Skip to content
Post Views: 128
சந்திரசேகர் குணமடைந்து வீட்டிற்கு வந்த பிறகு…
கண்ணனை மறக்கவில்லை.
Advertisement
அவனைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டார்.
சில நாட்களுக்குப் பிறகு…
Advertisement
Advertisement
கண்ணனுக்கு சந்திரசேகரின் நிறுவனத்தில் ஒரு வேலை கிடைத்தது.
“இனிமேல் வேலை தேடி அலைஞ்சிக்கிட்டு இருக்க வேண்டாம். உனக்குத் தகுந்த வேலை என்னோட நிறுவனத்திலேயே இருக்கு. உன் வாழ்க்கையை நீயே முன்னேற்றிக்கோ.”
Advertisement
என்றார் சந்திரசேகர்.
அன்று பேருந்து நிலையத்தில் சந்தித்த அந்த அந்நிய மனிதர்…
கண்ணனுடைய வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு திருப்பமாக மாறினார்.
கண்ணன் அவருடைய உயிரைக் காப்பாற்றியிருந்தான்.
அதற்குப் பதிலாக சந்திரசேகர்…
கண்ணனுக்கு ஒரு வேலை மட்டும் கொடுக்கவில்லை.
அவன் மீண்டும் வாழ்க்கையைத் தொடங்குவதற்கான ஒரு வாய்ப்பையும் கொடுத்தார்.
அவனுடைய உழைப்பையும் நேர்மையையும் புரிந்து கொண்டார்.
தன்னுடைய கட்டுமான நிறுவனத்தில் அவனுக்கு உதவி மேலாளர் பதவி கொடுத்தார்.
கண்ணனும் கொடுத்த வேலையை உயிராக நினைத்து செய்தான்.
அவனுடைய உழைப்பை பார்த்த சந்திரசேகருக்கு அவன் மீது இருந்த மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது.
ஒரு நாள்…
“கண்ணா…”
“சொல்லுங்க சார்.”
“என் பொண்ணு ராதாவை நீ திருமணம் பண்ணிக்கிறியா?”
அந்த கேள்வியை கேட்டதும் கண்ணன் அதிர்ந்து போனான்.
“சார்… அது முடியாது.”
“ஏன்?”
“எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிடுச்சு.”
“என்ன?..
கண்ணன் அமைதியாக இருந்தான்.
“மன்னிச்சிடுங்க சார். என்னால முடியாது.”
அந்த பதில் ராதாவின் காதுகளுக்கும் சென்றது.
கண்ணன் தன்னை விரும்பவில்லை என்ற எண்ணம் அவளை உடைத்துப் போட்டது.
ஒரு கட்டத்தில்…
அவள் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றாள்.
அதை பார்த்தது திருதான்.
“அக்கா!”
என்று அலறியவன் அவளைத் தடுத்து நிறுத்தினான்.
அந்த வயதிலேயே தன் அக்காவை இழந்துவிடப் போகிறோம் என்ற பயம் அவனை நடுங்க வைத்தது.
அவன் நடந்ததை தந்தையிடம் கூறினான்.
அதன் பிறகு சந்திரசேகர் எடுத்த முடிவு ஒன்றே.
“என் பொண்ணு உயிரோட இருக்கணும்னா நீ ராதாவை திருமணம் செய்தே ஆகணும்.”
கண்ணன் மறுக்க முடியவில்லை.
அந்த திருமணம் நடந்தது.
—
அதன் பிறகு…
கண்ணன் ராதாவை நல்லபடியாக பார்த்துக்கொண்டான்.
ராதாவும் கணவனை உண்மையாக நேசித்தாள்.
அவர்களின் வாழ்க்கை வெளியில் பார்க்கும்போது சந்தோஷமாகத்தான் சென்றது.
ஆனால்…
கண்ணனுடைய மனதில் மீராவும் ரோஜாவும் ஒருபோதும் மறையவில்லை.
ராதாவுக்குத் தெரியாமல்…
சென்னையில் இருந்து பணம் அனுப்புவது போல ஏற்பாடு செய்து மீராவுக்கும் ரோஜாவுக்கும் பணம் அனுப்பிக் கொண்டிருந்தான்.
ஊர் தலைவரின் வீட்டுத் தொலைபேசி மூலம் வாரத்திற்கு ஒருமுறை அவர்களிடம் பேசுவான்.
“மீரா… ரோஜாவை நல்லா பார்த்துக்கோ.”
“நம்ம பொண்ணுக்கு எதுவும் குறை வரக்கூடாது.”
என்று சொல்லுவான்.
மீராவும்…
“இனி நம்ம வாழ்க்கை கஷ்டமில்லாம போயிடும்.”
என்ற நம்பிக்கையில் அவன் அனுப்பிய பணத்தில் செலவு போக மீதியை சேமித்து வைத்தாள்.
அவள் கணவனை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள்.
ஒருநாள் கணவன் வெளிநாட்டில் இருந்து திரும்பி வருவான்.
அப்போது…
இந்த ஓலை வீட்டை விட்டுவிட்டு வேறு நல்ல வீட்டிற்கு போகலாம்.
அந்த நம்பிக்கையில்தான் அவள் அந்த வீட்டை மாற்றாமல் இருந்தாள்.
ஆனால்…
ஐந்து வருடங்களுக்கு பின்..
கண்ணன் வெளிநாடு சென்றதாக நினைத்துக் கொண்டிருந்த அந்த வீட்டிற்கு…
அவனுடைய சடலம் வந்தது.
அந்த செய்தியை கேட்ட மீராவின் உலகமே நொறுங்கிப் போனது.
அவள் கதறி அழுதாள்.
ரோஜா தன் தந்தையைப் பார்த்து அழுதாள்.
அப்போது அவளுக்கு எட்டு வயது.
அந்த சிறுமியின் அழுகையை பார்த்த யாருடைய மனமும் கல்லாக இருக்க முடியாது.
ராதா உதவிக்கு வந்தாள்.
ஆனால் மீரா ஏற்றுக்கொள்ளவில்லை.
“என் பொண்ணை நான் பார்த்துக்கறேன்.”
“எனக்கு யாருடைய தயவும் வேண்டாம்.”
என்று கூறிவிட்டாள்.
அவள் ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக முடிவு செய்திருந்தாள்.
“எனக்குப் பிறகு என் மகள் யார் கையையும் எதிர்பார்த்து நிற்கக் கூடாது.”
முன்பு கண்ணன் அனுப்பி வைத்த பணத்தில் ரோஜாவிற்காக நகைகள் செய்து வைத்தாள்.
அவற்றை வங்கி லாக்கரில் பத்திரமாக வைத்தாள்.
தன்னால் முடிந்த அளவுக்கு வேலை செய்தாள்.
ஊர் தலைவரின் தோட்டத்தில் வேலைக்குச் சென்றாள்.
மகளை வளர்த்தாள்.
உணவு…
உடை…
படிப்பு…
வாழ்க்கையின் தேவைகள்…
எல்லாவற்றையும் தன் உழைப்பால் சமாளித்தாள்.
இப்படியே…
பத்து வருடங்கள் ஓடியது..
—
இன்று…
மீராவும் இல்லை.
இதுவரை தன் மகளுக்காக போராடிய மீராவின் மனமும் உடலும் இறுதியில் சோர்ந்து போயிருந்தது.
மாரடைப்பு…
ஒரு நொடியில் அவளுடைய உயிரை எடுத்துக் கொண்டது.
ரோஜாவை தனியாக விட்டுச் சென்றுவிட்டாள்.
—
“சார்…”
ராஜாவின் குரல் மீண்டும் திருவை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது.
திரு இன்னும் அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுடைய கண்களில் இருந்த கோபம்…
மெதுவாக வேறு ஒரு உணர்வாக மாறிக் கொண்டிருந்தது.
அவன் முன்பு நினைத்தது ஒன்றாக இருந்தது.
ஆனால்…
இப்போது அவன் கண் முன்னால் தெரிந்தது வேறு.
அந்த வீட்டின் வறுமை…
அந்த வீட்டில் தனியாக வாழ்ந்த ஒரு தாய்…
அவள் வளர்த்த பதினெட்டு வயது பெண்…
இவை எல்லாம் அவனை பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை மீண்டும் சிந்திக்க வைத்தன.
அவன் பார்வை வீட்டிற்குள் சென்றது.
அங்கே…
ஒரு மூலையில் தலையை குனிந்து அமர்ந்திருந்தாள் ரோஜா.
அவளுடைய முகத்தில் இருந்த துயரம்…
அவனுடைய கண்களுக்கு புதிதாக இல்லை.
அதே முகம்…
அதே அழுகை…
அதே வெறுமையான பார்வை…
எட்டு வயதில் தந்தையின் சடலம் முன் நின்றபோது அவன் பார்த்த அதே குழந்தை.
இப்போது…
பதினெட்டு வயதாகி இருந்தாள்.
ஆனால் அவளுடைய கண்களில் இருந்த வலி மட்டும்…
அப்படியே இருந்தது.
திருவின் நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று அழுத்தியது.
அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
ரோஜாவும் தற்செயலாக தலையை உயர்த்தினாள்.
இருவருடைய கண்களும் முதன்முறையாக நேருக்கு நேர் சந்தித்தன.
ரோஜாவுக்கு…
அவன் யார் என்று தெரியவில்லை.
ஆனால்…
அவனுடைய பார்வையில் இருந்த கடினத்தன்மையை பார்த்ததும் அவளுடைய கண்களில் பயம் தோன்றியது.
திருவோ…
அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்.
அவன் மனதில் ஒரே ஒரு கேள்வி.
“இந்தப் பொண்ணு என்ன தப்பு பண்ணினா?”
அந்த கேள்விக்கு அவனிடமே பதில் இல்லை.
ஏனென்றால்…
ரோஜா செய்த தவறு ஒன்றுமே இல்லை.
அவள் பிறந்தது மட்டுமே…
அவள் மீது விழுந்த பழியாக இருந்தது.
திருவின் உள்ளே பத்து வருடங்களாக எரிந்து கொண்டிருந்த கோபத்தின் முதல் தீப்பொறி…
அந்த நொடியில் சற்றே அணைந்தது.
ஆனால்…
அவன் அறியவில்லை.
அந்த வீட்டிற்குள் தன் அக்காவின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக மட்டும் தான் அவன் வந்திருக்கிறான் என்று நினைத்தான்.
ஆனால்…
அவனுடைய வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் அங்கேதான் எழுதப்படப் போகிறது.
அவனுக்கு வெறுப்பாக இருந்த ஒரு குடும்பத்தின்…
அவனுக்கு புரியாமல் போன ஒரு பெண்ணின்…
மற்றும்…
அவனுடைய இதயத்தில் ஒருநாள் தீபமாக ஏற்றப்படப் போகும் ஒரு காதலின் தொடக்கம்…
அந்த ஓலை வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தது.
ரோஜாவின் தாயார் இறந்த செய்தி அந்த ஊர் முழுவதும் பரவியது.
ஆனால்…
அவருடைய இறுதிக்காரியங்களைச் செய்வதற்கான பணம் ரோஜாவின் கையில் இல்லை.
வீட்டின் வாசலில் தாயின் உடல் கிடந்தது.
சுற்றிலும் உறவினர்களும் ஊர் மக்களும் நின்றுகொண்டிருந்தனர்.
ரோஜா செய்வதறியாமல் கண்ணீருடன் நின்றாள்.
“அம்மாவுக்கு செய்ய வேண்டிய காரியங்களைக்கூட என்னால செய்ய முடியலையே…”
என்று அவள் கதறியபோது, அருகில் இருந்தவர்கள் அமைதியாக நின்றனர்.
அந்த நேரத்தில் அங்கே வந்தான் திரு.
ரோஜாவின் நிலையைப் பார்த்ததும் அவனுக்கு மனம் கனத்தது.
அவன் நேராக ஊர் தலைவரிடம் சென்றான்.
“ஐயா…”
என்று அழைத்தவன், தன்னிடம் இருந்த பணத்தை அவரிடம் கொடுத்தான்.
ஊர் தலைவர் தயக்கத்துடன் அவனைப் பார்த்தார்.
“தம்பி… இதெல்லாம் எதுக்கு?”
திரு மெதுவாகப் பேசினான்.
“ஐயா, ரோஜாவின் அம்மாவுக்கு செய்ய வேண்டிய இறுதிக்காரியங்களுக்கு இந்தப் பணம் பயன்படட்டும்.”
ஊர் தலைவர் பணத்தை வாங்காமல் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது திரு மீண்டும் சொன்னான்.
“இந்த ஊருடைய வழக்கங்கள், சடங்குகள் எதுவுமே எனக்குத் தெரியாது ஐயா.”
“அவங்களுக்கு என்னென்ன செய்யணுமோ, இந்த ஊரில் எப்படி செய்வீங்களோ… அதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.”
“இந்தப் பணத்தை வைத்து எல்லா காரியங்களையும் நல்லபடியாகச் செய்யுங்கள்.”
ஊர் தலைவர் பணத்தை வாங்கிக்கொண்டார்.
“தம்பி… உன் மனசுக்கு நல்லது நடக்கும்.”
என்றார் நெகிழ்ச்சியுடன்.
அதைத் தொலைவில் நின்று பார்த்துக்கொண்டிருந்த ரோஜாவின் கண்களில் மீண்டும் கண்ணீர் பெருகியது.
தன்னுடைய தாய்க்கு இறுதியாக ஒரு மரியாதையான விடை கொடுக்கக்கூட முடியாமல் தவித்துக்கொண்டிருந்த தன்னுடைய நிலையை…
ஒரு வார்த்தைகூட கேட்காமல் புரிந்துகொண்டிருந்தான் திரு.
அவள் அவனைப் பார்த்தாள்.
திருவும் அவளைப் பார்த்தான்.
அந்தப் பார்வையில்…
நன்றி இருந்தது.
வலி இருந்தது.
சொல்ல முடியாத ஒரு உணர்வும் இருந்தது.
ரோஜாவின் நிலையைப் பார்த்தபோது…
திருவின் மனதின் ஓரத்தில் ஒரு சிறிய வருத்தம் இருந்தது.
தாயை இழந்து நிற்கும் பெண்.
அதுவும் வறுமையின் பிடியில் சிக்கி, இறுதிக்காரியங்களைக்கூட செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள்.
அவளைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருந்தது.
ஆனால்…
அந்தப் பரிதாபம் அவனுடைய கோபத்தை முழுமையாகக் குறைக்கவில்லை.
“என் அக்காவின் வாழ்க்கை இப்படி ஆகிப்போனதற்கு இவளும் ஒரு காரணம்தானே…”
என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் அவனுக்குள் எழுந்தது.
அதனால் ரோஜாவைப் பார்த்தபோதெல்லாம் அவனுடைய முகத்தில் கோபமே தெரிந்தது.
அவளை முறைத்தபடியே அங்கே நின்றுகொண்டிருந்தான்.
சில நாட்களுக்கு முன்பு வரை அவன் மனதில் இருந்த ஒரே கவலை…
ராதாவின் வாழ்க்கை.
அக்காவின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற கோபம் அவனுக்குள் ஆழமாகப் பதிந்திருந்தது.
ஆனால்…
ராதா சொன்ன ஒரு வார்த்தைக்காக மட்டும் அவன் மீராவின் இறுதிக்காரியங்களை எந்தக் குறையும் இல்லாமல் நல்ல முறையில் செய்து முடித்திருந்தான்.
“தம்பி… மீரா அக்காவுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் நல்லபடியா நடக்கணும்.”
என்று ராதா சொன்ன வார்த்தைகள் அவன் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தன.
அதற்காகத்தான்…
மீராவின் இறுதிக்காரியங்களை முழுமையாக முடித்துவிட்டு, இப்போது அந்த வீட்டிலேயே தங்கியிருந்தான்.
அதுவும்…
வசதியென்று சொல்லிக்கொள்ளக்கூட முடியாத ஓலை வீடு.
மழை வந்தால் ஒழுகக்கூடிய கூரை.
சிறிய மண் தரை.
சில பழைய பொருட்களைத் தவிர வீட்டிற்குள் வேறு எதுவுமே இல்லை.
ஆனால் அந்த வீட்டில் அவன் தங்குவதற்கு ஒரு காரணம் இருந்தது.
ராதா.
“அவளைத் தனியா விட்டுட்டு வராதே திரு…”
என்று அக்கா சொல்லியிருந்தாள்.
அவள் சொல்லை மீற திருவால் முடியவில்லை.
தன்னைத் தாயைப்போல் பார்த்துக்கொண்ட அக்காவின் வார்த்தைகளை அவனால் எப்படி மறுக்க முடியும்?
ராதாவிடம் கோபமாகப் பேசவும் அவனால் முடியாது.
அவள் சொல்வதை மீறவும் முடியாது.
அதனால்தான்…
தன் மனதுக்குப் பிடிக்காத இடத்தில்கூட அமைதியாகத் தங்கியிருந்தான்.
அந்த இரவு…
ஊர் முழுவதும் அமைதியாகிவிட்ட நேரம்.
வீட்டின் முன்புறத்தில் ஒரு சிறிய விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது.
திருவும் ராஜாவும் வாசலில் அமர்ந்திருந்தனர்.
இருவரும் அதிகமாகப் பேசவில்லை.
அப்போது…
கையில் இரண்டு தட்டுகளுடன் மெதுவாக அங்கே வந்தாள் ரோஜா.
அவள் நடையில் தயக்கம் இருந்தது.
திருவும் ராஜாவும் இருக்கும் இடத்தை நெருங்கியதும், அவள் மெதுவாக நின்றாள்.
“சாப்பாடு…”
என்றாள் மெல்லிய குரலில்.
திரு அவளைப் பார்த்தான்.
அவளுடைய கையில் இருந்த தட்டுகளைப் பார்த்தான்.
பிறகு அவளுடைய முகத்தைப் பார்த்தான்.
அவள் கண்களில் இன்னும் தாயை இழந்த வலி இருந்தது.
அதைக் கண்டதும் திருவின் மனதில் மீண்டும் அந்தச் சிறிய வருத்தம் எழுந்தது.
ஆனால் அடுத்த நொடியே ராதாவின் வாழ்க்கை அவன் நினைவுக்கு வந்தது.
அவனுடைய முகம் மீண்டும் இறுகியது.
“எதுக்கு இதெல்லாம்?”
என்று அவன் கோப குரலில் கேட்டான்.
ரோஜா தலைகுனிந்தாள்.
“காலையிலிருந்து நீங்களும் ராஜா அண்ணாவும் எதுவும் சாப்பிடலன்னு…”
அவள் சொல்லி முடிப்பதற்குள் திரு அவளைப் பார்த்தான்.
அவள் குரலில் எந்த உணர்வும் இல்லை.
தாயின் இறுதிக்காரியங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு…
தன்னால் முடிந்த ஒரு சிறிய நன்றியாகத்தான் அந்த உணவை கொண்டு வந்திருந்தாள்.
ராஜா அமைதியாக அந்தத் தட்டைப் பெற்றுக்கொண்டான்.
“வச்சுட்டுப் போ …”
என்று திரு மட்டும் சொன்னான்.
ரோஜா எதுவும் பேசவில்லை.
தட்டுகளை வைத்துவிட்டு மெதுவாகத் திரும்பினாள்.
அவள் இரண்டு அடிகள் சென்றதும்…
திருவின் பார்வை அவளை அறியாமலேயே பின்தொடர்ந்தது.
அவளுடைய மெலிந்த உருவம் இருளுக்குள் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தான்.
பிறகு தன்னைத்தானே கடிந்துகொண்டான்.
“இவளுக்காக ஏன் இப்படி மனசு கஷ்டப்படுது?”
என்று எண்ணிக்கொண்டவன் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.
ஆனால்…
அவனுடைய மனதுக்குள் இருந்த கோபத்துக்கும்,
அவளைப் பார்த்து எழுந்த பரிதாபத்துக்கும் நடுவில்…
அன்றிரவு முதல் முறையாக ஒரு சிறிய போராட்டம் தொடங்கியிருந்தது.
error: Content is protected !!