52.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,215
உன் பாதியும்
என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 52.2
.
Advertisement
கைப்பேசி அழைத்தது. கட்டிலிலிருந்து காலை கீழே வைக்க, தரை ஈரமாக இருந்தது. மேசை மீது இருக்க வேண்டிய சொம்பு ஓர் ஓரமாக உருண்டு கொண்டிருந்தது.
Advertisement
கட்டிலை ஒட்டியிருந்த மேசையிலிருந்து கைப்பேசி மீண்டும் இசைக்க ஆரம்பித்தது. அமர்ந்தவாறே அதில் பார்வையைப் பதித்தாள். அப்பாவிடமிருந்து அழைப்பு. படபடப்பை, ஆழ மூச்செடுத்து அடக்கினாள்.
Advertisement
“சாப்டியா மா?” என்ற கேள்வி, கடிகாரத்தைக் காண உந்தியது. நேரம் எட்டைக் கடந்திருக்க, “இல்ல பா… தூங்கிட்டேன்” என்ற பதிலோடு யசோவின் காலை புலர்ந்தது.
Advertisement
இரவின் தனிமை யசோவை விட்டு அகலாது நன்றாகப் பசை போட்டு ஒட்டிக் கொண்டது, கூடவே கனத்த தலையும், ஒழுகும் மூக்கும். நேற்று இரவு தலையைத் துவட்டாது படுத்ததின் விளைவு எனப் புரிந்தது. நேற்று இரவுக்குச் செல்ல முடிந்தால், தலைக்கு ஊத்தாது படுத்திருப்பாள். ஆனால் முடியாது. கடந்த நிமிடங்களில் வாழ முடியாது. இந்த நொடி மட்டுமே உண்மை. கனவுகளும், நினைவுகளும் வலியையும் ஏக்கத்தையுமே அள்ளி தரும். மீண்டு வந்தே ஆக வேண்டும் இல்லை இப்படியே ஏங்கித் தவித்துச் செத்துப் போக வேண்டும்.
நீண்ட பெருமூச்சோடு அடுக்களைக்குள் நுழைந்தாள். இரண்டு தோசைகளோடு காலை உணவை முடித்தவள், அப்படியே இஞ்சி தேநீரை வயிற்றிற்கு இறக்கினாள். அடுத்த நான்கு மணி நேரத்தின் முடிவில் உடலின் கதகதப்பு ஏற ஆரம்பித்து சதத்தைத் தாண்டியது.
தலைப் பாரத்திற்கு யாராவது சுடுநீர் வைத்துக் கொடுத்து, தலையை அழுத்தி விட்டால் நன்றாக இருக்கும், ஆனால் அப்பா இல்லையே.
தனித்திருக்கும் யசோதராவை காணா செண்பா வந்தார். “தீடீர்ன்னு என்ன ஜுரம்?” என்றவர் அவளோடு மணி நேரம் இருந்தார்.
கதகதப்பான நீரில் எலுமிச்சை, ஆப்பிள் சீடர் வெனிகர் மற்றும் தேனை ஊற்றிக் கொடுத்து அதைக் குடிக்கச் செய்தார். தொண்டைக்கு இதமாக இருந்தது. தைலம் தடவி, நெற்றியை நீவி விட்டார். அவ்வப்போது சுடுநீர் கொடுத்தார். “நீ படுத்திரு. மாமாட்ட சோறும், கற்பூரவல்லி ரசமும் கொடுத்தனுப்புறேன். மதியம் சாப்பிட்டு மாத்திரை போட்டுப் படு. சரி ஆகிடும். நைட் டிப்பன நான் எடுத்துட்டு வரேன்” எனக் கூறிக் கிளம்பினார்.
யசோவின் தேவைகள் அனைத்தையும் அன்னையின் இடத்திலிருந்து செண்பா பார்த்துக் கொண்டார் தான். ஆனாலும்… மனம் எதையோ… யாரையோ தேடியது.
ஆனால் தன்னை ‘ஏன்?’ என்று கேட்க ஆள் இல்லை என்ற கழிவிரக்கம் தாக்கியது யசோவை.
யார் இல்லாது போனாலும் உனக்கு நான் இருக்கிறேன் என்றது கைப்பேசி. கௌதமன் அழைத்தான். மனம் அழுத்திப் பிசைந்தாலும், இதமாக உணர்ந்தது.
“எப்படி இருக்க யசோ?” என்றான் கௌதமன்.
“ம்ம்” என்றவளுக்குப் பேச்சு வருவேனா என்றது.
“நேத்து ஏதோ மாதிரி இருந்த. பேபி பண்ணின ரகளையில என்னால கேக்க முடியல. என்ன ஆச்சு? முகமே சரி இல்ல? உடம்புக்கு ஏதாவது செய்யுதா?”
பேசிவிட்டான்… நேற்று மகளுக்காக அழைத்தவன், இன்று தன் நலனை விசாரிக்க அழைத்துவிட்டான். இது என்னவிதமான உணர்வு? உள்ளுக்குள் இதமாகவும் நிம்மதியாகவும் இருக்கும் இந்த உணர்வுக்குப் பெயர் என்ன? இவனோடான நேரத்தை மனம் விரும்புகிறதா?
ரகுவின் இடத்தில் இவனைப் பொருத்திக்கொள்ள மனம் தயாராகிவிட்டதா?
அது எப்படி முடியும்? ரகு இருந்தாலும் இல்லாது போனாலும் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் ரகுவின் இடம் ரகுவிற்கானது மட்டுமே. அம்மா, அப்பா, யாழி என இவர்களுக்கு எல்லாம் இதயத்தில் இடம் இருக்கும் போது கௌதமனுக்கு ஓர் ஓரத்தில் இடம் இருக்காதா என்ன? சின்ன முக்காலி ஒன்றைக் கொடுக்கலாம் என்றது மனது.
இராஜகுமாரனை போல் இருக்கும் கௌதமன், அவன் உயரத்திற்கும், உடல்வாகிற்கும் முக்காலியில் அமர்ந்தால் எப்படி இருக்கும்? யசோவின் இதழ் புன்னகையைப் பூசிக் கொண்டது.
“அம்மா… வாலுங்க இங்க. பேபிய தூக்குங்க. திடி பேடும் பெலிய பெட்ல தூணலாம்” எனக் குழந்தை கைகளை விரித்தாள். அடுத்த அழுகைக்கு மகள் தயாராவது தெரிந்தது கௌதமனுக்கு.
உதடு துடிக்க… வர இருந்த கண்ணீரை வெளியே சிந்தாது… பிதுங்கத் துடித்த உதட்டைக் கடித்துப் பிடித்த குழந்தை தகப்பனை முறைத்து, பின் தாயை முறைத்தாள். அதில் ஏக்கம் வழிந்தோடியது.
யசோவின் பார்வை மகளுக்குப் பின் பரந்து விரிந்து கிடந்த அந்த பெரிய மெத்தையின் மீது விழுந்தது. தாராளமாக மூவர் படுக்கலாம் என்றது அறிவு. இந்த முறை அறிவை எதிர்த்துப் பேசாது மௌனம் சாதித்தது மனது.
தான் இங்கு முறைத்துக் கொண்டிருக்க, இருவரும் அவரவர் உலகில் இருந்தால் யாழிக்கு பொறுக்குமா? “அம்மா பேட். அப்பா பேட். டூ பேலும் நேனுக்கு நேணா” என்றாள் உதட்டைப் பிதுக்கி.
“வாய்ல ஒண்ணு போட போறேன் பேபி” என்றான் கௌதமன்.
கோபம் கொப்பளிக்க, தன்னை அதட்டும் தந்தையை இன்னும் இன்னும் கண்கள் சுருக்கி முறைத்தாள் குழந்தை. அம்மாவிடம் தன்னை அழைத்துச் செல்லாத அப்பா மீது கோபம். தன்னை தூக்கிக் கொஞ்சாது அமர்ந்திருக்கும் அம்மா மீது கோபம்.
இவர்களைப் பற்றி யாரிடம் புகார் வாசிப்பதாம்? “தாத்தா… அப்பா அயிச்சாங்க. அப்பாவ அலிங்க தாத்தா” என அலறிக் கொண்டே ஓடினாள் கௌதமனின் குட்டி மகள். பார்த்தவனுக்குப் புன்னகை அரும்பியது.
“உன் பொண்ணுக்குச் சேட்ட ஓவராயிடுச்சு. நான் அடிச்சேனாம்… வாய் வாய்… அப்படியே உன்ன மாதிரி” என்றான் மகள் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டே. பேச்சற்றவளாக அவனையே பார்த்தாள் யசோ.
அடர் கேசமும், சிரிக்கும் கண்களும், ஆழமான குரலும், வசீகரப் புன்னகையுமாக இருக்கும் கௌதமன் ஆண் அழகன் என யசோவின் கண்கள் பட்டம் சூட்டியது.
“உன்கிட்ட பேசதுக்கு அவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்துட்டு… ஓடிட்டா…” என்றவன், “ஏன் டல்லா இருக்கன்னு கேட்டேனே? உடம்புக்கு முடியலியா?” எனக் கேட்டான் கரிசனை குரலில். அப்படியே தலை வருடி அதைக் கேட்டால் நன்றாக இருக்கும் போல் இருந்தது. இந்த உடல் உபாதையைக் கடக்க, மனிதனுக்கு என்னவெல்லாம் தேவைப்படுகிறது?
“லைட்டா சளி” என்றாள் வழிந்த புன்னகையை அடக்காது.
“அதிகமாகிறதுக்கு முன்ன மருந்து எடுத்துக்கோ” என்றவன், “ஐயா நல்லா இருக்காங்க இல்ல? கேட்டதா சொல்லு. வைக்கட்டா?” எனக் கேட்டு, கைப்பேசியை அணைத்தவனுக்கும் தொண்டை அழுத்தி வலித்தது. கௌதமனின் தொண்டை வலிக்கு கண்டிப்பாகச் சளி காரணமில்லை.
அடுத்த அரை மணி நேரத்தில், “தாரா பாப்பா” என அழைத்துக் கொண்டே மலர் வந்தாள். “உடம்புக்கு என்ன ஆச்சு? முடியலியாமே… தம்பி ஃபோன் போட்டு சொல்லிச்சு. நீ ஒரு ஃபோன் போட்டு சொல்றதுக்கு என்ன?” எனச் சத்தம் போட்டாள். அன்று இரவு வரையும் மலர் அவளோடு இருந்தாலும், அவ்வப்போது தந்தை அழைத்துப் பேசினாலும், பேராசை கொண்ட மனம் மகளையும், மகளைக் கைப்பேசி திரையில் காட்டும் அவளின் தகப்பனையும் தேடியது.