Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

75. இந்த்ரவாணி - நாயகியின் நாயகன்

நாயகியின் நாயகன் – 5

நறுமணங்களும், இனிப்புகளும், எப்போதும் எந்த சூழலையும் இலகுவாக்கும்‌. ஆனால் அங்கிருந்த இருவருமே எந்த நாட்டமும் இல்லாமல் இருந்தனர். 



Advertisement

ரதி அங்கே இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து, ஜன்னல் வழியே விண்ணைப் பார்த்தபடி இருந்தாள். 

 கட்டிலில் அமர்ந்திருந்த மாறனோ அவளின் முதுகைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். 

Advertisement

Advertisement

நிமிடங்கள் மணிகளாக மாறிக் கொண்டிருந்ததே தவிர எந்த வித கருத்து பரிமாற்றங்களும் அவர்களுள் நிகழவில்லை. 

“ரதி” மாறனின் குரல் மெதுவாக அவளின் காதுகளை தீண்டியது. 

Advertisement

“ம்ம்.. சொல்லுங்க” என்றாளே தவிர திரும்பி பார்க்கவில்லை. 

“என் மேல கோபமா, வெறுப்பா என்ன உணர்வு உங்களுக்கு இருக்குன்னு தெரியல. ஆனா நான் பண்ணதில உங்களுக்கு சுத்தமா விருப்பமில்லன்னு தெரியும். ஆனா நீங்க எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லலாம்.” 

“எனக்கு எந்த உணர்வுகளும் இல்ல. சம்பந்தமில்லாத ஒருத்தர் மேல் கோபம், வெறுப்பு, பிடிக்காத உணர்வுன்னு வர வாய்ப்பில்லை.” 

“ நமக்குள்ள திருமணம்னு ஒரு பந்தம் வந்து ரொம்ப நேரமாச்சு ரதி‌” 

“ம்ம்.‌ திருமணம் இரு மனங்களுக்கு இடையில் பிடித்தம் வந்தப்புறமா நிகழ்ந்தா அதற்கு ஒரு அர்த்தம் இருக்கு.” 

“காதல்ல வேணா அது சாத்தியமாகலாம். இது மாதிரி திடீர் திருமணங்கள்ல அதெல்லாம் எதிர் பார்க்க முடியாது இல்ல.” 

“திடீர் திருமணம்.. சரியா சொன்னீங்க. ஆனா அது கூட திடீர் திடீர் திருப்பங்களோட நடந்தது‌. விருப்பங்களோட இல்ல..” 

“மாதவனை திருமணம் பண்ணியிருந்தாலும் இப்படித்தானே நடந்திருக்கும்” 

“ஆமா.. யாரை பண்ணியிருந்தாலும் அது என் விருப்பத்திற்கு மாறா… ம்ம்.. எதிரானது.” 

“விருப்பங்கள் எப்போ வேணா மாறலாம் ரதி.” 

“மாற கூட விருப்பம் இருக்கனும்” 

“ஒன்னு மட்டும் புரியுது. உங்களுக்கு சுத்தமா என்னை பிடிக்கல.” 

“ம்ம்..” 

“நான் உங்களை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு தெரியுமா..” 

“ரொம்ப தாமதமா காரணம் சொல்றீங்க” 

“ஞாயம் தான். முன்னாடியே சொல்லியிருக்கனும். கல்யாணம் நின்னப்புறம் என்னவாயிருக்கும்னு நினைக்கிறீங்க.?” 

“என்ன ஆயிருக்கும்னு தெரியல. ஆனா எங்க வீட்டுக்கு நான் நானா போயிருப்பேன்.” 

“போய்.. நாளைக்கே எங்கப்பா வந்து நின்னுருப்பார். வட்டியும் முதலையும் வசூல் பண்ணியிருப்பார். குடுக்கலன்னா உங்க வீடு, தறி எல்லாம் அவர் பேருக்கு மாறியிருக்கும்” 

“அது முன்னாடியே தெரியுமே. எதுக்கும் நான் தயாரா தான் இருந்தேன். உங்க அண்ணன் மட்டும் விஷம் குடிக்கலன்னா அதான் நடந்திருக்கும்.” 

“எல்லாம் போய் என்ன பண்ணியிருப்பீங்க.? உங்கப்பாவை நினைச்சு பாத்தீங்களா?” 

“அவரே என்னை சுமையா தானே பார்த்தார். இல்லன்னா உங்க வீட்ல வந்து கேட்டதும் யார் என்னன்னே தெரியாம என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்வாரா..?” 

“பெரும்பாலான திருமணங்கள் இப்படித்தானே நடக்குது ரதி..” 

“பெண்ணுனாலே கடமையாத்தான் பாக்கறாங்க.. இதே ஒரு ஆணாயிருந்தா இப்படி யாருக்கோ கட்டித்தந்துட்டா அவங்க கடமை முடிஞ்சதுன்னு நினைப்பாங்களா..?” 

“கரெக்ட் தான். ஆனா இந்த சமூகம் அப்படித்தானே பெண்களுக்குன்னு ஒரு நியாயத்தை தனியா போதிச்சிருக்கு. அவரும் என்ன பண்ணுவார்?” 

“ஹ்ம்ம். ஆனா எல்லாம் போய் இருந்தாலும் நான் என் அப்பாவை எந்த சூழல்லயும் விட்டுத்தராம கடைசி வரைக்கும் பார்த்திருப்பேன்”

“ஆனா உங்கப்பா நீங்க விருப்பமில்லன்னு சொன்னதும், தறியோ, வீடோ, மானமோ போனாலும் உங்க விருப்பத்துக்கு சரின்னு தானே சொன்னார்.?” 

“ஆமா.. அதுக்கு அப்புறமா தானே உங்க அண்ணன் புண்ணியம் கட்டிக்கிட்டார்.? அவருக்கு ஏற்கனவே ஒரு பொண்ணு மேல் விருப்பம் இருந்தும் எதுக்கு என் வாழ்க்கையை கெடுத்தார்?”

“இதுவும் ஒரு காரணம் ரதி.. நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க” 

“நீங்க ஏன் என் சுமையை தோள்ல சுமக்கனும்னு நினைச்சீங்க..? எப்படியிருந்தாலும் எங்க கடனை நான் தான் அடைச்சிருக்கனும். ஏற்கனவே உங்கப்பா அதெல்லாம் வேணாம்னு சொல்லி என்னை பெண் கேட்டப்பவே எனக்கு அசிங்கமா இருந்துச்சு. குற்றவுணர்ச்சியா இருந்துச்சு. கல்யாணம் நின்னப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். இப்போ எனக்கு காலம் முழுதும் அந்த குற்றவுணர்ச்சியை குடுத்திட்டீங்க.” 

“தறியையும், நெசவையும் நேசிக்கிறவங்க, அது தனக்கு சொந்தமில்லாது போனா உயிரற்ற உடலாதான் வாழ்வாங்க ரதி. அது புரிஞ்சுதான் இப்படி பண்ணேன்..” 

“இப்போ எங்களால ஒரு தறிய சொந்தமாக்கிக்க முடியலன்னா என்ன? நாளைக்கு ஒரு காலம் வராமயா போகும்? கண்டிப்பா எங்கப்பாக்கு நான் கஷ்டப்பட்டு உழைச்சு வாங்கித்தந்திருப்பேன்” 

“எப்போ..? மொத்த கடனையும் நீங்க அடைச்சு முடிச்சு அதுக்கப்புறமா உங்கப்பாக்கு முடியாத போது வாங்கித் தந்து என்ன பிரயோஜனம்?” 

சட்டென அவனை திரும்பிப் பார்த்தாள். 

“அதுக்காக..” 

“ஹ்ம்ம். இங்க நீங்க பாதுகாப்பா இருக்கலாம். உங்க தறி, வீடு எல்லாமே உங்கப்பாக்கிட்டயே இருக்கும்.” 

“தங்கக்கூண்டுக்குள்ள வச்சு என்னை வேடிக்கை பார்க்க நல்லா இருக்கு, நீ பாதுகாப்பா இருக்கேன்னு சொல்வீங்க போல” 

“நீங்க ஏன் இதை கூண்டா நினைக்கறீங்க ரதி. கூடடைய ஒரு பாதுகாப்பான இடம்னு நினைச்சுக்கோங்க” 

ரதியின் புருவங்கள் உயர்ந்தன. 

“ நிஜமா தான். நீங்க விருப்பப்படறபடி இங்கே இருக்கலாம். இது நிச்சயமா கூண்டு இல்ல. உங்க கூட தங்கியிருக்க ஹவுஸ்மேட்னு என்னை நினைச்சுக்கோங்க. ப்ரெண்ட்னு நினைச்சா என் கூட எதை வேணாலும் ஷேர் பண்ணிக்கலாம்.” 

“அதெப்படி நீங்க வேணா ப்ரெண்டாவோ, இல்ல ஹவுஸ்மேட்டாவோ என்னை கன்ட்ரோல் பண்ணாம இருக்கலாம். ஆனா உங்க வீட்ல இல்ல இல்ல.. உங்கப்பா விருப்பத்துக்கு எதிரா எதுவுமே நடக்காது போலயே..” 

“நம்ம கல்யாணம் நடந்திருக்கே” 

“ம்ம் அதனாலத்தானே கேட்கிறேன். நான் இந்த வீட்டுக்கு கட்டுப்பட்டவ தானே..” 

“இல்ல.. நம்ம ரெண்டு பேருமே இந்த வீட்டுக்கு கட்டுப்பட்டவங்க இல்ல” 

“என்ன?” 

“ம்ம்.. உங்களை கல்யாணம் பண்றதா இருந்தா அப்பாவோட சொத்துக்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லன்னு சொல்லி அதுக்கு நான் ஓகேன்னு சொன்னப்புறம் தான் நம்ம கல்யாணம் நடந்தது. நாளைக்கு நாம இந்த வீட்டை விட்டு கிளம்பிருவோம்” 

ரதிக்கு தலை சுற்றியது. ‘யார் இவன்…? எதற்காக எனக்காய் இவன் சொந்தங்களையும், சொத்துக்களையும் விட்டு விட்டு வர வேண்டும்?’ 

“அப்படி எதுக்காக நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கனும்.?” 

“இவ்வளோ நேரம் அந்த காரணங்களை தானே சொன்னேன் ரதி” 

“நிச்சயமா என்னால் இதை ஏத்துக்க முடியல.” 

“இனி நீங்களும் நானும் ஒரே தட்டில் இருபக்கம் சமமா இருக்க மனுஷங்க தான்..” 

“இல்ல.. இது இப்படி நடக்க கூடாது. நாளைக்கு உங்க வீட்ல இருக்கவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு நான் எங்க வீட்டுக்கு போய்டறேன். நீங்க எப்பவும் போல உங்க வீட்ல இருங்க..” 

“ஓ அப்ப நான் பண்ணதுக்கு எதுக்கும் நீங்க மதிப்பு கொடுக்கல..” 

“மதிப்பு தரதால தான் நானே போய்டறேன்னு சொல்றேன்” 

“அப்ப ரம்பாவோட நிலைமை. நீங்க என் கூட வாழப் போறீங்கன்னு நிம்மதியில் தான் அவங்க இங்க வாழ வந்திருக்காங்க. உங்களை மாதவன் விரும்பறதா எல்லார் முன்னாடியும் சொன்னப்புறம் நீங்க இந்த வீட்டை விட்டு போய்ட்டீங்கன்னா எப்படி அவங்க நிம்மதியா வாழ்வாங்க?அதுவும் என் அண்ணன் மாதிரி ஒரு ஆளோட?” 

“ஆக எல்லார்க்காகவும் என் வாழ்க்கையை நான் தியாகம் பண்ணனும்னு தான் எதிர்ப்பாக்கறீங்க இல்ல?” 

“இது தியாகம் இல்ல ரதி. விட்டுக்கொடுத்தல். நீங்க நாளைல இருந்து உங்க அப்பாக்கு பொண்ணா என்ன வேணாலும் செய்யலாம். எனக்கு மனைவிங்கறது வெளியில் இருக்கவங்களுக்காக தான்.” 

“ம்ம்.. எப்படியோ என் வாழ்க்கையை நான் குற்றவுணர்ச்சியோட,  அடுத்தவங்களுக்கு கடமைப்பட்டுத்தான் வாழனும்னு பண்ணிட்டீங்க” 

“ஃப்ரீயா விடுங்க. நமக்கு பிடிச்ச மாதிரி ஒரு நாள்,  வாழ்க்கை ஒரு நொடியில் கூட மாறிடும். அதுக்காக நாம எடுக்கற ரிஸ்க்ன்னு இதை நினைச்சுக்கோங்க.. நீங்க கூண்டுப்பறவை இல்ல.. சுதந்திரமான பறவை தான்.. இதை மனசில் எப்பவும் வச்சுக்கோங்க. குட் நைட். நீங்க பெட்ல படுத்துக்கோங்க. நான் அப்படி சோஃபால படுத்துக்கறேன்.” என்று அவளை பார்த்து சொல்லி விட்டு புத்தக அலமாரியில் இருந்து ஒரு டைரியை எடுத்துக் கொண்டு சோஃபாவில் போய் அமர்ந்தான். 

ரதி கண் கூட சிமிட்டாமல் மெல்ல அவனை பார்த்துக் கொண்டே கட்டிலில் அமர்ந்தாள். 

“மறந்துட்டேன் ரதி. நாளைக்கு நீங்க போட்டிருக்க நகையெல்லாம் கழட்டி அம்மாட்ட தந்திடுங்க. தாலி மட்டும் இருக்கட்டும். அது அண்ணன் வாங்கினது. அதுக்கு அவருக்கு நான் பணம் தந்திடுவேன். உங்களுக்கு ஓகே தானே..” 

“நான் தான் சொன்னேனே.. எனக்கு விருப்பமில்லாதது மேல எனக்கு எந்த உணர்வும் இல்லன்னு. கண்டிப்பா நாளைக்கு எல்லாத்தையும் கொடுத்திடலாம்.” 

“ம்ம் குட்நைட்” என்று சொல்லிவிட்டு பேனாவை எடுத்தான். 

‘நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா.. தன்னையே  சசியென்று சரணமெய்தினேன்..” என்று பாரதியாரின் வரிகளை எழுதினான். 

‘இந்த மாறனின் காதல் அம்புகள் உன் மேல் பாய்வதற்காய் பிறவித் தவம் செய்து காத்திருக்கிறேனடி கண்ணம்மா.. என் ரதியே..’  சேர்த்து எழுதி ஒரு சிறிய வட்டத்திற்குள் ஒரு பெண்ணின் முகத்தை வரைந்து வட்டத்தை சுற்றி இரு சிறகுகள் வரைந்து வைத்தான். 

********

கட்டிலை சுற்றி இருந்த பூச்சரங்களை எல்லாம் ஒவ்வொன்றாய் பிய்த்துப் பிய்த்து தரையில் போட்டுக் கொண்டிருந்தாள் ரம்பா. 

அவளின் முகத்தை கூட பார்க்க பிடிக்காமல் ஒரு நாற்காலியில் அமர்ந்து தன் அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன். அவனை கோபமாக பார்த்தாள் ரம்பா. 

“உனக்குலாம் மனசாட்சியே இல்லையா..பெரிய இவன்ன்னு நினைப்பு இல்ல..” 

“….” 

“எவ்ளோ திமிரு இருந்தா இவ வேணாம்ணா, எனக்கு ரதி தான் வேணும்னு என் முன்னாடியே உன் அண்ணன்ட்ட சொல்லுவ..” 

“…” 

“காதலிக்கறப்ப இல்ல இல்ல என் பின்னாடி சுத்தறப்ப, தாலி கட்டலைன்னாலும் நீதான் என் மனைவி.. உன்னைத் தவிர எந்த பொண்ணையும் இந்த ஜென்மம் முழுக்க பாக்க மாட்டேன்னு, என்னலாம் டயலாக் விட்ட..” 

“…..”

“எப்பவும் போல நம்ம வீசின பணத்துக்கு கொஞ்ச நேரம் சுத்திட்டு போற பொண்ணுங்க மாதிரி இவளும் இருப்பான்னு தானே என்னை அவ்ளோ அசால்ட்டா கைகழுவி விட்ட.. நினைச்சு பார்த்திருக்க மாட்ட இல்ல.. நான் இப்படி வந்து நிப்பேன்னு.” 

“…..” 

“நான் யாரு.. என் பேக்ரவுண்ட் என்ன, என் அப்பா யாருன்னு எதைப் பத்தியும் தெரியாம என் மேல் கை வச்ச பாரு… அதுக்கப்புறம் வசதியா என்னை கழட்டி விட்ட பாரு.. ஏமாளியா இருப்பேன்னு நினைச்சியா..ஒன்னு சொல்றேன்…என்னிக்கு இருந்தாலும் உனக்கு பொண்டாட்டி நான் தான். எவளையும் நீ இனிமே சைட் கூட அடிக்க முடியாது.‌” 

“….” 

“காசு குடுத்து என்னை அனுப்பி விட சொன்னியே.. என் பேர்ல இருக்க சொத்து எவ்ளோன்னு தெரியுமா உனக்கு.. நாலு தலைமுறைக்கு எங்கப்பா சொத்து சேர்த்து வச்சிருக்காரு.. உங்கப்பாலாம் பிச்சை எடுக்கனும் பிச்சை…” 

“அடிங்க.. வாயை மூட்றி. நானும் பாத்துட்டே இருக்கேன். வாய்க்கு வந்ததெல்லாம் பேசற. ரெண்டு மாசம் என்ன பண்ண? அப்போ வந்து நிக்க வேண்டியது தானே. இப்ப வந்து என் வாழ்க்கையை அழிச்சிட்ட இல்ல.. இதுல பொண்டாட்டியாம் பொண்டாட்டி.. “ மாதவன் எகிறினான். 

“ஓ அடிச்சிருவியா..கை வச்சுத்தான் பாரேன். ஒரு செகண்ட் நான் கால் பண்ணா நீ காலி..  நான் மாசமா இருந்ததால நீ தப்பிச்ச.. இல்ல உன் குடலை உருவி போட்டிருப்பாரு என் அப்பா..” 

“என்னடி மாசமா இருக்கேன்னு மாசமா இருக்கேன்னு பேசிட்டே இருக்க காலையில் இருந்து. நான் கூப்பிட்டதும் என் கூட பல்லை காமிச்சிட்டு வந்து…..வேணாம்.அசிங்கமா கேட்டிருவேன்..” 

“ என்ன படுத்தவதானேன்னு தானே கேட்கற.. ஆமா டா. நீ என் புருஷன் நினைச்சு தான் வந்தேன் உன்ட்ட.. நீ இப்படிப்பட்ட மோசமானவனா இருப்பேன்னு எனக்கு தெரியுமா?” 

“வாயை மூடு முதல்ல. வெளிய கேட்க போகுது. என்னவோ என் குடும்பம் அப்பிடி, என் அப்பா இப்பிடின்னு சொல்லிட்டு அசிங்கமா பேசற. இப்போ சொல்றேன் கேட்டுக்க. இந்த குழந்தையை மட்டும் என்னோடதுன்னு ஏத்துக்கவே மாட்டேன்.. எவனுக்கு பொறந்ததுன்னு தெரியாம பொறந்து சாகட்டும்.”

ரம்பா அதிர்ச்சியில் உறைந்துப் போனாள். கண்களின் தாரை அவள் முகத்தை நனைத்தது. 

“என்ன சொன்னீங்க.. இது உங்க குழந்தை இல்லன்னா… இந்த உலகத்தை பார்க்க கூட இல்லாத பிஞ்சை பாத்து சாக சொல்றீங்களே நீங்க மனுஷனா? ஒரு குழந்தை இல்லன்னு அங்கங்க எவ்ளோ கஷ்டப்பட்டு செலவு பண்ணி அவங்க குடும்பத்துக்கு ஒரு வாரிசை உருவாக்கறாங்க.. நீங்க என்னடான்னா வரமா வந்த குழந்தையை இப்படி சொல்றீங்க.. ஆத்திரம் உங்க கண்ணை மறைக்குதா? என் மூஞ்சை பாத்து சொல்லுங்க.. இது உங்க குழந்தை இல்லன்னு….” 

“…..” வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லாமல் மரம் போல் நின்றான் மாதவன். 

“பாவி பாவி.. என்ன வார்த்தை சொல்லிட்ட.. எவ்ளோ கனவு கண்டிருப்பேன்.. உன்னோட சேர்ந்து இந்த குழந்தையை நல்லபடியா வளர்த்து ஒரு சாம்ராஜ்யத்துக்கே வாரிசா கொண்டு வரணும்னு.. மனசாட்சியை கொன்னுட்டு இந்த வார்த்தையை சொல்ற அளவுக்கு உனக்கு ரதி மேல் காதல்.. இல்ல இல்ல காமம். அவளையும் இப்படி தான் யூஸ் பண்ணிட்டு தூக்கி எறிஞ்சிருப்ப.. நல்ல காலம் அவ புண்ணியம் பண்ணதால் தப்பிச்சிட்டா.. போயும் போயும் உன்னை போய் காதலிச்சேனே..என்னை சொல்லனும்.” 

“அவளை பத்தி பேச உனக்குத் தகுதியே இல்லடி.. நீ பேய். பிசாசு. பொண்ணே இல்ல. பணத்திமிர்ல ஆடற.. “ 

“ஓ செருப்படி வாங்காம தப்பிச்சிட்ட தைரியத்தில பேசறியா.. நாளைக்கு விடியட்டும்.. உன்னை எப்படி நாறடிக்கறேன்னு பாரு. இன்னும் அவளை மறக்க முடியல இல்ல..” 

“ஏய் ஏய்.. அறிவிருக்கா உனக்கு. அவ என்னிக்கு என் தம்பிக்கு மனைவியா ஆயிட்டாளோ அவளை எப்படி நான் அப்படி நினைப்பேன். இந்த திமிர்ப்பேச்சுக்கு தான் நீ அழியப் போற..” 

“ஓ.. என் பிள்ளையை சொன்ன.. இப்போ என்னை சொல்றியா.. ச்சீ நீ எல்லாம் என்ன மனுஷன். நாளைக்கு உன்னை இந்த உலகத்துக்கு அடையாளம் காமிச்சிட்டு, நீ பேசின பேச்செல்லாம் எல்லாருக்கும் சொல்லிட்டு, நானும் என் பிள்ளையும் செத்துப் போறோம். ஆனா அதுக்கும் நீ தான் காரணம்னு எழுதி வச்சிட்டு தான் போவேன். ரதி மேல் நீ இன்னும் வச்சிருக்க ஆசையால தான் இப்படி பண்றேன்னு எழுதி வச்சிட்டு சாவேன். அதுக்கப்புறம் பாரு என் அப்பா உன்னையும் இந்த வீட்டையும் என்ன பண்றாருன்னு..” ஆத்திரத்தில் கத்தினாள். 

அவளை நெருங்கி கழுத்தை பிடித்து, “அடங்கவே மாட்டியா.. உங்கப்பன் என்ன பண்ணிருவான்னு நானும் பாக்கிறேன். நீ செய்.. என்ன நினைக்கறியோ அதை செய்.. ஆனா ரதி பேரை இதுல இழுத்தன்னு வச்சிக்க.. அவ்ளோ தான் சொல்லிட்டேன். என் தம்பி வாழ்க்கையை அழிக்க நினைச்ச.. அவ்ளோதான்.” என்று அவளை சுவற்றில் சாய்த்து விட்டு பெருமூச்சு விட்டபடி கதவை திறக்கப் போனவனுக்கு தடால் என்ற சத்தம் கேட்டது. 

திரும்பி பார்த்தால் ரம்பா கீழே மயக்கமாகி விழுந்துக் கிடந்தாள். 

ஓடி வந்து அவளை கன்னத்தில் தட்டி பார்த்தவன், அவள் கண் விழிக்காததால் தண்ணீரை எடுத்துத் தெளித்தான். அப்போதும் அவள் எந்திரிக்காததால் பயந்து போனான். 

வெளியே கதவை திறந்து ஓடிப்போய், “அம்மா.. அப்பா..‌ அண்ணா…. டேய் மாறா.. “ என்று அலறினான். அந்த நடுநிசியில் அவனின் அலறல் ஓங்காரமாக அந்த பெரிய வீட்டை அதிர வைத்தது. 

அத்தனை பேரின் அறைக்கதவுகளும் திறந்தன. 

அத்தனை பேரின் முகமும் பயத்திலும்,  குழப்பத்திலும் வெளிறி இருந்தன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!