Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 7

 

காதலும் கடத்தப்படும் – 7

 



Advertisement

“இந்து, இந்து… கிளம்பிட்டியா?”

வாயிலிலிருந்து இந்துமதியின் தோழி லதா, குரல் கொடுத்தாள். பி.ஏ. எக்கனாமிக்ஸ் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தோழியர் இருவரும் தட்டச்சு பயிற்சி மேற்கொண்டிருந்தனர். வேலைக்கு செல்ல அனுமதியில்லை. மேற்கொண்டு படிக்கவும் வீட்டில் விருப்பமில்லை. இந்துமதிக்கு வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தமும் இல்லை. டவுனில் மிகப்பெரிய ஜவுளிக்கடையின் உரிமையாளரின் மகளாக பிறந்த காரணத்தினால், வேலைக்கு செல்லும் எண்ணம் அவளுக்கு இயற்கையிலேயே இல்லாமல் போனது. அவளது தோழி குரலுக்கு அவசர அவசரமாக தனது மிதிவண்டியை தள்ளிக்கொண்டு வீட்டு வாயிலுக்கு வந்தாள்.

 

Advertisement

வாயிலில் தன் பிள்ளைக்கு சோறூட்டிக் கொண்டிருந்த அக்கா, “பத்திரமா போயிட்டு வா இந்து, டைப்ரைட் க்ளாஸ் தான?” என்றாள்.

Advertisement

“ஆமா அக்கா…”

“ஏன் இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் கிளம்பற?”

“அக்கா, மூலத்தெருவுல இருந்த க்ளாஸ டவுனுக்கு மாத்திட்டாங்க. சீக்கிரம் போனாத்தான் எந்த இடம்னு கண்டுபிடிக்க முடியும்…” குறுக்கிட்டாள், லதா.

Advertisement

“டவுனுக்கா? இந்து, நீ அவசியம் அவ்வளவு தூரம் போவத்தான் வேணுமா?” 

“அக்கா பொழுது போக வேண்டாமா? டைப்ரைட்டிங் நல்லா இருக்கு” என்றாள் இந்து, பணிவாக.

“அதுக்கில்ல, அவ்வளவு தூரம் போகணுமேன்னு… சரி கொஞ்ச நாள் தான், கல்யாணம் முடிஞ்சா எங்க போகப்போற…”

 

தோழியர் மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு, பேசியபடி சென்றனர்.

“என்னடி மாப்பிள்ளை பார்த்துட்டாங்களா?”

“இல்லடி, இப்பத்தான் ஜாதகத்தை எடுத்திருக்காங்க…”

“அப்போ உன் அக்கா சொன்ன மாதிரி சீக்கிரமே கல்யாணம் தான…”

“தெரியல…”

“என்னடி கல்யாணம்’னு சொன்னா சந்தோஷப்படாம இப்படி சோகமா பேசற?”

“பயமா இருக்கு… என் அக்கா, மாமாகிட்ட எவ்வளவு அடி வாங்கியிருக்கா தெரியுமா?! அவரு அடிக்கடி காசு கேட்பாரு. அடிப்பாரு. நாலு வருஷம் கழிச்சு பாப்பா பிறந்தது. அதுக்குள்ள அவ எவ்வளவு பாடு பட்டுட்டா தெரியுமா? என் அம்மா, அப்பத்தா கிட்ட வாங்காத வார்த்தையில்லை. என் அப்பா பிசினெஸ் டென்ஷன் எல்லாத்தையும் என் அம்மாகிட்ட தான் காட்டுவார். அவரு ஆசையா பேசி ஒரு நாள் கூட நான் பார்த்ததில்லை. என் அண்ணனும் என் அப்பா மாதிரியே இருக்கான். எனக்கு கல்யாணம் முடிஞ்சு அவனுக்கு பொண்ணு பார்த்துடுவாங்க. அது வந்து என்ன பாடு பட போகுதோ… கல்யாணம்னு நினைச்சாலே பயமா இருக்குடி…”

“வசதியான வீட்ல இருக்கற நீயே பயந்தா, என்ன மாதிரி மிடில் க்ளாஸ் நிலைமையெல்லாம் யோசிச்சு பாரு…”

“பணமே பிரச்சனையில்லைடி. மனுஷங்க தான் பிரச்சனை. ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி அரவணைப்பா பார்த்துக்கற ஆம்பளைங்க நாட்டுல ரொம்ப கம்மி. எதுக்கு கல்யாணம்? எதுக்கு இந்த கூத்து?”

“கவலைப்படாதடி, உன்னை நல்லபடியா பார்த்துக்கறவன கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சந்தோஷமா இருக்கப்போற பாரேன்”

அவர்களை கடந்து சென்ற வாகனம் ஒன்று சத்தம் எழுப்பி விட்டு செல்ல, “பார்த்தியாடி நல்ல சகுனம், நான் சொன்னதும் ஹார்ன் சத்தம் கேட்டுச்சு..” என்றாள், லதா.

“ம்ம்… பார்ப்போம்” என்று இந்து கூற, தோழிகள் சிரித்துக்கொண்டனர்.

 

கடைத்தெருவிற்குள் நுழைந்தவர்கள், மிதிவண்டியை தள்ளிக்கொண்டு நடக்கத் தொடங்கினர். 

“ஏதாவது அடையாளம் சொன்னாங்களாடி?” என்றாள், இந்து.

“போர்டு வச்சிருப்பேன்னு சார் சொன்னாரு. மாரிஸ் தியேட்டர் நேர் எதிர்க்க…”

அத்தெருவில் சற்றே உயரமான கட்டிடம் மாரிஸ் தியேட்டர். மஞ்சள் நிறம் சற்றே வண்ணமிழந்திருந்தாலும், கம்பீரமாக உயர்ந்து நின்றது. காம்பவுண்ட் சுவர்களால் சூழப்பட்டு வாயிலில் ஆளுயர இரும்புக்கதவுகளும் இருந்தன. அந்த கட்டிடத்தை சுற்றி மிகப்பெரிய காலியிடம் இருப்பதால், அடிக்கடி சாமியானா போடப்பட்டு சங்கத்து கூட்டங்கள் முதல் கட்சி கூட்டங்கள் வரை நடைபெற்றன. கட்டிடத்தின் பக்கவாட்டில், ஒரு சிறு பகுதியை ட்ராவல்ஸ் உரிமையாளர் ஒருவர் குத்தகைக்கு எடுத்து தனது இரண்டு மூன்று பஸ்சுகளை நிறுத்தி வைத்திருந்தார். எப்பொழுதும் அங்கு ஒன்று அல்லது இரண்டு பஸ்ஸுகள் நின்றுகொண்டேயிருந்தன. வாயிலில் இரும்பு கதவின் அருகே இருந்த பலகையில், திரையிடப்பட்டுள்ள திரைப்படம் அல்லது நாடகத்தின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. 

 

“இதுதான் மாரிஸ் தியேட்டர்” என்றாள், லதா.

“சின்ன வயசுல ஒரு தடவ இங்க வந்து படம் பார்த்த ஞாபகம். அதுக்கப்புறம் வந்ததே இல்லை.”

“உங்க கடை இங்கதான இருக்கு?”

“ம்ம்… கொஞ்ச தூரத்துல ஜங்க்ஷன் கிட்ட…”

“அப்படியும் நீ வந்ததில்லையா?”

“இல்ல”

இடப்புறத்தில் அவர்களது வகுப்பு இருக்க, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்ற மிதிவண்டிகளோடு தங்களுடைய மிதிவண்டியையும் நிறுத்திவிட்டு, உள்ளே சென்றனர்.

“கீழ ஜெராக்ஸ் கடைமா… க்ளாஸ் ரெண்டாவது மாடில மேல இருக்கு” என்று ஒருவர் கூற,

“சார், கலக்கறாரு, நல்ல வரும்படி போல” என்று லதா முணுமுணுக்க, இருவரும் சிரித்துக்கொண்டு மேலே படியேறிச் சென்றனர்.

 

ஒரு நாள் வகுப்பு முடிந்து, தோழிகள் கீழே இறங்க நினைக்க,

“இந்து, வாடி மொட்டை மாடிக்கு போய் பார்க்கலாம்” என்றாள், லதா.

“சார், திட்ட போறாரு” – தயங்கினாள், இந்து.

“எல்லா பிள்ளைகளும் போறாங்க, வா போகலாம்” என்க, இருவரும் மொட்டை மாடிக்கு சென்று கடைத் தெருவை வேடிக்கை பார்த்தனர். எதிரே மாரிஸ் தியேட்டரின் மொட்டை மாடி தெரிந்தது. 

“இப்போ என்ன படம்டி தியேட்டர்ல போட்டிருக்காங்க?” என்றாள், இந்து.

“இப்போல்லாம் தியேட்டர்ல படம் எதுவும் போடறது இல்லையாம். ஒரு டிராமா கம்பெனிகாரங்க தான் டிராமா போடறாங்களாம்.”

“என்ன ட்ராமா? சாமி கதையா? அதெல்லாம் திருவிழாவுல தான போடுவாங்க?”

“அதெல்லாம் இல்லடி. காதல் கதை தான் போடறாங்களாம். அதுல ஹீரோ பையன் சூப்பரா பாடுவானாம். பழைய சினிமா பாட்டெல்லாம் அட்டகாசமா பாடுவானாம்.”

“டிராமால எப்படி காதல் கதையெல்லாம் நடிக்க முடியும்?”

“தெரியல, ஒருதடவை போய் பார்த்தாதான் தெரியும்”

அவர்கள் பேசிக்கொண்டிருக்க, ஒரு இளைஞன் தியேட்டரின் மொட்டை மாடியில் வந்து நின்றான். 

 

“அவன் தான்டி ஹீரோ” என்று கூறிய லதா, உடனே கையுயர்த்தி அவனைக் கண்டு கையசைத்தாள்.

“தப்பா வேற யாருக்காவது கையசைச்சுடாத…”

“இல்லடி ஹீரோ தான், போஸ்டர்ல பார்த்திருக்கேன்” 

எங்கோ பார்த்திருந்தவன் எதேச்சையாக இவர்கள் புறம் திரும்ப, தொலைவில் யாரோ கையசைப்பதைக் கண்டு அவனும் கையசைத்துவிட்டு அவ்விடம் விட்டுச் சென்றான். 

“ஒரு நாள் நாம ரெண்டு பேரும் போய் டிராமா பார்ப்போம்டி” என்றாள் லதா.

இந்துவிற்கும் அந்த ஆவல் பிறந்தது.

 

“என்னடி இப்படி மழை பெய்யுது” நொந்தபடி நின்றிருந்தாள், லதா.

“ப்ச், சும்மாவே என்னை வீட்ல திட்டுவாங்க…”

“மழை பெய்யறதுக்கு கூட நீ என்ன பண்ணுவ?”

“குடை எடுத்துட்டு வரலல?!”

“கிழிஞ்சுது போ…”

அவளது வகுப்பில் படிக்கும் மேலும் சில மாணவர்களும் காத்துக்கொண்டிருந்தனர்.

 

ஒருவன் கொட்டும் மழையில் வேகமாக ஓடிவந்து, தோழிகளைக் கடந்து கடைக்குள் சென்றான். கருகருவென முடி, கச்சிதமாய் திருத்தப்பட்ட மீசை, சவரம் செய்த முகம், பளிச்சிடும் கண்கள், விடலை தேகம் என்று இருப்பவனது முகம் இந்துவுக்கு பரிச்சயமானதாக இருந்தது.

“ஹீரோடி” என்றாள், லதா, இந்துவுக்கு மட்டும் கேட்கும்படி.

“அன்னைக்கு மாடியிலிருந்து…”

“ஆமா, பக்கத்துல பார்க்க சினிமா ஹீரோ மாதிரி இருக்காருல…”

“ம்ம்…” என்றவள், அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

 

“அண்ணா இது ரெண்டு காபி வேணும்” என்று ஒரு கட்டு தாளினை நீட்டினான், அவன்.

“தம்பி இப்போ எனக்கு இன்ஸ்டிடியூட்ல க்ளாஸ் இருக்கு. ஒன்னு ரெண்டு பேப்பருனா உடனே காபி போட்டுடுவேன்… இதுக்கு நேரமாகும்…”

“அவசரமில்லை அண்ணே, நான் தியேட்டர்ல தான் இருக்கேன். சாயங்காலம் வந்து வாங்கிக்கறேன்”

“என்னப்பா உன்னை தெரியாதா? உன் டிராமா ஒன்னு கூட நான் தவறுனதில்லை… இது அடுத்த ட்ராமாவா?”

“ஆமா, சாயங்காலம் ரிஹெர்சல் தொடங்கணும்”

“அதுக்குள்ள காபி போட்டு வச்சுடறேன்”

நன்றி கூறியவன், தோழிகளைக் கடந்து வேகமாக சாலையைக் கடந்து தியேட்டருக்குள் சென்று மறைந்தான்.

 

அந்த கடையின் மேசையில் அவன் கொடுத்த தாள்களை வைத்துவிட்டு, கடையின் கதவினை தாளிட்டுவிட்டு மேலே படியேறிச் சென்றார், அவர்களின் ஆசிரியர். லேசாக மழை விடத் தொடங்க, மாணவர்கள் ஒவ்வொருவராக கிளம்பிச் சென்றனர். 

“வாடி” என்று இந்துவின் கைகளைப் பற்றிக்கொண்டு கடையின் கதவினைத் திறந்து, உள்ளே சென்று மீண்டும் கதவினை மூடினாள், லதா.

“என்னடி பண்ற? சார் பார்த்தா அவ்வளவு தான்…”

“அவர்தான் க்ளாஸ்ல இருக்காரே” என்றவள், மேசை மீது இருந்த தாள்களை கையிலெடுத்தாள். 

“காதலின் தீபமொன்று – இதுதான் அடுத்த டிராமா பேரா!” என்றவள் உடனே பிரித்து வாசிக்கத் தொடங்கினாள்.

“லதா வேணாம்டி யாரவது வந்துட போறாங்க”

“சும்மா பயப்படாத, வா மாடிக்கு போகலாம்”

“மாடிக்கா?”

“சார் க்ளாஸ் முடிய ஒரு மணி நேரமாகும். அதுக்குள்ள இதை படிச்சுட்டு கீழ கொண்டுவந்து வச்சுட்டு வீட்டுக்கு போயிடலாம்…”

“லதா…”

“பயந்து சாகாதடி” 

தோழிகள் இருவரும் அவன் கொடுத்த காகிதக் கட்டினை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றனர். மெல்லிய தூறலோடு மழை முடிவுரை எழுதிக்கொண்டிருந்தது. 

“டேங்குக்கு அடில உட்கார்ந்து படிக்கலாம்டி, அங்க தான் ஈரம் இல்லை” என்று லதா செல்ல, இந்து தயங்கினாலும் நாடகத்தின் கதையை படிக்கும் ஆர்வத்தில் உடன் சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!