Skip to content
Post Views: 1,689

அத்தியாயம் 16
வசீகரனை அங்கே சற்றும் எதிர்பார்த்திராத அதிதிக்கு ஒன்றும் புரியவில்லை, தான் விழித்துக்கொண்டே கனவு காண்கிறோமா என்று கூட தோன்றத்தொடங்கியது.
ஆனால் இங்கு இவள் கண்முன் நிற்பவன் அவள் அறிந்த கல்லூரி மாணவன் இல்லை.முன்பிருந்ததற்கு இன்னும் கொஞ்சம் வளர்ந்திருப்பானோ என்று ஐயுறும் அளவு நெடு நெடுவென்றிருந்தான். தாடியும் மீசையும் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தது ஆனாலும் அவனது முக அமைப்பிற்கு ஏற்றவாறு கச்சிதமாக வெட்டப்பட்டு இன்னும் நேர்த்தியான தோற்றத்தைத் தந்தது. முன்பு துறு துறுவென்று இருந்த விளையாட்டுத்தனமான பார்வைப்போய் அதில் அழுத்தமும் கூர்மையும் கூடியிருந்தது.கோட் சூட் என்று ஃபார்மல் உடையில் நின்ற கம்பீரம் என்று நிறைய மாறியிருந்தான்.
Advertisement
ஆனால் அந்த இடத்தையே தனதாக்கியவன் போல அத்தனைப்பேரையும் வியந்து பார்க்கவைக்கும் கவர்ந்திழுக்கும் காந்த சக்திமட்டும் கொஞ்சமும் மாறியிருக்கவில்லை. இன்னும் கூடியிருப்பதாகவே தோன்றியது.
அதிதியும் ஒன்றும் மாறாமல் இல்லை. முன்போல ஏனோ தானோவென்று இல்லாமல் அவளும் தன் தோற்றத்தில் சிரத்தை எடுத்து பராமரிப்பதோடு,இயற்கை வனப்பும் சேர்ந்து கொள்ள தானும் பார்ப்பதற்கு நன்றாயிருப்பதாகவே கருதினாள். ஆனால் அதையெல்லாம் அவன் கவனித்திருப்பானா..?
இப்படி இவள் உள்ளுக்குள் மைண்ட் வாய்ஸ் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்க, அவனோ எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் நிச்சலனமாக அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
Advertisement
“அதி பொக்கேவ குடு..” என்று லிடியா லேசாக அவளை முழங்கையால் இடிக்கவும் சுய நினைவு பெற்றவளாக..
Advertisement
“வெல்கம் சார்..” என்று பூங்கொத்தை வசீகரனிடம் நீட்டினாள்.
“தாங்க் யூ” என்று கூறி அதைப் பெற்றுக்கொண்டான்.
அவனது குரலில் ஆழம் சற்று கூடியது போல் இருந்தது.
Advertisement
ஐந்து வருடங்களுக்கு பின் அவன் குரலைக்கேட்டதில் அவளுக்கு தொண்டை அடைத்து கண்ணீர் திரையிட்டது.
தான் மட்டும் இவ்வளவு பாதிக்கப்பட்டிருக்க எந்த சலனமும் இல்லாமல் நிற்பவன் மேல் ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. ஆனால் அதை காட்டக்கூட முடியாதே. இன்று அவன் வரம் தரும் சாமியல்லவா… அதிதி சிரமப்பட்டு தன்னை நிதானப்படுத்திக்கொண்டாள்
ஆனால் இது எதையுமே அறிந்திராத விக்ரம் சகஜமாகபேசி தன் பணியாளர்களை அறிமுகப்படுத்திக் கொண்டேவந்தவன்…
“வசி, இது அதிதி, வெரி ஸ்மார்ட் அண்ட் இம்பார்ட்டண்ட் அடிஷன் டு அவர் சைட்.” என்று அறிமுகப்படுத்தினான். அவன் வசி என்று அழைத்து சாதாரணமாக பேசுவதைப் பார்த்தால் இருவரும் ஏற்கனவே பழக்கமானவர்களோ? என்ற சந்தேகம் தோன்றியது.
“ஹே..சொல்ல மறந்துட்டேன் அதிதியும் நம்ம காலேஜ்தான்.. உனக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு..” என்று விக்ரம் கூற அதற்கு வசீகரன் பதிலளிப்பதற்கு முன்பு முந்திக்கொண்டு..
“இல்ல அவருக்கு என்னை தெரியாது.. ஆனா சீனியர எனக்கு தெரியும்,அவர் ரொம்ப ஃபேமஸ்..” என்றாள் அவசரமாக.
வசீகரன் லேசாக புருவம் சுருக்கி பார்த்துவிட்டு அமைதியாயிருந்தான்.
“கரெக்ட் தான் இவன்தான் போற இடத்துல எல்லாம் ஃபேமஸ் ஆகிடுவானே..” என்று சுற்றிலும் வாயைப்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் சேர்த்தே காலை வாரினான் விக்ரம்.
“டேய் அண்ணாபோதும்..” என்று தணிந்த குரலில் கூறியவன் அருகில் திரும்பி
“இவர் எங்க ஃபினான்ஸ் ஹெட் பார்த்திபன் சார்.. நீங்க இவர கன்வின்ஸ் பண்ணிட்டா போதும்..” என்று அறிமுகப்படுத்தினான்.
“ஹல்லோ சார்.. ஷால் வீ ஸ்டார்ட்..?” என்று விக்ரம் கேட்க அனைவரும் மீட்டிங் ரூமுக்குள் சென்றனர்.
அடுத்து அவளது ப்ரெசெண்டேஷன் தான்..
வசீகரனின் கூர்விழிகள் தன்னை ஊடுருவுவது போல் பார்ப்பது அவளை பாதித்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் நன்றாகவே ப்ரெசெண்ட் செய்தாள்.
இடையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முடிந்த அளவுக்கு பதில் கூறினாள், அவளால் முடியாத இடத்தில் விக்ரம் இடையிட்டு பதிலளித்தான். மீட்டிங் வெற்றிகரமாக முடிந்ததும் புதிதாக வந்தவர்கள் விக்ரமின் கேபினுக்கு சென்றுவிட..
அதிதி விட்டால் போதும் என்று வெளியேறினாள்.
வெளியே ஒரு மாநாடே நடந்துகொண்டிருந்தது.
அங்கே வேலைப்பார்பவர்களில் பெரும்பான்மை பெண்கள் தான் அதிலும் அவர்களின் சராசரி வயதே 25 தான் இருக்கும். மொத்த இளைஞிகள் கூட்டமும் கூடி புதிதாக வந்திருக்கும் ஆறடி அழகனைப்பற்றிய டிஸ்கஷனில் மும்முரமாக ஈடுபட்டிருந்தது.
“ஹே.. செம ஹாண்ட்சமா இருக்காரு பா..சான்ஸே இல்ல..”
“நம்ம பாஸை விட அழகா ஒருத்தர் இருப்பாங்கன்னு நான் நினைக்கவே இல்லை..”
“ஆனா அவங்க ரெண்டு பேரும் நல்லா பேசிக்கிட்டத பார்த்தா.. ஃப்ரண்ட்ஸ்சா இருப்பாங்களோன்னு தோணுது..”
“இருக்கும் ரெண்டு பேரும் ஒரே காலேஜ்தானே தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு..”
அப்போது அதிதியை பார்த்துவிட்ட ஜனனி..அவர்கள் ஆஃபீசில் ஆல் இண்டியா ரேடியோ அவள்.
“அதி.. வா வா.. மிஸ்டர் வசீகரன தெரியும்ன்னு சொன்னியே.. நல்ல பழக்கமா? ஃபோன் நம்பர் வச்சிருக்கியா? இல்ல இன்ஸ்டா ஐடியாவது இருக்கா?”
என்று அடுக்கடுக்காக கேள்விகள் வந்து விழ.. அவளுக்கு சற்று கடுப்பானது.
“ப்ரெசெண்டேஷன் முடிச்சிட்டு வரேன்.. எப்படி போச்சின்னு ஒரு வார்த்தை யாரும் கேக்கல..இப்ப இதுதான் ரொம்ப முக்கியம்..”என்றாள் எரிச்சல் மண்டிய குரலில்…
“அய்யோ மீட்டிங் நல்லாப்போகலயா அதி..? அதான் ஒரு மாதிரி முகம் டல்லா இருக்கா?” என்று அக்கறையாக விசாரித்தாள் லிடியா.. லிடியா வேலைக்கு சேர்ந்து ஆறுமாதம்தான் இருக்கும் ஆனால் அதற்குள்ளாகவே அதிதிக்கு நல்ல தோழியாகிவிட்டாள்.
“அதெல்லாம் இல்ல லிடி..மீட்டிங் நல்லாதான் போச்சி.. மாத்தபடி அவங்க என்ன முடிவெடுப்பாங்களோ தெரியல..” என்றாள் அதிதி.
“கவலையே படாதீங்க நல்ல முடிவுதான் எடுப்பாங்க..” என்றபடியே வந்து சேர்ந்தான் ரிஷிதர் என்கிற ரிஷி.. இவனும் அதிதியும் ஒரே சமயத்தில் இன்ஃபி டெக்கில் வேலையில் சேர்ந்தவர்கள். இருவருக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது.
“எப்படி அவ்ளோ உறுதியா சொல்ற ரிஷி..?”
“இப்பதான் ஸ்னாக்ஸ் குடுக்குற சாக்குல உள்ள என்ன பேசிக்கிறாங்கன்னு ஒட்டு கேட்டுட்டு வந்தேனே..” என்று காலரைத் தூக்கிவிட்டு பெருமையடித்தான்.
“என்ன பேசிகிட்டாங்க..” என்று எல்லாரும் கோரஸாக கேட்க.
“வந்திருக்க இன்வெஸ்டர் வேற யாரும் இல்ல, நம்ம பாஸ் விக்ரமோட கசின் பிரதராம். அண்ணா தம்பின்னு பேசிகிட்டாங்க..சோ கன்ஃபார்ம் நமக்கு கிரீன் சிக்னல்தான்..”
“அதானே பார்த்தேன் ரெண்டு பேருக்கும் ஜாடை ஒத்துப்போகுதேன்னு எனக்கு அப்பவே தோணுச்சு.” என்று ஜனனி சொல்ல..
“சும்மா உருட்டாத..என்னோட கண்டுபிடிப்புக்கு கிரெடிட்ஸ் எடுத்துக்க பாக்குறியா..” என்று ரிஷி கலாய்க்க
“ஆமா இவரு பெரிய எடிசன் எலெக்ட்ரிசிட்டிய கண்டுபுடிச்சிட்டாரு நாங்க அதுக்கு கிரெடிட்ஸ் எடுத்துக்கிட்டோம்..” என்று அவள் பதிலுக்கு காலைவார அங்கே சிரிப்பலை பரவியது.
அதிதிக்கு மனம் எங்கெங்கோ சென்றது.. ஆரம்பத்திலிருந்தே விக்ரமிடம் ஓர் ஒட்டுதல் இருந்ததற்கு காரணம் அவனிடம் வசீகரனின் சாயலைக் கண்டதால் தானா? அதனால் தான் சட்டென்று மனம் அவனை நம்பிவிட்டதா..?இப்படியெல்லாம் யோசனைகள் ஓட அதிதிக்கு தலை வலித்தது.
காஃபி குடித்தால் பரவாயில்லை என்று காஃபிடீரியாவிற்கு சென்றாள்.அது ஒன்றும் பெரிய இடமெல்லாம் இல்லை.
அவர்கள் அலுவலகத்தில் ரெஸ்ட் ஏரியாவில் சாய்ந்து அமரும் சோஃபாக்கள் , மசாஜ் சேர் என்று ஒரு பக்கம் போடப்பட்டிருக்கும், மறுபக்கம் காஃபி மேக்கர் வைக்கப்பட்ட சிறிய கேபின் மற்றும் அமர்ந்து அருந்த என்று உயரமான நாற்காலிகள் இருக்கும். அவர்கள் ஓய்வெடுக்க, கதையடிக்க என்று அடிக்கடி கூடும் இடம் அதுதான்.
அதிதி அரை கவனமாய் காஃபி மேக்கரில் கப்பை வைத்து காஃபியை பிடித்துக் கொண்டிருக்கையில்.
“சோ.. எனக்கு உன்னை தெரியாது அப்படித்தானே..?”
என்று கேட்ட ஆழ்ந்த குரலில் அதிர்ந்து நிமிர்ந்தாள் அதிதி.. அதிர்ச்சியில் அவள் கையிலிருந்த கப்பை கீழே போடும் முன்னர் அதை விரைந்து அவளிடமிருந்து லாவகமாக பறித்தான்.
அந்த முயற்சியில் சூடான காஃபி லேசாக அவன் கையில் சிந்திவிட அவன் சூடு தாங்காமல் “ஸ்ஸ்..” என்றான்.
உடனே பதறிய அதிதி அவன் கையிலிருந்து கப்பை வாங்கி வைத்துவிட்டு டிஸ்யூவை எடுத்து அவன் கையைத் துடைத்துக்கொண்டே காஃபி பட்ட இடத்தில் லேசாக ஊதிவிட்டாள்.
“சூடான காஃபிய எதுக்கு என் கையில இருந்து புடுங்குனீங்க.? பாருங்க இப்ப கையில கொட்டிகிட்டீங்க..” என்று கடிந்தாள்
“இல்லைன்னா நீ உன் கையில் கொட்டிட்டு இருப்ப.. அதான் என் குரல கேட்டதும் அப்படியே துள்ளி குதிச்சியே..”
“பின்ன திடீர்ன்னு வந்து பேசினா ஷாக்கா இருக்காதா..?”
“ஓ அப்போ மேடம் கிட்ட பேசனும்னா ரெண்டு நாளைக்கு முன்னாடியே அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிட்டுதான் பேசனுமோ..?”என்று அவன் திருப்பி கேட்க
அவள் அவனை முறைத்துப்பார்த்தாள்.
“இப்ப எதுக்கு மொறைக்கிற?”
“பின்ன நீங்க பேசுற விதத்துக்கு அப்படியே கொஞ்சுவாங்களா..?” என்று கேட்டுவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
கற்பனையில் அவள் தன் கன்னத்தைப்பிடித்து கிள்ளிய காட்சி தோன்றிவிட அவன் முகமும் இளகியது.
“எவ்ளோ நாள் ஆச்சு கிட்டி உன்ன பார்த்து.. எப்படி இருக்க..?” என்றான் கனிவாக.
அவனின் கிட்டி என்ற அழைப்பும் .. இத்தனை நாள் பிரிவும்.. அவள் அனுபவித்த வலிகள் என்று எல்லாம் ஒன்று சேர்ந்து தாக்க அவளுக்கு தொண்டைஅடைத்தது.. ஆனால் மறுகணமே கோபமும் பொத்துக்கொண்டு வந்தது..இவ்வளவு நாளில் தன்னைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாதவனுக்கு இப்போது மட்டும் என்ன வந்ததாம்.
“நான் எப்படி இருந்தா உங்களுக்கு என்ன…?” என்றாள் வெடுக்கென்று.
வசீகரனுக்கு ஒன்றும் புரியவில்லை நியாயப்படிபார்த்தால் அவனை அவாய்ட் செய்ததற்காக அவன்தான் அவள் மேல் கோபமாக இருக்க வேண்டும். ஆனால் நேருக்கு மாறாக இங்கு அவள் அவனிடம் கடுப்பைக்காட்டுகிறாளே..
அவனுக்குமே அதிதியை அங்கே பார்த்தது அதிர்ச்சிதான்.ஆனால் அவன் அப்பாவின் தொழிலில் ஈடுபட்டு அதை மேலும் பெருக்கி இன்று அவனே கிட்டத்தட்ட நிர்வாகம் முழுவதையும் பார்க்குமளவு வளர்ந்திருக்கிறானே அந்த அனுபவம் கற்றுத்தந்த கலையாக எந்த சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் இருக்க முடிந்தது. ஆனால் அதிதி கஷ்டப்படுவது அவனுக்கு நன்றாக தெரிந்தது. அதுவும் தாங்கள் இருவரும் அறிமுகமானவர்கள் என்று யாரும் அறிவதை அவள் விரும்பவில்லை என்றும் புரிந்தது.
லேசாக மனம் வலித்த போதும் அவன் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
இந்த ஐந்து வருடத்தில் அதிதி நிறைய மாறியிருந்தாள்.
எப்போதும் பதட்டத்துடன் பார்க்கும் மான் விழிகளில் இப்போது தெளிவும், தன்னம்பிக்கையும் கூடியிருந்தது. நடையில் ஒரு நிமிர்வு தெரிந்தது.
தேர்ந்தெடுத்த ஆடை மற்றும் நேர்த்தியான ஒப்பனையில் ரதியாக மிளிர்ந்தாள்.அவனால் அவளிடமிருந்து கண்களை அகற்றவே முடியவில்லை.
அவள் ஒவ்வொரு அசைவையும் அவன் மனம் மெமரியில் பதிவு செய்யத்துடித்தது.
இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் எப்படி இவளால் இந்த அளவுக்கு என்னை பாதிக்கமுடிகிறது..? என்று வியந்தான்.
ஆனால் அவளிடமும் அந்த பாதிப்பு இருக்கிறது என்பதையும் அவனால் உணர முடிந்தது.
அவனைப்பார்த்ததும் அவள் துள்ளிகுதிக்கையில் முன்பொரு நாள் லைப்ரரியில் அவள் அதிர்ச்சியில் துள்ளிக்குதித்தது நினைவு வந்தது அவனுக்கு.
ஆனால் அவள் மனநிலை நொடிக்கொருவிதமாக மாறுவதைதான் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இப்போது திடீரென்று ஏன் கோபப்படுகிறாள்..?
“கேட்டது தப்புதான்.. அதான் சண்டைபோடுற வேகத்துலயே தெரியுதே நல்லா தெம்பாதான் இருக்கேன்னு..” என்று ஏளனமாக அவன் சொல்லவும் சுர்ரென்று கோபம் அவள் மண்டைக்கு ஏறியது.
“நான் என்ன சண்டைக்காரியா.. நீங்க தான் தேவையில்லாம என்கிட்ட வந்து வம்படியா பேசிட்டு இருக்கீங்க..” என்று சீறினாள்.
நொடிக்கொரு பாவனைக் காட்டும் அவள் முக ஜாலமும்,கடுகுபோல் பொரியும் கோபமும் கண்டு வேடிக்கையாக இருந்தது அவனுக்கு. அவளை சீண்டிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொண்டது.
“நான் உங்க கம்பெனில இன்வெஸ்ட் பண்ண வந்திருக்கேன்மா கொஞ்சம் பார்த்து பேசு..”
“நீங்க எங்க கம்பெனிக்கு தான் இன்வெஸ்டர் எனக்கு இல்ல..” என்றாள் வெடுக்கென்று..
“இப்ப எதுக்கு இப்படி கடுகு மாதிரி பொரியற..? நான் என்ன உனக்கு யாரோவா..நாம என்ன அப்படியா பழகியிருக்கோம்..” என்று கேட்டபடி அவளை நோக்கி ஒரு எட்டு வைக்கவும் அவள் அனிச்சையாக பின்னடைந்தாள்.
பின்னால் சுவர் இடிக்க அதற்குமேல் நகரமுடியாமல் வலையில் சிக்கிய மானைப்போல் விழித்தாள். அடுத்து அவன் என்ன செய்ய உத்தேசிக்கிறான் என்று ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.
அவன் முகத்தில் புன்னகையுடன் அவளை நோக்கி லேசாக குனிய அவன் கையோ அவள் இடையை நோக்கி நீண்டது, அதிதி அதிர்ச்சியில் கண்களை மேலும் அகல விரித்தாள்.
அவன் குறும்பு சிரிப்புடன் அவள் இடையைத்தாண்டி அருகே டேபிளின் மேல் இருந்த காஃபி கப்பை கையில் எடுத்து நிதானமாக பருகினான்.
“இந்த காஃபியை நான் எடுத்துக்கறேன்.. நீ வேற போட்டுக்கோ..” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
அவன் போவதையே பிரமைபிடித்தவள் போல் பார்த்துக் கொண்டிருந்தவளின் அடிவயிற்றில் இத்தனை நாள் ஆழ்துயில் கொண்டிருந்த பட்டாம்ப்பூச்சிகள் எல்லாம் இறக்கை விரித்து பறக்கத்தொடங்கியிருந்தது.
error: Content is protected !!