Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

48. கலாராணி பாஸ்கர் - காதல் எனும் மாயன்

காதல் எனும் மாயன்-25

அத்தியாயம் 25

அடுத்தநாள் காலையில் லிங்கா மெஷினரீஸின் மீட்டிங் அறையில் அதிதி பதற்றத்துடன் நின்றிருந்தாள்.

முதன் முறையாக வெளியூரில் ஒரு ப்ரெசெண்டேஷன் அதுவும் விக்ரம் பவித்ரா என்று எந்த துணையும் இல்லாமல் அவளே தனியாக செய்யப்போகிறாள். குறிப்பாக தன் மீது முழு நம்பிக்கை வைத்து அனுப்பிய விக்ரம் சாரையும் ஏமாற்றிவிடக்கூடாது.. அதே சமயம் தனக்கு பக்கபலமாக இருக்கும்  வசீகரனுக்கும் தலையிறக்கம் வந்துவிடக்கூடாது.. இதற்காகவே எதுவும் சொதப்பிவிடக்கூடாது என்று நினைவில் வந்த தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொண்டிருந்தாள்.



Advertisement

நேரம் ஆக ஆக அதிதிக்கு பதற்றம் அதிகமாகிக்கொண்டே இருந்தது.

மீட்டிங்கிற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் தான் இருந்தது.

அப்போது அறையின் கதவைத் திறந்து கொண்டு முதன் ஆளாக வசீகரன் வந்தான்.

Advertisement

இவள் டென்ஷனாக இருப்பதைப் பார்த்து இவள் அருகில் வந்தவன்

Advertisement

“ஹேய் கிட்டி.. நீ ரொம்பல்லாம் டென்ஷன் ஆகாத, இது வெறும் ஃபார்மாலிட்டிதான் நம்ம ப்ராஜெக்ட் பண்றது கன்ஃபார்ம்தான். இங்க நான்தான் முடிவெடுக்கப்போறேன்..” என்று அவளை தேற்றலாம் என்று கூறினால் அவள் அவனை முறைத்தாள்

“அப்போ நான் நல்லாப்பண்ண மாட்டேன்னே முடிவே பண்ணிட்டீங்களா?” என்றாள்.

“அப்படி இல்லம்மா..” என்று அவன் தொடங்கவும்

Advertisement

“நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம் போங்க..போய் உக்காருங்க யாராவது வந்துடப்போறாங்க..” என்றவள்.

பதற்றத்ததை தணிக்கவோ என்னவோ டேபிளின் மேல் இருந்த பேனாவை கையால் சுழற்றிக்கொண்டே இருந்தாள், அது திடுமென கீழே விழுந்துவிட..

இவள் எடுப்பதற்கு முன் அதை குனிந்து எடுத்தவன் அவள் கையில் அந்தப் பேனாவை திணித்து

“டோண்ட் வொர்ரி.. எவ்ரிதிங் வில் பீ ஃபைன்” என்று கூறிவிட்டு திரும்பப்போய் அவன் இடத்தில் அமர்ந்தான்.

அவனையே வெறித்துப்பார்த்தவளுக்கு தனக்கு தெரியவேண்டிய எதோ ஒன்று தெரியாமல் இருப்பது போல் தோன்றியது.

அவளைப்பார்த்து சிரித்தவன்

“என்ன டேஜாவு மாதிரி இருக்கா..?” என்றான்.

அவள் அது என்ன என்று யோசிக்கும் முன்னே அடுத்தடுத்த ஆட்கள் வந்துவிடவே மீட்டிங் தொடங்கியது.

அதிதி தங்களின் அட்வான்ஸ்டு ஏஐ தொழில் நுட்பத்தை அவர்களின் புது ப்ளாண்டில் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கப்போகும் நன்மைகளை விளக்கினாள். எரிபொருள் சிக்கனம், மெஷினரீஸ் மெயிண்டனான்ஸ், தொழிலாளர் பாதுகாப்பு, ஸ்க்ராப் மெட்டீரியலை குறைப்பது, ப்ரொடக்‌ஷன் செலவைக் குறைப்பது,நேரத்தை மிச்சமாக்குவது என்று இவற்றின் மூலம் மட்டுமே எவ்வளவு சேமிக்க முடியும் என்று எடுத்துக் கூறினாள். இதை எல்லாம் ரொம்ப டெக்னிக்கலாக இல்லாமல் எல்லாருக்கும் புரியும்படியாக ஒரு ஐந்து நிமிட ஏஐ வீடியோவாக தயாரித்திருந்தாள்.

அவள் பேசி முடித்ததும்,

“இதையெல்லாம் நாங்களே ஏற்கனவே பண்ணிட்டுதானே இருக்கோம்.. இதுக்கு நீங்க எதுக்கு?” என்று கேட்டார் அவர்களின் ஐடி டீம் தலைவர் சுதர்ஷன்.

“சார் நீங்க இதைஎல்லாமே சரியா பண்ணிட்டு இருக்கீங்கன்னா போன வாரம் ஏன் சார் லைன் ப்ரொட்ஷன் போடாம அரைநாள் நின்னது?” என்று கேட்டாள்.

“அது சிஎன்சி மெஷின் ஃபெயிலியர் நால வந்தது, ஆனா அதை நாங்க உடனே சரி பண்ணிட்டோம்..”

“நீங்க சரி பண்ண எடுத்த அந்த அரை நாள்ல  கம்பெனிக்கு ஆன நஷ்டம் மட்டும் 20 லட்சம்..” என்றவள்.

“ஆனா இந்த மெஷின் ஃபெயில் ஆகப்போறதை எங்க சாப்ட்வேர் மூனு நாளைக்கு முன்னாடியே கண்டுபுடிச்சிருக்கும்..நடந்து முடிஞ்சப்புறம் கண்டுபிடிக்கறது யாராலயும் முடியும்.. ஆனா நடக்கபோறதுக்கு முன்னாடியே தடுக்கறது தான் திறமையான நிர்வாகத்துக்கு தேவை சார்..”என்றவள்

“போன மாசம் ப்ராடக்ட் ரிஜெக்‌ஷன் ரேட் அதிகமா இருந்ததே எதனால சார்..? என்று அவரையே மீண்டும் கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்னுமில்லை..சும்மா ஆதாரமில்லாம எதையாவது பேசக்கூடாது..”என்றார் அவர்

“உங்க டேட்டாவுல இருந்து எடுத்த ஆதாரம் தான் சார் அது..” என்று ப்ரொஜெக்டரில் தான் எடுத்த டேட்டாவை  போட்டுக்காட்டினாள்.

சிவசந்திரன் அவரை கேள்வியாக பார்க்க..

“அது ராமெட்டீரியல் பிரச்சனைனால ரிஜெக்‌ஷன்  ரேட் அதிகமாகிடுச்சி.. இதெல்லாம் எக்ஸ்டர்னல் ஃபேக்ட்டர்ஸ் அதை எங்களால ஒன்னும் பண்ணமுடியாது..”என்றார்.

“அது எக்ஸ்டர்னல் ஃபேக்ட்டர் தான் சார், ஆனா ராமெட்டீரியல்னால வந்த பிரச்சனை இல்ல, அது வானிலைல ஏற்பட்ட பிரச்சனை, அன்னிக்கு மழை வந்திருக்கு சார், காற்றுல ஈரப்பதம் அதிகமா இருந்திருக்கு.. அதனால் மெட்டல உருக்கி ஊத்தும்போது டெம்பரேச்சர்ல மாறுதல் ஏற்பட்டதால பிரச்சனை வந்திருக்கு, கூலிங்க் டைம் வேரியேஷனால எண்ட் ப்ரோடெக்ட் சரியா வராம போயிருக்கு..அதனால தான் அந்த உதிரி பாகங்கள் எல்லாம் ரிஜெக்ட் ஆகியிருக்கு..” என்றவளை இடைமறித்து.

“இதெல்லாம் சுத்த ஹம்பக்..” என்றார் ஐடி ஹெட்டான சுதர்ஷன்.

“இதே மாதிரி ரிஜெக்‌ஷன் ரேட் அதிகமானது கடந்த மூணு மாசத்துல மட்டும் நாலு தடவை நடந்திருக்கு, அந்த டேட்டாவையும் சுட்டிக்கட்டினாள். அந்த எல்லா நாளும் மழை வந்திருக்கு, நான் ஃபோர்மேன்கிட்டயும் பேசினேன் அவரும் மழைவந்தா இங்க கொஞ்சம் ஈரப்பதம் அதிகமாத்தான் இருக்கும்னு சொல்றாரு..உங்க சிஸ்டம் சரியா இருந்திருந்தா முதல் தடவையே நீங்க இதை கண்டுபிடிச்சிருக்கனும், நீங்க வெறும் வரலாற பதிவு பண்ற மாதிரி நேத்து என்ன நடந்துச்சின்னு மட்டும்தான் டேட்டா வச்சிருக்கீங்க, எங்க ஏஐ வெறும் மெஷினோட மட்டும் பேசாது, இந்த ஃப்ளோர்ல என்ன நடக்குதுங்கற வரைக்கும் பார்த்து அதுக்கு தகுந்த மாதிரி கூலிங் ஃபேனை அட்ஜஸ்ட் பண்ணி டெம்பரேச்சர மாத்தியிருக்கும், உங்களுக்கு இவ்ளோ வீண்செலவு ஆகி இருக்காது..”என்றாள்.

“ஒரு போன் வாங்கினாவே ரெண்டு வருஷத்துக்கு ஒருதரம் பழசாகிடுச்சின்னு மாத்த வேண்டி இருக்கு, இந்த காலத்துல உங்க டெக்னாலஜி மாறிக்கிட்டே இருந்தா நாங்க எத்தனை வாட்டி அதுக்காக செலவு பண்ணுறது?” என்று கேட்டார் சிவசந்திரன்.

“சார் உங்களோட டவுட் ரொம்ப நியாயமானது,

ஆனா ஏஐ ஒன்னும் மொபைல் ஃபோன் மாதிரி கிடையாது, இப்ப உங்க கம்பெனில ஒரு டிரெய்னிய வேலைக்கு எடுக்கிறீங்க , அவரு ரெண்டு வருஷத்துல பழசாகிடுவாரா? இல்லை.. இன்னும் அதிக திறனுடையவராதான் ஆவாரு, அதே மாதிரிதான் ஏஐயும் நாள் ஆக ஆக அது விஷயங்களை லேர்ன் பண்ணிக்கிட்டு இன்னும் பெட்டராதான் ஆகும்.

செலவுன்னு பார்த்தீங்கன்னா.. இது ஒன்டைம் இன்வெஸ்மெண்ட் மாதிரி தான், எதிர்காலத்துல நீங்க சேமிக்கப்போற பல கோடிகளுக்காக இப்ப பண்ற ஒரு சின்ன இன்வெஸ்மெண்ட் அவ்ளோதான். நீங்க இன்வெஸ்ட் பண்ற  இந்த சில கோடிகளும் ஒரு சில வருஷத்துலயே நீங்க உங்க சேமிப்புலயே திரும்ப எடுத்துடலாம் சார். உங்களுக்கு எங்க மேல நம்பிக்கை இல்லைன்னா, எங்க ஏஐ நால உங்களுக்கு சேவ் ஆகுற அமவுண்ட்ல இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்த மட்டும் எங்களுக்கு  ஷேரா குடுத்தாப் போதும்.” என்றாள்.

“எல்லாத்துக்கும் ஏஐ ஏஐன்னு போனா மனுஷங்களுக்கு வேலை இல்லாம போயிடாதா?”என்றார் ஒருவர்.

“சார் கண்டிப்பா ஏஐனால இங்க யாருக்கும் வேலை போகாது, நானே பார்த்தேன் இங்க எம்ப்ளாயீஸ் குப்பையிலயும் தூசுலயும் ஸ்க்ராப் மெட்டீரியல ரிமூவ் பண்ணிட்டு இருந்தாங்க, எங்க ஏஐ நால அப்படி விழுற ஸ்க்ராப்ப மூனே மாசத்துல 20% வரைக்கும் குறைக்க முடியும் சார்.அப்படி நடந்தா கம்பெனிக்கும் ப்ராஃபிட், எம்ப்ளாயீசுக்கும் அவங்க நேரம் மிச்சமாகும்.

சோ இதனால யாருக்கும் வேலை போகாது..வெறும் லேபர்ஸ்சா இருக்கவங்க ஸ்கில்டு டெக்னீஷியன்ஸா அப்கிரேட் தான் ஆவாங்க.” என்றாள் கேள்வி கேட்டவரைப்பார்த்து.

“மாறிட்டே வர்ற இந்த நவீன உலகத்துல நம்மல சுத்தி எல்லாருமே புது டெக்னாலஜிக்கு மாறிட்டு இருக்கும் போது நாம மட்டும் மாறாம இருந்தா அப்போதான் சார் எல்லாருக்கும் வேலை போகுற நிலை உருவாகும்..” என்று பொதுவாக சொன்னவள்..

“50 வருஷத்துக்குமேல  பாரம்பரியத்தோட பல தலைமுறைகளை வாழ வைக்குற நம்ம கம்பெனி இன்னும் பல தலைமுறைக்கு நல்லபடியா நடக்கறதுக்கு இந்த மாற்றம் அவசியமானது சார்..”என்றாள் சிவசந்திரனை நேராகப்பார்த்து.

“எப்படி நீங்க இதை செயல்படுத்துவீங்க, எவ்ளோ நாள் தேவைப்படும்..?” என்று விவரம் கேட்டான் வசீகரன்.

“குறைந்த பட்சம் மூனு மாசம் ஆகும் சார். ஒவ்வொரு மெஷின் அண்ட் லைனயும் மேப்பிங் பண்ணி ஏஐ மாடல உருவாக்கனும், எல்லா மெஷினரிஸ்லயும் சாஃப்ட்வேர் ப்ரொகிராமிங் பண்ணனும், இது எல்லாமே பண்றதுக்கு அவளோ டைம் எடுக்கும், நாங்க மேனுவல மட்டும் குடுத்துட்டு போயிட மாட்டோம் சார், எல்லா ப்ராசஸும் முடிஞ்சி உங்க சிஸ்டம்ல எங்க ஏஐய எம்பெட் பண்ணி, வொர்கர்ஸ் எல்லாருக்கும் எப்படி இந்த டெக்னாலஜிய கையாளுறதுன்னு ட்ரெயிங் குடுத்து எல்லாமே ஸ்மூத்தா ரன் ஆகுற வரைக்கும் இருந்து பார்த்துட்டுதான் சார் போவோம். அதுக்குமேலயும் சப்போர்ட்க்கு எங்க எஞ்சினியர்ஸ் ரெண்டு பேர் இங்க இருந்து வேலை செய்வாங்க. வீக்லி மீட்டிங்கும் இருக்கும் சார்..அப்புறம் இங்க இருக்கற ஒவ்வொரு சென்ஸர்ல பதிவாகுற டேட்டாவும்  க்ளவுட்ல ஸ்டோர் ஆகிட்டே இருக்கும்.. சோ இங்க என்ன ப்ராப்ளம் நாலும் உடனே அங்க எங்களுக்கும் தெரிஞ்சிடும்.. அதை நாங்க அங்க இருந்தே சரி பண்ணிடமுடியும்.. நீங்க அந்த டென்ஷன் எதுவும் இல்லாம இருக்கலாம் சார்..” என்றாள்.

பேசி முடித்து விட்டு அந்த அறையிலிருந்தவர்களை ஒரு முறை பார்த்தாள்.

“எனி கொஸ்டியன்ஸ் சார்..?” என்றாள் பொதுவாக..

சற்று பொறுத்து “ இல்லை..” என்று கூறிய சிவசந்திரன்

“நாங்க பேசிட்டு கூப்பிடுறோம்..” என்று விட்டு எழுந்து வெளியேறினார்.

எல்லாரும் வெளியேறியதும் அதிதியிடம் வந்து அவளை தோளோடு அணைத்து

“வெல்டன் டியர்..” என்று விட்டுப்போனான் வசி.

அதிதி அப்படியே துவண்டு ஒரு சேரில் விழுந்தாள்.

“ஒரு வழியா முடிந்தது.. இனி கடவுள் விட்ட வழி..” என்று கண்ணைமூடிக்கொண்டாள்.

அரையுகம் போல் கழிந்த அரைமணி நேரம் கழித்து வந்த வசீகரன்

அவளைத் தூக்கி ஒரு சுற்று சுற்றிவிட்டு இறக்கினான்.

“ஹே கிட்டி அப்பா ஓகே சொல்லிட்டாரு.. நீ சாதிச்சிட்ட..” என்றவன் அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.

அதுவரை இருந்த அழுத்தம், இறுக்கம் எல்லாம் நீங்க நிம்மதி பெருமூச்சுவிட்டவள் அப்படியே அவன் மேல் சாய்ந்துகொண்டாள்

“என்கிட்ட நேரடியா சொல்லல ஆனா அப்பா ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டாருன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சது..இல்லைன்னா லேசுல சம்மதிக்கிற ஆளுகெடையாது அவரு.. முதல்கட்டமா நியூ ப்ளாண்ட்ல இம்ப்ளிமெண்ட் பண்ணிட்டு அது சரியா வந்தா ஓல்ட் ப்ளாண்ட்லயும் மாத்தலாம்னு சொல்லிட்டாரு..” என்றான் உற்சாகமாக..

அவள் புன்னகையுடன் “என்னை விட நீங்கதான் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல..” என்றாள்.

“பின்ன இருக்காதா.. ‘பரவால்லடா விக்ரம் நல்ல தெளிவான பொண்ணதான் அனுப்பி இருக்கான்னு’ சொன்னாரு தெரியுமா..? இதெல்லாம் அவரோட அகராதியில ரொம்ப பெரிய பாராட்டு..எனக்கு அவ்ளோ பெருமையா இருந்தது கிட்டி..” என்றவனின் பூரித்தமுகத்தை அவள் அகம் மகிழ்ந்து பார்த்திருக்க, அதை மீட்டிங் ரூமின் வெளியிலிருந்து சிறிய ஜன்னல் வழியே பார்த்து லேசாக சிரித்துவிட்டுப்போனார் சிவசந்திரன்.

“சரி கெளம்பு வெளிய போலாம்..” என்றான்.

“எங்க..”

“சாப்பிட போலாம்மா பசிக்குது..” என்றவனிடம்

“சரி..” என்றுவிட்டு பையில் தன் உடமைகளையெல்லாம் எடுத்துவைத்துவிட்டு கடைசியாக அந்த பேனாவை கையில் எடுத்தவள் யோசனையாக வசீகரனைப் பார்த்தாள்.

“வசி.. காலையில டேஜாவுன்னு என்னமோ சொன்னீங்களே அது என்ன?” என்று கேட்டாள்.

“உனக்கு எதுவுமே நியாபகம் இல்லையா..” என்று கேட்டான் அவளையே ஆழ்ந்துபார்த்து…

அதிதி முதன்முறை சிருஷ்டியில் அட்மிஷனுக்காக தன் தந்தையுடன் வந்திருந்தாள்.. அவளுக்கு விருப்பப்பாடமான கம்ப்யூட்டர் சயின்ஸ் கன்ஃபார்ம் சீட் இல்லாமல் வெயிட்டிங் லிஸ்ட்டில் தான் இருந்தது..அதனால் அது கிடைக்குமோ இல்லையோ என்று அவள் பதற்றத்தில், கழுத்திலிருந்த செயினை வாயில் வைத்து கடித்துக்கொண்டு பிரின்சிபல் அறையின் வெளியில் காத்திருந்த போதுதான் வசீகரன் முதன் முதலில் அவளைப் பார்த்தான்.

அவள் டென்ஷனில் செயினைக்கடிப்பதும், கால்கள் நிற்காமல் ஆடிக்கொண்டே இருப்பதும், அங்கே இங்கே அலைபாய்ந்து கொண்டிருந்த அந்த கருவிழிகளில் இருந்த மிரட்சியும் அவன் கவனத்தை ஈர்த்தது. அவனையறியாமல் அவன் அவளை அடிக்கடி திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் வேறு காலேஜிற்கு மேட்ச் ஆட போவதற்கு பிரின்சிபலிடம் பர்மிஷன் லெட்டரில் சைன் வாங்க வந்திருந்தான்.

அவர் அட்மிஷன் பிஸியில் இருந்ததால்.. இவன் பியூனிடம் லெட்டரைக்கொடுத்து  சைன் வாங்க அனுப்பிவிட்டு காத்திருந்தான்.

அவர் வெளியே வந்து பர்மிஷன் லெட்டரைத்தர அதை வாங்கிக்கொண்டவன் உடனே போகாமல் சற்று நேரம் அந்தப்பெண் என்ன செய்கிறாள் பார்க்கலாம் என்று நின்றிருந்தான்.

“அப்பா எப்பப்பா கூப்பிடுவாங்க..?” என்றாள் அவள் பொறுமையிழந்த குரலில்..

“கூப்பிடுவாங்க வெயிட் பண்ணும்மா..?” என்றார் அவர் சமாதானமாக.

“சீட் கெடைக்கலன்னா என்னப்பா பண்றது…” என்று கவலைப்பட்டாள்

“அதெல்லாம் கிடைக்கும் கவலைப்படாத..” என்று தைரியம் சொன்னார் அப்பா.

“பிரின்சிபல் எதோ இண்டர்வியூ பண்ணுவாங்கன்னு சொன்னாங்களேப்பா.. என்ன கேப்பாங்க..” என்றாள் மீண்டும் அதே கவலையைக்காட்டி

“பெருசா ஒன்னும் இருக்காது பாப்பா. என்ன குரூப் வேணும் ஏன் இந்த படிப்பை தேர்ந்தெடுக்கறீங்கன்னு கேப்பாங்க அவ்ளோதான் இருக்கும்..” என்றார்

“பயமா இருக்குப்பா..” என்றாள் பாவமாக பார்த்து.

“ஒன்னும் பயப்படாத பாப்பா.. அப்பா பாத்துக்கறேன்..” என்றார்.

வசீகரனுக்கு அவனுடைய அப்பா அப்படி ஒரு நாளாவது தன் அருகில் அமர்ந்து இப்படி தைரியமூட்டும் வகையில் பேசி இருப்பாரா என்று தோன்றிவிட்டது..அவன் மனம் ஒரு மாதிரி ஆகிவிட.. கிளம்பலாம் என்று நினைத்த போது

‘அதிதி’ என்ற பெயர் அழைக்கப்பட அந்தப்பெண் பதற்றத்துடன் எழ அவள் மடியிலிருந்த ஃபைல் கீழே விழுந்தது.இதை கவனிக்காமல் அவளது அப்பா முன்னே சென்றுவிட்டிருந்தார்.

“அவள் கீழே குனிந்து அவசரமாக சிதறிய பொருட்களை எடுக்க..சற்று தூரம் விலகிப்போய் விழுந்திருந்த பேனாவை எடுத்து அவள் கையில் கொடுத்தவன்

“டோண்ட் வொர்ரி, எவ்ரிதிங் வில் பீ ஃபைன்..” என்று அவசரமாக மொழிந்துவிட்டு, அவள் நிமிர்ந்து பார்க்கும் முன்னர் சென்றுவிட்டான்.

அதிதி திரும்பிப்பார்த்தபோது அவனின் முதுகை தான் பார்க்க முடிந்தது. ஆனாலும் அவன் கூறிய வார்த்தைகள் ஏதோ தெய்வவாக்கு போல சற்று நம்பிக்கையூட்ட அவள் கொஞ்சம் தைரியமாகவே உள்ளேப்போனாள்.

அதன் பிறகு காலேஜ் முதல் நாளில் தான் வசீகரன் மீண்டும் அவளைப்பார்த்தான்..

கேசவ் எதோ அதிகாரமாக பேசிக்கொண்டிருக்க மலங்க விழித்துக்கொடிருந்தவளைப்பார்த்தவனின் கால்கள் தானாக அவளிடம் சென்றது.

“வசி.. அன்னிக்கு அட்மிஷன் அப்போ அந்த பென்ன எடுத்துக்குடுத்தது நீங்களா..?” என்று கேட்டாள்.. அதிசயித்தபடி..

“ம்ம்..” என்றவன்

“அதுக்கு முன்னாடி இருந்தே உன்னதான் பார்த்துட்டு இருந்தேன்…” என்றான் குருஞ்சிரிப்புடன்.

நம்பமுடியாத அதிசயமா இருந்தது அதிதிக்கு..

“என்ன அப்படி முழிக்கற..?” என்றான் சிரித்தவாறே..

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல..”

“நேத்து கேட்டல்ல.. ரெண்டு நாள் கழிச்சி வந்து என்ன சொல்லி இருப்பீங்கன்னு.. இததான் சொல்லியிருப்பேன்.. உன்ன பார்த்த மொதநாள்ல இருந்தே நான் உன்னை மட்டும்தான் பார்த்துட்டு இருக்கேன்னு..” என்றான் அவன் பார்வையில் தீவிரம் காட்டி..

ஜிவ்வென்று இதயம் காற்றில் பறக்க..அவள் அவனை விழி மலரப்பார்க்க..அந்த பார்வையில் ஈர்க்கப்பட்டு  அவனும் அவள் அருகில் வந்திருந்தான்.. அப்போது

அவனது மொபைல் ஒலிக்க. சட்டென்று அந்த மாயச்சங்கிலி அறுபட,விலகி நின்று மொபலை எடுத்துப்பார்த்தான்.

“அப்பா..” என்று அதிதியிடம் சொல்லியவன்

“பா சொல்லுங்கப்பா..” என்றான் போனில்

“எங்க இருக்க வசி..?”

“இங்கதான்ப்பா..”

“சரி என் ரூமுக்கு வா சாப்பிடலாம்..”

“அப்பா இல்லப்பா நான் வெளிய போறேன்..”

“அதெல்லாம் வேண்டாம் நான் வீட்ல சமைச்சி கொண்டுவர சொல்லியிருக்கேன் இங்க வந்துடுங்க.” என்றார்.

“வந்துடுங்களா?”

“ஏண்டா அந்த பொண்ணும் அங்கதானே இருக்கா கூட்டிட்டு வந்துடு…” என்றுவிட்டு ஃபோனை வைத்துவிட்டார்

“அப்பா சாப்ட கூப்பிடுறாரு..”

“ஓ ..”

“என்ன ஓ.. உன்னையும் கூட்டிட்டு வர சொல்லியிருக்காரு..” என்றவன் ‘இன்னும் என்ன கூத்தெல்லாம் செய்வாரோ’ என்று யோசித்தபடியே அவரது அறைய நோக்கி நடந்தான்.

இவர்கள் இருவரும் சிவசந்திரனின் அறைக்குள் நுழையும் போதே பிரியாணி மணம் நாசியைத் துளைத்தது..

சிவசந்திரன் அறையின் ஒரு புறமாக இருந்த சோஃபாவில் அமர்ந்திருக்க ..அவர் முன் வீட்டிலிருந்து வந்த உணவு கேரியர்களை அடுக்கிக்கொண்டிருந்தார் அவரின் உதவியாளர்.

இவர்களைப்பார்ர்த்ததும்

“வாங்க வந்து உக்காருங்க சாப்பிடலாம்..” என்று அழைத்தார் சிவசந்திரன்.

மூவருக்கும் தலைவாழை இலையில் உணவு  பரிமாறப்பட அதிதி கொஞ்சம் கலக்கத்துடனேயே அமர்ந்திருந்தாள்.

“நீ என்ன சாப்பிடுவன்னு தெரியலம்மா.. அதான் வெஜ் நான்வெஜ் ரெண்டுமே பண்ண சொல்லிட்டேன்…” என்றவரிடம்

“எனக்கு எதுனாலும் ஓகே தான் சார்..” என்றாள் அதிதி.

“இனிமே நாங்க பார்த்துக்கறோம் நீ வெளிய இரு வேலு..” என்று தனது உதவியாளரை அனுப்பிவிட்டார்.

“நல்லா சாப்பிடுமா.. காலையில கூட சரியா சாப்பிட்டிருக்க மாட்ட..” என்றார் சிவசந்திரன் கரிசனையாக

“என்ன ஓவர் கவனிப்பாக இருக்கு..” என்று வசீகரன் வாய்க்குள் முணுமுணுத்தான்.

“என்னம்மா பிரியாணி பிடிச்சிருக்கா..? இது இந்த பக்க ஸ்டைல்ல இருக்கும்..”

“நல்லா இருக்கு சார்..”என்றாள் அதிதி.

“ஆனா உங்க அம்மா பிரியாணி அளவுக்கெல்லாம் இருக்காது அதி..” என்றான் வசி இடைபுகுந்து..

“அப்பா அதிதியோட அம்மா செமையா சமைப்பாங்க..” என்று சேர்த்துக்கூறினான்..

“உனக்கு எப்படிப்பா தெரியும்?” என்று அவர் ஆர்வமாக கேட்கவும்

“அவங்க வீட்டுக்குப்போனப்ப சாப்ட்டேன்..” என்று அவசரப்பட்டுக் கூறிவிட்டு நாக்கைக்கடித்துக்கொண்டான்..

“ஓ வீட்டுக்கெல்லாம் போயாச்சா..” என்றார் வியப்பைக்காட்டி..

“அப்பா அதிதிய கூட்டிட்டு வர்றதுக்காகப் போனேன்.” என்றவன் உள்ளுக்குள் தன் உளறு வாயை தானே திட்டிக்கொண்டான்.

“ஓ அதான் ஃப்ளைட்ல போயிட்டு கார்ல வந்தியா..”என்றார் எதோ புரிந்தது போல தலையை ஆட்டி

இதற்கு மேல் பேசாமல் இருப்பதுதான் நல்லது என்று நினைத்து வாயைமூடிக்கொண்டான்.

சற்று நேரம் அமைதியாக உண்டார்கள்,

அதிதி இருவரும் உண்பதைப்பார்த்து அவர்களுக்கு தேவையானதைப்பார்த்து   பரிமாறினாள்.

அவள் சிவசந்திரன் இலையில் கொஞ்சம் வெண்டைக்காய் பொரியலை எடுத்துவைக்க

“நான் கேட்கவே இல்லையேம்மா..” என்றார்

“இல்ல சார் உங்களுக்கு பிடிக்கும்ன்னு நெனைச்சேன்.. இலையில மொதல்ல நீங்க அதைதான் சாப்டீங்க..” என்றாள் தயங்கியபடி

ஒருகணம் ஒன்றும் பேசாமல் அமைதியானவர்

“நீயும் உன் ஏஐ மாதிரி முன்னாடியே கெஸ் பண்ணிடுவ போல இருக்கே..” என்றார் லேசாக சிரித்தபடி..

“சாரி சார் ஓவர் ஸ்டெப் பண்ணிட்டேனா..?”என்றாள் கவலையுடன் பார்த்து..

“அதெல்லாம் இல்லை.. எனக்கு வெண்டைக்காய் பிடிக்கும்ன்னு.. தோ இவனுக்கு கூட தெரியாதுன்னு நெனைக்கறேன்.. ஆனா அஞ்சி நிமிஷத்துல நீ கண்டுபுடிச்சிட்ட..” என்றார் மெச்சுதலாக..

“ஆமா எனக்கு என்ன பிடிக்கும்ன்னு உங்களுக்கு மட்டும் தெரியுமா..?” என்றான் மகன்.

“என்ன பேசவிடுடா.. எனக்கு என்னப்பிடிக்கும்னு எங்க அம்மாவுக்கு தெரியும்.. அதுக்கப்புறம் இவங்க அம்மாவுக்கு தெரியும்.. என்றவர்

கொஞ்சம் எதோ நியாபத்தில் அமைதியானவர் “அனு போனதுக்கு அப்புறம் வீட்ல  பொண்ணுங்க டச்சே இல்லாம போச்சி.. அம்மாவுக்கும் வயசாகிட்டதால முன்ன மாதிரி அவங்களால நடமாட முடியல, வீட்லயும் நாங்க ரெண்டு பசங்கதான் இங்க வந்தாலும் ஃபேக்டரில எல்லாம் பசங்கதான், என்ன இருந்தாலும் வீட்ல ஒரு பொண்ணு இருக்கற மாதிரி வராது…

நாங்க சாப்பிடும் போது பார்க்கனும் அப்பவும் வேலையைப்பத்திதான் பேசிட்டு இருப்போம்.. அதைத்தாண்டி ரெண்டு பேருக்கும் என்ன பேசுறதுன்னே தெரியாது.” என்று பேசிக்கொண்டே போனவர் நிறுத்தி..

“என்னம்மா ரொம்ப போர் அடிக்கறனா..”என்று கேட்டார்..

“அப்படிலாம் இல்ல சார்..”

“எதுக்கும்மா சார் சார்ன்னு கூப்ட்டுகிட்டு நீ வசியோட ஃப்ரண்ட்தானே அங்கிள்னே கூப்பிடுமா..”என்றார்.

“ஓகே அங்கிள்..”என்றாள் தயக்கத்துடன்.

பேச்சினூடே “உங்க அப்பா என்ன பண்றாருமா..” என்றார்

“அப்பா கேஎம் டெக்னாலஜீஸ்ல ஃபினான்ஸ் ஹெட்டா இருக்காரு..”

“ஒரேப்பொண்ணாம்மா..?”

“இல்ல அங்கிள் தம்பி இருக்கான்.. டாக்டருக்குப் படிச்சிட்டு இருக்கான்.”

அவர் “அப்படியா குடும்பத்துல ஒரு டாக்டர் இருக்கறது நல்லதுதான்..” எனவும்

இவள் லேசாக சிரித்துவைத்தாள்.

“ஊருக்கு எப்பம்மா போற..?”

“இன்னிக்கு நாலு மணி ட்ரெயின் புக் பண்ணியிருக்கு அங்கிள்..”

“என்னடா நீயும் கூட போறியா..?” என்றார்.

“இல்லப்பா எனக்கு இங்க வேலை இருக்கு..” என்றான் அவசரமாக.

“என்ன பெரிய வேலை..? போய் பத்திரமா ட்ரெயின் ஏத்திவிட்டுட்டு  வா” என்றார் கண்டிப்புடன்

உணவு உண்டு வெளியே வந்ததும்..

“என்ன இவரு என்னை விட்டுட்டு உன்னை தத்து எடுத்துக்குவாரு போல..” என்றான்.

“பொறாமைப்படாதீங்க அவரு பாவம் பேசறதுக்குக்கூட ஆளு இல்லாம இருந்திருக்காரு..”

“ஆமா அம்மாவுக்கு அப்புறம் அவர் ரொம்ப தனியாகிட்டாரு அவரு சொன்னமாதிரி வீட்ல ஒரு பொண்ணு இருந்திருந்தா இவ்ளோ லோன்லியா இருந்திருக்காது..” என்றான்.

அப்போது நேரம் பார்த்தவன் “ஹே கிட்டி.. எனக்கு ரெண்டு மணிக்கு மீட்டிங் இருக்கு முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் முடிச்சிட்டு வந்துடுறேன் அதுவரைக்கும் நீ ஷாப்ஃப்ளோர சுத்திப்பாரு..” என்றவன் அந்தப்பக்கம் போன ஒருவனை அழைத்தான்

“நாகு இங்க வா..”

“சார்..”என்று வந்த இளைஞனிடம்

“அதி இது நாகராஜ் ஷாப்ஃப்ளோர் எஞ்சினியர்..”

என்றவன்

அவனிடம் திரும்பி

“நாகு மேடம்க்கு ஷாப் ஃப்ளோர சுத்திக்காட்டு அவங்க என்ன டீடெயில் கேட்டாலும் சொல்லு..” என்றவன்

“நா மீட்டிங் முடிச்சிட்டு வரேன் கிட்டி…” என்று இவளிடம் கிசுசிசுத்துவிட்டுப்போனான்.

நாகு என்கிற நாகராஜ் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தான்..

நேற்று பார்த்ததற்கு இன்று நிறைய பேர் வேலை செய்துகொண்டிருக்க முழுவீச்சில் வேலை நடந்தது..

எந்திரங்களும் ஆண் தொழிலாளர்களும் நிறைந்த அந்த தளத்தில் இவள் மட்டும் தனித்து தெரிய ஆர்வத்துடன் பார்க்கும் பார்வைகள் அதிகம் இருந்தது..

“நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்கதீங்க மேடம்.. கூட்ற ஆயாவத்தவிற வேற பொண்ணுங்களையே இங்க பார்த்ததில்லை அதான் புதுசா ஒரு பொண்ணு வராங்கன்னு எல்லாரும் ஆச்சரியமா பாக்குறாங்க..” என்றுவிட்டு

“மேடம் நீங்க சாருக்கு சொந்தம்ங்களா..?” என்று கேட்டான்..

“இல்ல ஃப்ரண்ட்..” என்றாள் அதிதி சுருக்கமாக..

“ஃப்ரண்டுன்னா எப்படி..?” என்று அவன் மேலும் துருவவும்

என்ன இவன் இப்படி தொணதொணக்கிறான் என்று நினைத்தவள்

“காலேஜ் ஃப்ரண்ட்ஸ்..” என்று மட்டும் சொல்லிவிட்டு “உங்கள பத்தி சொல்லுங்க..” என்றாள் பேச்சை மாற்றுவதற்காக.

எப்போது என்று காத்துக் கொண்டிருந்திருப்பானோ என்னவோ..

“எங்க அப்பாரு இங்கதான் வேலைப்பார்த்தாரு..இப்ப ரிட்டயர்டு ஆகிட்டாரு..பெரிய ஐயா இங்க வேலை செய்யறவங்களையும் குடும்பமாத்தான் பார்ப்பாரு.. எனக்கு காலேஜ் பீஸே ஐயாதான் கட்டினாரு.. படிச்சி முடிச்சதும் இங்கயே வேலைக்கு சேர்ந்திட்டேன் அதுக்காக ஐயா உடனே வேலைக்கு சேர்த்துக்கல இண்டர்வியூ வச்சி அதுல செலெக்ட் ஆனதுக்கு அப்புறம்தான் வேலைக்கு எடுத்தாரு..” என்று அவன் பேசிக்கொண்டே போக அதிதிக்கு ஏண்டா கேட்டோம் என்று இருந்தது..

அவள் அங்கே இருக்கும் மெஷினரீஸ்..அது செயல்படும் முறை..அதிலுள்ள குறைபாடுகள் என்று கேட்டுக்கொண்டே போக

“மேடம் இவ்ளோ விவரம் ஏன் கேக்குறீங்க நீங்க சும்மா கெஸ்ட்தானே..” என்றான்

“நான் இங்க வேலைபார்க்க வந்திருக்கேன் உங்க மெஷினுக்கெல்லாம் சாஃப்ட்வேர் ப்ரோகிராமிங் பண்ணப்போறேன்..” என்றவுடன்

“அப்போ நீங்கதான் அந்த ஏஐ காரங்களா உங்களாலதான் எங்க வேலைப்போகப்போவுதா..?அய்யோ நானே என் வேலைக்கு வேட்டு வைச்சிக்கற மாதிரி உங்களுக்கு எல்லாம் சொல்லி குடுத்துட்டேனே..” என்று புலம்பவும் சுத்தி இருப்பவர்களும் வேடிக்கைப்பார்க்கத் தொடங்க..

அதிதிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை..

ஒரு கணம் திகைத்தவளின் கண்களில் தூரத்தில் வசீகரன் வருவது கண்ணில் படவும் நிம்மதி பெருமூச்சுவிட்டாள்

“என்ன இங்க கூட்டம் வேலைய பாருங்க..” என்று சுற்றி இருந்தவர்களை அனுப்பிவிட்டு..

நாகராஜைப்பார்த்து

“என்ன நாகு..” என்றான் கேள்வியாக..

“சார் நீங்க இவங்க எங்க வேலைக்கு உலைவைக்க வந்தவங்கன்னு சொல்லாம என்னையே எல்லா இடத்தையும் சுத்தி காட்ட வச்சிட்டீங்களே..” என்றான் ஆற்றாமையுடன்.

“என்னடா உளருற? இங்கபாரு இவங்க உங்க வேலைய ஈஸி ஆக்கவந்தவங்க, பறிக்க வந்தாவங்க இல்ல.. புது டெக்னாலஜி வந்தா இன்னும் நெறைய பேருக்கு வேலைதான் கிடைக்கும் புரியுதா..? உங்களையெல்லாம் வெளி நாட்டுல இருக்கற மாதிரி பெரிய டெக்னீஷியன் ஆக்கப்போறாங்க.. சேஃப்டி ஆக்சிடெண்ட்ஸ் எதுவும் நடக்காம நீங்க பாதுக்காப்பா வேலை செய்ய உதவ போறாங்க .. புரியுதா..” என்று அவன் விளக்கவும்

எதோ விளங்கியன் போல

“அப்போ எங்கள வேலைய விட்டு தூக்க மாட்டீங்களே..”

என்றான் சந்தேகமாக

“நிச்சயமா இல்ல..” என்று வசீகரன் உறுதியாகக்கூறவும்  முகம் தெளிந்தவன்

“சாரிங் மேடம்..” என்றான்.

“இங்க பாரு.. மேடம் இங்க இருந்து தான் வேலைப்பார்ப்பாங்க.. அப்ப அவங்களுக்கு எந்த அசவுகரியமும் இல்லாம நீ தான் பார்த்துக்கனும் சரியா..?”

“கண்டிப்பா சார்..நான் பார்த்துக்கறேன்..” என்றான் முகமெல்லாம் சிரிப்பாக..

“அதி போலாமா டைம் ஆச்சி..” என்றவனின் கூட நடந்தபடி

“யாரு இவன் வாய் மூடாம பேசுறான்..” என்று கேட்டாள்

“அவன் கொஞ்சம் ஓட்டை வாய்தான் ஆனா நம்பிக்கையான ஆளுதான்..” என்றான் அவன்.

அதிதி ஏற்கனவே வீட்டிலிருந்து கிளம்பும் போதே ஊருக்குப்போக வசதியாக பெட்டியுடனே வந்திருந்தாள்.

காரை நெருங்கியதும்

“ஐயோ நீங்க ஒன்னும் அவ்ளோ கஷ்டப்பட்டுட்டு வரவேணாம் எனக்கு போயிக்கத்தெரியும்..” என்றாள் அதிதி உதட்டை சுளித்து..

“இப்ப என்ன ஆச்சி உனக்கு..?” என்று புரியாமல் கேட்டான் அவன்.

“உங்க அப்பா சொன்னதுக்காகத்தானே கொண்டு போய் விடுறேன்னு சொல்றீங்க..”

“ஹே நான் அவரு “நீயும் சென்னைக்கு  கூடப்போறியான்னு” நக்கலாக கேட்டாருன்னு நெனைச்சிட்டேண்டி.. அப்புறம்தான் ட்ராப் பண்றதபத்தி கேட்டாருன்னு புரிஞ்சது..”  என்று அசடுவழியவும் அவள் சட்டென்று சிரித்துவிட்டாள்.

“அதுவுமில்லாம நான் உன்ன எப்படி தனியா அனுப்புவேன்..?”

“ஏன் நான் தனியா போக மாட்டேனா..”

“நீங்க போவீங்க மேடம் இல்லைன்னு யாரு சொன்னா.. ஆனா உங்க கூட வர்ற சாக்குலயாவது இன்னும் கொஞ்சம் நேரம் கூட இருக்கலாம்னு தான் நானும் கூட வரேன்..” என்றான்.

அதிதி டிரெயின் ஏறி கிளம்பியதுமே வசீகரனிடமிருந்து ஃபோன் வந்தது..

“ஐயம் ஆல்ரெடி மிஸ்ஸிங் யூ கிட்டி..”

“நான் இன்னும் ஊருக்கே போல..”

“அதுக்குள்ள உன்ன நான் மிஸ் பண்றேனே..”

“நான் திரும்ப வரத்தானே போறேன்..”

“எப்போ..?”

“அது தெரியல.. பட் சீக்கிரம் வர ட்ரை பண்றேன்..”

“ம்ம்” என்றவன் “போயிட்டு ஃபோன் பண்ணு..” என்றான்.

“ம்ம்”

“பை டியர்..”

“பை வசி..”

மனம் முழுவதும் அவன் நினைவுகள் நிறைந்திருக்க அவனை மீண்டும் காணும் நாளுக்காக ஏங்கியபடியே அவள் பயணம் தொடர்ந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!