Skip to content
Post Views: 1,615
அத்தியாயம்-9
சினிமாவில் வருவது போல சூப்பர்பவர் எதுவும் தனக்கு கிடைக்குமானால், யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து போகும் சக்தியைதான் கேட்டிருப்பாள் அதிதி.. எல்லோர் கண்ணுக்கும் இல்லாவிட்டால் கூட குறைந்தபட்சம் வசீகரனின் கண்ணில் மட்டுமாவது படாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?
எப்படியோ இரண்டு தினங்களாக அவன் கண்ணில் படாமல் தப்பிவிட்டாள், அவன் அனுப்பிய குறுஞ்செய்திக்கும் பதிலளிக்கவில்லை, எங்கே அவள் உளறியதை வைத்து அவளை மேலும் சீண்டுவானோ என்று அவள் பயந்திருக்க, அவன் அவளை அதற்கு மேல் எதுவும் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடவே.
அப்பாடா என்று நிம்மதி பெருமூச்செறிந்தாள்.
Advertisement
ஆனால் அடுத்தநாள் வகுப்புக்கு போனதும் விஷால் இருவரையும் வைத்து வாங்கிவிட்டான்.
“ரெண்டு பேரும் தண்ணிவண்டிங்க மாதிரி குடிச்சி மட்டையாகிட்டு என்னை ஒரு வழி பண்ணிட்டீங்களே.. உங்களுக்கு செக்யூரிட்டி வேலை பாக்கறதுக்குத்தான் என்னை நைச்சியம் பண்ணிக்கூட்டிட்டு போனீங்களா??
நல்ல சாப்பாடுன்னு சொன்ன அந்த ஒரு வார்த்தைல தான் நான் ஏமாந்துபோய் உங்ககூடவந்தேன்.. ஆனா அதையாவது என்னை ஒரு வாய் நிம்மதியா சாப்பிடவிட்டீங்களா??
Advertisement
கொல பட்டினில இந்தம்மா பண்ண அலப்பரைய எல்லாம் தாங்கிட்டு இவ எப்ப வாந்தி எடுப்பாளோ இல்ல மயங்கிவிழுந்து மட்டையாவாளோன்னு உயிர கையில புடிச்சிட்டு இங்க கொண்டு வந்துசேத்திருக்கேன்.. வீரதீர சாகசம் செஞ்சவங்களுக்கு கவர்மெண்ட்ல எதோ அவார்ட் குடுப்பாங்களே அத்தனை அவார்டையும் எனக்கு தான்கொடுக்கனும்…” என்று மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே போனான்.
Advertisement
“சாரி விஷால் எதோ தெரியாம நடந்திடுச்சு..” என்று அதிதி கழிவிரக்கத்துடன் கூற..
“நீ பேசாத… நீ பாட்டுக்கு ஜாலியா அந்த வசீகரன்கூட கெளம்பிட்ட, ஹாஸ்ட்டல் கேட்ல உன்னைப் பார்க்கற வரைக்கும் எனக்கு இருந்த டென்ஷனுக்கு ஹார்ட் அட்டாக் வராம இருந்ததே உலக அதியசம்..”
இப்படியே பேசிப்பேசி ஒருவழியாக அப்போதைக்கு சமாதனம் ஆனாலும் அவ்வப்போது நினைவு வரும் போதெல்லாம் சொல்லிக் காட்டிக்கொண்டேதான் இருந்தான் விஷால்.
Advertisement
எப்போதும் பட் பட்டென்று திருப்பி பேசிவிடும் வர்ஷினி மட்டும் அமைதியாகவே இருக்க அது ஒருமாதிரி உறுத்தலாக இருந்தது அதிதிக்கு.
அன்று மாலை ஹாஸ்ட்டல் ரூமில் அமர்ந்திருக்கும் போது, தன் பிரச்சனையிலேயே உழன்று கொண்டிருந்த அதிதி தன்னைப்போலவே யோசனையாக அமர்ந்திருந்த வர்ஷினியை பார்த்தாள்.
“ஹே வர்ஷ் என்னாச்சி டீ.. நீ ஏன் ஒரு மாதிரி இருக்க..?நீ ஆளே சரியில்லையே..” என்று கேட்கவும், அவள் கேட்பதற்காகவே காத்திருந்தது போல
“ஹே நான் பயங்கரமா சொத்தப்பிட்டேன் டீ…” என்று ஆரம்பித்து கொட்டித்தீர்த்தாள்.
“அன்னிக்கு நைட் நான் என்னென்ன கூத்து பண்ணியிருக்கேன் தெரியுமா? கங்காரு குட்டி மாதிரி விஷாலோட மடியில ஏறி உக்காந்துகிட்டு,அவன் கழுத்துல முகத்த வச்சி அவன ஸ்மெல் பண்ணதும் இல்லாம..
“ யூ ஸ்மெல் வெரி நைஸ்..ஐ லைக் இட்..” அது இதுன்னு என்னென்னமோ சொல்லி வச்சிருக்கேன். அந்த கார்ல நாங்க மட்டும் இல்ல…யாருன்னே தெரியாத வேற ஆளுங்களும் இருந்தாங்க, நானாவது போதையில இருந்தேன், விஷால நெனைச்சிபாரு அவனுக்கு எவ்ளோ அவமானமா இருந்திருக்கும்? இங்க வந்தும் அவன உப்புமூட்டத் தூக்க சொல்லி ரகளை பண்ணியிருக்கேன். பாவம்டீ அவன்…
தண்ணி அடிச்சா எல்லாம் மறந்துடும்ன்னு சொல்லிவாங்க, ஆனா எனக்கு எல்லாமே நல்லா நியாபகம் இருக்கு.. அவன்கிட்ட இனி எப்படிடீ சகஜமா பேசுறது? எனக்கு அவமானம் பிடுங்கி தின்னுது..” என்று வர்ஷினி முடிக்க..
“ஓ அதான் விஷால் திட்டத்திட்ட வாயே தொறக்காம இருந்தியா??ஆனா கவலப்படாதடீ.. யூ ஆர் நாட் அலோன் இன் திஸ்… என் பங்குக்கு நானும் நல்லா ஏழரைய கூட்டிட்டுதான் உக்காந்திருக்கேன்..” என்று தான் வசீகரனிடம் தன் மனதில் உள்ளதை உளறிக்கொட்டியதை கூறினாள்.
“அவன் கிட்டயேப்போய், நீ அழகு.. பேரழகு.. உன்னை அவ்ளோ பிடிக்கும்… உன்னை பார்த்த அன்னிக்கே நான் விழுந்துட்டேன்னு கிட்டதட்ட ட்ரங்க்கன் கன்ஃபெஷன் (drunken confession) பண்ணிவச்சிருக்கேன். அவனுக்கு ஆளு இருக்குன்னு தெரிஞ்சப்புறமும் நான் இப்படி வழிஞ்சிருக்கேனே என்னைப்பத்தி அவன் என்ன நினைச்சிருப்பான்? கொஞ்ச நஞ்ச நல்ல பேரையும் நானே கெடுத்துக்கிட்டேன்.. இனி அவன் முகத்த நிமிர்ந்து கூட பாக்க முடியாது.. அவ்ளோதான் எல்லாம் போச்சு..” என்று இவளும் புலம்ப.. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு
“நாம ஏன் டீ இப்படி இருக்கோம்…”என்று கேட்டு சட்டென்று வாய்விட்டு சிரித்துவிட்டனர் இருவரும்.
அப்போது ரூம் கதவைத்தட்டும் சத்தம் கேட்க .. வர்ஷினி எழுந்து போய் திறந்தாள்.
வெளியே வைஷாலி தன் இருபுறமும் அவள் இரு தோழிகள் நிற்க சண்டைக்கு போகும் கேங்ஸ்டர் போல் நடுவில் நின்றிருந்தாள்.
“நீதான் அதிதியா?” என்று ஒருத்தி கேட்க,
அதிதி முன்னே வந்து
“நான்தான் அதிதி..” என்றாள்.
“உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்..” என்றாள் அதுவரை அமைதியாக இருந்த வைஷாலி.
“உள்ள வாங்க..”
“வர்ஷ் நீ கொஞ்சம் வெளிய இருடி..”என்றாள் வர்ஷினியை பார்த்து,
“உனக்கு ஓகேவா..” என்று சத்தம் வராமல் உதட்டைமட்டும் அசைத்துக்கோட்டாள் வர்ஷினி.
“ஓகே..” என்று இவள் தலையசைக்க வர்ஷினி வெளியேறினாள்.
எல்லோரும் வெளியே சென்றுவிட அறையில் இருவர் மட்டும் இருந்தனர்.
“நான் வைஷாலி தெரியும்ல, வசீகரனோட கேர்ள்ஃப்ரண்ட்..” என்றாள் கர்வத்துடன் அது எதோ பெரும் கவுரவப்பதவி போல.
“தெரியும்..” என்றாள் இவள் சுருக்கமாக
“அப்போ நான் எதுக்கு வந்திருக்கேன்னும் உனக்கு தெரிஞ்சிருக்கனுமே..”
“இல்ல தெரியல..”
“இங்க பாரு.. நான் கேட்க வேண்டியத நேரடியாவே கேட்டுடுறேன்..
“உனக்கும் வசீகரனுக்கும் நடுவுல அஃபயர் எதாவது இருக்கா?”
தூக்கிவாரிப்போட்டது அதிதிக்கு..
“என்னங்க அஃபயர்ன்னு பெரிய வார்த்தைலாம் சொல்றீங்க..?”
“பின்ன என்ன சொல்றது..? என் பாய்ஃப்ரண்ட் அவனோட பர்த்டே பார்ட்டியில என்னை இக்னோர் பண்ணிட்டு எவளோ ஒருத்தியை ஹக் பண்ணிக்கிட்டு வண்டில கூட்டிட்டுப்போனா வேற என்ன சொல்லமுடியும்..? பாக்குறவங்கதான் என்ன நினைப்பாங்க..?”
சாதாரணமாக வசீகரன் ஒரு உதவியாக செய்தது இந்த வைஷாலியின் வாய்வார்த்தையில் கேட்கும் போது நாராசமாக ஒலித்தது.
“அது ஒரு ஹெல்ப்பா சீனியர் பண்ணது, நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை..”
“ஹெல்ப்போ பல்ப்போ.. இதை பாக்குற எல்லார்கிட்டையும் போய் நான் சொல்லிட்டு இருக்க முடியுமா? நானும் வசியும் ரெண்டு வருஷமா டேட் பண்றோம்னு இந்த யுனிவர்சிட்டி முழுக்கத் தெரியும்… உனக்கு வேற ஆளே கிடைக்கலயா..?அடுத்தவ பாய்ஃப்ரண்டுக்கு அலையறதெல்லாம் கேவலம்.. ச்சீ.. ச்சீ..” என்று உடல் கூசுவதுபோல சிலிர்த்தாள்.
“இங்க பாரு..வசி இஸ் மைன்.. ஸ்டே அவே ஃப்ரம் ஹிம்.. புரிஞ்சதா..?” என்று அதிகாரமாக அதட்டினாள்.
அதிதிக்கு கண்ணோரம் கரித்தது, வைஷாலியின் விஷ வார்த்தைகள் வலித்தது. கொஞ்சமும் நியாயம் இல்லாமல் தன்மீது சாட்டப்படும் குற்றத்தை எதிர்த்து கேட்க வார்த்தையில்லாமல் தவித்தாள்.
“நீங்க சொல்ற மாதிரியெல்லாம் எங்களுக்குள்ள எதுவுமே இல்ல.. வீ ஆர் ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ் அவ்ளோதான்.” குரலில் சிறு நடுக்கத்துடன்.
“ரொம்ப நல்லது , வருங்காலத்துலயும் வெறும் ஃப்ரண்ட்ஸ்ஸா மட்டுமே இருந்தா எந்த பிரச்சனையும் வராது.. ஆனா உன்னை நம்பலாமா.. இல்ல நான் இந்த பக்கம் போனதும் அந்த பக்கம் வசீகிட்ட வத்திவச்சிடுவியா??”
“நான் இனிமே அவர்கூட பேசகூட மாட்டேன் போதுமா? அவர் நம்பர கூட டெலீட் பண்ணிடறேன்..” என்று தன் மொபைலை எடுத்து வசீகரனின் எண்ணை ப்ளாக் செய்து பின் டெலீட் செய்தாள்.
அதைப்பார்த்து கொஞ்சம் சமாதானம் ஆன வைஷாலி..
“ஓகே.. ஓகே.. கூல்..இந்த அளவுக்கு போயிருக்கத் தேவையில்லை, சாரி நானும் கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன். வசி மாதிரி ஒரு பாய்ஃப்ரண்ட் இருந்தா யார இருந்தாலும் ஒரு இன்செக்யூரிட்டி இருக்கத்தானே செய்யும்..என்னோட நிலமையையும் நீ புரிஞ்சிக்கனும்..” என்று சற்று தணிவாகவே பேசினாள்.
ஆனால் அதிதியின் மனம் உலைகலனாகாக் கொதித்துக் கொண்டிருந்தது, என்னவெல்லாம் பேசிவிட்டாள்.
எப்படி இவளால் முன்பின் யாரென்றே தெரியாத ஒரு பெண்ணின் மேல் பழியைப்போட்டு வார்த்தை நெருப்பால் சுட்டுவிட்டு உடனே ஸ்விட்ச் போட்டமாதிரி மாற்றி தணிந்து பேசமுடிகிறது..?
ஹோம் ரெக்கர் (home wrecker) என்ற பழி தனக்கு வேண்டாம். அந்த வசீகரன் இவளுடனேயே சந்தோஷமாக வாழட்டும்.. என்று நினைத்துக்கொண்டு..
“நீங்க என்னை நினைச்சி எந்த கவலையும் படவேண்டாம். எங்களுக்குள்ள எதுவும் இல்ல.. நான் உங்க ரெண்டுபேருக்கும் நடுவுல எப்பவும் வரமாட்டேன்.. ப்ராமிஸ்..” என்றாள் உறுதியான குரலில். சொல்லும்போதே அவள் இதயம் காலியாகி வெறும் கூடாகிப்போனது..
அதிதியின் பதிலில் திருப்தி அடைந்த வைஷாலி,
“இது போதும் எனக்கு..நீ சொன்ன வார்த்தைய காப்பத்துவன்னு நம்புறேன்..தப்பா எதுவும் எடுத்துக்காத நத்திங் ஈஸ் பர்சனல்.. நான் வரேன்.. பை..” என்று தன் பரிவாரங்களுடன் கிளம்பிச்சென்றாள்.
உள்ளே வந்த வர்ஷினி எதுவும் பேசாமல் அப்படியே அவளை ஆறுதலாக அணைத்துக்கொள்ள.. கதறி அழுதுவிட்டாள்.
நேசம் இப்படி சுடுமா??
‘வசீகரனிடம் நான் வைத்த நேசம் இன்னும் என்னவெல்லாம் செய்யுமோ..?’
error: Content is protected !!