Skip to content
Post Views: 5,821
தேசிகன் சற்று மிரட்டி பேசினால் அல்லது அவனுக்கு சாதகமாக நின்றாலோ ஆழியன் மீண்டும் மனைவியோடு வந்து விடுவான் என்று நினைக்க அவனோ தன் முடிவில் உறுதியாக நின்றான்.
கடை திறப்பு விழா நாளும் வந்து விட்டது. எதுவுமே நடக்காதது போல தேசிகன் குடும்பத்தையே அழைத்து வந்திருந்தார்.
Advertisement
இரண்டு நாட்கள் முன்பு தான் வளர்மதியிடம் கவிநிலா திறப்பு விழாவிற்கு செல்லவேக் கூடாது என்று அத்தனை ஆர்பாட்டம் செய்திருந்தாள்.
Advertisement
Advertisement
“இந்தா பாரு ம்மா அவன் என்னை மதிக்கவே இல்லை. தங்கச்சி னு ஒரு துளி பாசம் இல்லாதவன் நாளைக்கு உன்னையும் அவன் பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு தூக்கி எறிஞ்சுடுவான். நீ அதுக்கு முன்னாடி சுதாரிச்சுக்கோ . அங்கே போகாத வந்தவங்க எல்லாம் நீ எங்கே நான் வரலையானு கேட்டு நல்லா பேசி விடட்டும். நீ போகாத சொல்ல போனா அப்பாவையும் அனுப்பாத”என்றிருந்தாள் வளர்மதியிடம்.
“இல்ல நிலாக்குட்டி இப்ப நான் போகாம விட்டா தான் மொத்தமா பொண்டாட்டி பக்கம் சாஞ்சிடுவான் நான் போக வர இருந்தா மட்டும் தான் செல்வம் பழையபடி திரும்ப வருவான். அப்பா கூட அதனால தான் நயந்து போறார்”என்று மகளுக்கு புரிய வைக்க முயற்சி செய்தார்.
Advertisement
அவளோ”அப்போ உங்களுக்கு என்னை அவன் ஒதுக்கினது எல்லாம் பெரிய விஷயமே இல்லைல்ல. உங்களுக்கு அவன் தான் முக்கியம் ல்ல இனிமே உன் கிட்டயும் நான் பேசப் போறது இல்லை மா. இன்னமே எனக்கு பிறந்த வீட்டு உறவே வேணாம்”என்று கத்தி விட்டு இணைப்பைத் துண்டித்தாள்.
பொன்னியிடம் பேசி புலம்பி இருந்தார் வளர்மதி.
“அவளை விடு வளரு. கொஞ்ச நாள் போனா தன்னால வழிக்கு வருவா. மகனுக்கு காதுகுத்து வைக்க சொல்லி தானே ஆகணும். சீர் கேட்டு வரும் போது பேசி சமாதானம் செஞ்சுக்கலாம்”என்றவர் “இப்ப சீர் வாங்கறவளை சமாதானம் செய்றதை விட குடுக்கறவனுகளை தான் முதல்ல தாஜா பண்ணனும். அதுக்கான வேலையை பாரு”என்றார் மருமகளிடம்.
“எங்க அதான் வெட்டி விட்டாலே ஆச்சுன்னு மூணு பேரும் நிக்குறானுகளே என் காலத்துக்கு பெறகு என் மகளுக்கு பெறந்த வீடுனு ஒண்ணு இருக்காது போல”என்று மூக்கை சிந்தினார் வளர்.
“எல்லாம் சரியாப் போகும் வளரு.கொஞ்ச நாள் விட்டு புடி பெறகு பார்க்கலாம்”என்று சமாதானம் செய்தார் பொன்னி.
தேசிகன் பவ்யா வீட்டில் பேசி பேரப் பிள்ளை மருமகளை அனுப்பி வைக்கும்படி சொல்லி இருக்க தீபன் மறுக்காமல் அழைத்து வந்திருந்தான்.
. பவ்யா வீட்டிலும் கடை திறப்பு விழா பற்றி சொல்லி முறையாக அழைப்பு விடுத்து இருக்க அவர்களோடு அப்பத்தாவும் வந்திருந்தார். தரங்கினி வீட்டில் இவ்வளவு நடந்த பிறகும் சொல்வானா மாட்டான் என்று நினைத்த தரங்கினிக்கே அதிர்ச்சி தான் ஆழியன் அவர்களை நேரில் சென்று பத்திரிக்கை கொடுத்து அழைத்து விட்டு வந்தான் அமுதனுக்காக. அவளின் அண்ணியும் அம்மாவும் மட்டும் வந்திருந்தனர்.
வருணேஷோடு இருந்த வளர்மதிக்கு மனமெல்லாம் பொருமல் மகளை அழைக்கவில்லை என்று. மகள் தான் வரவில்லை. ஆழியன் ஹரிஹரனை அழைத்திருக்க அவன் வந்திருந்தான். போகக் கூடாது என்று தடுத்த மனைவியிடம் காரணம் கேட்க அவள் ஏதேதோ கூறி இருந்தாளே தவிர உண்மையை சொல்லவில்லை.
“என்னை மதிச்சு கூப்பிட்டு இருக்கார் மச்சான். நான் போய் தான் ஆகணும். உன் வீட்டில் நீ சண்டை போட்டா அதுக்கு நான் ஏன் போகக் கூடாது”என்றவன் “ஆமாம் என்ன சண்டை”என்று கேட்டிருக்க நிலாவின் வாய் பசை போட்டு ஒட்டியது போல ஒட்டிக் கொண்டது.
கடை பெரிதாக மியூசியம் போன்றே இருந்தது. விதவிதமான மரச்சாமான்கள் கலைநயம் மிக்க அழகு பொருட்கள் என்று அத்தனை அடுக்கி இருந்தான் ஆழியன்.
பட்டு புடவை சரசரக்க பிள்ளை பெற்ற பூரிப்பும் கூடி இருந்ததில் நீரதியின் முகம் இத்தனை நாள் யாரும் காணாத தேஜஸுடன் இருந்தது. ஆழியனின் குடும்பம் மொத்தமும் கடல் நீலத்தில் ஆடை அணிந்திருக்க பொன்னியே”விசேஷம் முடிஞ்சதும் நாலு பேரையும் உட்கார வச்சு சுத்தி போடு வளரு”என்றிருந்தார்.
“ம்மா இந்த ரிப்பனை கட் பண்ணி குத்துவிளக்கு ஏத்தும்மா”என்று கத்தரிக்கோலை தந்தவனை வியப்பாக பார்த்தார் வளர்மதி. அவன் அப்படி செய்ததில் சிறிது நெகிழ்ந்தும் போனார்.
வீட்டுப் பெண்களை எல்லாம் விளக்கு ஏற்ற வைத்தவன் கல்லாவில் உட்கார வைத்தது என்னவோ மனைவியைத் தான்.
கடையை திறக்க சொன்னதில் நெகிழ்ந்த வளர்மதி கல்லாவில் மருமகளைக் கண்டு பெரிதாக எந்த எண்ணமும் தோன்றாதது அதிசயம் தான்.
“மொதோ போனி எம்பேத்தி செய்வா”என்று பவ்யாவின் அண்ணன் மகள் கையில் காசைக் கொடுத்து ஒரு வெற்றிலைப் பெட்டியை வாங்கிக் கொண்டார் பவ்யாவின் அப்பத்தா. நீரதி புன்னகையுடன் கடவுளை வேண்டிக் கொண்டு பணத்தை வாங்கி போட பவ்யா தன் மகனுக்கென சொப்பு சாமான் வாங்கினாள். அமுதனுமே தன் மகனுக்கு நடைவண்டி ஒன்றும் தொட்டில்கட்டை ஒன்றும் வாங்கி தன் பங்கை துவங்கி வைத்தான்.
“மாமா என் பையனுக்கு தேக்கு மரத்தில் தொட்டில் செஞ்சு தர்றீங்க”என்ற பவ்யாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆழியன் நிலஞ்சனா, ஸ்வர்ணிகா, பவ்யாவின் அண்ணன் மகள் மூவருக்கும் மரப்பாச்சி பொம்மையை கையில் கொடுத்தான். அதைப் பிடுங்குவதில் வருணேஷ் பிஸி.
முடியைப் பிடித்து இழுத்ததில் நிலஞ்சனா அழுதாள் என்றால் ஸ்வர்ணிகா தன் கையில் இருந்த பொம்மையை கொடுத்து “ஷ்ஷ் செய்யக் கூடாது வருண் சனா பாவம் தானே”என்று கொஞ்ச தரங்கினி அமைதியாக பார்த்திருந்தாள். கவிநிலாவைத் தவிர அனைவரும் வந்ததில் சிலர் அவளைக் கேட்கவும் செய்ய ஹரிஹரனே “அவளுக்கு காய்ச்சல் அதான் நான் மட்டும் வந்தேன்”என்று முடித்து விட்டான்.
வந்திருந்தவர்களுக்கு காலை உணவாக இட்லி பொங்கல் வடை கேசரி பாதாம் பால் என்று உணவை கொடுத்து உபசரித்து இருக்க
தரங்கினி அம்மாவோ”இதுல என்னத்த வருமானம் வரும்?”என்று கேட்டிருந்தார் மகளிடம்.
“என்ன வருமோ”என்று சொல்லி விட்டு தரங்கினி அமைதியானாள். அவளுக்கு நீரதி அங்கே உரிமையாக கல்லாவில் இருந்ததில் மெலிதான பொறாமை எழ அமுதனைப் பார்க்கவும் கீழே குனியவுமாக இருக்க
“பேசாம நாளையில் இருந்து நீயும் என் கூட குட்டி யானையில் வந்திரு தரு மரம் வாங்கற கணக்கு வழக்கு எல்லாம் பார்த்துப்ப”என்று அமுதன் கேலி செய்ததில் கடுப்பாகிப் போனாள்.
பவ்யா வழக்கம் போல தான் இருந்தாள்.
“பவி பேசாம நீயும் ஷோரூமை பார்த்துக்கோயேன்”என்ற தீபனை “எதுக்கு நீங்க நல்லா ஊர் சுத்தலாம் னு பார்க்கறீங்களா.. அதெல்லாம் நடக்காது”என்றாள் முறைப்பாக.
நீரதி வந்தவர்களை விலக்கவும் இல்லை ஒட்டி உறவாடவும் இல்லை. ஆனால் அனைவரையும் வரவேற்று பேசிவிட்டு ஒதுங்கி நின்றாள்.
அவ்வபோது கணவனை மட்டும் பார்த்து விட்டு திரும்புவதுமாக இருக்க சாதாரணம் போல வந்த ஆழியன் “என்னடி ரதி”என்றிருந்தான் மென்னகையாக.
“மரம் எல்லாம் வாங்க ஒரு அக்ரீமென்ட் போட்டுக்கலாம் அண்ணா நீயே சப்ளை பண்ணு.ஆனா தேசி டிம்பர்ஸோட சேர்த்து செய்ய வேண்டாம் இது தனி தான்”என்று ஏற்கனவே தெளிவாக கூறி இருக்க அமுதனும் சரியென்று சம்மதித்தான்.
தேசி சாமில்லில் இருந்ததில் ஆழியனுக்கு நெருக்கமான இருவர் மட்டும் இவன் வேலை பார்க்கும் இடத்தில் சேர்ந்து கொண்டனர்.
கடை திறப்பு விழா முடிந்து சொந்தங்கள் அனைவரும் கிளம்பி இருக்க பவ்யாவின் அப்பத்தா மட்டும் நீரதியிடம் “நல்ல பையன் த்தா. கைக்குள்ள வச்சுக்க. பொண்டாட்டியை மதிச்சு செய்யறது எல்லாம் எல்லாரும் செய்ய மாட்டாங்க. ஒம்புருஷன் செஞ்சிருக்கான்”என்றார் நிறைவாக.
“ம்ம்க்கும் ஏழு வருஷமா இந்த அக்கறைய நான் பாக்கலையே”என்று மனதுக்குள் நொடித்தவளிடம்”எனக்கு அன்னைக்கே தெரியும் இப்படி ஒரு நாள் நடக்கும்னு “என்ற அப்பத்தாவை அவள் விநோதமாக பார்க்க “பவி நிச்சியத்துக்கு உன் வீட்டுக்காரன் உன்னை உட்கார வச்சு பரிமாறினானே அதைச் சொன்னேன்”என்றவர் “எல்லாம் பொண்டாட்டி கூட சாப்பிட்டாங்களே இந்த பய ஏன் இப்படி கூட உட்காராம இருக்கான்னு பார்த்தா, நீ சாப்பிட்டு முடிக்கற வரைக்கும் அந்த இடத்தை விட்டு நகரலையே உன் வீட்டுக்காரன்”என்றார் சிலாகிப்பாக.
நீரதிக்குமே சட்டென தோன்றியது ஆம் அன்று அவன் நான் உண்டு முடிக்கும் வரை இடத்தை விட்டு நகரவே இல்லையே என்று யோசித்தவள் அன்று மட்டும் அல்ல பெரும்பாலான விஷேஷத்தில் அப்படி தானே இருந்தான் இதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கிறதா என்று ஆச்சரியமாக எண்ணிக் கொண்டாள்.
“நல்லபடியா பொழைச்சுக்கத்தா நல்லா இருப்ப நீ”என்று ஆசிர்வாதம் செய்து விட்டு கிளம்பினார் அப்பத்தா.
ஏற்கனவே ஆழியனின் கலைப் படைப்புகளை பார்த்து வியந்ததில் நெகிழ்ந்து இருந்த நீரதி இப்போது அப்பத்தா பேசி விட்டுச் சென்றதில் சிறகில்லாமல் வானில் பறந்தாள்.
“ரதி சாப்பிட போவோமா”என்றபடி வந்தவனை தன் கோபம் எல்லாம் மறந்து இறுக அணைத்திருந்தாள்.
“ரதி!!!”என்றவன் அவளை விட்டு விலகாமல் நின்றவன்
“ஆழி “என்றவளின் அழைப்பில் உணர்ச்சி வசப்பட்டு இருந்தான்.
“எவ்வளவு கலெக்ஷன் நிஜமா நான் எதிர்பார்க்கலை. ஆழி நான் எவ்வளவு ஹாப்பியா ம்ஹூம் என்னால முடியலை இந்த சந்தோஷம் மூச்சு முட்டுதே ஆழி நான் நான்”என்று திணறிட “சொல்லுடி ரதி”என்றான் கண்கள் பளபளக்க.
“நான் தான் தப்பா நினைச்சு இருந்தேனோ…”என்றவளின் நெற்றியில் தன் இதழால் கையொப்பம் இட்டு
“ஆழி சொல்லு ரதி”என்று மேலும் மேலும் முத்தமிட்டான்.
அவள் மறந்தே போன அழைப்பு அவனுக்கான பிரத்யேக அழைப்பு. எத்தனையோ வருடங்கள் கழித்து இந்த அழைப்பில் நெக்குருகி நின்ற கணவனை குற்றவுணர்ச்சி மிக பார்த்திருந்தாள் நீரதி.
…… தொடரும்.
error: Content is protected !!