Skip to content
Post Views: 1,525
அத்தியாயம்-6
அதிதியின் அதிர்ச்சி அடங்கும் முன்பே
“கிட்டி..என்னோட பாட்டிய மீட் பண்றியா?” என்று கேட்டான்
“யா .. ஓகே..” என்றவளின் தடுமாற்றத்தை உணராமலே அவளை அழைத்து சென்றான்..
Advertisement
வசீகரனின் பாட்டி தனலட்சுமிக்கு எழுபத்தைந்து வயதிற்கு மேல் இருக்கும். வசீகரனின் உயரத்தில் பாதிதான் இருப்பார், முடி பாதிக்கு மேல் நரைத்திருந்தது.வட்ட முகம் , சாந்தமான பார்வை, வயோதிகத்தின் விளைவாக நடப்பதில் சற்று சிரமம் இருந்தாலும் இயல்பிலேயே ஒரு நிமிர்வுடனேயே இருந்தார்.
“அப்பாயி… இது கிட்..சாரி..அதிதி, ஃபர்ஸ்ட் இயர் படிக்கறாங்க..என்னோட ஃப்ரண்ட்..” கிட்டி என்று சொல்லத் தொடங்கி சட்டென்று மாற்றி கூறினான்.
வசீகரன், இவளிடம் பாட்டி என்று கூறினாலும், அவனது பாட்டியிடம்,’அப்பாயி’ என்று அழைத்து பேசியது அதிதிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனது மற்றுமொரு பரிணாமத்தை அறிந்தது போல் இருந்தது.
Advertisement
அவனது பாட்டி இவளை நிமிர்ந்து பார்த்து வரவேற்பாக சிரித்து..
Advertisement
“ஆத்தி.. நல்லாருக்கியா கண்ணு..?” என்றார் கொங்குதமிழில்.
பக்கென்று சிரித்தான் வசீகரன்
“அய்யோ அப்பாயி.. அது ஆத்தி இல்ல.. அதிதி..”என்றான் சிரிப்பை அடக்கியபடி.
Advertisement
அதிதி அவனை உறுத்து விழித்தவள் பாட்டியைப் பார்த்ததும் சட்டென்று முகத்தில் புன்னகையை ஒட்டவைத்துக்கொண்டாள்.
“இந்த காலத்து பேரெல்லாம் என்ற வாயில வரவே மாட்டேங்க்து கண்ணு நீ தப்பா நெனைச்சிக்காத..” என்றார் அவளது முகவாயை வாஞ்சையாக தடவியபடி…
“பரவால்ல பாட்டி .. சம்பந்தமே இல்லாம என்னென்னமோ பேரெல்லாம் வைச்சிக்கூப்பிடுறாங்க.. அதுக்கு நீங்க கூப்பிடுறது எவ்வளவோ பரவால்ல..”
என்றாள் ஓரக்கண்ணால் வசீகரனைமுறைத்தபடி..
இவர்களின் வார்த்தைவிளையாட்டையெல்லாம் கண்டுகொள்ளாமல்..
“இருந்து சாப்ட்டுடுதான் போவோனும் கண்ணு..” என்றார் சிறு பாசக்கண்டிப்புடன்.
எல்லோரிடமும் இதேயே தான் சொல்லியிருப்பார் என்பதை ஊகிக்கமுடிந்தது.
“சரி பாட்டி..” என்றவளுக்கு சட்டென்று நினைவு வந்தாற்போல்.
“அச்சோ நான் இன்னும் உங்க கிஃப்ட்ட கொடுக்கவே இல்லையே” என்று கூறிக்கொண்டே தன் பையிலிருந்து தனது பரிசை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“இதெல்லாம் எதுக்கு ..” என்று கூறினாலும் ஆர்வமாகவே வாங்கிக்கொண்டான்.
“என்ன இருக்கு உள்ள?” என்று காதின் அருகில் வைத்து ஆட்டிப்பார்த்தான்.
“பெருசா ஒன்னும் இல்ல..”
“நீ என்ன குடுத்தாலும் அது ஸ்பெஷல்தான் கிட்டி..” என்றவன் அருகில் இருந்த ஒரு பணியாளை அழைத்து
“அண்ணா.. இதை உள்ள மத்த கிஃப்ட்ஸோட வச்சிடுங்க…” என்று கொடுத்து அனுப்பவும்,,ஏமாற்றமாக உணர்ந்தாள் அதிதி.
‘அப்போதே பிரித்து பார்ப்பான் என்று எதிர்பார்த்தது தவறோ? மற்ற பரிசுகளுடன் வைக்க சொல்கிறானே.. நீயும் எனக்கு மற்றவர்களைப் போலத்தான் என்று சொல்லாமல் சொல்கிறானா?’
‘என்ன இவன் நான் எட்டியிருந்தால் அவன் பக்கத்தில் வருகிறான், அவனாக வருகிறான் என்று அவனை நோக்கி நான் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் என்னை எட்ட தள்ளி நிறுத்துகிறான்? இவனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே..’ என்று ஏதேதோ யோசித்து மனம் சோர்ந்து போனாள்.
அப்போதுதான் வர்ஷினியையும் விஷாலையும் விட்டுவிட்டு வந்ததையே உணர்ந்தாள்.
“ச்ச.. எவ்ளோ மோசமான ஃபிரண்டு நான்..?எனக்காக தான் வந்தாங்க அவங்களை கண்டுக்காம இவ்ளோ நேரம் இருந்திருக்கிறேனே” என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டு தன் நண்பர்களைத் தேடினாள்.
அவர்கள் பத்தடி தள்ளி ஒரு டேபிளில் அமர்ந்திருப்பது தெரிந்தது.
அதற்குள் “வசீ ..ஹேய் பட்டி(buddy),ஹேப்பி பர்த்டே..” என்று பலவாறு கூச்சலிட்டுக்கொண்டே அவனது நண்பர்கள் பட்டாளம் வர, அதிதி மெல்ல அங்கிருந்து விலகி தன் நண்பர்களிடம் சென்றாள்.
விஷாலும் வர்ஷினியும் சிலபல சிக்கன் சமோசாவையும் பன்னீர் கட்லெடையும் உள்ளே தள்ளிக்கொண்டு இருந்தனர்.
இவளைப் பார்த்ததும்
“என்ன மேடம் இந்த பக்கம்..? நாங்கல்லாம் உன் கண்ணுக்கே தெரிய மாட்டோமே..”என்று கிண்டலாகக் கேட்டாள் வர்ஷினி.
“ஹேய் சாரிடி, வசி கிட்ட பேசிட்டுத் திரும்பி பார்த்தா உங்கள ஆளையே காணோம்..”
“ஓ..அவன் இப்ப உனக்கு வசி ஆயிட்டானா.. அது சரி.. நீதான் எங்கள கண்டுக்கவே இல்லையே..ஃபிகர பார்த்ததும் ஃப்ரண்ட்ஷிப்ப கட் பண்ணுவாங்கண்ணு கேள்விப்பட்டிருக்கேன், இப்பதான் நேர்ல பாக்குறேன்..” என்று விடாமல் கலாய்த்தாள் வர்ஷினி.
அதிதி முகத்தை பாவமாக வைத்துக்கொள்ளவும், இரக்கப்பட்டு..
“ஹேய்.. சரி விடு..இங்க வா..உனக்காகத்தானே இங்க வந்தோம்.. நீ ஹேப்பியா இருந்தா எங்களுக்கு அது போதும் சரியா..” என்று கூறி அவளை அருகில் அழைத்து அமர வைத்துக்கொண்டாள்.
“அதி,சும்மா சொல்லகூடாது இப்படி ஒரு பார்ட்டிக்கு நான் போனதே இல்ல…செம சாப்பாடு.. நான் நல்லா அடிச்சி நகத்த போறேன்.. சவுத், நார்த்ன்னு ஆரம்பிச்சி ஓரியெண்ட்டல் காண்டினெண்ட்ன்னு எல்லாமே இருக்கு..ஆனா என்ன மெயின் கவுண்ட்டர கேக் கட் பண்ணவாட்டிதான் தொறப்பாங்கலாம்.. அதுவரைக்கும் இந்த சைட்டிஷ்ஷ வச்சி சமாளிச்சிட்டு இருக்கேன்..” என்ற விஷாலின் தோரணையில் அதிதியின் முகம் மலர்ந்தது.
நேரம் ஆக ஆக ஆட்களின் வரவும் கூடிக்கொண்டே இருந்தது.
வீடியோ கேம்ஸ்,ஃபூட்ஸ்பால், மினி பேஸ்கெட்பால் கேம் என்று பல வகை விளையாட்டுகளும் இருக்கவே ஆங்காங்கே கும்பலாக கூடிவிளையாடிக்கொண்டு இருந்தனர்..
பார் பக்கத்திலேயே நீச்சல் குளமும் இருக்க அங்கேயும் அடிக்கடி யாரோ தொப்பென்று தண்ணீரில் விழும் சத்தமும் அதைத்தொடர்ந்து கேட்கும் ஆரவாரம் என்று நேரம் போய்க்கொண்டிருந்தது..
இந்த அமளியில் வசீகரன் எங்கிருக்கிறான் என்று கூடதெரியவில்லை, வசீகரனுடன் அதிக நேரம் செலவிட முடியும் என்று நினைத்தவளுக்கு சொத்தென்று ஆனது.
எல்லோரும் இலகுவாக அந்த சூழ்நிலையில் பொருந்திப்போக தான் மட்டும் அந்த இடத்தில் ஒட்டாது தனித்துத் தெரிவது போல் இருந்தது, கிளம்பி போய்விடலாமா என்று தோன்றத் தொடங்கியிருந்தது.
இப்படியாக தவித்துக் கொண்டிருந்தவளின் கண்ணில் வசீகரனின் பாட்டி மெல்ல வீட்டை நோக்கித் தனியாக நடந்துப்போவது தெரிந்தது. அனிச்சையாக அவரிடம் விரைந்து அவரது கையைப்பற்றிக்கொண்டு.
“பாட்டி நான் கூட்டிட்டுப்போறேன்..” என்றாள்
அவள் யாரென்று கண்டுகொண்டு புன்முறுவலுடன்
“அவ்ளோ மோசம் இல்ல கண்ணு..இங்கல்லாம் நடந்துடுவேன், படியில ஏறும்போது மட்டும் எதயாச்சி புடிச்சிக்கோனும் அவ்ளோதான்..நீ போ கண்ணு..” என்றார்.
“பரவால்ல பாட்டி..நான் வீடுவரைக்கும் வந்து விட்டுட்டு போறேன் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை..” என்றபடி கூட நடந்தாள்.
அவர்கள் வீட்டுப் பின்வாசல் கதவு சமையல் அறையை சென்று சேர்ந்தது. உள்ளே நுழைந்து சமையல் அறையைக் கடந்து மெயின் ஹாலை அடையும் முன்னே
“அப்பா..இன்னும் பத்து நிமிஷத்துல கேக் வந்துடும் அதுவரைக்கும் இருந்துட்டு போங்கப்பா..” என்ற வசீகரனின் கெஞ்சும் குரலில் இவள் அதிர்ந்து நின்றாள்.
அங்கே முன் கூடத்தில் வசீகரன் அவனின் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தான்.
வசீகரனின் தந்தை சிவசந்திரன் அவனைவிட சற்று உயரம் குறைவு, மற்றபடி சற்றும் தொய்வில்லாத நிமிர்வு , வயதிற்கே உரிய முதிர்வு , தீர்க்கமான பார்வை அதில் தெரிந்த கடுமை என்று பார்க்கவே சற்று மிரட்சியாகத்தான் இருந்தது அதிதிக்கு. அங்காங்கே எட்டிப்பார்த்த நரைமுடியைத் தவிர்த்தால் அவரை வசீகரனின் மூத்த அண்ணன் என்றே கூறிவிடலாம்.
மேலும் அவரின் டக் இன் செய்யப்பட்ட முழுக்கை சட்டை,ஃபார்மல் பேண்ட் மற்றும் அருகில் இருந்த சூட்கேஸ் இவற்றைப் பார்த்தால் எங்கோ ஊருக்குக் கிளம்பத் தயாராக இருப்பதும் தெரிந்தது.
“எனக்கு நாளைக்கு காலைல மும்பைல கஸ்டமர் மீட்டிங் இருக்கு.. இப்ப கிளம்பினாதான் ஃபிளைட்ட புடிக்க முடியும்.. சொன்னா புரிஞ்சிக்கோ வசீ..” என்றார் பொறுமையை இழுத்துப்பிடித்த குரலில்.
“இன்னும் பத்து நிமிஷம் தான் ப்பா..என்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் வந்திருக்காங்க..நீங்க இல்லைன்னா எப்படி பா.”
“அதான் நீ கேட்டதுக்கு மேலயே செலவு பண்ணி எல்லாம் பண்ணியிருக்கேன்ல..?அப்புறம் என்ன இப்படி பிடிவாதம் புடிச்சிட்டு இருக்க..? இங்க நின்னு பேசுற ஒவ்வொரு செகண்டும் எனக்கு டிலே ஆயிட்டு இருக்கு.. உனக்கு புரியுதா இல்லையா?” என்றார் எரிச்சலை மறைக்காத குரலில்
வசீகரன் முகம் கன்றி சிவந்திருந்தது.
தங்களின் உரையாடலுக்கு இரு பார்வையாளர்கள் இருப்பதை அவர்கள் இருவரும் இன்னும் அறிந்திருக்கவில்லை.
“கேக் கட் பண்ணும் போது நீங்க பக்கத்துல இருக்கனும்னு ஆசைப்பட்டேன் பா..ப்ளீஸ் பா..” என்றான் கடைசி முயற்சியாக,வெளியே வரதா காற்றாகிவிட்ட குரலில்..
தன் பொறுமை முற்றிலும் இழந்தவராக..
“ஸ்டாப் இட் வசி..நீ எப்பவும் இப்படியே தான் பேசிட்டு இருப்பியா??மொதல்ல பெரியவங்க வெளிய போகும் போதும் வரும் போதும் போகாதீங்க, ஏன் போறீங்க..எப்ப வருவீங்க.. சீக்கிரம் வாங்கன்னுலாம் அழுத்தம் கொடுக்கறதை நிறுத்து. நீ இன்னும் சின்ன பையன் இல்ல..”
என்று கோபத்தில் குரல் உயர்த்தி பேசினார் கிட்டத்தட்ட கத்தினார் என்றே கூறலாம்.
வசீகரன் அடிவாங்கிய பிள்ளை போல பேச்சிழந்து உறைந்து போனான்.
கண்கள் நீர்த்திரையிட கைமுஷ்டி இறுகி நரம்புபுடைக்க முகத்தில் இரத்தம் முற்றிலும் வற்றி வெளிறிப்போய் தலை குனிந்து நின்றவனைப் பார்க்கையில் ஓடி சென்று அணைத்துக் கொள்ளவேண்டும் போல ஒரு வேகம் வந்தது, குறைந்த பட்சம் அவனது இறுகிய கை முஷ்டியையாவது பிடித்து ஆறுதாலாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இது எதையுமே தான் செய்ய முடியாது என்று தன் அறிவு உணர்த்த செய்வதறியாது தவித்துநின்ற கணத்தில்…
“சிவா.. என்னய்யா கொழந்தைகிட்ட இப்படி பேசிட்டு இருக்க..” என்று குரலில் கண்டிப்புடன் கூறிக்கொண்டே வசீகரனின் பாட்டி அவர்களிடம் சென்றார்.
இருவரும் அவரின் குரல் வந்த பக்கம் பார்வையைத் திருப்ப அந்த திசையில் நின்ற அதிதியும் அவர்கள் கண்ணில் பட..
வசீகரன் முகத்தில் ஒரு கணம் அதிர்ச்சிதோன்றி மறைந்து பின்முகம் கன்றிச்சிவந்தது.
அவர்களின் குடும்ப விஷயத்தில் தான் தன் விருப்பமின்றி மூக்கை நுழைத்திருப்பது புரிய, அப்படியே அங்கிருந்து மறைந்து போனால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று சாத்தியமே இல்லா யோசனை ஓடியது.
ஆனால் அவளைப் பொருட்படுத்தாமல் தன் அம்மாவிடம் திரும்பி..
“அது இல்லாங்கம்மா..” என்று பேசத்தொடங்க..
“நீ எதுவும் பேச வேணா .. பாரு புள்ள மூஞ்சி எப்படி வாடி போச்சி.. இன்னிக்கி அவனுக்கு பொறந்த நாளு அப்பா கூட இருக்கோனும்ன்னு ஆசைப்படுறான்..என்ன தப்பு அதுல..இப்படி கெடந்து குதிக்கற..இப்ப என்ன உனக்கு வேலை இருக்கு அவ்ளோதானே நீ கெளம்பு நான் இங்க பாத்துக்கறேன்..” என்றார் அதிகாரமாக
அதற்கு மேல் அங்கே நிற்பது சரியில்லை என்று உணர்ந்து மெதுவாக அங்கிருந்து நழுவி வெளியேறினாள் அதிதி.
மீண்டும் பார்ட்டி நடைபெறும் பின்புறத் தோட்டத்தை வந்தடைந்த பின்னும் வசீகரனின் அடிவாங்கிய முகமும், சொல்லொன்னா வேதனைக்காட்டிய கண்களுமே அவள் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.
“என்ன..” என்று கேட்ட வர்ஷினியிடம் ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டு அமைதியானாள்.
சற்று நேரத்தில் வந்து சேர்ந்த வசீகரனின் முகம் எப்போதும் போல பளிச்சென்றிருந்தது. அதே புன்னகை அதே வசீகரம் ..
இந்த முகம்தான் சற்று முன்பு வேதனையில் வாடி இருந்தது என்று கூறினால் யாரும் நம்பகூட மாட்டார்கள்.
அதிதி திகைத்தாள்.
எப்படி இவனால் எதுவுமே நடக்காதது போல் சாதாரணமாக இருக்க முடிகிறது? இது ஒருநாளில் வந்த வித்தையாக தெரியவில்லை.பலநாள் கற்றுத்தேர்ந்த கலைபோல் வெகு இயல்பாக தன் உள்ளம் மறைத்து புன்னகை முகம் காட்டினான்.
எப்போதும் சிரித்த முகமாகவே இருக்கும் வசீகரனுக்கெல்லாம் என்ன கவலை இருக்க முடியும்? கவலை என்பது அவன் அகராதியிலேயே இருக்காது என்று நினைத்திருந்தாள். ஆனால் இப்போது அந்த புன்னகையே மற்றவர்களுக்காக அவன் போட்டுக்கொண்ட முகமூடியாக இருக்குமோ என்று தோன்றியது.
அதுவரை இல்லாத வகையில் அவன் ஏதோ புதியவனாகத் தெரிந்தான். வானுலகிலிருந்து வந்த அப்பழுக்கில்லா தேவன் இல்லை அவனும் குறை நிறைகள், சுக துக்கங்கள் கொண்ட மனிதன்தான் என்று தோன்றும் போதே அவன் மீது மேலும் அன்பு கூடுவது போல் உணர்ந்தாள்.
அப்போது மூன்றடுக்கு கொண்ட கேக் ஒன்று நடு நாயகமாக வைக்கப்பட்டிருந்த டேபிளின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட.. எல்லோரையும் அருகே வருமாறு மைக்கில் யாரோ அறிவித்தார்கள்.. உடனே உற்சாகமாக அனைவரும் அங்கே குழுமிவிட அதிதி சற்று தள்ளியே நின்றாள் ஆனால் அங்கே நடப்பதை பார்க்கவும் கேட்கவும் முடியுமளவு தொலைவிலும் இருந்தாள்.
DJ பாட்டை நிறுத்திவிட எல்லோரும் “ஹேப்பி பர்த் டே டூ யூ..” என்று சத்தமாக பாட.. வசீகரன் கேக்கை வெட்டினான்.
அப்போது அருகில் யாரோ
“வசி..ஃபர்ஸ்ட் யாருக்கு ஊட்டிவிடுவான்..?” என்று கேட்க
எப்போதும் முதல் துண்டை தனக்கு மிகவும் விருப்பமானவர்களுக்கே கொடுப்பது வழக்கம், அது பெரும்பாலும் குடும்பத்தினராகத்தான் இருப்பர். ஆனால் அங்கே வசீகரனின் குடும்பத்தார் யாரும் இல்லை.. அவனது அப்பா பாட்டி யாரும் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. இப்போது வசீகரனின் கையால் முதலில் கேக்கை பெறுவது யாராக இருக்கும் என்ற ஆர்வம் அதிதியை ஆட்கொண்டது.
நூறில் ஒரு வாய்ப்பாக என்னிடம் வருவானோ என்ற எண்ணம் தேன்ற குறுகுறுப்பும் திகிலும் ஒருங்கே அவளது வயிற்றைக் கவ்விப்பிடித்தது.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் இவள் மனம் என்னென்னமோ நினைத்து பதற.. வசீகரன் எந்த வித சஞ்சலமும் இல்லாமல் தன் கையில் இருந்த கேக்கை தன் பக்கத்தில் நின்ற பெண்ணுக்கு ஊட்டினான்.
உடனே கூட்டத்தில் ஆரவாரம் வெடித்துச் சிதறியது.
அந்தப் பெண்ணும் வசீகரனுக்கு கேக்கை ஊட்டிவிட்டு அவனை அணைத்து கன்னத்தில் முத்தமிட.. மீண்டுமொருமுறை கூட்டம் ஆர்ப்பரித்தது.
“தெரிஞ்சது தானே ஃபர்ஸ்ட் பீஸை கேர்ள்ஃப்ரண்டுக்கு தானே கொடுப்பாங்க..” என்று கூட்டத்தில் மேலும் ஒரு குரல் கேட்டது.
அதிதியின் கனவு மாளிகை சுக்கு நூறாக உடைந்துவிழ…அளவில்லா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
“கேர்ள்ஃப்ரண்டா..?”
தொடரும்
error: Content is protected !!