மனசுல எதுவும் வச்சுக்காத…”
அர்ஜுன் கலங்கி நிற்க,
“ஓ! ஒருவழியா புரிஞ்சுடுச்சா? என்னென்னமோ பேசின, பெரிய டாட்டா பிர்லா பேரன்னு அடிச்சுவிட்ட… என்னென்னமோ பேசி அவனை குழப்பி, அந்த புள்ளைய இவன் அழவச்சுட்டான், தெரியுமா?” என்ற மதன் உணர்ச்சிவசப்பட்டு கத்த,
“மதனா சும்மா இருடா” என்று அர்ஜுன் குறுக்கிட,
“முடியாது அஜூ, அன்னைக்கே நான் கேள்வி கேட்டிருக்கணும். என்னை பேசவிடாம பண்ணிட்ட. இன்னைக்கு கேட்காம விடமாட்டேன்…” என்று மதன் சீற,
“கேட்டு என்ன பண்ண போற மதனா?” என்ற அஞ்சலியின் குரலைக் கேட்டு மூவரும் அவள் புறம் திரும்பினர்.
“கேட்டு என்ன பண்ண போற மதனா? அதனால யாருக்கு என்ன பயன்?” என்றாள்.
“அஞ்சலி…” – சாம் தடுமாற,
“சாம், எனக்கு எல்லாத்தையும் மதன் சொல்லிட்டான். இப்போ உன் தப்பு புரிஞ்சுதில்ல. அது போதும். அஜூவை காயப்படுத்தின மாதிரி யாரையும் நோகடிச்சுடாத… ப்ளீஸ்…” என்றாள், வருத்தத்தோடு.
“இல்லை பண்ணமாட்டேன் அஞ்சலி… சாரி…” என்று அவன் தயங்க,
“பரவால்ல நீ கிளம்பு, நல்லபடியா ப்ரோக்ராம் முடிச்சுட்டு வா” என்று அவள் கூறியதும்,’சரி’ என்றவன், “பார்ப்போம் அர்ஜுன்” என்று அர்ஜுனிடமும் மதனிடமும் கூறிக்கொண்டு கிளம்பினான்.
சாம் சென்றதும்,
“ஏன் அஞ்சலி அவனை போகவிட்ட?” என்றான் மதன்.
“வேற? முஷ்டியை மடக்கி சண்டை போட போறியா?”
“அவன்…”
“அவன் என்ன வேணும்னாலும் சொல்லட்டும், உன் அண்ணனுக்கு அறிவில்லை? யாரு என்ன சொன்னாலும் அதைக் கேட்டு, தன்னை குழப்பிக்கிட்டு, கூட இருக்கறவங்கள காயப்படுத்துவானா? எல்லாம் முடிஞ்சு போச்சு மதனா. நாளைக்கு கல்யாணம். அதோட எல்லாமே முடிஞ்சு போச்சு…” என்றவள் கலங்க,
“அழாத அஞ்சலி… ப்ளீஸ்…” என்று தவித்துப்போனான், மதன். அர்ஜுன் தலை கவிழ்ந்தபடி அமைதியாக நின்றிருந்தான்.
“டேய் பயலுகளா, எப்படி இருக்கீங்க?” என்றபடி, நடப்பதை அறியாதவராய் அவர்களின் எதிரே வந்து நின்றார், தோட்டத்து தாத்தா.
அஞ்சலி கண்களை துடைத்துக்கொள்ள, மதனும் தனது வாட்டத்தை மறைத்துக்கொண்டு,
“தாத்தா எப்படி இருக்கீங்க?” என்றான்.
“இருக்கேன், நல்லா இருக்கேன்… வேலையை விட்டு நின்னுட்டியா?”
“ஆமா தாத்தா, வாங்க ரோஸ்மில்க் குடிச்சுட்டு வருவோம்” என்றவன், அவரைக் கூட்டிக்கொண்டு அடுத்த இரு நிமிடங்களில், வெளியே சென்றிருந்தான்.
அஞ்சலி அமைதியாக நின்றிருந்தாள். தலைகவிழ்ந்து நின்றிருந்த அர்ஜுன், அவளை தலையுயர்த்தி நோக்கினான்.
“அஞ்சலி, நான் யார் சொல்லியும் குழம்பி, அப்படி…”
“எந்த விளக்கமும் இனி தேவையில்லை அஜூ… ஐ மீன் அர்ஜுன்… உன்னை ‘அஜூ’னு கூப்பிடற அளவுக்கு எனக்கு உரிமையில்லை…”
“அஞ்சலி…”
“குட் பை!!” என்றவள், அவனது பதிலுக்கு காத்திராமல், தனது அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டாள்.
வீட்டிற்கு திரும்பிய அர்ஜுன், அறைக்குள் சென்று கட்டிலின் மேல் அமர்ந்துகொள்ள, மதன் அவன் எதிரே தரையில் அமர்ந்தான். அஞ்சலி அவனை ‘அர்ஜுன்’ என்று அழைத்ததே அர்ஜுனின் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. கண்களும் கலங்கின, கோபமும் பொங்கியது. தெரிந்தே அவளிடமிருந்து எட்டி நின்றவன், அவளது பரிவை மட்டும் எதிர்பார்ப்பது பேராசை என்று அவனுக்கு விளங்காமல் போனது.
“என்ன அஜூ யோசிக்கற? அந்த புள்ளையை பத்தி யோசிக்கிறியா? இல்லை சிங்கப்பூர், மலேசியா, துபாய்னு எங்க போய் ப்ரோக்ராம் பண்ணலாம்னு யோசிக்கிறியா?”
“மதனா…”
“அந்த புள்ளைய அழவச்சுட்ட. அந்த புள்ளையோட சேர்த்து அவங்க அப்பாவையும் வேதனை படுத்திட்ட. ரொம்ப தப்பு அஜூ… இவ்வளவு நாள் எனக்கு உன் மேல கோவம் வந்ததில்லை, ஆனா இப்போ கொலவெறி ஆகுது….”
“மதனா, நானே நொந்துபோயிருக்கேன்…”
“நீ ஏன்பா நொந்துபோற? தெரிஞ்சே நோகடிச்ச நீ சந்தோஷப்படணும்…”
அர்ஜுன் பரிதாபமாக அவனைக் கண்டான்.
“என்ன பார்க்கற அஜூ? கேட்டா, ‘அப்பா பண்ண தப்பை நான் பண்ணமாட்டேன்’னு சொல்லுவ. அதான? ஆமா, அப்படி என்ன தப்பு பண்ணிட்டாங்க? கைல காசு இருந்தும் அம்மாவை காப்பாத்த முடியாம போயிருந்தா என்ன பண்ணியிருக்க முடியும்? அப்ப யாரை குறை சொல்றது? ஒருவேளை, அப்பா சொன்ன மாதிரி அம்மாவ கல்யாணம் பண்ணிக்காம இருந்திருந்தா, அம்மா நிச்சயம் சந்தோஷமா இருந்திருப்பாங்கனு யாரு உத்திரவாதம் கொடுத்தது? கேள்வி கேட்டுக்கிட்டே போகலாம். ஆனா எதுக்குமே பதில் கிடைக்காது. அப்பாவை பத்தி மட்டுமே யோசிக்கறியே, என்னைக்காவது அம்மாவை பத்தி யோசிச்சிருக்கியா?”
அர்ஜுன் திடுக்கிட்டு அவனை பார்த்தான்.
“மதனா… அம்மா…”
“ஃபோட்டோல கூட, அப்பாவை விட அம்மாதான் அழகா சிரிச்சுக்கிட்டு இருக்காங்க. அம்மா ஒரு அற்புதமான ஜீவன் அஜூ… நீயும் அப்பாவும் சொல்ற காரணங்களுக்கும், கவலைகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு ஜீவன். சந்தோஷமா, மனநிறைவோடு, திருப்தியா வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சாங்க. என்னைக்காவது அம்மா வருத்தப்பட்டு பார்த்திருக்க? நான் பார்த்ததில்லை அஜூ. அம்மாவுக்கு வாழ்க்கைல என்ன தேவைன்னு தெளிவா தெரிஞ்சு வச்சிருந்தாங்க. அதான் மனசு நிறைவா வாழ்ந்து முடிச்சுட்டாங்க. அம்மா முகத்தை பார்க்கும்போது, அவங்கள நினைக்கும் போது மனசு நிறைஞ்சு போயிடுது. ‘ச்ச… வாழ்க்கை எவ்வளவு அழகா இருக்கு’னு எத்தனையோ தடவை யோசிச்சிருக்கேன்….”
அர்ஜுனின் கண்கள் மெலிதாய் கலங்கின.
“எனக்கு ஒரு பாட்டி இருந்தாங்க, அவங்க செத்துட்டாங்கன்னு சொல்லியிருக்கேன், ஞாபகமிருக்கா?”
“இருக்கு…”
“ஆனா, எனக்கு ஒரு மாமா இருந்தாங்க, அத்தை இருந்தாங்க, அம்மா இருந்தாங்க… எல்லாரும் இப்பவும் இருக்காங்க… ஆனா என் வாழ்க்கையில இருந்தாங்க…”
“என்னடா சொல்ற?” என்று தடுமாறி அவன் முன்னே சென்று அமர்ந்தான், அர்ஜுன்.
“ஆமா அஜூ. எங்கப்பா இறந்துபோயிட்டாங்க. அம்மா இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. கூட வச்சுக்க முடியாதுன்னு சொன்னாங்க. என்னை பாட்டிகிட்ட விட்டாங்க. மாமாவும், அத்தையும் தேள் மாதிரி என்னை கொட்டிக்கிட்டே இருந்தாங்க. பாட்டி மட்டும் தான் ஒரே ஆறுதல். அவங்களும் ஒரு கட்டத்துல உடம்பு முடியாம படுத்த படுக்கையாகிட்டாங்க. அப்போ பாசத்துக்கு ஏங்க ஆரம்பிச்சேன் அஜூ. அம்மானு கூப்பிட யாருமில்லையேனு ஏங்கினேன். பாட்டி உயிரோட இருந்தவரை ஏதோ தாங்கிக்கிட்டு இருந்தேன். அடி விழும். திட்டு விழும். பொறுத்துக்கிட்டேன். எல்லாம் தெரிஞ்சும் என்னை பெத்தவ, காதையும் கண்ணையும் மூடிக்கிட்டா. பாட்டி செத்ததும், எனக்கு யாரும் இல்லனு தோணிடுச்சு. ரொம்ப பயம் வந்துடுச்சு. அதான் ஓடியாந்துட்டேன். நம்ம இந்து அம்மாவை பார்த்ததும், இவ தான் என் பெத்தவனு தோணுச்சு. ‘அம்மா’னு சொன்னேன். வாரியணைச்சுக்கிட்டா. நம்மளால இவனுக்கு சோறு போடமுடியுமா, வளர்த்து ஆளாக்க முடியுமான்னு அவ யோசிக்கல. சந்தோஷமா என்னை ஏத்துக்கிட்டா. அன்னைலிருந்து இன்னைக்கு வரைக்கும் அம்மா அப்பா இழப்பை தவிர எனக்கு வாழ்க்கையில எந்த வலியும் இல்லை. வயிறு முட்ட தண்ணிய குடிச்சுட்டு படுத்தாலும் தூக்கம் வரும். எந்த குறையும் இல்லை எனக்கு, அஜூ.”
அர்ஜுன் அழுதான்.
“அஞ்சலியும் நம்மல சந்திக்கும்போது கிட்டத்தட்ட என் நிலையில தான் இருந்தா. நீ ஆறுதலா நின்னதும், அவ உன் கையை பிடிச்சுக்கிட்டா. உன்னாலதான் அவ வாழ்க்கையில ஆசைப்பட்ட மாற்றம் வந்ததுன்னு நம்பறா. அதான் அந்த புள்ளை, மனசையும் சேத்து தூக்கி கொடுத்திருச்சு. அதை உடைக்கலாமா அஜூ? அப்பா தோத்துட்டாங்கன்னு அவரே தான் சொல்லிக்கிட்டாரு. ஆனா ஒருநாளும் நாம யாரும் அப்படி யோசிச்சதில்லை. அவரு புலம்பியே செத்தாருன்னா, அது பொதுவான ஆம்பளை குணம் அஜூ. எந்த மனுஷனுக்கு, பொண்டாட்டி புள்ளைக்கு சம்பாதிச்சது போதும்னு தோணியிருக்கு? இன்னும் நாலு காசு சேர்த்து வச்சிருக்கலாமோன்னு தான் சாகும்போது கூட யோசிப்பான். அதை நீ பிடிச்சுக்கிட்டு தொங்குனா என்ன அர்த்தம்?”
“மதனா…”
“அமெரிக்கா போயிட்டா மட்டும் அந்த புள்ளை சந்தோஷமா இருந்துடுமா? மனசை உன்கிட்ட விட்டுட்டு அந்த புள்ளை நரக வேதனை அனுபவிக்காது?”
கலங்கிய கண்களை அர்ஜுன் துடைத்தாலும், மீறி கண்ணீர் வழிந்தது.
“அந்த புள்ளைய பெத்தவனை பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்தது அஜூ. பெரிய மினிஸ்டர், காரு இருக்கு, வீடு இருக்கு, ஆனா கட்டின பொண்டாட்டியோடு வாழ கொடுத்துவைக்கல, பெத்த புள்ளை முகத்துல சந்தோஷம் இல்லை. உன் கணக்குப்படி அவரு தோத்துட்டாரா? ஜெயிச்சுட்டாரா? ஒன்னு மட்டும் ஞாபகத்துல வச்சுக்க, அப்பாவுக்கு பொறந்ததால, உன் வாழ்க்கையும் அவர் வாழ்க்கையும் ஒன்னில்லை. அவனவன் வாழ்க்கையில தோக்கறதும் ஜெய்க்கறதும் அவனவனோட சொந்த கணக்கு. இதுக்கு அளவு கோளெல்லாம் கிடையாது. நீ நாளைக்கே உலக புகழ் பெற்றாலும், இல்லை பழைய மாதிரி ட்ரைவர் வேலைக்கு போனாலும், அஞ்சலியோட பாசம் மாறாது. அதுக்குத்தான் உண்மையாவே ஒவ்வொரு மனுஷனும் போராடுறான். அவ உன்னை மட்டும் தான் நேசிக்கிறா. கமா போட்டு உன் புகழையோ, பணத்தையோ, வசதியையோ காதலிக்கல… சொல்லணும்னு நினைச்சதெல்லாம் சொல்லிட்டேன். இதுக்கு மேல உன் இஷ்டம்…” என்றவன், எழுந்து வெளியே செல்ல, அர்ஜுன் அந்த அறையில் யோசித்தபடி படுத்திருந்தான்.
