Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

48. கலாராணி பாஸ்கர் - காதல் எனும் மாயன்

காதல் எனும் மாயன்-13

அத்தியாயம் -13

வெளியில் வந்து கார் பார்கிங்கிற்கு நடந்து செல்லும் வழியெல்லாம் அவன் தன் தந்தையை எதோ மாஸ் ஹீரோவைப் போல ஆச்சரியமாகப் பார்த்தபடியே வந்தான்.

“கமிஷனர்ன்னு சொன்னதும் எப்படி பம்மறான்னு பாத்தியா..? முகங்கூடத்தெரியாத இத்துனூண்டு போட்டோவ வச்சி என்பையன ஜட்ஜ் பண்றான்.. இவன்லாம் என்ன காலேஜ் நடத்துறான்.. கிராஜுவேஷனுக்கு மட்டும் வரனுமாம்..எதுக்கு..? நீ கோல்ட்மெடல் வாங்கும் போது பக்கத்துல நின்னு போட்டோ எடுத்து “அவர் காலேஜ் பிரைட்” ன்னு ஸ்டேடஸ் வைக்கத்தானே.. ஒன்னும் வேண்டாம் நீ போகாதடா தம்பி..” என்று பொறுமிக்கொண்டே வந்தார்.. தன் அப்பாதானா இது என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்னடா அப்படி பாக்குற..?”



Advertisement

“இல்லப்பா உங்களுக்கு என்மேல கோபம் இல்லையா?”

“நான் ஏன் கோபப்படனும்? ஒரு அப்பாவா அந்த போட்டோவ பார்க்கத்தான் கொஞ்சம் சங்கடமா இருந்தது. உனக்கும் அப்படித்தானே இருக்கும்..? சாரிடா யூ ஹேவ் டு கோ த்ரூ திஸ்”

“தாங்க்ஸ் ப்பா..”

Advertisement

“இப்ப இந்த தாங்க்ஸ் எதுக்கு..?”

Advertisement

“பிரின்சிபல் கிட்ட என்னை விட்டுக்குடுக்காம பேசினதுக்கு..”

“நீ என் புள்ளடா..உன்னை நான் எப்படி விட்டுக்குடுப்பேன்..?”

வசீகரனின் கண்கள் நீர்த்திரையிட்டு அவன் பார்வையை மறைக்க நடைபாதை தெரியாமல் அவன் நின்றுவிட்டான். இதை கவனித்த சிவசந்திரனும் நின்று விட்டார்.

Advertisement

“என்ன தம்பி..” என்றார் மகனைப்பார்த்து.

“சாரிப்பா..”

“ஏன் டா..”

“என்னால உங்களுக்கு எப்பவுமே கஷ்டம்தான்.. பிரின்சிபல் முன்னாடி நீங்க அவமானப்படுற மாதிரி பண்ணிட்டேன்..”

“நான்சென்ஸ்.. யாரு சொன்னா உன்னால எனக்கு கஷ்டம்ன்னு.. நீ என்னோட பிரைட்(pride) டா.. உன்னை நினைச்சி எனக்கு எவ்ளோ பெருமையா இருந்தது தெரியுமா? அவங்க அவ்ளோ கேட்டும், கூட இருந்த பொண்ண காட்டிக்குடுக்காம அவளோட பேர காப்பாதுன பாரு.. அப்படியே உங்க அம்மாவோட வளர்ப்பு.. அவ இருந்திருந்தா ரொம்ப பெருமைபட்டிருப்பா தெரியுமா.. அதுமட்டும் இல்லாம அந்த பிரின்சிபலையும் சும்மா விட்டிருக்கமாட்டா..உண்டு இல்லைன்னு பண்ணியிருப்பா..” என்றார் தன் மனைவியின் நினைவில் லேசாக சிரித்தபடி..

“சாரிப்பா..” என்றபடி அவரைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தான் வசீகரன்.. தலைக்குமேல் வளர்ந்தாலும் தந்தைக்கு அவன் சிறுபிள்ளைதானே.. ஆறு வருடங்களுக்குப் பின்னான மகனின் ஸ்பரிசம்..அவரையும் உணர்ச்சிவசப்படவைக்க .. ஆறுதலாக அவன் முதுகை வருடிக்கொடுத்தபடி தன் கண்ணோரம் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டார்.

“நீங்க என்ன வெறுத்துட்டீங்கன்னு நினைச்சேன் பா..”

“என்னடா சொல்ற நான் ஏன் உன்னை வெறுக்கப்போறேன்..”

“அம்மாவுக்கு என்னாலதானே ஆக்ஸிடெண்ட் ஆச்சு.. நான் மட்டும் அன்னிக்கு அவங்கள வர சொல்லி அடம்புடிக்காம இருந்திருந்தா அவங்க இப்ப நம்ம கூட இருந்திருப்பாங்க.. என்னாலதான் எல்லாம்.. அவங்கள உங்ககிட்ட இருந்து பிரிச்சிட்டேன்..சாரி பா..” என்றவனின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது.

“என்ன பேசுற நீ.. அவளோட ஆயிசு முடிஞ்சி போச்சி போயிட்டா.. அதுக்கு நீ எப்படி காரணம் ஆக முடியும்? அப்படி பார்த்தா அன்னிக்கு பஸ்ல வரேன்னு சொன்னவள “நீ பஸ்லலாம் வர வேண்டாம்”ன்னு சொல்லிட்டு கார் ஏற்பாடு பண்ணி வர வச்சேன்.. அப்ப அவ சாவுக்கு நான் தான் காரணமா..? இப்படி நடக்கனும்ன்னு விதி அதை யாரால மாத்த முடியும்?நடந்தத அக்ஸெப்ட் பண்ணிகிட்டு மூவ் ஆன் ஆகுறதுதான் நம்ம மன நிம்மதிக்கு நல்லது…” என்று பெருமூச்சுடன் முடித்தவர் , மகனை யோசனையாகப்பார்த்து..

“நீ இவ்ளோ நாளா இப்படி நினைச்சி கவலைப்பட்டுட்டு இருக்கன்னு எனக்குத் தெரியாம போச்சே.. உங்க அம்மா இல்லாத சோகத்துல என்கிட்ட ஒட்டாம விலகி இருக்கன்னுதானே நான் நெனைச்சேன்..”

“இல்லப்பா அம்மா ஆக்ஸிடெண்ட்டுக்கு நான் தான் காரணம்ன்னு நீங்க என்னை வெறுத்துட்டீங்கன்னு  நெனைச்சேன் பா..”

“நீ என் உசுருடா கண்ணா.. உன்னை என்னால எப்படி  வெறுக்க முடியும்?அனுவோட ஜெராக்ஸ் நீ..  சில நேரம் உன்னைப்பார்க்கும் போது அவ நியாபகம் வந்து நெஞ்சையடைக்கிறமாதிரி ஆகிடும்.. அதனால தான் உன்னைவிட்டு கொஞ்சம் தள்ளியிருப்பேன்.. மத்தபடி.. நீ என் ராஜா டா..”

மனம்விட்டு இருவரும் பேசப்பேச அதுவரை இருவருக்குமிடையே இருந்த தவறான புரிதல் எல்லாம் சரியாகிவிட இருவருக்கும் இடையில் ஒரு இலகுவான தோழமை உருவானது..

“நீ கார் ஓட்டு வசி.. எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு முடிச்சிடுறேன்..” என்று காரில் ஏறி அமர்ந்தார்.

“ஓகே பா..” என்ற வசீகரன் காரை எடுத்தான்.

“வசீ.. நாளைக்கு பவானில அம்மாவுக்கு சாமி கும்பிடப் போகனும்,திதி நாளைக்குதான் வருதாம். இந்த வருஷமாவது நீ வருவல்ல..?”

“வரேன் பா..” என்றான் உணர்ச்சிவசப்பட்ட குரலில்..

மனதில் இருந்ததையெல்லம் தன் தந்தையிடம் கொட்டிவிட்டதாலோ என்னவோ இவ்வளவு நாளும் மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரம் இறங்கி மனம் லேசானது போல் உணர்ந்தான்.

“சரி.. அந்த போட்டோல இருந்த பொண்ணு யாரு? லவ் பண்றியா..?” என்று ஆர்வமானார் சிவசந்திரன்.

“பா.. அப்பா மாதிரிபேசுங்கப்பா…” என்றவனின் கன்னம் லேசாக சிவந்திருந்தது.

மனம் அதிதியிடம் தன்னியல்பாக சென்றது..

“எப்படி இருக்காளோ.. அந்த போட்டோவ பார்த்து கண்டிப்பா டென்ஷன் ஆகியிருப்பா.. சும்மாவே கத்துவா.. இப்ப வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாளே..ரொம்ப  பயந்திருப்பாளோ..?” என்று மனம் கவலைக்கொண்டது.

அதிதியை பார்க்கமுடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது..ஆனால் இப்போது அவர்கள் இருக்கும் சூழ்நிலையில் அவளிடம் பேசினாலும் தேவையில்லாத பிரச்சனை உருவாகலாம்.அதனால் இப்போதைக்கு பேசாமல் இருப்பது தான் நல்லது..’ என்று முடிவெடுத்தவன்..

“ஐ மிஸ் யூ கிட்டி..” என்று  மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

மறுபுறம் அதிதிக்கோ ஒவ்வொரு நொடியும் நரகமாகக்கழிந்தது. எப்போது எந்த பக்கமிருந்து குண்டுவிழுமோ என்று “திக்.. திக்..” என்று இருந்தது.

அறையை விட்டு வெளியே போகவேண்டும் என்ற நினைப்பிலேயே நடுங்கிப்போனாள்.

ஒருநாள் முழுக்க அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.

விஷயமறிந்து அவளின் மற்ற நண்பர்களும் இவளைத் தொடர்புகொள்ள முயல வர்ஷினி தான் அவர்களுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாள்.

மாலையில் கால் செய்த விஷால்

வசீகரனை சஸ்பெண்ட் செய்துவிட்டனர் என்ற தகவலைத் தந்தான்.

“அந்த வசீகரனை அவங்க அப்பாவ வரவழைச்சி  சஸ்பெண்ட் செஞ்சி அனுப்பிட்டாங்கலாம். ஆனா கூட இருந்த பொண்ணு யாருன்னு சொல்லமாட்டேன்னு சொல்லிட்டானாம்.. சோ அதிக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு நெனைக்கறேன்..” என்றான்.

“இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்..?” என்று விசாரித்தாள் வர்ஷினி.

“இப்ப டாக் ஆஃப் த டவுனே இதான்.. ஹாஸ்ட்டல்ல எல்லாரும் இதைப்பத்திதான் பேசிட்டு இருக்காங்க..”

“அப்பாடா..அதிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைல்ல..இப்பதாண்டா எனக்கு நிம்மதியா இருக்கு. இங்க இவள பாக்க முடியல..ஒரேடியா உடைஞ்சி போயிருக்கா..”

“பாவம்.. அவ ரொம்ப சாஃப்ட் டைப்… இதெல்லாம் அவளால தாங்க முடியாது.”

“ம்ம்..ஆமா.. எதோ கெட்டதுலயும் ஒரு நல்லதா அந்த வசீகரன் இவள காட்டிக்கொடுக்காம இருந்தானே அதுவே போதும்..”

“அவனும் நல்லவன் தான் போல… எல்லாரும் அவன பத்தி நல்லவிதமாதான் சொல்றாங்க..”

“என்ன நல்லவன்.. அவனால தான் அதி இவ்ளோ பெரிய பிரச்சனையில் மாட்டியிருக்கா.. இல்லன்னா ஸ்கேண்டல்ல மாட்ற பொண்ணா அவ..?” என்று வர்ஷினி கோபமாக திருப்பிக்கேட்கவும்..

விஷால் அவளை சமாதனம் செய்யும் விதமாக.

“அம்மா தாயே நீ சாமியாடாத.. நான் எதுவும் பேசல போதுமா..” என்றான்.

“நான் ஒன்னும் சும்மா சொல்லல விஷால்.. அந்த வசீகரனோட சங்காத்தமே வேண்டாம்.. அவன பார்த்ததுல இருந்துதான் அதிக்கு கெட்ட நேரமே ஆரம்பிச்சது.அவன் கூட பேசாம இருக்கறதுதான் அவளுக்கு நல்லது..”

“ஆனா அதை அதி தானே முடிவு பண்ணனும்.”

“அதி ஏற்கனவே அவன் நம்பரை ப்ளாக் பண்ணிட்டா..இனி நாமதான் அவன நெருங்கவிடாம பாத்துக்கனும்.. ஆல்ரெடி ரிலேஷன்ஷிப்ல இருக்க ஒருத்தன் அதிதிக்கு வேண்டாம்..” என்று திட்டவட்டமாகக் கூறினாள் வர்ஷினி .

அதிதியிடம் விஷயத்தை சொல்லி அவளுக்கு தைரியமூட்டி அவளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி ஒருவாறு அவளைத் தேற்றி வகுப்புக்கு அழைத்துப்போனாள் வர்ஷினி.

நடந்து போகும்போதே நாலாப்புறமும் பார்வை ஊசி தன் உடல் முழுவதும் துளைப்பது போல உணர்ந்தாள் அதிதி. யாரையும் கண்ணெடுத்தும் பார்க்கமுடியாமல் தனக்குள்ளேயே சுருங்கிப்போனாள்.

வசீகரன் வெளியே சொல்லாவிட்டாலும் அதிதிதான் வசீகரனுடன் இருந்த பெண் என்பது ஊரறிந்த ரகசியமாக ஆனது. வைஷாலி அந்த அளவிற்கு அவளைப் பழிதீர்த்திருந்தாள்.

ஆனால் யாராவது அவளை காயப்படுத்தும் நோகத்துடன் பக்கத்தில் கூட வர முடியாத அளவிற்கு அவளின் நண்பர்கள் அவளைத் சுற்றி தடுப்பு அரணாக இருந்தனர். யாராயிருந்தாலும் அவர்களைத் தாண்டித்தான் அதிதியை நெருங்கமுடியும்.

அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் அதிதி என்ன ஆகியிருப்பாளோ தெரியாது. அவளது வாழ்வின் மிகக்கடினமான காலகட்டத்தில் அவளுக்கு உறுதுணையாக இருந்தது வர்ஷினியும் மற்ற நண்பர்களும் மட்டுமே..காலம் முழுவதும் அவள் அவர்களுக்கு கடமைப்பட்டிருப்பதாக உணர்ந்தாள்.

ஆனாலும் என்னதான் அவளை நேரடியாக நெருங்க முடியாமல் நண்பர்கள் வட்டம் காத்தாலும்.. இவள் காதுபடவே புரணி பேசும் பேச்சுக்களையும் ஏச்சுக்களையும் தடுக்கமுடியவில்லை.

“இவதானா அந்தப்பொண்ணு..? வைஷாலிக்கு போட்டியா வரான்னா பேரழகியா இருப்பான்னுல்ல நெனைச்சேன்..ஹ்ம் வசி இவளுக்காகத்தான் வைஷாலிக்கு துரோகம் பண்ணானா? என்ன டேஸ்ட்டோ..” என்று எள்ளி நகையாடியது முகமறியாத ஒரு குரல்.

“கிளி மாதிரி இருக்கும் போது.. குரங்கு மாதிரி..தேடுவாங்கன்னு எதோ சொல்லுவாங்களே அது நிஜம்தான் போல..” என்று நமட்டுசிரிப்பு சிரித்தது மற்றொரு குரல்..

“வைஷாலி பாவம்.. வசீகரன் மோசம்..”

என்று ஒருத்தி குற்றம்சாட்ட..

“வசீகரனும் நல்லவன் தான் இவதான் எதோ பண்ணி மயக்கிட்டா..” என்று வசீகரனுக்காக வக்காலத்து வாங்கினாள் இன்னொருத்தி.

“எப்படித்தான் வெட்கமே இல்லாம நடமாடுறாங்களோ..” என்று ஜாடை பேசியது இன்னொரு குரல்..

அதிதிக்கு கல்லூரி என்ன வாழ்க்கையே வெறுத்துவிடும் போலானது.இந்த ஏச்சுக்கும் பேச்சுக்கும் நடுவில் இனி எப்படி இங்கே காலம் தள்ளமுடியும்? எவ்வளவு காலம் இதையெல்லாம் என்னால் தாக்குப்பிடிக்கமுடியும்? என்றெல்லாம் யோசித்து  கலங்கி உடைந்து போனாள்.

ஆனால் அதிதி பயந்தது போல் இல்லாமல்

கொஞ்ச நாட்களிலேயே  கடைசி வருட மாணவர்கள் பெரும்பாலும் யாரும் கல்லூரிக்கே வராமல் போக, குத்தும் பார்வைகளும் ஏளனப்பேச்சுக்களும் மெல்ல குறைந்து இல்லாமலே போனது. அதிதி ஒருவாறு ஆசுவாசமடைந்தாள். நாட்கள் செல்ல செல்ல மனம் கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

ஆனால் இவ்வளவு நடந்தபின்பும் என்ன முயன்றும் வசீகரனை மட்டும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவனைத்தான் அவள் மனம் தேடியது.

ரெண்டு நாளில் வந்து எதோ எல்லாவற்றையும் விளக்குவதாக சொன்னானே..ஆனால் அவளைத் தொடர்பு கொள்ள எந்தவித முயற்சியும் அவன் செய்யவில்லையே..

அந்த நேரத்தில் எதோ சமாளிப்பதற்காக அப்படி சொன்னானா? நான் தான் அதை பெரிதாக நம்பிக்கொண்டு இருந்துவிட்டேனா..?

அவள் எப்படிபட்ட சிக்கலில் மாட்டியிருக்கிறாள் அவள் எப்படி இருக்கிறாள் என்ற கவலைக்கூட அவனுக்கு இல்லையே.

மூழ்கும் கப்பலில் இருந்து தப்பிக்கும் எலி போல இவள் எப்படியோ போகட்டும்.. தான் தப்பித்தால் போதும்மென்று சென்றுவிட்டானே.. ஒவ்வொரு நாளும் நெருப்பின் மேல் நிற்பது போல் தான் தவித்தது எல்லாம் என்றேனும் மறக்குமா? என் நிலைமையை  அறிந்துகொள்ளகூட அவன் முயலவில்லையே..

வசீகரனைப்பற்றி,அவன் நல்ல குணங்களைப்பற்றி நான் நினைத்ததெல்லாம் பொய்யா? இதுதான் அவன் உண்மை முகமா??”

“ச்ச.. இப்படிப்பட்ட ஒருத்தனையா நான் நேசித்தேன்…?”என்று தன்னையே நொந்துகொண்டாள். இப்படி பலவாறாக எண்ணி மனதை வாட்டி வதைத்துக்கொண்டு இருந்தவள் அவனது எண்ணை தான் ப்ளாக் செய்திருந்ததையே மறந்துபோயிருந்தாள்.

நாட்கள் செல்ல செல்ல வசீகரன் தன்னைத் எப்படியாவது தொடர்புகொள்வான் என்று   தன் உள்ளத்தின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் தகர்ந்து போனது.

வசீகரன் என்ற ஒருவன் இருந்ததே ஒரு மாயமோ என்று எண்ணுமளவு அவள் வாழ்வில் அவன்  இருந்த தடமே இல்லாமல் காணாமல் போனான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!