இரவு உணவாக ஆப்பம் தேங்காய் பால் காரத்திற்காக தேங்காய் சட்னி என்று இரண்டு விதமாக செய்து ஆவலோடு தன்னவனுக்கு பரிமாறினாள் அஞ்சலி. மகளுக்கு ஊட்டியபடியே தானும் உண்டான் குரு. ராதாவும் அங்குதான் இருந்தார். அவரையும் கையோடு பிடித்து இழுத்து வந்திருந்தாள் அஞ்சலி.
Advertisement
இருவரும் தனிமையில் பேசி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருக்கின்றனர் என்பதை அவர்களது முகத்தைப் பார்த்து கண்டு கொண்டார் ராதா.
“தம்பி அடுத்து என்ன பண்ணலாம் என்டு இருக்க..?”
Advertisement
Advertisement
உண்டு முடித்து கை கழுவி வந்து அமர்ந்தவனின் அருகில் அமர்ந்து அடுத்த பேச்சை துவங்கி இருந்தார் ராதா.
“அது நமக்கு தெரியும்… ஆனா சம்பிரதாயமான சில விஷயங்கள் இருக்கே…”
“இப்பவே இங்கே இருக்கிற நமக்கு தெரிஞ்ச எல்லாருமே நாங்க கணவன் மனைவின்னுதானே நினைச்சிட்டு இருக்காங்க…”
“ஆனா அது போதுமா..? முறையான விஷயங்கள் நடக்க வேண்டாமா தம்பி… அஞ்சலி கழுத்துல முறையா நீ தாலி கட்டோணும்… அதுதானே நிறைவு…”
சில நொடிகள் எதுவும் பேசாமல் அமைதியாக ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தான் குரு.
“என்ன தம்பி அப்படி ஒரு யோசனை..? இன்னும் உனக்கு என்ன குழப்பம்..?”
“குழப்பம் எங்க கல்யாணத்தைப் பத்தி இல்ல அத்தை… தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் கொஞ்சம் இருக்கு… அதை எல்லாம் சரி பண்ணோணும். முந்தைய வாழ்க்கையில இருந்த எந்த பிரச்சனைகளையும் அஞ்சு இனிமே ஃபேஸ் பண்ணவே கூடாது. அது எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டிட்டுதான் அவ கழுத்துல நான் தாலி கட்ட முடியும். அதுதான் சரியும் கூட…” என்றவன் அவளது குடும்ப நபர்களின் தற்போதைய நிலவரம் தேனிக்காரர்களின் அவள் மீதான தேடுதல் என்று அனைத்தையும் கூறி இருந்தான்.
“அப்போ திரும்பவும் அவங்க எல்லாரோட முன்னாலயும் நான் போய் நிக்கணுமா..? நம்ம உறவை அசிங்கப்படுத்துவாங்க குரு…” அவள் தொண்டை கமறியது.
“என்ன வேணா சொல்லிட்டுப் போகட்டும். அப்படி எல்லாம் அவங்க பேசாம இருந்தாதான் ஆச்சரியம். ஆனா அதுக்காக ஒளிஞ்சு மறைஞ்சு வாழணும்னு அவசியம் இனி இருக்கிறதா எனக்கு தோணல. உன்னை கள்ளத்தனமா கல்யாணம் பண்ணி கள்ள வாழ்க்கை நடத்துறதுல எனக்கு விருப்பமே இல்ல. முறையா உன் கைப்பிடிக்கணும்… உனக்கோ என் பிள்ளைக்கோ யாராலும் எப்பவும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது…”
“அதுக்கு..?” என்றவள் அவனை கேள்வியோடு பார்த்தாள்.
“இந்த முறை நான் ஊருக்கு போயிட்டு உன் அப்பா அம்மாகிட்ட பேசலாம்னு இருக்கேன்…”
அவள் பதில் கூறவில்லை… ராதாவின் முகத்தைப் பார்த்தாள்.
அவன் சொல்வதுதான் சரி என்பதுபோல் ராதாவும் தலையசைத்தார்.
“அவங்க யார் முகத்திலும் முழிக்க எனக்கு விருப்பமே இல்ல… அவங்க யாருமே எனக்கு வேணாம்… திரும்ப அவங்களோட உறவை புதுப்பிக்கணும்னு என்னை கட்டாயப்படுத்திடாதீங்க… அவங்களால மனசளவுல நிறைய காயப்பட்டவ நான். இப்பதான் கொஞ்சநாளா நிம்மதியா சந்தோஷமா இருக்கேன்…”
சொன்னவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. தன் மடியிலேயே உறங்கி இருந்த மகளை அத்தையிடம் ஒப்படைத்தவன் அவளை படுக்க வைக்கச் சொல்லி அஞ்சலியின் அருகில் வந்து அமர்ந்தான்.
அவள் மன உணர்வுகள் அவனுக்கும் புரியும். தன்னைச் சுற்றி இருந்த அனைவராலும் தொடர்ந்து நிறைய காயப்பட்டு இருக்கிறாள். அவள் கையைப் பற்றி தன் தொடை மீது வைத்துக் கொண்டான்.
“எத்தனையோ கசப்புகளை கடந்து வந்தாச்சு… பிடிக்குதோ பிடிக்கலையோ இன்னும் சில விஷயங்களை கடந்துதான் வரணும் அஞ்சு. உடனடியா உன்னை அங்கே கொண்டு போய் நிறுத்தமாட்டேன். எல்லாம் பேசி சரி பண்ணிட்டு அதுக்கப்புறம்தான் உன்னை அவங்களுக்கு காட்டுவேன். இனி அவங்க யாராலயும் உனக்கு எந்த கஷ்டமும் வராது. வரவும் விடமாட்டேன். நான் இருக்கேன்டி…”
கடைசி வார்த்தையை அவளுக்கு மட்டும் கேட்கும்படி காதோடு குனிந்து மெல்லிய குரலில் கூறினாலும் அழுத்தமாக ஆழமாக அக்கறையாக காதலாக அவன் கூறிய விதத்தில் அவன் தோளில் சாய்ந்து கொள்ள துடித்த மனதை முயன்று கட்டுப்படுத்தினாள் அஞ்சலி… அருகில் ராதா இருக்கிறாரே.
நம்பிக்கையோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களை துடைத்துக் கொண்டு புன்னகைத்தாள். ராதா தன் வீட்டிற்கு கிளம்ப உடன் குருவும் கிளம்பினான்.
“நீயும் வர்றியா தம்பி..? நீ இங்கே வர்ற சமயங்கள்லதானே பாப்பாகூட படுக்க முடியும். பாப்பா இடையில முழிச்சா உன்னை தேடி அழுதுடப் போறா..”
இதற்கு முன்பு ஒரு பாதுகாவலனாக மட்டுமே அவன் இருந்த நேரங்களிலும் தைரியமாக அங்கு தங்கியிருக்கிறான். அவன் கூடத்திலும் அஞ்சலி அறையிலும் படுத்துக் கொள்வது சாதாரணமான ஒன்றுதான். ராதாவும் இதுவரை அவர்களை தவறாக நினைத்ததே இல்லை. அவர் மருமகனைப் பற்றி அவருக்கு தெரியும். இன்று ஏனோ தன்னைவிட முந்திக்கொண்டு அவன் கிளம்பியதில் அவன் ஏன் தயங்குகிறான் என்று அவனை தூக்கி வளர்த்தவருக்கு புரியாமல் போய்விடுமா..?
“என்னப்பு… எதுக்கு இந்த தயக்கமும் தடுமாற்றமும்..? என் மச்சாளை விட உன்னை அதிகமா தூக்கி வளர்த்து ஆளாக்கினது நான்தான். உன்னைப்பத்தி எனக்கு தெரியாதா..? உன்னை நான் பிழையா நினைச்சுடுவேனா..? நீ கண்ணியம் தவற மாட்டே என்டு எனக்கு தெரியும் தம்பி. எனக்காக ஏன் அங்கே வரணும் என்டு நினைக்கிற..?”
அவன் மனதை படித்தவர்போல் அவர் அப்படியே ஒப்பிக்க அசந்து போய் நின்றிருந்தான் குரு. உண்மையில் தான் அங்கு தங்கிக் கொண்டால் தன் அத்தை தன்னை தவறாக நினைத்து விடுவாரோ என்ற பயம்தான் அவனுக்கு. இதற்கு முன்பு கதை வேறு. இப்பொழுது அவனும் அஞ்சலியும் ஒருவரை ஒருவர் உயிராக நேசிப்பதும் எப்பாடுபட்டாவது அவளை தன்னவளாக மாற்றி அவளை திருமணம் செய்து கொள்ள அவன் உறுதியாக நிற்பதும் தெரிந்து போனபின் மணம் முடிக்காமல் அவளோடு தனியாக தங்கி இருப்பதை தனது அத்தை விரும்ப மாட்டாரோ தவறாக நினைத்துக் கொள்வாரோ என்றுதான் முந்திக் கொண்டு அவன் கிளம்பி நின்றிருந்தான்.
மெல்ல அவன் கன்னம் வருடி சிரித்தார் ராதா.
“இப்போகூட நீங்க ரெண்டு பேரும் கணவன் மனைவிதான் தம்பி. ஆனாலும் சம்பிரதாயமான சில விஷயங்கள் நடக்காம நீயோ அஞ்சலியோ எல்லைக்கோடு தாண்ட மாட்டீங்க என்டு எனக்கு தெரியாதா..? பழகின கொஞ்ச நாளிலேயே அவள் பத்தரை மாத்து தங்கம் என்டு எனக்கும் தெரியும். உன் பிள்ளை கண்டிப்பா இடையில முழிப்பா. நீ பக்கத்துல இல்லை என்டா அழுவா. இந்த பத்து நாளும் உன்னை விட்டு நகரவே மாட்டா என்டு எனக்கு தெரியும்… போ… படுத்து நிம்மதியா நித்திரை கொள்ளு…”
அத்தையின் வார்த்தைகளில் மகிழ்ந்து போனவன் அவரை இறுக்கி அணைத்துக் கொண்டான். அவரும் இல்லாமல் போயிருந்தால் அனைத்தும் இழந்து தவித்தவன் அரை பைத்தியமாகிக்கூட போயிருப்பான். அவனைத் தேற்றி புதுப்பிக்க அவர் எடுத்துக் கொண்ட பிரயத்தனங்களும் அதிகம் என்று அவனுக்கு தெரியுமே.
அத்தையை அனுப்பி வைத்து வீட்டிற்குள் நுழைந்தவனை முறைத்தபடி நின்றிருந்தாள் அஞ்சலி.
அந்த உரிமைப்பட்ட முறைப்புதானே அவனுக்கு அவளிடம் மிகவும் பிடிக்கும்.
அவளை பார்த்து “ஏன்டி முறைக்கிற..?” என்றபடியே அங்கிருந்த குவளையில் இருந்த தண்ணீரை எடுத்துப் பருகினான்.
“என்மேல நம்பிக்கை இல்லாம அங்கே போறேன்னு சொன்னீங்களா..? இல்ல உங்க மேலயே நம்பிக்கை இல்லாததுனால முண்டிக்கிட்டு கிளம்பினீங்களா..?”
ராக்கெட் போல் சீறிப் பாய்ந்து வந்தது அவள் குரல்.
“நம்ம ரெண்டு பேர் மேலயும் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. ஆனா அத்தை தப்பா நினைச்சிடக் கூடாது இல்லையா..?”
“ராதாம்மாவை பத்தி எனக்கு நல்லா தெரியும்… அவங்க மனசு தங்கம்… புத்திமதி சொன்னாதான் ஐயா இங்கே தூங்குவீங்களோ..?”
“இப்ப என்னடி..? விடிய விடிய எங்கிட்ட சண்டை போடப் போறியா..?” என்றவன் தள்ளி நின்றிருந்தவளை தன் நீண்ட கையால் இழுத்து இடுப்போடு அணைத்துக் கொண்டான்.
தூக்கத்தில் ஏதோ உளறியபடி புரண்டு படுத்தாள் சவி. வேகமாக மகளிடம் நெருங்கப் போனவனை இழுத்துப் பிடித்தாள் அஞ்சலி.
“விளையாட்டு பிள்ள… ஏதோ நினைப்புல கனவுல உளறுவா… அதுக்குகூட பயப்படுவீங்களா..?” என்றவள் அவனது கையை தூக்கி உரிமையாக தன் தோளில் போட்டுக் கொண்டாள்.
சிரித்தபடியே அவள் தோளில் கை போட்டபடி நகர்த்திச் சென்றவன் மேஜைமேல் இருந்த பையில் இருந்து அவன் எடுத்து வந்த புடவையை வெளியில் எடுத்து அவளிடம் நீட்டினான்.
அதனை கையில் வாங்காமல் விழிகள் விரித்து அதனை பார்த்தவள் அகன்ற விழிகளால் அவனையும் நிமிர்ந்து பார்த்தாள்.
கவரில் இருந்து புடவையை வெளியே எடுத்தான். அடர் சிவப்பு நிற தாமரை மொட்டுக்களை ஆங்காங்கே பதித்தது போன்று கரும்ப பச்சை நிறத்தில் ஜரிகை வேலைப்பாட்டுடன் கூடிய ஒரு பட்டுப் புடவை.
அந்த புடவையின் நிறத்திலும் அழகிலும் கவரப்பட்டு அவள் அசையாது நின்றிருக்க மடித்த நிலையிலேயே புடவையை அவள் தோள்மேல் போட்டு பக்கவாட்டாக இருந்த கண்ணாடியின் முன் திருப்பி நிறுத்தினான் குரு.
அவள் நிறத்திற்கு அத்தனை பொருத்தமாக இருந்தது அந்த புடவை. பின்னிருந்து இடுப்பைக் கட்டிக்கொண்டு புடவை சரிந்து விடாமல் தன் நாடியால் அவள் தோள் வளைவில் குற்றிக்கொண்டு கண்ணாடி வழியே அவளைப் பார்த்து சிரித்தான் அவள் தென்னை மரம்.
அவளுக்கு தொண்டைக் குழியை அடைத்துக் கொண்டு வந்தது. அழுதால் அவன் வருந்துவான் என்பதால் முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். தனது உணர்வுகளை இதழ்கள் கடித்து அடக்குகிறாள் என்பது அவனுக்கும் தெரிந்தது.
“பிடிச்சிருக்கா என் அஞ்சுக்குட்டிக்கு..?” மெல்லிய குரலில் கேட்டு பக்கவாட்டாக அவள் தலையில் செல்லமாக இடித்தான். புடவையை வருடியவள் நெகிழ்வோடு அவனைப் பார்த்து சிரித்து பிடித்திருக்கிறது என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
“இதை உன்கிட்ட கொடுக்கறதுக்காகத்தான் காலையில நானும் பாப்பாவும் ஆசையா எல்லாம் எடுத்து வச்சுட்டு இருந்தோம்… வந்து அப்படியே மூடை ஆஃப் பண்ணி விட்டுட்ட…”
கண்ணாடியின் வழியே அவளை பார்த்து பேசிக் கொண்டிருந்தவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவள் அவன்புறம் மொத்தமாக திரும்பி நின்றாள்.
“எதுக்கு இவ்வளவு காஸ்ட்லியான புடவை..? கண்டிப்பா விலை ரொம்ப அதிகமா இருக்கும்…” என்றவள் விலை அட்டையை புடவையை திருப்பி தேடத் தொடங்க அது கிடைத்தால்தானே. கண்டிப்பாக அவள் விலைப் பட்டியலை தேடுவாள் என்று தெரிந்துதான் அதனை அங்கேயே கிழித்து எறிந்திருந்தான் குரு.
“நீ எவ்வளவு தேடினாலும் கிடைக்காது…” என்றபடியே புடவையை அவளிடம் இருந்து வாங்கி அதே நிலையில் மடித்து அட்டைப்பெட்டியில் போட்டு மீண்டும் அந்த கவருக்குள் எடுத்து வைத்தான்.
“எதுக்கு இவ்வளவு காஸ்ட்லியா வாங்கணும்..? ஒரு புடவைக்கு அவ்வளவு காசு போடணுமா..? பாப்பாவுக்கும் அஞ்சாறு ட்ரெஸ்ஸுக்கு மேல எடுத்துட்டு வந்திருக்கீங்க… அதையும் பார்த்தேன்… காசை ஏன் இப்படி கரியாக்குறிங்க..?”
சண்டையிடுவது போல் அவனிடம் கேள்வி கேட்க அவளை முறைத்து பார்த்தவன் “ஏன்டி… பொண்டாட்டிக்கும் பிள்ளைக்கும் உடுத்திக்க துணிமணி எடுத்துக் கொடுத்தா அது உனக்கு கரியாக்கறது மாதிரி தெரியுதா..? இதையெல்லாம் நான் உங்களுக்கு செய்யாம வேற யார் செய்வா..?”
அவனது தடித்த குரல் ஓங்கி ஒலிக்க “இப்ப எதுக்கு கத்துறீங்க..? பாப்பா முழிச்சுக்குவா..?” என்றவள் அவனை இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.
“பின்ன என்னடி..? ஆசையா எடுத்துட்டு வந்து கொடுத்தா பொறுப்பு புளியங்கொத்து மாதிரி பேசிட்டு இருக்க. அடுத்த வாரம் உன் பிறந்தநாள் வருது… அதுக்கு நீ பட்டுப் புடவைதான் கட்டணும் என்டு ஆசைப்பட்டேன். அதுக்காக எடுத்துட்டு வந்தேன்… நீ ரொம்ப பண்றடி…” என்றவன் முறுக்கிக் கொண்டு முகத்தை திருப்பிக் கொள்ள சிரித்தபடியே அவன் முன் வந்து நின்றாள் அஞ்சலி.
“என் பிறந்தநாள் உங்களுக்கு எப்படி தெரியும்..? நான் உங்ககிட்ட சொன்னதே இல்லையே..”
“உன்னோட சர்டிபிகேட்டை நான்தானே ஸ்கூல்ல வாங்கி அனுப்பி வச்சேன்… அப்பவே என் மூளையில பதிவாயிடுச்சு…”
“சம்பந்தமில்லாத ஒருத்தியோட பிறந்தநாள் அய்யாவோட மூளையில அப்பவே ஏன் பதிவாச்சு..?”
தலையை சாய்த்து கண்களை சுருக்கி கேட்டவளை சுவற்றோடு தள்ளி சென்று நிறுத்தியவன் அவள் உயரத்திற்கு குனிந்து நெற்றியோடு நெற்றி முட்டிக் கொண்டான்.
“நீதான் என் வாழ்க்கையோட சம்பந்தப்படப் போறேன்னு அப்பவே இந்த குட்டி மூளை யோசிச்சதோ என்னவோ..? என்னை அறியாமலே ரிஜிஸ்டர் ஆயிடுச்சு…” என்று கூறி பற்கள் மின்ன வசீகரமாய் சிரித்தவனை பார்க்க பார்க்க திகட்டவில்லை அவளுக்கு.
“என் பிறந்த நாளப்போ இங்கே இருப்பீங்கதானே…” ஏக்கமாகக் கேட்டாள்.
“இருப்பேன்… அன்டைக்கு மறுநாள்தான் ஊருக்கு கிளம்புற மாதிரி இருக்கும்…”
மகிழ்ந்து சிரித்துக் கொண்டவள் அவன் மார்பில் புதைந்து கொண்டாள்.
கூடத்தில் படுத்திருந்த சவி மீண்டும் புலம்பும் சத்தம் கேட்க வேகமாக அவளிடம் இருந்து விலகி வெளியேறினான் குரு. அவள் அயர்ந்த உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்து கொண்டவன் கழிவறைக்குச் சென்று மீண்டும் திரும்பி வந்தபோது பாயில் அவளுக்கு அருகில் படுத்திருந்தாள் அஞ்சலி.
இடுப்பில் கை வைத்து முறைத்தவனை பார்த்தவள் என்ன என்று கண்களால் கேட்டாள்.
“நான் இங்க வரும்போதுதானடி அவகூட படுக்க முடியும். மிச்ச நாள் எல்லாம் நீதானே படுக்கிற… நான் இங்கே இருக்கிறப்போ வழக்கமா நீ அறையில தானே போய் படுப்ப… இப்ப மட்டும் என்னடி புதுசா..? நீ எழுந்து போ… நான் பாப்பா பக்கத்துல படுக்கணும்…”
சின்ன குழந்தைபோல் அவளிடம் மல்லுக்கு நின்றான்.
“பாப்பாவுக்கு அந்தப் பக்கம் இடம் இருக்குதானே… உங்களை நான் படுக்க வேணாம்னு சொன்னேனா..? அங்க போய் படுக்க வேண்டியதுதானே…”
அவளும் முறைத்தபடி கூற மென்புன்னகையுடன் மகளின் மறுபுறம் வந்து படுத்துக்கொண்டான் குரு.
நடுவில் மகள்… இருபுறமும் அவர்கள்… இதயம் ஏகாந்தத்தில் மிதந்தது. ஒரே பாயில் அவனது உலகம்.
“நான் பக்கத்துல படுத்திருக்கிறது உனக்கு ஒன்டும் ஆட்சேபணை இல்லையா..?” மெல்லிய குரல் கிசுகிசுப்பாக கேட்டான்.
“உங்க அத்தை உங்கமேல வச்ச நம்பிக்கையை நான் உங்கமேல வைக்க மாட்டேனா..? எனக்கும் உங்களைப்பத்தி தெரியும்…”
அவள் வார்த்தைகளில் தெரிந்த நம்பிக்கையில் கர்வமாய் புன்னகைத்தவன் குழந்தையின் மேல் வைத்திருந்த அவள் கையின் மேல் தன் கையை வைத்து மற்றொரு கையால் அவள் கன்னத்தை மெல்ல வருடி மகிழ்வோடு புன்னகைத்தான்.
மகளை அணைத்தபடியே ஆனந்த நித்திரை இருவரையும் ஆட்கொண்டது.