Skip to content
Post Views: 1,096
காதல் தேவன் சன்னதி
அத்தியாயம் – 1
“பயணிகளின் கனிவான கவனத்திற்கு…
விமானம் இன்னும் சற்று நேரத்தில் தரையிறங்க உள்ளதால், பயணிகள் தங்களின் சீட் பெல்ட்டை அணியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.”
Advertisement
நீண்ட நேரம் புத்தகத்தில் மூழ்கியிருந்தவள், அந்த அறிவிப்பைக் கேட்டவுடன் மெல்ல நிமிர்ந்து தன் உடைமைகளைச் சரிபார்த்துவிட்டு சீட் பெல்ட்டை அணிந்தாள்.
ஜன்னலின் வழியே பரந்து விரிந்திருந்த வானத்தையே பார்த்தவாறு இருந்தவளுக்கு ஏனோ மனம் மிகவும் கனத்தது.
மீண்டும் வரவே கூடாது என்ற எண்ணத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்தவள், இன்று ஒரு அவசர சூழ்நிலையால் தாயகம் திரும்புமாறு ஆகிவிட்டது.
Advertisement
இந்தப் பயணத்தை அடியோடு வெறுத்தாள் அதிதி.
Advertisement
அதிதி சுப்ரஜா ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறாள். திறமைசாலி. பொறுப்பான பெண்.வாலிப வயதிற்குரிய அத்தனை அம்சங்களும் குறையாமல் அமைந்த இளஞ்சிட்டு. ஆனால் வயதிற்கு மீறிய அழுத்தமும் மெளனமும் அவளைத் தற்போது ஆட்சி செய்து கொண்டிருந்தது.
இரண்டு வருடங்களாக அனைத்தையும் மறந்து லண்டனில் வசித்தவளுக்கு, இந்தப் பயணம் பல கசப்பான நியாபகங்களை மனதில் கொண்டு வந்து சேர்த்தது.
தன் எண்ணம் போகும் திசையை எண்ணியவளோ, தலையை உலுக்கி எதையும் நினைக்க வேண்டாம் என்றவாறு தனக்குத் தானே கட்டளைப் பிறப்பித்தாள்.
Advertisement
இதோ லண்டனிலிருந்து வந்த விமானம் சென்னையில் தரையிறங்கிவிட்டது.
தன் பயண பொதிகளுக்காக அவள் காத்திருந்த அவ்வேளையில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறு குழந்தை ஒன்று அவள்மீது மோதி விழுந்து விட, அவனைத் தூக்கிவிட்டவள்,“ஹேய் குட்டி பையா! பார்த்து விளையாடுனும்” என்றவாறு அவனைத் தூக்கி சமாதானப்படுத்தி தன் கைப்பையிலிருந்த சாக்லெட்டை அவனுக்குக் கொடுத்தாள்.
இனிப்பைக் கண்ட குழந்தையின் முகம் மலர, அவனைத் தூக்கி வைத்திருந்த அதிதியின் அகமும் ஒரு சேர மலர்ந்தது.
ஏனோ, குழந்தைகள் என்றால் அதிதிக்கு அவ்வளவு பிரியம். அவர்களைக் கண்டாள் தானும் சிறுபிள்ளையாகிப் போய்விடுவாள்.
“அம்மா எங்கடா கண்ணா? யார் கூட வந்தீங்க?” என்று இவள் கேட்க, அதற்குக் குழந்தையோ தன் மழலை மாறாத குரலில் எதோ கூற, அப்பிஞ்சின் மொழியில் லயித்துப் போனாள் அதிதி. சிறிது நேரம் அதன் அமுத மொழியில் லயித்தவளுக்கு மனம் லேசாகிப் போனது.
அந்நேரம் அக்குழந்தையை தேடி வந்த அதன் தாய்,
“டேய் குட்டி, நீ இங்க ஓடி வந்திட்டியா?” என்றாள்.
குரல் வந்த திசை பக்கம் திரும்பிய அதிதியோ, குழந்தையின் தாயைப் பார்த்து மென்னகை ஒன்றை உதிர்த்தாள்.
பதிலுக்கு அந்தப் பெண்ணும் அதிதியை பார்த்துச் சிநேகமாகப் புன்னகைத்தாள்.
“ உங்க பையன் ரொம்ப ஸ்வீட். அழகா சிரிக்கிறான் அத விட அழகா பேசவும் செய்யுறான்” என்றாள் அதிதி அக்குழந்தையின் சிகையை வருடியவாரே.
“ அப்படியா?” என்றாள் குழந்தையின் தாய் சிரித்தவாரே. பின்னர் தன்னிடம் இருந்த குழந்தையை அப்பெண்ணிடம் நீட்டினாள். ஆனால் குழந்தை தாயிடம் செல்ல மறுத்து அவளுடனே ஒன்றியது.
அந்தச் செய்கையில் மேலும் அதிதியின் இதழ்கள் பெரிதாக விரிந்தது.
“ டேய் குட்டி பையா, என் கூடவே வரியா? அப்போ அம்மாக்கு டாட்டா சொல்லு… நாம போவோம்” என்று அதிதி கூறியவுடனே அக்குழந்தை தன் தாயிடம் கையசைக்க, குழந்தையை இறுக அணைத்து
அதன் நெற்றியில் முத்தம் வைத்தாள்.
அவள் முத்தமிட்ட நொடி, முத்தம் தரத் தெரியாத குழந்தை அவள் கன்னத்தை எச்சில் செய்ய, அந்த அன்பில் கரைந்தே போனாள் அதிதி.
தன் பயணப் பொதி வருவதை கவனித்தவள், தாயிடம் பிள்ளையை ஒப்படைத்துவிட்டு உடைமைகளைச் சரிபார்த்து எடுத்துக் கொண்டாள்.
பின்னர் அவர்கள் இருவரிடமும் கையசைத்து விடைபெற்று வேகமாக விமான நிலையத்தை விட்டு வெளியேறினாள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சொந்த ஊரைக் காண்கிறாள். காணத் தக்க மாற்றங்கள் நிரம்பி கிடந்தன. ஆனால் அவையேதும் அவளின் கருத்தைக் கவரவில்லை.
காரணம், அவள் கண்ணில் பட்டதெல்லாம் அங்கு நின்றுக் கொண்டிருந்த அந்தக் கருப்பு நிற ஆடி கார் மட்டுமே.
அதைக் கண்டதுமே மேனியில் சிறு அதிர்வு. கால்கள் ரெண்டும் தளர்ந்துப் போயின. கைகள் நடுங்கத் துவங்கின.கண்களில் மெலிதாக நீர் அரும்பத் துவங்கியது.
அவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு சமன்படுத்தி வைத்திருந்த அவளின் மனது, சிறிது சிறிதாகச் சமநிலை தவற ஆரம்பித்தது.
அப்போது காரின் கதவைத் திறந்துக் கொண்டு யாரோ இறங்குவது போலத் தெரிந்ததும், இன்னுமே அதிதியின் மனம் பதைபதைத்தது.
கண்களை ஒருமுறை இறுக மூடித் திறந்தாள்.
வெள்ளை நிற அங்கியில் அங்கே வந்துக் கொண்டிருந்த ஓட்டுனர் சுப்பையாவை பார்த்தவுடன் தான் அவளின் மனம் அமைதிப்பட்டது.
வேக வேகமாக அவளை நோக்கி வந்தார் அந்த முதிய ஓட்டுனர்.
அவரைக் கண்டவுடன் முகமலர சிரித்தாள். அவரும் சிறுபிள்ளைப் போலப் பற்கள் தெரிய அவளைப் பார்த்துச் சிரித்தவர், “அதிதி ம்மா நல்லாருக்கியா கண்ணு?, வெளிநாடு போயி ஆளே மாறிட்டம்மா?” என்றார்.
“நான் நல்லாருக்கேன் அண்ணா, நீங்களும் தான் ஆளே மாறிப் போயிட்டீங்க, முடியெல்லாம் நரைச்சிடுச்சு, டை லாம் அடிக்கிறது இல்லையா?, வீட்டுக்காரம்மா கரெக்டா அதெல்லாம் பண்ணிடுவாங்களே, எப்படி இப்படி வெள்ளை முடிய விட்டு வச்சாங்க?” என்றாள் கேலியாக.
“அதவிடுங்க ம்மா. பிரயாணம் எப்படி இருந்துச்சு, வெளிநாட்டுல எல்லாம் சவுரியமா இருக்கா?” என்றுக் கேட்டவாறு அவளின் பயணப்பொதிகளை எடுத்துக் கொண்டு நடக்கலானார்.
“எல்லாம் சவுகரியம் தான் அண்ணா, நான் நினைச்சத விட நல்லாவே அமைச்சிருச்சு” என்றவாறு காரின் பின்னிருக்கையில் அமர்ந்தாள்.
ஏறியதுதான் தாமதம், அதில் அமர்ந்தவுடனே அழையாமல் அவன் நினைவுகள் அவளுக்கு வந்துப் போனது. ஏனோ அந்த வாகனம் முழுவதும் அவனின் மணம் வீசுவது போல ப்ரம்மை உருவாகியது.
கிட்டத்தட்ட அவன் சட்டையிலிருந்து வரும் அதே ப்ரத்யோக மணம் வீசியதால் அவளுக்கு மூச்சு முட்டியது.
கார் கிளம்பயதும் சுப்பையாவிடம் மெல்ல பேசத் துவங்கினாள்.
“வேற வண்டி இல்லயா ண்ணா, எதுக்கு இந்த வண்டி எடுத்தீங்க?” என்றாள் சலிப்பாக.
அவள் எதைக் கூற வருகிறாள் என்பதை நன்கு அறிந்த சுப்பையாவோ, “அ… அது வந்து… தம்பி இந்தக் கார்ல தான் எப்பவும் ஆபீஸ் போகும், அவர ஆபீஸ்ல இறக்கிவிட்டுட்டு உங்கள இந்தக் கார்லயே கூப்பிட்டுக்க சொல்லித் தம்பி தான் சொல்லுச்சு” என்றார் தயங்கியவாறு.
அவர் கூறியதை கேட்டதும் அதிதிக்கு கோபம் தலைத்தூக்கியது.
‘இதுகுத்தான் நான் டேக்ஸி புக் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். இவனும் இவன் காரும், ச் சே! எல்லாம் இந்த ஆதி எருமையை சொல்லனும், கோர்த்துவிடுரானாம். இடியட்’ என்று மனதோடு வசைப்பாடினாள்.
இருந்தும் சுப்பையா முன்னிலையில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
“அந்த ரைட் எடுத்து அடுத்த சந்துல போங்க ண்ணா, ப்ளு கலர் பில்டிங் வரும் பாருங்க அங்க நிறுத்துங்க” என்று தன் கைப்பேசியிலிருந்த குறிப்பைப் பார்த்து வழி சொன்னாள்.
“சொல்லுறேன்னு கோவிச்சிக்காத கண்ணு, நம்ம வீட்ல இல்லாத இடங்களா, எதுக்கு யாரோ மாதிரி இங்க வந்து தங்கனும்” என்று நேரடியாகவே கேட்டார் சுப்பையா.
இந்தக் கேள்வியை வேறு யாராவது கேட்டிருந்தால் அவளின் பதிலும் பதில் சொல்லும் விதமுமே வேறா இருந்திருக்கும்.
ஆனால் கேட்டது சுப்பையாவாகப் போய்விட்டதால், எதுவும் பேசாது அமைதியாகி போனாள்.
அவள் சொன்ன இடம் வந்துவுடன் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு இறங்கியவள் உள்ளே செல்லும் முன் திரும்பிச் சுப்பையாவிடம், “இடம் தாராளமா இருந்து என்ன ப்ரோஜனம் ண்ணா, மனுஷங்க மனசு அப்படி இல்லயே” என்று விட்டு விறுவிறுவென உள்ளே சென்றாள்.
அந்த அப்பார்ட்மெண்ட்டின் இரண்டாம் தளத்தில் அமைத்திருந்த அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தியதும், உள்ளே இருந்து பெருங்கூச்சலுடன் கதவினை திறந்தாள் கமலி.
“ஹே டார்லிங்! ஐ மிஸ்ட் யூ டி” என்றவாறு அவளை இறுக்கி அணைத்திருந்தாள் அதிதி.
நீண்ட நாளைக்கு பிறகு தோழியைக் கண்டவுடன் மகிழ்ந்த கமலியும், “மீ டூ டார்லிங்” என்று அவளை இறுக்கி அணைத்திருந்தாள்.
“ இப்படியே நின்னா ஒரு நாள் முழுசா நிக்க வேண்டியதுதான்” என்ற கமலி, “ஃப்ரெஷ் ஆகிட்டு வா, சாப்பாடு ரெடி” என்று கூறி அவளைக் குளியலறைக்கு அழைத்துச் சென்றாள்.
பயண களைப்பு தீரக் குளித்தவள், தான் அணித்திருந்த ஜீன்ஸ் டி-ஷர்ட்டை விடுத்து இலகுவான வேறு உடைக்கு மாறினாள்.
“வாவ் கமல்! என்னாம்மா சமைச்சிருக்க, செம்ம டேஸ்ட் போ” என்றவாறு தோழி சமைத்த உணவை ரசித்து உண்டாள் அதிதி.
“ பின்ன, கத்துகிட்ட மொத்த வித்தையையும் உனக்காக இறக்கிருக்கேன்” என்று கூற இருவரும் ஹய் பை (Hifi) அடித்துக் கொண்டனர்.
பேச்சும் சிரிப்புமாக அந்தப் பொழுது இனிமையாகக் கழிந்தது அதிதிக்கு. இத்தனை நாள் இதுபோல் பேசப் பழக ஆள் இல்லாமல் தனியே வாழ்ந்ததை நினைத்து நொந்தாள்.
ஆனால் எதையும் தோழியிடம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. தானே விரும்பித் தேர்ந்தெடுத்த தனிமை வாழ்வு அது. யாரிடமும் அதைப் பற்றிப் பேசி அலுத்துக்கொள்ள விரும்பவில்லை அவள்.
பேச்சினிடையே கொண்டு வந்திருந்த உடைமைகளை அலமாரியில் அடுக்கியவள், தன் தோழிக்கு வாங்கி வந்திருந்த புதிய உடைகள், சாக்லெட் இன்னும் பிற பரிசுப் பொருட்களை அவளிடம் கொடுத்தாள் அதிதி.
“எதுக்குடி இவ்ளோ?” என்று செல்லமாகக் கடிந்த தோழியைத் தோளோடு அணைத்தவள், “இதெல்லாம் செய்ய எனக்கு உன்னவிட்டா யார் இருக்கா கமல்?” என்று மனம் வலிக்கக் கூறியவளைக் கண்டு கமலியின் கண்கள் தாமாகக் கலங்கின.
பின் சுதாரித்தபடி, “சரி சரி… ஹால்ல உன்னோட டிராவல் பேக் இருந்துச்சு பாரு, எல்லாத்தையும் பத்திரமா எடுத்து வை. எதுவும் மிஸ் ஆகிடப் போகுது” என்று அவள் கூறியபோது தான் வைத்திருந்த சிறிய ரக கைப்பையை ஒன்றைக் காணது அவசர அவசரமாகத் தேடினாள்.
“கமல்! என்னோட ஹேண்ட் பாக்ல சின்னதா ஒரு பவுச் வச்சிருந்தேன் பார்த்தியா?” என்றாள் பதட்டமாக.
“ஹே! இல்லடி பொறுமையா தேடிப் பாரு, இங்கத்தான் எங்கயாவது இருக்கும்” என்றாள் கமலி தானும் உடன் தேடியவாறு.
எங்குத் தேடியும் கிடைக்காததால், ‘ஒருவேள கார்ல மிஸ் பண்ணியிருப்பனோ?’ என்று யோசித்தபடி, உடனே ஓட்டுனர் சுப்பையாவின் எண்ணிற்கு தொடர்புக் கொண்டாள்.
அழைப்பு ஏற்கப்பட, “சுப்பையா அண்ணா என்னோட பவுச் ஒன்ன காணோம், அதுலதான் விசா, பாஸ்போர்ட் எல்லாம இருக்கு, கார்ல இருக்கான்னு பாருங்க” என்றவள் பதிலேதும் வராது போகவே “ஹலோ… ஹலோ… அண்ணா….” என்று மீண்டும் பேச முயற்சித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
இதோ அவள் கூறிய அந்தக் கைப்பையின் உள்ளே பாஸ்போர்ட்டிலிருந்த அவள் புகைப்படத்தை, தன் விரல்களால் மெல்ல வருடிக்கொண்டிருந்தான் அவன்.
error: Content is protected !!