உயிர் சோர்ந்து போன தோற்றத்திலும் இன்னும் உன் மேல் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன், அதைக் காப்பாற்றிக் கொடு என்ற சிறு நம்பிக்கை ஒளி சேர, கோயிலை நோக்கி வந்து கொண்டிருந்தவளை ஒன்றுமறியா புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் திருமுருகநாத சுவாமி.
Advertisement
இந்தத் திருத்தலம் தொன்மையான, தேவாரப் பாடல் பெற்ற தலமாகும்.
சிவ பக்தனான இராவணனை வதம் செய்தமையால் ராமனுக்கு உண்டான பிரம்மஹத்தி தோசத்தை நிவர்த்தி செய்த தலம் ராமேஸ்வரம்.
Advertisement
Advertisement
அதுபோல் சூரபத்மனை வதைத்ததில் முருகனுக்கு உண்டான பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்த தலம், இந்த திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி ஆலயம்.
இங்குள்ள சண்முக தீர்த்தம் முருகனின் வேல் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டதாக ஒரு ஐதீகம் உண்டு.
Advertisement
இன்னும் இதன் சிறப்பைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் சுந்தரமூர்த்தி நாயனார் தன் நண்பர் சேரமான் பெருமாளிடம் இருந்து பெற்றுக்கொண்ட பொன்மணிகளை களவு கொடுத்து பின் இத்தல இறைவனை நோக்கிப் பதிகம் பாடி பொருட்களை மீட்டுக் கொண்டாராம்.
இந்த சம்பவத்தின் விளைவாக இந்த ஆலயத்தில் வேண்டிக் கொண்டால் தொலைந்தவை திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.
அந்த நம்பிக்கையில்தான் தமிழும் வாரம் தவறாது இங்கே வருகிறாள்.
இன்னும் தொலைந்து போகாத, தொலைந்து போக சாத்தியக் கூறுகள் அதிகமுள்ள அவள் வாழ்க்கையை மீட்டுத்தா இறைவா என்று கண்ணீரோடு கருணையே வடிவானவரிடம் மன்றாடுவாள். அவர் கண்ணைத் திறக்கும் வழியைத்தான் காணவில்லை.
“அஞ்சு முழம் பூ குடுங்க பாட்டி.”
பரிச்சயப்பட்ட குரலில் பூக்கட்டுவதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து பார்த்தார் பூக்கடைப் பாட்டி.
இவளைப் பார்த்ததும் தானாய் அவர் முகம் கனிந்து புன்னகையை சூடிக் கொண்டது.
“எனக்கு என்ன தாயி, பொறுப்பா? துறப்பா? ஈசன் கூப்டா அவன் காலடிக்குப் போயிக்க வேண்டியதுதான்.” வாய் பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க, கை வழக்கம் போல் இரண்டு முழம் பூவைத் தனியாக ஹேர் பின்னுடன் அவளிடம் கொடுத்துவிட்டு, மூன்று முழத்தை பேக்கில் போட்டுக் கொண்டது.
தமிழ் மறுக்காமல் பூவை வாங்கித் தலையில் வைத்துக் கொள்ள, வாஞ்சையாய் அவளைப் பார்த்திருந்தார் அந்த மூதாட்டி.
மனதுக்குள் பெரும் வேண்டுதலும்,
‘எப்படியாவது இவள் கணவனை மீட்டு இவளிடம் சேர்த்து விடு ஆண்டவா!’ என்று.
ஆரம்பத்தில் அரைப் பைத்தியக்காரி மாதிரி இங்கு வந்து போகுமவளைப் பார்த்து வைத்துக் கொண்ட மூதாட்டி, ஒருநாள் கோயில் நடை சாத்தியும் போகும் எண்ணம் இல்லாமல் அவர் கடைக்கு எதிரே இருந்த கல்லில் அமர்ந்து எங்கோ வெறித்திருந்தவளை அப்படியே விட்டு செல்ல மனமின்றி, கடையை அடைத்தக் கட்டைப் பைகளைக் கையோடு எடுத்துக் கொண்டு இவளிடம் வந்தார்.
“நீ வீட்டுக்குப் போகலையா ஆத்தா?” என்று சாதாரணமாக விசாரிக்க, அன்று அவளுக்கு இருந்த அதிகப்படியான அழுத்தம் அவளை யாரென்றறியா அந்தப் பெண்மணியின் முன்னால் வெடித்து அழ வைத்திருந்தது.
அவள் வாழ்வில் இரண்டாம்கட்டமாக சுனாமி தாக்கி சென்றிருந்த நாள் அது! அந்த விரக்தியில் அவள் கால் தானாக இங்கே வந்து விட்டிருந்தது. திரும்பி எங்கும் செல்லும் எண்ணம் அவற்றுக்கு இல்லை. முடிந்தால் பார்த்தியின் இடம் அவளை சேர்த்து விட வேண்டும் அவற்றுக்கு. அதுதானே முடியவில்லை.
பிழைப்புக்காக இந்தக் கோயிலில் பல வருடங்களைப் போக்கி விட்ட முதியவளுக்கு இங்கே வருபவரின் முகத்தை வைத்தே அவர்களின் மன பாரத்தின் அளவைக் கண்டுகொள்ளும் அனுபவம் உண்டு.
இவளின் வருத்தம் பெரியது என்றும் அதைத் தீர்ப்பது இறைவனுக்கும் கூட சவாலான ஒன்று போல என்று புரிந்து விட, தன் அனுபவத்துக்கு ஏற்ப பொதுவான ஆறுதலைக் கூறினார்.
அவளோ இறைவனிடம் இதுவரை மனதால் பகிர்ந்து கொண்ட தன் வலிகள், வேண்டுதல்கள் அனைத்தையும் அவரிடம் கதறியிருந்தாள்.
“நீங்க இங்க தினமும் வருவீங்கதான பாட்டி? எனக்காக இவர்கிட்ட கொஞ்சம் பேசுங்களேன். என்னால இது எதையும் தாங்கிக்க முடியல. இதுதான் என் விதினா, என்னை அவருக்கிட்டயாச்சும் சீக்கிரமா கூப்பிட்டுக்க சொல்லுங்க!” என்று கேவல்களுக்கிடையில் வாழ்க்கையை வெறுத்துப் பேச செண்பகம் பாட்டிக்குப் பரிதாபமாகிப் போனது.
தான் என்ன செய்தாலும் அவள் துன்பம் தீரப் போவதில்லை என்றாலும் தன்னால் முடிந்தவரை அவளுக்கு மன தைரியம் தரும் வகையில் பேசினார்.
“இனி எதுவும் இல்லை என்ற நிலை உனக்கு வரவில்லை. அந்த நிலை வரும் வரை போராடு. உன் கணவன் நீ தன்னை மீட்பாய் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பான். அந்த நம்பிக்கைக்காகவேனும் இறுதி வரை போராட வேண்டாமா நீ? அப்படிப் போராடியும் முடியவில்லை என்றால் மட்டும் உயிரை மாய்த்துக் கொள்வதைப் பற்றி யோசி!” என்று ஆழமாக அவள் மனதில் தன் வார்த்தைகளைப் பதிய வைத்தார்.
அரை உயிரோடு அவர் வார்த்தைகளுக்கு செவி கொடுத்தவள், முழு மனதாகப் போராடிப் பார்க்கவென்று முடிவெடுத்து அங்கிருந்து கிளம்ப எத்தனிக்கவும் அவளைத் தேடி ஆனந்தனும் தருணும் வந்து விட்டிருந்தனர்.
செண்பகம் பாட்டி வந்தவர்களிடமும் அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியவர், தன் வீட்டு பூஜை அறைக்கு எடுத்து வைத்த பூவில் இருந்து சிறிதை நறுக்கி அவளிடம் கொடுத்தார்.
அவள் மறுத்துத் தலையாட்டினாள்.
“நீ இன்னும் சுமங்கலி தான்மா. உன் ஆயுள் தீருற வரைக்கும் தீர்க்க சுமங்கலியாதான் இருப்ப! அந்த நம்பிக்கை உனக்கும் இருந்தா, இனி அதுக்குண்டான அடையாளத்தோடதான் நீ இருக்கணும்.” என்றவும்தான் பல நாளாக வெறிச்சோடிக் கிடந்த தன் வகிட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். தவறு செய்து விட்டோமோ என்ற பதைப்பில் மீண்டும் கண்கள் கலங்கியது.
அவளும் என்னதான் செய்வாள்? கடைசியாக எப்போது கண்ணாடி பார்த்தாள் என்று அவளுக்கே நினைவில்லை. வைத்திருக்கும் ஸ்டிக்கர் பொட்டின் ஒட்டும் திறன் வலுவிழந்து உதிர்ந்து போகும் வரை அவள் நெற்றியில் பொட்டிருக்கும். அது உதிர்ந்து போனால் பொட்டு எங்கே என்று கேட்டு யாரும் வைத்து விடுவர்.
அந்தளவில் கொண்டவன் பற்றிய கவலை, அவன் தன்னில் கொடுத்த அடையாளங்களைக் கூட மறக்கச் செய்திருந்தது.
அதை இடித்து சொல்லவும் அவளைச் சேர்ந்தவர்களால் முடியவில்லை.
உணர்வுகள் மரித்து உயிரையே பெரும் பாரமாக உடல் சுமந்திருக்கும் இந்த வாழ்க்கையை இன்னும் அவள் முடித்துக் கொள்ளாதிருப்பதே பெரும் அதிசயம் என்று விட்டு விட்டனர்.
இன்று அவளுக்கு சம்மந்தமே இல்லாத இந்த முதியவள் சொன்னதும் திருத்திக் கொண்டவள் அவர் கொடுத்த பூவையும் தலையில் ஏற்றிக் கொண்டாள்.
ஆனந்தன் பூவுக்குண்டான பணத்தை அவரிடம் நீட்ட மறுத்தார்.
“இருக்கட்டும் பா.. அடுத்த அடுத்த முறை பூ வாங்கும் போது உன் தங்கச்சியே கொடுக்கட்டும்.”
அவர் சொன்ன சேதி புரிய விழியாலே அவருக்கு நன்றி கூறித் தமையனுடன் புறப்பட்டவள், அடுத்து வந்த நாட்களில் மங்கலத்தைப் பறைசாற்றும் அத்தனை அம்சங்களையும் தன்னில் புனைந்து நடமாடுவதை வழக்கமாக்கிக் கொண்டாள்.
சித்ரா அதைத் தவறாக சித்தரித்து விமர்சித்த போதுகூட, அவளுக்குத் தக்க பதிலடி கொடுத்து வீட்டை விட்டு வெளியேறச் செய்தாளே அன்றி, தன் கோலத்தை சிதைத்துக் கொள்ளவில்லை.
“நாளைக்கு சென்னைக்குப் போறேன் பாட்டி!” என்று தானாகவே சொல்ல, அவர் கண்களை மூடி கோயில் கருவறை இருக்கும் திசையை நோக்கிக் கைகளைத் தலைக்கு மேல் வைத்துக் கும்பிட்டார்.
“எல்லாம் வல்ல ஈசனே! அந்த அதிகாரிங்க வாக்குல குடி போய் என் புள்ளைக்கு ஒரு நல்ல பதிலை சொல்ல வை அய்யா!” என்று மனதார வேண்டிக் கொண்டார்.
அப்படியே இவளிடம் திரும்பி, “திவ்யமா போயிட்டு வா தாயி! இனியும் உனக்குக் கஷ்டம் கொடுக்க ஈசனுக்கு தெம்பிருக்காது.” என்றார் ஆறுதலாக.
தமிழ் கண்களை எட்டாத புன்னகையை அவருக்குக் கொடுத்தவள்,
“நம்பிக்கையோட போயிட்டு வாத்தா. எல்லாம் நல்லதாவே நடக்கும்.” என்றவருக்கு சிறு புன்னகையோடான தலையசைப்பைப் பதிலாகத் தந்தவள் கோயிலுக்குள் நடந்தாள்.
உள்ளிருக்கும் அத்தனை சந்நிதி முன்னும் நின்று அவள் மனதில் இருக்கும் ஒரே வேண்டுதலையே சலிக்காது முன்வைத்தாள்.
இறுதியாக சண்முக தீர்த்தம் அருகே வந்து நின்றவள், ‘ஒரு பாவமும் அறியாத என் கணவனிடம் நீ கண்ட பாவங்களை இந்தத் தீர்த்தத்தில் மூழ்கிப் போக்கிக் கொள்ளவாவது அவரை இங்கே என்னிடம் அழைத்து வா!’ என்று கண்ணீர் அரும்பக் கும்பிட்டு நின்றாள்.
ஒரு மணி நேரத்துக்கும் மேல் கோவிலிலேயே இரங்கி இறைஞ்சி நின்றவள், வெளியில் வந்து பாட்டியிடம் சொல்லிக் கொண்டு திரும்பிய போது தருண் யாரிடமோ பேசிக் கொண்டு நிற்பது தெரிந்தது.
இவள் காணாதது போல் செல்லத்தான் நினைத்தாள். ஆனால் அவன் இவளைக் கண்டு விட்டுப் பேசிக் கொண்டிருந்தவரை அனுப்பி விட்டு இவளிடம் வந்தான்.
“தமிழ்! இந்நேரம் இங்க எங்கம்மா? நீ வந்தது வீட்டுல தெரியுமா?” என்றான் அக்கறை தொனிக்க.
“இருட்ட ஆரம்பிச்சிடுச்சேமா, போயிடுவியா? நான் வேணா ட்ராப் பண்ணட்டுமா?” மெய்யான சகோதர பாசத்தோடுதான் அவன் கேட்டான்.
ஆனால் பார்க்கும் கண்கள் அப்படியா பார்க்கும்?
இந்நேரம் இவர்கள் இங்கே நின்று பேசுவது தெரிந்த ஆட்கள் யாரினதும் கண்களில் பட்டால் எப்படியெல்லாம் திரைக்கதை புனைவார்கள் என்று அவளுக்குத் தெரியும்.
அது வேண்டாம் என்றுதான் தமிழ், தருணைப் பார்த்தும் பார்க்காதது போல் நகரப் பார்த்தாள்.
ஆனால் அவனாக வந்து பேசும் போது உதாசீனம் செய்து முடியவில்லை. அதற்காக இதை ஏற்கவும் முடியவில்லை.
“இல்லண்ணா, நானே போய்க்கிறேன். வரேன்.” என்று முடித்துக் கொண்டு கிளம்பினாள்.
வீடு செல்லும் வழியில் கூட இறைவனை அவர் சோலியைப் பார்க்க விடவில்லை அவள். மானசீகமாக அவர் நாமத்தை உச்சரித்து தன் வேண்டுதலை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தாள்.
மறுநாள் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தவளிடம் வந்த பர்வதம்,
“ராத்திரி பயணம் கிளம்புறது, பகல் வேலைக்கு லீவு சொல்லிட்டு நல்லா தூங்கி எந்திரிக்கலாம்ல?” என்றார்.
“நாளைக்கும் லீவு. இன்னைக்கும் கேட்டா… சரி வராது அத்தை.”
இந்த ‘சரி வராது’ என்பதற்குள் நிறைய லீவுகள் தர மாட்டார்கள் என்பதுடன் அப்படிப் போட்டால் செலவுகளை சமாளிக்க முடியாது என்பதும் அடங்கும்.
எப்போதும் போல் குற்றவுணர்ச்சி அவரைக் குறுக வைத்தது.
“இந்த முறையும் தனியாவாமா போகப் போற? ஆனந்த் தம்பியைக் கூட்டிட்டுப் போகலாம்ல?” அவள் மேலான அக்கறையில்தான் சொன்னார்.
ஆனால் அவள் என்ன மைண்ட் செட்டில் இருந்தாளோ, எரிச்சலான பார்வையை இவர் மேல் வீசி விட்டாள்.
அவள் பார்வையின் மாற்றமே அவளின் அந்நிய அவதாரத்துக்கான அபாய எச்சரிக்கையைக் காட்ட, பர்வதம் சுதாரித்து வாயை இறுக மூடிக் கொண்டார்.
ஆனாலும் அவர் அவசரப்பட்டுக் கேட்டுவிட்ட கேள்விக்கான அவளின் பதில் அவரைக் கொன்று தின்னவே செய்தது.
“அவரு என் அண்ணா என்றதுக்காக சும்மா சும்மா அவருகிட்ட போய் நின்னுட்டிருக்க முடியாது அத்தை. அவருக்கும் பொண்டாட்டி புள்ளைனு ஒரு குடும்பம் இருக்கு. அவங்களுக்கு உண்டான வாழ்க்கையை அவங்க வாழ, நான் வழி விடணும். சதா என் பிரச்சனையையே தூக்கிட்டுப் போய் அவங்க தலையில ஏத்திட்டு இருக்க முடியாது.” என்ற, பர்வதத்துக்கு சுருக்கென்றது.
இப்படி நினைத்து இவர்கள் இருவரின் வாழ்க்கைக்கும் தானும் மகளும் வழி விட்டிருந்தால், இன்று இவளுக்கு இந்த நிலை வந்திருக்குமா? தன் மகனுக்கும் அந்நிய தேசத்தில் இப்படி ஒரு அவல நிலை வந்திருக்காதே!’ என்று மனம் குமைந்து நின்றார். மனதின் வெம்மை கண்களையும் சுட்டு விட்டது.
அவரின் அழுத முகம் பார்த்த பின் தான் தமிழுக்குத் தன் தவறு புரிந்தது.
‘என்னைப் போல்தானே அவரும் மகனின் நிலை எண்ணி வருந்திக்கொண்டிருக்கிறார். அவரிடம் இப்படியா நடந்து கொள்வது?’ என்று தன்னையே கடிந்து வருந்தியவள்,
“மன்னிச்சிடுங்க அத்தை. நான் பேசணும்னு பேசல… அது…”
“பரவால்லமா.. எனக்கும் உன் நிலைமை புரியுது. உனக்கிருக்க கோபமும் ஆதங்கமும் நியாயமானதுதான். அதுக்கெல்லாம் காரணமா நான் இருந்துக்கிட்டு உனக்கு என்னால எந்த விதத்துலயும் உதவ முடியலயேன்றதுதான் எனக்கு வருத்தமா இருக்கு. ஒவ்வொருமுறை நீ தனியா அவ்வளவு தூரம் போகும் போதும் துணைக்கு நான் வரவானு கேட்கத் தோணும். ஆனா வயசான உடம்பு… அலைச்சல் சேராம எதுவும் ஆயிடுச்சுனா? துணைக்குனு வந்து உனக்கு இன்னும் சிரமத்தைக் கூட்டிடுவேனோனு பேசாம இருந்திடுவேன்.” என்றவர் மூக்கை உறிஞ்ச தமிழுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது.
“அப்பிடியெல்லாம் நீங்க எனக்கு எந்த சிரமமும் தரப்போறது இல்லத்தை. ஆனாலும் நீங்க வர வேணாம்னுதான் சொல்லுவேன். அவ்வளவு தூர அலைச்சல் எல்லாம் தாங்கிக்க மாட்டீங்க நீங்க! அப்புறம் எனக்கும் தனியா போறது வரதுலாம் கஷ்டமாவே இல்ல. இத்தனை வருஷத்துல எனக்குத் தேவையான எல்லாத்தையும் நான் நல்லாவே பழகிட்டேன். என்னால தனியாவே எல்லாத்தையும் சமாளிச்சுக்க முடியும்.”
வலிகள் கொடுத்த வலிமையான தன்னம்பிக்கை அவளிடம்.
“அதுக்குக் காரணம் நான்தான? நீ தனியா நிக்கக் காரணம் நான்தான?” என்று விடாமல் அவர் புலம்ப, அதற்கு எந்த சமாதானமும் கூறவில்லை அவள். மௌனத்தின் மூலம் அவர் குற்றத்தை ஆமோதித்தாள்.
வார்த்தைக்குக் கூட அப்படி இல்லை என்று ஆறுதல் சொல்ல விரும்பாத மருமகளின் செயல் பர்வதத்துக்கு வேதனையைக் கொடுத்தது என்றாலும் அவளிடம் அதை எதிர்பார்ப்பதே பெரிய பாவம் என்றும் புரிந்தது.
இப்போதாவது பரவாயில்லை… இந்தளவில் மதித்துப் பேசுகிறாள். இவர் பேசுவதைக் கேட்கிறாள். ஆனால், ஆரம்ப காலத்தில் அவளிடம் சாதாரணமாகப் பேசுவது என்பதே முடியாத காரியமாகத்தான் இருக்கும்.
தன் வேதனையில் எதிரில் பேசுவது யாரெவர் என்ற கவனமே இன்றி எல்லோரிடமும் சுள்ளெனப் பேசி விடுவாள். ஏன் ராஜேஷிடமே கூட ஒருமுறை முகத்தைக் காட்டி விட்டிருந்தாள். அந்தளவுக்கு தன்னிலை பிறழ்ந்து வெறி முற்றிப் போய் இருந்தாள், தமிழ்!
இப்போதுதான் வருடங்கள் ஆக ஆகக் கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்துக்கு வந்திருக்கிறாள். நிதானத்துக்கு வந்திருக்கிறாள் என்பதை விட, எல்லோரிடம் இருந்தும் மனதளவில் ஒதுங்கி வாழ ஆரம்பித்து விட்டாள்.
ஆனால் இவள் நிலை உணர்ந்த நல்லுள்ளங்கள் யாரும் இவளின் இந்த மாறுபட்ட குணாதிசயத்தை மட்டும் கருத்தில் நிறுத்தி இவளை ஒதுக்கவில்லை.
பார்த்தி என்ற ஒருவன் மேல் உள்ள பித்து நிலையே அவளின் இந்த மாற்றத்துக்கு காரணம் என்று புரிந்து இன்றும் அவள் நலன் விரும்பவே செய்கின்றனர்.
தன்னை வருத்தி விட்டதாக எண்ணி அவள் வருந்துவது அவள் முகத்தில் இருந்துந்து தெரிய, கண்களைத் துடைத்துக் கொண்டவர்,
“நான் ஒருத்தி… நீ வெளிய கிளம்புற நேரம் நின்னு அழுதுட்டு இருக்கேன். நீ கிளம்பு மா. முடிஞ்சா சாயந்தரம் சீக்கிரம் வந்து கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு போ. பதினொன்னுக்கு மேலதான ட்ரெயின்?” என்ற,
“முயற்சி பண்ணுறேன் அத்தை.” என்ற பதிலை மட்டுமே கொடுத்து சென்றிருந்தாள்.
அன்றிரவு ஆனந்தன் ஆயிரம் பத்திரங்களுடன் திருப்பூர் ரயில் நிலையத்தில் அவளை ரயில் ஏற்றிவிட்டான்.
நீலகிரி எக்ஸ்பிரஸ் இந்த வாழ்க்கைப் போராளியை சுமந்து கொண்டு சென்னை நோக்கி பயணிக்க ஆரம்பிக்க, ஜன்னல் வழியே பின்னோக்கி பயணம் செய்து கொண்டிருந்த மரங்களைப் பார்த்தபடியே இவள் நினைவுகளும் இந்தப் போராட்டம் ஆரம்பித்த காலங்களை நோக்கிப் பின் நகர்ந்தது.