குரு மதுரைக்குச் சென்று இரண்டு மூன்று நாட்கள் ஓடி இருந்தன. அவனையும் முழு வீச்சில் ஆசிரியர் பணி இழுத்துக் கொண்டது. மாலை ஆறு முப்பதுக்கு மேல்தான் வீட்டிற்கே வர முடிகிறது. அஞ்சலி பெற்றோரிடம் அமர்ந்து பேசுவதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் எண்ணியது முதலில் அஞ்சலி பற்றிய விபரத்தை ராமலிங்கம் காமாட்சி தம்பதியரிடம் தெரிவிக்கலாம் என்பதுதான். இன்றுவரை அவர்கள்தான் அந்த ஊரில் அவனது மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நியாயமானவர்கள். இவன்மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவர்கள்.
இன்றுவரை அஞ்சலியை பற்றி எண்ணி அதிகம் வருந்துபவர்கள். அவளுக்கு ஒரு நல்வாழ்வு என்றால் மனப்பூர்வமாய் மகிழக் கூடியவர்கள்.
Advertisement
சமீபத்தில்தான் அவனது கடந்த கால வாழ்க்கை பற்றி அவர்களிடம் கூறி இருந்தான். கணவனும் மனைவியும் கண்ணீரோடுதான் அவன் கதையை கேட்டிருந்தனர். மனம் நெகிழ்ந்த காமாட்சி அவன் கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டார்.
Advertisement
“இந்த வயசுல உனக்கு இவ்வளவு பெரிய கஷ்டமா சாமி..? சத்தியமா நினைக்கவே இல்ல… உனக்கு பின்னால இவ்வளவு பெரிய சோகம் இருந்தும் திடமா தாங்கி இரும்பு மாதிரி நின்னுட்ட ராசா. வயசும் வாலிபமும் உனக்கு போயிருச்சா என்ன..? இதோட வாழ்க்கை முடிஞ்சும் போயிரலையே… உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்க சாமி… உன் அத்தையை இங்கேயே கூட்டிட்டு வா. உன்கூடவே வச்சுக்கோ… நானும் அண்ணனும் வேணா உனக்கு நல்ல பொண்ணா பாக்கட்டுமா..?”
Advertisement
அத்தனை அன்போடு உரிமையோடு அக்கறையோடு அவனிடம் கேட்டிருந்தார் காமாட்சி. அந்த சமயத்தில் அவன் மனதில் அஞ்சலி குடியேறி இருந்தாலும் சில பல குழப்பங்களும் நிறைய சிக்கல்களும் அவன் மனதில் ஆட்சி செய்ததால் தன் எண்ணத்தைப் பற்றியும் அவரிடம் கூறி இருக்கவில்லை.
Advertisement
ஆனால் இனி அவர்களிடம் இது விஷயமாக பேசினால் நிச்சயமாக மகிழ்வார்கள், இவன் சார்பாக அஞ்சலி வீட்டாரோடு பேசவும் ஏதுவாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டுதான் ஊரில் இருந்தே கிளம்பி வந்திருந்தான். ஆனால் அவன் இங்கு வந்த நேரம் ராமலிங்கமும் காமாட்சியும் நெருங்கிய உறவினர் வீட்டு திருமணத்திற்காக வெளியூர் சென்றிருந்தனர். இன்னும்கூட ஊர் திரும்பி இருக்கவில்லை.
தடாலென அஞ்சலியின் வீட்டிற்குள் நுழைந்து அவளைப் பற்றியும் தங்களது காதலைப் பற்றியும் அவர்களது எண்ணத்தைப் பற்றியும் போட்டு உடைக்க அவனுக்கு எண்ணம் இல்லை. இந்த விஷயத்தை பேசும்போது ஒரு தெளிவும் தீர்க்கமும் இருக்கவேண்டும் என்றுதான் இந்த மூன்று நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறான்.
அவன் ஊருக்கு கிளம்பிச் சென்றபின் பெரும் வெறுமையை உணர்ந்திருந்தாள் அஞ்சலி. இந்த பத்து நாட்களில் அத்தனை காதலையும் நேசத்தையும் முழுமையான குடும்பஸ்தனாக குடும்பத்தோடு ஒன்றிப் போய் அவன் காட்டிய அன்பையும் சுகித்த தாயும் மகளும் அவன் இல்லாது தவித்தே போயினர்.
கூடுதலாக ஊருக்குச் சென்று தன் வீட்டில் பேசப் போகிறேன் என்று அவன் கூறி இருந்ததால் ஏதேனும் பிரச்சனை வருமோ..? அவனுக்கு ஏதேனும் பாதிப்பு நேருமோ..? அவனுக்கென்று அங்கு யாருமே இல்லையே… தனி மனிதனாக என்ன செய்வான்..? என்ற பல கேள்விகளும் குழப்பங்களும் அவள் மண்டையை குடைந்து கொண்டுதான் இருந்தன. அவளுக்கும் பள்ளியிலும் வேலை நெட்டித் தள்ளியது. பெரிய வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் என்பதால் இருவருக்குமே வேலை அதிகம்தான்.
தினமும் காலையும் மாலையும் அவன் குரலை கேட்டால்தான் அவளுக்குள் நிம்மதியே பரவும். அங்கு நிலவும் சூழ்நிலை பற்றியும் அவன் கூறியிருந்தான்.
“ஒன்னும் அவசரம் இல்ல… உங்க யோசனை சரிதான்… காமாட்சி அக்காவும் ராமு மாமாவும் ரொம்ப நல்லவங்க… நீங்க அவங்க மூலமா பேசுறது ரொம்ப சரிதான். அப்படி எல்லாம் அவங்ககிட்ட நீங்க போய் தொங்கணும்னு அவசியமே இல்ல. உங்க யோசனையில இருக்கிற சில நியாயங்கள் எனக்கு புரிஞ்சதாலதான் சரின்னு சொன்னேன். நடக்கிறது நடந்துட்டு போகுதுன்னு பேசாம கிளம்பி அங்கே வரலாம்னுகூட எனக்கு தோணுது குரு… உங்களை அங்கே தனியே நிறுத்த எனக்கு விருப்பமே இல்ல…”
“ஏய்… அதெல்லாம் இப்ப ஒன்னும் வேணாம்… நான் பாத்துட்டு சொல்றேன்… நீ நிம்மதியா இரு… பாப்பாவை நல்லா பாத்துக்கோ…” அவளுக்கு தைரியம் கூறி தனது வேலைகளை தொடர்ந்து கொண்டிருந்தான் குரு.
அன்று சவியை எடுத்துக் கொண்டு ராதாவின் வீட்டிற்கு சென்றிருந்தாள் அஞ்சலி. குருவின் யோசனைகளைப் பற்றி இருவரும் சிறிது நேரம் கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
“ஏதாவது பிரச்சனை வர்ற மாதிரி இருந்தா நீங்களும் நானும் அங்கே கிளம்பி போகலாம்மா… என்னதான் நடக்குதுன்னு பாத்துடலாம்…”
“குமரன் அதெல்லாம் சமாளிச்சிடுவான்டா… போய்தான் ஆகணும் என்டு சூழ்நிலை வந்தா போனாப் போகுது… நீ தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்காத என..”
“எதுக்கும்மா..?” சங்கடத்தோடு முகம் சுருக்கினார் ராதா.
“சும்மா பாக்கலாம்னுதான்…”
“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவனிட்ட இருந்து பிடுங்கி வச்சன். அதை பார்த்தா அவனால நிமிர்ந்து நடக்கவே முடியாது. நானும்கூட அதுக்கு அப்புறம் அதை எடுத்து பார்க்கவே இல்ல. பார்த்தா எனக்கு மனசெல்லாம் ரணமா வலிக்கும்மா… இப்ப எதுக்கு அது..? இனி அவன்ட வாழ்க்கையில நீயும் சவியும்தானே…”
“பரவால்ல காட்டுங்கம்மா… எனக்கு பாக்கணும்… ப்ளீஸ்…”
அவள் அடமாக கேட்க எழுந்து அறைக்குள் சென்றவர் பீரோவை திறந்து தன் உடைகளுக்கு அடியில் வைத்திருந்த கையளவு புகைப்படத்தை எடுத்து வந்து அவளிடம் நீட்டினார்.
ஒரு பர்சிற்குள் வைத்துக் கொள்ளக்கூடிய அளவு உள்ள சிறிய புகைப்படம்தான். ஐந்து அல்லது அதற்கும் கூடுதலான ஆண்டுகளுக்கு முன்பு எடுத்திருந்த புகைப்படம். கண்ணாடி போட்டிருந்த அதே குரு… ஆனால் இன்னும் இளமையாய் காந்தமாய் வசீகரித்தான். பொம்மைபோல் ஒரு வயது சைந்தவியை கையில் இருவரும் பிடித்துக் கொண்டு நிற்பது போன்ற புகைப்படம்.
தீபா…
புடவையில் அத்தனை அழகாக, மனம் நிறைந்த சிரிப்புடன் நின்றிருந்தாள். அஞ்சலியைவிட கூடுதல் உயரமாக இருக்கக்கூடும். இவள் குருவின் தோள்பட்டைக்குதான் இருப்பாள். ஆனால் அவள் கன்னம்வரை உயரம் இருந்தாள். அளவான உடல்வாகு… அவனுக்கு பொருத்தமான துணையாகத் தெரிந்தாள்.
அந்த மூவரின் முகத்திலும் அப்படி ஒரு சிரிப்பு… எத்தனை கனவுகளை, எதிர்கால ஆசைகளை, மகிழ்ச்சிகளை சுமந்து அந்த நொடி சிரித்திருப்பர் என்று நினைக்கும்போது இவள் இதயத்தில் ரத்தம் வடிவதுபோல் தோன்றியது.
இந்த புகைப்படத்தை பார்த்தால் உடையாத மனம்கூட உடையும். உரியவன் உதிர்ந்து போகாமல் எப்படி இருப்பான்..? ஆனால் அனைத்தையும் கடந்து அவன் நிற்கிறான் வாழ்கிறான் என்றால் அவன் நிதானம் எந்த எல்லையில் இருக்கும். எப்படிப்பட்ட ஒருவனாக அவன் இருப்பான். ஒருக்கால் தனக்காகவும் தன் குழந்தைக்காகவும்தான் அத்தனை நிதானத்தையும் இரும்பு போன்ற இதயத்தையும் கொண்டு எங்களை உணர்ந்து வந்தானோ என்றும் தோன்றாமல் இல்லை.
இயற்கையோ இறைவனோ… வலி கொண்ட இதயங்கள் இரண்டும் ஒன்றிணைந்துதான் ஒளி கொண்ட வாழ்வை வாழ வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதோ…
அருகில் அமர்ந்திருந்த ராதாவும் நீண்ட நாட்களுக்குப் பின் அந்த புகைப்படத்தை எட்டிப் பார்த்து தன்னையும் மீறி அழுதார். அவர்களோடு அவரும் இணைந்து வாழ்ந்தவர் அல்லவா… எத்தனை வலிகள் அவர் இதயத்திலும் இருக்கும்.
“இத பார்த்தாலே நாங்க ரொம்ப உடைவோம்மா… அதுக்காகத்தான் இந்த போட்டோவை உள்ளேயே வச்சுட்டேன். அவன் கண்ணுல இதை காட்டிட வேணாம். இப்பதான் பழைய குமரனா மாறி இருக்கான்…”
பெருமூச்சோடு சொன்னவர் அவள் கையில் இருந்த அந்த புகைப்படத்தை வாங்கிக் கொண்டார்.
இந்த நொடியே தன்னவனைப் பார்க்க வேண்டும்… அவனை இறுக்கமாய் அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை எழுந்தது அவளுக்கு. இனி வரும் நாட்களில் அவனுக்கு சகலமுமாக மாறி வேதனையின் வடுவே தெரியாமல் வைத்திருக்க வேண்டிய பெரும் பொறுப்பு தனக்கும் தன் மகளுக்கும் இருப்பதாக ஆழமாக உணர்த்தியது மனம்.
‘குரு… கண்டிப்பா அப்படித்தான் இருப்பேன்… இந்த சவி அந்த சவியா எப்பவோ மாறிட்டா… அதனாலதான் உங்க உயிர்ல சுமந்து இவளை நேசிக்கிறீங்க. ஆனா இந்த அஞ்சலி அந்த தீபாவா மாற மாட்டா… மாறவும் கூடாது இல்லையா… அஞ்சலி அஞ்சலியாவே அவளோட அன்பை, காதலை, நேசத்தை உங்களுக்கு கொடுப்பா. தீபா நமக்கெல்லாம் தெய்வமா இருந்து நம்மளை வழி நடத்துவாங்க. என் செல்ல தென்னமரம்… உனக்கு இனி கஷ்டமே வரவிடாம பார்த்துக்குவேன்டா…
கண்ணீரைத் துடைத்து புன்னகைத்துக் கொண்டாள் அஞ்சலி.
அன்றும் பள்ளியில் பிரத்தியேக வகுப்பு முடிந்து இருட்டிய வேளையில்தான் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான் குரு. தனது இரு சக்கர வாகனத்தை தனது வீட்டிற்குள் திருப்பிய நேரம் அஞ்சலியின் வீட்டின் முன் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து அவளது பெற்றோர் இருவருமே இறங்கி இருந்தனர்.
அவள் அம்மா லதாவின் முகம் முற்றிலுமாக சோர்ந்து இருந்தது. நடக்கவே சிரமப்பட்டவர்போல் நின்றிருப்பவரின் தோளில் ஒரு கையை போட்டு மற்றொரு கையில் ஒரு பையை எடுத்துக் கொண்டு கேட்டை திறந்து கொண்டு சென்ற கர்ணனை கண்டு கண்கள் குவித்து குழப்பமாக பார்த்தான் குரு.
பார்த்த நொடியில் லதாவின் உடல்நிலையில் ஏதோ பாதிப்பு என்பது தெரிந்தது. நடந்து சென்றவர் தடுமாறி விழப்போக மறு கையில் வைத்திருந்த பையை கீழே போட்டு இரு கைகளாலும் அவரை அணைத்துப் பிடித்துக் கொண்டார் கர்ணன். தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வேகமாக அவர்களை நோக்கி ஓடி வந்திருந்தான் குரு.
“என்னாச்சுங்க..? அவங்க உடம்புக்கு என்ன..?” கீழே கிடந்த பையை கையில் எடுத்தபடியே கேட்டான்.
சோகமாக சொன்னவர் மனைவியின் தோளை பிடித்துக் கொண்டு மறு கையால் அவனிடம் இருந்த பையினை வாங்க கையை நீட்ட “நீங்க போங்க… நான் எடுத்துட்டு வரேன்…” என்றவன் அவர்களை முன்னே நடக்கவிட்டு தானும் பின்னே வீட்டிற்குள் நுழைந்தான்.
அன்றுதான் முதன்முதலில் அஞ்சலியின் வீட்டிற்குள்ளேயே அவன் நுழைகிறான். அவ்வப்போது பெரியவர்கள் இருவரும் அவனை பார்த்து புன்னகைப்பதுண்டு. லதா கூடுதலாக நலம் விசாரிப்பார்… சிநேகமாக சிற்சில வார்த்தைகள் பேசுவார். கர்ணன் புன்னகையோடு கடந்து விடுவது வழக்கம்.
அதிலும் அஞ்சலி அங்கிருந்து சென்றபின் கணவன் மனைவி இருவருமே அதிகம் வெளியில் தென்படுவதில்லை. அவ்வப்போது தென்படும் லதாவின் முகமும் எந்நேரமும் கன்றி கறுத்து வேதனையோடுதான் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருப்பார். மகளையும் பேத்தியையும் தொலைத்த துக்கம் அவர்களை பெரிதாக வதைக்கிறது என்பது புரியும். ஆனால் ஆழ்மனதில் அவர்கள்மேல் எழுந்த கோபத்தில் இவனும்கூட அவர்களிடம் சாதாரணமாக கூட பேசுவதை நிறுத்தி இருந்தான். அத்தனை கோபம்… மகளின் உணர்வுகளை கொன்ற மட ஜென்மங்கள் என்றுதான் தோன்றும்.
கையில் இருக்கும்வரை எந்தப் பொருளின் அருமையும் யாருக்கும் தெரிவதில்லை. தொலைத்த பின்புதான் அது பொக்கிஷம் என்பதே பலருக்கும் புரிகிறது. அந்த பட்டியலில் இவர்களும் விதிவிலக்கல்ல என்று புரிந்து போனது. இன்று இருவரையும் பார்க்க அத்தனை பாவமாக இருந்தது.
ஓரளவு பெரிய வீடுதான்… நல்ல அகன்ற கூடம்… நிறைய அறைகள் இருப்பது போன்றும் தெரிந்தது.
சோர்ந்து நடந்து வந்த லதாவை அங்கிருந்த சோபாவில் அமர வைத்தார் கர்ணன்.
“குடிக்க சூடா பால் எடுத்துட்டு வரட்டுமா..?” கனிவோடு கேட்டார்.
“இல்ல… இப்ப வேணாம்… கொஞ்சம் சுடுதண்ணி மட்டும் குடுங்க…” என்றார் லதா நலிந்த குரலில். கர்ணனும் உடனடியாக சமையல் அறைக்குச் சென்றிருந்தார்.
அங்க நின்றிருந்த குருவை நிமிர்ந்து பார்த்த லதா “உக்காருங்க தம்பி…” என்று எதிர் இருக்கையை காட்ட அவனும் கையில் இருந்த பையை ஓரமாக வைத்து அமர்ந்து கொண்டான்.
காமாட்சி, ராமலிங்கம் இருவரும் வராவிட்டாலும் இன்று அவர்களிடம் அமர்ந்து பேசலாம் என்ற எண்ணத்தோடு தான் அவனும் வந்திருந்தான். ஆனால் லதா தற்போது இருக்கும் உடல்நிலையில் தான் பேச வந்த விஷயத்தை பேசுவது சரியாக இருக்காது என்ற எண்ணம் தோன்ற அமைதியாக அமர்ந்திருந்தான் குரு.
சுடுதண்ணீருடன் வந்த கர்ணன் லதாவிடம் கொடுத்து அருகிலேயே அமர்ந்து கொண்டார்.
“காப்பி எதுவும் குடிக்கிறீங்களா தம்பி..?”
தங்கள் வீட்டிற்கு முதன்முறை வந்தவனிடம் சம்பிரதாயமாக கேட்டிருந்தார் கர்ணன்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க… என்ன ஆச்சு இவங்க உடம்புக்கு..? என்ன பிரச்சனை..?”
“வேற என்ன தம்பி..? பக்கத்துல இருக்கீங்க.. இங்க நடந்த விஷயம் எல்லாம் உங்களுக்கும் தெரியுமே… எல்லாம் மகளையும் பேத்தியையும் பிரிஞ்ச கவலைதான்… வீட்ல எங்க திரும்பினாலும் அவங்க முகம்தான் கண்ணுக்கு தெரியுது. அவங்கள நெனச்சு சரியா சாப்பிடாம தூங்காம உடம்பை மொத்தமா கெடுத்து லோ பிரஷர்ல காலையில மயக்கம் போட்டு விழுந்துட்டா. குளுக்கோஸ் போட்டுதான் இப்ப வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கு. மாத்திரை மருந்து எல்லாம் கொடுத்திருக்காங்க. நல்லா சாப்பிட்டு ஓய்வெடுக்க சொல்லி இருக்காங்க. தொண்டைக்குழிக்கு கீழ சோறு இறங்கினாதானே தம்பி..”
யாரிடமாவது மனம் விட்டு பேசலாம் என்று அவருக்கும் தோன்றியதோ என்னவோ… வருத்தம் நிறைந்த குரலில் பேசியவரை அமைதியாக பார்த்தபடி அமர்ந்திருந்தான் குரு.