Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சோடு ரீங்காரம்

ரீங்காரம் – 6

படத்தில் பணிபுரியும் அத்தனை பேருக்கும் அதே ஊரில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ஒரு சிலரைத் தவிர. கதாநாயகன் மற்றும் சில முக்கிய ஆட்கள் மட்டும் வசதியை எதிர்பார்த்து, அருகில் இருக்கும் சிறு நகரத்திற்குத் தினம் சென்று வந்தனர். தமிழ்செல்வன் என்றும் ஆடம்பரத்தை விரும்பாதவன் என்பதால், அவனது வாசம் அந்த ஊரிலேயே அமைந்தது. அவன் அங்கிருந்தால் அவனது ‘மக்களும்’ அங்கேதானே இருப்பார்கள்? 

“தள்ளிப் போங்கடா!” என்று எரிச்சலோடு கத்தும் அளவிற்கு அவனை ஒட்டியும் சுற்றியும் திரிந்தனர்.

தமிழ்செல்வன் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்க, இவர்களோ அவனுக்கு அருகில் ஏதோ ஒரு காரணமில்லாத விஷயத்திற்காகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கண்மூடிப் படுத்திருந்தவனுக்கு எரிச்சல் மேலிட, “அப்படி என்னதான் சண்டை?” என்று செவிமடுத்துக் கேட்டான்.

“சத்தியமா இந்த பாஸ்வேர்டுதான் வச்சேன்” என்றான் நிமலன் தலையைச் சொரிந்தபடி. 



Advertisement

“அப்புறம் ஏன் லாகின் ஆகல?” புருவத்தைத் தூக்கிப் பேரழகன் கேட்க, நிமலனிடம் பதிலில்லை. 

“பாவா, ஏன் நாம உன் பேரை ட்ரை பண்ணக் கூடாது?” என்று சுசிகரன் ஒரு யோசனை சொல்ல, தமிழ் குறுக்கிட்டான். 

“என்னங்கடா உங்க பிரச்சனை? நயநயனு சந்தைக்கடை மாதிரி கத்திக்கிட்டே இருக்கீங்க!”

Advertisement

“நீயே நியாயத்தைக் கேளு தமிழு… என்னோட மெயிலுக்குப் பாஸ்வேர்டு மாத்தி வைக்கணும்னு சொன்னேன். ‘தா பாவா’ன்னு இந்த ரெண்டு கோமாளிப் பயலுகளும் வாங்கினானுங்க. நம்பிக் கொடுத்தேன், இப்போ ‘தெரியல’ன்னு நிக்கிறானுங்க.” 

Advertisement

“அதுக்கென்னய்யா… ரெக்கவரி மெயில் ஐடி கொடுத்து மாத்து.” 

“அதையும் மாத்திட்டானுங்கடா!”

தமிழ் கேட்டான், “அப்போ ரெக்கவரி மொபைல் நம்பர்?” 

Advertisement

பேரழகன் சலிப்புடன், “அது என்னோட பழைய போன் நம்பரைக் காட்டுதுடா. நானும் சாயந்திரத்துல இருந்து இவனுங்க பேச்சைக் கேட்டு ஒன்னு மாத்தி ஒன்னு வச்சுப் பார்க்கிறேன், எதுவும் வரல. அத்தனை தடவை வார்னிங் வேற காட்டுது” என்றார்.

“அப்போ ஐடி மாத்திட்டுப் பாவா” என்றவாறே உள்ளே வந்தான் பவன். 

தமிழ்செல்வனின் சமூக வலைத்தளங்களைக் கண்காணிப்பவன் இவன்தான். மார்க்கெட்டிங் மேனேஜர், பி.ஆர் டீம் ஹெட் என எல்லாமே அவன் தான். வயது வெறும் இருபத்தி ஆறுதான் இருக்கும். இப்போது பேசிக்கொண்டு வந்ததும் அவன் காதலியோடுதான்.

“அந்த ஈர வெங்காயம் எங்களுக்குத் தெரியாதாக்கோம்… வந்துட்டாரு துறை ஐடியா கொடுக்க!” என்று பேரழகன் மண்டையைப் பிியித்துக் கொண்டிருந்தார். 

“எதுக்கு பெருசு கவலை? டேய் பவன், வாடா… உன் திறமையைக் காட்டு” என்று தமிழ்செல்வன் பவனை இழுக்க, “நான் எதுக்கு தல?” என்றான் அவன் புரியாமல்.

“எவ்வளவு பெரிய ஆள் நீ?” தமிழுக்கு மட்டும் தெரிந்த அந்த உண்மை பவனுக்குள் பயப்பந்தாய் உருண்டது. 

“உனக்கெல்லாம் இதெல்லாம் ஜுஜுபிடா… பாஸ்வேர்டைக் கண்டுபிடிச்சுக் கொடு” என்று கைபேசியை வாங்கி அவன் கையிலேயே கொடுத்துவிட்டான் தமிழ்செல்வன். 

“டேய், அதெல்லாம் தெரியுமாடா உனக்கு?” நம்ப முடியாத அதிர்ச்சியில் நிமலன் கேட்க, பவன் தமிழைப் பார்த்தான். அவனோ அடக்கப்பட்ட சிரிப்போடு புருவத்தை உயர்த்தியபடி அமர்ந்திருந்தான்.

“தல…” 

“எனக்கும் ஹேக்கிங் கத்துக்கணும்னு ரொம்ப நாள் ஆசைடா, சொல்லிக் கொடு” என்று பவனின் திருட்டு முழியில் குளிர் காய்ந்தான் சுசிகரன். 

“மச்சான், நீயுமாடா?” என்றான் பவன் தவிப்பாய். 

“உனக்குத் தெரியுமா தெரியாதா?” ஏற்கனவே பொறுமையின்றி இருந்த பேரழகன் கத்த, “யோவ், தெரியாதுயா!” என்றான் பவன், அவமானத்தில் தன் இயலாமையை ஒப்புக்கொண்டு.

அவனது பதிலில் தமிழ் சத்தமிட்டுச் சிரிக்க, “தல, ஏதோ விஷயம் இருக்கு” என்றான் நிமலன் சரியாகக் கணித்து. 

“சொல்லாதேன்னு சொன்னா கேட்கவா போற?” என்று பவன் முட்டியைக் கட்டிக்கொண்டு அமர்ந்துவிட்டான். 

“ரெண்டு வருஷம் இருக்குமாடா பவன்?” தமிழ் கேட்க, அவன் ஆமாமெனத் தலையசைத்தான்.

தமிழ் தொடர்ந்தான், “இன்டர்வியூக்கு வந்தான்டா, கையில சர்டிபிகேட் எதுவும் இல்லை. ‘என்னப்பா தெரியும்?’னு கேட்டேன். ‘நான் ஒரே ஒரு கதை சொல்றேன் சார், அதைக் கேட்டுட்டு என்னோட குவாலிஃபிகேஷன் என்னன்னு சொல்லுங்க’ன்னு சொன்னான்.” 

நிமலன் ஆர்வமாக, “அப்படி என்னடா சொன்ன?” என்றான். 

பவன் தன் கழுத்தைத் திருகியபடி, “கேளுடா” என்றான் இறங்கிய குரலில்.

“அவன் காலேஜ்ல மொபைல் அலவ்ட் இல்லையாம். ஹாஸ்டல்ல திடீர் ரெய்டு வந்தப்ப, சார் இவன் போனை எடுத்துட்டுப் போயிட்டாங்களாம்.” 

“என்ன, போனைத் திருடிட்டு வந்துட்டியா?” சுசிகரன் கேட்க, இல்லை எனத் தலையாட்டிய தமிழ்செல்வன், வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஒரு நிமிடம் முழுதாய் சிரித்தான். 

“ஹேக் பண்ணிட்டானாம்டா! அதுவும் எப்படின்னு தெரியுமா? இவரு மொபைல்ல டைரக்டா பண்ணலையாம்… முதல்ல சாட்டிலைட்டை ஹேக் பண்ணிட்டு, அங்கிருந்து மொபைலை ஹேக் பண்ணி பிரவுசர் ஹிஸ்டரியை கிளியர் பண்ணாராம்!”

இப்படி ஒரு சாத்தியக்கூறே இல்லாத கதையை அவன் கூசாமல் கூறியதை எண்ணி இப்போதும் தமிழ்செல்வன் சிரித்தான். பவனை மூவரும் கேவலமாகப் பார்க்க, அவன் தலையணையை வைத்து முகத்தை மூடிக்கொண்டான். 

“இதை நீ நம்பிட்டியா?” 

“கேனைப் பயன் கூட நம்ப மாட்டான்டா. மொபைல் ஹேக் பண்ணேன்னு சொல்லிருந்தா கூட நம்பியிருப்பேனோ என்னவோ. ‘சரி ராசா, நீ சாட்டிலைட் எல்லாம் ஹேக் பண்ணிக் கஷ்டப்பட வேண்டாம், இந்த லேப்டாப் பாஸ்வேர்டை மட்டும் கண்டுபிடி’ன்னு சொல்லிக் கொடுத்தேன்.”

நிமலன் சிரித்தபடி, “எனக்குத் தெரிஞ்சு தமிழ்செல்வன் மட்டும் தான் எப்போதும்…” என்று இழுக்க, தமிழ் ஆமாமெனத் தலையசைத்தான். 

“அது இந்த நாதாரிக்குத் தெரியாதுல்ல! ஒரு மணி நேரமா தீவிரமா நெட்ல என்னென்னமோ தேடுனான். ‘சார், ரொம்ப கஷ்டமான பாஸ்வேர்டு வச்சிருப்பீங்களோ?’ன்னு கேட்டான் பாரு… இன்னும் ஒன்னு இருக்கு…” பவன் பாய்ந்து வந்து தமிழின் காலைப் பிடித்துக்கொண்டான். 

“வேணாம் தல… அதை மட்டும் சொல்லிடாதீங்க!” என்று கெஞ்சிக் கொண்டிருந்த சமயம், தமிழ்செல்வனின் அலைபேசி ஒலித்தது.

அழைத்திருந்தது சக்தி தாரா தான். 

“சொல்லு சக்தி” என்றான் சிரிப்போடு. ஆனால் அந்தப் பக்கம் வந்த பதிலில் பதற்றமடைந்தவன், கைபேசியைச் சார்ஜரிலிருந்து பிடுங்கிக்கொண்டு, பனியன் மேல் ஒரு டீ-ஷர்ட்டை மாட்டிக்கொண்டு வெளியில் ஓடினான். 

“தல, அது என்னோடது!” என்று உள்ளிருந்து கத்தினான் சுசிகரன்.

தமிழ்செல்வன் இருந்த வேகத்திற்கு அவன் காதில் எதுவுமே விழவில்லை. இரண்டு தெரு தள்ளி இருந்த சக்தி தாராவின் வீட்டிற்கு விரைந்தான். அவள் உடனே வருமாறு பதட்டமாக அழைத்ததே அவனது வேகத்திற்குக் காரணம். அவள் வீட்டின் கதவைத் தட்டியவன் பத்து நொடிகள் கூடப் பொறுக்கவில்லை. உள்ளே சென்று பார்க்க கவிதா மட்டும் நின்றிருந்தாள். 

“சக்தி எங்கே?” 

“தெரியல, உங்களுக்கு கால் பண்ணிட்டே வேகமா வெளிய போனா.” 

“எந்தப் பக்கம்?” எனக் கேட்டுவிட்டு மின்னலென வெளியேறினான். மீண்டும் அவளுக்கு அழைக்க, அழைப்பு செல்லவில்லை.

ஊர் அடங்கிய பின், ஒன்பது மணிக்கு மேல் அந்த கிராமத்தில் ஆள் நடமாட்டமே இல்லை. அவளைத் தேடி ஊருக்குச் சற்று வெளியே வந்தபோது, தூரத்தில் சக்தி தாராவோடு ஒரு பெண் வருவது தெரிந்தது. சக்தி அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து வர, அந்தப் பெண் அவளிடமிருந்து விடுபடத் துடித்தாள். அவர்களுக்குப் பின்னே வந்த இருவரைப் பார்த்தே விஷயம் ஏதோ சரியில்லை எனப் புரிந்தது.

“செல்வா!” அவனைப் பார்த்ததும் இருளிலும் மிளிர்ந்த சக்தியின் கண்களில் நம்பிக்கை பிறந்தது. தமிழ் வேகமாக அவர்களை நோக்கி நடந்தான். தமிழின் வருகையைச் சிறிதும் எதிர்பார்க்காத அந்த இரு ஆண்களில் ஒருவன், அந்தப் பெண்ணை மீண்டும் இழுக்கப் பார்த்தான். அவளுக்கும் அவர்களோடு செல்லவே விருப்பம் போலத் தெரிந்தது. 

“விடு என்னை” என்றாள் கண்ணீரோடு.

அந்தப் பெண்ணை விடாமல் பிடிவாதமாகப் பிடித்த சக்தி தாரா, “முடியாது, என் கூட வாயை மூடிட்டு வா” என்று கடுமையாக எச்சரித்தாள். 

“எங்க பிரச்சனையில நீ தலையிடாதே… பொட்டைப் புள்ளன்னு பார்க்கிறேன், இல்லைன்னா செவுள்ளயே போடுவேன்” என்று ஒருவன் சொல்லி முடிக்க, அடுத்த நொடி அவன் காதிலேயே ஓங்கி அடித்திருந்தான் தமிழ்.

“என்னடா… பொம்பளப் புள்ள மேல கையை நீட்டுவேன்னு பேசிட்டு இருக்க? வகுந்துடுவேன்! என்ன சக்தி பிரச்சனை?” தமிழ் கேட்க, இன்னொருவன் அவனைத் தாக்க வந்தான். 

“எங்க ஊருக்குள்ளேயே வந்து எங்களையே அடிக்கிறியா நாயே?” ஆவேசமாகக் கத்தியவன், ஒரு பெரிய கருங்கல்லை ஓங்கி இவனை அடிக்கப் போக, கையைத் தூக்கித் தடுத்தான் தமிழ். கையில் உயிர் போகும் வலி. 

ஆனால், “செல்வா!” எனத் துடித்த சக்தியின் குரலில் அவள் பாதுகாப்பையே முக்கியமாகக் கருதிய தமிழ், நிதானத்திற்கு வந்தான்.

“வந்தோமா, படம் எடுத்தோமான்னு போகாம ஊர்ல உள்ளவங்களுக்குச் சேவகம் பண்ண வந்துட்டான். கைக்கு விழுந்த அடி தலைக்கு வர்றதுக்குள்ள ஓடிடு. ஏய் புள்ள, வா!” என்றான் அந்தப் பெண்ணை அழைத்து. 

“செல்வா, உனக்கு ஒன்னுமில்லையே?” அவள் அவனது நலனை விசாரிக்க, தமிழ் வலியை விழுங்கிக்கொண்டு கேட்டான், “என்ன பிரச்சனை சக்தி?”

“லவ் பண்றோம், ஓடிப் போறோம்… ஒழுங்கா வழியிலிருந்து ஓடிருங்க” என்றான் அந்த ரௌடி. 

“பொய் சொல்லாதடா பொறுக்கி ராஸ்கல்! நேத்து ஒருத்தி, இன்னைக்கு இவளா?” அவனிடம் சீறியவள் அந்தப் பெண்ணிடம் திரும்பினாள். 

“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதாடி? ரெண்டு நாள் முன்னாடி வேற ஒருத்தி கூட இப்படித்தான் கட்டிப்பிடிச்சு நின்னான்னான். இவனை நம்பியா போகப் போற?” 

“அவன் அப்படியெல்லாம் பண்ண மாட்டான்” என்றாள் அந்தப் பெண் அழுகையோடு.

“கூறுகெட்டவளே! கண்ணை மூடிட்டு லவ் பண்ணாதீங்கடி. உங்களைப் பிரிச்சு எனக்கென்ன ஆகப்போகுது? உனக்காக வந்து நின்ன என்னை என்னென்னமோ பேசினான், பத்தாததுக்கு செல்வாவை எப்படி அடிக்கிறான் பாரு… இவனை நம்பியா போகப் போற?” 

“அவங்களை நம்பாதே செல்வி, நான் உன்னை உண்மையா லவ் பண்றேன். என் உசுரே நீதான்… உன்னைத் தவிர வேற ஒருத்தியை மனசால…” என்று காதல் வசனம் பேசியவன், அடுத்த நொடி உயிரே போகும்படி கத்தினான்.

தன்னை அடித்த அதே கல்லை வைத்துத் தமிழ்செல்வன் அவர்கள் இருவரது கால்களிலும் பலமாகத் தாக்கியிருந்தான். இரத்தம் பீறிட்டு வந்தது. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத வலி. நொடி நேரத்தில் இதைச் செய்த தமிழ், அப்படியே தரையில் அமர்ந்து தன் நண்பர்களை வரக் கூறினான். தமிழ்செல்வனை அடித்துக் கொல்லும் கோபம் இருந்தாலும், காலில் ஏற்பட்ட அந்த வலியால் அவர்களால் அசைய முடியவில்லை.

நிமலன், சுசிகரன், பவன் மற்றும் பேரழகன் வந்ததும், அந்தப் பெண்ணின் காதலன் கைபேசியை மிரட்டி வாங்கி, அதிலிருந்த அவனது உண்மை முகத்தை அவளுக்குக் காட்டினர். 

“உன் கூடவே கூட்டிட்டுப் போ சக்தி. வெளிய தெரிஞ்சா அவ குடும்பத்துக்கே அசிங்கம்” என்றான் தமிழ். 

“உன் கை வீங்கியிருக்கேடா” அவளுக்கு அவனை விட்டுச் செல்ல மனமே இல்லை. தமிழ் வம்படியாக அவளை அனுப்பி வைத்துவிட்டு, அந்த இரு ஆண்களையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றான்.

*******

அருகில் உள்ள ஒரு சிறு ஊராட்சி மருத்துவமனையில் பரிசோதித்ததில், அது எலும்பு முறிவு எனத் தெரிந்தது. கையில் கட்டுடன் நின்றான் தமிழ். தயாரிப்பாளர் சரத் சந்திரனுக்கு அழைத்து விஷயத்தைக் கூறி, அந்த ஆண்களைக் காவல்துறையிடம் ஒப்படைத்து எச்சரிக்கை மட்டும் செய்யக் கேட்டுக்கொண்டான். ஆனால் தயாரிப்பாளருக்கு அவன் மேல் தான் கோபம்.

“ஏண்டா, பார்த்து இருக்க மாட்டியா? படம் கடைசி ஸ்டேஜ்ல இருக்கு.” 

“உங்க படம் ஒன்னும் ஆகாது” என்றான் நிதானமாக. 

“என் படத்துக்காக மட்டும் சொல்லல, உன்னையும் கொஞ்சம் யோசி.” 

“அதெல்லாம் ஒன்னுமில்லை. லெஃப்ட் ஹேண்ட் தானே? ஷூட்டிங் அதன் பாட்டுக்கு நடக்கட்டும், பதினைஞ்சு இருபது நாள்ல சரியாகிடும்.”

“இங்க யார் புரொடியூசர், நீயா நானா? சொல்றதை மட்டும் கேளுடா. நாளைக்கே ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டாம். ஒரு நாள் ரெஸ்ட் எடு” என அவர் கட்டாயப்படுத்தி அவனை ஓய்வெடுக்க வைத்தார்.

செய்தி கேட்டு வந்த அத்தனை பேரிடமும் உண்மையைச் சொல்லக் கூடாது எனத் தமிழ் கூறிவிட்டான். அதனால் வந்தவர்களிடம், “இவருக்குத் தூக்கத்துல நடக்குற வியாதி இருக்கு. அதான் வாசற்படியைக் கவனிக்காம இறங்கி விழுந்துட்டாரு. சத்தம் கேட்டு ஓடிப்போய் பார்த்தா குப்புறக் கிடக்குறாரு” என்று நிமலன் நிஜமாகவே நடந்தது போலக் கூற, தமிழ் அவனை ‘எப்படிடா இப்படி?’ என்கிற ரீதியில் பார்த்தான்.

அனைத்தையும் அமைதியாகப் பார்த்திருந்த சக்திக்கு மனப்பாரம் கூடியது. எப்போது அவனது காதலைத் தன் செவிகளால் கேட்டாளோ, அதன் பிறகு அவன் செய்யும் ஒவ்வொன்றும் அவனது மௌனமான காதலை உரக்கச் சொல்வதாகவே அவளுக்குத் தோன்றியது.

🎶
மேஹ்பில் மெய்ன் தேரி

ஹம் நா ரஹேன் ஹோ ஜோ

ஹம் தொ நஹி

ஹோ ஹம் தொ நஹி ஹோ

கிஸ்சி ஹமாரே, நஸ்தீகியோன் கி

கம் தொ நஹி ஹோ

கம் தொ நஹி ஹோ

கித்னி தவா சுபஹ் ஹோ மேறி

தேரே ஆணம் மெய்ன் பைத்தே மேனே ஷாமு கியா…

சன்னா மேரியா மேரியா

சன்னா மேரியா மேரியா

சன்னா மேரியா மேரியா மேரியா

ஓ பியா…
🎶

பின்னணி இசையாய் ஒலிக்கும் பாடலின் வேதனை, அந்த இசையை உருவாக்கியவன் முகத்தில் துளியும் இல்லை. அவனைத் தேற்றவும், அவனது வலியைப் பகிர்ந்து கொள்ளவும் எப்போதும் அவன் ‘மக்கள்’ சூழ்ந்திருக்கின்றனர். ஆனால், அதையும் தாண்டி அந்தச் சிவந்த கண்கள் காட்டும் வலியை உணர்ந்த சக்திக்கு, நெஞ்சை ஏதோ அடைப்பது போன்ற வேதனை ஏற்பட்டது.

அவனைப் பற்றி நினைக்கக் கூடாது எனத் தன்னையே பலமுறை கடிந்துகொண்டாள்; ஆனால் பலன் எதுவுமில்லை. எண்ணங்கள் என்னவோ சுற்றிச் சுற்றி அவனிடமே வந்து தஞ்சம் புகுந்துவிடுகின்றன. அவனைப் பார்த்தால், கதையில் தோல்வியடைந்தவன் என்று யாராலும் கூற முடியாது. ஒரு பண்ணையாரைப் போல எப்போதும் மூன்று நான்கு பேர் அவனைச் சுற்றி இருக்கின்றனர்.

தன்னுடைய காயம்பட்ட கையை வசதியாக நீட்டி அமர்ந்திருந்த தமிழ்செல்வன், “கையை என்ன உங்க அப்பாவா வந்து அமுக்கி விடுவார்?” என்று நிமலனை நோக்கிக் கேட்டான்.

“ஏன் தல, காலையும் நீட்டு… எங்க அப்பா கூட என்னை இவ்வளவு வேலை வாங்கினது இல்லை” என்று சலித்துக் கொண்டே, தமிழுக்குச் சேவை செய்தான் நிமலன். 

அந்தச் சேவையில் கண்கள் சொருக, சுகமாய் சிரித்த தமிழ், “நல்லா இருக்குடா” என்றான். வேதனைகள் அவனுக்குப் புதிதல்ல; இதைவிடப் பல மடங்கு வலிகளைத் தாங்கியவன் என்பதால், தன் காயத்தை மறைத்துத் தாராளமாகச் சிரிக்கக் கற்றுக்கொண்டான்.

“இப்படிச் சும்மா படுத்துக் கிடக்குறது கூட ஒரு சுகமாத்தான் இருக்குப்பா. பேசாம தமிழு, நீ அடிக்கடி எங்காவது இப்படி அடிபட்டுக்கடா” என்று பேரழகன் கூற, தமிழ்செல்வன் அவரை முறைக்க, சக்தி அடக்க முடியாமல் சிரித்துவிட்டாள்.

“என்ன, நீயுமா?” என்றவன் அவள் கையிலிருந்த சவுண்ட் ரெக்கார்டரைப் பார்த்து, “இதை ஒருபோதும் எங்கேயும் விட்டு வந்துடாதே” என்றான்.

மற்றவர்களுக்குக் கைபேசியைப் போல, இவளுக்கு இந்த ரெக்கார்டர்; எதையாவது ரசிக்கத் தொடங்கிவிட்டால் உடனே அதைப் பதிவு செய்துவிடுவாள்.

“பழகிடுச்சு செல்வா” என்றாள். 

“அதுக்குன்னு எப்பவுமா?” என்று சலிப்புடன் கேட்டான் சுசிகரன். 

சக்தி ஆமாமெனத் தலையசைக்க, “ஆறு ஏழு வருஷமா மேடம்க்கு இதேதான் வேலை” என்றான் தமிழ்.

“எங்க தல, ஆடியோ ஏதாவது வச்சிருக்கியா?” என்று நிமலன் ஆர்வமாகத் தலைநீட்ட, “நிறைய இருக்கு” என்றாள் சக்தி. 

“குத்துமதிப்பா ஒரு ஐநூறு சவுண்ட்ஸ் இருக்குமா?” இது நிமலன். 

“குறைஞ்சது இரண்டாயிரம் இருக்கும்” என்றான் தமிழ், சக்தியை ஒரு மெல்லிய சிரிப்போடு பார்த்தபடி. 

அவளும் ஆமோதிப்பாய்த் தலையசைக்க, “சரி, உன் ரெக்கார்டரைத் தா சக்தி” என்றான் நிமலன்.

தன்னிடம் கைநீட்டி நின்றவனிடம் கொடுக்கச் சற்றுத் தயங்கினாள். “ஒரு ரெக்கார்டர் கூடக் குறையாது, நம்பிக் கொடு” என்றான் தமிழ். 

அவர்கள் விளையாட்டில் பல விஷயங்கள் கேலியாக இருந்தாலும், ஒருவரின் உழைப்பை அவர்கள் ஒருபோதும் கிண்டல் செய்ய மாட்டார்கள் என்பது தமிழ்செல்வன் தன் நண்பர்கள் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை.

அவள் அதைக் கொடுக்க, “உனக்கு சவுண்ட்ஸ் மேல இருக்கிற லவ் என்னன்னு இன்னைக்குப் பார்க்கிறேன். இது ஒரு கேம்” என்றான் நிமலன், சுசிகரனை அருகில் அமர அழைத்து.

“இப்போ நான் ரேண்டமா சில சவுண்ட்ஸை ப்ளே பண்ணுவேன். அது என்ன சவுண்ட், எப்போ ரெக்கார்ட் பண்ணதுன்னு நீ சொல்லணும்.” 

அவளோ மிகுந்த ஆர்வத்துடன், “அதெல்லாம் ஜுஜுபி மேட்டர். என்னோட சவுண்ட்ஸ் எப்போவுமே எனக்கு மறக்காது” என்று மிதப்பாகக் கூறினாள்.

கையில் சிக்கிய முதல் ஒலிக்கோப்பை நிமலன் ஒலிக்கச் செய்ய, ஒரு இரைச்சலான ஓசை கேட்டது. 

“ஈஸி! கில்லி ரீ-ரிலீஸ் தியேட்டர் செலிப்ரேஷன்” என்றாள் சட்டென்று.

“நேத்து நடந்ததைப் போட்டுட்டு இருக்கான்… போடா, ஒரு மூணு வருஷம் பின்னாடி போ” என்று தமிழ் சொல்ல, அவனைப் பார்த்து உதட்டைச் சுளித்தாள் சக்தி.

“இதோ நான் பார்த்துக்கிறேன் தல” என நிமலன் ஒன்றைத் தேடி ஒலிக்கவிட்டான். 

“இது ரொம்பவே ஸ்பெஷல்” என்றாள் சக்தி. 

“சத்தமே கேக்கலையே?” நிமலன் ரெக்கார்டரை காதிற்கு அருகில் கொண்டு சென்றான். 

“கேக்குதுடா, நல்லா உத்துக் கவனி… இது என் வீரா அண்ணா ரெண்டு வருஷம் முன்னாடி எனக்குக் கொடுத்த பர்த்டே சர்ப்ரைஸ். தூத்துக்குடியில முத்து குளிக்கிறவங்ககிட்ட கொடுத்து, கடலுக்கு அடியில இருக்குற சத்தத்தைப் பதிவு பண்ணி வாங்கித் தந்தாங்க.”

“முட்டை விடுற சவுண்ட் மாதிரிதான் இருக்கு” என்றார் பேரழகன். 

“ஆமா, இந்தச் சத்தத்துக்கு எதுக்கு தூத்துக்குடி வரை போகணும்? உன் வீட்டு மாடி சின்டெக்ஸ் டேங்க்ல ரெக்கார்டரைப் போட்டாலும் இதே சவுண்ட்தான் வரும்” நிமலன் கூறியதைக் கேட்டு அவனுக்கு ஆதரவாய்த் தமிழ்செல்வன் தோள் தட்டிச் சிரிக்க, “ரசனை கெட்ட செவிட்டுப் பயலுக!” என்கிற திட்டு கூட அவர்கள் காதில் விழவில்லை.

அடுத்த ஒலி பட்டாசு சத்தத்தோடு தொடங்கியது. “இது எலெக்ஷன்ல இப்போ இருக்குற பார்ட்டி ஜெயிச்ச செலிப்ரேஷன்” என்றாள் சக்தி. 

“தப்பு! என்னோட முதல் பட ஸ்கிரிப்ட் சொல்ல புரொடியூசர் ஆபீஸ்ல அப்ரூவல்காகக் காத்துட்டு இருந்தோம். அப்போதான் கிருஷ்ணகுமார் பையன் வேதவ்குமார் படம் ரிலீஸ். கிருஷ்ணகுமாருக்கே அவ்வளவு கூட்டம் வரும், வேதவ் சொல்லவே வேண்டாம்… ரொம்ப ஹேண்ட்சம், எடுத்த உடனே பெரிய டைரக்டர் படம். அந்தப் படம் வேற லெவல் ஹிட். அதுக்குத்தான் தியேட்டர்ல எடுத்த ஆடியோ. லூசு, மறந்துட்டியா?” என்று தமிழ் கேட்க, யோசித்துப் பார்த்தவள் மெல்லத் தலையசைத்தாள்.

அடுத்த ஒலிக்கோப்பு ஓடியது. ‘விசு விசு’வெனக் காற்றின் சத்தம் மட்டுமே கேட்க, பதில் கூற முடியாமல் அவள் தடுமாறினாள். 

“உன் காலேஜ் ஃபைனல் இயர்ல கேம்பிங் போனப்போ நைட் எடுத்தது” என்றான் தமிழ். இதேபோல் அடுத்து நான்கைந்து ஒலிகள் ஓட, அதில் இரண்டிற்கு மட்டுமே அவள் சரியாகப் பதில் கூறினாள்; மற்ற அனைத்தையும் தமிழ்செல்வனே கண்டுபிடித்தான்.

“அது எப்படி திமிங்கலம்?” நிமலன் தமிழைப் பார்த்துக் கேட்க, “அவ ரெக்கார்ட் பண்ற சவுண்ட் எல்லாம் அடுத்த நிமிஷமே எனக்குத்தானே அனுப்பி வைப்பா” என்றான் தமிழ் இயல்பாக. அதன் பிறகு கேலியும் கிண்டலுமாக அந்த இடம் முழுதும் கலகலப்பானது.

தமிழ்செல்வனுக்கு ஒரு முக்கிய அழைப்பு வர, “சக்தி, கிளம்பு… மணி ஆறாச்சு” என்று அவளுக்கு நினைவூட்டிவிட்டு கைபேசியோடு நகர்ந்தான். 

“ரொம்பத்தான்!” என்றான் பவன். தமிழ்செல்வன் மற்றும் சக்தி தாராவின் நட்பு படக்குழுவினர் அனைவருக்கும் தெரியும். 

இருந்தாலும், எவர் கண்ணுக்கும் அவள் மீது தவறான எண்ணமோ, அவர்கள் உறவில் ஒரு தீய பார்வையோ வந்துவிடக் கூடாது என்பதே தமிழின் நோக்கம்.

“செல்வா, குட் நைட்… பை நிமலா, பை சுசி அண்ணா, பை பேரழகன் ப்ரோ!” துள்ளலான மனநிலையோடு வெளியேறிய சக்தி, தனக்குப் பின்னால் வந்த நிமலனைப் பார்த்தாள். 

“என்னடா, உன் தல அனுப்பினானா? அடுத்த தெருவுல இருக்குற வீட்டுக்கு உன்னை வேற அவன் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கிறான்” என்றவளோடு நடக்காமல், அவன் வாசலிலேயே நின்றான். சக்தி புரியாமல் புருவத்தை உயர்த்தினாள்.

“உனக்கும் அவருக்கும் எந்த மாதிரி பாண்டிங் இருக்குன்னு எனக்குத் தெரியலை. ஆனா அதை நீ ரொம்ப காம்ப்ளிகேட் பண்ற அக்கா” என்றான் நிமலன் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு. 

“புரியலைடா” சிரிக்க முயன்று தோற்றுப் போனாள் சக்தி.

“உனக்கு என்னதான் புரிஞ்சிருக்கு? அவரோட உலகத்துல நீயும் சினிமாவும் மட்டும்தான். ஆனா உன்னோட உலகத்துல, உன்னோட ஆடியோஸ் மாதிரி அவர் உன் மெமரியிலேயே இல்லாத ஒரு சத்தம்தான் போல.” 

“அப்படி இல்லடா…”

“வேண்டாம் அக்கா. அந்த மனுஷன் பைத்தியமாகிடுவாரோன்னு எங்களுக்குப் பயமா இருக்கு. அதுக்குத் தூபம் போடுற மாதிரி நீயும் அவர் பின்னாலேயே சுத்தி வர்ற. உனக்குக் கல்யாணம்னா சந்தோஷம்தான், நாங்க எல்லாரும் வந்து கிஃப்ட் கொடுத்து ஆட்டம் போட்டுட்டுப் போய்டுவோம். அவரும் சேர்ந்து ஆடுவார்; ஆனா, சிரிச்சுக்கிட்டே உள்ளுக்குள்ள செத்துட்டு இருப்பார். கொஞ்சம் தள்ளி இருக்கப் பாரு. அவரே வந்தாலும் நீ வராதே. ஒரு நாள் மொத்தமா அழுகுறதுக்கு பதிலா, இப்பவே கொஞ்சம் கொஞ்சமா பீல் பண்ணிட்டுப் போகட்டும்” என்று கூறிவிட்டு அவன் உள்ளே சென்றான்.

கண்களில் நீர் முட்ட, தொண்டை அடைக்க, யாருமில்லாத அந்த வாசலைப் பார்த்தபடி உறைந்து நின்றாள் சக்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!