Skip to content
Post Views: 2,655

அத்தியாயம்-30
வெளியே வந்த அதிதி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக்கொண்டே தன் இதயத்தில் கைவைத்து அதன் அசாதாரணத்துடிப்பை கட்டுப்படுத்த முயன்றாள்.
அத்தனை பிரயத்தனங்கள் செய்து,அவள் கேட்க வேண்டும் என்று ஆவலாக காத்துக்கொண்டிருந்த அந்த மந்திர வார்த்தைகளை அவன் உதிர்த்துவிட்டான்.. ஆனால் அதை அந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராதவள் எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியாமல் புலியிடமிருந்து தப்பிக்கும் மான் போல் பாய்ந்தோடி வந்துவிட்டாள்..
Advertisement
அதற்குள் விக்ரம் வந்துவிட்டதாக ஃபோன் செய்யவே.. அவள் பவித்ராவை வர சொல்லி செய்தி அனுப்பிவிட்டு விக்ரமை பார்க்கப்போனாள்.
அதிதி சொன்ன ரெஸ்டாரெண்டில் விக்ரம் காத்திருந்தான்.. இவள் போனதும் அவன் எதிரில் அமர்ந்தாள்..
“மொதல்ல சாப்பிடலாமா..” என்றுவிட்டு
Advertisement
“என்ன சாப்பிடுற..” என்று கேட்டபடி அவன் மெனுவை ஆராய.. அவள் மனமோ வசீகரனிடமே இருந்தது..
Advertisement
அவன் பாவம் அவனை அப்படியே விட்டுவந்துவிட்டோமே..
அந்த நேரத்து பதற்றத்தில் செய்வதறியாது ஓடி வந்துவிட்டு அதிதியின் மனம் தவித்துக்கொண்டிருந்தது..
சீக்கிரம் விக்ரமிடம் பேசிவிட்டு வசீகரனிடம் போக வேண்டும் என்று நினைத்தவள்,
Advertisement
“பாஸ் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசனும்..” என்று தொடங்க..
அவன் இவளைப்பார்க்காமல் இவள் பின்னால் பார்த்து வியந்த புன்னகையுடன்..
“ஏய் வசி..வரலன்னு சொன்ன.. வந்துட்டியா..?” என்றான்,
அதிதி திரும்பிப் பார்க்கும் முன் அவள் அருகில் அமர்ந்து முரட்டுத்தனமாக அவள் தோளைப்பிடித்து தன்புறம் திருப்பியவன்
“ஒன்னுமே சொல்லாம வந்தா என்னடி அர்த்தம்..?” என்றான். அவன் கொதிநிலையின் உச்சத்தில் இருந்தான்
“வசி நாம அப்புறம் பேசலாம்..” என்று சமாதானப்படுத்த முயன்றவளை அவன் பேசவே விடவில்லை..
“ஏண்டி அங்க ஒருத்தன் உயிரக்குடுத்து ப்ரபோஸ் பண்றேன் நீ பாட்டுக்கு இங்க வந்து ஹாயா உக்காந்திருக்க.. என் ஃபீலிங்க்ஸ் என்ன அவ்ளோ சீப்பா போச்சா..? என்னை பார்த்தா கேனையன் மாதிரி இருக்கா உனக்கு..?” என்றான் காட்டமாக
“வசி.. சொன்னா கேளுங்க நாம அப்புறம் பேசலாம்..” என்றாள் அவன் கையைப்பற்றி அவனை சாந்தப்படுத்த முயன்று.
“டேய் என்னடா நடக்குது இங்க.. நான் ஒருத்தன் இங்க இருக்கேன் உன் கண்ணுக்கு தெரியுதா இல்லையா.?”
என்றான் விக்ரம் இடையில்..
“உன்ன யாரு இருக்க சொன்னா எந்திரிச்சிப்போடா..” என்று அவனிடம் எரிந்து விழுந்தவன்
“இப்ப எதுக்குடி இங்க வந்து உக்காந்து இருக்க வா போலாம்..” என்று அவள் கையைப்பிடித்து இழுக்க
“அய்யோ.. கொஞ்சம் இரு வசி.” என்று கெஞ்சினாள்..
“டேய் வசி என்னடா பண்ற..?” என்றான் விக்ரம் பொதுஇடம் என்பதால் குரலைக் தணித்து
“பார்த்தா தெரியல இந்த பைத்தியக்காரிய லவ் பண்றேன்.. உனக்கென்னடா பிரச்சனை….?”
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லடா .. ஆனா எல்லாரும் பார்க்கறாங்க..”என்றான் அக்கம் பக்கம் பார்ப்போரை பார்வையால் சுட்டிக்காட்டி
“பார்க்கட்டும் எனக்கென்ன.. நான் என்ன உன்னை மாதிரி ஊருக்கு ஒரு லவ்வா வச்சிருக்கேன்..
எனக்கு இருக்கறது ஒரே லவ் இதெல்லாம் உனக்கு புரியாது போடா..” என்று அவன் எரிந்து விழ
“என்னடா அண்ணன இப்படி பொசுக்குன்னு மரியாதை இல்லாம பேசிட்ட..” என்று அவன் அதிர்ந்து விழித்தவன்..
‘இதுக்குதான் இந்த சின்னப்பசங்க சவகாசமே வச்சிக்கக்கூடாதுங்கறது..’ என்று வாய்க்குள் முணுமுணுத்தான்..
அப்போது..
“டேய் வசி சும்மா இருடா பைத்தியக்காரா.. நான்தான் அப்புறம் பேசலாம்னு சொல்றேன்ல..” என்று அதிதி பொறுமையிழந்து கத்தவும்
“இங்க என்ன நடக்குது..?” என்று பவித்ரா வந்து கேட்கவும் சரியாக இருந்தது..
அவளைப்பார்த்ததும் ஆண்கள் இருவரும் புரியாமல்விழிக்க..
பவித்ரா விக்ரமை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தாள்..
அதிதி இனிமே அவர்களே பேசிக்கொள்ளட்டும் கடவுள் விட்ட வழி என்று முடிவெடுத்து வசீகரனின் கையைப்பிடித்து எழுப்பி அங்கிருந்து கூட்டிப்போனாள்.
அவள் பின்னாடியே நாய்க்குட்டிப்போல எந்த எதிர்ப்பும் இல்லாமல் போனவன்
வெளியே வந்து கொஞ்சம் ஒதுக்குப்புறமாக நின்றுகொண்டு கண்ணாடி வழியே அங்கே உள்ளே என்ன நடக்கிறது என்று அதிதி வேவு பார்ப்பதைப் பார்த்து
ஒன்றும் புரியாமல்
“என்னடி பண்ற..?” என்றான்.
“ம்ம்.. நான் இங்க ஒரு கியூபிட் (Cupid) ஆகலாம்னு ட்ரை பண்ணிட்டு இருந்தா நீங்க இப்படி குறுக்க வந்து கெடுத்துட்டீங்களே..” என்றாள் எரிச்சல் மறையாத குரலில்..
“கியூபிட்ஆ?” என்று விழித்தவனை
“பேசாம அங்க பாருங்க..” என்று சொல்லிவிட்டு எட்டிப்பார்த்தாள்..
விக்ரமும் பவித்ராவும் எதோ தீவிரமாக பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது..
“என்ன ஆச்சு.. ஏன் அவங்க ரெண்டு பேரும் சண்டைப் போட்டுக்குறாங்க..?” என்று கேட்டாள் பவித்ரா
தெரியவில்லை என்று தோளைக்குலுக்கிவிட்டு
“நீ எங்க இங்க..?” என்றான் விக்ரம்.
“அதிதி தான் வர சொன்னா..”
“என்னையும் வர சொல்லிட்டு, உன்னயும் வர வெச்சிருக்கா.. ஏன்..?” என்று அவன் கேட்க
“எனக்கு எப்படித் தெரியும்..” என்றாள் அவள் முகத்தில் தோன்றிய கலவரத்தை மறைத்தபடி
அவளையே சில வினாடிகள் ஆழ்ந்து பார்த்தவன்
“சோ அவகிட்ட சொல்லுவ.. என்கிட்ட சொல்லமாட்ட.. அப்படித்தானே..?” என்றான் தன் லேசர் பார்வையை அவள் மேல் செலுத்தி
அந்தப் பார்வையை எதிர்கொள்ளமுடியாமல்
“என்ன சொல்ற எனக்குப் புரியல..” என்று தடுமாறினாள்
“சீரியஸ்லி பவி?” என்று நம்பமுடியாமல் தலையசைத்தவன்
“என்ன அடிமுட்டாள்ன்னு நினைச்சிட்டியா..?” என்றான்.
“நேத்து வந்தவ அதிதி அவளுக்கே தெரியும் போது எனக்கு தெரியாதா நீ என்ன லவ் பண்றன்னு..?”
“தெரியுமா அப்போ ஏன் இவ்ளோ நாளா சொல்லல..” அவள் குழப்பத்துடன் கேட்க
“எப்படி சொல்றது..? மேடம் நீங்கதான் உங்கள சுத்தி வேலிய போட்டுகிட்டு வசதியா உள்ளயே உக்காந்துகிட்டிங்களே..நான் என்ன சொன்னாலும் உன் மர மண்டைக்கு ஏறி இருக்காது.”என்றான் ஏளனமும் எரிச்சலுமாக..
அவள் அடிவாங்கியது போல் பார்க்க..
கொஞ்சம் மனம் இளகியவன்
“நீயா உன்னோட மனத்தடைய உடைச்சிட்டு வருவன்னு காத்துகிட்டு இருந்தேன் பவி..”என்றான் தணிவாக
“அப்போ உனக்கும் என்னை புடிக்குமா?” என்று அப்பாவியாய் கேட்டவளை கட்டியணைத்துக் கொள்ளவேண்டும் போல் இருந்தது..
“புடிக்கும்.. அளவுக்கு அதிகமாவே புடிக்கும் அதுதான் என்னோட பிரச்சனையே.” என்றான் பெருமூச்சுவிட்டபடி.
“அப்போ சொல்லியிருக்க வேண்டியதுதானே..”
“இதுக்கு மேல எப்படி சொல்றது..? அனுமார் மாதிரி நெஞ்சக்கிளிச்சிக் காட்டல அவ்ளோதான்.. மத்தபடி எல்லாவிதத்துலயும் சிக்னல் குடுத்துப்பார்த்துட்டேன்.. ஆனா இந்த ட்யூப்லைட் மண்டைக்கு புரிஞ்சாதானே..” என்று குறைகூறியவனை முறைத்தாள்
“என்னடா.. இதான் சாக்குன்னு என்னை மரியாதை இல்லாம பேசுற..?”
“ஆமா உனக்கு மரியாதை ஒன்னுதான் கேடு. காலைல இருந்து என்ன கடுப்பேத்துனதுக்கு உன்கிட்ட உக்காந்து பேசுறதே பெருசு..” என்றான் கடுப்பாக..
அவள் உம்மென்று முகத்தை வைத்துக்கொள்ள
“தயவு செஞ்சி இப்படி மூஞ்சிய வைக்காத..நான் இன்னும் உன்மேல கோபமாதான் இருக்கேன்..”
“விக்கி.. சாரி விக்கி.. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல.. இந்த வயசு விஷயம் என்னை ஒரேடியா குழப்பிடுச்சி..”
“ஏண்டி என்னவிட உனக்கு அந்த வயசுவிஷயம் பெருசா போச்சா..?”
“நீ அதை பெருசா நினைப்பன்னு நெனைச்சேன்..”
“நான் என்ன பத்தாம்பசலியா..?”
“அப்படி இல்ல விக்கி.. நீ இதுக்கு முன்னாடி லவ் பண்ண பொண்ணுங்கல்லாம் உன்னவிட வயசு கம்மியானவங்கதானே அதான்..”
“உன் லாஜிக்ல தீய வைச்சிக்கொளுத்த.. அது என்ன பொண்ணுங்க.. நான் என்னமோ பத்து பதினைஞ்சி பேர லவ் பண்ண மாறி சொல்ற.. ஃப்ரான்க்கா இருப்போமேன்னு என்னோட பாஸ்ட் ஹிஸ்ட்ரிய சொன்னா அது எனக்கே பாக் ஃபயர் ஆகுது..” என்று அவன் தலையில் அடித்துக்கொள்ள
“அதிதிகிட்ட கூட நீ ஓவரா வழிஞ்ச..” என்று அவள் குறைப்பட்டாள்..
“வாயக்கழுவுடி.. வழிஞ்சாங்கலாம். இதை அதிதியே ஒத்துக்கமாட்டா.. என்ன பண்றது உனக்கு எந்த வகையில் சிக்னல் குடுத்தாலும் புரியல, அன்னிக்கு அதிதி மேல பொறாமைப்பட்டு என்கிட்ட வந்து கத்துன.. அப்போதான் இந்த ரோபோக்கு கொஞ்சம் உணர்ச்சி வருதுன்னு தோணுச்சி.. அதான் அதிதிகிட்ட பேசி உன்னோட பொறாமைய தூண்டிவிடலாம்ன்னு பார்த்தேன்.. உன்ன கரெக்ட் பண்றதுக்கு நான் போட்ட எஃபர்ட்ட வேலையில போட்டிருந்தா இந்நேரம் பில்லினியர் ஆகியிருப்பேன்..” என்று கூறி பெருமூச்சுவிட்டான்..
“இதுதான் நீ போட்ட எஃபர்ட்டா.. எனக்கு ஒன்னும் தெரியல..” என்று அவன் உதட்டை சுளிக்க..
“ஆமா முன்னபின்ன லவ் பண்ணியிருந்தாதானே தெரியும்.. சரியான சாமியார்டி நீ..”
“உன்ன மாதிரி ப்ளேபாயா இருக்கறதுக்கு சாமியாரா இருக்கலாம்..”
“ஊருல பாதி சாமியாருங்க ப்ளேபாயாதான் இருக்காங்க..” என்று அவன் கூற அவள் பக்கென்று சிரித்துவிட்டாள்..
“ஆனா என்னைப்பார்த்து ஃப்ளேபாய்ன்னு சொன்ன பாரு.. நான்ஃப்ளேபாயா இருந்தா ஏன்மா நாலு வருஷமா டி ஆர் மாதிரி தொடாமலே லவ் பண்ணப்போறேன்..”
என்று அவன் புருவம் உயர்த்திக்கேட்க அவளுக்கு லேசாக முகம் சிவந்தது..
“விக்கி.. நிஜமாவே உனக்கு உன்னைவிட வயசுல பெரிய பொண்ணு ஓகேவா..?” என்று அவள் சீரியஸாக கேட்க
“நான் உன்னை பார்க்கும் போது உன்னைப் பார்க்கனுமா இல்லை உன் வயச பார்க்கனுமா?“
என்று கேட்டு அவள் வாயை அடைத்தான்
“உங்க வீட்ல, சொந்தத்துலலாம் என்ன சொல்லுவாங்க..?” என்று அவள் கவலைப்பட
“பைத்தியம்.. நீ என்ன டேட் ஆஃப் பர்த்த(DOB) கழுத்துல மாட்டிக்கிட்டேவா சுத்தப்போற..? எங்க அம்மாப்பாவுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.. மத்தவங்களுக்கு நாம சொல்லத்தேவையில்லை.. புரியுதா?”
சரி என்று தலையாட்டினாள் பவித்ரா.
“சரி அவ்ளோ தூரத்துலயே உக்காந்துட்டு இருக்காத பக்கத்துல வா..” என்று அழைத்து அவளைக் கைவளைவில் இருத்திக்கொண்டான்.
“பவி..அப்படியே லைட்டா லெஃப்ட் சைட்ல திரும்பிப்பாரு.. ரெண்டு பேரும் பார்த்துட்டு இருக்காங்களா?” என்று கேட்டான்..
நாசூக்காக திரும்பிப்பார்த்த பவித்ரா கண்களை விரித்து
“ஆமா எப்படிடா கண்டுபுடிச்ச..?”
என்று வியப்புடன் கேட்க
“நீ என்ன நினைச்ச.. என்னைவிடப் பெரியவன்னா என்னைவிட புத்திசாலின்னா..? நீ மக்கு தாண்டி..” என்று அவளை சீண்டிவிட்டு..
“அதிதி நம்மல சேர்த்துவைக்கத்தான் இங்க வரவழைச்சிருக்கா.. நாம சேர்ந்துட்டோம்னு கன்ஃபார்ம் பண்ற வரைக்கும் போக மாட்டான்னு எனக்குத் தெரியும்..
இப்ப பாரு ரெண்டு பேரும் கிளம்பிப்போயிடுவாங்க..” என்றான்.
“எப்படி டா பார்க்காமலே சொல்ற..” என்று அவள் அதிசயிக்கவும்
“எனக்கு எல்லாம் தெரியும் வெளிய காட்டிக்கறது இல்ல அவ்ளோதான்.
அதிதிக்கும் வசிக்கும் நடுவுல ஒரு கரண்ட் ஓடுதுன்னு மொத நாளே எனக்கு தெரியும்.. அதான் அவள அவன் ப்ராஜெக்ட்ல போட்டேன்..
இப்பகூட ரெண்டுக்கும் எதோ சண்டைப்போல கொஞ்சநாளா ஃபோன்ல பேசாம சுத்திட்டு இருக்காங்க..
சும்மா டேட்டுன்னு கொளுத்திப்போட்டேன் பாரு பையன் உடனே பொசசிவ்னஸ்ல பொங்கி கன்ஃபெஸ் பண்ணிட்டான்..”
என்று கூறி சிரித்தவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் பவி..
“டே உன்கிட்ட ஜாக்ரதையா இருக்கனும் போல நீ சரியான கேடிடா..”
“இந்த கேடி என்னப் பண்ணுவான்னு இனிமேதான் நீ பாக்கபோற செல்லம்…” என்று அவள் அழகிய நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.. மனம் நிறைந்த மகிழ்ச்சியும் நிம்மதியுமாக அவன் தோளில் சாய்ந்தாள் பவித்ரா.
விக்ரமும் பவித்ராவும் ஒன்று சேர்ந்துவிட்டதைப்பார்த்து.. ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன்
“அப்பாடா..கியூப்பிடா என்னோட முதல் ப்ராஜெக்ட் சக்சஸ்..” என்ற அதிதி..
“இப்ப நம்ம கதைக்கு வருவோமா?” என்றாள்.
பின்னர் அக்கம்பக்கம் பார்த்துவிட்டு நாம மேல போய் பேசலாம் என்று அவனை அழைத்துக்கொண்டு மேலே ஆஃபீஸுக்கு போக அங்கே ரிசப்ஷனில் இருந்த சோஃபாவில் இருவரும் அமர்ந்தனர்.
“ ஹேய்.. இவங்கள சேர்த்து வைக்கத்தான் எல்லாம் பண்றன்னு என்கிட்ட மொதல்லயே சொல்லவேண்டியது தானே..” என்று கேபமாகக் கேட்டான் வசி
“சார் ஏன் சொல்லமாட்டீங்க.. மொதல்ல ஃபோன் பண்ணா எடுத்தாதானே சொல்லமுடியும்..?” என்று நக்கலாக கேட்டு அவனுக்கு குட்டுவைத்தாள்..
“அதுக்குன்னு நான் இங்க கன்ஃபெஸ் பண்ணுபோது நீ கண்டுக்காம போனா எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?” என்று அவன் முகம் திருப்ப..
அவன் கன்னத்தில் கைவைத்து தன் பக்கம் திருப்பியவள்..
“நாம கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி அதுக்கு முன்னாடி சீனுக்கு போலாமா..” என்று கேட்டுவிட்டு
“அதென்ன கதை பொண்ணுப்பாக்க போறது.? சார் பொண்ணுபார்த்து பேசி முடிச்சாச்சா..?” என்றாள் நக்கலும் குத்தலுமாக
“ஹே அதி..அந்த நாகு ஒரு உளறு வாய்டி.. அப்பா தான் அந்த சேர்மேனுக்கு வாக்கு குடுத்துட்டேன் நீ சும்மா ஒரு வாட்டி அந்தப்பொண்ண மீட் பண்ணிட்டு வந்துடு, நாம செட் ஆகலன்னு சொல்லிக்கலாம்னு சொன்னாரு.. நான் முடியாதுன்னு தான் சொன்னேன்.. அப்புறம் அந்த பொண்ணு எனக்கு கால் பண்ணா.. பார்த்தா அவ என்னோட ஸ்கூல்மேட்தான்.. ரெண்டு பேரும் சும்மா பழைய கதைய பேசிட்டு, பை பை சொல்லிட்டு வந்துட்டோம் அவ்ளோதான்..” என்றான்.
“அப்போ அவ ஃபோன் பண்ணாமட்டும் உடனே எடுக்கற..?” என்றவள் கோபத்தில் மரியாதையையும் மறந்தாள்.
“ஏண்டி நான் இவ்ளோ சொன்னதுல உனக்கு இதுதான் முக்கியமா தெரியுதா..?”
“பின்ன நான் எவ்ளோ வாட்டி கால் பண்ணியிருப்பேன்.. ஒரு வாட்டியாவது எடுத்தியாடா..”
“என்னடி வாடா போடான்னு சொல்ற..”
“அப்படிதாண்டா சொல்லுவேன்”
என்றவள் கொஞ்சம் தணிந்து
அவன் கையை தன் கைகளுக்கிடையில் சிறைபிடித்து வைத்துக்கொண்டு
அவன் முகம் பார்த்து
“சாரி வசி..” என்றாள்.
“எதுக்கு..?”
“எல்லாத்துக்கும் தான். நான் உங்கள அப்படி தப்பா பேசினது தப்புதான்.. நான் வேணும்னுலாம் பேசல தெரியாம பேசிட்டேன்.. ஆனா நீங்க ரொம்ப கோச்சிகிட்டீங்க.. நான் என்னப்பண்ணாலும் உங்க கோபம் போகவே இல்லை..எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்தது தெரியுமா.?”
“எனக்கு கோவம்லாம் இல்ல கிட்டி.. நீ எப்பவுமே என்னை தப்பாவே நினைக்கிறியேன்ற வருத்தம் தான்..”
“நான் ஒன்னும் தப்பாலாம் நினைக்கல.. எனக்கு இது எல்லாமே புதுசா இருக்கு.. சில சமயம் எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியாம சொதப்பிடுறேன்..”
“நான் மட்டும் என்ன லவ் பண்றதுல நாலு கோர்ஸ் பண்ணிட்டா வந்திருக்கேன்.. எனக்கும் எல்லாமே ஃபர்ஸ்ட் டைம் தான்..” என்றான்.
“அப்போ நாம தப்புபண்ணிதானே கத்துக்க முடியும்.. இனிமேலும் நான் இப்படி எதாவது சொதப்புவேன் ஆனா நீங்க கோச்சிக்க கூடாது சரியா?” என்று அவள் அவனிடம் டீல் பேச
“என்னடி என் உயிர வாங்கறதுக்கு என்கிட்டயே அட்வான்ஸ் புக்கிங்கா..?” என்றான்.
“இல்ல உங்கள லவ் பண்றதுக்கு இப்பவே ரிசர்வ் பண்ணிவைக்கறேன்..” என்றாள்.
“ஆமா உருகி உருகி ப்ரபோஸ் பண்ணதையே மதிக்கவே இல்ல.. இதுல மேடம் அப்படியே அட்வான்ஸ் புக்கிங்ல லவ் பண்ணிடாலும்..” என்றான் எரிச்சலாக
அவனுக்கு இன்னும் அதிதி அவன் ஃபீலிங்சை கண்டுகொள்ளாமல் போனதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..
“நாமலே சண்டைப்போட்டுக்கிட்டு இருந்தோம்..அதுக்கு நடுவுல நீங்க திடீன்னு ப்ரபோஸ் பண்ணுவீங்கன்னு எனக்கென்ன தெரியும்..? நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்ல.. எனக்கு கைகால்லாம் உதறிடுச்சி.. அதான் ஓடிப்போயிட்டேன்..”
“பின்ன ப்ரபோஸ்லாம் திடீர்ன்னுதான் பண்ணுவாங்க.. ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லிட்டா பண்ணுவாங்க..?”
“சரி இப்ப சொல்லுங்க நான் பதில் சொல்றேன்..” என்றாள்
“உன் இஷ்டத்துக்கெல்லாம் சொல்லமுடியாது போடி..”
என்று கோபத்தில் முகம் திருப்பியவனைப் பார்க்க சிறுபிள்ளைப்போல் இருந்தது
‘கியூட்டி பை’ என்று கொஞ்சவேண்டும் போல் தோன்றிய ஆசையை ஒதுக்கிவைத்துவிட்டு
“உக்காந்துகிட்டு இருக்கும் போதே இவ்ளோ உயரமான இருந்தா நான் என்ன பண்றது கழுத்து வலிக்குது கொஞ்சம் குனிங்க.. என்றாள்.
“முடியாது..” என்று அவன் இன்னும் நிமிர்ந்து அமர..
இவள் சட்டென்று அவன் மடியில் ஏறி அமர்ந்தாள்
தன் கைகளை அவன் கழுத்தில் மாலையாகக் கோர்த்துக்கொண்டு அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து அந்த நெருக்கத்தில் அவன் கண்களில் தன்னை இழந்தவள்…
“வசி..” என்றாள் காற்றாகிவிட்ட குரலில்
அவள் தன் மடிமீது அமர்ந்ததை சற்றும் எதிர்பார்க்காத வசீகரன் ஒரு பிடிமானத்திற்காக அவள் இடையைச் சுற்றி தன் கைகளை கோர்த்தவன் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“நீங்க என்னைப் பார்த்த நாள்ல இருந்து என்னைக் காதலிக்கறதா சொன்னீங்க.. ஆனா நான் உங்கள பார்க்கறதுக்கு முன்னாடியே நீங்க எனக்குள்ள வந்துட்டீங்க தெரியுமா..?” என்றாள் அதே கிசுகிசுப்பான குரலில்..
“என் கனவுல வந்த ராஜகுமாரன தான் நான் நேர்ல பார்த்தேன்.. நீங்கதான் என் ஃபர்ஸ்ட் அண்ட் ஃபாரெவர் (first and forever)லவ் வசி..
என் முதலும் நீங்கதான்..என் முடிவிலியும் நீங்கதான்..
ஐ லவ் யூ சோமச் டா என் அழகா…” என்று அவன் இதழ்களில் பட்டு முத்தம் வைத்தாள்.
கண் மூடி அந்த உணர்வை உள்வாங்கித் திளைத்தவன் அவளின் காதல் கண்களில் உன்மத்தம் கொண்டு அவள் விலகிடும் முன் அவள் கூந்தலில் தன் கையை நுழைத்து இறுகப்பிடித்து அவள் தலையை வாகாகத் திருப்பி
அவள் இதழ்களில் இதழ் வைத்து
“ஐ லவ் யூ டூ ஸ்வீட் ஹார்ட்..” என்றவன் அந்த முத்தத்தில் ஆழ்ந்துபோனான்..
சட்டென்று அவள் “ஷ்ஷ்.. என்ன பண்றீங்க..” என்று அவனைத் தள்ளிவிட..
அவனுக்கு அடிவாங்கியது போல் இருந்தது. மீண்டுமா என்று நினைத்தவன் கோபத்தில் அவசரமாக எழப்போக..
“அய்யோ இருங்க..” என்று அவன் தோளை அழுத்தி அமர வைத்தவள்..
“அங்க பாருங்க சிசிடிவி இருக்கு.. முன்னாடியாவது ஃபோட்டோ லீக் ஆச்சி.. இப்ப வீடியோவே ரிலீஸ் ஆகிடும்..” என்று பாவனையுடன் கூறியவளை பார்த்து கலகலவென்று சிரித்தான் வசீகரன்..
முற்றும்
💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
error: Content is protected !!